Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக இயக்குனர்களுக்கு செருப்படி

நம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும்  உண்டாவுவதாக.

நான் பிளாக் ஆரம்பித்த போது, என்னுடய தளத்தில் யாருடைய படைப்பினையும் களவாண்டு, பசை செய்து வெளியிட விரும்பவில்லை. அதே போல சினிமா சம்பந்தமான விசயங்களையும் வெளியிட விருப்பமில்லை. ஹிட்டுக்காக, பிட்டு படம் ஓட்டவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் இந்த நோக்கத்தினை, சற்று தளர்த்தி சினிமா சம்பந்தமான, ஆனந்த விகடனில் பிரசுகமான ஒரு விசயத்தினை எனது பிளாக்கில் வெளியிட முடிவெடுத்தேன். அது.....

'தி சைக்கிளிஸ்ட்' இயக்குனர் மஹ்சன் மக்மல்பஃப் - ஒளிப்பதிவாளர் செழியன்

வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்துவிட வேண்டும் என்று விரும்புபவர்களின் மனப்பட்டியல் நம் எல்லோரிடமும் இருக்கிறது. அதில் எத்தனை பேரை நம்மால் சந்திக்க முடிகிறது? எனது பட்டியலில் சிலர் கடல் கடந்து தொலைவில் இருக்கிறார்கள். சிலர் காலம் கடந்து நினைவில் இருக்கிறார்கள். சார்லி சாப்ளினையும் தார்க்கோவ்ஸ்கியையும் நேரில் சந்திக்கும் ஆசை இருக்கிறது. இந்த வரிசையில் இயக்குநர் தியோ ஆஞ்சலோபோலஸைச் சந்திக்க வேண்டும் என்கிற ஐந்து வருடக் கனவும் இந்த ஜனவரி மாதத்தின் விபத்தில் முடிந்தது. இந்த ஏமாற்றங்களுக்கு நடுவில், இளையராஜா, ஜெயகாந்தன், லா.ச.ரா., பாலுமகேந்திரா, மகேந்திரன் எனத் தொட ரும் இனிய சந்திப்புகளும் இருக்கின்றன. அந்த வரிசையில் என் மனப் பட்டியலில் இருந்த இன்னொரு மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பெயர் மஹ்சன் மக்மல்பஃப் (Mohsen Makmaulbuf). 

01.bmp

மக்மல்பஃப், இரானிய சினிமாவின் பிதாமகன்களில் ஒருவர். கலகக்காரர். 1960-களில் இரானில் நடந்த அரசியல் சூழலில் மன்னர் ஷா க்கு எதிராகத் தனது கிராமத்தில் கெரில்லாப் படையைத் தொடங்கியவர். பலால் ஹபாஷி எனப்படும் அந்த இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்ட இவர், தனது 17-வது வயதில் ஒரு போலீஸைத் தாக்கியதற்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார். நான்கு வருட சிறைவாசத்தில் இலக்கியம் மீதான ஆர்வம் ஏற்பட்டு, பிறகு அந்த ஆர்வம் சினிமா மீது திரும்பியது. அந்த வயதில் மக்மல்பஃப் பாட்டி வீட்டில் வளர்ந்தார். சினிமாவை சாத்தான் என்றும் ஹராம் என்றும் நம்பிய இஸ்லாமியக் குடும்பத்தில் வளர்ந்து, 24 வயது வரை சினிமாவே பார்க்காத அவர், இன்று உலகம் போற்றும் திரைப்பட இயக்குநர் ஆனார்.

இரானில் திரைப்படப் பள்ளியைத் தொடங்கினார். இவரது மனைவி மெர்ஷியா, மகள்கள் சமீரா, ஹானா மூவரும் இயக்குநர்கள். மகன் மெய்சம் ஒளிப்பதிவாளர். உலகத் திரைப்பட விழாக்களில் இந்தக் குடும்பம் வாங்கிய சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 89. அரசுக்கு எதிராகப் படம் எடுத்ததால், இரானில் இருந்து குடும்பத்தோடு நாடு கடத்தப்பட்ட இவர், தனது அடுத்த படத்தைப் பிரதி எடுக்கும் வேலைகளுக்காக சென்னை வந்திருந்தார். அவரைச் சந்திக்க அந்த மதியப் பொழுதில் நான் பிரசாத் லேப்பில் இருக்கும் திரையரங்கின் வாசலில் காத்துக்கொண்டு இருந்தேன்.

வெள்ளை நிற அம்பாஸடர் கார் வந்து நிற்க... அதில் இருந்து மக்மல்பஃப் இறங்கினார். வெள்ளை நிறக் கதர் ஆடையில் கால்சட்டையும் மேலாடையும் அணிந்திருந்தார். ஒட்டக் கத்தரித்த தலைமுடியுடன் எளிய விவசாயிபோல உறுதியான உடல் அமைப்புடன் இருந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இறங்கினார்.

அவரைப் பார்த்ததும் வணக்கம் சொல்லி நெருங்கினேன். வணக்கம் சொல்லி புன்னகையுடன் அருகில் வந்தார். அவரிடம் விகடன் பிரசுரமான எனது 'உலக சினிமா’ நூலைக் கொடுத்து, அவரது 'தி சைக்கிளிஸ்ட்’ (The cyclist) படம் குறித்து அதில் எழுதி யிருப்பதைச் சொன்னேன். ஆர்வமாக அதில் இருக்கும் சர்வதேச இயக்குநர்களின் குறிப்புகளையும் படங்களையும் பார்த்துக்கொண்டே வந்த அவர், 'தி சைக்கிளிஸ்ட்’ படம் இருக்கும் பக்கம் வந்ததும் புன்னகை மலர என்னை நிமிர்ந்து பார்த்தார். அருகில் இருக்கும் பெண்ணிடம் அந்தப் பக்கத்தைக் காட்டினார். மேலும், பக்கங்களைத் திருப்ப... அந்த நூலிலேயே அவரது மனைவி மெர்ஷியாவின் 'தி டே ஐ பிகேம் எ உமன்’ (The day i became a woman) படமும் இருந்தது. இருவர் முகங்களிலும் புன்னகை மலர... ''இது மெர்ஷியா'' என்று அருகில் இருந்த பெண்ணை அறிமுகம் செய்துவைத்தார். தெரியாத மொழியில் இருவரின் படங்களும் இருப்பது அவர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கலாம். புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்தார்.

''நான் ஒளிப்பதிவாளராக இருக்கிறேன்!'' என்றதும் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். மெர்ஷியா மொழி தெரியாத பாவனை முகத்தில் இருக்க... புன்னகையுடன் தலையசைத்தார்.

02.JPG

படத்தின் பிரதி தயாராக இருப்பதாக அழைப்பு வந்தது. வாருங்கள் என்று படம் பார்க்க என்னை யும் அழைத்தார். 'தி மேன் ஹூ கேம் வித் தி ஸ்நோ’ (The man who came with the snow) என்ற அவரது படம் திரையில் ஓடத் தொடங்கியது. அவர் முன் இருக்கையில் இருக்க... நான் பின்னால் இருந்தேன். படத்தில் சப்-டைட்டில் இல்லாததால், ஒவ்வொரு காட்சிக்கும் பின்னால் திரும்பி என்னிடம் விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரது ஆங்கிலம் தெளிவாக, நிதானமாக இருந்தது. படம் முடிந்து வெளியில் வந்ததும் படத்தின் வண்ணம் குறித்தும் தரம் குறித்தும் என்னிடம் பேசினார். தான் நாடு கடத்தப்பட்டதால் இந்தப் படத்தை கஜகஸ்தானில் எடுத்ததாகவும் பிரதி எடுக்க இந்தியா வந்ததாகவும் சொன்னார். சில நிமிடங்களில் அவர் விடைபெறுவதாகச் சொல்ல... ''திரும்பவும் உங்களைச் சந்திக்க வேண்டுமே'' என்றேன். ''நாளை அறைக்கு வாருங்கள்'' என்றார். ஒரு சர்வதேச இயக்குநர் அவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மறு நாள் காலை 10 மணிக்கு வடபழனி கமலா தியேட்டரை ஒட்டிய சந்தில் இருக்கும் அந்த எளிய விருந்தினர் விடுதியின் கதவைத் தட்டினேன். நண்பர்கள் அருள் எழிலனும் எழுத்தாளர் விஸ்வாமித்திரனும் உடன் இருந்தார்கள். கதவு திறக்க, நேற்று பார்த்த அதே கதர் உடையில் மக்மல்பஃப் இருந்தார். புன்னகையுடன் வரவேற்று அங்கு இருந்த இருக்கைகளில் அமரச் சொன்னார். சில நிமிடங்களில் மெர்ஷியா அதே புன்னகையுடன் உலர்ந்த பழங்களை யும் ஸ்டிக்கர் ஒட்டிய ஆரஞ்சுப் பழங்களை யும் கொண்டுவந்தார். மக்மல்பஃப் மெர்ஷியாவையும் அங்கேயே அமரச் சொன்னார்.

நானும் விஸ்வாமித்திரனும் எழிலும் பேசத் தொடங்க... அங்கிருந்த ஆரஞ்சுப் பழங்களை உரித்து எங்களுக்குத் தந்துகொண்டே... மக்மல்பஃப் தனது வாழ்க்கை மற்றும் சினிமா குறித்து இயல்பாகப் பேசத் தொடங்கினார். உரையாடல் அவரது திரைப்படப் பள்ளி குறித்து திரும்பியது.

''என் மகள் சமீராவுக்கு எட்டு வயது இருக்கும்போது நான் படம் பிடிக்கும் இடத்துக்கு வருவாள். என் கால்களைச் சுற்றிக்கொண்டே திரிவாள். ஒருநாள் பள்ளியில் இருந்து வந்த அவள், 'அப்பா! எனக்கு பள்ளிக்குப் போகவே பிடிக்கவில்லை’ என்றாள். எனக்கும் இரானின் பாடத்திட்டம் மேல் உடன்பாடு இல்லை என்பதால், அன்றே அவளைப் பள்ளியில் இருந்து நிறுத்தி என்னுடன் வைத்துக்கொண்டேன். அவளுக்கு சினிமா பிடித்திருந்ததால் அதனை நான் கற்றுக்கொடுத்தேன்!''

''உங்கள் திரைப்படப் பள்ளியில் அப்படி என்ன கற்றுக்கொடுத்தீர்கள்... அதன் பாடத்திட்டம் என்ன?'' என்று கேட்டேன். ''பாடத்திட்டம் என்று எதுவும் கிடையாது. எனது பள்ளி சமீரா, ஹானா மற்றும் மெர்ஷியாவுக்காக உருவானதுதான். இங்கு இருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் பாடத்திட்டம் என்று என்ன வைத்திருக்கிறார்கள்? உலகின் சிறந்த படங்களைப் பார்க்கச் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, 'சிட்டிசன் கேன்’ என்றால், அந்தப் படத்தைப் போட்டு, அதை எப்படி எடுத்தார்கள், அதன் நுட்பங்கள் என்ன என்று கற்றுத்தருகிறார்கள். அது ஆர்சன் வெல்ஸின் சினிமா. அதன் நுட்பம் என்பது அவர் சார்ந்த கலாசாரம், அரசியல் மேலும் அவர் வளர்ந்த விதத்தைப் பொறுத்து இருக்கிறது. அதை நாம் தெரிந்துகொள்ள லாம். ஆனால், பின்பற்ற வேண்டும்என்பது அவசியம் இல்லையே? இப்போது இருக்கிற கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவை ஒரு தொழிலாகக் கற்றுக் கொடுக்கின்றன. அரசுப் பணியாளர்போல ஒரு சினிமாக்காரரை உருவாக்குகின்றன. என் வேலை அதுவல்ல!''

03.JPG

''பிறகு எப்படித்தான் கற்றுக்கொடுப்பீர்கள்?''

''தினமும் 50 கி.மீ. சைக்கிள் ஓட்ட வேண்டும். இரண்டு மணி நேரம் நீச்சல் அடிக்க வேண்டும். இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமா படைப்பாளிக்கு முதலில் உடல் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், எங்கள் நாட்டில் படம் எடுப்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வகையான போர் முறை. நான் 'கந்தகார்’ எடுத்தபோது, நாங்கள் படம் எடுத்த இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. கேமரா, தொழில் நுட்பச் சாதனங்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு ஓடினோம். அந்த உடல் உறுதி ஒரு திரைப்படப் படைப்பாளிக்கு அவசியம். எந்த நாடாக இருந்தாலும் படம் எடுப்பவர் உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் பலம்... பலவீனம் இரண்டும் உங்கள் படைப்பில் வெளிப்படும்... இல்லையா'' என்று சிரித்தார்.

''எங்கள் திரைப்படப் பள்ளியில் இலக்கியம் படிக்க வேண்டும். ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் முழுக்க அவரது கவிதைகளை மட்டுமே படிப்போம். வாசிக்கச் சொல்வோம். அதுபற்றிக் கலந்து பேசுவோம். விவாதிப்போம். பிறகு, படம் பார்ப்போம். ஓவியங் கள் பார்ப்போம். ஒரு வாரம் முழுக்க ஒரே படம். ஒரே இயக்குநரின் படம். திரும்பத் திரும்பப் பார்ப்போம். விவாதிப்போம். இதுதான் எனது பாடத்திட்டம்.

இந்தச் சூழலில் வளர்கிற சமீரா, 17 வயதில் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறாள். ஒருநாள் தொலைக்காட்சி செய்தி பார்க்கிறாள். ஒரு அப்பா தனது மகள்கள் இருவரையும் பல வருடங்கள் வெளி உலகமே தெரியாமல் அடைத்துவைத்திருக்கிறார் என்ற செய்தி அவளைப் பாதிக்கிறது. 'இதைப் படமாக எடுக்கலாமா?’ என்று கேட்கிறாள். 'எடு’ என்கிறேன். அவளே கேமராவை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, பதினோரு நாளில் 'ஆப்பிள்’ படத்தை எடுக்கிறாள். அப்போது சமீராவுக்கு 19 வயது. இப்படித் தன்னைச் சுற்றி நடக்கிற விஷயங்களைக் கவனிப்பவர்களாக, அதனைத் திரைப்படமாக மாற்ற முடிகிறவர்களாக எனது பயிற்சி அவர்களை உருவாக்குகிறது. இதுதான் நீங்கள் கேட்கிற பாடத்திட்டம்!'' என்று சிரிக்கிறார்.

04.JPG

''உங்கள் படங்கள் அனைத்திலும் தொழில்முறை அல்லாத சாதாரண மனிதர் களையே நடிக்கவைக்கிறீர்கள். அவர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?''

''என்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர் களை அல்லது நான் நடிகர்களாகத் தேர்ந்து எடுக்கிறவர்களைப் பிச்சை எடுக்கத் தெருவுக்கு அனுப்புவேன். யார் அதிகமாகப் பிச்சை எடுத்துவருகிறார்களோ அவர்தான் நடிகர். எந்தக் கூச்சமும் இல்லாமல் மக்களிடம் சென்று தன்னை ஒரு பிச்சைக்காரராக நம்பவைக்க முடிகிறது என்றால், அவர்தானே சிறந்த நடிகர்!''

''நடிகர்களுக்கான ஊதியம் என்று என்ன தருவீர்கள்?'' என்று நான் கேட்டதும், உடனே ''இங்கு புகழ்மிக்க நடிகருக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கிறீர்கள்?'' என்று கேட்டார். நான் சொன்னதும் அவர் அதை அமெரிக்க டாலர் மதிப்பில் மாற்றிப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ''ஏன் நடிகருக்கு இவ்வளவு தருகிறீர்கள்?'' அவரது ஆச்சர்யம் அடங்கவில்லை. பிறகு, இயக்குநரில் தொடங்கி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஊதியம் என்று கேட்டார். அவருக்குத் தொடர்ந்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. ''சரி... உங்கள் படங்களின் பட்ஜெட் என்ன?'' என்று கேட்டார்.  ''அதுவும் சில கோடிகள்... வருடத்துக்கு இதுபோல தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறோம்!'' என்று சொன்னதும் கன்னத்தில் கைவைத்துவிட்டார்.

''சரி... உங்கள் படப்பிடிப்புத் தளத்தில் எத்தனை பேர் இருப்பீர்கள்?'' என்று கேட்டார். ''குறைந்தது 100 பேர்!'' என்று சொன்னேன்.  

''100 பேரை வைத்துக்கொண்டு எப்படிப் படம் எடுக்க முடியும்? உதாரணத்துக்கு, வறுமையைப் பற்றிய படம் எடுக்கிறீர்கள் என்றால், ஷாட் முடிந்தததும் 100 பேர் அதே இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பீர்களா? எங்கள் படங்களின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? உங்கள் ரூபாய் மதிப்பில் வெறும் 15 லட்சம். அதற்கு மேல் நாங்கள் எந்தப் படமும் எடுத்தது இல்லை.

எனது படப்பிடிப்பில் நான், டிரைவர், சமையற்காரர், நடிகர் எல்லாம் சேர்த்து படப்பிடிப்புக் குழு மொத்தமே 8 பேர்தான் இருப்போம்!'' என்று சொல்லிச் சிரித்தார். ''இயக்குநரே க்ளாப் அடிக்க வேண்டும். ஒலிப்பதிவு செய்ய வேண்டும். ஒளிப்பதிவாளர் தனக்கான எல்லா வேலைகளையும் தானே செய்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கிளம்பும்போது, நாங்களே எல்லாவற்றையும் தூக்கிச்செல்வோம். நாங்கள் அனைவரும் ஒரு காரில்தான் பயணம் செய்வோம். அந்த ஒரு கார்தான் எங்கள் படப்பிடிப்புக் குழு. எங்களது நடிகருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா? பணமாக ஒன்றும் இல்லை. நான் எனது 'சைக்கிளிஸ்ட்’ படத்தில் நடித்தவருக்கு ஒரு சிறிய வீடு கட்டிக்கொடுத்தேன். அதுதான் எங்களால் கொடுக்க முடிந்த ஊதியம்.

05.JPG

நீங்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால், சினிமா இங்கு மிகவும் கெட்டுப்போன நிலையில் இருக்கிறது. ஒரு தொழிலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும், நிறையப் பணம் முதலீடு செய்யப்படுகிறது என்றால், அதைவைத்து லாபம் பார்க்கவே எல்லோரும் நினைப்பார்கள். நல்ல படம் எடுக்க யார் நினைப்பார்கள்? செலவைக் குறைக்க வேண்டும்.

என் மகள் ஹானா, 'புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆஃப் ஷேம்’ (Buddha Collapsed Out of Shame) என்றொரு படம் எடுத்தாள். இது வீடுகளில் நாம் பயன்படுத்தும் கையளவு டிஜிட்டல் கேமராவினால் எடுக்கப்பட்டது. செலவு உங்கள் பணத்தில் வெறும் 8 லட்ச ரூபாய். திரைப்பட விழாக்களின் மூலம் அது ஈட்டிய பணம் 15 லட்சம். அதுதான் அடுத்த படத்துக்கான மூலதனம்.

இந்தியாவில் கதைக்கா பஞ்சம்? சாலையில்தான் எத்தனை கதைகள்? நேற்று நானும் மெர்ஷியாவும் லேப்பில் இருந்து வரும்போது ஒரு கடையில் நின்றோம். அந்தக் கடையில் நான் ஒரு பழச்சாறு வாங்கிக் குடிக்க முயன்றபோது, என் கால்களை யாரோ சுரண்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அழுக்கான ஒரு சிறுவன் நின்றுகொண்டு இருந்தான். அவன் என்னைப் பார்த்து, என் கையில் இருந்த பழச்சாறைக் கேட்டான். நானும் மறுக்காமல் அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தேன். அது வரைக்கும் அவன் செய்ததில் எதுவும் இல்லை. அதற்கு மேல் அவன் செய்ததுதான் எனக்குத் தீராத ஆச்சர்யமாக இருந்தது.

என்னிடம் இருந்த பழச்சாறுக் குவளையை வாங்கியதும் அவன் உடனே குடிக்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு நடந்து சென்றான். அவனது உடைகள் அவ்வளவு அழுக்காக இருந்தன. என்றாலும், சாலையைக் கடந்த அவன் அங்கு இருந்த திண்டில் ஒரு செய்தித்தாளை விரித்து உட்கார்ந்தான். அதில் ஒரு ராஜாவைப்போல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துகொண்டு, போகும் வரும் வாகனங்களையும் மனிதர்களையும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டே அந்த பழச்சாறைப் பருகினான். நான் அசந்துவிட்டேன். அந்தச் சிறுவனைப் பின்தொடருங்கள். அங்கு ஒரு கதை நிச்சய மாக இருக்கிறது. அதுதான் சினிமா.

உலகில் எங்கும் இல்லாத அளவுக்குத் தணிக்கை விதிகள் இருந்தபோதும் இரானிய சினிமா ஒளிர்கிறது என்றால், அதன் காரணம் என்ன? அதில் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள்தானே நமது உண்மையான ஆன்மா. இதுபோன்ற மனிதர்களைப் படம் எடுங்கள். வருடத்துக்குத் தமிழில் மட்டும் 150 படங்கள் எடுக்கிறீர்கள். இந்தியாவில் மொத்தம் எத்தனை படங்கள் இருக்கும்? 100 கோடிப் பேருக்கும் அதிகமாக இருக்கிற இந்தியாவில், சிறந்த இயக்குநர்கள் எத்தனை பேர்? ஒரு 10 பேரைச் சொல்ல முடியுமா? இந்தியா சினிமாவில் கடக்க வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்!''

''ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டோம்.


''மக்களைப் பேசுகிற எந்தப் படமும் நல்ல படம்தான். சமீரா எடுத்த 'ஆப்பிள்’ சர்வதேச அளவில் எல்லா விருதுகளையும் குவித்தது. அத்துடன் நிற்காமல் சமீரா அந்தச் சிறுமிகளுக்கு அந்த வீட்டின் மேலேயே ஒரு மாடியைக் கட்டிக்கொடுத் தாள். ஆனால், அந்தக் குழந்தைகளை அவர்களின் தகப்பன் திரும்பவும் பூட்டி வைத்தான். சமீரா அந்தக் குழந்தைகளுக் காகத் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறாள். திரைப்படம் என்பது சில விருதுகளோடு முடிந்துபோகிற ஒன்று அல்ல. அது காலம் காலமாக மக்களின் நினைவுகளிலும் வாழ்க்கையோடும் இணைந்திருக்க வேண்டும். அப்படியான சினிமா இயக்கத்தை தமிழில் நீங்கள் தொடங்குங்கள்'' என்று எங்கள் மூவரையும் பார்த்துச் சொன்னார்.

விருதுகள் பற்றிப் பேச்சு வந்தது. ''விருதுகள் பெறுகிற மகிழ்ச்சி ஒரு நிமிடம்தான். பிறகு, அது மறந்துவிடும். ஆப்கனில் யுத்தம் நடந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. ஏனெனில், இரானின் சட்டப்படி அகதிகள் கல்வி கற்க முடியாது. நான் ஏதாவது செய்ய வேண்டுமே என்று அவர்களைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்து அரசுக்கு அனுப்பினேன். அவர்கள் அதைப் பார்த்ததும் சட்டத்தைத் தளர்த்தி அத்தனை குழந்தை களையும் பள்ளியில் சேர்த்துக்கொண்டார் கள். ஒரு சின்ன டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படத்துக்குக் கிடைத்த மரியாதை இது. சமூகத்தில் சினிமாவின் பங்கு என்ன என்று கேட்டால், இதுதான் என்று நான் சொல்வேன். மற்றபடி இந்த விருதுகளை நான் அதிகம் பொருட்படுத் துவது இல்லை. இப்போது எப்படிப் படம் எடுத்தால் விருதுகள் கிடைக்கும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு படம் எடுக் கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அது  சினிமாவே அல்ல. நான் மக்களோடு இருக்கிறேன். அவர்களுக்கான சினிமாவையே நான் உருவாக்க விரும்புகிறேன்!''

வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். புகைப்படங்கள் எடுத்தோம். இடையிடையே மெர்ஷியா பதப்படுத்தப்பட்ட பழச்சாறைக் கொண்டுவந்து தந்து அதே மாறாத புன்னகையுடன் அமர்ந்திருந்தார். மக்மல்பஃப் சில விஷயங்களை குர்தீஷ் மொழியில் கேட்டபோது மெர்ஷியா சொன்ன பதில்களை எங்களிடம் ஆங்கிலத்தில் பகிர்ந்துகொண்டார். நாங்கள் விடைபெறும் நேரம் வந்தபோது எங்களுக் கான உபசரிப்பு குறித்து போதிய கவனிப் பினைச் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். அவர் நாளையும் இருக்கிற செய்தியைச் சொல்லி, முடிந்தால் நாளையும் சந்திக்கலாம் என்று சொன்னார்.

மறுநாள் இயக்குநர் பாலாஜி சக்திவேலை அழைத்துச் சென்றேன். உடன் விஸ்வாமித்திரனும் இருந்தார். அழைப்பு மணி அடித்ததும் மக்மல்பஃப் அதே வெள்ளை கதர் உடையில் கதவைத் திறந்தார். பாலாஜி சக்திவேல் அவருக்கு சால்வை அணிவித்து வணங்கினார்.

மக்மல்பஃப் நெகிழ்ந்துபோய் அவர் அணிவித்த சால்வையுடன் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார். தங்கள் உடைமைகளைத் தவறவிட்டதால் இந்த கதர் உடையை இரவுகளில் துவைத்துப்போட்டு மூன்று நாட்களாக ஒரே உடையை அணிந்திருப்பதைப் புன்னகையுடன் சொன்னார்.

''தமிழ்ப் படம் எதுவும் பார்த்திருக்கிறீர்களா?''

''ஒன்றுகூடப்  பார்த்ததில்லை. ஆனால் பார்க்க விரும்புகிறேன். இந்திப் படங்கள் போல உங்கள் படங்களிலும் நடனமும் பாட்டும் இருக்குமா?'' என்று கேட்டுப் புன்னகைத்தார். ''இந்தியப் படங்களில் நான் பார்த்த ஒரே படம் 'பதேர் பாஞ்சாலி’. மனம் சோர்வடையும்போது ரேயின் 'பதேர் பாஞ்சாலி’, ஃபெலினியின் 'லாஸ்ட்ரடா’ இரண்டு படங்களையும் பார்ப்பேன்'' என்று சொன்னார். நேற்று பர்மா பஜார் போகும்போது அவரது படங்கள், மெர்ஷியாவின் படங்கள் உள்ளிட்ட உலகப் படங்களின் குறுந்தகடு கள் குறைந்த விலையில் கிடைப்பது குறித்து ஆச்சர்யமாகச் சொன்னார்.

''என்னைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று என்னிடமே பிரதி இல்லை. ஆனால், உங்கள் ஊரில் கிடைக்கிறது. இரண்டு பிரதிகள் வாங்கினேன்!'' என்று சொல்லி அதில் ஒரு பிரதியை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். நாளை அதிகாலை விமானம் என்பதால் இன்று மாலை படப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டு கிளம்ப வேண்டும் என்று சொன்னார். வாய்ப்பு இருந்தால் திரும்பவும் விரைவில் இந்தியா வருவதாகவும் தமிழில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு படம் எடுக்கலாம் என்றும் சொன்னார்.

விடைபெறும் தருணம். எல்லோரும் இணைந்து நிழற்படம் எடுக்க வேண்டும் என்பதால், கேமராவை மேசையில் சாயாமல் வைத்து, அதன் தானியங்கியை இயக்கி ஓடிவந்து அவர்களுடன் நின்று கொண்டேன். ர்ஞ்ஞென்று சத்தம் கேட்க... நாங்கள் அனைவரும் மேசையில் இருக்கும் கேமராவைப் பார்த்து நின்றிருந்த கணம் அற்புதமானது. விடைபெற்று வெளியில் வந்தோம். அந்த எளிமையும் கனிவும் வழிகாட்டுதலும் முழுப் பயணத்துக்குமான ஒரு சுடரைக் கையில் தந்ததுபோல் இருந்தது.

இடுகையிட்டது யாஸிர் அசனப்பா.

இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

4 கருத்துகள்:

  1. blank.gif

    Kumaran3 ஏப்ரல், 2012 அன்று 7:53 AM

    என்னை ஆழமாக சிந்திக்க வைக்க மெய்சிலிர்க்க வைத்துவிட்டது தங்களது பகிர்வு..ஒரு உலகத்தர கலைஞனை பற்றியும் உண்மையான சினிமா மீதான அவரது பார்வையையும் தெரிந்துக்கொள்ள வழிவகுத்தது..தங்களை எத்தனை பாராட்டியும் தகும்.மிக்க நன்றி சகோ.

    பதிலளி

    பதில்கள்

    1. *

      யாஸிர் அசனப்பா.3 ஏப்ரல், 2012 அன்று 3:57 PM

      @குமரன்,

      மறுமொழியிட்டமைக்கு மிக்க நன்றி. நடிகனாக வேண்டும் என்றால் பிச்சை எடுத்துக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு இயக்குனர், நம் தமிழ் சினிமாவில் வந்தால் எந்த நடிகரின் மகனும், இயக்குனரின் மகனும், தயாரிப்பாளரின் மகனும் சினிமாவிற்கு வந்திருக்க முடியாது.

      அது மாதிரியான ஒரு இயக்குனருக்காக காத்திருக்கும் ஒரு சினிமா ரசிகன்.

    2. பதிலளி

  2. blogger_logo_round_35.png

    aravintraj3 ஏப்ரல், 2012 அன்று 10:28 AM

    இந்த பதிவினை நமது தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். பொறியியல் கல்லுரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் போன்றவை எப்படி வணிகமயமாகி விட்டதோ அதைவிட அதிகமாக நமது திரைப்படத்துறை வணிகமயமாகியுள்ளதை இப்பதிவை படித்தபோது தான் புரிகிறது. இவரை போன்றவர்களைத் தான் திரைப்பட கலைஞர்கள் என கூற வேண்டும். நம் கோலிவுட், பாலிவுட் அனைத்தும் கூத்தாடிகள் என்று தான் கூற வேண்டும்.

    பதிலளி

    பதில்கள்

    1. *

      யாஸிர் அசனப்பா.3 ஏப்ரல், 2012 அன்று 3:59 PM

      @ அரவிந்த் ராஜ்,

      மறுமொழியிட்டமைக்கு நன்றி,

      கோடி, கோடியாக பணம் சொரிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், என் நடிகனுக்கு நான் ஒரு சிறியதாக வீடு கட்டிக் கொடுத்தேன், அது தான் நான் அவனுக்கு கொடுத்த ஊதியம் என்று சொல்லும் இந்த இயக்குனர் எனக்கு வித்தியாசமாக தெரிகின்றார்.

https://civilyasir.blogspot.com/2012/04/blog-post.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.