Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

பட மூலாதாரம், imd.gov.in

24 அக்டோபர் 2025, 05:54 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 27ஆம் தேதி) வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

''தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்று மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது.'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

''மேற்கு-வடமேற்கு திசையில் இது மெதுவாக நகர்ந்து, நாளை (25-10-2025) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பிறகு, வருகின்ற 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வரும் 27ம் தேதி சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் (தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்) மழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 செ.மீ மழை பதிவாகியது.

நெல்லையில் நாலுமுக்கு பகுதியில் 12 செ.மீ, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 10 செ.மீ மழை பதிவாகியது. கன்னியாகுமரி பேச்சிப்பாறையிலும் சென்னை மேடவாக்கத்திலும் தலா 9 செ.மீ மழை பெய்தது.

வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை?

பட மூலாதாரம், Getty Images

தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் மேல் நிலவுகிறது.

அதாவது லட்சத்தீவிலிருந்து 340 கி.மீ வடமேற்கிலும், கோவாவிலிருந்து 430 கி.மீ தென்மேற்கிலும் கர்நாடகாவிலிருந்து 480 கி.மீ மேற்கிலும் நிலை கொண்டுள்ளது.

இது அரபிக் கடலில் மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து 55 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணை

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இரவு முதல் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரும் அதிகரித்துள்ளது.

கடந்த 20-ம் தேதி பிற்பகலில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்து முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று மாலை காவிரியில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிப்பதால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இரவு 11.00 மணி முதல் 45,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கன அடியும், எல்லிஸ் உபரி (16 கண் மதகு) வழியாக 32,500 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly1qdr4d93o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வங்கக்கடலில் உருவாகும் புயல் எங்கு நோக்கி நகரும்? வானிலை மையம் கணிப்பு

தமிழ்நாடு, வானிலை, புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதை காட்டும் வரைபடம். (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து)

25 அக்டோபர் 2025, 02:02 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் (அக்.27) காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக உருவெடுக்கும். அதன்பிறகு அடுத்த 48 மணி நேரங்களில் வடமேற்காக ஆந்திர பிரதேச கடற்கரையை நோக்கி நகரலாம்.

எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், சென்னை ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

தமிழ்நாடு, வானிலை, புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி

பட மூலாதாரம், IMD website

படக்குறிப்பு, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி & கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

அக்டோபர் 25

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம்.

அக்டோபர் 26

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம்.

அக்டோபர் 27

திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை முதல் மிகவும் கனமான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கன மழை பெய்யலாம். மற்ற மாவட்டங்களில் லேசான மழை இருக்கலாம்.

அக்டோபர் 28

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை இருக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலான பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஆகவே அக்டோபர் 25 முதல் 28 வரை அப்பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை எவ்வளவு மழை பெய்திருக்கிறது?

அக்டோபர் 1 முதல் 22 வரையிலான காலகட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 296.8 மில்லிமீட்டர் மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ராணிப்பேட்டை 292.8 மில்லிமீட்டர் மழை பெற்றிருக்கிறது. சென்னையில் 238.3 மில்லிமீட்டர் மழை இந்தக் காலகட்டத்தில் பதிவாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக சென்னை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நீலகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியிருக்கிறது.

குறைந்தபட்சமாக கரூர் மாவட்டத்தில் 120.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் தமிழ்நாட்டை விடவும் அதிகம் மழை பதிவாகியிருக்கிறது. புதுச்சேரியில் 353.9 மில்லிமீட்டர் மழையும், காரைக்காலில் 312.1 மில்லிமீட்டர் மழையும் பெய்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crl2j3g171go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீவிர புயலாக மாறும் 'மோன்தா' - சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

மோன்தா புயல், தமிழ்நாடு, சென்னை

பட மூலாதாரம், IMD

படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதை காட்டும் வரைபடம். (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து)

26 அக்டோபர் 2025, 02:47 GMT

புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (அக்டோபர் 26) மதியம் 2.15 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 780 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, 'இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து 28-ஆம் தேதி காலை தீவிர புயலாக உருவெடுக்க உள்ளது."

"மேலும் தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆந்திராவில் காக்கிநாடா அருகில் மச்சிலிபட்டணம் மற்றும் கலிங்கப்பட்டணம் இடையே 28-ஆம் தேதி மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கின்றபோது காற்றின் வேகம் 90-100 கிமீ என்கிற நிலையிலிருந்து 110 கிலோமீட்டர் வரை செல்லக்கூடும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

அக்டோபர் 26

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும்

அக்டோபர் 27

ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் கனமழை முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 28

திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழையும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 29 முதல் அக்டோபர் 31 வரை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.

மோன்தா புயல், தமிழ்நாடு, சென்னை

பட மூலாதாரம், Getty Images

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அக்டோபர் 28-ஆம் தேதி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்திருக்கிறது. அப்போது தமிழ்நாட்டு கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 35-45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தையும் எட்டலாம்.

ஆகவே, தமிழ்நாட்டு மீனவர்கள் அக்டோபர் 29-ஆம் தேதி வரை கடலுக்குள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

'மோன்தா' புயல்

இந்த புயலுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பெயர் வரிசைப்படி, 'மோன்தா' என பெயரிடப்பட உள்ளது. புயல் உருவான பிறகே அந்த பெயரை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கும். 'மோன்தா' என்ற பெயர் தாய்லாந்து நாடு பரிந்துரைத்தது ஆகும்.

புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?

உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை திகழ்கிறது.

உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவுகள், மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை விளங்குகிறது.

டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது.

மோன்தா புயல், தமிழ்நாடு, சென்னை

பட மூலாதாரம், RSMC NEW DELHI

பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, இரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், யேமன் ஆகிய 13 நாடுகள்தான் வைக்கின்றன.

சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்த பெயர்கள் வைக்கப்படுகின்றன.

பெயர் சூட்டுவதற்கென உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி ஒரு நாடு தலா 13 பெயர்களை பரிந்துரைக்கலாம். இந்த பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce8g0kl3l2ko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொன்தா புயல் வலுவடைவதால் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு

Published By: Digital Desk 3

27 Oct, 2025 | 03:08 PM

image

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் மொன்தா புயல், அதன் கிழக்கு கடற்கரையில் பலத்த காற்று மற்றும்  மழையை ஏற்படுத்தவுள்ள நிலையில், திங்கட்கிழமை (27) இந்தியா 50,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு ஆந்திரா மற்றும் கிழக்கு மாநிலமான ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் அவசரகால ஊழியர்களுக்கான விடுமுறைகளை அதிகாரிகள் இரத்து செய்து, பாடசாலைகள்  மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டனர்.

இந்த புயல் செவ்வாய்க்கிழமைக்குள் கடும் புயலாக மாறி, பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

"காக்கிநாடா மாவட்டத்தில் கடற்கரைக்கு அருகில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது " என ஆந்திரப் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

அதன்படி, சுமார் 50,000 பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அறிக்கை காட்டுகிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்து குடும்பங்களை மாற்ற அனர்த்த முகாமைத்துவ குழுக்கள் விரைந்துள்ளன. அங்கு 3.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அண்டை மாநிலமான ஒடிசாவில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.

ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை அடிக்கடி புயல்கள் தாக்குகின்றன. 

1999 அக்டோபரில் ஒடிசாவைத் தாக்கிய புயலில் சிக்கி 10,000 பேர் உயிரிழந்தனர். இந்தியாவை பாதித்த மிகவும் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.

சில மாவட்டங்களில் கடும் மழை வீழ்ச்சி பதிவாகும் என வெளியான வானிலை முன்னறிவிப்பைத் தொடர்ந்து, தெற்கு மாநிலமான தமிழ்நாட்டின் அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மிச்சாங் புயலால் ஏற்பட்டதைப் போல கடும் மழை பொழிந்து சென்னை வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளது.

இமயமலை நாடான நேபாளத்தில், செவ்வாய் முதல் வெள்ளி வரை மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர், மேலும் மலையேற்றம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இம் மாதம்  நேபாளம் முழுவதும் பெய்த கடும்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/228788

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' - 8 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மோன்தா புயல், ஆந்திரா, இந்தியா, கனமழை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,IMD

படக்குறிப்பு,ஆந்திராவில் கரையைக் கடந்த பின்னரும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து)

29 அக்டோபர் 2025, 01:53 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆந்திராவில் கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மோன்தா புயல் வடக்கு, வட மேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் கடந்த ஆறு மணி நேரங்களில் நகர்ந்துள்ளது. ஆந்திராவில் நர்சாபூரிலிருந்து வடமேற்கு திசையில் 80 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து மேற்கில் 100 கி.மீ தொலைவிலும் புயல் நிலைக் கொண்டுள்ளது.

இது அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த ஆறு மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மோன்தா புயல் ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மோன்தா புயல், ஆந்திரா, இந்தியா, கனமழை, தமிழ்நாடு

எட்டு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் புதுவையின் ஏனாம் பகுதியிலும், தெற்கு ஒடிசாவிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும், ஆங்காங்கே அதி கனமழை பெய்யக்கூடும். அதே போன்று வடக்கு ஒடிசாவிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மோன்தா புயல், ஆந்திரா, இந்தியா, கனமழை, தமிழ்நாடு

கடல் சீற்றத்துடன் காணப்படும் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரையோரம் காற்று மணிக்கு 75 முதல் 85 கி.மீ வேகத்திலும் இடையிடையே 95 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் இன்று முற்பகல் நேரத்தில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகமாக குறையும்.

தமிழக, புதுவை கரையோரங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இன்று மாலையில் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ ஆக குறையும்.

இதனால் இந்தப் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் ஆந்திர, தமிழக, புதுவை கரையோர பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமான சேவை பாதிப்பு

மோன்தா புயல் காரணமாக, விஜயவாடாவில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரிக்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் விமான சேவைக்கான வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cddr3rm9gn1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.