Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குழந்தைகள்

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்)

செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய ரோட் ஷோவை ஒட்டி ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் குழந்தைகள்.

இம்மாதிரியான ஒரு நெரிசல் மிகுந்த கூட்டத்திற்கு குழந்தைகள் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்? குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது தொண்டர்கள் மத்தியில் பேசிவந்தார். பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பேருந்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இடத்திற்கு இதற்காக வரும் விஜய், அந்த வாகனத்தில் இருந்தபடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

முதலில் திருச்சியிலும் பிறகு நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல்லில் பிற்பகலில் தனது நிகழ்ச்சியை முடித்துக் கொண்டுவந்த விஜய், அன்று மாலை 7 மணியளவில் கரூருக்கு வந்துசேர்ந்தார். ஆனால், இந்த கரூர் கூட்டத்தில், விஜய் வரும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் குழந்தைகள் என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, ஒன்றே முக்கால் வயதே ஆன குழந்தை துருவிஷ்ணு கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தது.

அழக்கூட முடியாத மாற்றுத்திறனாளி தாய்

இவ்வளவு நெரிசல் மிகுந்த, ஒரு அரசியல் கூட்டத்திற்கு எப்படி குழந்தைகள் சென்றனர், எதற்காகச் சென்றனர்? இந்தக் கேள்விகளுக்கு பதிலைத் தெரிந்துகொள்ள இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் பிபிசி நேரில் சந்தித்தது. நொறுங்கிப்போன மனதோடு பெற்றோரும் உறவினர்களும் குழந்தைகள் சென்ற பின்னணியை விவரித்தனர்.

திங்கட்கிழமை. கரூர் நெரிசல் சம்பவம் நடந்த மூன்றாவது நாள். அந்த நிகழ்வு நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் இருக்கிறது வடிவேல் நகர். அந்தப் பகுதிக்குள் நுழையும்போதே, ஒரு மூதாட்டியின் கதறல் காதில் விழுகிறது. ஒன்றே முக்கால் வயதேயான பேரன் துருவிஷ்ணுவை இழந்த துக்கத்தில் மூன்றாவது நாளாக கதறி அழுதுகொண்டிருந்தார் அவர். அந்த வீட்டின் வாசலில் குற்ற உணர்வே வடிவெடுத்ததைப்போல அமர்ந்திருக்கிறார் லல்லி. குழந்தையின் அத்தையான இவருடன்தான் அந்தக் கூட்டத்திற்கு துருவிஷ்ணு சென்றிருந்தான்.

"நான்தான் கூட்டிட்டு போய் வாரிக் கொடுத்துட்டேன்.. நான்தான் கூட்டிட்டுப்போய் வாரிக் கொடுத்துட்டேன்" என்று கதறிக் கொண்டிந்தார் லல்லி. சனிக்கிழமையன்று விஜய் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன் அவரைப் பார்க்க விரும்பினார் லல்லி. ஆகவே தனது குழந்தைகள் மதுமிதா, பரத், தனது சகோதரர் விமலின் குழந்தை துருவிஷ்ணு, தனது கணவர் ஆகியோருடன் சென்றார் லல்லி.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.

"அவனுக்கு விஜய்னா ரொம்ப பிடிக்கும். விஜய் பாட்டைக் கேட்டாலே ஓடிவந்து டான்ஸ் ஆடுவான். என்னை மாதிரியே என் தம்பி பையனும் விஜய் ரசிகனா இருக்கிறானேனு, அவங்க அப்பாகிட்ட சொல்லிட்டு தூக்கிட்டு போனேன். ஐந்து மணிக்கு போனதிலிருந்து தலையில துண்டு கட்டி போட்டோவெல்லாம் எடுத்தான். அப்பவே கூட்டம் இருந்தது. விஜய் வந்த பிறகு மேலே ஏறினார். எல்லோரும் கத்தினார்கள். நான் அவனுக்கு விஜய்யைக் காட்டினேன். டக்குனு கரண்ட் ஆஃப். ஜெனரேட்டர் உடனே போட்டுட்டாங்க. அதுக்குள்ள இப்படி ஒரு நிலவரத்தைக் கொடுக்கும்னு யாரும் நினைச்சுப்பார்க்கல. எனக்கு முன்னாடி இருந்த இருசக்கர வாகனம் கீழே விழுந்துவிட்டது. நானும் விழுந்துட்டேன். எனக்கு மேல் எத்தனை பேர் விழுந்தாங்கன்னு தெரியலை. ஏன்டா இந்தக் கூட்டத்துக்கு வந்தோம்னு ஒரு செகண்ட் யோசிச்சேன். நாமதான் வந்தோம், குழந்தையை ஏன் கூட்டிவந்தோம் என யோசித்தேன். என் அருகில் இருந்த ஒரு பெண், குழந்தையைக் கொடுக்கும்படி சொன்னார். அவர் இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டார். அப்போதெல்லாம் குழந்தை நன்றாக இருந்தான்" என அந்தத் தருணத்தை நினைவுகூர்கிறார் லல்லி. ஆனால், பிறகு தன் சகோதரரின் குழந்தையை அவரால் அரசு மருத்துவமனையில் சடலமாகத்தான் பார்க்க முடிந்தது.

குழந்தையின் தாய் மாதேஸ்வரி காது கேட்காத, பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவரால் குழந்தை இறந்த சோகத்தைச் சொல்லி அழக்கூட முடியவில்லை. "இவ்வளவு துயரத்திலும் எங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் மிக மோசமாக எழுதுவது பெரும் வேதனையளிக்கிறது" என்கிறார் குழந்தையின் தந்தையான விமல்.

"உண்மைக்கு தொடர்பே இல்லாத வகையில் எழுதுகிறார்கள். குழந்தையை இழந்த குடும்பம் என்ற ஒரு சிறு கரிசனம்கூட அவர்களிடம் இல்லை. நான் குழந்தையை இழந்தது ஒருபுறமிருந்தாலும் வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சியில்தான் வாழப் போகிறாள் என் சகோதரி. எப்படி இந்தத் துயரிலிருந்து மீளப்போகிறோம் எனத் தெரியவில்லை" என்கிறார் விமல்.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, சிறுமிகள் சாய் ஜீவா (இடது) மற்றும் சாய் லக்ஷணா (வலது)

சாய் ஜீவா - சாய் லக்ஷணா

இந்தத் துயர நிகழ்வில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அப்படி ஒரு துயரைச் சந்தித்த குடும்பம்தான் ஹேமலதா - ஆனந்தஜோதியின் குடும்பம்.

இவர்கள் தங்கள் குழந்தைகள் இருவருடன் இந்தக் கூட்டத்திற்கு வந்தனர். கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஹேமலதா, குழந்தைகள் சாய் லக்ஷணா, சாய் ஜீவா என மூன்று பேர் உயிரிழந்துவிட்டனர். இதில் சாய் லக்ஷணாவுக்கு எட்டு வயது. சாய் ஜீவாவுக்கு நான்கு வயது. ஆனந்தஜோதியும் அவரது குடும்பத்தினரும் இந்த நிகழ்வைப் பற்றி ஊடகங்களிடம் பேசவே விரும்பவில்லை.

"ஊடகங்களிடம் நாங்கள் சொல்வது ஒன்றாக இருக்கிறது, ஆனால், வெளியாவது வேறாக இருக்கிறது" என மனமுடைந்து பேசுகிறார்கள் அவர்கள்.

'ஒரே இடத்தில் 11 பேர் பலி'

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, 13 வயது சனுஜ் தனது சித்தியுடன் கூட்டத்திற்குச் சென்றுள்ளார்.

கரூர் அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள காந்தி கிராமம் பாரதியார் தெருவைச் சேர்ந்த சனூஜுக்கு 13 வயதுதான். எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். சனூஜ் தனது சித்தி வைசூர்யா உள்ளிட்ட மூன்று பேருடன் விஜய்யைப் பார்க்கச் சென்றார்.

"நண்பகல் 12 மணிக்கே கிளம்பிவிட்டோம். டான்ஸ் எல்லாம் ஆடினோம். அங்கே ஒரு மளிகைக்கடை இருந்தது. அதன் அருகில் நின்றுகொண்டிருந்தோம். விஜய் வண்டி உள்ளே வந்தபோது பெரிய நெரிசல் ஏற்பட்டது. மல்லாந்து விழுந்துவிட்டோம். என்னுடன் இருந்த குழந்தைகளில் ஒரு குழந்தை ஷட்டரில் ஏறிவிட்டது.

இன்னொரு பிள்ளையை கொடுக்க முடியவில்லை. அந்த இடத்தில் முதலில் இருவர் விழுந்தனர். அதற்குப் பிறகு பையன் (சனுஜ்) விழுந்தான். அதுக்கு மேல் இரண்டு பேர் விழுந்தார்கள். அதற்கு மேல் அடுக்கடுக்காக விழுந்தார்கள். அரை மணி நேரம் கழித்துத்தான் பிள்ளையைத் தூக்க முடிந்தது. அப்பவே இறந்துவிட்டான். அந்த இடத்தில் மட்டும் 11 பேர் இறந்துவிட்டார்கள்" என்கிறார் வைசூர்யா. சனுஜின் தாயார் திருவளர்செல்வியால் பேசவே முடியவில்லை.

இந்த நிகழ்வில் வைசூர்யாவுக்கும் லல்லிக்கும் ஒரே நிலைதான். அதாவது, தன் உடன் பிறந்தவர்களின் குழந்தையை கூட்டத்திற்குக் கூட்டிவந்து பறிகொடுத்தவர்கள். இதன் காரணமாகவே கடுமையான குற்றஉணர்ச்சியில் ஆழ்ந்திருப்பவர்கள்.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, ஒரே குடும்பத்தை சேர்ந்த பழனியம்மாளும் (இடது), கோகிலாவும் (வலது) இறந்துவிட்டனர்.

'விஜயை பார்க்கவே இல்லை'

விஜயைப் பார்க்கச் சென்றவர்கள் தங்களுடன் குழந்தைகளையும் கூட்டிச் சென்றது குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு எதற்காக குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. ஆனால், குழந்தைகளுடன் சென்றவர்களில் பலர் விஜயின் ரோட் ஷோ நடந்த வேலுசாமிபுரம் அல்லது அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள்.

வேறு சிலர், சில கிலோ மீட்டர் தூரத்தில் வசிப்பவர்கள். அவர்கள் தங்கள் பகுதியில் இவ்வளவு பெரிய நிகழ்வு நடப்பது குறித்து தொடர்ந்து ஊடகங்கள் செய்திகளை வழங்கிவரும் நிலையில், அதனை தவறவிட விரும்பாமலேயே இந்தக் கூட்டத்திற்கு வந்தவர்கள். அவர்களில் ஒருவர்தான் செல்வராணி.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், Getty Images

செல்வராணியும் அவரது கணவர் பெருமாளும் வேலுசாமிபுரத்தை ஒட்டியுள்ள கோதூர் பகுதியில் வசித்து வருபவர்கள். இந்தத் தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் என நான்கு குழந்தைகள். தங்கள் பகுதிக்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டவுடன் செல்வராணி அனைவருடனும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றார்.

அந்த நெரிசலில் சிக்கி அவருடைய 14 வயது மகள் கோகிலாவும் 11 வயது மகள் பழனியம்மாளும் இறந்துவிட்டனர். காயங்களுடன் உயர் பிழைத்திருக்கிறார் செல்வராணி. உயிரிழந்த தங்கள் இரு குழந்தைகளின் சடலங்களையும் சொந்த ஊரான புங்கம்பட்டியில் அடக்கம் செய்துவிட்டு, மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கிறது இந்தக் குடும்பம். உயிரிழந்த இரு குழந்தைகளும் விஜயின் தீவிர ரசிகர்கள்.

"விஜய் இந்தப் பகுதிக்கு வருகிறார் என செய்தி வந்ததிலிருந்தே அங்கு போயாக வேண்டுமென குழந்தைகள் அடம்பிடித்தார்கள். அவர் வரும் இடம் தூரமாக இருந்தால் போக முடியாது என்றேன். ஆனால், அருகிலிருக்கும் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன், அது வீட்டிற்குப் பக்கம்தான் என்பதால் கண்டிப்பாக போகவேண்டும் என்றார்கள்.

எவ்வளவோ சொன்னேன். கேட்கவில்லை. போயே ஆகனும் என்றார்கள். கடைசியில கூட்டிட்டு போய் பறிகொடுத்ததுதான் மிச்சம். விஜய் வண்டி வந்ததுதான் தெரியும். நாங்கள் அவரைப் பார்க்கவேயில்லை. அவர் பேசியதையும் கேட்கவில்லை. கால் மணி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.

என் கணவர் போக வேண்டாம் என்றுதான் சொன்னார். இவர்களுடைய பிடிவாதத்தால்தான் கூட்டிப்போனேன். கூட்டிப்போகமால் இருந்திருந்தால் என் பிள்ளைகள் எங்கேயும் போயிருக்காது. அங்கே போயிருக்கவே கூடாது. போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்" என்கிறார் செல்வராணி.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, 7 வயதான க்ருத்திக் ஆதவ்

ஒரே கிராமத்தில் மொத்தம் ஐந்து பேர்

கரூரின் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் வெல்டராக வேலைபார்த்து வருகிறார். அவர்களுடைய மகன் 7 வயதேயான க்ருத்திக் ஆதவும் மனைவி சந்திரகலாவும் கூட்டத்திற்குச் சென்றனர்.

நெரிசலில் சிக்கி க்ருத்திக் ஆதவ் அங்கேயே உயிரிழந்துவிட, படுகாயமடைந்து மீண்டிருக்கிறார் சந்திரகலா. திரும்பத் திரும்ப இதைப் பற்றிப் பேசி ஓய்ந்துபோன சரவணனும் அவரது குடும்பத்தினரும் இது குறித்து பேசவே விரும்பவில்லை.

இந்த நெரிசல் மரண சம்பவத்தில் பெரும் இழப்பைச் சந்தித்த பகுதி என்றால் அது ஏமூர் கிராமம்தான். ஒரே கிராமத்தில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் இரண்டு பேர் குழந்தைகள். வேலுசாமிபுரத்திற்கு விஜய் வருவதைக் கேள்விப்பட்டவுடன் ஏமூரில் இருந்த பலர் ஒன்று சேர்ந்து ஒரு வாகனத்தை அமர்த்தி விஜயைப் பார்க்கச் சென்றிருக்கின்றனர்.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, எட்டாண்டுகள் கழித்துப் பிறந்த தரணிகா உயிரிழந்தார்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் டாஸ்மாக்கில் கண்காணிப்பாளராக இருக்கிறார். இவருடைய மனைவி ப்ரியதர்ஷினி.

இந்தத் தம்பதிக்கு திருமணமாகி, எட்டாண்டுகள் கழித்துப் பிறந்தவர் தரணிகா. ஒரே மகள். 13 வயதான தரணிகா 9ஆம் வகுப்பு படித்துவந்தார்.

சனிக்கிழமையன்று சக்திவேல் வேலைக்குச் சென்றுவிட்டார். ப்ரியதர்ஷிணியும் மகள் தரணிகாவும் ஏமூரைச் சேர்ந்த மற்றவர்களுடன் இணைந்து விஜயைப் பார்க்கச் சென்றனர்.

மாலை ஐந்து மணியளவிலேயே அங்கு கூட்டம் அதிகரித்ததை தொலைக்காட்சிகளில் பார்த்த சக்திவேல், மனைவியைத் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார்.

விஜய் வரவிருந்த பகுதியில் கூட்டம் வெகுவாக இருந்ததால் அவரால் ப்ரியதர்ஷினியுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் ப்ரியதர்ஷினி தாங்கள் விஜயைப் பார்த்துவிட்டு வருவதாகவும் சக்திவேலை வீட்டிற்குச் சென்று சாப்பிடும்படியும் ஒரு பதில் குரல் பதிவை அனுப்பியிருக்கிறார்.

அதனைக் கேட்ட சக்திவேல் கூட்டம் அதிகமாக இருப்பதால் அந்த இடத்திலிருந்து புறப்படும்படி குரல் பதிவு ஒன்றை அனுப்பினார். அந்த குரல் பதிவை ப்ரியதர்ஷினி கேட்கவேயில்லை. அதற்குள் ப்ரியதர்ஷினியும் குழந்தை தரணிகாவும் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டனர்.

ஏற்கெனவே மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஒரு மகள் இறந்த நிலையில், தரணிகா மீது உயிரையே வைத்திருந்தார் சக்திவேல். "இப்போது என் குடும்பமே அழிந்துவிட்டது. நான் யாரைக் குறைசொல்வது?" என தழுதழுக்கிறார் சக்திவேல்.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, பொறியியல் கல்லூரி மாணவர் கிஷோர் (இடது), தனது தாயுடன் சென்றபோது உயிரிழந்த பத்து வயது சிறுவன் ப்ரித்திக் (வலது)

'விஜயின் வாகனத்தை நெருங்கிச் சென்றார்'

அதே கிராமத்தைச் சேர்ந்த பத்து வயது ப்ரித்திக்கும் தனது தாயுடன் சென்றபோது உயிரிழந்திருக்கிறான். குழந்தையுடன் தனியாக வசித்துவந்த அவனுடைய தாயார் தற்போது இருந்த ஒரு பிடிமானத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார். இவர்களைச் சந்தித்த போது, காட்சிகளைப் பதிவு செய்ய அனுமதித்தாலும் பேச விரும்பவில்லை.

குழந்தைகள் மட்டுமல்லாமல் சுயமாக சென்ற பதின்பருவத்தினரும் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்துள்ளனர்.

காந்திகிராமம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த கிஷோர், ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். கிஷோருக்கு சிறு வயது முதலே விஜய் மீது பெரும் விருப்பம் உண்டு. தீவிரமான விஜய் ரசிகர் அவர்.

தனது அபிமானத்திற்குரிய விஜய் கரூருக்கு வருவதைக் கேள்விப்பட்டதும் அவரும் அவருடைய பெரியம்மா மகன் மிதில் பாலாஜியும் வேறு சில நண்பர்களும் வேலுசாமிபுரத்திற்குச் சென்றனர்.

விஜய் வரும்போது ஏகப்பட்ட நெரிசல் ஏற்பட, அவருடைய அண்ணன், கூட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட முடிவெடுத்தார். ஆனால், கிஷோர் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. தொடர்ந்து முன்னேறி விஜயின் வாகனத்தை நெருங்கிச் சென்றார். பிறகு அவருடைய அண்ணனால் கிஷோரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

"ஏழு மணியளவில் விஜய் வந்தார். அவரைப் பார்த்தவுடன் நாங்கள் வெளியே வந்துவிட்டோம். அவன் வெளியே வராமல் உள்ளே சென்று மாட்டிக்கொண்டான். என்னால் மூச்சுவிட முடியவில்லை. எட்டரை மணிவரை வராததால் அவனுக்கு போன் செய்தோம். போன் ரீச்சாகவில்லை. பிறகு ஊரிலிருந்து ஒரு அக்கா போன் செய்து, ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்க்கச் சொன்னார். சென்று பார்த்தால் கிஷோர் மார்ச்சுவரியில் இருந்தான். என் கூடவே வந்திருந்தால் இப்போது உயிரோடு இருந்திருப்பான்" என அழுகிறார் மிதில் பாலாஜி.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, 15 வயது ஸ்ரீநாத் மிகத் தீவிரமான விஜய் ரசிகர்.

'200 ரூபாயுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை'

மேட்டூரைச் சொந்த ஊராகக் கொண்ட 15 வயது ஸ்ரீநாத்தின் குடும்பம் கரூரில் வசித்துவந்தனர். ஸ்ரீநாத் மிகத் தீவிரமான விஜய் ரசிகர். சனிக்கிழமையன்று காலையில் தானே காலை உணவைச் செய்து சாப்பிட்டுவிட்டு, தாய் கொடுத்த 200 ரூபாயுடன் விஜயைப் பார்க்க புறப்பட்டார் ஸ்ரீநாத். ஆனால், மாலையில் வீடுதிரும்பவில்லை.

"அந்த சமயத்தில்தான் அவனுடைய டியூஷன் டீச்சர் போன் செய்து ஸ்ரீ எங்கே என்று கேட்டார். எதற்காகக் கேட்கிறீர்கள் என்றேன். விஜயின் கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒரு பையனைப் பார்க்கும்போது ஸ்ரீ மாதிரியே இருக்கிறது, எனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றார். அவர் சொன்ன வண்ணத்தில்தான் ஸ்ரீ கால்சட்டை அணிந்திருந்தான். இருந்தாலும் என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், விரைவிலேயே எங்களுக்குத் தெரிந்த ஒரு போலீஸ்காரர், செய்தியைச் சொல்லிவிட்டார். இப்ப வரைக்கும் எங்கே போனான், விஜயைப் பார்த்தானா, பார்க்கவில்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அன்று காலையில் அவ்வளவு சந்தோஷமாக இருந்தான். எத்தனை மணிக்கு இப்படி ஆச்சுன்னு தெரியவில்லை" என்கிறார் ஸ்ரீநாத்தின் தாயார் கோமதி.

கரூர், விஜய் பரப்புரை கூட்ட நெரிசல், பிபிசி கள ஆய்வு

இதற்கு முந்தைய சம்பவங்கள்

தமிழ்நாட்டின் சமீப கால வரலாற்றில் இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய அளவில் இரண்டு முறை நெரிசல் மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 1992ல் கும்பகோணம் மகாமகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சுமார் 50 பேர் வரை உயிரிழந்தனர்.

அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதாவும் அவருடைய தோழி வி.கே. சசிகலாவும் மகாமக குளத்தில் நீராட வந்ததே இந்த நெரிசலுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதற்குப் பிறகு, 2005ஆம் ஆண்டு டிசம்பரில் கனமழையை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்கான டோக்கன் டிசம்பர் 18ஆம் தேதி காலை வழங்கப்படும் என செய்திகள் பரவிய நிலையில், அந்த டோக்கனைப் பெற மக்கள் முண்டியடித்ததில் 42 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 25 பேர் பெண்கள்.

இந்த இரு நிகழ்வுகளிலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் குழந்தைகள் சிக்கவில்லை.

கரூர் நிகழ்வில் உயிரிழந்த 41 பேரில் 11 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். குழந்தைகளை இழந்த குடும்பத்தினரில் ஒரு சிலர் நடுத்தர வர்க்கத்தினர் என்றாலும் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் மிகமிக சாதாரண நிலையில் இருப்பவர்கள். குடும்பத் தலைவர்கள் சாதாரண ஒரு வேலையைச் செய்து குடும்பத்தை பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

உயிரிழந்த குழந்தைகளில் சிலர் பெற்றோருடன் சென்றவர்கள். சில குழந்தைகள் தங்கள் உறவினர்களுடன் சென்றிருக்கிறார்கள். குழந்தைகள் உயிரிழந்துவிட, பெற்றோரும் அழைத்துச் சென்ற உறவினர்களும் மீள முடியாத குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தக் கூட்டங்களுக்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர்?

விஜயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைத் தவிர வேறு காரணங்கள் ஏதும் இல்லை. "வீட்டிற்கு பக்கத்திலேயே விஜய் வந்தா யாருதான் போகமாட்டாங்க? டிவியிலேயே பார்ப்பவரை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைச்சா, யாருதான் தவறவிடுவாங்க.. அதுதான் நான் செய்த தப்பு. என் தம்பி குழந்தையை தூக்கிட்டு போனது தப்புதான். அப்ப ஒரு செகண்ட் யோசிச்சிருக்கலாம்" என்கிறார் சகோதரனின் ஒன்றரை வயது குழந்தையை பறிகொடுத்த லல்லி.

இந்தத் தருணத்தில் குழந்தைகளை இழந்தவர்கள் பெரும்பாலும் யாரையும் குறைசொல்லும் நிலையில் இல்லை. வாழ்நாள் முழுவதும் மீள முடியாத இந்தத் துயரத்தை எப்படிக் கடப்பது என்பதே அவர்களது மனதை இப்போது அரித்துக் கொண்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20vy8njgzzo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.