Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. 2000ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு தொடரை இழப்பது இதுவே ஐந்தாவது முறை. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு முறை தோற்றிருக்கிறது இந்தியா.

போட்டி சமனாகும் என்று நினைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியினர் ஐ பி எல் விளையாட்டினுள் அதிகம் ஐக்கியமாகிவிட்டதால் டெஸ்ட் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த மண்ணில் சோடைபோனது இந்தியா உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது

Published By: Vishnu

26 Nov, 2025 | 07:37 PM

image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக தோல்வி அடைந்து சொந்த மண்ணில் சோடை போன இந்தியா, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சிரமத்தைக் கொடுத்த கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் 30 ஓட்டங்களால் தென் ஆபிரிக்காவிடம் தோல்வி அடைந்த இந்தியா, குவாஹாட்டியில் இன்று நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓட்டங்கள் ரீதியில் இந்தியா அடைந்த மிகப் பெரிய தோல்வி இதுவாகும்.

போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் புதிய விளையாட்டரங்கில் விரல் விட்டு எண்ணக்கூடிய பார்வையாளர்கள் மத்தியில் சைமன் ஹாமரின் சுழற்பந்துவீச்சில் இந்திய அணி 140 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வி  அடைந்தது.

கடந்த 25 வருடங்களில் இந்திய மண்ணில் தென் ஆபிரிக்கா ஈட்டிய முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும். அத்துடன் கடந்த 12 மாதங்களில் இந்தியா அடைந்த இரண்டாவது  டெஸ்ட்  தொடர் தோல்வி இதுவாகும்.

2024 நவம்பர் மாதம் ஆரம்பமாகி 2025 ஜனவரி மாதம் நிறைவடைந்த 5 போட்டிகள் கொண்ட போடர் - காவஸ்கர் கிண்ண டெஸ்ட் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா 1 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இந்திய அணியின் பதில் அணித் தலைவர் ரிஷாப் பான்ட் தெரிவித்தார்.

'ஓர் அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்வேண்டும். தென் ஆபிரிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி பெருமை அடைந்தார்கள். அவர்கள் முழுத் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தினர். இந்தத் தொடரில் இழைத்த தவறுகளைத் திருத்திக்கொண்டு அதனைப் ஒரு படிப்பினையாகக் கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்' என ரிஷாப் பான்ட் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தொடரில் துடுப்பெடுத்தாடிய நான்கு இன்னிங்ஸிலும் முதலாவது டெஸ்டில் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்ற ஷுப்மான் கில் நீங்கலாக சகல விக்கெட்களையும் இழந்த இந்தியாவின் அதிகபட்ச மொத்த எண்ணிக்கை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பெறப்பட்ட 201 ஓட்டங்களாகும்.

தோல்விக்கு தனிப்பட்ட யார் மீதும் பழி சுமத்த முடியாதென்கிறார் கம்பீர்

இந்திய அணியின் தோல்விக்கு தனிப்பட்ட யார் மீதும் பழி சுமத்த முடியாது என தலைமைப் பயிற்றுநர் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.

கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்றுநரான பின்னர் இந்தியா 18 டெஸ்ட் போட்டிகளில் 10இல் தோல்வி அடைந்துள்ளது.

இந்த தோல்விகளுக்கான பழி தன்னிடமிருந்து தொடங்குவதாக கம்பீர் தெரிவித்தார்.

2611_gautham_gambir.png

செயதியாளர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், 'தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 0 - 2 என்ற தொடர் தோல்விக்கு அணியில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்பேற்கவேண்டும். அனைவர் மீதும் பழி சுமத்தப்படலாம். ஆனால், அது என்னிடம் இருந்துதான் தொடங்கும்' என்றார்.

'தனிப்பட்ட வீரர்களையோ வீரர்களின் அடி தெரிவுகளையோ குறை கூற முடியாது. ஒருபோதும் தனிநபரை குறை கூற மாட்டேன். நாம் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். சுருக்கமாக சொல்லின் எமது அணி எப்போதும் கற்றுக்கொள்ளும் அணி. இந்திய டெஸ்ட் அணியைப் பொறுத்தமட்டில் இந்த அணி உயரிய இடத்துக்கு செல்வதற்கான நிலைமாற்றக் காலத்தில் இருப்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/231543

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு கம்பீர் மட்டுமே காரணமா?

கௌதம் கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

மே, 2018... ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்கிறார் ஜஸ்டின் லாங்கர்.

முதல் பத்திரிகையாளர் சந்திப்பில், "களத்தில் உங்களுக்கான பெரிய சவாலாக எதைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்கப்படுகிறது.

அதற்கு லாங்கர் கொடுத்த பதில்: "ஒரு உலகக் கோப்பை, இரண்டு ஆஷஸ் என நிறைய பெரிய தொடர்கள் வரப்போகின்றன. ஆனால், அதையெல்லாம் விடப் பெரிய சவால் என்றால், இன்னும் 3-4 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் ஆடும் டெஸ்ட் தொடர்தான். ஏனெனில், நாங்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் அணியா என்பதை இந்தியாவை இந்தியாவில் வீழ்த்துவதை வைத்துத்தான் மதிப்பிடுவோம். என் கரியரைத் (carrier) திரும்பிப் பார்த்தாலும், 2004ம் ஆண்டு நாங்கள் இந்தியாவை இந்தியாவில் வீழ்த்தியதுதான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதைப் போன்ற தருணம் என்று சொல்வேன்"

உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களை விடவும் இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்துவதுதான் மிகப் பெரிய சவால் என்று கூறியிருந்தார் அன்றைய ஆஸ்திரேலிய பயிற்சியாளர். ஏனெனில், இந்தியா அப்படியொரு கோட்டையாக இருந்தது. எந்த அணியாலும் அவ்வளவு எளிதாக இந்தியாவில் தொடரை வென்றிட முடியவில்லை.

அப்படி யாராலும் எளிதில் வென்றிட முடியாத இடமாக இருந்த சொந்த மண்ணில், தற்போது தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி.

சமீபத்தில் இந்தியாவில் ஆடிய 4 டெஸ்ட் தொடர்களில் இரண்டை இழந்திருக்கிறது இந்திய அணி. கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் 'ஒயிட் வாஷ்' ஆன இந்திய அணி, தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் 2-0 என தொடரை இழந்திருக்கிறது.

ஒரு காலத்தில் இந்திய மண்ணில் கோலோச்சிக்கொண்டிருந்த அணி இப்படி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துக்கொண்டிருப்பது பெரும் விமர்சனம் ஆகியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் பற்றி இது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கம்பீர் பயிற்சியாளர் ஆனதும் இந்தத் தோல்விகள் ஏற்பட்டிருப்பதால் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

ஆனால், இந்தத் தோல்விகள் கம்பீருக்கு அப்பாற்பட்டது என்கிறார்கள் வல்லுநர்கள். 'சுழற்பந்து வீச்சு மற்றும் அதற்கு எதிரான செயல்பாடு' அவர்கள் கைகாட்டும் முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், இந்திய டெஸ்ட் அணி உள்ளூரில் இந்த சரிவை சந்தித்திருப்பது நீண்ட காலமாகவே மெல்ல மெல்ல நடந்த விஷயம்தான் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

கே.எல்.ராகுல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய மண்ணில் இந்தியா தொடர்ந்து தோற்பதற்கு, இந்திய பேட்டர்கள் சுழலுக்கு எதிராகத் தடுமாறுவது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது

சுழலுக்கு எதிராகத் தடுமாறும் இந்திய பேட்டர்கள்

இந்திய அணியின் இந்த மிகப் பெரிய சரிவுக்கு மிக முக்கியக் காரணமாக பெரும்பாலானவர்கள் சொல்வது சுழற்பந்துவீச்சுக்கு எதிரான இந்திய பேட்டர்களின் செயல்பாட்டைத்தான்.

இந்திய அணி இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை இழக்கும்போதெல்லாம் அங்கு எதிரணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஜொலித்திருப்பதைக் காண முடியும்.

இந்த தென்னாப்பிரிக்க தொடரில் 2 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை சைமன் ஹார்மரிடம் இழந்தது இந்தியா. முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஹார்மர், தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றினார்.

அதேபோல், 2024 புனே டெஸ்ட்டில் மிட்செல் சான்ட்னர் (13 விக்கெட்டுகள்), மும்பை டெஸ்ட்டில் அஜாஸ் பட்டேல் (11 விக்கெட்டுகள்), 2023 இந்தூர் டெஸ்ட்டில் நாதன் லயான் (11 விக்கெட்டுகள்), 2017 புனே டெஸ்ட்டில் ஸ்டீவ் ஓ'கீஃப் (12 விக்கெட்டுகள்) போன்ற ஸ்பின்னர்கள் இந்தியாவை வீழ்த்த தங்கள் அணியின் முக்கிய ஆயுதமாக விளங்கியிருக்கிறார்கள்.

கவுஹாத்தி டெஸ்ட் போட்டியின்போது, கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பெரிய அளவு தடுமாறியிருப்பது பற்றி தமிழ் வர்ணனையாளர்கள் விவாதித்தனர். அப்போது, இந்திய மண்ணில் சுழலுக்கு எதிரான இந்திய பேட்டர்களின் சராசரி வெகுவாகக் குறைந்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, தன்னுடைய யூ-டியூப் சேனலில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கூட இதைப் பற்றிப் பேசியிருந்தார். "சுழலுக்கு எதிராக ஆடுவதில் தற்போது நாம் சிறந்த அணி இல்லை. பல மேற்கத்திய அணிகள் நம்மை விட சிறப்பாக சுழலை எதிர்கொள்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

மான்டி பனேசர் & கிரீம் ஸ்வான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2012ல் இந்திய மண்ணில் பனேசர் மற்றும் ஸ்வான் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தியபோதே இந்தியாவின் தடுமாற்றம் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் நானீ (கோப்புப் படம்)

இது கடைசி 5 ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்னையா?

இந்த 5 ஆண்டுகளில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்தியா பெரும் தடுமாற்றத்தை சந்தித்திருந்தாலும், இது வெகுநாள் முன்பிருந்தே தொடங்கிவிட்டது என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவர், "2012-ம் ஆண்டு இந்திய அணியில் சச்சின், டிராவிட், லக்‌ஷ்மண் போன்ற ஜாம்பவான் பேட்டர்கள் இருந்த காலத்திலேயே சுழலுக்கு எதிரான சரிவு தொடங்கிவிட்டது. இங்கிலாந்து அணி இங்கு (இந்தியா) வந்து ஆடியபோதும் பனேசரும், ஸ்வானும் அந்தத் தொடரில் இந்தியாவைப் பந்தாடினார்கள். ஏன், இங்கிலாந்து ஆடுகளங்களில் மொயின் அலி கூட ஒரு போட்டியில் 9 விக்கெட்டுகள் (சவுதாம்ப்டன் 2018) எடுத்தார். இப்படி வெளிநாட்டு ஸ்பின்னர்கள் சூழலுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படும்போதெல்லாம் இந்திய பேட்டர்கள் தடுமாறியிருக்கிறார்கள்" என்றார்.

மேலும், 2012ல் இங்கிலாந்து அணி இந்தியாவில் தொடரை வென்றபோது, அவர்கள் கைப்பற்றிய 58 விக்கெட்டுகளில் 37 விக்கெட்டுகளை கிரீம் ஸ்வான் (20 விக்கெட்டுகள்) மற்றும் மான்டி பனேசர் (17 விக்கெட்டுகள்) இருவருமே கைப்பற்றியிருந்தார்கள் என்றும் அப்போதிருந்தே சுழலுக்கு எதிரான செயல்பாடு சரியத் தொடங்கிவிட்டது என்றும் கூறுகிறார் நானீ.

2012ல் பெற்ற தோல்விகளால் ஏற்பட்ட மாற்றம்

நானீ குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் இங்கிலாந்து (2011) மற்றும் ஆஸ்திரேலிய (2011-2012) சுற்றுப்பயணங்களில் இரண்டு டெஸ்ட் தொடர்களிலுமே 4-0 என வைட்வாஷ் ஆனது இந்தியா. வெளிநாடுகளில் தொடர்ந்து 8 போட்டிகளைத் தோற்றதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அந்தப் போக்கை மாற்ற விரும்பியதாகக் கூறுகிறார், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன்.

"வெளிநாடுகளில் வெற்றி பெறவேண்டும் என்பதால், அதற்கேற்ப நம் வீரர்களைத் தயார் செய்ய வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக, ரஞ்சி கோப்பை விளையாடும் ஆடுகளங்களில் குறைந்தது 4-6 மில்லிமீட்டர் உயர புற்கள் வளர்க்க வேண்டும் என்று பிசிசிஐ ஆணையிட்டது. குளிர்காலங்களில் அப்படியான ஆடுகளங்களில் ஆடும்போது பந்து நன்கு நகரத் தொடங்கியது. அதனால் அணிகள் வேகப்பந்துவீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கின" என்று அவர் கூறினார்.

இது சுழற்பந்துவீச்சாளர்களின் பயன்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார். "வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் கிட்டத்தட்ட முதல் 45-50 ஓவர்கள் பந்துவீசினார்கள். அடுத்து 80வது ஓவர் முடிந்து புதிய பந்து பயன்பாட்டுக்கு வந்தவுடன் மீண்டும் அவர்களே பந்துவீசினார்கள். இடையே ஓவர்களை வேகமாக முடிக்கவே ஸ்பின்னர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அதனால் அவர்களது செயல்பாட்டில் தேக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு போன்ற ஒருசில இடங்களைத் தவிர்த்து சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் எங்கும் அதிகமாகப் பயன்படுத்தப்படவில்லை" என்றும் வித்யுத் சிவராமகிருஷ்ணன் கூறினார்.

நானீயும் இந்த மாற்றம் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொள்கிறார். வெளிநாட்டில் வெற்றி பெறவேண்டும் என்ற தேடல் இந்தியாவில் பல வேகப்பந்துவீச்சாளர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது என்றும், அதைவைத்து இந்தியா வெளிநாடுகளில் பல வெற்றிகளைப் பெற்றது என்றும் கூறிய அவர், அதுவே சுழலுக்கு எதிரான செயல்பாடு சறுக்கக் காரணமாக அமைந்துவிட்டது என்றும் கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் பெற்ற அடுத்தடுத்த ஒயிட்வாஷ் தோல்விகள் இந்தியாவின் அணுகுமுறையை மாற்றம் ஏற்படுத்தியதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்

'ஸ்வீப் ஷாட்கள் எங்கே?'

இந்தியாவின் இந்த சரிவுக்கு, தேர்வு செய சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்கு ஆடக்கூடிய வீரர்களைத் தேர்வு செய்யாததையும் ஒரு காரனமாக வித்யுத் கூறுகிறார்.

"சுழற்பந்துவீச்சை ஆடுவதற்கு கட், ஸ்வீப் போன்ற ஷாட்களை நீங்கள் நன்கு ஆடவேண்டும். பந்து அதிகம் திரும்பும் ஆடுகளங்களில் அதிகம் ஸ்வீப் ஆடவேண்டும். ஆனால், இந்த இந்திய அணியில் அதிகம் ஸ்வீப் ஆடக்கூடிய வீரர்களே இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் விளையாடும் எந்த அணியுமே ஸ்வீப் ஷாட்டை பெரிய ஆயுதமாகக் கையில் எடுப்பார்கள். 1987 உலகக் கோப்பையிலேயே இங்கிலாந்து அதைத்தான் செய்திருக்கும். இப்போது தென்னாப்பிரிக்கா கூட அதைத்தான் செய்தது. இந்த கவுஹாத்தி டெஸ்ட் போட்டியில் ஸ்டப்ஸ் - டி சார்ஸி இணை பெரும்பாலான ரன்களை ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் மூலம்தான் எடுத்தார்கள்.

ஆனால், இந்திய பேட்டர்களோ அப்படி ஸ்வீப் ஆடுவதில்லை.

இதுகுறித்துப் பேசிய வித்யுத், இந்தியாவில் சிறப்பாக ஸ்வீப் ஆடிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியதை குறிப்பிட்டார். "இந்தியாவில் நன்கு செயல்பட்ட வீரர்களைப் பாருங்கள்... லாரா, ஹெய்டன், குக், ஆண்டி ஃப்ளார் போன்ற அனைவருமே நன்கு ஸ்வீப் ஆடக்கூடியவர்கள். அதிலும் ஆண்டி ஃப்ளார் அப்போதே ரிவர்ஸ் ஸ்வீப் கூட சிறப்பாக ஆடுவார். இந்தியா ஏ அணிக்காக நான் அவருக்கு எதிராக ஒருமுறை ஆடினேன். நான் அவருக்கு வீசிய ஒரு ஓவரின் ஆறு பந்துகளில், அவர் நான்கில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். இந்தியாவில் அப்படி ஸ்வீப் ஆடுவது அவசியம். அப்படியான வீரர்கள் அணிக்குள் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

"கருண் நாயர், சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்கள் சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடியவர்கள். ஆனால், அவர்களுக்கு இந்திய மண்ணில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை" என்றும் அவர் கூறினார்.

அதேசமயம், இப்போது டி20 போட்டிகளில் வீரர்கள் அதிகம் ஆடிப்பழகிவிட்டதால், அவர்கள் ஸ்வீப் ஆடுவதற்குப் பதிலாக வேறு வழிகளைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார் நானீ. "இப்போதெல்லாம் ஸ்வீப் ஆடவேண்டிய இடத்தில், கிரீஸுக்கு வெளியே வந்து மிட்விக்கெட் திசையில் பௌண்டரி அடிக்கப் பார்க்கிறார்கள்" என்கிறார் அவர்.

ஸ்வீப் ஆடுவது ஒரு கலை என்று குறிப்பிடும் நானீ, அதை தொடர்ச்சியாகச் செய்ய நன்கு பயிற்சி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

இங்குதான் அடுத்த கேள்வி எழுகிறது... ஏனெனில், நானீ வித்யுத் இருவருமே இப்போது வீரர்களிடம் அதற்கான நேரம் இல்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மேத்யூ ஹெய்டன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நன்கு ஸ்வீப் ஆடிய வீரர்கள் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறுகிறார் வித்யுத்

'தொடர் போட்டிகள், டி20 மோகத்தால் பயிற்சி செய்ய நேரமில்லை'

கடந்த சில ஆண்டுகளாகவே வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவதாலும், டி20 போட்டிகளின் மோகம் கூடிவிட்டதாலும், டெஸ்ட் போட்டிகள் மீதான முக்கியத்துவமும், அதற்குத் தயாராவதற்கு செலவு செய்யப்பட்ட நேரமும் குறைந்துவிட்டது என்கிறார்கள் நானீ, வித்யுத் இருவரும்.

"டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குப் பிறகு வீரர்களின் 'பேட் ஸ்பீட்' (பந்தை அடிக்கும் வேகம்) கூடிவிட்டது. அதனால் தடுப்பாட்டக் கலை போய்விட்டது. மிட் ஆன், மிட் ஆஃப் பகுதிகளில் சிங்கிள் எடுப்பதே ஒரு கலை. அதையெல்லாம் இப்போது பார்க்க முடியவில்லை" என்கிறார் நானீ.

அதேசமயம், வீரர்களின் ஷாட் தேர்வுகளை மட்டும் அவர் காரணமாகச் சொல்லவில்லை. இந்த டி20 மோகத்தால் ஏற்பட்டிருக்கும் அதீத போட்டிகள் கொண்ட அட்டவணையையும் அவர் கைகாட்டுகிறார்.

இதுபற்றிப் பேசிய அவர், "இப்போதுதான் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிவிட்டு வந்தது. இதுபோன்ற சிறிய இடைவெளியில் டெஸ்ட் போட்டிகளுக்குத் தகவமைத்துக்கொள்வது எளிதல்ல. இப்படியான குறுகிய இடைவெளிக்குப் பின் ஃப்ளாட்டான ஆடுகளங்களில் பேட்டர்களால் தாக்குப்பிடிக்க முடியும். ஆனால், சவாலான ஆடுகளங்களில் கடினம். அதுவும் குறிப்பாக இந்த எஸ்ஜி பந்து நல்ல சீம் கொண்டது, ஸ்பின்னர்களுக்கு நல்ல கிரிப் (grip) கொடுக்கும்" என்று குறிப்பிட்டார்.

இதே காரணத்தைச் சொல்லும் வித்யுத், இப்படி வீரர்கள் 'ஷார்ட் ஃபார்மட்' போட்டிகளில் அதிகம் விளையாடும்போது, அவர்கள் கடினமான டெஸ்ட் சூழலுக்கு தயாராவதற்கான அவகாசம் கிடைப்பதில்லை என்கிறார். அதேசமயம், இந்த கடின அட்டவணைக்கு நடுவே சிறப்பாக தயாராகும் வீரர்களால் தாக்கம் ஏற்படுத்த முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

இதற்கு வாஷிங்டன் சுந்தரை ஒரு உதாரணமாகச் சொல்கிறார் வித்யுத். "இந்த தென்னாப்பிரிக்க தொடரில் யார் சிறப்பாக பேட்டிங் செய்தது என்று பாருங்கள்... வாஷிங்டன் சுந்தர் தான் நன்கு சுழலை எதிர்கொண்டார். ஏனெனில் அவர் (தமிழ்நாடு) முதல் டிவிஷன் போட்டிகளில் தொடர்ச்சியாக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆடியிருக்கிறார். அவர் ஆடும் எம்ஆர்எஃப் அணி சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஆடும் அணி. அங்கு தொடர்ச்சியாக அவர் ஆடி தயாரானதன் விளைவை இந்த டெஸ்ட் தொடரில் பார்க்க முடிந்தது" என்று கூறினார் அவர்.

இந்தத் தொடரில் இந்தியாவுக்கு அதிக ரன்கள் (124) அடித்ததும், அதிக பந்துகள் (310) சந்தித்ததும் வாஷிங்டன் சுந்தர் தான். அவரையும் ராகுலையும் (217) தவிர வேறு எந்த இந்திய பேட்டரும் இந்தத் தொடரில் 200 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை.

வாஷிங்டனின் அணுகுமுறையைப் பாராட்டிய நானீ, வித்யுத் இருவருமே சொல்லும் முக்கிய விஷயம், பெரும்பாலான இந்திய பேட்ஸ்மேன்கள் 'தடுப்பாட்ட கலை'யை இழந்துவிட்டார்கள் என்பதுதான். அதில் சிறந்து விளங்கியதால் தான் வாஷிங்டனால் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடமுடிந்தது என்று இருவரும் ஒரேபோல் சொல்கிறார்கள். இந்த பிரச்னைக்குப் பின்னால் டி20 போட்டிகளின் தாக்கம் இருப்பதையும் மறுக்க முடியாது என்றும் கூறுகிறார்கள்.

வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்தியாவுக்கு அதிக ரன்கள் எடுத்ததும், அதிக பந்துகள் சந்தித்ததும் வாஷிங்டன் சுந்தர் தான்

இப்போது ஏன் இந்த விஷயம் பெரிதாகிறது?

சுழலுக்கு எதிரான இந்தியாவின் பிரச்னை 2012ல் இருந்தே தொடங்கிவிட்டது என்றால், கடந்த சில ஆண்டுகளாக மட்டும் அது அதிகம் கவனம் பெறுவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை ஒரு காரணமாகச் சொல்கிறார் நானீ.

"முன்பெல்லாம் இந்திய ஸ்பின்னர்கள் இந்தியாவில் நன்கு ஆதிக்கம் செலுத்துவார்கள். அதனால் அது இந்திய பேட்டர்களின் தடுமாற்றத்தை ஓரளவு மறைத்துக்கொண்டிருந்தது. உதாரணமாக இந்தியா 265 ரன்கள் எடுத்தால், எதிரணியை 170 ரன்களுக்கு ஆல் அவுட் செய்துவிடுவார்கள். அஷ்வினும், ஜடேஜாவும் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். ஆனால், இப்போது அதே தாக்கம் இல்லை. அதனால் இப்போது முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக வருவதில்லை. அதனால் பேட்டிங் பிரச்னையும் பூதாகரமாகத் தெரிகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி பந்துவீசவேண்டும் என்பதையே இந்திய பௌலர்கள் மறந்துவருவதாகக் குறிப்பிட்டார் அவர்.

"இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு ஸ்பின்னர்கள் நன்கு தயாராகி வருகிறார்கள். இந்திய சூழ்நிலையை நன்கு உணர்ந்துகொண்டு அதற்கு ஏற்ப பந்துவீசுகிறார்கள். சைமன் ஹார்மர் கவுஹாத்தியில் அதை மிகச் சிறப்பாகச் செய்தார். முதல் இன்னிங்ஸில் சற்று மெதுவாகப் பந்துவீசிய அவர், இரண்டாவது இன்னிங்ஸில் அதைவிட வேகமாகப் பந்துவீசினார். அதற்கேற்ப அவருக்கு விக்கெட்டுகளும் கிடைத்தன" என்றார் நானீ.

முதல் டெஸ்ட்டுக்குப் பின் தன் யூ-டியூப் சேனலில் பேசியிருந்த அஷ்வின் கூட இந்த வேரியேஷன்களை பற்றிப் பேசியிருந்தார். "முதல் போட்டியில் ஜடேஜாவின் வேக அலைவரிசை (speed bandwidth) 90-95 kmph ஆக இருந்தது. ஆனால், ஹார்மரின் அலைவரிசையோ 80 முதல் 94-95 kmph வரை இருந்தது. அவர் அந்த அளவுக்கு தன் வேகத்தில் வேரியேஷன் காட்டினார்" எனக் கூறினார் அஷ்வின்.

இதைத்தான் இந்திய ஸ்பின்னர்கள் தற்போது தவறவிடுவதாக நானீ குறிப்பிட்டார். "அஷ்வினே இப்படி சூழ்நிலைக்கு ஏற்ப பந்துவீசித்தான் விக்கெட்டுகள் எடுத்தார். வெறுமனே திரும்பும் ஆடுகளங்களில் ஆடினால் விக்கெட்டுகள் கிடைக்காது. அஷ்வின் வெளிக்காட்டிய அந்தத் திறனை இப்போது இந்திய ஸ்பின்னர்களிடம் பார்க்க முடியவில்லை" என்றும் அவர் கூறினார்.

குல்தீப் - வாஷிங்டன் - ஜடேஜா - பண்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய ஸ்பின்னர்கள் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட் எடுக்கும் கலையை மறந்துவிட்டனர் என்கிறார் நானீ

வெற்றிப் பாதைக்குத் திரும்ப என்ன செய்ய வேண்டும்?

சுழலுக்கு எதிரான இந்த தடுமாற்றத்திலிருந்து மீண்டு வர, இந்தியா மறுபடியும் சொந்த மண்ணில் வெற்றிப் பாதைக்குத் திரும்ப கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்யலாம் என்று நம் வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வீரர்கள் ரஞ்சி போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது முக்கியம் என்று சொல்கிறார் நானீ. அதேபோல்,"ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்களைக் கண்டறிவதை நான் வரவேற்கிறேன். ஆனால், அதை வீரர்களைக் கண்டறிய மட்டுமே பயன்படுத்த வேண்டும். நேரடியாக அங்கிருந்து அணிக்குள் கொண்டுவந்துவிடாமல், அவர்களை உள்ளூர் போட்டிகளில் நிறைய ஆடவைத்து, அங்கு நன்றாக செயல்படும்பட்சம் தேசிய அணிக்குள் வேகமாகக் கொண்டுவரலாம்" என்று அவர் கூறினார்.

இதற்கு வழிவகுக்கும் விதமாக, அட்டவணையும் அமைய வேண்டும் என்கிறார் வித்யுத். போட்டிகளில் விளையாடும் அளவுக்கு அதற்குத் தயாராவதும் முக்கியம் என்று அவர் கூறினார். சமீபத்தில் தமிழ்நாடு அணி ரஞ்சி போட்டிகளில் தடுமாறுவது பற்றிப் பேசியிருந்த அஷ்வின் கூட இதே கருத்தை முன்வைத்திருந்தார்.

இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சை சிறப்பாகக் கையாளும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். "ஹோம் மேட்சுகளுக்கென்று கூட குறிப்பிட்ட சில வீரர்களை தேர்வு செய்வது நல்லதாக இருக்கும். அவர்களை வெளிநாட்டு ஆடுகளங்களில் ஆடவைக்க வேண்டாம். இந்தியாவில் ஆடும் போட்டிகளில் மட்டும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்" என்று ஒரு யோசனை சொல்கிறார் அவர்.

அதேசமயம், எல்லா வீரர்களுமே ஸ்வீப் போன்ற விஷயங்களை மேம்படுத்த தனியாக உழைக்க வேண்டும் என்கிறார் நானீ. அதற்கு உதாரணமாக 1998ல் சச்சின் செய்த ஒரு விஷயத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.

"1998ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது. அப்போது ஷேன் வார்னே உலக கிரிக்கெட்டில் கோலோச்சத் தொடங்கிய நேரம். ஆனால், சச்சினோ அப்போதே சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். இருந்தாலும், வார்னேவுக்காக அவர் தனியாகப் பயிற்சி எடுத்தார்.

முதல் போட்டி அப்போது சென்னையில் நடக்கவிருந்தது. அதற்கு முன்பாக சென்னை வந்தார் சச்சின். முன்பே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணனை அழைத்து அவர் பயிற்சி செய்ததை நானே பார்த்திருக்கிறேன். லெக் ஸ்டம்புக்கு வெளியே ஒரு 'Rough' உருவாக்கி, பந்தை அங்கு பிட்ச் செய்யச்சொல்லி தினமும் 4 மணி நேரம் வரை இரண்டு மூன்று தினங்கள் அவர் பயிற்சியெடுத்தார். அந்தப் போட்டியில் அவர் 155 ரன்கள் எடுத்தார்" என்று சொன்ன நானீ, அதேபோல், இன்றைய இளம் வீரர்களும் மூத்த வீரர்களை அணுகி தங்களின் பிரச்னைகளுக்கு விடை காணவேண்டும் என்றார்.

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுழற்பந்துவீச்சை நன்கு ஆடும் வீரர்களை இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் மட்டுமாவது பயன்படுத்த வேண்டும் என்கிறார் வித்யுத்

அதுமட்டுமல்லாமல் ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்திய அணி அறிந்திருப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார். "ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆடுகளமும் எப்படியிருக்கும் என்று நமக்கு நன்கு தெரியும். பெர்த் என்றால் வேகமும், பவுன்ஸும் கூடுதலாக இருக்கும். சிட்னியில் பந்து திரும்பும், அடிலெய்டில் பேட்டிங் நன்றாக இருக்கும். இதுபோல், இந்திய ஆடுகளங்களுக்கும் இதுதான் தன்மை என்று நாம் அறிந்திருக்கந் வேண்டும். அப்போதுதான் சொந்த மண்ணில் ஆடும் போட்டிகளிலும் அது கொஞ்சம் சாதகமான அம்சமாக இருக்கும்" என்றும் நானீ கூறினார்.

அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் எப்போது?

இந்தியா அடுத்து சொந்த மண்ணில் 2027ல் தான் டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2027 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறுகிறது. அதற்கு முன் 2026ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் (ஆகஸ்ட் மாதம்), நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும் (அக்டோபர் - நவம்பர்) விளையாடவிருக்கிறது. இந்தப் போட்டிகள் முறையே இலங்கையிலும் நியூசிலாந்திலும் நடக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq602l3306go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றி

Published By: Vishnu

30 Nov, 2025 | 10:49 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) கடைசி வரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகள் மீதம் இருக்க 17 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது.

3011_vriat_kohli_celebrates_32nd_odi_cen

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, சிரேஷ்ட வீரர் விராத் கோஹ்லி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் வெறும் 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.)

இதனைத் தொடர்ந்து முன்னாள் தலைவர்களும் சிரேஷ்ட வீரர்களுமான ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 136 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

ரோஹித் ஷர்மா 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 57 ஓட்டங்களைப் பெற்றார்.

3011_rohit_sharma.png

3011_kl_rahul.png

அதன் பின்னர் ருத்துராஜ் கய்க்வாட் (8), வொஷிங்டன் சுந்தர் (13) ஆகிய இருவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

எனினும், 60 ஓட்டங்களைப் பெற்ற அணித் தலைவர் கே. எல். ராகுலுடன் 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களையும் 32 ஓட்டங்களைப் பெற்ற ரவிந்த்ர ஜடேஜாவுடன் 6ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களையும் விராத் கோஹ்லி பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார்.

விராத் கோஹ்லி 120 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 135 ஓட்டங்களைக் குவித்தார். 

306ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விராத் கோஹ்லி குவித்த 52ஆவது சதம் இதுவாகும்.

பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன். நண்ட்றே பேர்கர், கோபின் பொஷ், ஒட்னெல் பாட்மன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

மிகவும் கடுமையான 350 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.2  ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 332 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

தென் ஆபிரிக்கா அதன் முதல் 3 விக்கெட்களை 11 ஓட்டங்களுக்கு இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது.

எனினும், மத்திய வரிசையில் மூவர் அரைச் சதங்கள் குவித்ததுடன் மேலும் இருவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்று தென் ஆபிரிக்க அணியை ஒரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.

39 ஓட்டங்களைப் பெற்ற டோரி டி ஸோர்ஸியுடன் 4ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களையும் 37 ஓட்டங்களைப் பெற்ற டிவோல்ட் ப்றவிஸுடன் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களையும் 70 ஓட்டங்களைப் பெற்ற மாக்கோ ஜென்சனுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் மெத்யூ ப்றீட்ஸ் பகிர்ந்தார்.

3011_marco_jansen.png

மெத்யூ ப்றீட்ஸ் 72 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து கோபின் புஷ், ப்ரிநெலான் சுப்ராயன் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

சுப்ராயன் 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் கோபின் பொஷ், நெண்ட்றே பேர்கர் (17) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் மேலும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

3011_corbin_bosch.png

போராட்டக் குணத்துடன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கோபின் பொஷ் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் கடைசியாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/232090

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோலியின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறை - சாதனை சதத்தின் 3 முக்கிய கட்டங்கள்

இந்தியா - தென் ஆப்ரிக்கா, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஒருநாள் போட்டி இன்னிங்ஸின் முதல் 25 பந்துகளிலேயே கோலி 2 சிக்ஸர்கள் அடிப்பது இதுவே மூன்றாவது முறை

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து: நாண்ட்ரே பர்கர் வீசிய பந்து 'அவுட் சைட் எட்ஜ்' ஆகி பௌண்டரி எல்லையை அடைந்தது.

நான்காவது ஓவரின் நான்காவது பந்து: பந்து பேட்டரின் காலில் பட, தென்னாப்பிரிக்க அணி எல்பிடபிள்யூ அப்பீல் செய்கிறது. ஆனால், நடுவர் மறுத்துவிடுகிறார்.

நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்து: டிஃபண்ட் செய்ய பேட்டர் முற்பட, 'இன்சைட் எட்ஜ்' ஆகி ஒரு ரன் கிடைக்கிறது.

யஷஷ்வி ஜெய்ஸ்வாலை அந்த ஓவரின் முதல் பந்தில் பர்கர் வெளியேற்ற, அந்த ஓவரின் மிச்ச பந்துகளை சந்தித்தது விராட் கோலி. ராஞ்சியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவருடைய இன்னிங்ஸ் இப்படி சில எட்ஜ்களும், அப்பீலுமாகத்தான் தொடங்கியது.

ஆனால், ஒருசில பந்துகளிலேயே அதையெல்லாம் நிவர்த்தி செய்த விராட் கோலி, 120 பந்துகளில் 135 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 52வது சதம். இதன்மூலம் ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை (டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள்) முறியடித்தார் விராட் கோலி.

ஆனால், கோலியின் இந்த இன்னிங்ஸ் சீராக ஒரே மாதிரியானதாக இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப தன் அணுகுமுறையை அவர் மாற்றவேண்டியிருந்தது. அதனால் அவர் தன் ஆட்டத்தை மூன்று கட்டங்களாக வடிவமைத்தார்.

கட்டம் 1: ஃபீல்டிங் வியூகத்தை தகர்த்த கோலி

முதல் பந்தில் எட்ஜ் மூலம் பௌண்டரி கிடைத்த அவருக்கு, அடுத்த 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அவர் சந்தித்த பத்தாவது பந்தில் ஒரு ஸ்டிரெய்ட் டிரைவ் அடித்து, தான் நல்ல ஃபார்மில் இருப்பதை உணர்த்தினார் கோலி.

அதன்பிறகு அவர் கொஞ்சம் வித்தியாசமான பாணியிலேயே தன் இன்னிங்ஸை அணுகினார்.

முதல் 18 பந்துகளில் 12 ரன்கள் அடித்திருந்த கோலி, அடுத்த 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு பந்துகளை சிக்ஸரும் அடித்தார். வழக்கமாக ஒன்றிரண்டு ரன்களாக அதிகமாக ஓடியும், பவுண்டரி மூலமுமாகவே பெரும்பாலான ரன்களை சேர்க்கும் அவர், ஒருநாள் போட்டிகளில் தான் சந்தித்த முதல் 25 பந்துகளிலேயே இரண்டு முறை சிக்ஸர் அடிப்பது இதுவே மூன்றாவது முறை என்கிறது இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ வலைதள தரவு. அதிலும், முதலில் பேட்டிங் செய்த தருணங்களில் இதுவே முதல் முறை.

தென்னாப்பிரிக்க அணி விராட் கோலியை நெருக்கடிக்குள்ளாக்க ஒரு முயற்சி செய்தது. 30 யார்ட் வட்டத்துக்குள் இருக்கும் முக்கிய ஃபீல்டிங் பொசிஷன்களில், ஃபீல்டர்கள் வழக்கமாக நிற்கும் இடத்திலிருந்து சற்று முன்னே நின்றார்கள். கோலியின் பிரதான ஷாட்கள் மூலம் வரும் ரன்களைக் கட்டுப்படுத்தி அவருக்கு நெருக்கடி ஏற்படுத்த அவர்கள் அந்த முயற்சியை செய்தனர்.

இந்நிலையில் தான் வழக்கமாக தரையோடு ஆடும் விராட், வான் நோக்கி அதிகம் அடிக்கத் தொடங்கினார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூட இதைப் பற்றி X தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "விராட் கோலி இந்த இன்னிங்ஸில் காட்டும் ஆக்ரோஷம் முக்கியமாக ஃபீல்டிங் பொசிஷன்களால் தான். 'உங்கள் ஃபீல்டிங் மூலம் நீங்கள் எதையும் நிர்ணயிக்க முடியாது' என்று அவர் சொல்லும் செய்தி தெளிவாகப் புரிகிறது. அந்த எண்ணம்! அந்த அறிவிப்பு!" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சிக்ஸர் அணுகுமுறையை முதல் பவர்பிளேவுக்குப் பின்னருமே கோலி தொடர்ந்தார். கார்பின் பாஷ் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் அவர்.

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி விராட் கோலி ஒருநாள் போட்டி இன்னிங்ஸில் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடிப்பது இது மூன்றாவது முறை.

2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 360 என்ற இலக்கை சேஸ் செய்த போது கோலி 7 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அன்று, ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவரின் அதிவேக ஒருநாள் சதத்தை (52 பந்துகள்) பதிவு செய்திருந்தார் அவர். பெரிய இலக்கு என்பதால் அந்த அதிரடி தேவைப்பட்டிருந்தது. அதேபோல், 2023ல் இலங்கைக்கு எதிராக அவர் 8 சிக்ஸர்கள் அடித்தார். அப்போதுகூட சதம் அடிக்கும்வரை அவர் 1 சிக்ஸர் தான் அடித்திருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 71 ரன்கள் அடித்திருந்தபோதே 5 சிக்ஸர்கள் அடித்துவிட்டார் கோலி.

தங்கள் ஃபீல்டிங் மூலம் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற தென்னாப்பிரிக்காவின் வியூகம், கோலியின் எதிர்பாராத அதீத அதிரடியால் தகர்ந்து போனது.

கட்டம் 2: ஆடுகளம் மற்றும் விக்கெட் வீழ்ச்சிக்கு எதிராக நிதானம்

ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது 61 பந்துகளில் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார் கோலி. அப்போது அவர் 4 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடித்திருந்தார். ரோஹித்தும் மற்றொரு பக்கம் அதிரடி காட்டியதால் இருவரும் நெருக்கடி இல்லாமல் ஆட முடிந்தது. அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்கள் அடித்திருந்தார் கோலி.

ஆனால், ரோஹித் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் ரன்ரேட் குறைந்தது. சரியாக அந்த சமயத்தில் ஆடுகளத்தின் தன்மை மாறியது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவானது. அடுத்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் வேகமாக ரன் சேர்க்கத் தடுமாறினார்கள். அதனால் அங்கு தென்னாப்பிரிக்காவின் கையும் சற்று ஓங்கியது போல் தோன்றியது. இப்படியான சூழ்நிலையில் விக்கெட் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்ந்த கோலி, நிதானமாக ஆடத் தொடங்கினார்.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆடுகளத்தின் தன்மை மாறிய பிறகு அதிரடியைக் குறைத்து நிதானமாக விளையாடினார் விராட் கோலி

ரோஹித் ஆட்டமிழந்த பிறகு அவர் சந்தித்த முதல் 40 பந்துகளில் அவர் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்தார். சிக்சர் ஏதும் அடிக்கவில்லை.

போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி, "20-25 ஓவர்களுக்கு ஆடுகளம் நன்றாக இருந்தது. ஆனால், அதன்பிறகு மெதுவாகிவிட்டது" என்று குறிப்பிட்டார்.

முதலில் தென்னாப்பிரிக்காவின் ஃபீல்டிங்குக்கு ஏற்ப அதிரடி காட்டியவர், அதன்பின் சூழ்நிலையை உணர்ந்து அப்படியே தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருந்தார்.

இதன்மூலம் விக்கெட் வீழ்ச்சி தவிர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நன்கு ஆடிக்கொண்டிருக்கும் விராட் கோலி ஒருபக்கம் இருந்ததால், மற்றொரு சீனியர் வீரர் கே.எல்.ராகுல் செட்டில் ஆகவும் அது உதவிகரமாக இருந்தது. ஆடுகளம் சற்று மெதுவாகியிருந்தாலும், கோலியின் அணுகுமுறையால் தென்னாப்பிரிக்க அணியால் அதிக விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. இது இறுதி கட்டத்தில் இந்தியா அதிரடி காட்ட உதவிகரமாக இருந்தது.

கட்டம் 3: பெரிய இலக்கை நோக்கிய அதிரடி

இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது பேட்டிங் செய்வது சற்று சாதகம் இருக்கும். அதனால்தான் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. அதனால், பெரும்பாலான வல்லுநர்கள் இந்திய அணி 330 முதல் 340 ரன்கள் வரை எடுக்கவேண்டும் என்று கருதினார்கள்.

38வது ஓவருக்குப் பின்பான கோலியின் அதிரடி இந்தியாவை அந்த இலக்கு நோக்கிப் பயணிக்கவைத்தது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,38வது ஓவருக்குப் பிறகு மீண்டும் அதிரடியைக் கையில் எடுத்தார் கோலி. அதனால் இந்தியாவின் ரன்ரேட் மீண்டும் உயரத் தொடங்கியது

ராகுல் ஓரளவு களத்தில் செட் ஆனபிறகு மீண்டும் வேகமாக ஆடத் தொடங்கினார் கோலி. சுப்ரயன் வீசிய 39வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் (அவர் சந்தித்த 5 பந்துகளில்) எடுத்தார். ஓட்னீல் பார்ட்மேன் வீசிய அடுத்த ஓவரிலுமே இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கோலி. ஒருகட்டத்தில் குறைந்திருந்த ரன்ரேட், இந்த இரண்டு ஓவர்களில் காட்டிய அதிரடியால் மீண்டும் அதிகரித்தது.

38வது ஓவர் முடிவில் 6.13 ஆக இருந்த இந்தியாவின் ரன்ரேட், 43வது ஓவரில் அவர் அவுட் ஆகும்போது 6.44 ஆக அதிகரித்தது.

இதைத் தக்கவைத்த இந்திய அணி கடைசியில் 349 ரன்கள் எடுத்து, போட்டியை 17 ரன்களில் வென்றது.

முறியடிக்கப்பட்ட சாதனையும் விமர்சனங்களுக்கான பதிலும்

இந்த சதம், சர்வதேச அரங்கில் கோலி அடித்திருக்கும் 83வது சதம். ஒருநாள் போட்டிகளில் 52வது சதம். இதன் மூலம் ஒரு ஃபார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. கோலி, 2027 உலகக்கோப்பை வரை ஆடுவார் என்று கருதப்படுவதால், ஒருநாள் போட்டிகளில் அவர் மேலும் சில சதங்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - தென் ஆப்ரிக்கா, விராட் கோலி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார் விராட் கோலி

கோலிக்கு 37 வயது ஆகியிருந்தாலும், அவருடைய ஷாட்களில் இருந்த துல்லியம், அவரது அணுகுமுறையில் இருந்த உறுதி, ஓடுவதில் இருந்த வேகம், நீண்ட இன்னிங்ஸை ஆடிய ஃபிட்னஸ் அனைத்துமே இன்னும் முன்பைப் போல் இருப்பதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன், பெரிய இடைவெளிக்குப் பின்பு கோலி ஆஸ்திரேலியாவில் களமிறங்கிய போது அவருடைய ஃபார்ம் பற்றி நிறைய கேள்விகள் இருந்தன. அங்கு முதல் இரண்டு போட்டிகளிலுமே அவர் டக் அவுட் ஆனதால், விமர்சனங்கள் வலுப்பெற்றன. தொடர்ச்சியாக ஆடாமல் இருப்பதால் அவர் தடுமாறுகிறார் என்று பலரும் கூறினார்கள். ஆனால், சிட்னியில் அரைசதம், இப்போது ராஞ்சியில் சதம் என அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய ஃபார்மை நிரூபித்திருக்கிறார் விராட் கோலி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0mpw72j7x9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை பலமான நிலையில் இட்ட கோஹ்லி, ருத்துராஜ் சதங்கள்

Published By: Vishnu

03 Dec, 2025 | 07:11 PM

image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ராய்பூர் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (03) நடைபெற்றுவரும் இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இந்தியா கணிசமான மொத்த ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை அடைந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது.

ரஞ்சியில் மூன்று தினங்களுக்கு முன்னர் சதம் குவித்த விராத் கோஹ்லி, தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக இன்றைய போட்டியிலும் சதம் குவித்து அசத்தியுள்ளார்.

ரஞ்சியில் 135 ஓட்டங்களைக் குவித்த விராத் கோஹ்லி, ராய்பூரில் 102 ஓட்டங்களைப் பெற்றார். 

கோஹ்லி குவித்த 53ஆவது சர்வதெச ஒருநாள் கிரிக்கெட் சதம் இதுவாகும்.

ரோஹித் ஷர்மா (14), யஷஸ்வி ஜய்ஸ்வால் (22) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க இந்தியா 62 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

0312_ruturaj_gaekwad_maiden_100.png

ருத்துராஜ் கய்க்வோட் 105 ஓட்டங்களைப்  பெற்றார். 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் குவித்த முதலாவது சதம் இதுவாகும்.

வொஷிங்டன் சுந்தர் வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் திரும்பிச் சென்றார். (289 - 5 விக்.)

இதனைத் தொடர்ந்து அணித் தலைவர் கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கையை 258 ஓட்டங்களாக உயர்த்தினர்.

கே.எல். ராகுல் 66 ஓட்டங்களுடனும் ரவிந்ர ஜடேஜா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

359 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது.

https://www.virakesari.lk/article/232366

RESULT

2nd ODI (D/N), Raipur, December 03, 2025, South Africa tour of India

India FlagIndia

358/5

South Africa FlagSouth Africa

(49.2/50 ov, T:359) 362/6

South Africa won by 4 wickets (with 4 balls remaining)

Player Of The Match

Aiden Markram, SA 110 (98)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்கு பரபரப்பான வெற்றி; கோஹ்லி, ருத்துராஜ் ஆகியோரின் சதங்களை மார்க்ராமின் சதம் வீணடித்தது

Published By: Vishnu

04 Dec, 2025 | 04:52 AM

image

(நெவில் அன்தனி)

ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (03) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகள் மீதம் இருக்க தென் ஆபிரிக்கா 4 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

0312_aiden_markram.png

ஏய்டன் மார்க்ராம் குவித்த சதம், மெத்யூ ப்றீட்ஸ், டிவோல்ட் ப்ரவிஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன தென் ஆபிரிக்காவுக்கு அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இதன் காரணமாக விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகியோர் குவித்த சதங்கள் வீண் போயின.

இந்தப் போட்டி முடிவுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 359 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 462  ஓட்டங்களைப் பெற்று மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

மொத்த எண்ணிக்கை 26 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும், ஏய்டன் மார்க்ராம் அற்புதமான சதம் ஒன்றைக் குவித்ததுடன் அடுத்த இரண்டு விக்கெட்களில் பெறுமதிவாய்ந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி தென் ஆபிரிக்க அணியை சிறந்த நிலையில் இட்டார்.

0312_mathew_bteetzke.png

இரண்டாவது விக்கெட்டில் அணித் தலைவர் டெம்பா பவுமாவுடன் 101 ஓட்டங்களைப் பகிர்ந்த ஏய்டன் மார்க்ராம், 3ஆவது விக்கெட்டில் மெத்யூ ப்றீட்ஸுடன் 70 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஏய்டன் மார்க்ராம் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களைக் குவித்தார்.

டெம்பா பவுமா 46 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து மெத்யூஸ் ப்றீட்ஸ், டிவோல்ட் ப்ரவிஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர்.

0312_dewald_brevis.png

மெத்யூஸ்  ப்றீட்ஸ் 68 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்ரவிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

மொத்த எண்ணிக்கை 332 ஓட்டங்களாக இருந்தபோது டோரி டி ஸோர்ஸி 17 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற நேரிட்டது.

எனினும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட ஓட்டங்களை கோர்பின் பொஷ் (29 ஆ.இ.), கேஷவ் மஹாராஜ் (10 ஆ.இ.) ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ராசித் கிரிஷ்ணா 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைக் குவித்தது.

ரஞ்சியில் மூன்று தினங்களுக்கு முன்னர் சதம் குவித்த விராத் கோஹ்லி, தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக இன்றைய போட்டியிலும் சதம் குவித்து அசத்தினார்.

ரோஹித் ஷர்மா (14), யஷஸ்வி ஜய்ஸ்வால் (22) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.(62 - 2 விக்.)

அந்த சந்தர்ப்பத்தில் ஜோடி சேர்ந்த விராத் கோஹ்லி, ருத்துராஜ் கய்க்வோட் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

0312_virat_kohli_celebrate_yet_another_c

ரஞ்சியில் 135 ஓட்டங்களைக் குவித்த விராத் கோஹ்லி, ராய்பூரில் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

கோஹ்லி குவித்த 53ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதம் இதுவாகும்.

ருத்துராஜ் கய்க்வோட் 105 ஓட்டங்களைப்  பெற்றார்.

0312_ruturaj_gaekwad_maiden_100.png

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ருத்துராஜ் பெற்ற முதலாவது சதம் இதுவாகும்.

வொஷிங்டன் சுந்தர் வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் திரும்பிச் சென்றார். (289 - 5 விக்.)

இதனைத் தொடர்ந்து அணித் தலைவர் கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் மொத்த எண்ணிக்கையை 258 ஓட்டங்களாக உயர்த்தினர்.

கே.எல். ராகுல் 66 ஓட்டங்களுடனும் ரவிந்ர ஜடேஜா 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன் 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: எய்டன் மார்க்ராம்

https://www.virakesari.lk/article/232375

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடரை வென்ற இந்தியா - குல்தீப், ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் போக்கை மாற்றியது எப்படி?

தென்னாப்பிரிக்கா, இந்தியா, விராட் கோலி, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும்.

6 டிசம்பர் 2025

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது.

முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39.5 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். இதன் மூலம், மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 75 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். விராட் கோலி தொடரின் நாயகன் விருதை வென்றார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்ததால், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.

ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அதே நேரத்தில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி

தென்னாப்பிரிக்கா, இந்தியா, விராட் கோலி, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,டி காக் 106 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது.

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரயன் ரிக்கில்டன் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ஆனால், தென் ஆப்பிரிக்காவிற்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து, ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ரிக்கில்டன். அடுத்ததாக கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினார்.

இந்த ஜோடி பத்து ஓவர்கள் வரை பொறுமையாகவே ஆடி வந்தது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் 21 ரன்களும், டெம்பா பவுமா 19 ரன்களும் எடுத்திருந்தனர்.

அதன் பிறகு, டி காக் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுபுறம் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த டெம்பா பவுமா 48 ரன்களில், ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதற்கு முந்தைய ஒருநாள் போட்டியில் பவுமா 46 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல, இந்தத் தொடரில் ஜடேஜா வீழ்த்திய முதல் விக்கெட்டும் இதுதான்.

இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த டி காக்- டெம்பா பவுமா பார்ட்னர்ஷிப் உடைந்தது இந்தியாவுக்கு உற்சாகத்தை அளித்தது. அதன் பின்னர் மேத்யூ ப்ரீட்ஸ்கே களமிறங்கினார்.

டி காக் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது (93 ரன்கள்), 28வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் மேத்யூ ப்ரீட்ஸ்கே. அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் அதே ஓவரில், கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டி காக் சதம்

ஹர்ஷித் ராணா வீசிய 29வது ஓவரில், ஒரு சிக்ஸர் மூலமாக சதத்தை எட்டினார் டி காக். பின்னர் அவர் 32வது ஓவரில் பிரசித் பந்தில் ஆட்டமிழந்தார். 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன், 89 பந்துகளில் 106 ரன்களை எடுத்திருந்தார் டி காக். அப்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருந்தது.

அதன்பிறகு, டெவால்ட் பிரெவிஸ் மற்றும் மார்கோ ஜான்சன் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் 38வது ஓவரில், குல்தீப் இருவரையும் ஒரே ஓவரில் அவுட்டாக்கி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 234/5 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா, 270 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப் 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பிரசித் கிருஷ்ணாவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தியா வெற்றிபெறுவதற்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா கூட்டணியின் அதிரடி

தென்னாப்பிரிக்கா, இந்தியா, விராட் கோலி, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,ரோஹித் சர்மா 54 பந்துகளில் 50 ரன்களை எட்டினார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி இந்திய அணிக்கு ஒரு உறுதியான தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து 155 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 271 ரன்கள் என்ற இலக்கை எளிதான ஒன்றாக மாற்றினர்.

ரோஹித் சர்மா 54 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அரை சதமடித்தார்.

இருப்பினும், 26வது ஓவரின் கடைசி பந்தில், 75 ரன்கள் எடுத்திருந்தபோது, கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. அவர் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன், 73 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பிறகு, ஜெய்ஸ்வாலுடன் இணைந்த விராட் கோலி, அதிரடியாக அணியின் ரன்களை உயர்த்தினார்.

ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 100 ரன்களை எட்டினார். மறுமுனையில், கோலியும் அரை சதத்தைக் கடந்தார்.

இறுதியில், 39.5 ஓவர்களில் 271 ரன்களை எடுத்த இந்திய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில், இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதேசமயம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

அடுத்ததாக, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். முதல் போட்டி கட்டாக்கில் நடைபெறும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cre3vd3pyzdo

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொடரில் எனது அபிமான வீரர்களான டி காக் மற்றும் யெஸ்வால் சதம் அடித்தது கண்னுக்கு குளிர்சியாக இருந்தது.பவுமா இரன்டு இனிங்சிசும் முறையே 4-2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அரைச் சதத்தை தவற விட்டது அதிர்ஸ்ட்டம் இன்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவை துவம்சம் செய்து ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா; டி கோர்க்கின் சதத்தை விஞ்சியது ஜய்ஸ்வால் சதம்

06 Dec, 2025 | 11:15 PM

image

(நெவில் அன்தனி)

விசாகப்பட்டினம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (06) நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவை துவம்சம் செய்து 9 விக்கெட்களால் வெற்றியட்டிய இந்தியா, தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

jays.png

யஷஸ்வி ஜய்ஸ்வால் குவித்த கன்னி சதம், ரொஹித் ஷர்மா. விராத் கோஹ்லி ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் என்பன இந்தியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 271 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

vi.png

யஷஸ்வி ஜய்ஸ்வால், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களை சிதறடித்து 25.5 ஓவர்களில் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ரோஹித் ஷர்மா 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய யஷஸ்வி ஜய்ஸ்வால் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 116 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய விராத் கோஹ்லி 45 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்லாக 65 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன.

மெத்யூ ப்றீட்ஸ் (24), ஏய்டன் மார்க்ராம் (01) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

குவின்டன் டி கொக் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் டிவோல்ட் ப்ரவிஸ் 29 ஓட்டங்களையும் கேஷவ் மஹாராஜ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவிச்சில் குல்தீப் யாதவ் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கiயும் ப்ராசித் கிரிஷ்ணா 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: யஷஸ்வி ஜய்ஸ்வால்

https://www.virakesari.lk/article/232633

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் டி20: தென் ஆப்ரிக்காவை வீழ்த்த இந்தியாவுக்கு உதவிய ஹர்திக், பும்ராவின் 'சதங்கள்'

இந்தியா - தென் ஆப்ரிக்கா, முதல் டி20 போட்டி, ஹர்திக் பாண்டியா, பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

  • மனோஜ் சதுர்வேதி

  • விளையாட்டு செய்தியாளர்

  • 10 டிசம்பர் 2025, 04:18 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா சிக்கலில் இருந்தபோது, ஹர்திக் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து இந்தியா கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார். பின்னர் தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

இந்திய தரப்பில் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தினர்.

ஹர்திக்கின் ஆல்ரவுண்டர் செயல்பாடு

இந்தியா - தென் ஆப்ரிக்கா, முதல் டி20 போட்டி, ஹர்திக் பாண்டியா, பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

ஹர்திக்கின் அரைசதம் குறித்து பேசிய வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, "ஹர்திக்கிற்கு மாற்றாக ஒருவரை நாங்கள் தொடர்ந்து தேடுகிறோம், ஆனால் உண்மை என்னவென்றால், அவரைப் போன்ற யாரும் இல்லை. இந்திய இன்னிங்ஸை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் அவர் இதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் களமிறங்கியபோது, இந்தியா 11.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது." என்றார்.

போட்டி நடந்த கட்டாக் மைதானத்தில் உள்ள ஆடுகளத்தில் ரன் சேர்க்க அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறினர். ஆனால் ஹர்திக் மட்டுமே முழு ஃபார்மில் விளையாடினார். அவர் 210-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 59 ரன் எடுத்தார், ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அவர் அடித்திருந்தார்.

ஹர்திக்கின் ஆக்ரோஷமான பேட்டிங்கால் 150 ரன்களை எட்டுவது கடினமாகத் தோன்றிய ஒரு இன்னிங்ஸ், 175 ரன்களை எட்டியது. பந்துவீச்சில் டேவிட் மில்லரின் விக்கெட்டையும் ஹர்திக் வீழ்த்தினார். இந்த வடிவத்தில் 12 இன்னிங்ஸ்களில் மில்லரை அவர் ஆறு முறை அவுட் செய்துள்ளார்.

இந்த போட்டியில், ஹர்திக் 100 சிக்ஸர்களை அடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் ஆனார். அந்த வரிசையில் 205 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

போட்டி முடிந்த பிறகு, பேசிய வர்ணனையாளர் இர்ஃபான் பதான், "உள்நாட்டு தொடர்களில் விளையாடிய பிறகு ஹர்திக் முழுமையாக தயாராகிவிட்டார். கிரீஸுக்குப் பின்னால் இருந்து விளையாடும் திறன் அவரது ஆட்டத்தின் மிகப்பெரிய பலமாகும். இது பந்தை எதிர்கொள்ள அவருக்கு கூடுதல் அவகாசம் தருகிறது. அவரது ஷாட்கள் அதிக சக்தியைக் கொண்டுள்ளன." என்று அவர் கூறினார்.

"இந்தியா உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், ஹர்திக் முழு உடற்தகுதியுடன் இருப்பதும், சிறப்பாக விளையாடுவதும் முக்கியம்" என்றார்.

'அவசரத்தில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர்கள்'

இந்தியா - தென் ஆப்ரிக்கா, முதல் டி20 போட்டி, ஹர்திக் பாண்டியா, பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது குறித்து வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "அவர்களின் ஆட்ட பாணியைப் பார்க்கும்போது, அவர்கள் ஏதோ அவசரத்தில் இருப்பது போல் தெரிந்தது. உள்ளே வரும் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் மட்டையை சுழற்றுவதை காணலாம். எந்த பேட்ஸ்மேனும் ஆடுகளத்தில் நிலைத்து ஆட முயற்சிக்கவில்லை. அவர்களின் ஆட்ட பாணி, வெற்றி இலக்கு 250-ஆக இருப்பது போல் தோன்றியது. இலக்கு 176 ரன்கள் மட்டுமே இருந்தபோதும், எந்த பேட்ஸ்மேனும் விக்கெட்டின் தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை." என்றார்.

தென் ஆப்ரிக்கா தரப்பில் டெவால்ட் பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்க்ரம் மற்றும் ஜான்சன் ஆகிய வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எட்டினர். அதிகபட்சமாக பிரெவிஸ் 22 ரன் எடுத்தார்.

பும்ரா 'சதம்'

இந்தியா - தென் ஆப்ரிக்கா, முதல் டி20 போட்டி, ஹர்திக் பாண்டியா, பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா 100-வது விக்கெட்டை வீழ்த்தினார். அவரது நூறாவது விக்கெட்டாக டெவால்ட் பிரெவிஸின் விக்கெட் அமைந்தது. அர்ஷ்தீப் சிங்கிற்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் இவர் ஆவார். பின்னர் கேஷவ் மகாராஜின் விக்கெட்டை வீழ்த்தி தனது எண்ணிக்கையை 101ஆக அவர் உயர்த்தினார்.

அனைத்து வடிவங்களிலும் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் ஐந்தாவது பந்து வீச்சாளர் ஆனார். முன்னதாக, டிம் சவுதி, ஷாகிப் அல் ஹசன், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

வர்ணனையின் போது இர்ஃபான் பதான், "பும்ராவும் அர்ஷ்தீப்பும் இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடுவது அரிதாகவே இருக்கிறது. இந்தியா இந்த ஜோடியை களமிறக்க வேண்டும். இந்த ஜோடிக்கு பவர்பிளேயில் அழுத்தம் கொடுக்கவும், டெத் ஓவர்களில் ஸ்கோரை கட்டுப்படுத்தவும் தெரியும்" என்று கூறினார்.

அர்ஷ்தீப் தொடக்கத்தில் அதிர்ச்சி தரக்கூடியவர்

இந்தியா - தென் ஆப்ரிக்கா, முதல் டி20 போட்டி, ஹர்திக் பாண்டியா, பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டி20 பந்து வீச்சாளர் ஆவார். அவர் தொடக்கத்தில் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அதிர்ச்சி தரக் கூடியவர். இந்த போட்டியில், அர்ஷ்தீப் வீசிய ஓவரில், குயின்டன் டி காக் தனது இரண்டாவது பந்தில் கேட்ச் கொடுத்தார். அர்ஷ்தீப், தனது இரண்டாவது ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இது போட்டியில் இந்தியாவின் கை ஓங்க உதவியது.

இர்பான் பதான் தனது வர்ணனையின் போது, "அர்ஷ்தீப் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். பந்தை இரு திசைகளிலும் ஸ்விங் செய்யும் திறன் அவருக்கு உள்ளது. இந்தத் திறனால், பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறன் அவருக்கு உள்ளது" என்று கூறினார்.

தனது முதல் இரண்டு ஓவர்களில் 14 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை இந்தியாவுக்கு சாதகமாக திருப்பினார் அர்ஷ்தீப் சிங். ஐந்தாவது ஓவரில் அர்ஷ்தீப்பிற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கொண்டு வரப்பட்ட போது, அர்ஷ்தீப்பை இன்னும் ஒரு ஓவர் வீசச் செய்யலாம் என்று வர்ணனையாளர்கள் கூறினர்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜிதேஷ்

இந்தியா - தென் ஆப்ரிக்கா, முதல் டி20 போட்டி, ஹர்திக் பாண்டியா, பும்ரா

பட மூலாதாரம்,Getty Images

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவுக்கு விளையாடும் வாய்ப்புகள் அரிதாகவே கிடைக்கிறது. அவர் விளையாடும் வாய்ப்புகளைப் பெற்றாலும், அவர் ஐந்து அல்லது ஆறு பந்துகளுக்கு மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அவர் பந்தை அடித்தாட முற்பட்டால் தனது விக்கெட்டை இழக்கும் அபாயம் உள்ளது. ஜிதேஷ் எடுத்த மூன்று அற்புதமான கேட்சுகள், பிளேயிங் லெவனில் அவரது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "ஒரு விக்கெட் கீப்பர் மிகவும் மோசமாக விளையாடுவது அல்லது மிகச் சிறப்பாக செயல்படுவது ஆகிய இரண்டு சூழ்நிலைகளில் மட்டுமே கவனம் பெறுகிறார். அவரது வழக்கமான செயல்திறன் ஒருபோதும் விவாதிக்கப்படுவதில்லை. ஆனால் ஜிதேஷ் கேட்சுகளை எடுத்த விதத்தைப் பார்க்கையில், அவர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படலாம்." என்றார்.

இர்ஃபான் பதான் பேசுகையில் "அடுத்த உலகக் கோப்பைக்கு அணி நிர்வாகம் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். ஜிதேஷ் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் யாருக்கு அணியில் இடம் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும்." என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg9126p44xo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குவின்டன் துடுப்பாட்டத்திலும் பார்ட்மன் பந்துவீச்சிலும் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது தென் ஆபிரிக்கா

12 Dec, 2025 | 12:42 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 51 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை தென் ஆபிரிக்கா 1 - 1 என சமப்படுத்தியுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 101 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

1112_quinton_de_kock_...png

இரண்டாவது போட்டியில் குவின்டன் டி கொக் அதிரடியாக குவித்த அரைச் சதம், ஒட்நீல் பார்ட்மன் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா குவின்டன் டி கொக்கின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது.

குவின்டன் டி கொக் 46 பந்துகளில் 5 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 90 ஓட்டங்களைப் பெற்றார்.

அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராமுடன் 2ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களை குவின்டன் டி கொக் பகிர்ந்தார்.

இதேவேளை, டொனவன் பெரெய்ரா, டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

டொனவன் பெரெய்ரா 30 ஓட்டங்களுடனும் டேவிட் மில்லர் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஏய்டன் மார்க்ராம் 29 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 214 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து  162 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்தியாவின் எதிர்கால ரி20 நட்சத்திரங்கள் என வருணிக்கப்படும் ஷுப்மன் கில் (0), அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் (5) ஆகிய இருவரும் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

துடுப்பாட்ட வரிசையில் 3ஆம் இலக்கத்துக்கு உயர்த்தப்பட்ட அக்சார் பட்டெல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

1112_tilak_varma__1_.png

மத்திய வரிசையில் திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

திலக் வர்மா 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையம் ஹார்திக் பாண்டியா 20 ஓட்டங்களையும் ஜிட்டேஷ் ஷர்மா 27 ஓட்டங்களையும் கைப்பற்றினர்.

1112_otneil_baartman.png

பந்துவீச்சில் ஒட்நீல் பார்ட்மன் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லுங்கி நிகிடி, மார்க்கோ ஜென்சன், லூத்தோ சிப்பல்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: குவின்டன் டி கொக்.

https://www.virakesari.lk/article/233172

  • கருத்துக்கள உறவுகள்

டி கொக் ரன் அவுட்டானது துரதிரதிஸ்ட்டம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.