Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரூர் தவெக பரப்புரை, கூட்ட நெரிசல், சட்டம், விசாரணை, காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 1 அக்டோபர் 2025, 01:52 GMT

கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 2 தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு தெளிவான விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

"ஒருநபர் ஆணையம் விசாரணையை அறிக்கை கிடைத்த பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்பது உறுதி செய்யப்படும்," எனத் தெரிவித்தார் ஸ்டாலின்.

கரூர் தவெக பரப்புரை, கூட்ட நெரிசல், சட்டம், விசாரணை, காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெங்களூரு ஆர்சிபி வெற்றிக் கொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

கரூரைப் போலவே, கடந்த ஜனவரியில் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 37 பேரும் (பிபிசி புலனாய்வில் 82 பேர் பலியானது தெரியவந்தது) பெங்களூருவில் ஜூன் மாதம் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேரும் உயிரிழந்தனர்.

இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? கடந்த காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் யார்யார் தண்டிக்கப்பட்டார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கரூரில் என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

கருர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 105, 110, 125 பி, 223 மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, அலட்சியத்தால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது, சட்டப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியது போன்றவற்றை குறிக்கின்றன.

கரூர் தவெக பரப்புரை, கூட்ட நெரிசல், சட்டம், விசாரணை, காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

அனுமதி பெறும் நடைமுறை என்ன?

ஒரு கட்சி அல்லது அமைப்பு பொது நிகழ்ச்சி நடத்த விரும்புகிறதென்றால் அவர்கள் முதலில் விருப்பமான இடங்களைக் குறிப்பிட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை தகவல்கள் என்னென்ன?

  • நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வருவார்கள்?

  • நிகழ்ச்சிக்கு முடிவு செய்யப்பட்டுள்ள இடங்கள்

  • எந்த நேரத்திற்குள் நிகழ்ச்சி நடத்தப்படும்?

  • என்னென்ன வசதிகள் செய்து தரப்படும்?

  • எத்தனை வாகனங்கள் வரும், வாகனங்களுக்கான நிறுத்துமிடம் எங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் பார்ட் 4 என்கிற பதிவு பராமரிக்கப்படும். அதில் அந்த சரகத்திற்கு உட்பட்ட கடந்த கால நிகழ்வுகள் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் இருக்கும். அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்கின்ற இடத்தில் நிகழ்ச்சியை சுமூகமாக நடத்த முடியுமா என்பதை பொறுத்து இடம் தேர்வு செய்து அனுமதி வழங்கப்படும்.

பரப்புரையைத் தாண்டி பேரணி நடத்தப்படுகிறது என்றால் அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி.

"பேரணி எந்த இடத்தில் தொடங்கி எங்கு முடிவடைகிறது, எத்தனை மணிக்கு தொடங்கி எப்போது முடிவடையும், எந்த வழித்தடத்தில் பேரணி நடத்தப்பட உள்ளது, எத்தனை பேர் வர உள்ளார்கள்? என்பன போன்ற தகவல்களை வழங்க வேண்டும். காவல்துறை அந்த இடங்களின் தன்மை, போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கான சாத்தியமான இடையூறுகள் போன்றவற்றை ஆராய்ந்து தான் அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ செய்வார்கள்." என்றார் அவர்.

ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு என்ன?

நிகழ்ச்சிக்காக அனுமதி பெறுகிற போது ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிப்பது ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பு என்கிறார் கருணாநிதி.

அரசியல் நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும், அதனை தீவிரமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

"நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தண்ணீர், உணவு, கழிப்பிடம், நிழற்குடை, போதுமான இடவசதிகள், நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை சமாளிக்க தன்னார்வலர்கள் போன்றவற்றை ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்." என்றார் கருணாநிதி.

ஒரே இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வெவ்வேறு இடங்களில் பெரிய திரைகள் அமைத்து ஒளிபரப்பு செய்வது, நேரலை செய்வது போன்ற ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ளலாம் என்று சில பரிந்துரைகளையும் அவர் முன்வைத்தார்.

கரூர் தவெக பரப்புரை, கூட்ட நெரிசல், சட்டம், விசாரணை, காவல்துறை

பட மூலாதாரம், Karunanidhi

படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி

காவல்துறையின் பொறுப்பு என்ன?

நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதோடு, தேவையான கட்டுப்பாடுகளை விதித்து முறையான பாதுகாப்பு வழங்குவது காவல்துறையின் முதன்மையான கடமை என்கிறார் கருணாநிதி.

காவல்துறையின் பொறுப்புகளை விளக்கிய அவர், "கூட்ட நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவை தான் காவல்துறையின் முதன்மையான பொறுப்புகள். நிகழ்ச்சி நடைபெறும் இடம் மட்டுமல்லாது அதனை ஒட்டியுள்ள இடங்களை ஆராய்வதும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூட்டம் அதிகமாகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பதும் காவல்துறையின் பணி" என்றும் தெரிவித்தார்.

நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு?

நெரிசல் ஏற்பட்டால் அதற்கு இரண்டு தரப்புக்குமே பொறுப்புண்டு என்கிறார் கருணாநிதி.

கடந்த கால கூட்ட நெரிசல் சம்பவங்களில் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரிபரந்தாமன்.

"நிகழ்ச்சி நடத்துவது என்பது இரு தரப்பின் பொறுப்பு என்கிறோமோ அதே போல நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டால் அதை இரு தரப்பின் தோல்வியாகவே பார்க்க வேண்டும்." என்று கூறுகிறார் கருணாநிதி.

வருகின்ற கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தவறினால் ஒருங்கிணைப்பாளர்கள் தான் பொறுப்பாவார்கள் எனக் கூறும் அவர் காவல்துறையும் தனக்கு பொறுப்பில்லை என்று தட்டிக்கழிக்க முடியாது என்கிறார்.

"காவல்துறைக்கு உளவு அறிக்கையின் மூலம் எத்தனை பேர் கூடுவார்கள் என்கிற கணிப்பு இருக்கும். அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவார்கள் அல்லது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் காவல்துறை நிகழ்ச்சிக்கு முன்பாகவோ அல்லது நிகழ்ச்சியின்போதோ தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.

இரு தரப்பிலிருந்தும் ஒலி பெருக்கிகள் மூலம் முறையான அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கரூர் தவெக பரப்புரை, கூட்ட நெரிசல், சட்டம், விசாரணை, காவல்துறை

பட மூலாதாரம், Hariparanthaman

படக்குறிப்பு, ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரிபரந்தாமன்

விசாரணை எப்படி நடக்கும்?

கூட்ட நெரிசல் வழக்குகளை விசாரிப்பதும் குற்றத்தை நிரூபிப்பதும் கடினமானது என இருவரும் ஒப்புக் கொள்கின்றனர்.

ஆனால் முன்பிருந்ததைவிட விசாரணை தற்போது நவீனமடைந்துவிட்டது என்கிறார் கருணாநிதி, "நிகழ்ச்சி நடத்த யார் பெயரில் அனுமதி பெறப்படுகிறதோ, யார் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளார்களோ அவர்களிடம் முதலில் விசாரணை நடத்தப்படும். அதோடு கூட்ட நெரிசல் எதனால் நடைபெற்றது, அதற்கு யார் காரணம், யாராவது ஒருவரின் குறிப்பிட்ட செயல் காரணமா என்கிற நோக்கிலும் விசாரணை நடத்தப்படும். நிகழ்ச்சியின் முழு காணொளி பதிவுகள் இப்போது கிடைக்கின்றன, நேரலை செய்யப்படுகிறது, சிசிடிவி காட்சிகள் உள்ளன, நேரடி சாட்சிகளின் பதிவுகள் உள்ளன. இவையெல்லாம் விசாரணையை எளிமையாக்கும்." என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் நடத்திய பல நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார் ஹரிபரந்தாமன்.

"சட்டப்பூர்வமாக பார்த்தால் கூட்ட நெரிசல் வழக்குகளும் சாலை விபத்து வழக்குகளைப் போன்றது தான். கடந்த ஆண்டு தான் மெரினாவில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் யாரும் விசாரிக்கப்பட்டதாகவோ தண்டிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில் அலட்சியம் தான் முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் அதனை நிரூபிப்பது கடினம்." என்றும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cly17055x1vo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.