Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

படக்குறிப்பு, திருகோணமலையில் பௌத்த விகாரை நிர்மாணிப்பது தொடர்பாக பாரிய சர்ச்சை எழுந்துள்ளது.

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை திருகோணமலை நகரிலுள்ள கடற்கரையோரத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விவகாரம், நாட்டில் இன்றும் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில், அடுத்த தினமே போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸாரின் கைகளாலேயே கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரம் அமைந்துள்ளது.

திருகோணமலை நகரில் கடந்த 16ம் தேதி காலை கரையோர பகுதியில் திடீரென ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சில பௌத்த பக்தர்கள் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த இடத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், இந்த விடயம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

திருகோணமலை கரையோர பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற விகாரையானது சட்டவிரோதமானது என, கரையோர பாதுகாப்பு திணைக்களம், போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அத்துடன், இந்த விகாரை நிர்மாணிக்கப்படுவதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம் மாத்திரமன்றி, தமிழர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

'தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில்' பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக, தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், கரையோர பாதுகாப்பு திணைக்களம் செய்த முறைப்பாடு குறித்து, போலீஸ் அதிகாரிகள், விகாரையின் விகாராதிபதிக்கு (தலைமை பிக்கு) அறிவித்திருந்தனர்.

எனினும், தமது நடவடிக்கையானது சட்டவிரோதமானது அல்லவெனவும், தம்மால் விகாரையின் நிர்மாணப் பணிகளை நிறுத்த முடியாது எனவும் விகாரையின் பிக்குகள் போலீஸாருக்கு தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த விகாரை நிர்மாணிக்கப்படுகின்றமையானது சட்டவிரோதமானது என தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தனர்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

இந்த நிலையில், திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பௌத்த விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்த அதேநாள் இரவு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலீஸார் குவிக்கப்பட்டு, புத்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதுடன், அந்த புத்தர் சிலை திருகோணமலை கரையோர போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இதன்போது பௌத்த பிக்குகளுக்கும், போலீஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன், கைக்கலப்புகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த கைகலப்பில் இரண்டு பௌத்த பிக்குகள் காயமடைந்து, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

புத்தரின் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை கைது செய்யப்படுவதானது, புத்த பெருமானே கைது செய்யப்பட்டமைக்கு சமமானது என அனைத்து பௌத்த மக்களும் கவலையடைந்த ஒரு சம்பவமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

படக்குறிப்பு, புத்தர் சிலையை போலீஸார் எடுத்துச் சென்றபோது பௌத்த பிக்குகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

ஏன் புத்தர் சிலையை போலீஸார் எடுத்து சென்றனர்?

திருகோணமலை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்படும் என கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே தாம் புத்தர் சிலையை அப்புறப்படுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்படும் என்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அந்த இடத்திலிருந்து புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது." என தெரிவித்தார்.

மீண்டும் அந்த புத்தர் சிலையை அந்த விகாரையில் பிரதிஷ்டை செய்யுமாறு தாங்கள் போலீஸாருக்கு ஆலோசனை வழங்கியதாக கூறிய அவர், அன்றைய தினத்திலிருந்து முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

"அந்த இடத்தில் சிற்றுண்டிசாலையொன்று நடத்திச் செல்லப்படுவதாக முன்னர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளன. நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.'' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SJB MEDIA

படக்குறிப்பு, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

எதிர்கட்சிகள் வெளியிட்ட எதிர்ப்பு

புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு, பதற்றம் ஏற்பட்டமை குறித்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இனவாதத்தை தூண்டுவதற்கு பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அதற்கான பிரவேசத்தை வழங்கும் நடவடிக்கையாகவே இதனை பார்ப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

''இவ்வாறு செயற்படுவதன் ஊடாக இனவாதத்தை தூண்டுவதற்கு பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான பிரவேசத்தை வழங்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகின்றது. நள்ளிரவில் போலீஸாரை அனுப்பி விகாரையொன்றுக்குள் நடைபெறுகின்ற அபிவிருத்தி பணிக்கு போலீஸார் எப்படி தலையீடு செய்வது?" என அவர் கேள்வியெழுப்பினார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முயற்சித்த போது, அதற்கு சபாநாயகர் சந்தர்ப்பத்தை வழங்காதமையானது, தவறான செயற்பாடு என கூறிய சஜித், ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு சபாநாயகர் ஆசனத்திலிருந்து செய்யும் இந்த நடவடிக்கையை தயவு செய்து நிறுத்துங்கள் என குறிப்பிட்டார்.

புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை இனவாத பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்பதுடன், அரசாங்கம் இதற்கு தலையீடு செய்து நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SLPP MEDIA

படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ

''புத்தர் சிலையின் பாதுகாப்புக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை கொண்டு செல்லப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கின்றார். பாதுகாப்புக்காக புத்தர் சிலை வெளியில் கொண்டு செல்லப்படும் போது, போலீஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி, இரண்டு பௌத்த பிக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தர் சிலையின் பாதுகாப்புக்காகவா புத்தர் சிலை வெளியில் கொண்டு செல்லப்பட்டது. அல்லது பிக்குகளின் பாதுகாப்புக்காகவா வெளியில் கொண்டு செல்லப்பட்டது. அல்லது போலீஸாரிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவா என்று கேள்வி எமக்குள் எழுகின்றது." என்றார் நாமல் ராஜபக்ச.

1951ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2004ம் ஆண்டு புனித பூமியாக பிரகடனப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் மிகவும் பழைமை வாய்ந்த பௌத்த விகாரையாக இந்த விகாரை காணப்பட்டது எனக்கூறிய நாமல், "இதனை இனவாத பிரச்னையாக மாற்ற வேண்டாம். நீங்கள் தலையீடு செய்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குறிப்பிட்டு இரண்டு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்துங்கள். அதனூடாக நியாயத்தை பெற்றுக்கொடுங்கள். இது இனவாத பிரச்னையாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதற்கு தலையீடு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்'' என கூறினார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்களை விடுதலை புலிகள் அழிக்கவில்லை என்றும், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SHANAKIYAN

படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன்

''பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். பௌத்த மதமோ, எந்த மதமோ சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அது நானாக இருந்தாலும் சரி, பௌத்த துறவியாக இருந்தாலும் சரி. திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான விகாரை புதிதாக உருவெடுத்தது. இது சட்டவிரோதமானது, நிறுத்துவார்கள் என நம்பியிருந்தோம். சிலையை பாதுகாப்பதற்காக அகற்றப்பட்டதாக அமைச்சர் கூறியிருந்தார். 30 வருடம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கில் பௌத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு சின்னம் கூட விடுதலைப் புலிகளினால் கூட அழிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் இரவோடு இரவாக சென்று சிலைகளை உடைக்கின்ற மக்கள் அல்ல'" என்றார் ராசமாணிக்கம்.

திருகோணமலை சம்பவத்தின் ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், முந்தைய அரசாங்கத்தை போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் என்பதை நிறுவியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஆனந்த விஜயபால, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA

படக்குறிப்பு, அமைச்சர் ஆனந்த விஜயபால

''அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப செயல்படுவதை காண்கிறோம். அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை போலீஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்." என்றார் சுமந்திரன்.

இலங்கை தமிழரசு கட்சி, பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SUMANTHIRAN

படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்

பழைமை வாய்ந்த விகாரை என தகவல்

திருகோணமலையில் நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த இடமானது, பழமையான விகாரைக்கு சொந்தமான ஆவணங்களை கொண்டுள்ள விகாரை என விகாரையின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரை என்ற பெயரில் இந்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள இந்த விகாரையானது, 1951ம் ஆண்டு புத்தசாசன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமைக்கான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் நடத்தி செல்லப்பட்ட பௌத்த அறநெறி பாடசாலை, சுனாமி அனர்த்தத்தில் அழிவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு அழிவடைந்த இடத்திலேயே புதிதாக தாம் விகாரையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ள பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விகாரைக்கு மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அதற்கான உறுதிப் பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும் பிக்குகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த இடத்தில் தனிநபர் ஒருவரினால் விகாரையின் அனுமதியுடன் உணவகமொன்று அமைக்கப்பட்டு நடத்திச் செல்லப்படுகின்றது. இந்த உணவகத்தின் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தில் 25 வீதத்தை விகாரைக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த உணவகம் நடத்திச் செல்லப்படுகின்றது.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் உணவகம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே, உணவகத்தை முதலில் அகற்றுமாறு கூறப்பட்டிருந்தது. எனினும், தாம் உரிய அனுமதியை பெற்று இந்த உணவகத்தை நடத்தி வருவதாக உணவகத்தின் உரிமையாளர் குறிப்பிட்டிருந்தார்.

உணவகத்தை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, திடீரென விகாரையை நிர்மாணிக்கும் நோக்கில் புத்தர் சிலையொன்று அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை,  புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA

மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலை

திருகோணமலை போலீஸாரினால் தமது பொறுப்புக்கு எடுக்கப்பட்ட புத்தர் சிலை, அடுத்த தினமே போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸாரின் கைகளிலேயே கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பௌத்த சமய வழிபாடுகளுக்கு அமைய இந்த புத்தர் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அப்போது அங்கு ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் தமது சமய நடைமுறைகளை பின்பற்றி, போலீஸாரின் ஒத்துழைப்புடன் புத்தர் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.

நீதிமன்றம் என்ன சொல்கின்றது?

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரை தொடர்பில் எழுந்த பதற்ற நிலைமையை, சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நவ. 19 அன்று தெரிவித்தது.

இந்த மனு மீதான விசாரணைகளை டிசம்பர் மாதம் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.

விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரரினால் மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் ஒரு பகுதியை அப்புறப்படுத்துமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை, செயற்படுத்துவதனை தவிர்க்கும் வகையில் கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, பிரதேசத்தின் அமைதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், உரிய திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி என்ன சொல்கின்றார்?

திருகோணமலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் மதஸ்தலமொன்றை அமைப்பதைப் போன்றே, அதற்குப் பின்னால் மற்றொரு விவகாரமும் இருப்பது தெளிவாக தெரிகின்றது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குறித்த இடத்தில் பிக்குவுக்கு சொந்தமான காணியொன்று இருந்த போதிலும், மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடமொன்று இருக்கவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

''இந்த புத்தர் சிலை பாதுகாப்புக்காகவே போலீஸுக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் நிலையத்திலுள்ள பதிவேட்டில் தெளிவாகவுள்ளது. புத்தர் சிலை மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது அந்த பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது." என்றார் ஜனாதிபதி அநுர.

அதற்கு முன், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் 2014ம் ஆண்டு குறித்த காணிக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது இந்த இடம் விகாரையாக அழைக்கப்பட்ட போதும் அண்மைக் காலங்களில் இந்த இடம் விகாரையாகப் பயன்படுத்தப்படாமல் ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"உணவகத்தில் சட்டவிரோத நிர்மாணப் பணிகள் இருப்பதால் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கடலோர பாதுகாப்புத் திணைக்களம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக சுற்றாடல் அமைச்சிற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், போலீஸ் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், தங்களுக்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் பிக்குகள் தெரிவித்திருந்தனர். அந்தக் கால அவகாசம் 14ம் தேதியுடன்; முடிவடைந்தது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இடத்தில் பிக்குவுக்கு உரித்தான காணியொன்று இருந்தது என்றும், ஆனால் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடம் இருக்கவில்லை, அதுதான் உண்மையான நிலைமை என கூறிய அநுர, "சம்பந்தப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு, அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், முறையான அளவீடு செய்ய, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கவும் விகாரைக்குச் சொந்தமான காணியை தனித்தனியாக பெயரிட்டு வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டது." என்றார்.

ஆனால் பழைய வழக்கின் பிரகாரம் இங்கு புதிய நிர்மாணப் பணிகள் எதுவும் செய்யக்கூடாது எனவும் ஏற்கெனவே உள்ள நிர்மாணங்களை அகற்றக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, விகாரைக்குச் சொந்தமான காணி ஒதுக்கப்பட்ட பிறகு தொடர்புடைய பணிகளை முன்னெடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் பிரச்சினை தற்போது நிறைவடைந்து விட்டது" என்றார்.

இனவாதத்திற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்படாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

''சந்தர்ப்பவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் தீ வைப்பு தான் தற்போது நடந்திருக்கிறது . ஆனால் நாங்கள் இனவாதத்தை அனுமதிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, இந்த நாட்டின் பௌத்த மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள். இந்த நாட்டின் இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். எனவே, இந்த நாட்டில் பழைய இனவாத நாடகங்களை யாராவது மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றால், அது இறந்த வரலாற்றில் மட்டுமே இருக்கும்.'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2n24qrwp7o

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

'இந்த புத்தர் சிலை பாதுகாப்புக்காகவே போலீஸுக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் நிலையத்திலுள்ள பதிவேட்டில் தெளிவாகவுள்ளது.

ம் ....வணக்கத்துக்குரிய புத்தரை கண்ட கண்ட இடமெல்லாம் நிறுவுவது பத்தி எரியாவிட்டால் தாமே வைத்த சிலையை உடைத்தெறிவது நாட்டில் ஒரு கலவரம் வேண்டுமென்றால் புத்தர் இப்படியான வேலையில் முன் நிற்பார். புத்தருக்கு பிக்குகளாற்தான் ஆபத்து, அவமரியாதை.

1 hour ago, ஏராளன் said:

இந்த விகாரைக்கு மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அதற்கான உறுதிப் பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும் பிக்குகள் கூறி வருகின்றனர்.

இவர்தான் பிரச்சனையின் கதாநாயகன். தூஷண பிக்கர் தாங்கள் மஹிந்தவுக்காக காவி தரித்ததாகவும், மஹிந்த பீடத்தை சார்ந்தவர்கள் என்றும் கூறுகிறார். அப்படி ஒரு பீடம் இருக்கிறதா? இதுகள் உண்மையான பிக்குகள் தானா என்பதை ஜனாதிபதி ஆராய்ந்து, அந்தப்பிக்கை கைது செய்து விசாரிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு பிக்குகள் ஏவல், அடிமை வேலை செய்வதும், பிக்குகளுக்குப்பின்னால் அரசியல்வாதிகள் ஒளிந்து கொள்வதும் நிறுத்தப்படவேண்டும். பிக்குகள் விகாரையில் இருந்து தர்மத்தை போதிக்க வேண்டுமேயொழிய அதர்மத்தை வளர்க்க இடமளிக்க கூடாது. அவர்களுக்கு ஒழுக்கத்தை, பொறுப்பை கற்பியுங்கள். அவர்கள் பணி என்ன என்பதை வரையறுங்கள். தகுதியற்றவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள். சும்மா இருந்து சாப்பிடுவதை தடுத்து நிறுத்துங்கள். சும்மா இருந்து சாப்பிட்டால் இப்படித்தான் எதையாவது செய்யத்தோன்றும் இதுகளுக்கு. இரந்து உண்ண விடுங்கள். அதைத்தான் புத்தரும் செய்தார். நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தபிக்குகளின் அட்டகாசம் பெருகிக்கொண்டே போகிறது. அதற்காக சட்டங்களை ஏற்படுத்தவில்லை, தடுத்து நிறுத்தவில்லை. இதை செய்ய முடியாதவர்கள் வேறு எதை சாதிக்கப்போகிறார்கள்? பிக்குகளை அடக்கினால் அரசியல் வாதிகள் அடங்குவார்கள். நாடு அமைதியடையும்.

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் வைத்த நெருப்பு மூண்டு எரியவில்லையே என்கிற ஏமாற்றம் சஜித்துக்கு. அதனால் அதை மீண்டும் மீண்டும் ஊதுகிறார். இனவாதத்தை தூண்ட பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாம். யார் அவசரமாக சிலையை நிறுவியது? யாருமே இனவாதம் பேசவுமில்லை, தூண்டவுமில்லை. தாங்களே இனவாதத்தை தூண்ட செய்துவிட்டு, அது தூண்டவில்லை என்பதற்காக சஜித் பேசிப்பேசி தூண்டுகிறார். புத்தரை அந்த இடத்திலிருந்து எடுத்தது பிழையென்கிறார், வைத்தபின்னும் பிழையென்கிறார். இல்லாத ஒன்றுக்கு மன்னிப்பு கேட்க்கிறார். நினைத்தது நடக்கவில்லையேயென்கிற பொருமல். இன்னொன்றும் சொல்கிறார், பௌத்தத்துக்கு முன்னுரிமையாம், அவ்வாறே ஏனைய மதங்களுக்கும் சம உரிமையாம். அப்படியெனில் பௌத்தத்துக்கு எப்படி முன்னுரிமை? இவர்களெல்லாம் ஜனாதிபதியானால் நாடு எங்கே போகும்? தமது திறமை தெரியாமல் ஜனாதிபதிகனவு. எல்லோரின் கனவிலும் மண்ணள்ளி வைக்கப்போகிறார் அனுரா, ஜனாதிபதி முறை ஒழிப்பு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.