Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01

பகுதி: 01 - நல்லூர் திருவிழாவுக்கு வருகையும் & சந்திப்பும்

ஆகஸ்ட் 2025 சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது பொன்னிறமாக பிரகாசித்தது. அதன் குறுகிய பாதைகளில் மாலைகள், இனிமையான கற்பூரப் புகை மற்றும் தவில் மேளங்களின் இன்னிசை ஒலிகளால் அதன் அரவணைப்பு நிரம்பியிருந்தது. நல்லூர் முருகன் திருவிழா அதன் உச்சத்தை எட்டியிருந்தது - ஆயிரக்கணக்கானோர் பிரகாசமான வேட்டிகளையும் அழகு மின்னும் புடவைகளையும் அணிந்து கொண்டு தெருக்களில் திரண்டனர். அவர்களின் கண்கள் அலங்காரமாக அலங்கரிக்கப்பட்ட தமிழ் கடவுளான, 'அலங்காரக் கந்தனைச்' சுமந்து செல்லும் தேரை நோக்கி உயர்ந்தன.

“பஞ்சம் படை வந்தாலும்
பட்டினி தான் வந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி கிளியே,
நல்லூர் கந்தன் தஞ்சமடி”

என்று நல்லைக் கந்தனின் புகழை யோகர் சுவாமிகள் பாடுகிறார். முருகன் என்றால் அழகன் என்பர். அழகன் என்றால் இலங்கை வாழ் மக்களைப் பொறுத்தவரையில் மனக் கண்ணில் தெரிபவன் நல்லூர்க் கந்தனேயாவான். அப்படியான முருகனின் திருவிழாவில் கலந்துகொள்ள, ஆரன் வேட்டி மற்றும் வெள்ளை சட்டையுடன், பெரிதாக எந்த ஆடம்பரமும் இல்லாமல், என்றாலும் தேர்த் திருவிழா காலை என்பதாலும், யாழ் வெக்கையான பகுதி என்பதாலும், சன் கிளாஸ் (Sun Glass) அணிந்து இருந்தாலும், அதை சரிசெய்து, ஒரு வெளிநாட்டவரைப் போல அதிகமாகத் தோன்றாமல் இருக்க முயன்றான். பிறந்து வளர்ந்தது எல்லாம் வெளிநாடு என்பதால், அவனுக்கு இயல்பாக தமிழ் பேசுவது கடினமாக இருந்தது. ஆனாலும், கோயில் மணிகள் முழங்கும்போது, அவனுக்குள் ஏதோ ஒரு ஒலி எழுந்தது. இந்த ஒலி ... அவனின் தந்தை மற்றும் அம்மா, உயர் வகுப்பு படிக்கும் பொழுது, தம் தம் பெற்றோருடன் இலங்கையை விட்டு வெளியேறும் பொழுது, என்னென்னெ நடந்தது என்று, அவனுக்குச் சொன்ன கதைகளில் ஒலித்த ஒலி, அது அவனின் தாத்தா பாட்டியின் இதயத் துடிப்பு!

கோயிலின் கிழக்கு வாயிலுக்கு அருகில் ஒரு மூலையில் திரும்பி நின்றான். அப்போது தான் அவன் அவளைப் பார்த்தான். அனலி தன் சகாக்களுடன், நல்லூரில் தற்காலிகமாக அமைந்துள்ள, 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' என்ற நிறுவனத்தின் விளம்பர குடிலில், தங்கள் நிறுவனத்தை அறிமுகப்படுத்திக் கொண்டும், அதேவேளை பக்தர்களுக்கு சக்கரைத் தண்ணீர் வழங்கிக் கொண்டும் நின்றாள். அவளுடைய சேலை சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் மின்னி, தெய்வத்தின் அலங்காரங்களை கிட்டத்தட்ட எதிரொலித்தது. அவளுடைய தலைமுடியில் இருந்த மல்லிகை, தூபத்துடன் கலந்த ஒரு நறுமணத்தை வெளியிட்டது. அவளுடைய சகாக்கள் ஏதோ கிசுகிசுத்ததைப் பார்த்து அவள் சிரித்தாள், அவளுடைய சிரிப்பு திருவிழா சத்தத்தை விட அதிகமாக அவன் உள்ளத்தில் பதிந்தது.

சுற்றுலா பற்றி மேலதிக விபரங்களை நேரடியாக அறியும் சாட்டில், ஆரன் அங்கு சென்றான். அவன் இதயம் மிருதங்கத்தை விட பலமாக துடித்தது. தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாற, “மன்னிக்கவும்,” என்று கூறிக் கொண்டு, சக்கரைத் தண்ணீரை கொஞ்சமாக வாங்கிக் கொண்டு, “வடக்கு கிழக்கு சுற்றுலா ஏற்பாடு பற்றி விபரமாகக் கதைக்கலாமா? ” என்று அனலியிடம் கேட்டான்.

அனலி அவனைப் பார்த்தாள், அவள் கண்கள் குறும்புத்தனமாக இருந்தன. “ஆமாம் … தாராளமாக, ஆனால், அதற்கு முதல், நீங்கள் இந்த சக்கரைத் தண்ணீரை குடிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறீர்களா? இது மிகவும் இனிப்பானது. யாழ்ப்பாணத்தைப் போலவே.” என்றாள். ஆனால் அவன் உள்ளம், 'ஆமாம் மிகவும் இனிப்பானது உன்னைப் போலவே' என்று சொல்ல துடித்தாலும், அவளின் கடைவிழி பார்வையில், கொஞ்சம் தடுமாறி, தனக்கு தெரிந்த தமிழில், அவன் வாய் தனக்குள் முணுமுணுத்தது.

பெண் நிலவு உன்னைப் பார்த்து
வெண் நிலவும் பொறாமை கொள்ளுதோ
கண்ணழகி உன்னைப் பார்த்த நானும்
வண்ண ஒளி கந்தனை மறந்தேனோ?



அலைகடலென திரண்ட அடியார் கூட்டத்தில்
அலைமோதுதே என்மனம் உன் விழிகளில்
அறியாத உணர்வுகளின் வரிகள் எல்லாம்
அழகாக உன்னுதட்டினில் புதைத்து எனோ?

அவளுடைய சகாக்கள் சிரித்தனர். ஆரன், ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு, “நான் மேப்பிள் சிரப்பை [பாகு / syrup] சாப்பிட்டு வளர்ந்தவான். சக்கரை ஒன்றும் எனக்குப் பெரிது இல்லை" என்றவன், தான் முதலில் சொல்ல விரும்பியதைச் சொல்ல வாய்ப்புக் கிடைத்தது. "ஒருவேளை யாழ்ப்பாணத்தின் இனிப்பு கொஞ்சம் வலிமையானதாக இருக்கலாம், உன்னைப்போல” என்று அவளை ஏறிட்டுப் பார்த்தான். தினமும் அவன், தன் வேலைத்தளத்தில் பல பெண்களோடு கதைக்க, பழக நேரிடும். சில நேரங்களில் அருகில் நெருக்கமாக அமர்ந்தும் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஏற்படாதா ஓர் உணர்வும் புது மாற்றமும் அவளுக்கு எதிராக இப்ப நிற்கும் பொழுது ஏற்படுவது அவனுக்குப் புரியவில்லை. ‘என்ன பொண்ணு டா இவ’ என சொல்லத் துடித்த நா வை அடக்க முடிந்தாலும், மனதை அடக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் ‘என்ன பொண்ணு டா இவ’ என்றே மனசு முணுமுணுத்தது.

அனலி புருவத்தை உயர்த்தி, “மேப்பிள் சிரப்? .. அப்ப … நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவரா?” என்று கேட்டாள். “ஆம். கனடா. முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். பிரச்சனைகளின் போது என் பெற்றோர் வாலிப வயதில் இங்கிருந்து வெளியேறினர்.” அவனின் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாறினாலும், சமாளித்து முழுமையாகத் தமிழில் கூறினான்.

அவள் புன்னகை கொஞ்சம் தணிந்தது. "அப்போ நீங்கள் சரியான நேரத்தில் தான் வந்து விட்டீர்கள். நல்லூர் திருவிழா உள்ளூர்வாசிகளை மட்டும் வரவேற்காது, புலம்பெயர்ந்தோரையும் வரவேற்கிறது." என்றாள். பின் அந்த குடிலில் இருந்த மேசை அருகில் போய், தானும் அமர்ந்து அவனையும் அமரச் சொன்னாள்.

அப்போது, தங்கத் தேர் தெருவில் திரும்பும் போது கூட்டம் அலை மோதியது. மணிகள் முழங்க, சங்குகள் முழங்க, "வேல் வேல்!" என்ற கோஷங்கள் காற்றை நிரப்பின. ஆரனும் அனலியும், சுற்றுல்லா பற்றிய உரையாடலை சற்று நிறுத்தி, வெளியே எட்டிப் பார்த்தனர். ஆனால், பக்தர்களின் அலையால் இருவரும் மிக நெருக்கமாக தள்ளப்பட்டு, தோளோடு தோள் நின்று, பூக்களால், தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அலங்காரக் கந்தனை வழிப்பட்டனர்.

அனலி கிட்டத்தட்ட பயபக்தியுடன் அவனின் காதில், "நல்லூர் ஒரு கோயில் அல்ல, யாழ்ப்பாணத்தின் இதயம்" என்று கிசுகிசுத்தாள். ஆரன் அவளைப் பார்த்தான் - அவள் ஒரு அழகு தேவதை போல் அவனுக்கு இருந்தது. அவள் கண்கள் எண்ணெய் விளக்குகளைப் போல அவன் இதயத்தில் பிரகாசித்தன.

தேர் விலகிச் செல்லும் போது, கூட்டம் குழுக்களாகப் பிரிந்தது - சிலர் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி கடைகளுக்குச் சென்றனர், மற்றவர்கள் காவடி நடனக் கலைஞர்களுக்காக வாசிக்கும் மேளதாளங்களை நோக்கிச் சென்றனர். கூட்டம் குறைய, அவர்கள் மீண்டும் மேசைக்குப் போய், சுற்றுலா ஏற்பாடு பற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். ஆனால், ஆரன் அனலியே சுற்றுலா வழிகாட்டியாக வரவேண்டும் என்று வலியுறுத்தினான்.

அப்பொழுது அனலியின் அக்காவின் குட்டி மகள், அவளது கையை இழுத்து, “சித்தி, நாமும் காவடி நடனத்தைப் பார்ப்போம்!” என்று கெஞ்சினாள். அனலியின் அப்பா தான் இந்த நிறுவனத்தின் முகாமையாளர். அப்பாவை கேட்டு நாளை பதில் சொல்லுகிறேன் என்று அவனது தொடர்பு இலக்கத்தை அவசரம் அவசரமாக பதித்துக் கொண்டு, தன் அக்காவின் மகளுடன் காவடி நடனம் பார்க்கப் புறப்பட்டாள்.

அவனின் மனதில் அவளின் அழகு, பேசும் தொனி ஒரு சொல்ல முடியாத உணர்வைக் கொடுக்க, அவன் ஒரு தைரியத்தை வரவைத்துக் கொண்டு உச்சந்தலை முதல், முன் பாதம் வரை அவளைப் பார்வையிட்டான். உச்சந்தலையில் குங்கும பொட்டில்லை, காலில் மெட்டியில்லை. 'கலைந்துபோன அவளின் கூந்தலை கண்டு, கட்டிபோட்டிருந்த அவன் மனமும் கொஞ்சம் கலைந்தே போனது !' ஆரன் தயங்கி, “நானும் உங்களுடன் சேர்ந்து கொண்டால் உங்களுக்கு ஆட்சேபனையில்லையா?” என்று கேட்டான்.

அனலி அவனிடம் ஒரு குறும்புத்தனமாக புன்னகைத்து, “ காவடி நேரடியாக பார்ப்பது இதுவா முதல் முறை” என்றாள். ஆனால், அவன் மௌனமாக, அவர்களுடன் ஒன்றாகக் காவடி நடனக் கலைஞர்களிடம் நடந்து சென்றான். ஆண்கள் வெறுங்காலுடன், மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட காவடியை தோளில் சுமந்து, தாளத்துக்கு ஏற்றவாறு உற்சாகமாக நடனம் ஆடினர். அதேவேளை ஒரு குழந்தைகள் குழு குச்சிகள் மற்றும் வண்ண காகிதங்களால் செய்யப்பட்ட பொம்மை காவடிகளை ஏந்திச் சென்றது. அவர்களில் ஒரு குழந்தை ஆரன் மீது மோத, பொம்மைக் காவடி நிலத்தில் தவறி விழுந்து, சிறிது அலங்கோலமாகி விட்டது. ஆரன் சாரி [sorry] என்று சொல்லி, அதை எடுத்து கொடுத்தான். அனலி சிரித்தாள். “பார்த்தாயா? குழந்தைகள் கூட நீ இங்கே சேர்ந்தவனா என்று சோதிக்கிறார்கள்.” என்றாள்.

ஆரனுக்கு, யாழ்ப்பாணம் அவனது பெற்றோரின் நினைவாக மட்டும் அல்ல. அது குறும்புத்தனத்தையும் அழகையும் சுமந்த ஒரு இளம் பெண்ணின் வடிவத்தில், அவனுக்கு முன்னால் உயிருடன் நின்றது. அனலியை பொறுத்தவரை, புலம்பெயர்ந்த அந்நியன் மற்றொரு பார்வையாளர் மட்டுமல்ல. அவன் நல்லூரை நோக்கிப் பார்த்த விதம் - உடைந்த வேர்களைத் தைக்க முயற்சிப்பது போல - அவளை அமைதியாகத் தொட்டது.

அன்று இரவு, கோயில் கோபுரங்களுக்கு மேலே பட்டாசு வெடித்தபோது, ஆரன் நினைத்தான்: ஒருவேளை யாழ்ப்பாணம் வந்தது கடந்த காலத்தைக் கண்டுபிடிப்பது பற்றியதாக மட்டும் அல்ல, அது எதிர்காலத்தைக் கண்டுபிடிப்பது பற்றியதாகக் கூட இருக்கலாம்? என்று.

அன்று மாலை, கோயில் வருகைக்குப் பிறகு, ஆரன், அனலி தந்தையின் வீட்டோடு சேர்ந்த 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' டின் முதன்மை அலுவலகத்திற்கு சென்றான். அனலியின் தந்தையுடன் அங்கு அமர்ந்தான். தெருவில் இருந்து மல்லிகை மற்றும் வறுத்த நிலக்கடலையின் வாசனை அங்கு வீசிக்கொண்டு இருந்தது.

அனலியின் தந்தை ஆரனை அளவான புன்னகையுடன் பார்த்து, ' கான் ஐ ஹெல்ப் யு? [can I help you]' என்று கேட்டார். அவன் வந்த நோக்கத்தை விபரமாகச் சொன்னான். “ஆரன், நீ கனடாவில் இருந்து இவ்வளவு தூரம் வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிலத்தின் மீது இவ்வளவு அன்புடன் பேசுகிறாய். ஆனால் சொல்லுங்கள் - ஏன் எங்கள் மகளை சுற்றுலா வழிகாட்டியாக, இந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்

ஆரன் மரியாதையுடன் அவரை அழைத்து, "நான் வெளிநாட்டில் பிறந்திருக்கலாம், ஆனால் என் வேர்கள் இங்கேதான். புலம்பெயர்ந்த நம்மில் பலர் கதைகளை மட்டுமே கேட்கிறோம். ஆனால் நாம் நம் கண்களால் இந்த நிலத்தைப் பார்க்க வேண்டும். அனலி சுற்றுலா துறையிலும் வரலாற்றிலும் கல்வி பயின்றவள் என்று அறிகிறேன். எனவே, நாம் பார்க்கவேண்டிய இடங்களையும் அந்தந்த இடத்தைப்பற்றி சரியான விபரத்தையும் தரக்கூடியவள் என்று எண்ணுகிறேன். அதனாலத்தான் ... '' என்று இழுத்தான். ' மற்றும்படி, இந்த அறிவுகளுடன் யார் வந்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை' என்று முடித்தான்.

“ஆரன், உன் வேர்களை மீண்டும் கண்டுபிடிக்க வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாய். நான் உன்னுடன் ஒரு பெரியவரை அனுப்பினால், நீ கவனமாகப் பேசும் வார்த்தைகளை மட்டுமே கேட்பாய். ஆனால், உன் விருப்பம் படி அனலி வழிகாட்டியாக வந்தால், இருவரும் சுதந்திரமாகப் பேசுவீர்கள் - இளைஞர்களாக, சமமாக. உண்மை வரலாறு ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயத்திற்குப் பரவும் என்று நம்புகிறேன்”

அனலி ஆச்சரியத்துடன் அப்பாவைப் பார்த்தாள்.

அப்பா (புன்னகையுடன்): “ஆமாம், குழந்தாய். ஆரனின் மரியாதையையும் உன் ஞானத்தையும் நான் நம்புகிறேன். நீ நம் நிலத்தின் வரலாற்றைக் கற்றுக் கொடுக்க, அதை இன்றைய நிலைமையில் இருந்து எடுத்துச் செல்லப் போகிறாய். அவ்வளவுதான் ” என்றார்.

ஆரன் நன்றியுடன் தலை குனிந்தான். “நான் அனலியை என் சொந்த சகோதரியைப் போலவே மரியாதையுடன் நடத்துவேன்.” என்றான். அனலியின் தந்தை தலையசைத்தார். "நீ நன்றாகப் பேசுகிறாய், ஆரன். இவை புனிதமான பயணங்கள் - நகுலேஸ்வரம், கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், கதிர்காமம், நல்லூர். உனது நோக்கம் - பண்பாடு மற்றும் வரலாறு என்பதால், நாங்கள் உன்னை நம்புகிறோம்."

அனலியின் தந்தை, ஆரனின் கண்களைப் பார்த்து, அங்குள்ள நேர்மையை அளந்து, இறுதியாக தலையசைத்தார். "சரி. போ. பயணம் செய், கற்றுக்கொள், பெரியவர்கள் கூட மறந்துவிட்ட கதைகளுடன் திரும்பி வா" என்றார்.

அருகில் அமர்ந்திருந்த அனலி கீழே பார்த்தாள், ஆனால் அவள் கண்கள் உற்சாகத்தால் பிரகாசித்தன. அவள் தான், தனக்கு ஒரு துணையாக, அக்கா மகளையும் - பாடசாலை விடுமுறை என்பதால் - கூட்டிப்போகவா என்று கேட்டாள்.

அவளுடைய தந்தை , “அப்படியானால் ஓகே , ஆனால் கவனமாக. நினைவில் கொள்ளுங்கள் - நீங்கள் உங்கள் இளமையை மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தின் கண்ணியத்தையும் சுமக்கிறீர்கள். ஆரன், நீ அவளைப் பாதுகாக்கவும். அவள் துக்கத்துடன் அல்ல, அறிவுடன் திரும்பட்டும்.” என்றார்.

அன்று இரவு, மேசை விளக்கின் கீழ், அனலி தனது நாட்குறிப்பில் எழுதினாள் :

“நாளை நான் ஆரனுடன் நடப்பேன்;
அந்நியனோடு அல்ல,
அவன் மறந்துபோன பாரம்பரியத்தின்
கதவுகளைத் திறக்கும் ஒரு வழிகாட்டியாக!

அவன் காலடி பாதைகளில்
எம் முன்னோரின் நிழல்கள் விழித்தெழட்டும்
என் வார்த்தைகளில்
நாம் இழந்த வரலாறு மீண்டும் உயிர்பெறட்டும்!”

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 02 தொடரும்

கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01

https://www.facebook.com/groups/978753388866632/posts/32609831688665390/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 02

அத்தியாயம் 2 - நகுலேஸ்வரம் மற்றும் கோணேஸ்வரத்தில் உள்ள பண்டைய தொடர்புகள்

மறுநாள் காலை, சூரியன், அனலியின் வீட்டிற்கு அருகில் இருந்த யாழ்ப்பாணக் குளத்தின் மீது உதயமாகி, வானத்தை காவி மற்றும் ரோஜா நிறங்களில் குளிப்பாட்டியது. ஆரனும் அனலியும் கீரிமலையை நோக்கி ஒன்றாகப் பயணித்தனர். அங்கு, காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான, தீர்த்தத் திருத்தலமான நகுலேஸ்வரம் கோயில் பெருமையுடன் நின்றது. இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும் [பல ஆலமரங்களைப் போல அல்லாமல், கல்லால மரத்திற்கு விழுதுகள் இல்லை. இது ஒரு அரிய வகை மரமாகும்], தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது.

போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட இந்த ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் [இந்துக் கோவில்களில் கருவறை அல்லது மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதை அல்லது மதில் பகுதி] ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர் என்பது வரலாறாகும்.

மல்லிகை மற்றும் கடல் உப்பு கலந்த நறுமணத்தால் காற்று நிரம்பியிருந்தது. அங்கே யாத்ரீகர்கள் [பயணிகள்] வெறுங்காலுடன் நடந்து, சிவனிடம் பிரார்த்தனை செய்தனர்.

புனித கீரிமலை தீர்த்தக் கேணி அருகே ஆரன் குளிர்ந்த நீரைத் தொடக் குனிந்து, “இந்த நீரூற்று கூட நினைவாற்றலைக் கொண்டுள்ளது என்று சொல்கிறார்கள், இல்லையா?” என்றான்.


அனலி (சிரித்துக்கொண்டே): “ஆம். புராணக்கதைகள் முனிவர்களும் மன்னர்களும் இங்கு நீராடியதாகக் கூறுகின்றன. அது மட்டும் அல்ல, தட்சிண கைலாச புராணம் யாழ்ப்பாணத் திருநாகுலேஸ்வரத்தைக் குறித்து,

“வடகைலாசத்தில் சிவன் எவ்வாறு நிலைபெற்றானோ,
அதுபோல் தென்கடலோரத் தலங்களில்
நாகுலேஸ்வரத்தில் அவன் அருளுருவாகத் திகழ்கிறான்.”

என்று சொல்வதுடன், அந்த புராணத்தின் படி, நாககுலர் வழிபட்ட சிவலிங்கம் தான் இன்றைய திருநாகுலேஸ்வரம் ஆகும். இதனால் தான், இத்தலம் தட்சிண கைலாசம் (தென் கைலாசம்) என்று போற்றப்படுவதுடன்,

அத்தகைய புராணக் குறிப்பினால், யாழ்ப்பாணம் மட்டும் ஒரு நகரமல்ல, பண்டைய சைவ மரபின் உயிரோடு வாழும் சாட்சியம் என உணரலாம் என்று ஒரு விரிவுரையை ஆரனுக்கு நடத்தினாள்.

ஆரன் தண்ணீரைப் பார்த்தான். ஒரு கணம், அவன் தனது பிரதிபலிப்பை மட்டுமல்ல, தனக்கு முன் இருந்த எண்ணற்ற தலைமுறையினரையும் - போர்வீரர்கள், கவிஞர்கள், துறவிகள் - ஒரு காலத்தில் அவன் நின்ற இடத்தில் நின்றதையும் காண்பதாக உணர்ந்தான்.

பின்னர், அவர்கள் திருகோணமலைக்கு நீண்ட பயணம் சென்றனர், அங்கு கடல் முடிவில்லாமல் நீண்டு, கருப்பு பாறைகளில் மோதியது. கோணேஸ்வரம் கோயில் சுவாமி பாறையில் [Swami Rock / Kōṇāmalai] ஒரு ரத்தினம் போல உயர்ந்து, அதன் கோபுரம் வானத்தை முத்தமிட்டது.

அனலி, மென்மையான தொனியில்,

“இந்தக் கோயிலும் ஒரு காலத்தில் தட்சிண கைலாசம் [Dakshina Kailasam], அதாவது தெற்கு கைலாசம் என்று அழைக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்கள் இதை அழிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அது இருந்தது என்பது வரலாறு. 7 ஆம் நூற்றாண்டில், இந்த ஆலயத்தைப் புகழ்ந்து, பெருமையை பறைசாற்றி, திருஞானசம்பந்தர் ஒரு நீண்ட தேவாரம் பாடினார் எனறால், அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அது இருந்தது தெரியவருகிறது. ஆனால் இடிக்கப்பட்ட பிறகும், அதன் ஆன்மாவை அடக்கம் செய்ய அவர்களால் முடியவில்லை.” என்றாள். அதன் பின், அனலி அதில் ஒரு தேவாரத்தை ஆரனுக்கு படித்துக் காட்டினாள்.

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி

வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்

கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்

குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.

"தட்சிண கைலாசம்" என்பது பல கோயில்களைக் குறிக்கும் ஒரு பெயர், இது "தென் கைலாசம்" என்று பொருள்படும். கேரளாவில் உள்ள செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி கோயில், ஆந்திர நாட்டில் உள்ள திருக்காளஹஸ்தி மற்றும் தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி, இலங்கையில் உள்ள திருகோணமலை போன்ற பல்வேறு இடங்களுக்கு இந்தப் பெயர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரன்: “அப்படியானால் கற்களை உடைத்து கடலுக்குள் விழுத்தினாலும், அந்த இடத்தின் ஆன்மா இன்னும் அங்கு உயிர்வாழ்கிறது?” ஆச்சரியமாகக் கேட்டான்

அனலி (அவனது கண்களைப் பார்த்து): “நம்மைப் போலவே. நம் மக்கள் நிலங்கள், வீடுகள், உயிர்களை இழந்துள்ளனர். ஆனால் தமிழ் ஈழத்தின் ஆன்மா இன்னும் சுவாசிக்கிறது. அதனால்த்தான் புலம்பெயர்ந்தோர், குறைந்தது விடுமுறையிலாவது, திரும்பி வர வேண்டும். உலகிற்கு நாம் அழிக்கப்படவில்லை என்பதை நினைவூட்டுவதற்காக.” என்றாள்.

"ஆரன், இது உடைக்கப்பட்டது முதல் தடவை அல்ல, முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் (பொ.பி. 277 - 304) என்ற மகாவம்சத்தின் பகுதியில், [40,41] மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாகவே இருக்கலாம். அதாவது கி பி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டிலும் இது இருந்துள்ளது மட்டும் அல்ல , அது அழிக்கப்பட்டதும் தெரிய வருகிறது" என்று மேலதிக விளக்கத்தை அனலி கூறினாள்.

ஆரன், அவளின் அந்த வார்த்தைகள் தனக்குள் ஆழமாக ஏதோ ஒன்றைத் தூண்டுவதை உணர்ந்தான். 1983 இல் ஏற்பட்ட கொழும்பு இனக்கலவரத்தால், அந்தக் கொடுமையை நேராக பார்த்து, அதில் இருந்து ஒருவாறு தப்பி, சரக்கு கப்பலில், தம் தம் பெற்றோருடன் யாழ் போனபின், இலங்கையை விட்டு நிரந்தரமாக கனடா போய், அதன்பின் இன்றும் விடுதலையிலாவது திரும்பி வரத் துணியாத தனது பெற்றோரையும், பாட்டி, பாட்டாக்களையும் அவன் நினைத்தான். இப்போது அவன் புரிந்துகொண்டான் - வெளிநாட்டில் வாழ்ந்து துக்கப்படுவது போதாது. உண்மையான நினைவுச் செயல் - திரும்பி திரும்பி வருவது, இங்கே நின்று நிலத்திற்கு மீண்டும் உயிர் ஊதுவது.

சுவாமி பாறையின் விளிம்பில் அவர்கள் ஒன்றாக நின்றபோது, கீழே உள்ள கடல் ஒரு நித்திய சாட்சியைப் போல கர்ஜித்தது.

ஆரன்: “அனலி, இந்தக் கடல் பேசுவதை நீ எப்போதாவது உணர்ந்தாயா?” அனலி (லேசாகச் சிரித்தபடி): "இந்தக் கடல் வெறும் நீல நிறம் மட்டுமல்ல .... அது நினைவுகளால் நிரம்பியுள்ளது ... ஒவ்வொரு அலையும் ஒரு காலத்தில் இழந்த ஒன்றைத் திருப்பித் தருகிறது — ஒரு பண்டைய வரலாறு - நமது முன்னோர்களின் குரல்கள் - நம் இதயங்களுக்குள் ஆழமாகப் புதைந்திருக்கும் காதல் .... ஆமாம், அவை கரையில் நின்று ஒரு நொடிக்கேனும் எங்களைத் தழுவும். மீண்டும் அலை பின்வாங்கினாலும், அந்த நொடியின் அர்த்தம் நித்தியமாகவே நம்முள் வாழ்கிறது.” அவள் அவன் முகத்தை நெருக்கமாக பார்த்துக்கொண்டு, தன் இரு கைகளையும் நீட்டினாள்.

அவன், அவள் கையைத் தொட்டபோது, அவனுக்கு மண்ணின் நெருப்பைத் தொட்டது போல் இருந்தது. அது வெப்பமாகவும் அதேநேரம் நிதானமாகவும், ஆழ்வேர்கள் போல இந்தத் தீவின் உள்ளத்தோடு இணைந்திருந்தது. அந்தத் தொடுதலின் நொடியில், அவன் இனி அந்நியன் அல்ல, பாரம்பரியத்தின் சிதைந்த துணுக்குகளைத் தேடும் அலைந்து திரியும் அகதி மகனும் அல்ல. ‘இது என் நிலம், இது என் மூச்சு, இது என் வீடு என முதல் முதல் உணர்ந்தான். என்றாலும் அவன் அனலியின் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை மறக்கவில்லை. கரையை தொட்ட அலைகள், அடுத்தகணம் திரும்பிப் போவதுபோல, மெதுவாக கொஞ்சம் விலகி நின்றான்.

அங்கே ராவணனின் சிலை, சுவாமி பாறையின் விளிம்பில், அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றது. ஆரனுக்கும் அனலிக்கும் - அந்த இரண்டு ஆன்மாக்களுக்கும் - இடையிலான தொடர்பு, சிதறடிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் பண்டைய தாயகத்திற்கும் இடையிலான தொடர்புக்கும் மேலாக பின்னிப் பிணைந்திருப்பதாக இருவரும் உணர்ந்தாலும், எனோ, வெளிப்படையாக, குறிப்பாக ஆரன் காட்டிக் கொள்ளவில்லை.

திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலில், காடுகள், மலைகள் மற்றும் உள்நாட்டில் உள்ள கிராமங்களுக்குப் பின்னால், மாலை சூரியன் மறைந்தது. அப்பொழுது அலைகள் மீது தங்க ஒளி விழுந்து, உருகிய செம்பு போல அவற்றை வரைந்தது. ஆரன், அனலியின் அருகில் குன்றின் மீது நின்று, முடிவில்லா கடலைப் பார்த்தான்.

"உனக்குத் தெரியுமா ஆரன்," என்று அவள் மெதுவாகச் சொன்னாள், "இங்கிருந்து, கப்பல்கள் ஒரு காலத்தில் தமிழகம், கம்போடியா, சீனாவுக்குக் கூடப் பயணித்தன. இந்தக் கடல் வர்த்தகத்தை மட்டுமல்ல, நாகரிகங்களுக்கிடையில் காதல் கடிதங்களையும் கொண்டு சென்றது." என்று அனலி, தனது சக்கர தோடு கழுத்தைத் தொட, சடை பின்னல் அவிழ்ந்து விழ, சலங்கைக் கால் இசை எழுப்ப, மென்மையான புன்னகையுடன் கூறினாள். அவன் அவளை, அவள் தலை முதல் கால் வரை ஏறிட்டுப் பார்த்தான். முதல் முறையாக, அனலி அவன் கண்களில் ஒரு பிரகாசத்தைக் பார்த்தாள். அவள் இதயம் மகிழ்ச்சியில் நடுங்கியது. என்றாலும், வெளியே எந்த உணர்வையும் காட்டாமல், வெறும் ஒரு வழிகாட்டிபோல,

“ஆரன் ... என் அப்பா உனக்கு வரலாறு கற்பிக்க என்னை அனுப்பினார். ஆனால் அதற்கு பதிலாக ... நான் உன்னுடன் ஒரு புதிய கதையை எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.” என்று எதோ ஒன்றைச் சொல்லாமல் சொன்னாள்.

ஆரனின் குரல் கிட்டத்தட்ட உடைந்தது. “அனலி, நான் என் வேர்களைத் தேடித்தான் இங்கு வந்தேன். ஆனால் அது இப்ப நீயும் தான் அதில் ஒன்று என்ற உணர்வு அரும்புகிறது. என்னால் அதை இனியும் மறைக்க முடியவில்லை" என்று அவளைத் தன் மார்பில் அணைத்தான்.
அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது சோகம் அல்ல - ஆழமான, இனிமையான, ஆனால் பயமுறுத்தும் மகிழ்ச்சி ஒன்று. அப்பா என்ன சொல்வாரென்று !

அவள் தனக்குள் கிசுகிசுத்தாள், “இந்தப் பயணத்தில் நான் என்ன கற்றுக்கொண்டேன் என்று அப்பா என்னிடம் கேட்டால், நான் சொல்வேன் - நம் நிலம் உயிருடன் இருக்கிறது, என் இதயமும் கூட ... "

ஆரன் மெதுவாக தன் கைகளை எடுத்தான். ஆனால், அவள் விலகவில்லை. தெய்வங்கள் தாங்களாகவே தங்கள் ஆசீர்வாதத்தை வழங்குவது போல், தொலைவில் கோயில் மணிகள் ஒலித்தன. அந்த மணி ஓசையிலும், அனலியின் தந்தையின் வார்த்தைகளும் சேர்ந்து ஒலித்தன. "அனலி, ஆரன் நான் உங்களை நம்புகிறேன், நீங்கள் இருவரும் எங்கள் நிலத்தின் வரலாற்றைக் - கற்றுக்கொடுக்க - கற்றுக்கொள்ள - போகிறீர்கள், அந்த பொறுப்பு இருக்கட்டும்"

ஆனால், அவர்கள் ஒன்றாகப் பயணித்தபோது - கோயில்களில் கதைகளைப் பகிர்ந்து கொண்டபோது, கடற்கரைகளில் நடந்தபோது, இழப்பு, புலம்பெயர்வு, மற்றும் நம்பிக்கை பற்றிப் பேசும்போது - அவர்கள் தங்களுக்குள் ஆழமான இன்னும் ஒன்றையும் கண்டுபிடித்தனர்.

வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும்
வாடாத மலராய் இருக்க மாட்டோமா
வாலிபம் தந்த காதல் மோகம்
வாசனை வீசி எம்மை அணைக்காதா?

மொழியும் உணர்வும் பின்னிய பந்தம்
விழியில் பேசிய அன்புச் சொந்தம்
வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம்
அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ?

நம்பிக்கை நட்பாக மாறியது. நட்பு நெருக்கமாக மாறியது. மெதுவாக, அவர்கள் இருவருமே திட்டமிடாமல், காதல் மலர்ந்தது. ஆனால் அதை எல்லை தாண்டாமல், வெளியே காட்டாமல் பார்த்துக்கொண்டனர். நல்ல காலம், அக்காவின் மகள் வந்தது அதற்கு பெரும் உதவியாக, ஒரு காவலாக இருந்தது.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 03 தொடரும்

துளி/DROP: 1929 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 02]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32698811869767371/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 03

பகுதி: 03 - யாழ்ப்பாண நூலகத்தின் வழியாக ஒரு நடைப்பயணம்:

மாலை கதிரவன் யாழ்ப்பாணத்தின் சிவப்பு ஓடுகள் வேயப்பட்ட தெருக்களில் மெதுவாக அமர்ந்திருந்தது. ஆரன் தங்கி இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல், யாழ் நகர மையத்துக்குள் இருந்த காரணத்தால், அனலி தன் ஸ்கூட்டரில் அங்கு தனியாக வந்து, ஆரனும் அனலியும் யாழ்ப்பாண பொது நூலகத்தை நோக்கி நடந்தார்கள். அவள் இன்று யாழ் நகருக்குள் மட்டுமே நிற்பதாலும், வீட்டில் இருந்தே வருவதாலும், அக்காவின் மகளை கூட்டிவரவில்லை. நூலகத்தின் வெள்ளை குவிமாடங்கள் அறிவுக் கோயில் போல வானத்தில், பனைமரங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து நின்றது. ஆரன், அங்கு அருகில் வந்ததும், தன் நடையை கொஞ்சம் இடைநிறுத்தி விட்டு, அதன் பிரமாண்ட புது கட்டிடத்தையும் அழகையும் பார்த்தான்.

ஆரன்: “இந்த நூலகம் அனைத்து தமிழர்களின் பெருமை என்று என் இரண்டு பாட்டாவும் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள். அங்கு அரச சிங்கள காடையர்களாலும் அரச காவலர்களாலும் தொண்ணூறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், பனை ஓலைகள் ... முற்றாக எரிக்கப்பட்டது, எங்கள் மக்களின் ஆன்மா எரிக்கப்பட்டது போல இல்லையா” என்று கேட்டதும் அனலியின் கண்கள் நினைவுகளால் மங்கின.

அனலி: “ஆம். 1981 இல் அது எரிந்தபோது என் தாத்தாவும் அழுதார் என்றும், எங்கள் கடந்த காலம் சாம்பலாக மாறுவதைப் பார்ப்பது போல் இருந்தது என்றும், அவர் என்னிடம் கூறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஆம், இத்தனை வருடங்களுக்குப் பிறகும், நாங்கள் இன்னும் அந்த காயத்தை சுமக்கிறோம்.” என்றாள். மேலும் யாழ் நூலகம் எரிந்தபொழுது அதன் தலைமை நூலகராக கடமையாற்றிய, திருமதி ரூபவதி நடராஜா எழுதிய 'யாழ்ப்பாணம் பொது நூலகம், அன்றும் இன்றும்' என்ற தமிழ் புத்தகம் மற்றும் சந்தரெசி சுதுதுங்க, இன்றைய சிங்கள இலக்கிய கவிஞர், எழுத்தாளர், தொல்லியல் ஆய்வாளர், சிங்களத்தில் எழுதிய “தீப்பற்றிய சிறகுகள்" என்ற கவிதை தொகுப்பு கட்டாயம் வாசிக்க வேண்டியவை என்றாள்.

யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது
புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார்
நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல்
தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து

அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம்
ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம்
இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில்
ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது

அவர்கள் இருவரும் புதுப்பிக்கப்பட்ட புனித மண்டபங்களுக்குள், தங்கள் காலணிகளை வெளியே கழட்டிவிட்டு, உள்ளே நுழைந்தனர். வெள்ளைச் சுவர்கள் மின்னின, அலமாரிகள் மீண்டும் புத்தகங்களால் நிரம்பியிருந்தன. ஆனாலும் ஆரன் ஒரு பேயைப் போல ஒரு அமைதி நீடித்ததை உணர்ந்தான்.

அவன் கிசுகிசுத்தான்: “இது மீண்டும் அழகாக இருக்கிறது, ஆனால் நீ உணர்கிறாயா ... இந்த அழகு எரிந்த அரிய புத்தகங்கள், ஏடுகள் இல்லாமல் முழுமையடையும் என்று?”

அனலி: “ஏனென்றால் நினைவை முழுமையாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. எரிந்த பக்கங்கள் - சங்க இலக்கியப் பிரதிகள், ஓலை கையெழுத்துப் பிரதிகள் - அவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. இருப்பினும், அதை மீண்டும் கட்டியெழுப்புவது நமது எதிர்ப்பு. நாம் அழிக்கப்பட மாட்டோம் என்பதைக் எடுத்துக் காட்ட.”

ஆரன், அங்கே அலமாரியில் இருந்த புத்தகங்களில் ஒன்றைத் தொட்டான். அது கனமாக இருப்பதாக உணர்ந்தான், அதன் எடையால் அல்ல, அது சுமந்து சென்ற வரலாற்றால்.

அவர்கள் நூலகத்தின் உள்ளே இன்னும் ஆழமாக நடந்து செல்லும் போது, ஆரன் மெதுவாக அனலியை நோக்கினான். “அனலி, நான் ஏன் உன்னுடன் இங்கு வர விரும்பினேன் தெரியுமா?” என்று கேட்டான். அனலி (மெல்லச் சிரித்தபடி): “நூலகத்தைப் பார்க்கத்தானே?” என்றாள்.

ஆரன்: “இல்லை. புத்தகங்களை மட்டுமல்ல, ஒரு மக்களின் ஆன்மாவையும் பார்க்கத்தான். அதை தன் இரத்தத்தில் உணரும் ஒருவருடன் நினைவுபடுத்திக் கொள்ளத்தான். இந்த நூலகம் மீண்டும் கட்டப்பட்டது, ஆனால் இன்னும் வடுக்களை சுமந்து கொண்டு இருந்தாலும் அது பலத்துடன் எழுந்து நிற்கிறது. இப்போது உன்னைப் பார்க்கும் போது, நீயே இந்த நூலகம் போல தோன்றுகிறாய், அதே பலத்தை உன்னிலும் நான் காண்கிறேன்” என்றான்.

அனலியின் கன்னங்கள் சிவந்து, அவள் தன் பார்வையைத் மறுபக்கம் திரும்பினாள். என்றாலும் அவள் கை அருணின் கையை இன்னும் இறுக்கமாக பிடித்தது.

அந்த நொடியில், நூலகத்தின் சுவர்கள்
சாம்பலின் நினைவைக் கூறின,
ஆனால் அந்த சாம்பலின் நடுவே
ஒரு விதை முளைத்தது போல,
ஆரனின் உள்ளத்தில் அனலி மலர்ந்தாள்.

“நீயே என் வேர்,” என்ற அவன் சொற்கள்
பழைய ஓலைச் சுவடிகளின் சப்தத்தைப் போல
அனலியின் உள்ளத்தில் ஒலித்தன.

அந்த நொடியில்—
மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன,
மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின,
நூலகத்தின் அமைதி
இரு இதயங்களுக்கான தெய்வீகத் தாலாட்டானது.

அவர்கள் ஒரு ஜன்னல் அருகே அமர்ந்தனர், சூரிய ஒளி உள்ளே ஊடுருவியது. பழைய காகிதத்தின் வாசனை அவர்களைச் சுற்றி மிதந்தது.

அனலி: “ஆரன், புலம்பெயர்ந்தோர் (Diaspora) ஏன் திரும்பி வர வேண்டும் என்று உனக்குப் புரிகிறதா? எரிந்துபோன நூலில் சில பக்கங்கள், சில சொற்கள் அழிந்துபோயிருக்கும். அவற்றை நாம் மீண்டும் எழுதிக்கொள்ள முடியாது. ஆனாலும் மீதமுள்ள பக்கங்களின் வழியே அந்த நூல் இன்னும் வாழ்கிறது. அதுபோலவே, அழிந்தாலும், சிதைந்தாலும், ஒரு இனத்தின் வரலாறு, கலாசாரம், நினைவுகள் இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு தலைமுறையினரும் (diaspora உட்பட) திரும்பி வருவதும், பேசுவதும், எழுதுவதும்—அந்தக் கதையைத் தொடரும் ஒரு முயற்சியே ஆகும். அதனால்த்தான் அவர்களின் ஒவ்வொரு வருகையும் மற்றும் நினைவுகளும் அழிந்த பக்கத்தின் பின் தொடரும் எழுத்தாகிறது" என்றாள்.

ஆரன்: “ஆம். அது உண்மையே, நாம் திரும்பி வராவிட்டால், கடைசிப் பக்கம் காலியாகவே இருக்கும். ஒருவேளை நம் காதல் கதை கூட, மீண்டும் எதையாவது எழுதுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம்?” என்றான்.

அவர்களின் இந்த புரிந்துணர்வுகளாலும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மரியாதையாலும், நினைவுகளின் அலமாரிகளில், ஆரன் மற்றும் அனலியின் பிணைப்பு ஆழமடைந்தது. அது இரண்டு இதயங்களின் அன்பு மட்டுமல்ல, ஒரு மக்களின் அமைதியான சபதம்!

நெருப்பிலும் கூட அறிவு நிலைத்திருக்கும். புலம்பெயர்ந்தாலும் கூட காதல் தன் தாய் மண்ணில் மலரும்.

'சொற்கள் எரிந்தாலும், நூலின் சுவாசம் எரியாது
பக்கங்கள் சிதைந்தாலும், கதை மறைவதில்லை
நினைவின் சாம்பலில் இருந்து,
புதிய வரிகள் பறவையாய் பறக்கும்
ஒவ்வொரு தலைமுறையும்,
அழிந்த பக்கத்தின் பின் தொடரும் எழுத்தாக மாறும்'

மறுநாள் காலை, ஆரன் மற்றும் அனலி யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை புத்த ஸ்தூபி தளத்தின் இடிபாடுகளுக்கு முன் நின்றனர். அங்கே பனை மரங்களால் சூழப்பட்ட சூரியனுக்குக் கீழே அவை வெள்ளை குவிமாடங்களாக மின்னின. இது கிட்டத்தட்ட கி.மு. 3ம் நூற்றாண்டு – கி.பி. 2ம் நூற்றாண்டு காலத்தில் பயன்பட்ட ஒரு பழமையான கல்லறை / மெகாலிதிக் தளம் [ancient burial site / megalithic site] ஆகும். அங்கு கண்டு எடுக்கப்பட பொருள் கலாச்சாரம் [material culture] - பானைகள், மணிகள் மற்றும் கல்வெட்டுகள்- pots, beads, and inscriptions - வலுவான தமிழ் தென்னிந்திய தொடர்புகளைக் காட்டுகிறது, இது 2000 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழ் பேசும் மக்கள் இருந்ததை உறுதிப்படுத்துவதுடன், ஆரம்பகால தமிழர்களில் சிலர் பௌத்த மதத்தைப் பின்பற்றியதையும் கூறுகிறது என்று அனலி பெருமையுடன் விளக்கினார்.

“பாருங்கள், ஆரன் ... தமிழர்கள் ஒரு காலத்தில் எப்படி பௌத்த மதத்தில், கி.மு. 3ம் நூற்றாண்டு – கி.பி. 2ம் நூற்றாண்டு காலத்தில் இணக்கமாக வாழ்ந்தார்கள் என்பதைக் இது வெளிப்படையாக காட்டுகிறது. நமது நிலம் போர்களை மட்டுமல்ல, ஞானத்தையும் சுமந்தது. ஆனால் இன்று அது சிங்கள பௌத்தமாக, ஐந்தாம் ஆறாம் ஆண்டில், பாளியில் எழுதிய மகாவம்ச பௌத்தமாக, தமிழரை பிரிப்பதே, இன்றைய முக்கிய பிரச்சனை, ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இந்த கால கட்டங்களில், கி.பி 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8 ஆம் நூற்றாண்டு வரை சிங்களம், ப்ரோட்டோ-சிங்களமாக [Proto-Sinhala] மட்டுமே இருந்தது ” என்றாள்.

மேலும் எண்ணற்ற தொன்மையான தமிழர் வாழ்வியலை தன்னுள் அடக்கிக் கொண்டு இனவாத அடக்குமுறையில் வெளிப்படாமல் இராணுவ பிரசன்னத்தோடு இன்னும் இருக்கிறது. இது இன்று சிங்களத்திடம் மாட்டி அதன் பெயர் கதுருகொட என மாற்றியமைக்கப்பட்டது என்று அழுத்தமாக கூறியவள், தமிழர்வாழ்வியல் ஆய்வில் கீழடி ஆதிச்ச நல்லூர் போல ஆய்வு செய்யப்பட வேண்டிய பெரு நிலப்பகுதி ஆகும் என்றாள்.

ஆரன் அவள் சொல்லுவதை உன்னிப்பாக கேட்டான், ஆனால் அவன் கண்கள் கந்தரோடை இடிபாடுகளை விட அவள் மீது அதிகமாக பதிந்தன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கற்கள் இன்னும் உயிர்வாழ முடியும் எனறால், ஒருவேளை காதல் கூட, அது உண்மையாக இருந்தால், பல நூற்றாண்டுகளாக, தாஜ்மகால் போல் வாழலாம் என்று அவன் சிந்தனை விசித்திரமாக விரிவடைந்தது.

அனலி அவனது மௌனத்தை, எதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்தாள். உடனே, "நீ என்ன யோசிக்கிறாய்?" என்று ஆச்சரியமாக கேட்டாள்.

அவன் தயங்கினான், பின்னர் சிரித்தான். “ஒருவேளை ஒரு நாள், மக்கள் இந்தக் கற்களைப் பற்றி மட்டுமல்ல... நம்மைப் பற்றியும் பேசுவார்கள்.” என்றான். அங்கு காணப்பட்ட கல்லுக் கோபுரத்தை [ஸ்தூபங்களைப்] பார்ப்பது போல் நடித்து, அவள் மறு பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவள் வரலாற்றை கற்றுத்தருபவள் என்ற நிலையிலிருந்து, இப்போது வரலாறாக வாழ்கிறவள் என்ற உணர்வில், அவளின் கன்னம் வெட்கத்தால் சிவந்தது. “காலம் கடந்தும் நிற்கும் கோபுரம் போல, நம் காதலும் ஒருநாள் வரலாறாகிப் போகலாம்” என்று அவளின் இதயம் எழுதிக்கொண்டு இருந்தது.

பின் அனலி மெதுவாக அவன் காதில், "ஆரன், அப்பா உன்னை நம்பி, என்னை அனுப்பினார் உனக்கு வரலாறு காட்டிட , கற்பிக்க ... ஆனால் நான் இப்ப என் இதயத்தையே கையளிக்கிறேன்.” என்றாள். " நானும் கூட என்னவாம், … நான் நிலத்தின் வேர் தேட வந்தேன், ஆனால் கண்ட வேர் ... ” அவன் அதற்கு மேல் சொல்லவில்லை. மௌனமாக அனலியை பார்த்துக்கொண்டு நின்றான். ஒருவேளை அனலியின் அப்பாக்கு கொடுத்த வாக்குறுதி தடுத்திருக்கலாம்?

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 04 தொடரும்

துளி/DROP: 1936 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 03]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32777130171935540/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 04

அத்தியாயம் 4 - கதிர்காமம் மற்றும் மட்டக்களப்புக்கு ஒரு யாத்திரை

ஒரு நாள் முழுமையான ஓய்வின் பின், யாழ்ப்பாணத்தின் அறிவுசார் இதயத்தை விட்டுவிட்டு கதிர்காமத்தின் ஆன்மீக நெருப்புக்காக, ஆரனும் அனலியும் கதிர்காமம் நோக்கி ஒரு பயணத்தை மேற்கொண்டனர்.

தடாகங்கள், நெல் வயல்கள் மற்றும் காடுகளைக் கடந்து செல்லும் போது, அனலி ஜன்னலில் சாய்ந்தாள், அவள் கண்கள் நாரைகளின் கூட்டத்தைப் பின்தொடர்ந்தன. "தமிழர்களும் சிங்களவர்களும் ஏன் கதிர்காமத்தை வணங்குகிறார்கள் தெரியுமா?" என்று அவள், அவனிடம் கேட்டாள்.

ஆரன் தலையசைத்தான். "ஏனென்றால் இங்கே முருகன் தமிழ் கடவுள் மட்டுமல்ல - அவர் தீவின் பாதுகாவலர். அவர்கள் அவரை ஸ்கந்தன் என்று அழைக்கிறார்கள், நாங்கள் அவரை கதிர்காம முருகன் என்று அழைக்கிறோம். அரசியல் பிரிக்கும் இடத்தில் பக்தி ஒன்றுபடுகிறது." என்றான். ஆரனுக்கு இப்ப வரலாறு தானாக புரிய ஆரம்பித்து விட்டது.

அவர்கள் வந்தபோது, கோயில் மணிகள் ஒலித்தன. கற்பூரம் மற்றும் மல்லிகையின் நறுமணம் காற்றை நிரப்பியது. சிங்கள பக்தர்கள் தாமரை மலர்களை ஏந்திச் செல்ல, தமிழ் யாத்ரீகர்கள் 'முருகனுக்கு அரோஹரா' பாடினர். இங்கே, மொழியின் எல்லைகள் மங்கலாகின - நம்பிக்கை அவற்றை ஒன்றாக இணைத்தது.

புலம்பெயர்ந்த நாடுகளில் சிதறிக்கிடக்கும் தனது குடும்பத்திற்காக அனலி ஒரு பிரார்த்தனையை கிசுகிசுத்தாள். ஆரன் தன் தாய் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்று மௌனமாக பிரார்த்தனை செய்தான்.

மாலை தீப வழிபாடு தொடங்கியதும், ஆரன் அனலியை நோக்கி சாய்ந்தான். “உனக்கு தெரிகிறதா? இங்கே, அன்பும் பக்தியும் தான் மக்கள் மனதில். முருகன் இப்படியான காடுகளில்தான் குறத்தி வள்ளியைத் தேர்ந்தெடுத்தான். தெய்வீக அன்பு - என்றும் சாதி, சமூகம் மற்றும் மக்களுக்கிடையான தூரத்தை வெல்ல வேண்டும் என்பதை அவர் [முருகன்] நிரூபித்தார்.” என்றான்.

கருணை பொழியும் கதிர்காம முருகா
கவலை நீக்கிடும் வள்ளி மணவாளா
கற்பூர ஒளியில் அவளைக் காண்கிறேன்
கண்கள் இரண்டும் அழகில் மயங்குது



சக்கரைப் பந்தலில் இதயத்தைப் பறித்தாள்
சண்முகா நீயும் வள்ளியைப் பறித்தாய்
சக்கரத் தோடு கழுத்திலே ஆடிட
சங்கமம் ஆகிறாள் என்னுடன் இன்று

அவள் கண்கள் மின்னின. “நாங்களும் அப்படித்தான் ஆரன். நீ கனடா நான் யாழ்ப்பாணம். நாங்களும் இந்தக் காடுகளில் எல்லைகளைக் கடக்கிறோம்.” என்றாள். பின் இருவரும், கதிர்காம ஆலயத்தில் இருந்து திரும்பும் பொழுது, "எல்லாளனுடன் போர் தொடங்குவதற்கு முன், துட்டகாமினி கதிர்காமம் சென்றான் என்றும், 'என் கரங்களில் பலமில்லை, உன் அருள் தான் என்னை வழிநடத்தும்' என்று முருகனை வேண்டினான் என்றும், முருகன் புன்னகையுடன் கையில் இருந்த வேலை உயர்த்தி, அருள்வாக்கு அளித்ததாகக் சிங்கள மக்களிடம் ஒரு நம்பிக்கை இருக்கிறது" என்றாள். ஆரனுக்கு சிரிப்பு தான் வந்தது, எல்லா உயிர்களுக்கும் நீதியாக 44 ஆண்டுகள், சமநிலையில் அரசாட்சி செய்தவனைக் கொல்ல தமிழ் ஆண்டவனே ஆசீர்வதித்தது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

அதன் பின் இருவரும் அடர்த்தியாக சந்தன மரங்கள் நிறைந்த காடாக உள்ள கதிர்காம மலை போக முடிவெடுத்தார்கள். இதை கதிர்மலை அல்லது கதிரை மலை என்று கூறுவர். மலை மேல் செல்ல ஜீப் வசதிகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் படிகள் வழியே நடந்து ஏறிச் சென்றார்கள். அக்காவின் மகள் ஜீப்பில் சென்றார். அவர்கள் வழி வழியே இளைப்பாறி, மெதுவாக தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டு கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஏறினார்கள். மேலே எற எற மெளனமான குளிர் மெதுவாக அவர்களை அணைத்தது. ஒரு வாரமாக விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கும் மழைத்தூறல் மரங்களின் இலைகளில் இருந்து நழுவி நழுவி விழுந்துகொண்டு இருந்தன. இருபுறமும் படர்ந்து கூடவே வந்த மலைகளின் முகடுகளை எல்லாம் போர்த்திக் கொண்டு நகர்ந்து சென்றன சில மேகங்கள்.

பக்தி பரவசம் கொண்ட அந்த சூழலிலும் அவர்கள் தங்கள் காதல் பரவசத்தை மறக்கவில்லை. அவர்களின் உரையாடல் பல நேரங்களில் இளமைகளின் காதல் உணர்வில் அரும்பிய பேச்சாகவே இருந்தன.

கண்களில் ஒரு காதல் தேடல்
கரை புரண்டு ஓடுது மனதில்
கதிரவன் ஒளியில் ஆரன் மட்டுமே
கந்தன் கடம்பனாய் என்னை வாழ்த்துகிறேன்

உன்னைக் காண தனிமை ஏங்குதே
ஏதேதோ மாற்றம் என்னுள் வருகுதே
வள்ளி நானோ முருகன் நீயோ
வந்தாய் சுகமாய் என்னை ஆளாவோ

அவர்கள் இறுதியாக மலையுச்சியில் நடப்பட்டுள்ள வேல் வணங்கி, இம்முறை அக்கா மகளுடன் ஜீப்பில் திரும்பினார்கள்.

அவர்களது பயணத்தின் அடுத்த கட்டம் அவர்களை கிழக்கு நோக்கி, வந்தோரை வாழவைக்கும் இன்முகமும், ஊரெங்கும் குளிர்பரப்பும் வாவிகள் [ஏரிகள்], புராணக்கதைகள் மற்றும் பாடல்களின் நிலமான மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றது. ஆங்கே அவர்கள் இருவரும் வாவிக்கு அருகில் நின்று நிலவொளியை ரசித்துக் கொண்டு நின்றார்கள். அப்பொழுது, நீர் ஓடும் ஒலி, அவர்களின் மனதிற்கு அமைதியையும் புத்துணர்வையும் கொடுத்துக் கொண்டு இருந்தது, தாமும் அதற்கு ஆதரவு கொடுப்பது போல, பறவைகளின் ஆரவார ஒலி அமைந்து இருந்தது.

"இந்த நீரொலியும், பறவைகளின் கீதமும் அதனோடு சேர்ந்து வீசுகின்ற தென்றலும் ... எனக்கு, எங்களை வாழ்த்தும் ... ஒரு ஆசீர்வாதம் போல இருக்கிறது. உனக்கு ஆரன் ? என்று கேட்டாள். ஆரன் (சிரித்துக் கொண்டு), "ஆமாம், இந்த ஒலிகள், அன்பின் மொழி போன்றது. கண்ணுக்குத் தெரியாத ஒன்று - ஆனாலும், நதி கடலுடன் இணைவது போல, அது நம்மைச் சுமந்து செல்கிறது, இணைக்கிறது." என்றான்.

பின், “மீன் பாடும் ஒலியை நீ கேட்டாயா?” அனலி திடீரென்று கேட்டாள். “ஆம்,” ஆரன் சிரித்தான். “17 ஆம் நூற்றண்டுக்ளில் இருந்து ஒருவகை மீன் பாடுவதை மீனவர்கள் கேட்டுள்ளார்கள் என்று குறிப்புகளில் உண்டு. எனினும் மட்டக்களப்பின் பாடும் மீனின் மெல்லிசையை உண்மையான காதலர்கள் மட்டுமே கேட்க முடியும் என்று என் பாட்டி சொல்லுவதைக் கேட்டுள்ளேன்.” என்றான். இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் “நீரரமகளீர்” இசைக்கும் இசை என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு மீன் பாடும் தேன் நாடு என அழைக்கப்படுவதாக, தன் தாத்தா பாட்டிக்கு கூறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது என ஆரன் அவளிடம் எடுத்துக் கூறினான்.

இப்படி சிறப்புற்று விளங்கும் மீன்பாடும் மட்டு நகருக்கு வடக்கே 20 கிலோ மீற்றர் தொலைவில் கிரான் பிரதேச செயலக எல்லைக்குள் சந்திவெளிக்கு அப்பால் குறிஞ்சி, முல்லை மருதம் என்று மூன்று நிலங்களும் ஒருங்கே அமைந்து, பச்சை ஆடைபோற்றி படர்ந்து பூத்துச் சிரிக்கும் 'திகிலி' என்று அம்மக்களால் செல்லமாக அழைக்கப்படும் திகிலிவெட்டை எனும் கிரமத்துக்கு அதன் பின் அவர்கள் சென்றனர்.

சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாம ஏர் நடத்தி
கம்மா கரையை ஒசத்திக் கட்டி
கரும்பு கொல்லையில் வாய்க்கால் வெட்டி

சம்பா பயிரை பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு
வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு...

எனும் பட்டுக்கோட்டையின் பாட்டை செயல்வடிவில் அங்கு அவர்கள் பார்த்து ரசித்தனர். கலித்தொகையில் உள்ள குறிஞ்சித் திணைப் பாடல்களில் 37 ஆவது பாடல் அப்பொழுது அனலிக்கு நினைவுக்கு வந்தது. அங்கே குறத்தி ஒருத்தி தன் காதல் குறித்து தோழியிடம் கூறுகிறாள்.

“நான் வயலில் இருக்கும் போதெல்லாம் வில்லும் அம்பும் ஏந்திய இளைஞனொருவன் தப்பி ஓடிய மானின் காலடி தேடிக் கொண்டு வருவது போல நடித்துக் கொண்டு தினமும் வருவான்; வந்து என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான்; ஆனால் எதுவும் பேசாமல் போய் விடுவான். இரவில் நான் படுக்கையில் இருக்கும் போது இவன் ஏன் வருகின்றான் என்று நினைத்துப் பார்த்தேன். அவன் பார்வையில் என் மேல் அவனுக்கு விருப்பம் உள்ளது போலத் தோன்றியது. அதுபற்றி அவனோடு பேச நினைத்தேன்; ஆனால் நான் பெண்; முன் பின் தெரியாதவன்; எப்படி நானே பேசத் தொடங்குவது என்று நினைத்து பேசாமல் இருந்தேன்; என்கிறது அந்த பாடலில் ஒரு பகுதி

அவள் அதை ஆரனிடம் ஒரு வித வெட்கத்துடன் கூறினாள். ஆரனுக்கு அதன் அர்த்தம் புரிந்தது. அந்த வெட்டவெளி வயலில், அவன் அவளை தன்னுடன் நெருக்கமாக அனைத்து, இப்ப காதில் மெல்ல கூறாயோ என்றான். அவள் திகைத்தாலோ என்னவோ, மௌனமாக ஆனால் அணைத்த கைக்குள்ளேயே அப்படியே நின்றாள்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 05 தொடரும்

துளி/DROP: 1940 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 04]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32821724707476086/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 05

அத்தியாயம் 5 - சிகிரியா

மட்டக்களப்பில் இருந்து கண்டிக்கு நேரடியாக போகலாம் என்றாலும், கொஞ்சம் சுற்றி சிகிரியாவுக் கூடாக போக முடிவு செய்தார்கள். அவர்கள் சாலை வெயிலில் ஒளிர்ந்த புல்வெளிகளையும் வயல்களையும் மற்றும் காடுகளையும், நகரங்களையும் தாண்டி "சிங்கப் பாறை" என்று அழைக்கப்படும் மலைக்குச் சென்றனர். காடு நடுவே அதிசயமாக உயர்ந்து நிற்கும் அந்தப் பெரும் பாறையை பார்த்தபோது, ஆரனும் அனலியும் தாம் ஒரு தொன்மையின் நிழலில் நிற்பதாக உணர்ந்தனர்.

'காசியப்பன் மன்னரால் (கி.பி 477 - 495) தனது புதிய தலைநகருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது தான் இந்த சிகிரியா. அவர் தனது அரண்மனையை இந்த பாறையின் மேல் கட்டினார் மற்றும் அதன் பக்கங்களை வண்ணமயமான ஓவியங்களால் அலங்கரித்தார். இந்தப் பாறையின் பக்கவாட்டில் ஒரு சிறிய பீடபூமியில் அவர் ஒரு பெரிய சிங்கத்தின் வடிவத்தில் ஒரு நுழைவாயிலைக் கட்டினார். இந்த அமைப்பிலிருந்து இந்த இடத்தின் பெயர் சிங்ககிரி அல்லது சிங்கப் பாறை எனப்பட்டது' என்று அனலி ஒரு வரலாறு உரைத்தாள்.

“இது தான் காசியப்பனின் பேராசை, புராணமாக மாறிய இடம்,” என்று ஆரன் மெதுவாகச் சொன்னான்.

அனலி புன்னகைத்தாள். “அதில் தான் காதலும் கலையும், அந்த இரண்டும் ஒன்றாக நிலையானதாக மாறின. இலங்கையில் காணப்படும் ஒரே மதச்சார்பற்ற ஓவியங்கள் இந்த சிகிரியாவின் புகழ்பெற்ற கன்னிப்பெண்கள் [The famous Maidens of Sigiriya] ஓவியம் மட்டுமே என்று கூறப்படுகிறது” என்றாள்.

அவர்கள் மேலே ஏறிச் செல்ல செல்ல, காற்று வரலாற்றின் நெடிய சுவாசத்தால் நிறைந்தது. இருபுறமும் வளைந்த பாறை வழிகள், குகைகளின் அடியில் சுவரோவியங்கள் — மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் தீட்டப்பட்ட வானுலகப் பெண்கள். அவர்களின் கண்கள் உயிர்ப்புடன், ஆனால் முகத்தில் அமைதி தெரிந்தது.

“சிகிரியா அழகிகள்…” என்று ஆரன் கிசுகிசுத்தான். “அவள் கண்களில் உயிர் இருக்கிறது போல.”

அனலி சொன்னாள், “அவைகள் தமிழும் சம்ஸ்கிருதமும் சேர்ந்த அப்சரஸ்களின் [அரம்பையர் / தெய்வீக நங்கையர்] சின்னம். அவளின் ஆபரணங்கள், தாமரை மாலைகள் — சங்க இலக்கியங்களிலும் காணலாம். அழகின் மரபு எல்லையற்றது.”

" அது சரி, ஆனால் இங்கு ஏதாவது தமிழர் தொடர்பு இருக்கா?" ஆரன் கேட்டான்.

பாதி உயரத்தில் கொஞ்சம் இளைப்பாறிய போது, அவர்கள் கீழே உள்ள காட்டில் உள்ள மரங்களின் மேல் கிளைகளின் பசுமையை நோக்கினார்கள். தொலைவில் கோவிலின் மணிசப்தம் அப்பொழுது கேட்டது. "கே எம் சண்டிமால், எஸ் ஜி யசவர்தீன் & ஆர் ஜே இல்லெபெருமா (2019, இலங்கை உடற்கூறியல் இதழ்) / K M Chandimal, S G Yasawrdene & R J Illeperuma (2019, Sri Lanka Anatomy Journal) ஆகியோர் செய்த ஆய்வு இதற்கு ஒரு பதில் கூறுகிறது.

இந்த ஆய்வு சிகிரியாவைச் சுற்றியுள்ள பழைய மக்கள் தொகை குழுக்களின் இழைமணி டிஎன்ஏ (analysed mitochondrial DNA of old-population groups around Sigiriya / mtDNA) -க்களின் பகுப்பாய்வு செய்து, அவர்கள் தாய்வழி ரீதியாக மற்ற இலங்கையர்களை விட இலங்கைத் தமிழர்களுடன் நெருக்கமாக இருப்பதைக் கண்டறிந்தது." என்றாள் அனலி, " அது தான் சிகிரியாவிற்கு ஊடாக வந்தோம்" என்றாள். " மேலும் இது அங்கு, இலங்கையின் மத்திய பகுதியிலும் கூட தமிழர்கள் வாழ்ந்ததை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்றாள்.

"ஆமாம், அரசுகள் உருவாகும் காலத்திலேயே வடக்கிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் மக்கள் கலந்திருந்தார்கள் போல் தெரிகிறது , அப்படியானால், இக்கற்கள் சிங்களமோ தமிழோ அல்ல; இவை இரண்டும் சேர்ந்தவை. நம் பழமையான இலங்கை, தமிழும் சிங்களமும் கலந்தது என்பது மீண்டும் உறுதியாகிறது” என்றான் ஆரன்.

அனலி தலையசைத்தாள். “ஆமாம், இவனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் இவன் எதிர்பார்த்தபடியே முதலாம் முகலன் [Moggallana] தன் நண்பர்களான தமிழ்நாட்டு நிகந்தர்களை [சைனர்] இணைத்துக் கொண்டு படையெடுத்து வந்து அரசைக் கைப்பற்றினான் என்பது வரலாறு. அந்த தமிழ் படை வீரர்கள் இங்கு தான் பின் இருந்திருப்பார்கள். இவனுக்கும் இவனின் தந்தைக்கும் முன்பு இருபத்தி ஆறு ஆண்டுகாலம் ஆறு தமிழர்கள் இங்கு ஆண்டார்கள் என்பதும் வரலாறு. அதற்கு முன்பும் கூட இப்படி உண்டு. நம் வரலாறு அரசியலைவிட ஆழமான பின்னிப்பிணைப்பு.” என்றாள்.

அவர்கள் ‘மிரர் வால் / mirror wall’ எனப்படும் கண்ணாடிச் சுவரை அடைந்தபோது, ஆரன் அதில் எழுதப்பட்ட ஒரு பழம்பெரும் வரியை வாசித்தான்:

“தங்க நிற மங்கையரை கண்டவன்,
தன் இதயத்தில் ஒளிர்கிறான் —
வானில் சூரியன் ஒளிர்வது போல்.”
[“The one who saw the golden-coloured maidens
Shines in his heart like the sun in the sky.”]

கண்ணாடி சுவர் கல்வெட்டுகள் தோராயமாக கி.பி 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலானவை ஆகும்

"இந்தக் கல்வெட்டுகள் முழுமையாக வளர்ந்த நவீன சிங்கள மொழியில் இல்லை, ஆனால் ஆரம்பகால அல்லது ப்ரோட்டோ - சிங்கள மொழியில் உள்ளன - சில சமயங்களில் "சிங்கள பிராகிருதம்" அல்லது "எலு" என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மொழி பாலி - பிராகிருதம் வேர்களிலிருந்து உருவானது, சமஸ்கிருதம் மற்றும் முந்தைய திராவிட தொடர்புகளின் (குறிப்பாக தமிழ்) செல்வாக்கால் ஆகும். சில வசனங்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதற்கான பதிவுகளும் உள்ளன, இருப்பினும் பல முழுமையாகப் படிக்க முடியாத நிலையில் உள்ளன. இந்த பன்மொழி கல்வெட்டுகள் சிகிரியாவில் கலாச்சார கலவையை நிரூபிக்கின்றன." என்றாள் அனலி.

அவர்கள் இருவரும் கல்லைத் தொட்டனர்; கண்ணாடியில் அவர்களின் பிரதிபலிப்பு இணைந்தது. காலத்தைத் தாண்டிய காதலர்களின் நிழல்கள் அங்கே கலந்தது.

குளங்கள், தோட்டங்கள், நீர் பாதைகள் எல்லாம் சூரிய ஒளியில் மின்னியது. “அவன் நினைவில் நிலைக்க இதை கட்டியிருக்கலாம்,” என்றான் ஆரன்.

“அல்லது மன்னிப்புக்காக,” என்றாள், பின் “ஒவ்வொரு கட்டிடக்காரனும் நித்தியத்தை விரும்புவான்; ஆனால் நிலைப்பது கல் மற்றும் அமைதியே.” என்று முடித்தாள். அதன் பின் இருவரும் தங்கள் கைகள் பிணைத்தபடி அமைதியாக அங்கிருந்து இறங்கினர் — அவர்களின் மனம் வியப்பும் துயரமும் கலந்து காணப்பட்டது.

அப்பொழுது அந்தி நேரம். காற்று பழங்காலத்தின் சுவாசம் போல மெல்ல அடித்தது. ஆரன் மெதுவாகக் கூறினான் — “இந்தக் கற்கள் இன்னும் பேசுகிறதா, அனலி?”

அனலி சிரித்தாள். “பேசும், ஆரன். ஆனால் அதை கேட்க காதல் உள்ளம் வேண்டும்.” என்றாள். பின் அவள் சிகிரியா குன்றின் நிழலில் கைகளை இணைத்து மெதுவாகப் பாடினாள் —

சிங்கப் பாறையின் நிழலில் நிற்கிறேன்
இதயம் உன் பெயரையே உச்சரிக்குது
நிலவொளி சுவர்களைத் தொடும் போது
உன் மூச்சே என்னைத் தொடுகுது!

ஆரன் அவளைப் பார்த்தான்; அவனது கண்களில் ஒரு ஒளி கலந்த அமைதி. அவன் பதிலளித்தான் —

குன்று எதிர்பார்த்த தங்க நிற மங்கையே
குட்டி அரவணைப்பு ஒன்று தாராயோ நிழலில்
தீட்டிய சிற்பத்தில் ஒரு பார்வையைக் கண்டேன்
அந்தப் பார்வையில் நான் உன்னையே ரசித்தேன்!

காற்று மீண்டும் வீசியது. நிழல்கள் நீளத்துடன் பரவின.
அனலி இரவின் குளிரை உணர்ந்தாள், ஆனால் அவளது இதயத்தில் ஒரு தீயொளி எரிந்தது. அவள் மெதுவாகச் சொன்னாள் —

சிகிரியாவின் தென்றல் எமது சபதத்தை சுமக்கிறது
காடுகளைக் கடந்து எமது இதயத்தை குளிர்விக்குது
வரலாற்றாசிரியர்கள் சிங்கப் பாறை பற்றி எழுதட்டும்
கண்ணாடிச் சுவரின் வரியில் காதலை நாம் எழுதுவோம்!

அந்த மாலை, சிகிரியா சூரியன் அவர்களுக்கு மறையவில்லை — அது அவர்கள் இருவரின் இதயங்களிலும் உதயமானது! அதன் பின் அடுத்த நாள் அங்கிருந்து கண்டி புறப்பட்டனர்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 06 தொடரும்

துளி/DROP: 1947 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 05

https://www.facebook.com/groups/978753388866632/posts/32931852276463328/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 06

அத்தியாயம் 6 - கண்டி மற்றும் நுவரெலியா

கண்டியை அடைந்தபோது காற்று குளிர்ந்தது; கோவில்மலர்கள் வாசம் வீசியது. தலதா மாளிகை அல்லது பல் அவையம் ஒளியில் மிதந்தது; ஏரியில் விளக்குகள் பிரதிபலித்தன. தலதா மாளிகையில் பூஜையை மல்வத்து மற்றும் அஸ்கிரி பிரிவுகளைச் சேர்ந்த துறவிகள் தினமும் மூன்று முறை செய்கிறார்கள்: விடியற்காலை, நண்பகல் மற்றும் அந்தி வேளையில் ஆகும். அப்பொழுது நினைவுச் சின்னத்தைப் பார்ப்பதற்காக உள் அறையைத் திறப்பது மற்றும் பக்தர்களால் பூக்கள் காணிக்கை செலுத்துதல் நடைபெறும். ஆரனும் அனலியும் அப்படியான ஒரு சூழலில், வெளிவீதியால், ஆலயத்தை நோக்கி நடக்கும் பொழுது, [hevisi drums] ஹெவிசி பறை கேட்டுக் கொண்டு இருந்தது. அங்கே நிறைய பூக்கடைகள் இருந்தன. கோயிலுக்குப் போகிறவர்கள் வாங்கிச் செல்வதை இருவரும் கவனித்தார்கள். அவர்களும் பூக்களை வாங்கினர். ஹெவிசி மேளம் வெறும் இசை நிகழ்ச்சி அல்ல. இது இலங்கையின் பௌத்த மரபுகள் மற்றும் கோயில் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு புனிதமான கலை வடிவமாகும்.

தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் [Madurai Nayakkar king in Kandy, Sri Vijaya Rajasimha] 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். இவன் இலங்கையில் 1700களில், கிட்டத்தட்ட அழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுக்க விரும்பி, சியாமில் (Siam / தாய்லாந்து) இருந்து துறவிகளை அழைத்துவர முயற்சி செய்தான். சியாம் பிக்குகள் இறுதியாக 1753-இல் இலங்கைக்கு வந்தனர். அவர்கள் கண்டியில் மல்வத்த மற்றும் அச்கிரிய [Malwatta and Asgiriya chapters] என்னும் இரண்டு பிக்கு சங்கங்களை உருவாக்கினர். அந்த நேரத்தில், எசல [சிங்களத்திலே ஆடி மாதம் எசல எனப்படும்] பெரகரா விழாவில் [The Kandy Esala Perahera procession] பத்தினி அம்மன் [கண்ணகி] முதன்மையாக வணங்கப்பட்டு வந்தார். ஆனால் சியாமிலிருந்து வந்த பிக்குகள் இதை ஏற்கவில்லை. அவர்கள் மன்னரிடம், “தலதா (Dalada / Sacred Tooth Relic) விழாவின் முன்னிலையாக இருக்க வேண்டும்” எனக் கூறினர். அதன் பிறகு, அதாவது சுமார் இருநூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தான், பெரகரா விழாவில் பல் நினைவுச் சின்னம் முக்கியத்துவம் பெற்றது என்ற நீண்ட வரலாற்றை சுருக்கமாக அனலி எடுத்துரைத்தாள்.

தலதா மாளிகையில் உள்ள ஓவியங்கள் கண்டி காலத்து ஓவியங்கள் ஆகும். இவை மாளிகையின் பல இடங்களில், குறிப்பாக மேல் மாடி உட்கூரையில் உள்ள நிரல்களிலும், தலதா மண்டபம், எண்கோண மண்டபம் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் பல பெண்ணுருவங்கள் அடங்கிய நுட்பமான இரதங்களும், சதுர்நாரி பல்லக்குகளும் இடம்பெற்றுள்ளன. அவை எல்லாவற்றையும் ரசித்து இருவரும் பார்த்தார்கள்.

தர்மத்தின் தானமே எல்லா தானங்களையும் மிஞ்சும்.
தர்மத்தின் ருசி எல்லா ரசனைகளையும் மிஞ்சும்.
தர்மத்தில் உள்ள இன்பம் எல்லா இன்பங்களையும் மிஞ்சும்.
ஆசையை அழிப்பது எல்லா துன்பங்களையும் வெல்லும்.

ஆரனும் அனலியும், தலதா மாளிகைக்கு சென்றபின், அதன் முன் இருந்த, 1807 ஆம் ஆண்டு மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கரால் கட்டப்பட்ட கண்டி ஏரியை சுற்றி பொழுதுபோக்காக நடைப் பயணம் செய்து, கோயில் மற்றும் சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சிகளை கண்டு ரசித்தனர்.

“வரலாறு நம்மைப் பிரித்தது,” என்று ஆரன் கூறினான், “ஆனால் பக்தி இன்னும் நம்மைப் பிணைக்கிறது.” அனலி சிரித்தாள். அப்பொழுது அவர்கள் இரவில் காலடி எடுத்து வைத்தனர். அமைதியான ஏரியின் குறுக்கே கண்டியின் விளக்குகள் பிரதிபலித்தன. அங்கே பொதுவான கெண்டை மீன் மற்றும் திலாப்பியா மீன்கள் அங்கும் இங்கும் கூட்டமாக ஓடுவது தெரிந்தது, அவைக்கு மேலே நீர்க்காகம் அல்லது பெரிய நெட்டைக்காலி [Great Cormorants], மீன்கொத்தி, மற்றும் அவை போன்ற பறவைகள் வட்டமிட்டுக் கொண்டு இருந்தன. அக்காவின் மகள் அதை பார்ப்பதில், தனது நேரத்தை செலவழித்தாள். அது அவர்களுக்கு தங்களுக்குள் தனிப்பட பேசவும் பழகவும் இடமளித்தது. 'உண்மையான அன்புக்கு ஏங்குபவர்களைத்தான் காதல் மரணக் குழியில் தள்ளுகிறது' என்று யாரோ சொன்னது அவனுக்கு சிரிப்புக்கு வந்தது. ஏன் என்றால், அது அவளின் கன்னக்குழியில் தான் விழுத்தும் என்று இப்ப அவனின் அனுபவம்.

அவன் தோளில் சாய்ந்து இருந்தவள், கொஞ்சம் எட்டி, அவன் காதில், "நான் உங்களை காதலிக்கின்றேன். இறுதி வரைக்கும் என்னை இப்படியே காதலிக்க வேண்டும்" என்றாள் வெட்கத்துடன். அவள் கன்னத்தை கிள்ளியபடி, "வேற வேல என்ன இருக்கு அத விட முக்கியமா" என்றான் ஆரன். பின் அவன், அவள் முகத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு, "அடி பாவி... இத ஏன் மொதலையே சொல்லல" என்றான்.

"ம்ம்ம் ... எனக்கு உங்கள பிடிக்கும். ஆனா உங்களுக்கு என்னைப் பிடிக்குமானுத் தெரியல... அதான் சொல்லல" என்றாள் செல்லச் சிரிப்புடன். பிறகு எனோ, " சும்மா தான்!!!" என்றுக் கூறி அவன் நெஞ்சத்தில் மீண்டும் சாய்ந்து கொண்டாள். அவள், தான் என்ன பேசுகிறேன் என்று ஒரு தொடர்பு இல்லாமல், எதோ ஒரு மயக்கத்தில் உளறுவது போல் இருந்தது.

"சும்மாவா சொன்னார்கள் பெண்களை புரிந்து கொள்ள முடியாது என்று" என்று எண்ணிக் கொண்டு, ஆரன், " சரி!! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா" என்றான். "ம்ம்ம்!!!" என்றாள்.

"நிமிடத்திற்கு நிமிடம் நீ அழகாகிக் கொண்டே போகின்றாயே ... அது எப்படி" என்றான். நாணத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். கூடுதலாய் ஒரு நிமிடம் கூட ஆகவில்லை ஆனால் அவள் அழகைக் கூட்டி இருந்தாள். "ஒ! தன் கேள்வி தவறோ... வினாடிக்கு ஒரு முறை அல்லவா இவள் அழகை கூட்டிக் கொண்டே போகிறாள்" என்று எண்ணிக் கொண்டு அவன் இருக்கும் போதே, "அது ரகசியம்... சொல்ல முடியாது... சரி நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்" என்றாள்.

"என்ன கேள்வி" என்றான். "உண்மையிலேயே வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து காதல் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?" என்றாள். அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் கண்கள் பேசின. அது சொல்லாமல் சொன்னது.

உள்நாடு வெளிநாடு
காதலுக்கு ஏது பாகுபாடு
உறங்கும் போது கனவிலும்
விடிந்தவுடன் நினைவிலும்
வாழும் வரை உயிரிலும்
காற்றை கண்ட உடன்
நடனமாடும் மரங்களைப் போல
ஒருவரை ஒருவர் கண்டவுடன்
ஆசை அன்பு, பாசம், காமம்
துளியாய் மனதில் எழும்
உணர்வே காதல் காதல்

ஏரிக்கரை கொஞ்சம் அமைதியாய் அப்பொழுது இருந்தது. சூரியன் மறையும் நேரம். குளிர் தென்றல் அவர்கள் இருவருக்கும் பல கதைகளைப் பேசிக் கொண்டு சென்றது. ஏனோ அவள் முகம் திடீரென வாடிப் போனது . "ஏய் என்னாச்சி?" என்றான் ஆரன். பதில் வரவில்லை. "எதாவது பிரச்சனையா...?" ஆரன் தொடர்ந்தான். "இல்லை..." என்றாள் அனலி. பெண்கள் இல்லை என்றால் ஏதோ இருக்கின்றது என்று அர்த்தம். எனவே, அவன் திருப்பி பின்னால் பார்த்தான். அக்காவின் மகள், பறவைகளை, மீன்களை எண்ணுவதை விட்டு விட்டு, சித்தியை எண்ணுவது போல அங்கு நின்றாள். ஆரன், அக்காவின் மகளை கூப்பிட்டு, எப்படி ஏரி, தலதாமாளிகை என்று கேட்டு நிலைமையைச் சமாளித்தான்.

பின் அடுத்த நாள், கண்டி நகரத்தை விட்டு, நுவரெலியாவிற்கு போகும் பொழுது, வழியில், தொடர் வண்டி நிலையம், கடைத் தெரு, பூந்தோட்டம், பேராதனை பல்கலைக் கழகம், என பலவற்றை இருவரும் ரசித்துப் பார்த்தார்கள். அதன் பின், கண்டி மற்றும் பேராதனையின் பரபரப்பான தெருக்களிலிருந்து, ஆரனும் அனலியும் மத்திய மலைப்பகுதிகளுக்கு மேலும் தெற்கே பயணிக்கத் தொடங்கினர். அங்கு மூடுபனி மூடிய மலைகளும் பச்சை பசேலென தேயிலைத் தோட்டங்களும் அவர்களுக்காகக் காத்திருந்தன. மேகங்கள் நனைந்த மலைகள் மற்றும் மரகதப் பள்ளத்தாக்குகள் வழியாக அவர்களின் வாகனம் மெதுவாக மேலே ஏறியது.

அக்காவின் மகள், "ஆஹா.. அங்கு பாருங்கள் எவ்வளவு பச்சை பசேல் என்று புல்வெளிகள். வயல்கள். ஆஹா! அதோ சிறிய ஓடைகள், பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது சித்தி" என்றாள். "ஆமாம், கீழே பள்ளத்தாக்கு. மேலே மலை முகடுகள். அவற்றில் மழை மேகங்கள் மிதந்து கொண்டு உள்ளன" என்று அனலி, கை நீட்டிக் காட்டி தொடர்ந்தாள்.

திடீரென அக்காவின் மகள், ஆரனைப் பார்த்து "இலங்கைக்குப் பறந்து செல்லும்போது அனுமாருக்கு மிகவும் குளிர்ந்து இருக்குமா?" என்று கேட்டாள்.

ஆரன் சிரித்தான் "வரும் பொழுது குளிர்ந்து இருக்க வேண்டும், அது தான் போகும் போது வாலில் நெருப்புடன் பறந்தானோ ?" என்ற கேள்வியுடன் பதில் அளித்தான்.

அனலி ஜன்னலுக்கு எதிராக முகத்தை அழுத்திக் கொண்டு, சிவப்பு நிற புடவைகளில் தேயிலை பறிப்பவர்கள் எறும்புகள் போல துடிப்பான பச்சை சரிவுகளில் நகர்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "நாம் வேறொரு உலகத்திற்குள் அடியெடுத்து வைத்தது போல் இருக்கிறது," என்று அவள் கிசுகிசுத்தாள். "பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கவிடப்பட்ட ஒரு உலகம் போல் இருக்கிறது" என்றாள்.

ஆரன் சிரித்தான். "இது நினைவுகளைச் சுமந்து செல்லும் உலகம் - காலனித்துவ தோட்டங்கள், இந்தியாவிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட தமிழ் தொழிலாளர்கள், தலைமுறை தலைமுறையாக உழைப்பு மற்றும் ஏமாற்றம். அவர்களின் சோகக் கதைகள் நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீரிலும் மூழ்கியுள்ளன." என்றான்.

நுவரெலியாவிற்குச் செல்வது ஒரு நீண்ட பயணம். இடையில் ஓரிடத்தில், ஒரு பழங்கால கடையில் இறங்கி, பழங்கள் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, அங்கிருந்து ரம்போதா அருவிகளைப் [The Most Majestic Ramboda Falls In Sri Lanka] பார்த்தார்கள். பச்சைப் பசேல் என்று மலைக் காடுகள் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருந்தன. அப்பொழுது சட்டென்று மழை தூறியது. அந்த தூறலில், இருவரும் நன்றாக நனைந்து விடடார்கள். அந்த ஈரத்தில், அவளின் உடல், ஒரு கவிதை போல மிதந்தது அவனுக்கு, அவன் வாய் அவனை அறியாமலே;

மலையின் உச்சி
மனம் நொந்து
விழுந்து சாவதற்கு அல்ல
மனம் மகிழ்ந்து மேலும்
பறந்து உயர்வதற்கு

தாய்நாட்டின் தாலாட்டில்
மலை உச்சியின் விளிம்பில்
வாழ்வதை நினைப்போமே அனலி!

என்று முணுமுணுத்தது. வழியில் தம்ரோ டீ [Damro Tea] தொழிற்சாலைக்கு ஒரு விசிட் [visit] அடித்தார்கள்! ஆனால் அவர்கள் சொல்லும் டெக்னாலஜி [technology] எல்லாம் கேட்கும் நிலையில் ஆரனும் அனலியும் இல்லை! அவர்களின் எண்ணம் எல்லாம் சிகிரியா சித்திரம் போல், முகிலில் மிதந்து கொண்டு இருந்தன.

அதன் பின், இலங்கையின் "சிறிய இங்கிலாந்து" என்று அழைக்கப்படும் நுவரெலியாவை அடைந்த அவர்கள், பைன் மரம் மற்றும் ஈரமான மண்ணின் நறுமணத்தைச் சுமந்து செல்லும் மிருதுவான மலைக் காற்றில் கிரிகோரி ஏரியின் (Lake Gregory) வழியாக நடந்து சென்றனர். காலனித்துவ கால பங்களாக்கள் தெருக்களில் வரிசையாக இருந்தன, குதிரை வண்டிகள் கற்களின் மீது மெதுவாகச் சத்தமிட்டன.

நுவரெலியாவில் அப்பொழுது 14°C. பனி மூட்டமாக இருந்தது. ஆனால் ஆரனுக்கு இவை ஒன்றும் பெரிய குளிரல்ல. ஆனால் அனலிக்கு பனி கடந்து செல்லும்பொது, எலும்பு வரை எட்டிப் பார்த்து குளிர்ந்தது. அவள் ஆரனை இறுக்கிப் பிடித்து அணைத்துக் கொண்டாள். அக்காவின் மகளையே மறந்து விட்டாள் அந்த குளிரில். அனலியின் இந்த புத்துணர்ச்சியான முகம், அவளின் தங்க மாலை மின்னிய சங்கு கழுத்து, ஒட்டிய உடையில் அவளின் அழகு, அவனை அப்படியே பிரமிக்க வைத்தது. என்றாலும் அவன், அவள் கைகளை உதறிவிட்டு கொஞ்சம் விலகி நின்றான்.

அதன் பின் அவர்கள் வடக்கு நோக்கித் திரும்பினார்கள்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 07 தொடரும்

துளி/DROP: 1953 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 06

https://www.facebook.com/groups/978753388866632/posts/32974794075502481/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 07

அத்தியாயம் 7 - வடக்கு நோக்கித் திரும்புதல்

கிழக்கு கடற்கரையை, திருகோணமலையில் இருந்து அம்பாறை வரை சென்று பார்த்த பிறகு, கதிர்காமம் மற்றும் மலை நாடு ஏறி இறங்கியபின், ஆரனும் அனலியும் ஆழ்ந்த தமிழர் வரலாற்று அறிவுடனும் மற்றும் தங்களுக்கு இடையினான நல்ல புரிதலுடனும் காடுகள் மற்றும் தடாகங்கள் வழியாக வடக்கு நோக்கி அவர்கள் திரும்பினார்கள். முதலில் அவர்களின் அன்பையும் ஆர்வத்தையும் தூண்டிய நகரம் அது. இந்த முறை, நகரம் ஒரு இலக்காக மட்டுமல்லாமல், ஒரு வீடு திரும்பும் இடமாகவும் இருந்தது.

என்றாலும் அவர்கள், மன்னாரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான மடுமாதா தேவாலயம் மற்றும் இலங்கையில் உள்ள ஒரு பழமையான சிவன் கோயிலாகவும், பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றானதுமான திருக்கேதீஸ்வரம் ஆலயம், முல்லைத்தீவில் உள்ள ஒட்டி சுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் மற்றும் முள்ளிவாய்க்கால் போய், அதன் பின் யாழ்ப்பாணம் போகத் தீர்மானித்தனர்.

அதன்படி, அவர்கள் முதலில் முல்லைத்தீவு சென்று ஒட்டி சுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம் மற்றும் முள்ளிவாய்க்கால் இரண்டையும் பார்த்தனர். முள்ளிவாய்க்காலின் வெண்மணற் கடற்கரை மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு நிறைந்தது என்றாலும், மே, 2009-இல் அங்கு பாய்ந்த இரத்தத்தின் சிவப்பு நிறம் தான் ஆரனின் கண்களில் தெரிந்தது. அவன் கண்களில் இருந்து கண்ணீர் அவனை அறியாமல் ஒழுகியது. அனலி உடனடியாக அவனை அணைத்து, கண்ணீரைத் துடைத்தாள்.

அப்பொழுது கதிரவன் மறையவும், கார்மேகம் சூழவும் சரியாக இருந்தது. சட்டென்று மாறிய வானிலைக்கு ஏற்றாற் போல் பாடல் ஒன்று காற்றில் தவழ்ந்தது, “நீயும் நானும் அன்பே.. கண்கள் கோர்த்துக் கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்”, அருமையாக இருந்தது.

நீண்ட காலம் தனியாக தவித்த அனலி ஒரு கணம், தன்னையே இழந்துவிட்டாள்! அந்த உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. தனக்குள்ளே தானே சிரித்துக்கொண்டாள். அப்பொழுது அவளின் முழுமையாக வெளிவராத புன்னகையும் மற்றும் அவள் அணிந்திருக்கும் கண்ணாடியையும் தாண்டி வெளிப்படும் அவளின் கண்களின் அழகும் ஆரனை ஒருகணம் வாயடைக்க வைத்தது.

பெண்மையின் அழகில் பிரம்மனும் மயங்கினான்
கண்களின் அசைவில் நானும் தடுமாறினேன்
விண்ணில் வாழும் தேவதை இவளோ
மண்ணில் வந்தது என்னைத் தழுவவோ?

உதடு பிரித்து முத்துப் புன்னகை
உதடு பிரிக்காமல் பவளப் புன்னகை
உதடு சுழித்து கொல்லும் புன்னகை
உதடு கடிக்க உள்ளம் ஏங்காதோ?

முன்பு அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த அவன் ஏனோ இப்ப அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். “ஹலோ” என்று அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து மண்ணிற்கு கொண்டு வந்தான்! அப்பொழுது, வானொலியில் “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை, சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை” இசைஞானியின் பாடல் ஒலித்தது. அதன் பின் அவர்கள் தங்கள் உணர்வுகள், கற்பனைகளில் இருந்து விடுபட்டு, ஒருவாறு சமாளித்துக்கொண்டு அவர்கள் மன்னார் சென்றனர்.

மன்னார் நகரில், ஆரனும் அனலியும் தங்கள் காலை உணவை ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில், யாரோ ஒருவர் “சண்டை நடந்த காலத்தில, அவங்கள் சைவம், வேதம் எண்டு பார்த்து விட்டே, குண்டு போட்டவங்கள்; பிடிச்சுக் கொண்டு போனவங்கள். தமிழன் எண்டு மட்டும் தானே பார்த்தவங்கள். அப்ப நாங்கள் ஏன் சைவம், வேதம் எண்டு வேற்றுமை காட்ட வேண்டும்….” என்ற உரையாடல், அவர்களின் கவனத்தை, வெகுவாக ஈர்த்தது.

அப்பொழுது அனலி, ஆரானிடம் மெதுவாக "ஆமாம், போர் நடைபெற்ற காலங்களில், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், மடுமாதா தேவாலயம் உட்பட வடக்கு, கிழக்கு தேவாலயங்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீது, தமிழர்கள் என்றே குண்டு போடப்பட்டது. இதேபோல வடக்கு, கிழக்கில் இந்துக் கோவில்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீதும், தமிழர்கள் என்றே குண்டுகள் போடப்பட்டன. அன்று, அவ்வாறு கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களை இன்று, இந்து, கிறிஸ்தவம் எனக் கூறுபோட்டு, வேரறுக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன" என்று வேதனையுடன் கூறினாள்.

ஆரன், அனலியை கூர்ந்து பார்த்தான். " அனலி உனக்கு ஒன்று தெரியுமா?, பண்டாரநாயக்க, தான் பிறந்த கிறிஸ்தவத்திலிருந்து பௌத்தத்துக்கு மாறியதாலேயே, பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட சிங்கள சமூகம், தங்களின் தலைவராக அவரை ஏற்றுக் கொண்டது. ஆனால் தந்தை செல்வா, தான் பிறந்த, தான் நேசித்த கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிக் கொண்டே, பெரும்பான்மை இந்து மக்களைக் கொண்ட, தமிழ்ச் சமூகத்தின் ஏக தலைவராக இறுதி மூச்சு வரை கோலோச்சினார். அது தான் தமிழ் மக்களின் பெருமை! அதை உடைக்கத்தான் இப்போது இந்த சதிகள்!!" என்றான்.

"இதேவேளை, தமிழர் பிரதேசங்களை விழுங்கும் ஓர் ஊடகமாகவே விகாரைகளையும் தாதுகோபுரங்களையும் பேரினவாதம் அமைத்து வருகின்றது. இது காலங்காலமாக, நம் நாட்டில் அரங்கேற்றப்பட்டு வரும் அசிங்கமான விடயமாகும். இதன் கரும் புள்ளிகளே, வடக்கு, கிழக்கு தமிழ் பாரம்பரிய பிரதேசங்களில் புத்தர் கோவில் ஆக்கிரமிப்பு ஆகும். ‘நாம் தமிழர்கள்’ என்ற பொது நலனைக் காவு கொடுத்து விட்டு, மதம் என்ற சுய நலனுக்குள் சிக்கக் கூடாது. இல்லையேல், பெரும் புயல் போல சீறிப்பாய்ந்து வருகின்ற பேரினவாதத்துக்கு முன்னால் சுருண்டு போய் விடுவோம். பிரிந்து கிடந்தால், எம்மால் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது; எங்கள் தலை எழுத்தையே மாற்றி விடுவார்கள்." என்றான் ஆரன்.

"ஆகவே, எமக்குள் இருக்கின்ற வேண்டப்படாத தடுப்புகளை உடைத்து, சுதாகரிக்க வேண்டிய நேரமிது. வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழாக மட்டும் இருக்கட்டும், எங்களின் மூச்சும் பேச்சும் வீச்சும்!" என்று முடித்தாள் அனலி.

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டு நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும் என்பது அதன் பெருமையைக் கூறுகிறது. அனலி சுந்தரரின் ஈழத்து தேவாரத்தை பாடிக் காட்டினாள்.

மூவர் என இருவர் என
முக் கண்ணுடை மூர்த்தி
மாவின் கனி தூங்கும் பொழில்
மாதோட்ட நன் னகரில்
பாவம் வினை அறுப்பார் பயில்
பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திருக்
கேதீச்சரத் தானே!

ஆரன் உடனடியாக ஏழாம் நூற்றாண்டு சம்பந்தரின் ஈழத்து தேவாரத்தை ஒருவாறு எழுத்துக்கூட்டி வாசித்துக் காட்டி, இதன் கருத்து உனக்குத் தெரியுமா என்று அனலியைக் கேட்டான்


புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர்
எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின்
மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே!

"ஆமாம், முதல் வரியில், 'புனைந்த துகிலை ஆடையாய்க் கொண்ட பெளத்தர்கள் புறம் பேசுவதே கொண்டுள்ளார்கள்' என்று கூறப்படுவதில் இருந்து, இன்றும் இன்னும் சைவ மத ஆலயங்களுக்கு எதிராக அல்லது வலிந்து கட்டப்படும் புத்த ஆலயங்கள், அவர்களின், அந்த சிலரின் செயலுக்கு எடுத்துக்காட்டாகிறது." என்றாள்.

மேலும் இந்நாட்டுப் பழங்குடியினரான நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் ஆகும் . அந்த பெருமை மிக்க ஆலயத்தைக் கண்டுகளித்த பின் அவர்கள் மடுமாதா தேவாலயம் சென்று பார்த்தனர். அதன் பின் யாழ்ப்பாணம் சென்றனர்.

பொதுவாகவே எல்லா பசங்களுக்கும் அவங்க காதலன் காதலியுடன் ஒரு நீண்ட தொலைதூர பயணம் செய்ய விருப்பம் இருக்கும், அதுவும் காதலியுடன் பிரத்தியேக வாகனத்தில் தொலைதூர பயணம் என்றால் அதன் இன்பத்தை சொல்லவா வேண்டும்? ஆரன், அனலி அதற்க்கு விதிவிலக்கு அல்ல. என்றாலும் அனலியின் அப்பாவின் அந்த எச்சரிக்கைகளை அல்லது வேண்டுகோளை ஆரன் என்றும் மறக்கவில்லை.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 08 தொடரும்

துளி/DROP: 1957 [கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" [A Journey to the homeland through Love, Faith, and Roots] / பகுதி 7

https://www.facebook.com/groups/978753388866632/posts/33015708298077725/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08

அத்தியாயம் 8 - மீண்டும் யாழ்ப்பாணம்

அந்த மாலை, தென்றல் காற்று வீசிக்கொண்டிருக்க, மரங்களின் இலைகள் தன் பாடல்களை பாடிக்கொண்டிருக்க, அவர்களின் வண்டி அளவான வேகத்துடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தது.

"யாழ்ப்பாண நூலகம், இடிந்து விழுந்தாலும், அது பேசுகிறது," என்று ஆரன் தன் உரையாடலைத் தொடங்கினான். "அறிவையும் கலாச்சாரத்தையும் முற்றிலுமாக அழிக்க முடியாது என்பதை இது நமக்குச் சொல்கிறது. எங்கள் அன்பைப் போலவே, அவையும் தாங்கும்." என்றான்.

அனலி அவனது கையின் மேல் ஒரு கையை வைத்தாள். "அப்படியானால், நாம் நினைவைப் பேணுபவர்களாக இருப்போம், ஆரன். நம் முன்னோர்களின் கதைகள், அவர்களின் கவிதைகள், அவர்களின் பக்தி மற்றும் நமது பயணத்தை எடுத்துச் செல்வோம் - இதனால் காலம் நகர்ந்தாலும், எதுவும் உண்மையில் இழக்கப்படாது." என்றாள்.

ஒரு நிமிஷம் வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள். மன்னார் கடலின் அழகை இருவரும் சேர்ந்து ரசித்தார்கள். உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல, அவள் காந்த விழிகளில், அவள் அப்பாவின் எச்சரிக்கையை சற்று மறந்துவிட்டான். கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன, ஆரனின் அனலியின் பாதங்களை நனைத்து குழப்பிவிட்டோமோ என்று. மணல் தோண்டும் நண்டுகளும் இருவரையும் விழி உயர்த்தி பார்த்தன, அவர்களின் அணைப்பில் இடைவெளி இல்லையே என்று. தன்னைவிட ஒரு அழகி இருக்கிறாளென நிலவும் இன்னும் விண்ணில் தோன்றவில்லை. இடைவெளி இல்லாமல் இருவரும் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தனர். நல்ல காலம் "சித்தி" என்று அக்காவின் மகள் கூப்பிட்டது இருவரையும் எல்லை தாண்டாமல், வண்டிக்கு திரும்ப வைத்தது. என்றாலும் அவன் எண்ணங்கள் ஏதேதோ மனதில் இன்னும் கற்பனை செய்துகொண்டே இருந்தது.

'பிரமன் அழகை எல்லாம் ஒன்று குழைத்து படைத்திட்ட அழகோவியமாக, அவள் அங்கத்தில் எது அழகு என்று ஆராய்ச்சி பண்ண முடியாத படி என்னை தவிக்க வைத்துவிட்டானே ' என்று பெருமூச்சு விட்டான்.

'மான் விழி, மீன் விழி என்று பெண்களின் கண்களைச் சொல்வார்கள். இவள் கண்களோ பார்த்தோர் மனதை ஊடுருவிச் செல்லும் அம்பு விழியாய் இருக்கே. அழகான கண்கள் அதன் இமைகள் நேர்த்தியாக மை தீட்டி அழகு கொடுக்குதே' ஆரன், அனலியை திரும்பி பார்த்தான்.

முகத்தில் தவழும் தலை முடியால் அவள் முகம் மேகம் மூடிய நிலவு போல பிரகாசித்தது. கன்னங்களோ பளிங்குக்கல் போல பளபளத்தது. அளவாக வடிவமைத்த மூக்கோ கிளி கண்டால் கொத்தும் கோவைப்பழம் போல இருந்தது. காதில் இருந்த வளையம் கிளி ஊஞ்சலாட நினைத்திடுமோ என்று கொஞ்சம் பயந்தான். அவன் எண்ணம் முடிவு இல்லாமல் தொடர்ந்தது. அப்பொழுது அவளின் தேனில் ஊறிய பலாச்சுளை போன்ற உதடுகள் அதன் ஓரங்களில் சிறுநகை ஒன்றைத் தவழ விட்டது. அந்தப் புன்னகை அவன் மனதை கிறங்கடித்தது, ஆனால் அவன் அதை வெளியே காட்டவில்லை.


யாழ்ப்பாணம் அடைந்ததும், நேராக வண்டி 'வடக்கு, கிழக்கு தனியார் சுற்றுலா லிமிடெட்' க்கு போனது. அங்கே அவர்களை வரவேற்ற அனலியின் அப்பா, ஆரனுக்கும் அனலிக்கும் வேன் டிரைவருக்கும் வடையுடன் கோப்பி கொடுத்தார். அக்காவின் மகள் துள்ளிக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட்டார். ஆரன் முழு சுற்றுலாவிற்க்கான மிகுதிப் பணத்தைக் கொடுத்தான். அதன் பின் அவர்கள் உரையாடும் பொழுது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆரன், அனலியைத் திருமணம் செய்ய விரும்புவதாக தன் எண்ணத்தை மெதுவாகக் கூறினான், உடனே கொஞ்சம் வெட்கத்துடன், பக்கத்தில் இருந்த அனலி, தன் அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, அவரின் காதல் தானும் விரும்புவதாகக் கூறினாள்.

அவர்களுக்குள் எந்த சூழலில்-எந்த காலகட்டத்தில் காதல் வந்தது, ஆக்கிரமித்தது என்று சொல்ல முடியவில்லை. ஓசை படாமல் வந்து உட்கார்ந்து கொண்டது. இரண்டு பேருக்குள்ளும் காதல் இருந்தது பல சந்தர்ப்பங்களில் உறுதியானது. ஆரனுக்கு இருந்த அதே உணர்வு அனலிக்கும் இருந்தது. அதனால்த்தான் அனலியும் உடனடயாக ஒத்துக்கொண்டாள்.


சுற்றுலா பயணிக்கவே காலம் பணித்தாலும்
சற்றும் எதிர்பாராது நம்மை இணைத்ததோ?
தேகம் சிறகடிக்க வானம் குடைபிடிக்க
தொலைந்தது எம் இருவரின் இடைவெளியோ ?

மேனி எங்கும் சுவை தேடி அலையும்
இளம்முயல் குட்டிகள் நம் இதழ்களோ?
குரல் அலையையும் இதய வாசத்தையும்
கடத்திவரும் காற்றின் காதலர்கள் நாமோ?

விழிக்கும் மொழிக்கும் வல்லமை வந்ததோ
பொங்கும் நட்பை காதலாய் மாற்றிட?
வலிக்கும் மனதிற்கும் சக்தி பிறந்ததோ
என்றும் நாம் ஒருவரையொருவர் நினைக்க?



அதன் பின், அவர்கள் தங்கள் காதல் தொடங்கிய நல்லூர் கோவிலுக்கு மீண்டும் சென்றனர். பிரமாண்டமான திருவிழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன, தாளமாக மேளங்கள் முழங்கின, பக்தர்கள் முருகனுக்கு காணிக்கைகளை எடுத்துச் சென்றனர். காற்று, கொண்டாட்டத்தாலும் பக்தியாலும் மின்னியது.

ஆரன் அனலியை நோக்கித் திரும்பினான். “நல்லூரிலிருந்து திருகோணமலை வரை, கண்டி முதல் நுவரெலியா வரை, மட்டக்களப்பு முதல் கதிர்காமம் வரை, முல்லைத்தீவு முதல் மன்னார் வரை ... இந்தப் பயணம், ஒரு பயணத்தை விட மேலானது. இது இதயத்தின் யாத்திரையாக இருந்தது. ஒவ்வொரு இடமும் எங்களுக்கு பக்தி, சகிப்புத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் அழகைக் கற்றுக் கொடுத்துள்ளது.” என்றான்.

அனலி சிரித்தாள், அவள் கண்கள் பிரகாசித்தன. “இவை அனைத்திலும், நாங்கள் ஒன்றாக நடந்தோம். வரலாற்றின் வழியாக, நிலப்பரப்புகளின் வழியாக, கடந்த காலத்தின் கிசுகிசுக்கள் வழியாக. எங்கள் காதல் இந்தக் கதைகளைப் போன்றது - இலங்கையின் தமிழ் மண்ணில் பின்னப்பட்டது.” என்றாள்.

மாலை சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது மறையும் போது, நகரத்தை அம்பர் (amber) ஒளியில் வரைந்தபோது, ஆரனும் அனலியும்
நல்லூர் கோயில் படிகளில் கைகள் பின்னிப் பிணைந்து, இதயங்கள் ஒன்றாகின. அந்த அமைதியான, புனிதமான தருணத்தில், அவர்கள் புரிந்துகொண்டார்கள்: அன்பும் வரலாறும் பிரிக்க முடியாதவை. பக்தி, நினைவாற்றல் மற்றும் பகிரப்பட்ட பயணம் மூலம், அவர்களின் கதை - யாழ்ப்பாணத்தின் நீடித்த உணர்வைப் போல - என்றென்றும் நிலைத்திருக்கும் என்று.

அனலி அவன் மீது சாய்ந்தாள், அவளுடைய கண்கள் மின்னின. "அன்பு அனைத்தையும் சுமந்து செல்கிறது. அது கதைகள், பக்தி மற்றும் அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கையை சுமந்து செல்கிறது. அதனால்தான் நமது கதையும் முக்கியமானது - அது திரைச்சீலையின் ஒரு பகுதியாகும்." என்றாள்.

ஆரன் தனது கையை அவளின் கையுடன் இறுக்கிக் கொண்டான். "அப்படியானால், அனலி, நாம் எங்கு சென்றாலும், வரலாறு எந்த புயல்களைக் கொண்டு வந்தாலும், நமது அடையாளத்தைக் கொண்டாடுவோம், நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்போம், நமது அன்பைப் போற்றுவோம் என்று சபதம் செய்வோம்." என்றான்.

"நாங்கள் சென்ற ஒவ்வொரு நகரமும் எங்களுக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொடுத்தது: கதிர்காமத்தில் பக்தி, யாழ்ப்பாணத்தில் மீள்தன்மை, மன்னாரில் சகிப்புத்தன்மை, மலைப்பகுதிகளில் நெருக்கம், இப்போது, இங்கே - நாம் உள்ளூருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையிலான பாலம், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான பாலம்." என்றாள் சிரித்தபடி.

“வரலாறு புத்தகங்களில் மட்டுமல்ல,” ஆரன் மெதுவாகச் சொன்னான். “அது கோயில்களிலும், ஆறுகளிலும், கோட்டைச் சுவர்களிலும்... இதயங்களிலும் உள்ளது. நாங்கள் செய்தது எளிமையானது, ஆனால் ஆழமானது - நாங்கள் நினைவில் வைத்திருந்தோம், நேசித்தோம், அதை முன்னோக்கி எடுத்துச் சென்றோம்.” என்றான். அவன் தனது நாட்குறிப்பில்:

"இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். பண்டைய பயணிகள், கல்வெட்டுகள் மற்றும் தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நாளேடுகள் இந்த நிலங்களை ஆண்ட தமிழ் மற்றும் நாக மன்னர்களின் இருப்பை பதிவு செய்கின்றன. இவ்வாறு ஆழமான வரலாறு இருந்தபோதிலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கை (1948 முதல்) பாகுபாடு, இனக் கலவரங்கள் 1956, 1958, 1977, 1983, … ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1987 க்கும் 2009 மே 18ம் தேதிக்கும் இடையில் குறைந்தது ஐம்பதாயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட பொது தமிழ் மக்கள் உயிரிழந்தனர். பல இலட்ச மக்கள் குறிப்பாக 1983 க்கு பின் புலம்பெயர்ந்தார்கள். அவர்களின் பரம்பரையில் ஒருவனே நான்! [ஆரன்!]

இன்று, பல தமிழர்கள் என் [ஆரனின்] தாய் தந்தை போல், கட்டாய இடம்பெயர்வு காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் அதே வேளையில், தாயகத்துடனான அவர்களின் தொடர்பு மங்கிவிடக்கூடாது. இந்த தொடர்பைப் பேணுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு வழக்கமான வருகைகள் ஆகும்.

யூதர்கள் 2,000 ஆண்டுகள் எருசலேமுக்குச் சென்றனர். ஆர்மேனியர்கள் இன்னும் அர்மேனியாவிற்கு செல்கிறார்கள். ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள், கானா, செனெகல் சென்று “Door of No Return” இடத்தைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார்கள். அப்படியே, புலம்பெயர் தமிழரும் தாயகத்தை விட்டு விலகக் கூடாது.

நீங்கள் செல்லாவிட்டால் வரலாறு அழிக்கப்படும். ஆனால் நீங்கள் சென்றால் — வரலாறு உயிர்ப்படும். நம்மை யாரும் அழிக்க முடியாது என்பதற்கான சாட்சி அதுவே. நாம் செல்லாவிட்டால், நம்மை அழிக்க முயலும் மௌனம் மேலோங்கும். நாம் சென்றால், உலகம் அறியும் — வடகிழக்கு எப்போதும் தமிழர் தாயகம் என்று.

ஆனால், நீங்கள் அங்கே உங்களுக்கு ஒரு துணை தேடவேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அது தனிப்பட்ட முடிவு, அதில் நானும் ஒருவனாகிவிட்டேன். அவ்வளவுதான்!" என்று எழுதினான். அனலி அதைப் பார்த்து, ஆரனை மனதார வாழ்த்தியதுடன் பெருமையும் அடைந்தாள்!

ஆரன் அனலியின் இதயங்கள் பல நூற்றாண்டுகளின் தமிழ் வரலாற்றோடு ஒற்றுமையாக துடித்தன - ஒரு மக்களின் கதையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு காதல் கதையாக அது பின்னிப்பிணைந்து.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

முற்றிற்று

துளி/DROP: 1963 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 08

https://www.facebook.com/groups/978753388866632/posts/33056093137372574/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.