Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செளதி இளவரசர் முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Win McNamee/Getty Images

படக்குறிப்பு, மே 2025-இல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செளதி இளவரசர் முகமது பின் சல்மான்.

கட்டுரை தகவல்

  • நஸ்ரின் ஹாதூம்

  • பிபிசி உருது செய்தியாளர்

  • 9 நவம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்கா மற்றும் செளதி அரேபியா இடையேயான உறவுகளில், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்துவது போன்ற பல முக்கியமான பிரச்னைகள் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன.

செளதி இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.

இது குறித்து இரண்டு தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலாவதாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாவதாக, இந்த ஒப்பந்தத்தின் கீழ் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து 48 விமானங்களை வாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்-35 ஒப்பந்தம் குறித்து அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

எஃப்-35, அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செளதி அரேபியா

ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கான பாதை இப்போதைக்கு தெளிவாக இல்லை, இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அமெரிக்க அரசு, அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று தரப்பினரின் ஒப்புதலும் அவசியம்.

செளதி எழுத்தாளர் முபாரக் அல்-அத்தியா கூறுகையில், இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு, சட்டப்படி அமெரிக்க அரசு மட்டுமின்றி நாடாளுமன்றத்தின் அனுமதியும் பெற வேண்டும் என்பதை செளதி அரேபியா புரிந்து கொண்டுள்ளது.

அவர் பிபிசி உருதுவிடம் பேசுகையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாடாளுமன்றத்தை இணங்க வைக்க முடிந்தால் மட்டுமே, ஒப்பந்தத்தை அவர் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறினார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ஜனநாயக கட்சியினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செளதி அரேபியா-இஸ்ரேல் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுப்பார்கள் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கச் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளார், ஏனெனில் அவர் செளதி அரேபியாவை ஒரு உத்தி ரீதியான கூட்டாளியாகக் கருதுகிறார், எனவே அதன் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கீழ் அவசியம் என்றும் அவர் நம்புகிறார்.

செளதி அரேபியாவின் பாதுகாப்புக் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா மறுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற அமெரிக்காவின் எதிரிகளை செளதி அரேபியா நாடக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கவலை தெரிவித்துள்ளார் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

செளதி அரேபியா மீண்டும் மீண்டும் போர் விமானங்களுடன் சேர்த்து, மற்ற வகையான ராணுவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது பற்றிப் பேசியுள்ளது என்று அல்-அத்தியா விளக்கினார்.

எஃப் 35 போர் விமானம்

பட மூலாதாரம், SAUL LOEB/AFP via Getty Images

படக்குறிப்பு, செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப் 35 போர் விமானங்களை வாங்க விரும்புகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்த இஸ்ரேலின் கவலை

இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கும். இதன் பொருள் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ராணுவ சக்திக்குச் சவால் ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும், செளதி அரேபியாவுடனான இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலின் ராணுவ மேலாதிக்கம் இந்தப் பிராந்தியத்தில் நீடிக்கும் வகையில் நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் சேர்க்கப்படலாம்.

டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்புகிறார், ஏனெனில் செளதி தலைமையின் நோக்கங்களை அவர் புரிந்துகொள்கிறார். செளதி அரேபியாவின் இலக்கு அதன் எல்லைகளின் பாதுகாப்பைத் தாண்டி இல்லை என்று டிரம்ப் நம்புகிறார் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள அதன் சில அண்டை நாடுகளைப் போலல்லாமல், செளதி அரேபியாவுக்கு விரிவாக்க விருப்பங்கள் இல்லை என்பதையும் அதிபர் டிரம்ப் அறிவார் என்று அல்-அத்தியா கூறுகிறார்.

அமெரிக்கா செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பதை இஸ்ரேல் விரும்பவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுடன் அதன் உறவுகள் இயல்புக்குத் திரும்பவில்லை என்றால், இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் எதிர்காலத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலை உருவாக்கலாம்.

ஆனால், செளதி அரேபியாவைப் பொறுத்தவரை, இப்போது அது அரபு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் மற்றும் கடமைகளை மாற்ற விரும்பவில்லை என்றும் முபாரக் அல்-அத்தியா நம்புகிறார்.

இதில் ஒரு முக்கியமான பிரச்னை பாலத்தீனம் ஆகும், 1967ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில் ஒரு சுதந்திர பாலத்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும் என்று செளதி அரேபியா நம்புகிறது. மத்திய கிழக்கின் எதிர்காலம் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் இதுவே அடிப்படை நிபந்தனையாகும்.

செளதி அரேபியா எஃப்-35 போர் ஜெட் தொழில்நுட்பத்தை ரஷ்யா, சீனா அல்லது இரானுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்று அல்-அத்தியா கூறுகிறார். அப்படி நடந்தால், இரான் பாதுகாப்பு விஷயத்தில் ஒரு படி முன்னேறி அதற்கு எதிராக இஸ்ரேலின் மேலாதிக்கம் குறைந்துவிடும்.

இதற்கு முன்னர், 2020 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற கவலை எழுந்தது, அப்போது அமெரிக்கா ஆபிரகாம் ஒப்பந்தங்களின் (Abraham Accords) கீழ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எஃப்-35 விமானங்களை விற்கவிருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் ஒப்பந்தம் முன்னேற முடியவில்லை.

அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில், விமானங்களின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதித்தது, இதில் விமானங்களைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளும் அடங்கும். சீனாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ள ஆழமான உறவுகள் காரணமாகத் தொழில்நுட்பப் பரிமாற்றம் நடந்துவிடுமோ என்று அமெரிக்கா கவலைப்பட்டது.

செளதி-அமெரிக்கா உறவுகளின் திசை மாறுமா?

டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் செளதி அரேபியாவுக்கான ஆயுத ஒப்பந்தங்களுக்கு கதவுகளைத் திறந்தார்.

இந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவும் செளதி அரேபியாவும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமாக விவரிக்கப்பட்டது.

டிரம்பின் செளதி பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்ப் செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

வெள்ளை மாளிகை வழங்கிய தகவலின்படி, அமெரிக்கா செளதி அரேபியாவுடன் 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு விரிவான ஒப்பந்தத்தைச் செய்தது. 142 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த விரிவான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இதன் கீழ் அது அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும்.

எனினும், எஃப்-35 போர் விமான ஒப்பந்தத்தின் உண்மையான சோதனை அமெரிக்க நாடாளுமன்றத்தின் அரங்குகளில் தான் நடக்க உள்ளது.

செளதி இளவரசர் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செளதி-அமெரிக்க உறவுகளில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால், அனைத்துக் கோப்புகளும் இரு தரப்பினராலும் விவாதிக்கப்படுகின்றன. மேலும் கருத்து வேறுபாடுகள் உறவுக்குத் தடையாக மாறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார்.

செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் ஆயுத ஒப்பந்தத்தை இறுதி செய்வது அல்ல, மாறாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவை ஆழப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறுகிறார். இந்தக் காலக்கட்டத்தில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்பது வெளிப்படையானது.

செளதி அரேபியா பற்றி முபாரக் அல்-அத்தியா கூறுகையில், அது எஃப்-35 போர் விமானங்களுடன் சேர்த்து, பிற விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு கொள்கையை ஏற்றுக்கொள்கிறது, என்று கூறினார்.

செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்தில் எஃப்-35 பற்றிய விவாதம் முக்கியமானது, ஆனால் அது உறவுகளை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணி அல்ல என்று அவர் கூறுகிறார்.

போர் விமானமா அல்லது பாதுகாப்பு உத்தரவாதமா?

செளதி இளவரசரின் புகைப்படம்

பட மூலாதாரம், Win McNamee/Getty Images

படக்குறிப்பு, எஃப்-35 போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு விற்க டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலை பெறவேண்டும்

செளதி அரேபியா, அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்க உறுதிபூண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால். எந்தவிதமான தாக்குதல் நடந்தாலும் செளதி அரேபியாவை பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவுடன் ஒரு விரிவான பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்வதில் அதன் கவனம் இருக்கிறது.

அண்மையில், அமெரிக்கா-கத்தார் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா அறிவித்தது. இதன் கீழ் கத்தார் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவின் "அமைதி மற்றும் பாதுகாப்புக்கு" அச்சுறுத்தலாகக் கருதப்படும் என்று கூறப்பட்டது.

இந்த ஒப்பந்தம் அதிபரின் 'செயலாக்க உத்தரவாக' வெளியிடப்பட்டது, அதாவது அமெரிக்க அதிபர் மாறினால் இதைத் திருத்தலாம் அல்லது ரத்து செய்யலாம்.

கத்தாருடனான ஒப்பந்தம் சட்டரீதியாக கட்டாயமாக அமலாக்கக்கூடிய பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல, இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் தேவையில்லை.

செளதி அரேபியாவின் முன் உள்ள மிகப்பெரிய சவால் இப்போது இதுதான்: அதன் பாதுகாப்பை உறுதிபடுத்த, கத்தாரைப் போல அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தை அது ஏற்றுக்கொள்ளுமா?

அல்லது அமெரிக்காவில் அதிபர் மாறினாலும் அதன் பாதுகாப்பு உத்தரவாதத்தை பாதிக்காத வகையில், அமெரிக்காவிடம் ஒரு திடமான சட்டரீதியான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்காக அழுத்தம் கொடுக்குமா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cze623487jno

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்கா சௌதி அரேபியாவுக்கு விற்பதால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சிக்கல்

எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்கா சௌதி அரேபியாவுக்கு விற்பதால் இஸ்ரேலுக்கு ஏற்படும் சிக்கல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்

20 நவம்பர் 2025

அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட போர் விமானமான எஃப்-35 போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

செளதி அரேபியாவுக்கு இந்தப் போர் விமானங்கள் கிடைத்தால், அந்தத் தொழில்நுட்பத்தை சீனா அறிந்துகொள்ளக் கூடும் என்ற கவலைகள் ஒருபுறம் இருந்தபோதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.

செளதி அரேபியாவிடம் இந்த சக்திவாய்ந்த விமானங்கள் இருப்பது, மத்திய கிழக்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேலின் "தனித்துவமான ராணுவ முன்னிலையை" பாதிக்கக்கூடும் என டிரம்ப் நிர்வாகத்தில் இருப்பவர்களும்கூட கவலை தெரிவிக்கின்றனர்.

செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அமெரிக்க பயணத்தின்போது பேசியபோதும், அதிபர் டிரம்ப், அமெரிக்கா இந்தப் போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு வழங்கப் போவதாக மீண்டும் குறிப்பிட்டார்.

டிரம்பின் முதல் பதவிக் காலத்தில் எஃப்-35 போர் விமான விற்பனை தொடர்பான ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது, ஆனால் அது இறுதி முடிவை எட்டவில்லை.

வெள்ளை மாளிகைக்கு செளதி பட்டத்து இளவரசர் வருகை தருவதற்கு ஒரு நாள் முன்னதாக, செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்யவிருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார்.

"நாங்கள் எஃப்-35 விமானங்களை விற்பனை செய்வோம் எனக் கூற விரும்புகிறேன். அவர்கள் (செளதி அரேபியா) அவற்றை வாங்க விரும்புகிறார்கள். அவர்கள் நம் சிறந்த கூட்டாளியாக இருந்து வருகின்றனர்," என்று ஓவல் அலுவலகத்தில் பேசியபோது டிரம்ப் கூறினார்.

செவ்வாய்க் கிழமையன்று டிரம்புக்கும் பட்டத்து இளவரசருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, எஃப்-35 போர் விமானங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

செளதி அரேபியா, அமெரிக்கா, எஃப்-35 போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செளதி அரேபியாவுக்கு அமெரிக்கா எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வது மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ராணுவ நன்மைக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற கவலையும் டிரம்ப் நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளிடையே நிலவுகிறது.

அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, எஃப்-35 ரக விமானங்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், செளதி அரேபியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டின் இடையே ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் என நம்புவதாகவும் டிரம்ப் கூறினார்.

இந்த ஒப்பந்தம் ஏற்படலாம் என்பது, இஸ்ரேலிய அதிகாரிகள் சிலரிடையே கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் தற்போது எஃப்-35 போர் விமானங்களை வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் மட்டும்தான் என்பதால், செளதிக்கும் இந்த விமானத்தை வழங்குவது, இஸ்ரேலின் "தனித்துவமான ராணுவ முன்னிலையை" குறைத்துவிடக்கூடும்.

செளதிக்கு வழங்கப்படும் எஃப் -35 போர் விமானம், இஸ்ரேல் பயன்படுத்தும் விமானங்களைப் போலவே இருக்கும் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

"செளதி அரேபியா ஒரு சிறந்த கூட்டாளி. இஸ்ரேலும் சிறந்த கூட்டாளிதான். அவர்கள் (இஸ்ரேல்) உங்களுக்கு (செளதி அரேபியா) குறைந்த திறன் கொண்ட விமானங்களைக் கொடுக்க வேண்டும் என நினைப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் எனது பார்வையில், இரு நாடுகளுமே சிறப்பான விமானங்களைப் பெறத் தகுதியானவை" என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

"அமெரிக்கா வழங்கும் எஃப்-35 போர் விமானத்தால் சௌதிக்கு என்ன நன்மை?",

தனது முன்மொழியப்பட்ட காஸா அமைதித் திட்டத்திற்கு இஸ்ரேலின் ஆதரவை டிரம்ப் கோரியுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் இஸ்ரேலை கோபப்படுத்தக்கூடும் என்பதால், எஃப்-35 போர் விமானங்களை செளதிக்கு வழங்கும் அமெரிக்காவின் முடிவு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் இரான் உடனான 12 நாள் மோதலின்போது இஸ்ரேல் எஃப்-35 ரக போர் விமானங்களைப் பயன்படுத்தியது. எஃப்-35 விமானங்களை வைத்திருக்கும் அல்லது அவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 19 நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழின்படி, பென்டகனுடைய உளவுத்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கை, "இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், செளதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம், சீனாவால் எஃப்-35 தொழில்நுட்பத்தை அணுக முடியும்" என்று எச்சரித்துள்ளது.

செளதி அரேபியா, அமெரிக்கா, எஃப்-35 போர் விமானம்

பட மூலாதாரம், Win McNamee/Getty Image

மத்திய கிழக்கின் ராணுவ சூழலை மாற்றவல்ல எஃப்-35

எஃப்-35 போர் விமானம் மத்திய கிழக்கு முழுவதும் தற்போது இருக்கும் ராணுவ சூழலையே மாற்றக்கூடும் என்று நம்பப்படுகிறது. சில இஸ்ரேலிய அதிகாரிகளும் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.

செளதி அரேபியாவுடனான உறவுகளை இஸ்ரேல் இயல்பாக்கினால், அது பரந்த இஸ்லாமிய உலகுடனான சுமூக உறவுகளுக்கு ஒரு வழியைத் திறக்கும். அதற்கு ஈடாக, செளதி அரேபியா அமெரிக்காவிடம் இருந்து ஒரு பாதுகாப்புத் திட்டத்தைப் பெற வேண்டும்.

இதன் கீழ், செளதி அரேபியா ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களான எஃப்-35 ஸ்டெல்த் போர் விமானங்களைப் பெற்றிருக்கும்.

இது அமெரிக்காவுடனான செளதி அரேபியாவின் உறவை வலுப்படுத்துவதுடன் இஸ்ரேலுடனான அதன் உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றையும் தொடங்க உதவும்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த எஃப்-35 விமானங்களை விற்பனை செய்வதில் டிரம்ப் நிர்வாகம் முன்னேறக்கூடும். இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், செளதி அரேபியாவுடன் அந்நாடு ராணுவ சமநிலையைப் பெறக்கூடும்.

செளதி அரேபியா, அமெரிக்கா, எஃப்-35 போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேல் மற்றும் செளதி அரேபியா இடையிலான பிரச்னைகளை டிரம்ப் கண்டுகொள்ளவில்லை. எஃப்-35 போர் விமான விற்பனை விவகாரம் குறித்து சி.என்.என் சேனலிடம் பேசிய கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையின் மூத்த ஆய்வாளரான நவாஃப் ஒபைத், "நெதன்யாகுவுக்காக, ஆயுதங்கள் மற்றும் பிற விற்பனையை நிறுத்தி வைத்து தனது நேரத்தை டிரம்ப் வீணாக்கப் போவதில்லை" என்று கூறுகிறார்.

"செளதி அரேபியாவுக்கு எஃப்-35 விமானங்களை வழங்குவது இஸ்ரேலிய ராணுவத்திற்குக் கவலை அளிக்கும் விஷயம்" என இஸ்ரேலிய ராணுவ அதிகாரி ஒருவர் சி.என்.என் சேனலிடம் கூறினார்.

"பல ஆண்டுகளாக, மத்திய கிழக்கில் உள்ள எந்த நாட்டிலும் எங்களிடம் இருப்பது போன்ற விமானங்கள் அல்லது திறன்கள் இருக்கக்கூடாது என்ற சொல்லப்படாத விதி எங்களிடம் இருந்தது," எனக் கூறும் அவர், "நிலைமையின் தீவிரத்தை மிகைப்படுத்திக் கூறவில்லை. ஆனால் இது இஸ்ரேலுக்கு நல்லதல்ல" என்கிறார்.

இருப்பினும், அல்-அரேபியாவின் கூற்றுப்படி, "இஸ்ரேலியர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம், பாலத்தீனர்கள் அமைதியாக வாழ வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் இந்தப் பிராந்தியத்தில் அமைதியாக ஒன்றாக வாழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், இந்த இலக்கை அடைய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று பட்டத்து இளவரசர் கூறினார்.

பாலத்தீனம் ஒரு நாடாக உருவாகாமல், இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கப் போவதில்லை என செளதி அரேபியா பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல், பாலத்தீனம், எஃப்-35 போர் விமானம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செளதி அரேபியா

பட மூலாதாரம், Getty Images

செளதி அரேபியா எஃப்-35 போர் விமானத்தை வாங்க விரும்புவது ஏன்?

மத்திய கிழக்கில் தனது ராணுவத்தையும் அதன் நிலைப்பாட்டையும் வலுப்படுத்த செளதி விரும்புகிறது.

செளதி அரேபியா பல ஆண்டுகளாக எஃப்-35 போர் விமானங்களை வாங்க முயன்று வந்தாலும், அதற்கு இஸ்ரேலிய எதிர்ப்பு காரணமாக ஒப்புதல் மறுக்கப்பட்டது.

செளதி அரேபியா ஏற்கெனவே அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்கி வருகிறது. இருப்பினும், எஃப்-35 திட்டத்தில் சேர அந்த நாடு அனுமதிக்கப்படவில்லை.

தனது ராணுவத்தை நவீனமயமாக்கவும், மத்திய கிழக்கில் தனது நிலையை வலுப்படுத்தவும், இரானால் பதற்றம் ஏதேனும் ஏற்பட்டால் அதில் தனது கை மேலோங்கியிருக்க வேண்டும் எனவும் செளதி அரேபியா விரும்புகிறது. அதற்காகவே எஃப்-35 விமானங்களை வாங்க முயல்கிறது.

ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செளதி அரேபியாவும் போரிட்டுள்ளது. இந்த மோதல் தற்போது மட்டுப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் மீண்டும் வெடிக்கக்கூடும்.

அதனால் எஃப்-35 நவீன போர் விமானம் தங்களுக்கு அவசியம் என அந்நாடு கருதுகிறது.

எஃப்-35 போர் விமானம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செளதி அரேபியா

பட மூலாதாரம், Getty Images

டிரம்ப் எஃப்-35 விமானங்களை சௌதிக்கு விற்பது சாத்தியமா?

செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வது இஸ்ரேலின் ராணுவ நன்மைக்குத் தீங்கு விளைவிக்கும் என்ற கவலைகளை டொனால்ட் டிரம்ப் பொருட்படுத்தவில்லை.

டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்தாலும்கூட, இந்த ஒப்பந்தத்தைத் தடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. சிலர் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும்.

இருப்பினும், செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார், விமானத்தை விற்பனை செய்வதற்கான தனது ஆதரவை வலுவாக மீண்டும் ஒருமுறை முன்வைத்துள்ளார்.

மிக முக்கியமாக, அவர் இஸ்ரேலின் "தனித்துவமான ராணுவ முன்னிலை" என்ற கொள்கையையும் புறந்தள்ளியுள்ளார்.

"தனித்துவமான ராணுவ முன்னிலை" என்பதன் கீழ், மத்திய கிழக்கில் உள்ள அதன் அண்டை நாடுகளைவிட இஸ்ரேல் எப்போதும் மேம்பட்ட ஆயுதங்களைக் கொண்டிருப்பதை அமெரிக்கா உறுதி செய்து வருகிறது.

எஃப்-35 போர் விமானம் எவ்வளவு ஆபத்தானது?

எஃப்-35 போர் விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின், அதை உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் என்று அழைக்கிறது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 விமானங்களைத் தயாரிக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, எஃப்-35 "உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம்."

ஐந்தாம் தலைமுறை போர் விமானமான எஃப்-35, எதிரி ரேடார் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறிய முடியாத வகையில் பறக்கும் திறன் கொண்டது.

மேலும், அது தனது தாக்குதல் திறனைப் பயன்படுத்தி எதிரி பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர் விமானங்களைத் தாக்க முடியும். இதனால் எதிரிகள் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே அவர்களைச் சீர்குலைக்க முடியும்.

லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 விமானத்தை, "உலகின் மிகவும் ஆபத்தான, நீடித்து இயங்கக்கூடிய மற்றும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட போர் விமானம்" என்று அழைக்கிறது.

ஸ்டெல்த் தொழில்நுட்பம், மேம்பட்ட சென்சார்கள், அதிவேக கணினி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, எஃப்-35 போர் விமானத்தின் பலம் என்று கூறலாம். அவை வெகுதொலைவில் இருந்து எதிரிகளைக் கண்டறிந்து தரவை நேரடியாக விமானிக்கு அனுப்பும்.

இந்தத் தொழில்நுட்பம், படைகளின் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே பார்க்கவும், தாக்குதல்களைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.

ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, நார்வே பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் எஃப்-35 விமானங்களைத் தயாரிக்க அமெரிக்காவுடன் சேர்ந்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz919ve3w5wo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.