Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்யூட் சர்ச்சை: இளையராஜா அளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் போன்றோருக்கு காப்புரிமை பிரச்னை வராதது ஏன்?

ட்யூட் திரைப்படத்தில் ஒரு காட்சி

பட மூலாதாரம்,Mythri Movie Makers

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

'ட்யூட்' திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 28) இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'பாடல்களை நீக்குவதற்கு ஒன்பது வாரம் அவகாசம் வேண்டும்' என்று படக்குழு முன்வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். இளையராஜா பாடல்களில் காப்புரிமை சர்ச்சை தொடர்வதன் பின்னணி என்ன?

ஆந்திராவை சேர்ந்த 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 'ட்யூட்' படம் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இந்தப் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் படக் குழுவால் பயன்படுத்தப்பட்டன.

'ட்யூட்' படம் குறித்த சர்ச்சை என்ன?

'ட்யூட்' படத்தில், 'புது நெல்லு புது நாத்து' படத்தில் இடம்பெற்ற 'கருத்த மச்சான்' பாடல், ரஜினி நடித்த 'பணக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்' ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர்.

சோனி நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது, 'தனது பாடல்களைப் பயன்படுத்துவதற்கு ட்யூட் படக்குழு அனுமதி பெறவில்லை' என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, 'அது தொடர்பாக தனியாக வழக்குத் தொடரலாம்' என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, 'ட்யூட்' படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களையும் பயன்படுத்த தடை விதித்துப் பாடல்களை நீக்குவதற்கு உத்தரவிடுமாறு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

நவம்பர் 26ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் தனது பாடல்களை படக் குழு பயன்படுத்தியுள்ளதாக, இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

ட்யூட் திரைப்படத்தில் ஒரு காட்சி

பட மூலாதாரம்,@Keerthiswaran_

படக்குறிப்பு,இளையராஜாவின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவரது பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது

'இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு?'

படக் குழு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், "இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமையை எக்கோ நிறுவனம் பெற்றிருந்தது. எக்கோவிடம் இருந்து சோனி நிறுவனம் வாங்கியது. நாங்கள் சோனி நிறுவனத்திடம் அனுமதியைப் பெற்று பாடல்களைப் பயன்படுத்தினோம்" எனக் கூறினார்.

ஆனால், "பாடல்களின் உரிமை தன்னிடம் உள்ளது. தனது பாடல்களை எக்கோ நிறுவனம் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது பேசிய நீதிபதி செந்தில்குமார், "30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்களைத் தற்போதும் மக்கள் ரசித்துக் கேட்கின்றனர். இதனால் இளையராஜா எந்த வகையில் பாதிப்படைகிறார்?" எனக் கேள்வி எழுப்பினார்.

"திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் படம் வெளியான பிறகு அமைதியாக இருந்துவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏன்?" எனவும் கேட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

வெள்ளிக்கிழமையன்று வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.செந்தில்குமார், "இளையராஜாவின் பாடல்களை உருமாற்றி பயன்படுத்தியதற்கு முகாந்திரம் உள்ளது. அவரது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

மேலும், 'ட்யூட்' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பாடல்களை நீக்குவதற்கு ஒன்பது வார காலம் அவகாசம் தருமாறு படக்குழு கோரியது. ஆனால் நீதிபதி அனுமதியளிக்க மறுத்துவிட்டார்.

சிக்கலை சந்தித்த 'குட் பேட் அக்லி'

முன்னதாக, அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்திலும் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்திவிட்டதாக இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தப் படத்தில், 'இளமை இதோ...இதோ', 'என் ஜோடி மஞ்சக் குருவி', 'ஒத்த ரூபாயும் தாரேன்' ஆகிய பாடல்களை படக்குழு பயன்படுத்தி இருந்தது. இந்தப் பாடல்களை சோனி நிறுவனத்திடம் இருந்து விலைக்கு வாங்கிப் பயன்படுத்தியதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் படக்குழு தெரிவித்தது.

வழக்கின் தீர்ப்பில், 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து பாடல்களை நீக்கியதால் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தெரிவித்தது.

இளையராஜா

பட மூலாதாரம்,Getty Images

காப்புரிமை பிரச்னை - எஸ்.பி.பி சொன்னது என்ன?

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் ஒன்றை இளையராஜா அனுப்பினார்.

'தன் இசையமைப்பில் உருவான பாடல்களை முன் அனுமதியின்றி மேடைகளில் பாடக்கூடாது' என அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக இளையராஜா தரப்பில் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், சமூக வலைதளப் பதிவு ஒன்றில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதைத் தெரிவித்திருந்தார்.

'முன் அனுமதியில்லாமல் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடுவது பதிப்புரிமை சட்டத்தை மீறும் செயல். அதற்காக பெருமளவில் அபராதமும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

அதோடு, "இளையராஜா தவிர, வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் நான் பாடியுள்ளேன். அந்தப் பாடல்களை வரும் கச்சேரிகளில் பாடுவேன்" என்று அவர் கூறியிருந்தார்.

"சட்டம் பற்றிய அறியாமை காரணமாக இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாடினேன். இனி சட்டத்தை மதித்து அதை ஏற்கப் போகிறேன். அதேநேரம் இதுதொடர்பாக எவ்வித கருத்துகளையும் விவாதங்களையும் எவரும் மேற்கொள்ள வேண்டாம்" எனவும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, திரைப் பயணத்தில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் இண்டஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து 'எஸ்பிபி 50' என்ற பெயரில் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடத்தினார்.

'இந்த நிகழ்ச்சிகளில் தான் இசையமைத்த பாடல்களைப் பாடக்கூடாது' என எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி.சரண், பாடகி சித்ரா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், அடுத்த ஆண்டு (2018 செப்டம்பர் மாதம்) எஸ்.பி. பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி ஒன்றில், "என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் இளையராஜா இசையமைத்த பாடல்களை மேடையில் பாடவுள்ளேன்," எனத் தெரிவித்தார்.

"தனது எந்தப் பாடலுக்கு உரிமை உள்ளது என்பதை இளையராஜா கூற வேண்டும். அப்போது இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்" எனவும் அவர் கூறியிருந்தார்.

கடந்த 2019 ஜூன் மாதம் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

இளையராஜா காப்புரிமை சர்ச்சை

பட மூலாதாரம்,Getty Images

சிக்கலை சந்தித்த 'ராத்திரி சிவராத்திரி'

"கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து காப்புரிமை தொடர்பாக வழக்கு தொடுத்து வருகிறோம்" எனக் கூறுகிறார், இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன்.

"முன்னதாக, காப்புரிமை தொடர்பாக எக்கோ மற்றும் இண்ட்ரிகோ (INDRECO) நிறுவனங்களிடமும் பிரச்னை ஏற்பட்டது. அந்த வழக்குகள் எல்லாம் தற்போது மேல்முறையீட்டில் உள்ளன" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

அவரது கூற்றுப்படி, "பல்வேறு இசை நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்தது போலவே திரைப்படங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் தனது பாடலைப் பயன்படுத்தியது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்."

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காமராசன்' படத்தில் 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்தப் பாடலை 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் அனுமதியின்றி வனிதா விஜயகுமார் பயன்படுத்தியதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஜூலை மாதம் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரிப்பில் இந்தப் படம் வெளியானது.

'படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும். இல்லையென்றால் நஷ்ட ஈடு கேட்கப்படும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'சோனி நிறுவனத்திடம் முறையாக அனுமதி பெற்று பாடலைப் பயன்படுத்தினோம்' என, வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒரு படத்தில் இருந்து பாடலை மட்டும் எடுப்பது என்பது இசைப் பணி என்ற அடிப்படையில் காப்புரிமை சட்டத்தில் வருவதாகக் கூறும் இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன், "கேசட்டுகளை வெளியிடும் உரிமையை எக்கோவுக்கு இளையராஜா வழங்கியிருந்தார். அவர்கள் அதை வேறு வகையில் பயன்படுத்தியதால் எக்கோ மீது வழக்கு தொடரப்பட்டது" எனக் கூறினார்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்பட போஸ்டர்

பட மூலாதாரம்,instagram

படக்குறிப்பு,இளையராஜாவின் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியதாக மஞ்சுமல் பாய்ஸ் படக் குழுவுக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

'மஞ்சுமல் பாய்ஸ்' படக் குழுவுக்கு நோட்டீஸ்

கடந்த 2024ஆம் ஆண்டு கேரளாவில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' படம், தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2008ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டது.

கேரளாவை சேர்ந்த நண்பர்கள் சிலர், கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். அப்போது, 'குணா குகை வரை சென்று பார்க்கலாம்' என்ற முயற்சியில் அப்பகுதிக்குச் செல்கின்றனர். அப்போது குகையில் இருந்த குழிக்குள் விழுந்த ஒருவரை எவ்வாறு மீட்டனர் என்பதே கதை.

அதில் 1991ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'குணா' படத்தில் இடம் பெற்றிருந்த 'கண்மணி அன்போடு' பாடலை படக் குழு பயன்படுத்தியிருந்தது.

இளையராஜாவின் அனுமதியின்றி பாடலைப் பயன்படுத்தியதாகக் கூறி மஞ்சுமல் பாய்ஸ் படக் குழுவுக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

'பதிப்புரிமை சட்டப்படி பாடலை உருவாக்கியவரே அந்தப் பாடலுக்கு முழு உரிமையாளர் என்பதால் முறையாக அனுமதியைப் பெற்று பாடலைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்' என அந்த நோட்டீஸில் கூறப்பட்டது.

"மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு நோட்டீஸ் மட்டும் அனுப்பியுள்ளோம். மிஸ்டர் அண்ட் மிஸஸ், குட் பேட் அக்லி, ட்யூட் ஆகிய படங்களில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது" என பிபிசி தமிழிடம் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

இளையராஜா பாடல் காப்புரிமை சர்ச்சை

பட மூலாதாரம்,Facebook

படக்குறிப்பு,இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன்

காப்புரிமை சர்ச்சை தொடங்கிய பின்னணி

தமிழ் சினிமாவில் 1976ஆம் ஆண்டு தனது இசைப் பயணத்தை இளையராஜா தொடங்கினார். தற்போது வரை இந்திய மொழிகளில் சுமார் 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

தான் இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியில்லாமல் அகி, எக்கோ ஆகிய இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால் அவற்றுக்குத் தடை விதிக்குமாறு 2018ஆம் ஆண்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில், "படத் தயாரிப்பாளரிடம் உரிமம் பெற்ற இசை நிறுவனங்கள் பாடல்களைப் பயன்படுத்த தடை இல்லை" எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். வழக்கின் முடிவில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து இசை நிறுவனங்கள் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக, பிபிசி தமிழிடம் இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் வழக்கு தொடர்வதில்லை?

இந்திய இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு காப்புரிமை மற்றும் உரிய இழப்பீட்டை பெற்றுத் தரும் வகையில் இந்தியன் பர்ஃபாமிங் ரைட்ஸ் சொசைட்டி (IPRS) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, சட்டபூர்வமாக இசையைப் பயன்படுத்துவதற்கு பதிப்புரிமை சங்கமாக இசையமைப்பாளர்களுக்கு உதவி வருவதாக அதன் இணையதளத்தில் கூறியுள்ளது.

தாங்கள் உருவாக்கும் இசைக்கு நியாயமான ஊதியத்தை இசையமைப்பாளர்கள் பெறுவதை தாங்கள் உறுதி செய்வதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக இளையராஜா அறிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், "எனது அனைத்துப் பாடல்களின் உரிமையையும் நான் வைத்திருக்கிறேன். ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இல்லை என்பதால் எனது பாடல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பெறும் காப்புரிமைத் தொகை சினி இசைக் கலைஞர்கள் சங்கத்திற்குச் செல்லும்" எனக் கூறியிருந்தார்.

சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,இந்தியன் பர்ஃபாமிங் ரைட்ஸ் சொசைட்டியில் இருந்து இளையராஜா வெளியேறியதால், அவர் தனியே வழக்கு தொடுக்கும் சூழல் ஏற்பட்டது என்கிறார் சினிமா விமர்சகர் ஆர்.எஸ்.அந்தணன்

"ஐ.பி.ஆர்.எஸ் அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறிய பிறகே காப்புரிமை தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன" என்கிறார், சினிமா விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.எஸ்.அந்தணன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட இசையமைப்பாளர்கள் பலரும் ஐபிஆர்எஸ் அமைப்பில் உள்ளனர். உலகில் எங்கு பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அதைக் கண்டறிவதற்கான மென்பொருளை இந்த அமைப்பு வைத்துள்ளது" எனக் கூறுகிறார்.

"இசையைப் பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து அதற்கான ராயல்டி பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை இசையமைப்பாளர்களுக்கு அந்த அமைப்பு வழங்கி வருகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பில் இருந்து இளையராஜா வெளியேறியதால், தனது பாடல்களைப் பயன்படுத்துகிறவர்கள் மீது அவர் தனியே வழக்கு தொடுக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார் ஆர்.எஸ்.அந்தணன்.

"தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி இளையராஜா வழக்கு தொடுத்து வருகிறார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு ஐபிஆர்எஸ் அமைப்பே சட்டரீதியாக இழப்பீட்டைப் பெற்றுத் தருகிறது. இதனால் அவர்களின் பெயர்கள் நேரடியாக வெளியில் தெரிவதில்லை" எனவும் ஆர்.எஸ்.அந்தணன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c20kggpenm8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.