Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/rajprathaban

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மதுரை மாநகரின் மேயராக இருந்த இந்திராணி ராஜினாமா செய்து நான்கு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இப்போதுவரை புதிய மேயர் தேர்வு செய்யப்படவில்லை.

மதுரை மாநகராட்சியில் நடந்த வரி மோசடி விவகாரம் சில மாதங்களுக்கு முன்பாக மிகப் பெரிய அளவில் வெடித்தது.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், கவுன்சிலரின் கணவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். விவகாரம் பெரிதான நிலையில் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் இரண்டு பேரும் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர்.

இதற்குப் பிறகு மதுரை மாநாகராட்சியின் மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அக்டோபர் 9-ஆம் தேதி பொன் வசந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி மாநகராட்சியின் மேயரான இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா 17-ஆம் தேதி மாமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் மதுரை மாநகராட்சியின் புதிய மேயராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 இடங்களில் 69 இடங்கள் தி.மு.க. வசமே இருக்கும் நிலையிலும், புதிய மேயரை நியமிக்க முடியாதது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

பிரச்னையின் பின்னணி என்ன?

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை விவரங்களை 2024-ஆம் ஆண்டில், அப்போதிருந்த மாநகராட்சி ஆணையர் சி. தினேஷ் குமார் வழக்கம்போல ஆராய்ந்தபோது, 100-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கான வரி பாக்கித் தொகை வெகுவாகக் குறைந்திருப்பதைக் கண்டறிந்தார். இதையடுத்து, இது குறித்து ஒரு ரகசிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணையில் மாநகராட்சியின் ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களும் சேர்ந்து, மாநகராட்சியின் சொத்து வரியைக் கணக்கிடும் மென் பொருளில் இருந்த ஒரு சிறிய ஓட்டையைப் பயன்படுத்தி பலரது சொத்து வரிகளைக் குறைத்தது தெரியவந்தது. இதன் காரணமாக, இந்த சொத்தின் உடமையாளர்கள், மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையும் கணிசமாகக் குறைந்தது.

2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2024 ஜூலை 31 வரையிலான சொத்து வரி விதிப்பு விவரங்களை ஆராய்ந்தபோது இது தெரியவந்தது. 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் மதுரை நகரக் காவல் துறையில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்த மதுரை நகரக் காவல்துறை, மூன்றாவது மண்டலத்தில் குறைந்தது 150 பேரின் வரி குறைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தது. சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதையடுத்து 83வது வார்டின் அ.தி.மு.க. கவுன்சிலர் டி. ரவி, இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர். வழக்கை தொடர்ந்து விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது.

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/rajprathaban

படக்குறிப்பு, மதுரை நகர மேயர் இந்திராணி பொன்வசந்த் (வலது) மற்றும் அவரின் கணவர் பொன். வசந்த் (இடது)

இந்த சிறப்பு விசாரணைக் குழு மாநகராட்சியின் தற்காலிக ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் சிலர், வரி விதிப்பிற்கான நிலைக் குழு தலைவரின் கணவர் ஆகியோரைக் கைது செய்தது. மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை ஆணையர் சுரேஷ் குமாரும் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் மதுரை நகர மேயரின் கணவர் பொன். வசந்த்தை சென்னையில் கைது செய்தது காவல் துறை. அதற்கு முன்னதாகவே, மே மாதத்திலேயே கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவரை இடைநீக்கம் செய்வதாக தி.மு.க. அறிவித்திருந்தது.

"மதுரையில் வரலாறு காணாத அதிசயமாக மேயரின் கணவர் சிறையில் இருந்தபோதும், மனைவி மேயராக தொடர்ந்து செயல்பட்டார். எங்களுடைய அழுத்தத்தின் காரணமாகத்தான் பல நாட்கள் கழித்து அவர் ராஜினாமா செய்தார். இருந்தாலும் இத்தனை நாட்கள் ஆன பிறகும் புதிய மேயர் நியமிக்கப்படவில்லை. புதிய மேயராக வருவதற்கு மதுரை தி.மு.கவிற்குள் சரியான ஆட்கள் இல்லை போலிருக்கிறது." என்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு.

"அதனால்தான் புதிய மேயரை நியமிக்காமல் இருக்கிறார்கள். மேயர் மட்டுமல்ல ஐந்து மண்டலத் தலைவர்கள், இரண்டு நிலைக்குழு தலைவர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அந்தப் பதவிகளுக்கும் புதிதாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை," என்றார்.

இந்திராணி பொன். வசந்த் ராஜினாமா செய்து பல நாட்களாகியும் மேயர் பதவிக்கென யாரையும் தி.மு.க. அறிவிக்கவில்லை.

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/Sellur Raju

படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

'பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன சிரமம்?'

இதைப்பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அமைச்சர்களுக்கிடையே முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. பி.டி.ஆர். இப்போது இதிலெல்லாம் தலையிடுவதில்லை. இருந்தாலும், புதிய மேயரை நியமிப்பதில் தி.மு.க. தலைமை ஆர்வம் காட்டவில்லை. மதுரையில் எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலைகள் எல்லாம் குப்பைகளாகக் கிடக்கின்றன."

"அ.தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை இப்போதுவரை சரியாக செயல்படுத்தவில்லை. மேயர் இல்லாததால் மாநகராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. எந்தப் பணிகளும் நடக்கவில்லை. வைகை ஆறு கூவத்தைப் போல மாறி வருகிறது. இருந்தாலும் அப்படியே போட்டுவைத்திருக்கிறார்கள்" எனக் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் செல்லூர் ராஜு.

1971-ஆம் ஆண்டின் மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 40வது பிரிவு, மேயர் பதவி காலியாக இருக்கும்போதோ, 15 நாட்களுக்கு மேல் மேயர் நகரத்தில் இல்லாவிட்டாலோ துணை மேயர் அந்தப் பொறுப்பை வகிப்பார் எனக் கூறுகிறது. .

இதனால், துணை மேயரான டி. நாகராஜன் மேயருக்கான பணிகளை தற்போது மேற்கொண்டுவருகிறார். டி. நாகராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் (சி.பி.எம்.) சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தி.மு.க வட்டாரங்கள் ஒத்துழைப்பதில்லை என சி.பி.எம். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"மாநகராட்சியின் அதிகார அடுக்கில், மேயருக்கு அடுத்த இடத்தில்தான் ஆணையர். இப்போது துணை மேயர்தான், மேயரின் கடமைகளை ஆற்றுகிறார். ஆனால், இப்போதும் விழாக்களுக்கான அழைப்பிதழ்களில் ஆணையாளருக்குக் கீழ் சிறிய எழுத்தில் துணை மேயர் எனக் குறிப்பிட்டு அவரது பெயரை அச்சிடுகிறார்கள். கல்வெட்டுகளிலும் அப்படித்தான் பொறிக்கப்படுகிறது. துணை மேயரை, பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன சிரமம் எனத் தெரியவில்லை" என சி.பி.எம் மாவட்ட நிர்வாகி ஒருவர் தன் பெயரை குறிப்பிட விரும்பாமல் பிபிசியிடம் தெரிவித்தார்.

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், D Nagararajan

படக்குறிப்பு, துணை மேயர் டி. நாகராஜன்.

துணை மேயர் டி. நாகராஜன் தன்னை பொறுப்பு மேயராக அறிவிப்பதில் பிரச்னை இருக்கிறதா என்பது குறித்து ஏதும் பேச விரும்பவில்லை.

எல்லாத் தரப்பினருடனும் இணைந்து செயல்பட தான் தயாராகவே இருப்பதாக மட்டும் கூறுகிறார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "மேயர் இல்லாத காலகட்டத்தில் புதிதாக மேயர் நியமிக்கப்படும் வரை, துணை மேயரே பொறுப்பு மேயராக செயல்படலாம் என்கிறது மதுரை மாநகராட்சி சட்டம். அந்த அதிகாரத்தின் கீழ் நான் தற்போது செயல்படுகிறேன். மேயரின் ராஜினாமா 17-ஆம் தேதி ஏற்கப்பட்டது. நான் 19-ஆம் தேதியில் இருந்தே கோப்புகளில் கையெழுத்திட்டு வருகிறேன். மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பூங்கா முருகன் கோவில் கணக்குகளையும் நான்தான் பார்க்கிறேன். அதிகாரிகள், ஆளும்கட்சி, அமைச்சர் ஆகியோரோடு இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார்.

மதுரை நகரின் உள்கட்டமைப்பு, சுத்தம் ஆகியவை குறித்து ஏற்கனவே பல புகார்கள் இருக்கும் நிலையில், மேயர் இல்லாத காரணத்தால் மாநகராட்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கின்றன என்றும் சிறிய பணிகள்கூட நடப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார்கள் அந்த நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

"மழை நீர் வடிகாலைத் தூர்வாரும் பணிகள் அப்படியே நின்று போயிருக்கின்றன. மழை பெரிதாக பெய்தால் நிலைமை மோசமாகிவிடும். குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்ய முடியவில்லை. மாமன்றக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்க வேண்டும். ஆனால், மேயர் இல்லாததால் ஒன்றரை மாதமாக மாமன்றக் கூட்டமே நடக்கவில்லை." என்கிறார் மதுரை மாநகராட்சி ஆணையரின் கௌரவ ஆலோசகராக முன்பு இருந்தவரும் சமூக ஆர்வலருமான டி.ஆர். தேசிகாச்சாரி.

"மாமன்றக் கூட்டம் நடக்கவில்லை என்பதால் அதன் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமையன்று குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும். வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வந்ததில் இருந்து அந்தக் கூட்டமும் நடக்காமல் கிடக்கிறது. மக்களின் சின்னச் சின்னக் கோரிக்கைகளைக்கூட செயல்படுத்த முடியவில்லை" என்கிறார் அவர்.

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/Madurai Corporation

வேறு சில பிரச்னைகளையும் சுட்டிக்காட்டுகிறார் டி.ஆர். தேசிகாச்சாரி.

2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மதுரை மாநகராட்சிப் பகுதிக்குள் 72 வார்டுகள் இருந்தன. அதற்குப் பிறகு திருப்பரங்குன்றம், ஆவனியாபுரம் என்ற இரு முனிசிபாலிடிகளும் இரண்டு பஞ்சாயத்து யூனியன்களும் 13 பஞ்சாயத்துகளும் மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டன. இதனால், மாநகராட்சிக்குள் உள்ள தெருக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால், ''புதிதாக மாநகராட்சிக்குள் இணைந்த பல தெருக்கள் மாநகராட்சியின் இணைய தரவுத் தளத்தில் உள்ளிடப்படவில்லை. இதனால், இந்தத் தெருக்களுக்கு வரி விதிப்பதில் சிரமம் இருக்கிறது. அதேபோல, குடிநீர் இணைப்புகள், பாதாளச் சாக்கடை இணைப்புகளையும் தர முடியவில்லை. இந்தப் பணிகள் எல்லாமே கிடப்பில் கிடக்கின்றன. இந்த நிலையில் மேயரும் இல்லாதது நிலைமையை மோசமாக்கியிருக்கிறது'' என்கிறார் டி.ஆர். தேசிகாச்சாரி.

மேயர் பதவி மட்டுமல்லாமல், மாநகராட்சியில் வேறு சில பதவிகளும் காலியாகக் கிடக்கின்றன. வரி ஏய்ப்பு மோசடி குறித்த விவகாரம் வெடித்ததும் ஐந்து மண்டலங்களின் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். அந்தப் பதவிகளும் இன்னும் நிரப்பப்படவில்லை.

மண்டலங்களைப் பொறுத்தவரை, சிறு சிறு பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கு என தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மண்டலக் கூட்டங்கள் மாதாமாதம் நடத்தப்பட்டு, அந்தப் பணிகள் முடிவுசெய்யப்படும்.

"ஆனால், மண்டலத் தலைவர்கள் இல்லாததால் கூட்டங்களும் நடப்பதில்லை; பராமரிப்புப் பணிகளும் நடப்பதில்லை" என்கிறார் தேசிகாச்சாரி.

மதுரை, மேயர் ராஜினாமா, சிபிஎம்,  திமுக

பட மூலாதாரம், X/ptrmadurai

படக்குறிப்பு, "நான் இந்த விவகாரங்களில் இப்போது தலையிடுவதில்லை." என்று மட்டும் தெரிவித்தார் அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

'தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும்'

மதுரை மாவட்ட தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் இது குறித்து விரிவாகப் பேச விரும்பவில்லை.

"பிரச்னை வெடித்ததும் மேயரை ராஜினாமா செய்ய வைக்கச் சொன்னார்கள். மேயரை ராஜினாமா செய்ய வைத்தோம். அதோடு எங்கள் பணி முடிந்தது. புதிய மேயர் யார் என்பதை கட்சித் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும். இது தொடர்பான எல்லா விஷயங்களையும் கட்சித் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும்." என்கிறார் மதுரை மாநகர மாவட்டச் செயலாளரும் மதுரை வடக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கோ. தளபதி.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டபோது, "நான் இந்த விவகாரங்களில் இப்போது தலையிடுவதில்லை." என்று மட்டும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீனிடம் கேட்டபோது, இந்த விவகாரத்தால் மக்கள் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்கிறார்.

"புதிய மேயரை நியமிப்பது தொடர்பான பணிகள் நடந்துவருகின்றன. தவிர, துணை மேயர் மேயருக்கான பணிகளைப் பார்த்துவருகிறார்" என்று தெரிவித்தார்.

துணை மேயரை, பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன பிரச்னை? என கேட்டப்போது, "பொறுப்பு மேயராக நியமிப்பது குறித்து எந்த விதியும் இல்லை. மேயர் இல்லாவிட்டால், துணை மேயரே மேயராகச் செயல்படுவார். அப்படித்தான் செயல்படுகிறார். இதில் ஒரு பிரச்னையும் இல்லை." என்கிறார் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9867l08e85o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.