Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இருந்து)

21 அக்டோபர் 2025, 03:56 GMT

புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்

வங்கக் கடலில் இன்று (அக்டோபர் 21) காலை 5.30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். நாளை (அக்டோபர் 22) மதியம் வேளைக்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா, "வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவாகுமா என்பது நாளை (அக்டோபர் 22) தெரியும்" என கூறியுள்ளார்.

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

படக்குறிப்பு, வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா

"கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியில் 17 செ.மீ கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டின் 22 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது" என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்துப் பேசிய அமுதா, "அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல 23ஆம் தேதி, தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24 முதல் 27 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்." என்று கூறினார்.

இன்று காலை முதல் நாளை காலை வரை, தமிழ்நாட்டின் 8 கடலோர மாவட்டங்கள் (விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்) மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

மேலும், 10 மாவட்டங்களில் மிக கனமழை, 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அமுதா கூறினார்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவுறுத்தினார்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

வங்கக் கடலில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, 20 செ.மீக்கு அதிகமான அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 21

ரெட் அலெர்ட் : கடலூர் மாவட்டத்துக்கு மட்டும் அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ( 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ அளவிலான மழை) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 22

ரெட் அலெர்ட் : செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அக்டோபர் 23

ரெட் அலெர்ட் : எந்த மாவட்டத்துக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்படவில்லை.

ஆரஞ்ச் : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பிற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

(கனமழை என்பது 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ அளவிலான மழை அளவை குறிக்கும். மிக கனமழை என்பது 11.5 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மழை அளவை குறிக்கும். அதிகனமழை என்பது 20 செ.மீக்கு அதிகமான மழைப்பொழிவைக் குறிக்கும்.)

சென்னைக்கு மாலை 4 மணி வரை ரெட் அலெர்ட்

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில் 15 மி.மீக்கு அதிகமான மழை இடி மின்னலுடன் பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக் காற்று மணிக்கு 62கி.மீ முதல் 87 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை 5 மி.மீ முதல் 15 மி.மீ அளவிலான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 41 கி.மீ முதல் 61 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

அரியலூர், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கையை குறிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வரைபடம். (மஞ்சள் - மிதமான மழை, ஆரஞ்சு - மிக கனமழை)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், அச்சுந்தன்வயல், பரமக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழ்நாடு, கனமழை வானிலை

படக்குறிப்பு, மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

பாலாற்றில் வெள்ளம் - மக்களுக்கு எச்சரிக்கை

ஆந்திரா மாநிலம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் 22 அடி உயர தடுப்பணை நிரம்பி அதன் உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது. தமிழகத்தில் புல்லூர், திம்மம்ப்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக பாலாறு சுமார் 222 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கின்றது.

வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் யாரும் இறங்குவோ, குளிக்கவோ கூடாது என்று திருப்பத்தூமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மேலும் அதிக மழை பெய்தால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 101.36 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையின் நீர் மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும் அப்படி திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgkmyz0897o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரெட் அலர்ட் : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

image-248.png

ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நாளைக்கு வானிலை எப்படி?

அதே போன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் நாளை அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

வடகிழக்கு பருவமழை எதிரொலியாக மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழக மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிக்கான விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

https://minnambalam.com/puducherry-school-college-leave-due-to-red-alert/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரெட் அலர்ட் கொடுத்த இடங்களில் ஏன் அதி கனமழை பெய்யவில்லை?

தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் கொடுத்த இடங்களில் ஏன் அதி கனமழை பெய்யவில்லை?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • சாரதா வி

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருந்தது.

ரெட் அலர்ட் (அதி கனமழை) என்பது 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதை குறிக்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை முதல் மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சேலம், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டது.

WEATHER PREDICTION

பட மூலாதாரம், Getty Images

திரும்பப் பெறப்பட்ட ரெட் அலர்ட்

ஆனால் அக்டோபர் 22-ஆம் தேதி காலை இந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. புதன்கிழமை வெளியான தகவலின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது.

WEATHER PREDICTION

பட மூலாதாரம், X@ChennaiRmc

அக்டோபர் 22-ஆம் தேதி மழை நிலவரம்

அக்டோபர் 22ம் தேதி காலை 8.30 மணி முதல் அக்டோபர் 23ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் 11 செ.மீ மழை பெய்துள்ளது.

நாமக்கல்லில் மோகனூர், நீலகிரியில் விண்ட் வர்த் எஸ்டேட், திருப்பூரில் வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் 9 செ.மீ மழை பதிவாகியது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, நீலகிரியில் க்ளென்மார்கன், விழுப்புரம் ஆவலூர்பேட்டை ஆகிய இடங்களில் 8 செ.மீ மழை பதிவாகியது.

சென்னை புறநகர் பகுதிகளில் மேடவாக்கத்தில் 4 செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ மழையும் பதிவானது.

WEATHER PREDICTION

பட மூலாதாரம், Getty Images

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்று அக்டோபர் 21-ஆம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அன்றே அது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது. அப்போது அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது புயலாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அக்டோபர் 22-ஆம் தேதி கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அக்டோபர் 22-ஆம் தேதி வெளியான அறிக்கையின்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதன் அடுத்த நிலையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

WEATHER PREDICTION

பட மூலாதாரம், imd.gov.in

எச்சரிக்கை கொடுத்த இடங்களில் ஏன் கனமழை பெய்யவில்லை?

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை பொய்யாகி போவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் கனமழையை எச்சரிக்க தவறியது என்ற விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.

அதே போன்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்த தினங்களில், எச்சரித்த இடங்களில் மழை பெய்யாமல் போனதும் உண்டு.

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கைக்கும் வானிலை நிகழ்வுக்கும் இடையில் உள்ள இடைவெளியை பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஒய்.இ.ஏ. ராஜ் விளக்கமாக பேசினார்.

வானிலை நிகழ்வுகளை 100% யாராலும் முழுமையாக கணிக்க முடியாது என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

"வானிலை எச்சரிக்கைகள் எப்போதுமே 80-85% சரியாக இருக்கும். 100% சரியாக யாராலும் கணிக்க முடியாது" என்றார்.

இந்த முறை என்ன நடந்தது என்று விளக்கி பேசிய அவர், "வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்று முதலில் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்து கரையை கடந்தது என்று கூற முடியாது, நகர்ந்து சென்றது என்றுதான் கூற வேண்டும். எனவே புதன்கிழமை மதியம் முதலே மழை குறைய தொடங்கியது" என்றார்.

WEATHER PREDICTION

பட மூலாதாரம், Y.E.A. Raj

படக்குறிப்பு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஒய்.இ.ஏ. ராஜ்

முதலில் இருந்த வானிலை நிகழ்வில் அடுத்தடுத்த நேரத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று சுட்டிக்காட்டும் அவர், "இந்த வானிலை நிகழ்வு தமிழ்நாட்டின் மேல் நிலவினாலும் இதன் மேகங்கள் ஆந்திராவின் பக்கம் குவியத் தொடங்கின. அதனால்தான் இப்போது ராயலசீமா பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும். வானிலை நிகழ்வு ஒரு புறமும் அதன் மேகங்கள் மறுபுறமும் என சீரான நிலை இல்லாமல் இருப்பது வட கிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக் கூடும்.'' என்றார்

மேலும், ''புயல் போன்ற நிகழ்வில் அதன் மையம் எங்கு உள்ளது என்று தெளிவாக கூற முடியும். எனவே அது குறித்த கணிப்புகளும் சரியாக இருக்கக் கூடும். ஆனால் காற்றழுத்த தாழ்வுப் பகுதி போன்ற நிகழ்வுகளில் அதன் மையம் எங்குள்ளது என்று மிக தெளிவாக கூற முடியாது. எனவே சில மாற்றங்கள் இருக்கும். சென்னையிலிருந்து சுமார் 65 கி.மீ தள்ளி உள்ள அரக்கோணத்தில் 15 செ.மீ மழை பதிவாகியிருந்தது" என்றார்.

மேலும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் முழுவதும் தவறு என்று கூற முடியாது என்கிறார் ஒய்.இ.ஏ. ராஜ்.

"புதன்கிழமை பரவலாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. சென்னையை சுற்றி பல இடங்களில் 3 முதல் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது." என்கிறார்.

''வானிலை கணிப்புகளை பொருத்தவரை கடலில் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்க வழியில்லை. தரையில் உள்ள நிகழ்வுகளை கண்காணிப்பது போல கடலில் கண்காணிக்க முடியாது. கடல் நிகழ்வுகளை பொருத்தவரை செயற்கைக்கோள் தரவுகளை நம்பியிருக்க வேண்டும். அது நிலத்தை நெருங்கி வரும் போதுதான் ரேடார் கொண்டு தகவல்கள் சேகரிக்க முடியும்" என்றார் ஒய்.இ.ஏ. ராஜ்.

WEATHER PREDICTION

பட மூலாதாரம், B.Amudha

படக்குறிப்பு, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி. அமுதா

இந்த குழப்பத்துக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி. அமுதா பிபிசி தமிழிடம் பேசுகையில், "நாங்கள் கொடுத்த ரெட் அலர்ட்டை திரும்பப் பெற்றதில் தவறு இல்லை. மக்களின் பாதுகாப்பு கருதி, அப்போதிருந்த தரவுகள் அடிப்படையில் அதிகனமழை எச்சரிக்கை கொடுத்தோம். ஆனால் நிலைமைகள் மாறிய போது அதை திரும்பப் பெற்றோம்" என்றார்.

தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான அதே நேரத்தில் மேலும் மூன்று வானிலை நிகழ்வுகள் இருந்தன என்று சுட்டிக்காட்டும் அமுதா, "ஒரு கட்டத்தில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் இரண்டு பகுதிகளிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. இது மட்டுமல்லாமல் தெற்கு அரைக்கோளத்தில் மேலும் இரண்டு நிகழ்வுகள் நிலவின. அது புயலாக வலுப்பெற்ற போது, தனது ஆற்றலைக் கொண்டு மேகங்களை தன் பக்கம் இழுக்க தொடங்கியது." என்றார்.

மேலும், ''பிறகு இதிலிருந்து முழுவதும் விலகி வேறு பக்கம் சென்று விட்டது. அப்போது இங்கிருந்த வானிலை நிகழ்வு வலுப்பெற முடியவில்லை. இந்த நிகழ்வை, இது இப்படி நடக்கும் என்று முன்கூட்டியே 100% கணிப்பது என்பது சாத்தியமில்லை. கடல் மீது இந்த நிகழ்வுகள் நடப்பதால் நாம் செயற்கைக்கோள் தரவுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது" என்றார்.

WEATHER PREDICTION

பட மூலாதாரம், Getty Images

கணிப்புகளை துல்லியமாக்க என்ன செய்ய வேண்டும்?

வானிலை கணிப்பு மாதிரிகள் (weather prediction models) என்பவை கணினி அடிப்படையிலான கணிப்புகளே. எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் வெவ்வேறு தகவல்கள் கணினிக்கு வழங்கப்படும். அதை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து ஒரு கணிப்பை கணினி வழங்கும்.

வானிலை ஆய்வாளர்கள் அந்த கணிப்பை புரிந்து கொண்டு தங்கள் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் மூலம் வானிலை அறிக்கைகள் தயாரிக்கின்றனர்.

கணினிகளுக்கு வழங்கப்படும் தரவுகளை துல்லியமாக்குவது, வானிலை கணிப்புகளை மேலும் துல்லியமாக்க உதவும்.

"வானிலை கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும், அதன் மூலம் கணிப்புகளை மேம்படுத்த முடியும். இந்திய வானிலை மைய மாதிரிகள் போலவே, Joint Typhoon Warning Centre (JTWC), Global Forecast System (GFS), European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF) என பல்வேறு வானிலை கணிப்பு மாதிரிகள் உள்ளன. இந்த கணிப்புகளுக்கு இடையே சில வித்தியாசங்கள் இருக்க தான் செய்யும்" என்றார் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா.

2021-ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான வானிலை மாதிரிகளை அமைக்க அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு ரூ.10 கோடியை 2022-23 பட்ஜெட்டில் ஒதுக்கியது.

இத்திட்டத்தின் கீழ் சூப்பர் கணினிகள், வானிலை பலூன்கள், இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை நிலையங்கள், 400 தானியங்கி மழை அளவிடும் நிலையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

"இந்தியாவில் 559 கண்காணிப்பு மையங்கள் இருந்த காலம் மாறி தற்போது 1000க்கும் மேற்பட்ட மழை அளவிடும் நிலையங்கள் மற்றும் வானிலை கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 65 தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் 80 மழை அளவிடும் நிலையங்கள் உள்ளன. சென்னையில் முதலில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் மட்டுமே கண்காணிப்பு மையங்கள் இருந்தன. அந்த தரவுகளை வைத்து மட்டுமே கணிப்புகளை தயாரிக்க வேண்டும். ஆனால் சென்னையிலேயே பல்வேறு இடங்களில் இந்த மையங்கள் இருப்பதால் பரவலான தரவுகள் கிடைக்கின்றன, எனவே கணினி மாதிரிகள் மேம்பட்டுள்ளன" என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2kpvgdjz8yo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.