Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடியான ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பிய 3 இந்திய வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஷார்துல் தாக்கூர், ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரின் செயல்பாடுகள் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தன (கோப்புப் படங்கள்)

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

2013 முதல் 2025 வரை தொடர்ந்து 13 ஐபிஎல் சீசன்களாக தங்களின் முதல் போட்டியைத் தோற்றிருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அந்த சோக சாதனைக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

வான்கெடேவில் நடந்த இந்தப் போட்டியில் நைட் ரைடர்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹர்திக் பாண்டியாவின் அணி.

முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அஜிங்க்யா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் அரைசதம் அடித்தனர். மும்பைக்காக ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த இலக்கை 19.1 ஓவர்களில் சேஸ் செய்தது மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் மிகப் பெரிய சேஸ் இதுதான்.

இந்தப் போட்டியில் அந்த அணியை வெற்றி பெறவைத்த 3 வீரர்கள் யார்?

ஷார்துல் தாக்கூர்: கேகேஆர் பிடியைத் தளர்த்தினார்

நைட் ரைடர்ஸ் இன்னிங்ஸின் ஆறாவது ஓவரின்போது தான் முதல் முறையாகப் பந்துவீச வந்தார் ஷார்துல் தாக்கூர். மும்பைக்காரரான அவர் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அதுவும் முதல் போட்டியே சொந்த மண்ணில். இதுவே அவருக்கு நெருக்கடியான தருணமாக இருந்திருக்கும்.

சொல்லப்போனால், அப்போது ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணியும் நெருக்கடியில் இருந்தது. ஏனெனில், முதல் 5 ஓவர்களின் முடிவில் 68/0 என்ற நிலையில் இருந்தது கேகேஆர். அந்த அணியின் முன்னணி பௌலர்களான ஜஸ்ப்ரித் பும்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோராலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல் ஒரு டி20 போட்டியின் ஆறாவது ஓவரை வீசுவது எப்போதுமே சற்று சிக்கலானது. ஏனெனில், பவர்பிளேவின் கடைசி ஓவர் என்பதால் பேட்டிங் செய்யும் அணிகள் அதை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ள நினைப்பார்கள்.

இப்படி ஷார்துல் பந்துவீச வந்த தருணத்தில் பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. ஆனால், தான் வீசிய இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார் ஷார்துல்.

புற்கள் அதிகம் இருந்த வான்கெடே மைதானத்தில் போட்டியின் தொடக்கத்தில் 'ஸ்விங் & சீம் மூவ்மென்ட்' இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி பெரிய அளவில் இல்லாததால், பேட்டர்கள் எளிதாக ரன் சேர்த்தனர். இந்நிலையில், மும்பை பௌலர்கள் 'ஸ்லோ பால்கள்' வீசத் தொடங்கினார்கள்.

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த சீசன் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஷார்துல் தாக்கூர் டிரேட் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் (கோப்புப் படம்)

ஷார்துல் தன்னுடைய முதல் பந்தை வீசியபிறகு, வர்ணனையில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், "மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் ஸ்லோயர் பால்கள் வீசுவதுதான் சரியாக இருக்குமென்று முடிவு செய்திருக்கிறார்கள். முந்தைய ஓவரில் (ஆட்டத்தின் 5வது ஓவர்) பும்ரா சுமார் 4 ஸ்லோயர் பால்கள் வீசினார். இப்போது ஷார்துலும் அதையே செய்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஷார்துல் அதையே அடுத்த பந்திலும் செய்து ஆலன் விக்கெட்டைக் கைப்பற்றி கொல்கத்தாவின் அதிரடிக்கு முதல் வேகத்தடையைப் போட்டார்.

ஸ்லோ பால்களை அதிகளவு பயன்படுத்திய ஷார்துல் அதிலும் பல வேரியேஷன்கள் செய்தார். பெரும்பாலும் ஃபுல் லென்த்தில் ஸ்டம்ப் லைனில் வீசிய அவர், அவ்வப்போது ஷார்ட் லென்த்திலும் வீசினார். லைன்களையும் மாற்றினார். ஷார்துலின் இரண்டாவது ஓவரில் அப்படி வீசப்பட்ட ஒரு பந்து தான் கேமரூன் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றியது.

9வது ஓவரில் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றிய ஷார்துல், அதன்பிறகு 14வது ஓவர் மீண்டும் பந்துவீச வந்தார். இம்முறை ஃபுல் லென்த்தில் 'கிராஸ் சீம்' பந்தை வீசினார். சற்று திரும்பிய பந்தை அடிக்க முயற்சித்த ரஹானே அதை சரியாக அடிக்காததால் கேட்சாகி ஆட்டமிழந்தார்.

ஆலன், கிரீன், ரஹானே என்று மூன்று பெரிய விக்கெட்டுகளை முக்கியமான தருணங்களில் வீழ்த்தி ஆட்டத்தில் நைட் ரைடர்ஸின் பிடியைத் தளர்த்தினார் ஷார்துல். இல்லாவிட்டால் கேகேஆர் இன்னும் பெரிய ஸ்கோரைப் பதிவு செய்திருக்கும். அது மும்பைக்கு ஆபத்தாக அமைந்திருக்கும்.

இப்படி அவர் ஏற்படுத்திய தாக்கத்தால் தான் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

ஜஸ்ப்ரித் பும்ரா: வழக்கம்போல் நெருக்கடியை ஏற்படுத்தினார்

ரன்மழை பொழியும் பெரும்பாலான டி20 போட்டிகளில் தன் சிக்கனமான ஸ்பெல்களால் மாற்றத்தை ஏற்படுத்துவது ஜஸ்ப்ரித் பும்ராவின் வழக்கம். உதாரணம், இதே வான்கெடே மைதானத்தில் மார்ச் 5ம் தேதி நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி.

40 ஓவர்களில் 499 ரன்கள் அடிக்கப்பட்ட அந்தப் போட்டியில் 8.25 என்ற எகானமியில் பந்துவீசினார் பும்ரா. அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கிய சஞ்சு சாம்சன், "பும்ரா இல்லாவிட்டால் நான் இந்த இடத்தில் நின்று இவ்விருதை வாங்கியிருக்கமாட்டேன்" என்று கூறினார்.

காரணம், அவர் வீசிய சிக்கனமான ஓவர்கள். 16வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர், 18வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அது இங்கிலாந்துக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தது.

அப்படியொரு செயல்பாட்டைத் தான் நைட் ரைடர்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியிலும் பும்ரா கொடுத்தார்.

11 ஓவர்கள் முடிவில் 131/2 என்ற நிலையில் இருந்தது கேகேஆர். அப்போது தன்னுடைய இரண்டாவது ஓவரைப் பந்துவீச வந்த பும்ரா அந்த 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். முதலிரு பந்துகளையும் ஸ்லோயர் பால்களாக வீசிய அவர், அதன்பிறகு வேகத்தை அதிகப்படுத்தினார். ஆனால், முதல் பந்தைத் தவிர்த்து அனைத்து பந்துகளையுமே யார்க்கர்களாக வீச முயற்சி செய்தார். அதை சிறப்பாகவும் அரங்கேற்றினார்.

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தப் போட்டியில் 9க்கும் குறைவான எகானமியில் பந்துவீசிய ஒரே பௌலர் பும்ரா தான் (கோப்புப் படம்)

கேகேஆர் அணியின் ரன் விகிதம் அப்போதுதான் குறையத் தொடங்கியது. அடுத்த ஓவரில் போல்ட்டும் 8 ரன்கள் மட்டுமே கொடுக்க, கேகேஆர் பேட்டர்களுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தியது. இதுதான் ரஹானே ஆட்டமிழக்க காரணமாக அமைந்தது.

இதன் பிறகு 18வது ஓவர் பந்துவீச வந்தார் பும்ரா. ரகுவன்ஷி - ரிங்கு சிங் இணை அதற்கு முந்தைய 3 ஓவர்களில் மட்டும் 41 ரன்கள் எடுத்திருந்தனர். அப்படி அவர்கள் இருவரும் நன்றாக ஆடிக் கொண்டிருந்த போது அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அவர். முதல் பந்தில் பவுண்டரி கொடுத்திருந்தாலும், அடுத்த 5 பந்தையும் சவால் தரும் வகையில் வீசினார். பின்னர் 20வது ஓவரிலும் அவர் 11 ரன்கள் மட்டும் கொடுக்க, ஒருவழியாக கேகேஆர் இன்னிங்ஸ் 220 ரன்களுக்குள் முடிவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பும்ரா. இந்தப் போட்டியில் 9க்கும் குறைவான எகானமியில் பந்துவீசிய ஒரே பௌலர் இவர் மட்டுமே.

ரோஹித் ஷர்மா: பவர்பிளேவிலேயே ஆட்டத்தை மாற்றினார்

221 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது ரோஹித் ஷர்மா - ரியான் ரிக்கில்டன் கூட்டணி. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸை பின்தங்கவைத்தார்கள். இதில் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.

இதில் ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அவர், கடினமான பௌலர்களுள் ஒருவராகக் கருதப்படும் வருண் சக்கர்வர்த்தியைக் கூட அநாயசமாகக் கையாண்டார். பவர்பிளே முடியும்போதே அரைசதம் கடந்திருந்தார் அவர்.

வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என அனைவரையும் பதம் பார்த்த ரோஹித், புல், டிரைவ், ஸ்கூப் என பலவகையான ஷாட்களையும் ஆடினார். அவருடைய முதல் பவுண்டரி ஒரு எட்ஜ் மூலம் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு ஒவ்வொரு ஷாட்டும் மிகத் துல்லியமாக, அவரது பேட்டின் நடுப்பகுதியில் பட்டே பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் மாறியது.

இந்த இன்னிங்ஸ் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான், "ரோஹித் சர்மா தனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் தன்னைத்தானே மறுவரையறை செய்துகொள்வது மற்ற வீரர்களுக்கு உண்மையிலேயே ஒரு உத்வேகம் அளிக்கும் விஷயமாகும். தனது உடல் தகுதிக்காக கடினமாக உழைத்து, 38 வயதில் தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்திருப்பது, அவரது மனதில் என்ன ஓடுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இது ஒரு மிகச்சிறந்த செயல்பாடு." என்று கூறியிருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கேகேஆர் அணிக்கெதிரான இந்தப் போட்டியில் 38 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார் ரோஹித் ஷர்மா (கோப்புப் படம்)

வர்ணனையில் இருந்த கெவின் பீட்டர்சனும் இதே கருத்தை முன்வைத்து, நீண்ட காலம் ஆடுவது எப்படி என்பதற்கு ரோஹித் பாடம் எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

இன்னிங்ஸ் தொடக்கத்தில் 11ஆக இருந்த மும்பையின் தேவைப்படும் ரன்ரேட், ரோஹித் அவுட் ஆகும்போது 9க்கு குறைவாக ஆனது. அந்த அளவுக்கு அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றிருந்தார் ரோஹித்.

ரிக்கில்டன் கூட இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்தார். ஆனால், பவர்பிளேவிலேயே அரைசதம் அடித்து அதிரடி தொடக்கம் கிடைக்கக் காரணமாக அமைந்தது, வருண் சக்கர்வர்த்தி போன்ற கேகேஆர் அணியின் முன்னணி பௌலருக்கு எதிராக பெரிய ஷாட்கள் அடித்து அந்த அணியை அப்போதே கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது போன்றவை ஏற்படுத்திய தாக்கம் மிகவும் பெரியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjd8xlnknjdo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'பேட்டிங் வரிசை பிரமிப்பு தந்தாலும் கவலை தரும் ஒரு பலவீனம்' - சிஎஸ்கே ஒரு பார்வை

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கிறது? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • வித்யுத் சிவராமகிருஷ்ணன்

  • சிஎஸ்கே முன்னாள் வீரர்

  • 30 மார்ச் 2026, 07:45 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்த ஆண்டுக்கான டிரேட், ஏலம் எல்லாமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக அமைந்தது என்று நினைக்கிறேன். இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையைத் தனி ஆளாக வென்று கொடுத்த சஞ்சு சாம்சன் அணியில் இணைந்திருப்பது பெரும் பலம். சாம்சன், ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ் என சூப்பர் கிங்ஸின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது. பந்துவீச்சும் ஓரளவு நன்றாகவே இருக்கிறது.

2025 சீசனுக்கான ஏலத்தில் எமோஷனலாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒரே மாதிரியான பல வீரர்களை அவர்கள் வாங்கியிருந்தார்கள். தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் என அவர்கள் அனைவருமே ஒரேபோல் ஆடுபவர்கள். அங்கு வெரைட்டியே இல்லாமல் இருந்தது.

அதன்பிறகு வந்த மாத்ரே, உர்வில் பட்டேல், பிரெவிஸ் போன்ற மாற்றுவீரர்களாக சிறப்பாக அணியில் இணைத்தனர். அதுபோக இம்முறை இரு இளம் நட்சத்திரங்கள் கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர் ஆகியோரை வாங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கடந்த சீசன் இருந்த அணியை விட இந்த சீசன் அணி பலமானதாக இருக்கிறது.

ரவீந்திர ஜடேஜா இல்லாதது நிச்சயம் பெரிய பின்னடைவு தான். ஆனால், அகீல் ஹொசைன் அந்த இடத்துக்கு சிறந்த மாற்றாக இருப்பார். அவரால் பவர்பிளேவில் சிறப்பாகப் பந்துவீச முடியும். கடினமான ஓவர்களை அவரால் சிறப்பாக வீசமுடியும். திறமையான வீரர் அவர். அதனால் அவரை குறைத்து மதிப்பிட்டுவிடவே கூடாது.

ஒட்டுமொத்தமாக கடந்த சீசனை விட இந்த முறை நல்லதொரு அணியை சிஎஸ்கே கட்டமைத்திருக்கிறது.

பலமான பேட்டிங்

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கிறது? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார் (கோப்புப் படம்)

சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய பலம் அவர்களின் பேட்டிங் தான். சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய இரு பேட்டர்கள் இருக்கிறார்கள். ஐபிஎல் தொடங்கும்போது இருவருமே சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். சாம்சன் வந்திருப்பது சீரான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைய வழிவகுக்கும்.

துபேவின் சமீபத்திய ஃபார்ம் சிறப்பாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த டி20 உலகக் கோப்பையில் ஃபினிஷராகவும் அவர் நன்கு விளையாடினார். வேகப்பந்துவீச்சுக்கு எதிராகவும் தன்னால் அடித்து ஆட முடியும் என்று காட்டினார். அதனால் அவர் சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்குவார்.

அடுத்ததாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சீரான செயல்பாட்டைக் கொடுப்பார். தற்போது ஓப்பனராக விளையாட போவதாக அவர் அறிவித்திருக்கிறார். சூப்பர் கிங்ஸ் தங்களுடைய அனுபவ ஓப்பனர்கள் அணுகுமுறையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. நிலையான ஒரு வீரர் ஆடுவது மறுபக்கம் சாம்சனுக்கும் நெருக்கடியைக் குறைக்கும்.

டெவால் பிரெவிஸ் மிடில் ஓவர்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர். சுழல், வேகம் இரண்டுக்கு எதிராகவும் அதிரடி காட்டக்கூடியவர். சாம்சன், கெய்க்வாட், மாத்ரே, பிரெவிஸ், துபே என இந்த டாப் 5-ஐ பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது.

சிலபல ஆண்டுகளாக சூப்பர் கிங்ஸ் அணி 180+ ஸ்கோர்களை சேஸ் செய்ய தடுமாறியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒரு போட்டியில் 180 ரன்களை சேஸ் செய்தது. முழுமையான அதிரடி அணுகுமுறைக்கு ஏற்ற அணியாக சூப்பர் கிங்ஸ் இருக்கவில்லை. ஆனால், இம்முறை இந்த பேட்டிங் படை அதையெல்லாம் மாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் கிடைக்காத பெரும் நம்பிக்கையை அது கொடுக்கிறது.

முதல் போட்டியில் பிரெவிஸ் ஆடமாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

பலவீனமான பந்துவீச்சு

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கிறது? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம்,Getty Images

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல ஏரியாக்கள் சரியாக சிறப்பாகவே இருக்கின்றன. பலவீனம் என்று குறிப்பிட வேண்டுமெனில் அவர்களின் டெத் ஓவர் பந்துவீச்சை குறிப்பிடலாம். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லும்படியான பௌலர் இந்த அணியில் இல்லை.

கலீல் அஹமது எப்படியும் நிச்சயம் டெத் ஓவரில் பந்துவீசுவார். ஆனால், வேறு யார் அங்கு பந்துவீசுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. மேட் ஹென்றி, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் என யார் பந்துவீசப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறி. அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இது ஒருவகையில் அந்த அணியைப் பாதிக்கலாம்.

இந்நிலையில் பெரிதும் நம்பப்பட்ட பௌலரான நாதன் எல்லிஸ் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறியிருக்கிறார். இது பந்துவீச்சை இன்னும் பலவீனமாக்கியிருக்கிறது. அவருடைய இடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் ஸ்பென்சர் ஜான்சனும் முழு ஃபிட்னஸோடு இல்லை என்று தெரிகிறது.

சொல்லப்போனால், சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சன்ரைசர்ஸ் பாணியைக் கடைபிடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. 'பந்துவீச்சு அதிக ரன் போய்விடலாம். பேட்டிங்கில் 20-30 ரன்கள் அதிகமாக எடுத்துவிடலாம்' என்று நினைத்துவிட்டார்களோ என்று நினைக்கிறேன்.

அதேசமயம் சிஎஸ்கே-வின் பேட்டிங் பலப்பட்டிருக்கும் விதம், அந்த பந்துவீச்சில் இருக்கும் குறை பெரிதாகத் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். பிளெமிங் மற்றும் அவரது பயிற்சியாளர் குழு இதை சரியாகக் கையாண்டுவிடுவார்கள் என நம்பலாம்.

கேப்டன் ருதுராஜுக்கு முக்கியமான சீசன்

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கிறது? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம்,Getty Images

இந்த சீசன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மிகவும் முக்கியமானது. தற்போது இரண்டாவது முழுமையான சீசன் என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்புகள் இருக்கும். அவரது முடிவுகள் அதிகம் கவனிக்கப்படும்.

அவர் தலைமைப் பண்பில் முன்னேற்றம் காண நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவர் தன் தவறுகளில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக்கொள்வார். தோனியே, "அவராகவே கற்றுக்கொள்ள விட்டுவிட வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். அது நிச்சயம் இந்த சீசனில் நடக்கும்.

என்ன, கடந்த ஆண்டு அவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. காயமடைந்து பாதியில் வெளியேறிவிட்டார். இந்த முறை அந்த அதிர்ஷ்டம் அவர் வசம் இருக்கும் என்று நம்புகிறேன்.

கடந்த ஆண்டு அவருக்கு ஒரு தரமான அணியும் கிடைக்கவில்லை. ஒரு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் கேப்டனின் செயல்பாடும் இருக்கும். அது அவருக்கு கடந்த சீசனில் அமையவில்லை. ஆனால், இப்போது நல்லதொரு அணி அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதனால், நிச்சயம் அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கும். அதை அவரால் பூர்த்தி செய்ய முடியும் என்றும் நான் நம்புகிறேன்.

தோனியின் பங்கு

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கிறது? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம்,Getty Images

மஹேந்திர சிங் தோனி காயம் காரணமாக முதல் இரு வாரங்கள் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது துரதிருஷ்டவசமான விஷயம். அதேசமயம் இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

இந்த புதிய சீசன் மஹேந்திர சிங் தோனியின் பங்கு அவ்வளவுதானா என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அவருடைய பங்களிப்பு நிச்சயமாக முடிந்துவிடவில்லை.

என்னைப் பொறுத்தவரை, காயத்திலிருந்து திரும்பியதும் தோனி நிச்சயம் விளையாடுவார். ஆனால், எல்லா போட்டிகளிலும் ஆடுவாரா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சாம்சனும் இருப்பதால் அவரும் கீப்பிங் செய்யக்கூடும். இங்குதான், தோனியை கீப்பராகப் பயன்படுத்தப் போகிறார்களா இல்லை அவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப் போகிறார்களா என்று பார்க்க வேண்டும்.

ஆனால், ஒரு விஷயம் நிச்சயம் - அவர் கண்டிப்பாக விளையாடுவார். இங்கு 'சிஎஸ்கே ஹை பெர்ஃபாமன்ஸ் மையத்தில்' நடந்த பயிற்சி முகாமுக்கு முன்னதாக அவர் ராஞ்சியிலேயே பயிற்சியில் ஈடுபட்டார். அங்கு அவர் தீவிரமாகப் பயிற்சி செய்தார். விளையாடப் போவதில்லை என்றால், அவர் அப்படி பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லையே! அவர் இந்த சீசன் களமிறங்குவது நிச்சயம்.

அதேசமயம், களத்துக்குள் இருப்பதை விட தோனியின் தாக்கம் களத்துக்கு வெளியே தான் இம்முறை அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்கள் தோனியோடு விளையாடும்போது அது அவர்களுக்கு பெரிய வகையில் உதவும். அவர்களால் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

தோனியின் தலைமையில் ஐபிஎல் ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவரைப் போல் இந்த ஆட்டத்தை புரிந்துகொள்ளக்கூடிய, கணிக்கக்கூடிய வீரர் கிடையாது. அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், பேசினால் அதில் நிறைய அர்த்தம் இருக்கும். அதனால்தான், ஒரு 'வழிகாட்டியாக' இந்த அணியில் தோனி பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன்.

இந்த சீசனுக்கான கணிப்பு

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்ட சூப்பர் கிங்ஸ், இம்முறை அதை உடைத்து நிச்சயமாக டாப் 4 இடத்தை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.

இந்த ஆண்டு நிறைய இளம் வீரர்களில் அந்த அணி நிர்வாகம் முதலீடு செய்திருக்கிறது. கடந்த சீசனின் கடைசி கட்டத்தில் இப்படியான இளம் வீரர்கள் தான் நம்பிக்கை கொடுத்தார்கள். அப்படி தரமான வீரர்களை நிறைய அணிக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். அது நிச்சயம் அணிக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியிருக்கிறது. மாத்ரே, பிரெவிஸ், பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, உர்வில் போன்ற இளம் வீரர்கள் அணியின் 'ஹிட்டிங்கை' பன்மடங்கு பலப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேசமயம் பல அனுபவ வீரர்களையும் அணிக்குள் புதிதாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதிகம் கவனம் ஈர்க்காத ராகுல் சஹார், முகேஷ் சௌத்ரி போன்றவர்கள் ஐபிஎல் அனுபவம் கொண்டவர்கள். அகீல் ஹொசைன் அப்படித்தான். அவர் உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் சோபித்திருக்கிறார். அதனால் அவர் நிச்சயம் இந்த சீசன் சென்னை அணியின் மிகமுக்கிய வீரர்களுள் ஒருவராக விளங்குவார்.

முன்பே சொன்னதுதான், இந்த சீசனின் மிகச் சிறந்த பேட்டிங் யூனிட்களுள் ஒன்றை சிஎஸ்கே கொண்டிருக்கிறது. ஆனால், பந்துவீச்சு தான் சற்று பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக டெத் பௌலிங். அதை சரியாகக் கையாள முடிந்தால் சிஎஸ்கே இந்த சீசனில் வெகுதூரம் செல்லலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே நிச்சயம் முன்னேறும். அதற்கு மேல் அந்தந்த நாளில் அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது அவர்கள் முடிவைத் தீர்மானிக்கும்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgldx2kk1dro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.