Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை  காரணிகள்

October 22, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2 ஆம் திகதி  விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ்  மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில்  லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது இறுதிமூச்சு வரை போராடிய அவரையும் இதுவரையில் நீதி மறுக்கப்பட்ட சகலரையும் நினைவுகூருவதற்கு ‘மக்கள் செயல்’ என்ற அமைப்பு அக்டோபர் 6 ஆம் திகதி   ‘கானல் நீதி’ என்ற தொனிப் பொருளில் யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில்  நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

அந்த நிகழ்வில்  உரையாற்றியவர்களில்   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  நிகழ்த்திய உரைக்கு தமிழ் ஊடகங்கள் குறிப்பாக பத்திரிகைகள் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்தன.  உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள்,  சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும்  போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை நாடி தமிழர்கள் இதுகாலவரையில் முன்னெடுத்த முயற்சிகளின் இன்றைய நிலை குறித்து அவர் விளக்கிக் கூறியதே  பிரதான காரணமாக இருந்தது எனலாம். 

பொன்னம்பலம் தனது  உரையில்  தமிழர்களின் நீதி தேடலின் இன்றைய இக்கட்டான  நிலையை தெளிவுபடுத்தியதுடன் நீதியைப் பெறுவதற்கு தமிழர்கள் பயணிக்க வேண்டிய பாதை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பிலான தனது நிலைப்பாட்டையும் விளக்கிக்கூறினார். 

பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்கப்போவதில்லை என்றும் தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு வெளிநாட்டு அரசுமே இலங்கையை எந்தவொரு நீதிமன்றத்தின் முன்பாகவும்  நிறுத்துவதற்கு தயாராயில்லை என்றும் கூறிய பொன்னம்பலம்,   மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கும் தீர்மானங்கள் சகலதுமே சர்வதேச வல்லரசுகளின் புவிசார் அரசியல் நலன்களை அடைவதை நோக்கமாகக் கொண்ட கருவிகளாக  இருந்தனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யக்கூடியவையாக  இருக்கவில்லை என்ற தனது கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கூறினாார். 

ஜெனீவா செயன்முறைகள் தமிழர்களுக்கு நடந்ததை வெறுமனே போர்க் குற்றங்கள் மற்றும்  மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாக  குறுக்குவதாக  அமைந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய பொன்னம்பலம் இலங்கையில் இடம்பெற்றது தமிழின அழிப்பு (Genocide)  என்று  உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.  மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இன அழிப்புக்கு இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைப்பது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. 

அவரின் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 கூட்டத் தொடரின்போது இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக அக்டோபர் 6  ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்புலத்தில் நோக்க வேண்டியிருக்கிறது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்  ஆணையை மேலும் இரு வருடங்களுக்கு புதிய  தீர்மானம்  நீடித்திருக்கிறது.  அதன்  மூலமாக  மனித உரிமைகள் அலுவலகத்தில் ஏற்கெனவே  நிறுவப்பட்டிருக்கும் ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் (Sri Lanka Accountability Project) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்படுகிறது.  இதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது. 

மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும்  வேறு சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக  அமைப்புக்களையும் உள்ளடக்கிய தமிழ் தேசிய பேரவையும் இலங்கை தமிழரசு கட்சியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்பியிருந்தன. அந்தக்கடிதங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவிருந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட  வேண்டியவை என்று அவர்கள் கருதும்  விடயங்களை இரு தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர். 

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஆணை நீடிக்கப்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த தமிழ் தேசிய பேரவை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதன் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (International Criminal Court ) பாரப்படுத்த வேண்டும் என்று  ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர்,  பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச்சபையை வலியுறுத்தும் முன்மொழிவு புதிய தீர்மானத்தில் இடம் பெறவேண்டும்  என்றும் தமிழ் தேசிய பேரவை வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதேவேளை, தமிழரசு கட்சி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில்  தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் செயன்முறை  ஊடாக இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வது  பெரும்பாலும் நடைமுறைச் சாத்தியற்றது என்ற போதிலும், அந்த நீதிமன்றத்தை தாபித்த றோம் சாசனத்தை (Rome Statute )  ஏற்றுக்கொள்வதற்கு  இலங்கையை இணங்க வைப்பதற்கான முன்மொழிவை தீர்மானம் முன்வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. றோம் சாசனத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஐக்கிய நாடுகள் மனித  உரிமைகள் உயர்ஸ்தானிகரும் யோசனை கூறியிருந்ததையும் தமிழரசு கட்சி கடிதத்தில் சுட்டிக்காட்டியது.

அந்த வேண்டுகோள்களை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்த பிரிட்டன், கனடா உட்பட மையநாடுகள் கவனத்தில் எடுத்ததற்கான தடயம் எதையும் தீர்மானத்தில் காணவில்லை.  முன்னைய தீர்மானங்களை விடவும் புதிய தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த தமிழ்த் தரப்புகளுக்கு பலத்த ஏமாற்றமாகப் போய் விட்டது. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு  மேலும்  இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டதை தமிழரசு கட்சி வரவேற்றது. 

“இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், 16 வருடங்களாக முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்து அதிருப்தியடைந்திருந்தாலும், இலங்கை மீதான  சர்வதேச கண்காணிப்பு இன்னொரு இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிறோம்”  என்று தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் செய்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

புதிய தீர்மானத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்த போதிலும்,  வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து  அதை  சவாலுக்கு உட்படுத்தவில்லை. சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதே அடிப்படைப் பிரச்சினை என்று அரசாங்கம் கூறியது. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பாராளுமன்றத்தில் விளக்கமளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் , ” போர் முடிவுக்கு வந்த உடனடியாகவே நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தேசியப் பொறிமுறை அமைக்கப்பட்டிருந்தால், 16 வருடங்களாக ஜெனீவாவில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பிரச்சினை நீடித்திருக்காது.  பிரச்சினை  சர்வதேச மயப்படுத்தப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களும்  தொலை  நோக்கின்மையுமே காரணம்” என்று குற்றஞ்சாட்டினார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல்,  நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் நிலைவரத்தின் முன்னேற்றம் குறித்து முதலில் ஒரு எழுத்துமுல  அறிக்கையை மனித உரிமைகள் பேரவையின் 63 வது கூட்டத் தொடரிலும் விரிவான அறிக்கையை 66 வது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை கேட்டிருக்கும் நிலையில், இரு வருடங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டும் என்ற கேள்வி எழுகிறது. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்கள் தொடங்குவதற்கு  முன்னதாக மாத்திரமே அரசாங்கங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் சில அறிவிப்புக்களைச் செய்வதே  வழமையாக இருந்து வந்தது. 

அந்த போக்கில் இருந்து மாறுபட்டு செயற்படுவதற்கு தேவையான அரசியல் துணிவாற்றலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிக்காட்டும் என்று நம்பக்கூடியதாக இனப்பிரச்சினையில் அதன் அணுகுமுறைகள் அமையவில்லை. பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேசமயப்பட்டதற்கு முன்னைய தலைமைத்துவத்தின் குறுகிய அரசியல் குறிக்கோள்களே காரணம் என்று கூறும் வெளியுறவு அமைச்சரினால்  காலங்கடந்த நிலையிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ஓரளவுக்கேனும் நம்பிக்கையைத் தரக்கூடிய  உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு தனது அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரமுடியுமா?

இந்த நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது சிந்தனையில்  இலங்கை அரசாங்கம் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதற்கு  தமிழர்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கங்கள் குறித்து யாழ்நகர் உரையில் தெரிவித்த கருத்துக்களை நோக்குவோம்.

பொறுப்புக்கூறல் விவகாரத்தை கையாளுவதற்கு அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று முன்வைக்கப்படுகின்ற கோரிக்கையை ஆதரிக்கும் அவர் அத்தகைய கட்டமைப்பு தொடர்பில் தீர்மானத்தை எடுக்கின்றபோது சில உண்மைகளை விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். 

தற்போதைய சர்வதேச கட்டமைப்புக்களில் இலங்கை தமிழர்கள் பொறுப்புக்கூறலுக்காக அணுகக்கூடியதாக இருப்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மாத்திரமே என்று கூறும் பொன்னம்பலம் அந்த நீதிமன்றத்தினால் ஒரு அரசை அல்ல, தனிநபர்களையே விசாரணை செய்ய முடியும் என்பதை ஒத்துக் கொள்கின்ற  அதேவேளை, ஒரு அரசை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடிய கட்டமைப்பாக விளக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of  Justice )  ஒரு அரசினால் மாத்திரமே வழக்குத் தொடரமுடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். 

றோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திடாவிட்டாலும் கூட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு இலங்கையை உட்படுத்துவதற்கு மியன்மார் விவகாரத்தை உதாரணமாக அவர் காட்டுகிறார்.  சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒரு அரசினால் இயலாமல் இருக்குமானால் அல்லது அந்த அரசுக்கு விருப்பமில்லாமல் இருக்குமானால் மாத்திரமே சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தினால் தலையீடுசெய்ய முடியும்.

மியன்மார் அரசு றொஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைத்துவரும் கொடுமைகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குத்தொடுநர் அலுவலகமே முறைப்பாட்டைச் செய்து விசாரணை முன்னெடுக்கப்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. மியன்மாரும்  றோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. ஆனால், மியன்மார் அரசின் கொடுமைகளில் இருந்து தப்பியோடி இலட்சக்கணக்கான றொஹிங்கியா மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பங்களாதேஷ் அந்த சாசனத்தில் கைச்சாத்திட்ட காரணத்தினால் அந்த மக்களுக்கு எதிரான வன்முறைகள் பங்களாதேஷிலும் இடம்பெற்றது என்ற  அடிப்படையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் நியாயதிக்கத்தைப் பயன்படுத்துகிறது. 

றொஹிங்கியா மக்களுக்கு எதிராக மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததற்காக மியன்மார் இராணுவத் தலைவரைக்  கைதுசெய்வதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநர் நீதிமன்றத்தை கேட்டிருக்கிறார். இது அந்த விசாரணையின் தற்போதைய நிலைவரம்.

இது இவ்வாறிருக்க, றொஹங்கியா மக்கள்  இன அழிப்புச் செய்யப்படுவதை தடுக்கவில்லை என்றும் இன அழிப்புக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவில்லை என்றும்  மியன்மார் அரசுக்கு எதிராக குற்றஞ்சாட்டி  சிறியதொரு ஆபிரிக்க நாடான காம்பியா 2019 ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கை சர்வதேச நீதிமன்றமும் தற்போது விசாரணை செய்து வருகிறது.  இன அழிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க  மியன்மாரை நிர்ப்பந்திக்கும் உத்தரவை அந்த நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டில் பிறப்பித்தது. 

தனது  தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கான முறைப்படியான பொறிமுறை எதுவும் சர்வதேச நீதிமன்றத்திடம் கிடையாது.  இறுதியில் அவற்றின்  நடைமுறைப்படுத்தலும் கூட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு அரசியல் விவகாரமாகவே மாறிவிடுகிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை றோம் சாசனத்தில் கைச்சாத்திட்ட அரசுகளே நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவரையில் அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை எத்தனை அரசுகளினால் உருப்படியாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருந்தது என்பது இன்னொரு கேள்வி.

இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு கடந்த 16 வருடங்களாக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதற்கு தமிழர் தரப்பு முன்னெடுத்த முயற்சிகளின் அனுபவங்களின் அடிப்படையிலேயே அடுத்த நகர்வைப் பற்றி சிந்திக்க முடியும்.  பொறுப்புக்கூறல் விடயத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதில் சர்வதேச நாடுகளுக்கு பெரிய அக்கறை இல்லை என்பதையே அக்டோபர்   6  ஜெனீவா தீர்மானம் தெளிவாக வெளிக்காட்டியிருக்கினது. 

இத்தகைய சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பிலும் போரின் இறுதிக் கட்டங்களின் குற்றங்களுக்கு பொறப்புக்கூறலை கோருவது தொடர்பிலும் இதுவரையில் கடைப்பிடித்த அணுகுமுறைகளை தமிழர்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. 

https://arangamnews.com/?p=12393

  • கருத்துக்கள உறவுகள்
On 22/10/2025 at 14:14, கிருபன் said:

இலங்கை அரசை பொறுப்புக்கூற வைப்பதற்கு கடந்த 16 வருடங்களாக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதற்கு தமிழர் தரப்பு முன்னெடுத்த முயற்சிகளின் அனுபவங்களின் அடிப்படையிலேயே அடுத்த நகர்வைப் பற்றி சிந்திக்க முடியும்.  பொறுப்புக்கூறல் விடயத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதில் சர்வதேச நாடுகளுக்கு பெரிய அக்கறை இல்லை என்பதையே அக்டோபர்   6  ஜெனீவா தீர்மானம் தெளிவாக வெளிக்காட்டியிருக்கினது. 

இத்தகைய சூழ்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பிலும் போரின் இறுதிக் கட்டங்களின் குற்றங்களுக்கு பொறப்புக்கூறலை கோருவது தொடர்பிலும் இதுவரையில் கடைப்பிடித்த அணுகுமுறைகளை தமிழர்கள் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. 

மிஸ்டர் ValorKnife இப்பதான் தருணத்திற்கே வந்திருக்கிறார். யாராவது பிச்சுமணி வெளிநாட்டில் நிற்கும் விடயத்தை இவரது காதில் கொஞ்சம் ஊதிவிடுங்கப்பா. தீர்வில்லாமல் இலங்கையில் காலே வைக்கமாட்டானாம். இஞ்சாலை கிழக்கின் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி சாணக்கியன் வயிறு புடைக்க கத்துவதற்கு பொய்ண்ட்ஸ் இல்லாமல் குமைந்து கொண்டு திரிகிறான். கூத்தமைப்பானுகளுக்கு ஜாடையே காட்டாமல் டக்கு டக்கெண்டு தனியார் காணிகள், பாடசாலை காணிகளிலிருந்த ராணுவ முகாம்கள் தூக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தூக்கினத்துக்கு பிறகு போய் வேற்றுவளவில் நின்று ஜெல்பி மட்டும் எடுத்துக்கொண்டு பொருமுகிறான்கள். தூக்கிறது தான் தூக்கிறது அதை தூக்குவதற்கு முதல் எங்களிடம் சொன்னால் அதைவைத்து கொஞ்சம் அரசியாலாவது செய்திருப்போமில்ல என்று மனதிற்குள் விம்மி வெடிக்கிறானுக கூத்தமைப்பு கோமாளிஸ்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.