Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் தாக்குதல், உயிரிழப்பு, மின்னல் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையைச் சேர்ந்த 20 வயதான முகுந்தன் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் செல்போனும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முகப்பேரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான முகுந்தன் திங்கட்கிழமை திருமங்கலத்தில் உள்ள அவரது நண்பர் தனுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

நண்பர்கள் அவரது வீட்டின் மொட்டை மாடியில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகுந்தன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் பருவமழை நெருங்கி வரும் சூழலில் மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.

இந்த சம்பவத்தை ஒட்டி மின்னல் நேரங்களில் செய்ய வேண்டியது என்ன, மின்னனு சாதனங்களைப் பயன்படுத்தலாமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பொதுவெளிகளில் தான் மின்னல் மரணங்கள் நிகழும் என்கிற கருத்து இருந்தாலும் வீடுகளில் இருக்கும்போது மின்னல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள்

ஆகஸ்ட் 23: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சகோதரிகளான அஸ்பியா பானு (13 வயது) மற்றும் சபிக்கா பானு (9 வயது) விடுமுறை தினத்தன்று வெளிவே சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்யவே மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளனர். அப்போது மின்னல் தாக்கி இருவரும் சம்பவம் இடத்திலே உயிரிழந்தனர்.

செப்டம்பர் 18: ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ரமேஷ் மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

செப்டம்பர் 23: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் கொளஞ்சியம்மாள். விவசாயியான இவர் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கவனிக்கச் சென்றபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

மின்னல் தாக்கினால் மிகக் கடுமையான காயங்கள் மற்றும் மரணம் கூட ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) தெரிவிக்கிறது.

இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு மட்டும் மின்னல் தாக்கியதில் 2,560 பேர் உயிரிழந்தனர். இயற்கை சீற்றங்களால் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மின்னல் தாக்குதல், உயிரிழப்பு, மின்னல் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

கடலை ஒட்டிய பகுதிகளில் தான் மின்னல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான ரமணன்.

மின்னல்கள் 7000 டிகிரி வரை வெப்பத்தை உருவாக்கக்கூடும் என்று கூறும் அவர் திறந்தவெளிகளில் தான் மின்னல் தாக்குதவதற்கான ஆபத்துகள் அதிகம் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.

"மின்னல் மற்றும் மழை பெய்கிறபோது திறந்தவெளிகளில் இருக்கக்கூடாது. குறிப்பாக ஒற்றை மரத்தின் கீழ் நிற்கக்கூடாது. நிறைய மரங்கள் இருக்கும் இடங்களில் உயரமான மரங்களின் கீழ் நிற்கக்கூடாது. அதே போல ஈரமான சுவர்களின் மீது சாய்ந்து நிற்கக்கூடாது. ஈரம் மூலமாகவும் மின்சாரம் கடத்தப்படுவதற்கு வாய்ப்புண்டு." என்று தெரிவித்தார் ரமணன்.

அதே வேளையில் வீடுகளில் இருக்கிறபோதும் மின்னல் தாக்கும் வாய்ப்பு இருப்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மலைப்பகுதிகளில் நேரடி மின்னல் தாக்குதல் நிகழும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார் பொது மருத்துவரும் எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மூத்த ஆலோசகருமான ஆர்.நந்தகுமார்.

பொதுவெளிகளில் தான் மின்னல் மரணங்கள் நிகழும் என்கிற கருத்து இருந்தாலும் வீடுகளில் இருக்கும்போது மின்னல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்னல்கள் தாக்குவது நான்கு விதங்களில் நடக்கும் என்று விவரிக்கிறார்.

  • நேரடியாக ஒருவர் மீது மின்னல் தாக்குவது

  • மரம் அல்லது ஒரு சுவர் மீது மின்னல்பட்டு அருகில் இருப்பவரை தாக்குவது

  • மின்னல் தாக்கிய இடத்திலிருந்து நிலத்தின் வழியாக அருகில் இருப்பவர்களை பாதிப்பது.

  • மின்னல் தாக்கிய இடத்தில் உலோகங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பாதிப்பது

மின்னணு சாதனங்களை மின்னல் தாக்குமா?

செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இடி, மின்னல் சமயங்களில் பயன்படுத்தலாமா என்பது தொடர்பான கேள்விகளும் இதனையொட்டி எழுகின்றன. இதற்கான விளக்கத்தை பிபிசியிடம் முன்வைத்தார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முன்னாள் முதுநிலை விஞ்ஞானியும் தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றும் த.வி. வெங்கடேஸ்வரன்.

"உராய்வினால் மின்னல் ஏற்படுகிறபோது நிலையான மின்சாரம் (static electricity) இறங்குவதற்கான ஒரு தளம் தேவைப்படுகிறது. அவை ஒன்று நிலத்தில் இறங்கும் அல்லது துருதுருத்திக் கொண்டிருக்கும் கம்பி போன்ற உலோகங்களில் இறங்கும். நாம் தரையில் நிற்கிறபோது நமது காலுக்கு அடியில் ஈரம் இருந்தாலும் அங்கு இறங்கும். அதனால் தான் பொதுவெளிகளில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது."

"மின்னல் என்பது மின்னணு சாதனங்களில் இறங்காது. அதனால் மின்னல் தாக்குதலால் நமது கைகளில் அல்லது பயன்பாட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வீடுகளில் இருக்கின்றபோது சார்ஜிங்கில் உள்ள செல்போனை பயன்படுத்தக்கூடாது. வெளியிலும் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் செல்போன் பயன்படுத்துவதில் எந்த ஆபத்தும் இல்லை." எனத் தெரிவித்தார்.

எனவே மின்னணு சாதனங்களை பயன்படுத்தவது பிரச்னை இல்லை. அவற்றை எங்கிருந்து எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே மின்னல் ஆபத்து உள்ளது.

இடி, மின்னல் சமயத்தில் என்ன செய்ய வேண்டும்?

இடி மற்றும் மின்னல் ஏற்படுகிறபோது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களையும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.எம்.டி.ஏ) வழங்கியுள்ளது.

வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  • மொட்டை மாடி மற்றும் பால்கனிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்

  • குழாய்களில் மின்சாரம் கடத்தப்பட வாய்ப்பு இருப்பதால் அவற்றுடனான தொடர்பை தவிர்க்க வேண்டும்

  • குளிக்கவோ, கை கழுவவோ, பாத்திரங்களை சுத்தம் செய்யவோ கூடாது

  • லேண்ட்லைன் அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது.

  • சார்ஜிங்கில் இல்லாத திறன்பேசி, டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை வீடுகளில் பயன்படுத்தலாம்.

வெளியில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  • முழுவதுமாக மூடப்பட்ட கட்டடங்கள் அல்லது காருக்குள் செல்ல வேண்டும்

  • திறந்தவெளி வாகனங்களில் இருக்கக்கூடாது

  • தகரத்தால் ஆன கூடாரங்கள், திறந்தவெளி வாகன நிறுத்தம், கட்டுமானத்தின் கீழ் உள்ள கட்டிடங்கள் ஆகிய இடங்களை தவிர்க்க வேண்டும்

  • மறைவான இடங்களில் எங்கும் ஒதுங்க முடியவில்லையென்றால் நிலத்தில் கால்கள் இரண்டையும் அருகருகே வைத்து காதுகளை அடைத்துக் கொண்டு குனிய வேண்டும்

  • நிலத்தில் படுப்பதை தவிர்க்க வேண்டும்

  • நீர்நிலைகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.

மின்னல் தாக்குதல், உயிரிழப்பு, மின்னல் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

உயிரிழப்பைத் தாண்டி மின்னல் தாக்குவதால் நீண்ட கால காயங்கள் மற்றும் குறைபாடு ஏற்படலாம் எனவும் என்.டி.எம்.ஏ தெரிவிக்கிறது.

மின்னல் தாக்குதலில் வெளிப்புற காயங்கள், உட்புற காயங்கள் இரண்டு வகைகளாகவும் பாதிப்புகள் இருக்கும் என்கிறார் நந்தகுமார் "தோல், தசை தொடங்கி அனைத்து உறுப்புகளையும் மின்னல் தாக்குதல் பாதிக்கும். ஒரு தீக்காயம் ஏற்பட்டால் என்ன பாதிப்புகள் எல்லாம் நிகழுமோ அவை அனைத்தும் உருவாகும். தசைகளை கடுமையாக பாதிக்கும்." என்றார்.

"பார்வை மற்றும் செவித் திறன் குறைபாடு, மூச்சுத் திணறல், சீரற்ற இதய துடிப்பு, நெஞ்சு வலி, தலைவலி, தூங்குவதில் பிரச்னை, தலைசுற்றல், தசை பிடிப்பு மற்றும் உடல் சோர்வு ஏற்படும்." என்றும் குறிப்பிட்டார்.

மின்னல் தாக்குவதில் மூளை மற்றும் இதயம் சார்ந்த பாதிப்புகள் தான் அதிகம் நிகழ்வதாகக் குறிப்பிடுகிறார் நந்தகுமார். "மிக தீவிரமாக தாக்கினால் மூளைச் சாவு அடைவதற்கும் வாய்ப்புகள் உண்டு. காயமடைபவர்களுக்கு மறதி போன்ற நீண்டகால சிக்கல்கள் ஏற்படும்."

"இதயத்தில் ரத்த அழுத்தம் கடுமையாகப் பாதிக்கப்படும். உடனடியாக மாரடைப்பு ஏற்படுவதற்கும் ரத்த குழாய்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதனால் தான் மின்னல் தாக்குதலில் உயிர் பிழைப்பவர்கள் விகிதம் மிக குறைவாக இருக்கிறது." என்றார்.

மின்னல் தாக்கியவர்களுக்கு வழங்க வேண்டிய முதலுதவிகளையும் என்.டி.எம்.ஏ பட்டியலிட்டுள்ளது. அவை,

  • மின்னல் தாக்கியவருக்கு மூச்சு இல்லையென்றால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் அவசர உதவி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவருக்கு சி.பி.ஆர் வழங்க வேண்டும்.

  • மின்னல் தாக்கியவருக்கு நினைவிருந்தால், அவரை தரையில் படுக்க வைத்து காலை உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62qyq1l4q0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து தப்பிக்க முடியுமா...?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் இடி, மின்னல் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மின்னல் பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய இருப்பதால் முதலில் இடி எப்படி உருவாகிறது என்பதை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

* மேகம்+ நிலம் ஆகியவற்றின் மூலம் கண நேரத்தில் உருவாகும் மின்னல் சுமார் 30,000 டிகிரி செல்சியஸ், அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 3 மடங்கு அதிகமான வெப்பத்துடன் ஒளியை உண்டாக்கும்.

* இந்த அதீத ஆற்றல் கொண்ட மின்னல் கீற்று மேகத்திற்கும் நிலத்திற்கும் இடையே உள்ள காற்றை படுவேகமாக கிழிக்கும். இப்படி கிழித்து பிரிக்கும்போது, காற்று அதே வேகத்துடன் பின்னோக்கி விரிவடையும்.

* இப்படி வேகமாக விரிவடையும்போது ஏற்படும் பயங்கரமான ஒலி தான் இடி.

* சிலர் நினைப்பது போல் மேகங்கள் மோதிக்கொள்ளும் போது தான் இடி உருவாகும் என்பது தவறான கருத்து. மின்னல் காற்றை கிழித்துக் கொண்டு பயணிக்கும்போது காற்று உருவாக்கும் ஒலி தான் இடி.

உதாரணமாக...

* ஒரு பட்டாசில் தீ வைக்கிறோம். திரி மருந்தை அடைந்ததும் அது ஒலியுடன் வெடிக்கும். சரி தானே...?

* ஆனால், ஒரு பலூனை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஒரு ஊசியால் குத்தினால் அது எப்படி பலத்த ஓசையுடன் வெடிக்கிறது...? உள்ளே மருந்து என எதுவும் இல்லையே...? எப்படி ஒலி உண்டானது...?

* காரணம், நாம் காற்றை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஊசியால் குத்தும் போது, அடைத்து வைக்கப்பட்ட காற்று அதீத வேகத்தில் வெளிப்பட்டு வெளிக்காற்றுடன் சேர்ந்து விரிவடையும்போது தான் இந்த ஒலி உண்டாகும்.

* இதே பலூனை நீங்கள் நிலாவில் வெடித்தால், அங்கே ஒலி கேட்காது. ஏனெனில், அங்கு காற்று இல்லை. அது விரிவடைய முடியாது.

* இதே போல் தான்... ஒரு அணுகுண்டை வெடிக்க வைக்கும்போது அந்த வெடிப்பில் உண்டாகும் ஆற்றல் காற்றை கிழித்து வேகமாக விரிவடைய செய்யும்போது தான் அந்த 'பூம்ம்ம்' ஒலி நமக்கு கேட்கும்.

* இதே அணுகுண்டை நிலாவில் வெடித்தால் நமக்கு ஒளி மட்டுமே தெரியும். ஒலி கேட்காது.

* ஆக, மின்னல் உருவாகும்போது அது காற்றை கிழித்து பாதையை உருவாக்கும்போது காற்று வேகமாக விரிவாகும் நிலையில் கேட்கும் ஒலி தான் இடி.

சரி இப்போது மின்னலை பார்ப்போம்.

* மழையை உருவாக்கும் குமுலோநிம்பஸ் மேகங்கள் அடர்த்தியாக திரண்ட பின்னர் அதே வேகமாக சுமார் 10-15 கிமீ வரை மலை போல் வளரும்.

* இந்த மேகத்திற்குள் சிறிய ஐஸ் துகள்கள்(ice crystals) மற்றும் பெரிய ஆலங்கட்டிகள்(hails) பல பில்லியன் எண்ணிக்கையில் காணப்படும்.

* சிறிய ஐஸ் துகள்கள் positive charge-வுடன் மேகத்தின் மேற்பரப்பிற்கு சென்று விடும். பெரிய ஆலங்கட்டிகள் negative charge-வுடன் மேகத்தின் அடிப்பாகத்தில் தங்கிவிடும்.

* பின்னர் இவை பலமாக மோதிக்கொள்ளும்போது ஒரு electric current உருவாகும். இந்த கரண்ட் மேகத்திலிருந்து வெளிப்பட்டு சுமார் 50 மீட்டர் வரை மட்டுமே கீழே பூமியை நோக்கி நீளும்.

* இதற்கு அடுத்த நிலையில், பூமியில் உள்ள மனிதர்கள் உள்பட அனைத்து பொருட்களும் இந்த மழை, புயல் நேரங்களில் ஒருவித மின்னழுத்த பாதையை வெளியிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Streamer எனக் கூறுவார்கள்.

* மனிதர்கள், மரங்கள், வீடுகள், கம்பங்கள் என செங்குத்தாக நிற்கும் அனைத்தும் இந்த Streamer- களை வெளியிடுவார்கள். இவை மேல்நோக்கி செல்லும்.

* இப்போது மேலே 50 மீட்டர் தொலைவு வரை வந்த electric current-ஐ இந்த Streamer தொட்டு இணைந்து விட்டால், கீழே எதன் மூலம் இந்த Streamer வெளியானதோ அது மீண்டும் ஒரு பலமான return stroke கொடுக்கும். இதுவும் electric current-ம் சேர்ந்து தான் ஒரு பயங்கரமான மின்னல் வெட்டை உருவாக்கும்.

* பலரும் நினைப்பது போல் மின்னல் மேகத்திலிருந்து தோன்றி அப்படியே பூமியில் உள்ளவைகளை நேரடியாக தாக்காது. மின்னல் என்பது கிட்டத்தட்ட பூமியில் உருவாகி மேலே செல்கிறது.

உதாரணமாக....

* மின்னல், இடி அடிக்கும்போது நாம் வெளியே செல்கிறோம். நாம் எப்போதும் செங்குதாகவே நடப்போம்/நிற்போம்.

* அதே சமயம், நாம் இருக்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம், கம்பம், வீடு என எதுவும் இல்லை.

* இப்போது மேலே அந்த electric current 50 மீட்டர் தொலைவில் (மேகத்திலிருந்து) ஒரு பாதையை உருவாக்க Streamer-காக காத்துக் கொண்டு இருக்கும்.

* கீழே நடக்கும் நம் தலை மற்றும் உடலில் இருந்து Streamer வெளியாகி மேல் நோக்கி செல்லும்.

* இரண்டும் இணையும்.... return stroke ஏற்படும். இப்போது electric current-க்கு பாதை கிடைத்ததும் அந்த பாதையின் எல்லை வரை அது பயணம் செய்யும்.

அந்த பாதையின் எல்லை எது..?

நம் தலை தான்...

* இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்... பூமியும் Streamer-களை வெளியிடும்.

* ஆனால், flat-ஆன பூமி வெளியிடும் Streamer மேலே செல்வதற்குள் செங்குத்தாக நிற்கும் நாம் வெளியிடும் Streamer விரைவாக மேலே சென்று இணைந்து விடும்.

* ஆக, எலக்ட்ரிக் கரண்டின் டார்க்கெட் நம் தலை தான்.

* சரி, நாம் நிற்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம் உள்ளது. யாரை எலக்ட்ரிக் கரண்ட் தேர்வு செய்யும்...?

* அஃப்கோர்ஸ், உயரமான மரம் தான் பிரைமரி டார்க்கெட்..ஆனால், நாமும் ஆபத்தில் தான் இருப்போம்.

* ஏனெனில், மரம் வெளியிடும் Streamer மேலே இணைந்தவுடன் பாதை ஏற்படும் மரத்தின் உச்சி வரை எலக்ட்ரிக் கரண்ட் வந்துவிடும். அருகில் வேறு ஏதாவது உயரமாக இருந்து அது Streamer-ஐ வெளிப்படுத்தும்போது அந்த எலக்ட்ரிக் கரண்ட் அசுர வேகத்தில் அங்கே Jump செய்துவிடும்.

* இதனால் தான் உயரமான மரத்திற்கு அருக நிற்க கூடாது என்கிறார்கள்.

* சரி, மேலே எலக்ட்ரிக் கரண்ட் தயார் நிலையில் உள்ளது... கீழே நாம் நடக்கிறோம்... நம்மை விட உயரமானது எதுவும் அருகில் இல்லை. நம்மை இன்னும் சில வினாடிகளில் மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர முடியுமா..?முடியும்.

* வெளியே நீங்கள் நிற்கும்போது/நடக்கும்போது உங்கள் உடல் Streamer-களை வெளியிடும். அப்போது...

* உங்கள் தலைமுடிகள் நேராக நிற்கும்..

* உங்கள் தோலை யாரோ வருடி விடுவதுபோல் தோன்றும்...

* உங்களிடம் இரும்பு சாவி, செயின், மோதிரம், டூல்ஸ் என ஏதாவது இருந்தால் அவை vibrate ஆகும்.

* இந்த மாற்றங்களை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக ஒரு இருப்பிடத்திற்குள் படுவேகமாக நுழைந்து விட வேண்டும்.

* இருப்பிடம் இல்லையெனில், அப்படியே கீழே அமர்ந்து இரண்டு கால்களுக்கு இடையில் தலையை கீழ்புறமாக தொங்கவிட்டு இரண்டு காதுகளையும் மூடிக்கொள்ள வேண்டும். (போட்டோ பார்க்கவும்)

* அதாவது, ஒரு செங்குத்தான நிலையை மேலே உள்ளவனுக்கு கொடுக்க கூடாது.

* ஆக, மின்னல் என்பது தானாக, எதேச்சையாக உங்களை தாக்கவில்லை. அதாவது, அது தாக்கும் இடத்தில் நீங்கள் நிற்கவில்லை.

* மாறாக, நீங்கள் அங்கே சென்று அந்த மின்னலை வா வா என அழைத்ததால்(Streamers) அது உங்களை குறிவைத்து தாக்கியது. ஒருவேளை, நீங்கள் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், அங்கே மின்னல் தாக்குவதும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

* ஏனெனில், மேகங்கள் நகரும்போது காத்திருக்கும் அந்த எலக்ட்ரிக் கரண்ட் வேறு ஒரு இடத்தில் உயரமான பொருள் மீது தாக்கியிருக்கும்.

* ஆக, இடியை மேகங்கள் உருவாக்கவில்லை. அது காற்றிலிருந்து வெளியாகிறது... மின்னல் மேகத்திலிருந்து நேராக நம்மை தாக்கவில்லை. நாம் அதனை கீழே இருந்து வரவழைக்கும் ஒரு 'இணைப்பு புள்ளியாக' இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துக் கொண்டோம்!

images?q=tbn:ANd9GcQpU7yeRp-KytPG71w9CI_

https://www.facebook.com/groups/2491490137808049/permalink/3937668153190233/?rdid=pv2TT2MBU0rdWgaO&share_url=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshare%2Fp%2F18gSHQJZRQ%2F#

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.