Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையகம்: பேரழிவும் மீட்சியும்

ba83163011046c5f2fdd1eca6f005758d4368226

Photo, Facebook: mariyan.teran

காலநிலை மாற்றம் (Climate Change) என்பது பூகோள ரீதியில் ஒரு நீண்டகால சவாலாக இருந்தாலும், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கையை பொறுத்தவரை, இதன் தாக்கம் தீவிரமானதாகவும் உடனடியானதாகவும் உள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை அதிகரிப்பு, சூறாவளிகள் (Cyclones) உருவாகும் வீதத்தையும், அதன் தீவிரத்தையும் (Intensity) கணிசமாக உயர்த்தியுள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் நிலப்பரப்பு, அதன் புவியியல் மற்றும் சனத்தொகையின் அடர்த்தி காரணமாக, பருவமழை தொடர்பான வெள்ளப்பெருக்குகள் மற்றும் நிலச்சரிவுகளுக்கு (Landslides) மிக எளிதில் ஆளாகிறது. கடந்த தசாப்தங்களில், நாட்டின் மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவுகளின் அதிர்வெண் மற்றும் அளவு அதிகரித்துள்ளது. உதாரணமாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) தரவுகள், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகள் ஆண்டுதோறும் நிலச்சரிவு அபாயத்தின் கீழ் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த பின்னணியில், ‘திட்வா’ போன்ற தீவிர இயற்கைப் பேரழிவுகள், இலங்கையின் பொருளாதாரத்தையும், சமூக உட்கட்டமைப்பையும் கடுமையாகச் பாதிக்கும் ஒரு புறச் சக்தியாக எழுந்துள்ளன.

திட்வா சூறாவளி (Cyclone Ditwah), சடுதியான தீவிரமடைந்து, இலங்கையின் மீது நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இலங்கை முழுவதும் அசாதாரணமான அளவில் பலத்த காற்று, கடும் மழை மற்றும் பாரிய வெள்ளம் ஏற்பட்டன. அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சியும் பலத்த காற்றும் முக்கியமாக மத்திய மலை நாட்டின் நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை கடுமையாகப் பாதித்தது. இந்த மாவட்டங்களே இலங்கையின் பெருந்தோட்டங்களை மையப்படுத்திய மலையக சமூகம் செறிந்து வாழும் தோட்டப் பகுதிகளாகும். காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான மற்றும் அதிக கனமழை, ஏற்கனவே நிலச்சரிவு அபாயத்தில் இருந்த இச்சமூகத்தின் குடியிருப்புகளைத் தாக்கியது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, திட்வாவின் தாக்கத்தினால் சுமார் 11 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், மேலும் 15,000க்கும் அதிகமான வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்தன.இந்தப் பேரழிவு பல சமூகங்களை பாதித்தாலும், இலங்கையின் சமூக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் ஒன்றான மலையகத் தமிழ்ச் சமூகங்களின் மீது திட்வாவின் தாக்கம் அசமத்துவமான அளவில் அதிகமாக இருந்தது.

எனவே, இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மை நோக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன,

நிலச்சரிவுகளின் தாக்கம்: திட்வா சூறாவளியைத் தொடர்ந்து மத்திய மலைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் தீவிரத்தையும், அதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் காயங்களின் அளவையும் ஆவணப்படுத்துதல்.

குடியிருப்புகளின் அழிவு: பாரம்பரிய லயன் அறைகள் (Line Rooms) மற்றும் தோட்டக் குடியிருப்புகள் மீது ஏற்பட்ட அழிவின் அளவை மதிப்பீடு செய்தல்.

இழப்பீட்டுப் பொறிமுறைகள்: அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நிவாரண மற்றும் இழப்பீட்டுத் திட்டங்களின் (Compensation Schemes) அணுகல், அமுலாக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் அவற்றை எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்வது.

நீடித்த தாக்கம்: பேரழிவின் விளைவாக இச்சமூகங்களின் வாழ்வாதாரத்தில் (Livelihood) ஏற்பட்டுள்ள நீண்டகால பாதிப்புகளைப் பகுப்பாய்வு செய்தல்.

இந்த ஆய்வின் முக்கியத்துவமானது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் நிலையை ஆவணப்படுத்துதல் மற்றும் கொள்கை வகுப்பவர்களுக்கு பரிந்துரைகளை வழங்குதல் என்பனவாகும். அதாவது, திட்வா சூறாவளியால் மலையக சமூகம் எதிர்கொண்ட தனிப்பட்ட துயரங்கள், இழப்பு மற்றும் சேதத்தின் (Loss and Damage) அளவை ஒரு முறையான ஆவணப்படுத்துதல், அதேபோல் காலநிலை மாற்றத்தின் தாக்கம், வரலாற்று ரீதியிலான சமூக, பொருளாதார ஒடுக்குமுறையுடன் எவ்வாறு இணைந்து, பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீதான சுமையை அதிகரிக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருதல், மற்றும் எதிர்காலத்தில் காலநிலை சார்ந்த பேரழிவுகளை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக அனர்த்த முகாமைத்துவம் (Disaster Management), மீள்குடியேற்றம் (Resettlement) மற்றும் இழப்பீடு வழங்கும் பொறிமுறைகளில் உள்ள இடைவெளிகளைக் களைய, வலுவான மற்றும் சமூகநீதி சார்ந்த பரிந்துரைகளை வழங்குதல் என்பனவாகும்.

வரலாற்று ரீதியிலான பாதிப்பு

மலையகத் தமிழ்ச் சமூகம் என்பது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குத் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் வம்சாவளியினரைக் குறிக்கிறது. இந்த மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தபோதிலும், சமூக, பொருளாதார ரீதியில் நீடித்த பாதிப்புக்குள்ளானவர்களாகவே உள்ளனர். இவர்கள் ஆரம்பம் முதலே அடிப்படை மனித உரிமைகள், குடியுரிமை மற்றும் உரிய ஊதியம் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்தனர். 1948 மற்றும் 1949ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்களால் இவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இது இவர்களை நாடற்றவர்களாகவும், இலங்கையின் சமூக அமைப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் ஆக்கியது. இவர்களின் குடியிருப்பு ‘லயன் அறைகள்’ 150 ஆண்டுகளுக்கும் மேலானவை, மிகக் குறைந்த கட்டமைப்புத் தரம் கொண்டவை, மேலும் அதிக மழை மற்றும் காற்றைத் தாங்கும் வலிமையற்றவை.தோட்டத் தொழிலாளர்கள் இந்த லயன் அறைகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தாலும், இந்த நிலம் பெரும்பாலும் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமானது. இதனால், இவர்களுக்குத் தங்கள் வசிப்பிடத்தின் மீதான நிரந்தர உரிமையும் (Tenure Rights), நில ஆவணங்களும் (Land Deeds) இல்லை. இந்த வீட்டுரிமைப் பிரச்சினை, பேரழிவுக் காலங்களில் அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு மற்றும் மீள்குடியேற்ற உதவியைப் பெறுவதைத் தடுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது. இவர்களின் வரலாற்று வறுமை (ஏனைய சமூகங்களை விடக் குறைவான வருமானம் மற்றும் அதிக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்தல்), நிரந்தரமற்ற வசிப்பிடம் மற்றும் வீட்டுரிமையின்மை ஆகியவை, திட்வா போன்ற பேரழிவுகளின் போது இவர்களின் பாதிப்பை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன.

மலையகத் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகள், இலங்கையின் மத்திய மலைப் பிரதேசங்களில் குறிப்பாக செங்குத்தான மலைச் சரிவுகளிலும், நீரோடைகள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலும் அமைந்துள்ளன. இந்த புவியியல் அமைப்பே, அவர்களை இயற்கைப் பேரழிவுகளுக்கு மிகவும் ஆளாக்குகிறது. தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் மழைநீர் விரைவாக வெளியேற முடியாத பாறைகள் மற்றும் களிமண் கலந்த சரிவுகளில் காணப்படுகின்றன. லயன் அறைகள் அமைக்கப்படும் இடங்கள் நீடித்த குடியிருப்புகளுக்கு உகந்ததாக வடிவமைக்கப்படவில்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர மழைவீழ்ச்சியின் போது, மண் அதிக நீரை உறிஞ்சி, அதன் இறுக்கத்தை இழக்கிறது. இதனால், செங்குத்தான சரிவுகளில் உள்ள லயன் அறைகள் மீது நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் மிக அதிகமாகிறது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல தோட்டப் பகுதிகளை உயர்ந்த அபாய வலயங்களாக (High-Risk Zones) வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளில் காணப்படும் முறையற்ற வடிகால் மற்றும் கழிவுநீர் அமைப்புகளும், மழைக்காலங்களில் நீரின் ஓட்டத்தைத் தடுத்து, மண் அரிப்பை (Soil Erosion) விரைவுபடுத்துகின்றன, இது நிலச்சரிவு அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது. திட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மழைவீழ்ச்சியின் அளவு (சில பகுதிகளில் 400 மி.மீ.க்கு மேல்), இந்த அபாயங்களை ஒரு பேரழிவாக மாற்றியது.

வாழ்வாதாரத்தின் தன்மை

மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வாதாரம் (Livelihood) ஏறத்தாழ தேயிலைத் தோட்டத் தொழிலை சார்ந்தே உள்ளது. இந்த ஒற்றைச் சார்புத் தன்மை, அவர்களைப் பேரழிவுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது. தொழிலாளர்கள் நாளொன்றுக்கு பறிக்கும் தேயிலை அளவைப் பொறுத்தே பெரும்பாலும் அவர்களின் வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது. தோட்ட வேலை பாதிக்கப்படும்போது, அவர்களின் அன்றாட வருமானம் உடனடியாக நின்றுவிடுகிறது. திட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் தேயிலைத் தோட்டப் பயிர்கள், தொழிற்சாலைகள், களஞ்சியங்கள் மற்றும் பெருந்தோட்ட வீதிகள் என்பவற்றுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்தச் சேதங்கள் நீண்டகாலத்திற்குத் தேயிலைத் தோட்டச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துகின்றன. தங்கள் வீடுகளை இழந்ததோடு மட்டுமல்லாமல், தங்கள் வேலையையும் இழந்த தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வேலையில் சேர்வதற்கும், மீண்டு வருவதற்கும் நீண்டகாலம் எடுக்கும். இது இவர்களை ஆழமான வறுமைச் சுழற்சிக்குள் (Deeper Poverty Cycle) தள்ளுகிறது. உதாரணமாக, ஒரு சில நாட்கள் வேலை இழந்தால் கூட, அது குடும்பத்தின் அத்தியாவசிய உணவுத் தேவைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளை நேரடியாகப் பாதிக்கிறது.

பேரிடர் காலங்களில் சமூகத்தின் தயார்நிலை மற்றும் அணுகல்

பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், மலையகச் சமூகங்களின் தயார்நிலை (Preparedness) மற்றும் உதவிகளை அணுகும் திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. தோட்டப் பகுதிகளுக்கான நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் பெரும்பாலும் தேசிய மொழிகளிலோ (சிங்களம், தமிழ்) அல்லது ஆங்கிலத்திலோ வெளியிடப்படுகின்றன. ஆயினும், இந்தத் தகவல் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில், தெளிவான முறையில், அவர்களது உள்ளூர் மட்டத்தில் சென்றடைவதில்லை. தகவல் தொடர்பில் உள்ள இடைவெளிகள் காரணமாக, பலர் அபாயங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் அல்லது தாமதமாகவே வெளியேற முற்படுகிறார்கள்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயத்தின் போது, தொழிலாளர்கள் தங்கள் லயன் அறைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், அருகிலுள்ள பாதுகாப்பான வெளியேற்ற மையங்கள் (Evacuation Centers) பாடசாலைகள், சமூக மண்டபங்கள் பெரும்பாலும் போதிய இடவசதி, அடிப்படைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருப்பதில்லை. மனிதாபிமான உதவி வரும்போது, அது பொதுவாக உள்ளூர் அரசியல் மற்றும் நிர்வாகத் தடங்கல்களால் மெதுவாகவே சென்றடைகிறது. நாடற்றவர்களாக வாழ்ந்த வரலாற்றுப் பின்னணி காரணமாக, இச்சமூகத்தினர் அதிகார மட்டத்தில் தங்கள் தேவைகளைக் கோருவதிலும், நிவாரண உதவிகளைப் பெறுவதிலும் உள்ள சவால்கள் அதிகம்.

திட்வா சூறாவளியின் நேரடித் தாக்கம்

திட்வா சூறாவளியின் போது ஏற்பட்ட அசாதாரணமான கனமழை (பல பகுதிகளில் 400 மி.மீ முதல் 500 மி.மீ வரை), இலங்கையின் மத்திய மலைப் பகுதிகளில் பெரும் நிலச்சரிவுகளைத் தூண்டியது. இந்த நிலச்சரிவுகளே, மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மீதான திட்வாவின் மிகக் கொடூரமான நேரடித் தாக்கமாக அமைந்தது. திட்வா சூறாவளியின் மையப்பகுதிகளில் ஒன்றான நுவரெலியாவில் தலவாக்கலை மற்றும் ஹட்டன் போன்ற தோட்டப் பகுதிகளில் பெரிய நிலச்சரிவுகள் பதிவாகின. இங்குள்ள செங்குத்தான சரிவுகளில் லயன் அறைகள் மீது பாறைகளும், மண்ணும் சரிந்ததால், பல குடும்பங்கள் விடியலுக்கு முன்னர் உயிருடன் புதைக்கப்பட்டன. அதேபோல் ஊவா மாகாணத்தின் அமைந்துள்ள தோட்டப் பகுதிகளில் நிலச்சரிவுகள் மிகவும் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தின. மீரியபெத்தை போன்ற வரலாற்று ரீதியிலான நிலச்சரிவு அபாயப் பகுதிகளில், மீண்டும் பல சிறிய மற்றும் நடுத்தர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பெரும்பாலான உயிரிழப்புகள் நிலச்சரிவுகளின் போது, அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நிகழ்ந்தன. இதனால், எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் வெளியேற அவகாசம் கிடைக்கவில்லை. ஒரே குடும்பத்தின் பல உறுப்பினர்கள் உயிரிழந்த சோக நிகழ்வுகள் பல தோட்டப் பகுதிகளில் ஆழமான சமூக வடுவை ஏற்படுத்தின.

திட்வா சூறாவளியின் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக, மலையக சமூகத்தின் குடியிருப்புகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் பாரிய சேதத்தை சந்தித்துள்ளன. நாடு முழுவதும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள லயன் அறைகளும் அடங்கும். இவை பெரும்பாலும் நிலச்சரிவுகள் அல்லது வெள்ளப்பெருக்கால் முழுமையாக இடிந்து, பயன்படுத்த முடியாதவையாகின. அதிகமான லயன் அறைகள் பகுதியளவில் சேதமடைந்தன. சுவர்கள், கூரைகள், சமையலறைகள் மற்றும் கழிவறைகள் போன்றவை சேதமடைந்ததால், மக்கள் தங்கள் வீடுகளில் தொடர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வீடுகளை இழந்த சுமார் 2 இலட்சம் மக்கள் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிக நிவாரண முகாம்களில் (பாடசாலைகள், சமூக மண்டபங்கள், கோவில் வளாகங்கள்) தங்க வைக்கப்பட்டனர். இந்த முகாம்களில் சுகாதாரம், உணவு மற்றும் தனியுரிமை (Privacy) ஆகியவை பெரும் சவால்களாக அமைந்தன. இவை நிரந்தரத் தீர்வுகள் அல்ல என்பதால், நீண்டகால மீள்குடியேற்றத்தின் அவசியம் உடனடியாக  உணரப்பட்டுள்ளது.

பல தோட்டப் பாடசாலைகள் நிவாரண முகாம்களாகப் பயன்படுத்தப்படுவதால்,மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்போது பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் ஆகியவை காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. நிலச்சரிவுகளாலும், வெள்ளத்தினாலும் பிரதான வீதிகள், தோட்ட வீதிகள்  மற்றும் புதையிரத பாதைகள் பெரும் சேதமடைந்துள்ளன. தோட்டங்களுக்குள் உள்ள வீதிகள் மற்றும் கால்வாய்கள் அழிந்ததால், நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதிலும், அத்தியாவசிய சேவைகளை வழங்குவதிலும் பெரும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

வாழ்வாதார மற்றும் பொருளாதார இழப்புகள்

மலையகச் சமூகத்தின் வாழ்வாதாரமான தேயிலைத் தோட்டத் தொழிலில் ஏற்பட்ட இழப்புகள், இந்த பேரழிவின் மிக நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கும். தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கால், ஆயிரக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவிலான தேயிலைத் தோட்டப் பயிர்கள் நிலச்சரிவுகளால் புதைந்து போயின. குறிப்பாக இளம் தேயிலை நாற்றுக்கள் முழுமையாக அழிந்தன. அதேபோல் நீர் மின் உற்பத்தி நிலையங்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள தோட்டக் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 50,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் அல்லது வேலையின்றி இருக்க நேரிட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் பெரும்பாலும் அன்றாடத் தேயிலை பறிக்கும் அளவைச் சார்ந்துள்ளது. வேலை நிறுத்தம் செய்யப்பட்டதால், இவர்களின் அன்றாட வருமானம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை உடனடியாகவும், கடுமையாகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், பலர் பசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி இன்றும் தவிக்கின்றனர்.

தேயிலை அல்லாத சிறிய அளவிலான உணவுப் பயிர்கள் (உதாரணமாக, மரக்கறிகள், உருளைக்கிழங்கு) மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு அருகிலுள்ள சிறு விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.பல குடும்பங்களின் சிறிய அளவிலான கால்நடைகள் (மாடுகள், கோழிகள், ஆடுகள்) வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் உயிரிழந்தன. இந்த இழப்புகள், ஏற்கனவே பின்தங்கியுள்ள சமூகத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சொத்து இருப்பை மேலும் சிதைத்துள்ளன.

இழப்பீடு மற்றும் மீள்குடியேற்றச் சவால்கள்

திட்வா சூறாவளியால் மலையகத் தமிழ்ச் சமூகம் அனுபவித்த பேரழிவுக்குப் பிந்தைய மீட்சி நடவடிக்கைகளில், அரசாங்கத்தின் இழப்பீட்டுப் பொறிமுறைகளை அணுகுவது தற்போது ஒரு பெரும் போராட்டமாக இருக்கிறது. அரசாங்கம் நிவாரணத் திட்டங்களை அறிவித்திருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் இச்சமூகத்தின் பாதிப்பைத் தீவிரப்படுத்துகின்றன. அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும், உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடுகளையும் வழங்குவதற்கான பல திட்டங்களை அறிவித்தது. இருப்பினும், இந்தப் பொறிமுறைகள் மலையகத் தமிழ்ச் சமூகங்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.பேரழிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆரம்பத்தில் நிவாரணமும் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. பிரதேச செயலகங்கள் (Divisional Secretariats) மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மூலமாகவே நிவாரணப் பொருட்கள் மற்றும் ஆரம்ப நிதி உதவிகள் விநியோகிக்கப்படுகின்றன.

மத்திய அரசிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு, மாகாண மற்றும் பிரதேச செயலகங்கள் வழியாக, தோட்டத் தொழிலாளர்களைச் சென்றடையும் இந்தச் சங்கிலி சிக்கலாகவும், காலதாமதம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் ஆவணங்களைச் சரிபார்ப்பது, அனுமதி வழங்குவது மற்றும் நிதி விடுவிப்பது ஆகியவை தாமதமாகின்றன. சேதத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், அரசாங்கம் ஒதுக்கிய நிதி ஒட்டுமொத்த தேவைகளை ஈடுசெய்யப் போதாமல் இருக்கிறது. இதனால், உதவிகள் பல குடும்பங்களுக்குக் குறைவான அளவிலேயே  கிடைக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் மட்டத்தில் அரசியல் தலையீடுகள் காரணமாகவும், தோட்ட நிர்வாகத்திற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக் குறைபாடுகளாலும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியைப் பெறுவதில் சவால்கள் உள்ளதாக சமூக அமைப்புகள் ஆரம்ப காலங்களிலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி உள்ளன. இவ்வாறான சவால்கள் இம்முறையும் ஏற்படலாம்.

இழப்பீட்டை வெற்றிகரமாகப் பெறுவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாகத் தேவைகள், இந்தச் சமூகத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. பெரும்பாலான லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுப் பத்திரங்கள் (Land Deeds) அல்லது சட்டரீதியான நிரந்தர வீட்டுரிமை ஆவணங்கள் இல்லை. இழப்பீடு பெறுவதற்கு வீட்டு உரிமையை நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதால், பலரது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இழப்பீடு மற்றும் மறுசீரமைப்பு மானியங்களைப் பெற, இறந்தவர்களின் மரணச் சான்றிதழ்கள், குடும்ப உறுப்பினர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் சொத்து சேதத்தை நிரூபிக்கும் மதிப்பீட்டு அறிக்கைகள் உள்ளிட்ட பல உத்தியோகபூர்வ ஆவணங்கள் அவசியமாகின்றன. நீண்ட காலமாக ஒதுக்கப்பட்ட நிலையில் வாழும் இந்தச் சமூகத்தில், இந்த ஆவணங்களைப் பெறுவதிலும், அவற்றைத் தயாரித்து சமர்ப்பிப்பதிலும் மிகப் பெரிய சவால்கள் காணப்படுகின்றன. இழப்பீட்டு விண்ணப்பப் படிவங்கள், செயல்முறைகள் மற்றும் அதற்கான வழிகாட்டல்கள் ஆகியவை தமிழ் மொழியில் முழுமையாகவோ அல்லது தெளிவாகவோ தோட்டப் பகுதிகளுக்குச் சென்றடையாதது, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் குழப்பங்களையும் பிழைகளையும் ஏற்படுத்துகிறது.

பேரழிவினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை நிவர்த்தி செய்வதில் காப்புறுதிப் பாதுகாப்பு (Insurance Coverage) முக்கியப் பங்கை வகிக்கிறது. ஆனால், திட்வாவால் பாதிக்கப்பட்ட மலையகச் சமூகத்தைப் பொறுத்தவரை இது மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளது. லயன் அறைகள் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சொந்தமானவை அல்ல; அவை தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமானவை. சொத்தின் மீதான உரிமையின்மை காரணமாக, தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் வசிப்பிடங்களுக்குக் காப்புறுதி செய்ய முடியாது. பெரும்பாலான தோட்டக் கம்பனிகள், தங்கள் தொழில்சார் சொத்துகளுக்கு (தொழிற்சாலைகள், இயந்திரங்கள்) மட்டுமே காப்புறுதி செய்கின்றன. தொழிலாளர்கள் வசிக்கும் லயன் அறைகளைக் காப்புறுதி செய்வதற்கான நிதிப் பொறுப்பை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இதன் விளைவாக, திட்வாவால் லயன் அறைகள் அழியும்போது, தொழிலாளர்கள் நேரடியாக எந்தக் காப்புறுதிப் பணத்தையும் பெற முடிவதில்லை. மேலும் மலையகத் தமிழ்ச் சமூகத்தின் குறைந்த வருமானம் காரணமாக, தனிப்பட்ட குடும்பங்கள் தனியார் காப்புறுதித் திட்டங்களில் முதலீடு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இழப்பீடுகளைக் கடந்து, திட்வாவால் பாதிக்கப்பட்டு, நிலச்சரிவு அபாயத்தில் வாழும் மலையக மக்களுக்கு பாதுகாப்பான நிரந்தர மீள்குடியேற்றத்தை வழங்குவது அரசாங்கத்தின் மிகப்பெரிய பொறுப்பாக இருக்கிறது. பாதுகாப்பான புதிய இருப்பிடங்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கலும் கவனத்தில் கொள்ளத்தக்கது. நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இல்லாத, பாதுகாப்பான, மற்றும் குடியிருப்புகளுக்கு உகந்த நிலங்கள் குறைவாகவே இருக்கின்றன. புதிய இருப்பிடங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடத்திலிருந்து அதிக தூரத்தில் இருந்தால், அது அவர்களின் அன்றாடப் போக்குவரத்துச் செலவை அதிகரித்து, வருமானத்தைக் குறைக்கிறது. எனவே, பாதுகாப்பையும், பொருளாதார அணுகலையும் இணைக்கும் நிலங்களைத் தேர்ந்தெடுப்பது சிக்கலாக இருக்கிறது. புதிய குடியிருப்புகளுக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் அரசியல் தலையீடுகள் மற்றும் பிரதேசவாதக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாகவும், உரியவர்களுக்குப் பதிலாக அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் நிலங்களைப் பெறுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டிருக்கின்றன.

பரிந்துரைகள் 

பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ்ச் சமூகங்களை மீளக் கட்டியெழுப்புவதில், நீடித்த மற்றும் பாதுகாப்பான மீள்குடியேற்றம் (Sustainable Resettlement) முக்கிய மையமாக இருக்கிறது. அபாயகரமான லயன் அறைகளிலிருந்து அவர்களை மாற்றுவது மிக அவசியமாகிறது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) ஆலோசனையின்படி, நிலச்சரிவு அபாயம் இல்லாத புதிய நிலப் பகுதிகளை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டும். இந்த நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வேலை செய்யும் இடங்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பது இன்றியமையாதது. மீள்குடியேற்றத்தின் போது நிர்மாணிக்கப்படும் புதிய வீடுகளுக்கு முழுமையான வீட்டுரிமைப் பத்திரங்களை (Full Land Deeds) பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவது அடிப்படைத் தேவையாக உள்ளது. இது, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பையும் வழங்குகிறது. புதிய குடியிருப்புகள் அமையவிருக்கும்போது, இச்சமூகத்தின் கலாசார மற்றும் சமூகப் பிணைப்புகளைக் காக்கும் வகையில், சமூக மையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கூட்டுப் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய கூட்டு வாழ்க்கைத் திட்டங்களை உருவாக்குவது அவசியம்.

திட்வா போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் நிரந்தரமான மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கு (Non-Economic Losses), சர்வதேச காலநிலை நிதியுதவியை அணுகுவது இலங்கைக்கு இப்போது அவசரமாகத் தேவைப்படுகிறது.இந்தச் சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளின் அளவு, நாட்டின் உள்நாட்டு வளங்களைக் கொண்டு ஈடுசெய்ய முடியாததாக இருக்கிறது. எனவே, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டின் (UNFCCC) கீழ் நிறுவப்பட்டுள்ள இழப்பு மற்றும் சேத நிதியிலிருந்து (Loss and Damage Fund) நிதியுதவியைப் பெற அரசாங்கம் வலுவான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். இந்த நிதி உதவியைப் பெறும்போது, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மறுசீரமைப்புத் தேவைகளை இந்த நிதியில் முதன்மைப்படுத்துவது, காலநிலை நீதியை நிலைநாட்டுவதாகும்.

இனிவரும் காலநிலை அபாயங்களை எதிர்கொள்ள, மலையகச் சமூகங்களின் பேரிடர் தயார்நிலையை முழுமையாக மேம்படுத்துவது மிகவும் அத்தியாவசியமாகிறது.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் உடனடியாக, துல்லியமாக மற்றும் தமிழ் மொழியில் தோட்டப் பகுதி மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தத் தகவலை உள்ளூர் மட்டத் தலைவர்கள் மூலம் உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்க புதிய தொழில்நுட்ப வழிமுறைகள் (குறுஞ்செய்தி சேவைகள்) தற்போது பயன்படுத்தப்படுகின்றன. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வெளியேறும் வழிகள், தங்குமிடங்கள் மற்றும் சுய-பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சமூகங்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு தோட்டப் பிரிவிலும் அனர்த்த முகாமைத்துவப் பணிகளை ஒருங்கிணைக்க, நன்கு பயிற்சி பெற்ற சமூக அடிப்படையிலான குழுக்களை (Community-Based Organizations) உருவாக்குவது அவசியம்.

முடிவுரை

திட்வா சூறாவளியின் நேரடித் தாக்கம் முடிவடைந்திருந்தாலும், அதன் சமூக, பொருளாதார விளைவுகள் மலையகத் தமிழ்ச் சமூகத்தில் தற்போது வரை நீடிக்கின்றன. வீடுகளின் நிரந்தரமற்ற தன்மை, வாழ்வாதாரத்தின் இழப்பு, மற்றும் நிவாரணம் பெறுவதில் உள்ள நிர்வாகத் தாமதங்கள் ஆகியவை, காலநிலை மாற்றம் என்பது சமூக அநீதியுடன் இணைந்த ஒரு நெருக்கடி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. அரசு, இந்தச் சமூகத்தின் பாதுகாப்பற்ற தன்மையைப் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, லயன் அறைகள் என்ற பழமையான வசிப்பிட அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு வலுவான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது. நீடித்த மீட்சி (Resilience) அடைய, மலையக மக்களின் வீட்டுரிமையை உறுதிப்படுத்துவதுடன், வாழ்வாதாரப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் முழுமையான அணுகுமுறை தற்போது தேவைப்படுகிறது.

Ramesh-Arul-e1764751501850.jpg?resize=10அருள்கார்க்கி

https://maatram.org/articles/12449

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.