Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், எந்தக் கட்சி யார் பக்கம்?

படக்குறிப்பு,(இடமிருந்து) தமிமுன் அன்சாரி, தனியரசு, கிருஷ்ணசாமி, வேல்முருகன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி,பிபிசி தமிழ்

  1. 21 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்களே இருக்கின்றன. அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு பிரதான கூட்டணிகளிலும் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகள் தங்களுக்கான கூட்டணி வாய்ப்புகளை எடை போடத் துவங்கியுள்ளன.

அதிலும் குறிப்பாக, சிறிய கட்சிகள் தங்களுக்கான சிறந்த வாய்ப்புகளை நோக்கி காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளன. எந்தக் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது?

2021-ல் யார் எந்தப் பக்கம் இருந்தனர்?

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில், தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., இடதுசாரிகள் தவிர, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆர். அதியமான் தலைமையிலான ஆதித் தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவை தவிர, மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழக மக்கள் முன்னணி போன்றவையும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.

அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க., பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் தவிர, பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது தவிர, புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக், இந்திய தேசிய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தன.

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. கலப்பை மக்கள் கட்சி, ஜனநாயக மக்கள் இயக்கம் போன்ற சிறிய அமைப்புகளும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளித்தன.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் எஸ்டிபிஐ இடம்பெற்றிருந்தது.

நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை தனித்துப் போட்டியிட்டன.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது தமிழகத்தில் அரசியல் காட்சிகள் சற்று மாறியிருந்தன. தி.மு.க. கூட்டணி மக்கள் நீதி மய்யத்தை இணைத்துக் கொண்டு அதே போலத் தொடர, தேசிய ஜனநாயகக் கூட்டணயில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியிருந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தவிர, புதிய தமிழகம் கட்சியும் எஸ்டிபிஐ கட்சியும் இடம்பெற்றிருந்தன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க., ஓ. பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தவிர, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் காட்சிகள் மாறியிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரிந்த அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் தற்போது ஒன்றாக இணைந்திருக்கின்றன. அதே நேரத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் சிறிய கட்சிகள் தங்களுக்கான வாய்ப்புகளை எடைபோடத் துவங்கியுள்ளன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/Velmurugan T

படக்குறிப்பு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்

தி.மு.க. கூட்டணியில் அவ்வப்போது அதிருப்திக் குரலை எழுப்பிவரும் கட்சி தி. வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி. 2019ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறார் தி. வேல்முருகன். 2021ஆம் ஆண்டில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று, பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார் தி. வேல்முருகன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல சட்டமன்றத்தில் பல தருணங்களில் தி.மு.க. அமைச்சர்களுக்கும் வேல்முருகனுக்கும் இடையில் உரசல்கள் ஏற்பட்டன. அதேபோல, சபாநாயகருக்கும் தி. வேல்முருகனுக்கும் இடையிலும் மோதல்கள் ஏற்பட்டன. அந்தத் தருணங்களில் எல்லாம் தி.மு.க. மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார் வேல்முருகன். இந்தத் தேர்தலில் என்ன திட்டத்தில் இருக்கிறார் அவர்?

"நான் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடங்களை எதிர்பார்ப்போம். எங்கள் தகுதிக்குரிய இடங்களை எதிர்பார்ப்போம். அந்த அளவுக்குரிய இடங்கள் கிடைக்காவிட்டால் பொதுக் குழுவைக் கூட்டி முடிவெடுப்போம். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால் அங்கே செல்ல முடியாது. த.வெ.க. ஒரு நடிகரின் கட்சி. அங்கேயும் செல்ல முடியாது. ஆனால், வரும் தேர்தலில் எங்கள் கட்சிக்குரிய இடங்களை நாங்கள் நிச்சயம் எதிர்பார்ப்போம்" என பிபிசியிடம் தெரிவித்தார் வேல்முருகன்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/Thaniyarasu

படக்குறிப்பு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ. தனியரசு

நீண்ட காலமாக அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் ஒன்று உ. தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை. கோவை செழியனுடன் சில காலம் இணைந்து செயல்பட்டுவந்த உ. தனியரசு, 2001ஆம் ஆண்டில் கோவையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை துவக்கினார். 2011ஆம் ஆண்டில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலலிதா மறைந்த பிறகும் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.கவுக்கு ஆதரவளித்துவந்தார். ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் உ. தனியரசுவுக்கு இடம் ஏதும் தரப்படவில்லை.

"2021ல் தி.மு.கவிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால், அ.தி.மு.கவிலேயே இருக்கத் தீர்மானித்தேன். இறுதி நேரத்தில் இடம் வழங்கப்படவில்லை" என்கிறார் தனியரசு. இதற்குப் பிறகு அவரது கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க.பக்கம் திரும்பியது.

"கடந்த வியாழக்கிழமையன்று முதல்வரைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். இந்த முறை தி.மு.க. கூட்டணியில்தான் இடம்பெற விரும்புகிறேன்." என பிபிசியிடம் தெரிவித்தார் தனியரசு.

தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே கொங்குப் பகுதியை மையமாகக் கொண்ட கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி இருக்கும் நிலையில், மேலும் ஒரு கொங்குப் பகுதிக்கான கட்சியும் அதே கூட்டணயில் இடம்பெற முடியுமா என கேட்ட போது, "அவர்களோடு எங்களுக்கு எந்த முரண்பாடும் கிடையாது. ஆகவே, கூட்டணியில் இடம்பெற முடியுமென்றுதான் உறுதியாக நம்புகிறேன்" என்கிறார் உ. தனியரசு.

மனிதநேய ஜனநாயகக் கட்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/Thaminum Ansari

படக்குறிப்பு, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி

மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து 2016ஆம் ஆண்டில் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் மனிதநேய ஜனநாயகக் கட்சி உருவானது. 2016ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்தக் கட்சி இடம்பெற்றது. அக்கட்சிக்கு இரு இடங்கள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மு. தமிமுன் அன்சாரி வெற்றிபெற்றார். ஜெ. ஜெயலலிதா மறைந்த பிறகும் தொடர்ந்து அக்கட்சி அ.தி.மு.கவுக்கு ஆதரவளித்துவந்தது. ஆனால், 2019ஆம் ஆண்டில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவான பிறகு அந்தக் கூட்டணியிலிருந்து விலகினார் தமிமுன் அன்சாரி.

இந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விரும்புவதாக பிபிசியிடம் தெரிவித்தார் மு. தமிமுன் அன்சாரி. "2019ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து பா.ஜ.க. இடம்பெறும் கூட்டணியை எதிர்த்துவருகிறோம். இந்த முறை தி.மு.க. கூட்டணியில் நிச்சயம் இடம்பெறுவோம்" என்கிறார் அவர்.

புதிய தமிழகம் கட்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/Dr K Krishnasamy

படக்குறிப்பு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி

2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 4 இடங்களில் போட்டியிட்டது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் போட்டியிட்டது அக்கட்சி. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது அக்கட்சி. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தென்காசி தொகுதியில் அக்கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி போட்டியிட்டார். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் மீண்டும் கூட்டணி அமைத்தன. இந்தத் தருணத்தில் கே. கிருஷ்ணசாமி அதிருப்தி அடைந்தார். ஆகவே வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "வரும் ஜனவரி 7ஆம் தேதி எங்கள் கட்சியின் மாநில மாநாடு நடக்கவிருக்கிறது. அதற்குப் பிறகுதான் கூட்டணி தொடர்பான எங்கள் நிலைப்பாட்டைச் சொல்வோம். இப்போது எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இல்லை. கடந்த பத்தாண்டுகளில் மக்களின் நிலை மோசமடைந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் எல்லாவிதங்களிலும் மோசமான நிலையை எட்டியிருக்கிறோம். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் முடிவெடுப்போம். ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கியமான செயல்திட்டம். அதனை மனதில்வைத்து கூட்டணி முடிவுகளை எடுப்போம்" என்றார் கே. கிருஷ்ணசாமி.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட நிலையில் அதிலிருந்து வெளியேறியது ஏன் என கேட்டதற்கு "அ.தி.மு.க. திடீரென பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தது. அதைப் பற்றி எங்களிடம் ஏதும் சொல்லவில்லை. நாங்களும் சுதந்திரமாக இயங்குகிறோம். அவ்வளவுதான்" என்கிறார் கிருஷ்ணசாமி.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/John Pandian

படக்குறிப்பு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்

ஆரம்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் பிரிவில் இருந்த ஜான் பாண்டியன், 2000வது ஆண்டில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலும் 2011ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டார் ஜான் பாண்டியன். பிறகு, 2017ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். 2021ல் எழும்பூர் தொகுதியில் போட்டியிடவும் செய்தார். பிறகு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார். 2024ல் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்கிறார் ஜான் பாண்டியன்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் இதே கூட்டணி தொடருமா என கேட்டதற்கு, "நாங்கள் இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா என்பதை இப்போது சொல்ல முடியாது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது எங்கள் கட்சியினரைக் கலந்தாலோசித்துத்தான் முடிவுசெய்வோம். அந்தத் தருணத்தில்தான் அதைச் சொல்ல முடியும்" என பிபிசியிடம் தெரிவித்தார் ஜான் பாண்டியன்.

சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

பட மூலாதாரம், Facebook/Nellai Mubarak

படக்குறிப்பு, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவவர் முபாரக்

சோஷலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எனப்படும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் சேர்த்து இக்கட்சி 8 இடங்களில் போட்டியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனியாகவே மூன்று இடங்களில் இக்கட்சி போட்டியிட்டது. 2016ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோது, தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக அறிவிப்புகள் வெளியாயின. ஆனால், உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தமாக 32 இடங்களில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டது. 2021லும் அதே கூட்டணியில் இடம்பெற்று ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட்டது.

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் (திண்டுக்கல்) போட்டியிட்டது. ஆனால், அ.தி.மு.க. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததும் 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று கூறிவிட்டு அந்தக் கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ வெளியேறியது.

இந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவரான முபாரக். "எங்கள் கட்சியின் பொதுக் குழுதான் தேர்தல் நிலைப்பாடுகளை எடுக்கும். வரும் ஜனவரி மாதத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கவிருக்கிறோம். இந்த முறை எப்படியும் சட்டமன்றத்தில் எங்கள் கணக்கைத் துவங்க வேண்டும் என்பதை மனதில் வைத்து முடிவெடுப்போம்" என்கிறார் முபாரக்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y9r2gxjv7o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.