Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திட்வா, சென்யார்: வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் இரு புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது?

திட்வா, சென்யார், இந்தியா, இலங்கை, இந்தோனீசியா, வங்கக்கடல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வங்கக்கடலில் புயல் நிலை கொண்டிருப்பதை காட்டும் படம் (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திட்வா புயல், இலங்கையில் சமீபத்திய ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டிலும் திட்வா புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், வங்கக்கடலில் உருவான சென்யார் புயல் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

வங்கக் கடலில் புயல்கள் மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை அதிகரித்து வருவதை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிபுணர்களின் கூற்றுப்படி, புவி வெப்பமயமாதலின் விளைவாகக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதும், வளிமண்டல ஈரப்பதம் அதிகரிப்பதும், வங்கக் கடலில் புயல்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன.

ஆனால், கடல் சூடாவதற்கும் திட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தியதற்கும் என்ன தொடர்பு? வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் 2 புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது?

'ஒரே காலகட்டத்தில் உருவான இரண்டு புயல்கள்'

வங்கக் கடல் பகுதியில் இந்த வாரம் மலாக்கா ஜலசந்திக்கு அருகில் சென்யார், இலங்கையின் தெற்கே திட்வா என இரண்டு புயல்கள் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் உருவாயின.

"வங்கக் கடல் பகுதியில் இது மிகவும் அரிதான நிகழ்வு" என்றார், சென்னையைச் சேர்ந்த சுயாதீன வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்.

"சில தருணங்களில் ஒரு புயல் சின்னம் வங்கக் கடலிலும் மற்றொரு புயல் சின்னம் அரபிக் கடல் பகுதியிலும் உருவாகும் என்றாலும் வங்கக் கடல் பகுதியிலேயே ஒரே நேரத்தில் இப்படி இரண்டு சுழற்சிகள் உருவாகிப் புயலாக மாறியது அரிதிலும் அரிது," என்று கூறுகிறார் ஸ்ரீகாந்த்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கடந்த 2019-ஆம் ஆண்டில், கியார், மஹா ஆகிய இரு புயல்கள் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் உருவானதை நினைவுகூர்ந்த அவர், "அதுபோன்ற நிகழ்வு வங்கக் கடல் மண்டலத்திற்குள் பதிவாவது அரிதான ஒன்று," என்று தெரிவித்தார்.

திட்வா, சென்யார், இந்தியா, இலங்கை, இந்தோனீசியா, வங்கக்கடல்

படக்குறிப்பு,திட்வா புயல் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு

இந்தப் புயல்கள் எங்கு உருவாயின என்பதுதான் இவற்றின் மீது மேலதிகமாக கவனம் செலுத்துவதற்கு காலநிலை ஆய்வாளர்களைத் தூண்டுகிறது.

பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில் கோரியாலிஸ் ஆற்றல் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதால், 5 டிகிரிக்கும் உள்ளே இருக்கும் பகுதிகளில் புயல் உருவாவது அரிதிலும் அரிது. புயல்கள் சுழல்வதற்குத் தேவையான ஆற்றலே கோரியாலிஸ் விளைவு என்றழைக்கப்படுகிறது. ஆனால், சென்யார், பூமத்திய ரேகைக்கு மிக அருகில், வடக்கே 4.9 டிகிரிக்கு அருகில் உருவானது.

அங்கு உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்யார் புயலாக உருவெடுத்து, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திட்வா புயலாக மாறியது. இந்தப் புயல் மெதுவாக நகர்ந்து வருவதால், நீண்டநேரம் நீடித்திருந்து, அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

திட்வா, சென்யார், இந்தியா, இலங்கை, இந்தோனீசியா, வங்கக்கடல்

பட மூலாதாரம்,Sri Lanka Airforce

படக்குறிப்பு,இந்திய பெருங்கடல் பகுதி, உலகின் வேகமாக வெப்பமடையும் வெப்பமண்டல பெருங்கடல் என்று கூறப்படுகிறது.

கடல் சூடாவதே அசாதாரண புயல்கள் உருவாகக் காரணமா?

ஹைதராபாத்தில் உள்ள பார்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பாலிசியின் ஆராய்ச்சி இயக்குநரும் காலநிலை விஞ்ஞானியுமான பேராசிரியர் அஞ்சல் பிரகாஷின் கூற்றுப்படி, புயல் அசாதாரணமாக பூமத்திய ரேகைக்கு அருகிலேயே உருப்பெறுவது ஒரு தற்செயலான நிகழ்வு இல்லை.

"காலநிலை மாற்றத்தால் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் பூமத்திய ரேகைக்கு அருகிலும் கடல் நீர் சூடாகி, புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது."

"கடல் மேற்பரப்பின் வெப்பநிலை 28 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சூடாக இருந்தால் அங்கு புயல் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பு புயல் உருவாகாத பகுதிகளிலும்கூட வெப்பநிலை இந்த அளவுக்கு உயரும்போது, அது நிலைமையை மாற்றுகிறது," என்று விளக்கினார் அஞ்சல் பிரகாஷ்.

கடந்த சில தசாப்தங்களில் வங்கக் கடல், அரபிக் கடல் என இரண்டுமே கணிசமாக வெப்பமடைந்துள்ளதாகக் கூறுகிறார் அவர். மேலும், "கடல் மேற்பரப்பின் வெப்பநிலை பல பகுதிகளில் 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1.4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. கடல் பரப்பில் வெப்ப அலைகள் தோன்றுவதும் அவை நீடிக்கும் காலமும் அதிகரித்துள்ளது," என்றும் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ் சுட்டிக்காட்டுகிறார்.

திட்வா, சென்யார், இந்தியா, இலங்கை, இந்தோனீசியா, வங்கக்கடல்

பட மூலாதாரம்,Sri Lanka Airforce

படக்குறிப்பு,புயலின் தன்மையை அடிப்படையாக வைத்து பேரிடர் மேலாண்மை தொடர்பான திட்டங்களை வகுப்பதைச் சவாலாக்குகிறது.

இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தரவுகள்படி, 1951 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கு 0.15 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை உயர்ந்து வந்துள்ளது. 1982 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் வங்கக் கடலில் மட்டும் 94 கடல் வெப்ப அலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

இந்தப் போக்கு, புயல்கள் மற்றும் பருவநிலைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறும் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ், இதனால் அவற்றைக் கணிப்பதிலும் சவால்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

'திட்வா புயல் மெதுவாக நகர்வதே காரணம்'

ஆனால், அனைத்து நிபுணர்களும் சமீபத்திய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படவில்லை.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் முனைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, பிபிசி தமிழிடம் பேசியபோது, சென்யார் மற்றும் திட்வா புயல் ஒரே காலகட்டத்தில் உருவானது ஒரு தற்செயலான நிகழ்வுதான் என்று குறிப்பிட்டார்.

அதோடு, "புயல் உருவாவதை வெப்பநிலை தவிர வேறு பல காரணிகளும் தீர்மானிக்கின்றன. வங்கக் கடல் இயற்கையாகவே தீவிர புயல்கள் உருவெடுக்கக் கூடிய கடல் பகுதியாகும். அத்தகைய பகுதியில், புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் எந்த வகையிலும் அதிகரித்துவிடவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, சென்யாரும் திட்வாவும் ஒப்பீட்டளவில் குறைந்த தீவிரம் கொண்ட புயல்களே. "இலங்கை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் திட்வா பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம், அது மெதுவாக நகர்வதுதான். அது மெல்ல நகர்வதாலும், அதிக நேரம் புயல் நீடிப்பதாலும், மழைப் பொழிவு தீவிரமாக உள்ளது," என்று குறிப்பிட்டார் முனைவர் மொஹபத்ரா.

திட்வா, சென்யார், வங்கக்கடல், புயல், புவி வெப்பமடைதல்

படக்குறிப்பு,புயல் மற்றும் கனமழையுடன், வெள்ளப் பேரிடர்களும் நிலச்சரிவுகளும் சேர்ந்து வருவதால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரங்களில் உள்ள பல மாவட்டங்களில் காலநிலை தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகிறது.

வானிலையை கணிப்பதில் ஏற்படும் சிக்கல்

புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப்படி, ஒரு காலத்தில் ஒப்பீட்டளவில் அமைதியானதாகக் கருதப்பட்ட அரபிக் கடலில், 1980களில் இருந்து தீவிர புயல்கள் தோன்றுவது 150% அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், வங்கக் கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகி வருகிறது. உதாரணமாக ஆம்பன் புயல் உருவானபோது வங்கக் கடலில் 32-33 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலை நிலவியது.

அதாவது, "ஒரு காலத்தில் உச்சகட்ட பருவமழை மற்றும் பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில் மட்டுமே இருந்த நிலைமை இப்போது ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நிலவுகின்றன. இதனால் புயல்கள் தோன்றக்கூடிய காலகட்டங்களும் மாறுகின்றன," என்று கூறுகிறார் அஞ்சல் பிரகாஷ்.

அவரது கூற்றுடன் உடன்படும் வகையில் பேசிய, இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி முனைவர் ராக்ஸி மேத்யூ கோல், இந்தியாவின் வானிலை கணிக்க முடியாததாக மாறி வருவதாகக் கூறுகிறார்.

"புவி வெப்பமடைவதில் 93 சதவிகிதத்திற்கும் அதிகமான வெப்பத்தை பெருங்கடல்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. இந்தியா மூன்று பக்கங்களிலும் வேகமாகச் சூடாகி வரும் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது.

அந்தச் சூடான கடல் பரப்பில் நிலவும் வெப்பக் காற்று, ஈரப்பதத்தை அதிகமாகத் ஈர்த்துக் கொள்ளும். இதனால் நீண்ட காலம் மழை பெய்யாமல் இருக்கும். எனவேதான், மழை பெய்யும் காலகட்டத்தில், அது லேசான, பரவலான மழைப்பொழிவாக இல்லாமல், குறுகிய, மிகத் தீவிரமான கனமழையாக இருக்கிறது," என்று விளக்கினார் முனைவர் ராக்ஸி.

அதோடு, இதே கடல் வெப்பம்தான், இந்திய பெருங்கடல் பகுதிகளில் புயல்களையும் தீவிரப்படுத்தி, அவை நீண்ட காலம் நீடிக்கவும், வேகமாகத் தீவிரமடையவும் வழிவகுப்பதாகத் தெரிவித்தார் அவர்.

திட்வா, சென்யார், வங்கக்கடல், புயல், புவி வெப்பமடைதல்

கடலோரப் பகுதிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து

புயல் மற்றும் கனமழையுடன், வெள்ளப் பேரிடர்களும் நிலச்சரிவுகளும் சேர்ந்து வருவதால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரங்களில் உள்ள பல மாவட்டங்களில் காலநிலை தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகிறது. அதோடு, ஒவ்வொரு ஒரு டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை உயர்வும் புயலின் தீவிரம் பத்து மடங்கு அதிகரிக்க வழிவகுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலநிலை விஞ்ஞானிகளை கவலையடைச் செய்யும் விஷயமும் இதுதான். பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ் கூற்றுப்படி, "கடல் வெப்ப அலைகள் 2050ஆம் ஆண்டுக்குள், 'ஆண்டின் மூன்றில் இரண்டு பங்கு' காலத்திற்கு நீடிக்கலாம். அதன் காரணமாக, சென்யார், திட்வா போன்று ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாவது பொதுவான வானிலை நிகழ்வாகிவிடக் கூடும்."

இதனால், புயல்களின் தாக்கங்களுக்கு நடுவில், "மீட்புக்குத் தேவைப்படும் கால அளவு" சுருங்கக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கிறார் அவர். குறிப்பாக, ஒரு புயலை எதிர்கொண்டு சமாளிக்கும் நேரத்திற்குள், மக்கள் மற்றுமொரு புயலின் தாக்கத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது சவாலாகிவிடும் என்கிறார் அஞ்சல் பிரகாஷ்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு, மாறி வருகின்ற இந்த சூழல் மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்துகின்றன, அதற்கு திட்வா மிகச் சமீபத்திய சான்றாக விளங்குகிறது என்றார் அவர்.

திட்வா, சென்யார், வங்கக்கடல், புயல், புவி வெப்பமடைதல்

தெற்காசியாவில் மோசமான வானிலை நிகழ்வுகள், மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நடந்துள்ளன.

ஐ.நா.வின் 30வது காலநிலை உச்சி மாநாட்டில் இந்தியா தனது புதுப்பிக்கப்பட்ட காலநிலை வாக்குறுதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலோரப் பாதுகாப்பு, நகர்ப்புற வெள்ளப் பேரிடர் மேலாண்மை, தாங்குதிறன் மிக்க உள்கட்டமைப்பு போன்ற காலநிலை தகவமைப்பு நடவடிக்கைகள் குறித்த தெளிவு இந்தியாவிடம் இன்னும் குறைவாகவே இருப்பதாகக் கூறுகிறார் அஞ்சல் பிரகாஷ்.

உறுதியான தகவமைப்புத் திட்டங்கள் இல்லாமல், கிழக்குக் கடற்கரைகளின் பாதிப்புகளை இந்தியா எதிர்கொள்வதாக எச்சரிக்கும் அவர், போதுமான, நீண்டகாலத் திட்டமிடலின்றி இலங்கையும் தொடர்ந்து காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசிய அவர், "இந்தியா தனது நீண்டகால இலக்குகளை அடைய சுமார் 21 டிரில்லியன் டாலர் காலநிலை நிதி தேவை என்று சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், தெளிவான திட்டத்தை முன்வைக்காத காரணத்தால், அதுகுறித்த விவாதங்களில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது." என்று குறிப்பிட்டார்.

இந்தியா, இலங்கை இடையிலான முன்னெச்சரிக்கை ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளதாகக் கூறிய அஞ்சல் பிரகாஷ், "இரு நாடுகளும் தொடர்ந்து பேரிடர்களைச் சந்திக்கின்றன. அவை கணிக்க முடியாதவையாக, கடுமையானவையாக இருக்கின்றன. ஆகவே அதற்கேற்ற பேரிடர் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை இரு நாடுகளும் மேம்படுத்த வேண்டியது அவசியம்," என்று விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, சென்யார் மற்றும் திட்வா புயல்கள் ஒரே நேரத்தில் தோன்றியது, கடல் நிலைமைகள் மாறிக் கொண்டிருப்பதன் அறிகுறி.

உலகில் வேகமாகச் சூடாகி வரும் வெப்பமண்டல கடல் பரப்பில் இருக்கும் இந்தியா மற்றும் இலங்கையின் புதிய யதார்த்தம் இதுதான் என்கிறார் அஞ்சல் பிரகாஷ்.

அவரைப் பொருத்தவரை, சென்யார் மற்றும் திட்வாவின் கதை இரண்டு புயல்களைப் பற்றியது மட்டுமல்ல. அது மாறி வரும் ஒரு பெருங்கடலின் தன்மை மற்றும் அதன் விளைவாக, இந்த நாடுகளின் கடலோரப் பகுதிகளில் எதிர்காலத்தில் மேலதிகமாக பாதிக்கப்படக் கூடிய நிலையில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான மக்களைப் பற்றியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g9w1wvy35o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.