Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன்

facebook_1765650158563_74056735226632081

டித்வா புயலால் தமிழ்த் தரப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையகத்  தமிழர்கள்தான். மலையகத்தில் வெள்ளம்,புயல்,மண்சரிவு ஏற்படும்போது அங்கே உறக்கத்திலேயே மண்மூடி இறந்தவர்கள் அதிகமாக ஏழைகள்தான். மேல் நடுத்தர வர்க்கம் அவ்வாறு இறப்பது குறைவு. மலையகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகள்,தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்றன இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் செல்வந்தர்கள் தங்கள் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டுகிறார்கள். ஆனால் ஏழைகள் மலை விளிம்புகளில்,மண் சரியக்கூடிய இடங்களில் வீடுகளைக்  கட்டுவதனால் இயற்கை அனர்த்தங்களின் போது முதற் பலியாகிறார்கள்.

காலாகாலமாக இயற்கை அனர்த்தங்களின் போது மட்டுமல்ல, இன முரண்பாடுகளின் போதும் உடனடியாகச் சுற்றி வளைக்கப்படும் மக்களாக, இன அழிப்புக்கு உள்ளாகும் மக்களாக அவர்களே கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் காணப்படுகிறார்கள்.

அவர்கள் மலிவான கூலிகளாக இச்சிறிய தீவுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் ஏறக்குறைய அடிமைகள் போலவே கொண்டுவரப்பட்டார்கள். அடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். அங்கிருந்து தொடங்குகிறது இன அழிப்பு.

அடுத்த கட்டம் மலையகத் தமிழரின் சனத்தொகையானது தென்னிலங்கைக்குள் ஒரு பெரிய தமிழ்ச் சனத்தொகையாகப் பல்கிப் பெருகுவதைத் தடுப்பதும், அதன்மூலம் ஈழத் தமிழர்களோடு அவர்கள் இணைந்து இலங்கைத் தீவில் மொத்தத் தமிழ்ச்  சனத்தொகையைப் பலப்படுத்துவதைத் தடுக்கும் உள்நோக்கத்தோடும், மலையக தமிழர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டது. இப்படிப்பார்த்தால் இலங்கையில்,தமிழ் இனஅழிப்பின் தொடக்கம் மலையகம்தான்.

அதன்பின் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளின் போது முதலில் பலியாவது மலையக மக்கள்தான். அவ்வாறு பாதிக்கப்பட்ட மலையக மக்கள் வடக்கு கிழக்கு நோக்கி வந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் அவர்கள் கௌரவமாக நடத்தப்பட்டார்கள் என்று கூறமுடியாது. ஏழை மலையகத் தமிழர்கள் வடக்கில் வீட்டு வேலைக்காரர்களாக,கடைகளிலும்ம் வன்னிப் பெருநிலத்தில் வயல்கள் தோட்டங்களிலும் மலிவுக் கூலிகளாக வேலை செய்தார்கள்.

வடக்கு கிழக்குக்கு வந்த மலையக மக்களை ஒப்பீட்டளவில் கௌரவமான நிலைக்கு உயர்த்திய நகரங்கள் இரண்டு.ஒன்று கிளிநொச்சி. மற்றது வவுனியா. அதிலும் கிளிநொச்சிதான் மலையகத் தமிழர்களை ஒப்பீட்டளவில் சமூகத்தில் எல்லா மட்டங்களிலும் உயர் நிலைக்கு உயர்த்தியது. அது ஒரு குடியேற்றப் பட்டினம் என்பதனால், அங்கே மலையகத் தமிழர்கள் ஒப்பீட்டளவில் எல்லா வாய்ப்புகளையும் பெற்றார்கள்.கிளிநொச்சியின் பெரிய வியாபாரிகளாக, மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, அதிபர்களாக, கல்வி அதிகாரிகளாக, நிர்வாகிகளாக, பொறியியலாளர்களாக, ஊடகவியலாளர்களாக, இன்னபிறவாக.. மலையகத் தமிழர்கள் அங்கே பலமாகக் காணப்படுகிறார்கள். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படட உத்தியோகப்பற்றற்ற ஒரு கணக்கெடுப்பின்படி அங்கே மொத்த சனத்தொகையில் அவர்களுடைய சனத்தொகை 40% இற்கும் குறையாது.

வவுனியாவில் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில், அங்கே மலையகத் தமிழர்களைக் குடியமர்த்தும் வேலைகளை “காந்தியம்” ஒருங்கிணைத்தது. இவ்வாறு குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களில் ஒரு பகுதியினர் எல்லைப்புறங்களில் சிங்கள குடியேற்றவாதிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் இடையிலான மனிதக் கவசங்களாகக் குடியமர்த்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் காந்தியம் அதை அவ்வாறு கருதிச் செய்யவில்லை என்பது,காந்தியத்தின் முக்கியஸ்தர்களை, அவர்களுடைய வாழ்க்கைக்கூடாக அறிந்து வைத்திருக்கும் எவருக்கும் தெரியும்.

இன்று வவனியாவில் தமிழ்ச் சனத்தொகையை, குறிப்பாக தேர்தல்களில் தமிழ் வாக்குகளின் ஒரு பகுதியைக் கட்டியெழுப்புவது மலையகத் தமிழர்கள்தான். அதாவது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான எல்லையில் தமிழ்ச் சனத்தொகையைப் பாதுகாப்பதில் மலையகத் தமிழர்களுக்குப் பங்குண்டு.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,மலையக மக்களுக்கு பாதுகாப்பான காணியுரிமையை வழங்குவதற்கு மறுத்தால் மாற்று யோசனையாக மலையக மக்களை வடக்கு-கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்று மனோ கணேசன் கூறியிருக்கிறார். அதேசமயம்,பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களை  வடக்குக்கிழக்குக்கு வருமாறு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகனும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கிலிருந்து இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவது இதுதான் முதல் தடவையல்ல,புளட் இயக்கத்தில் இருந்தவரும் மூத்த கவிஞரும், இப்பொழுது திரைப்படக் கலைஞராக இருப்பவருமாகிய,வ.ஐ.ச.ஜெயபாலன் இரு தசாப்தங்களுக்கு முன்பு  தென்னிலங்கைப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அதைச் சுட்டிப்பாகக் கூடியிருந்தார். மலையகத் தமிழர்களை வடக்கு கிழக்கில் குடியேற்ற வேண்டும் என்று. அப்பொழுதும் அந்தப் பேட்டிக்கு எதிர் வினைகள் வந்தன. இப்பொழுதும் சுமந்திரன் மற்றும் ஆறு.திருமுருகனின் அழைப்புகளுக்கு அவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மலையகத் தமிழர்களையும் உள்ளடக்கிய ஈழ வரைபடத்தை வரைந்து வைத்திருந்தது ஈரோஸ் இயக்கம்தான். மலையகத்தையும் உள்ளடக்கிய தமிழீழம் என்பது ராணுவரீதியாக மலையகத்தை முதலில் பலியிடுவதாக முடியும் என்று அப்பொழுது விமர்சிக்கப்பட்டது. ஏனென்றால் மலையகம் நிலத்தால், சிங்களக் கிராமங்களால் சூழப்பட்ட ஒரு தமிழ் நிலப் பரப்பு. எனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவர்களையும் ஆயுதமயப்படுத்தினால் அது அந்த சமூகத்தை முதலில் பலியிடுவதாக முடியும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

தமிழ் மக்களுடைய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணித் தளபதிகளாக பல மலையகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக கிளிநொச்சியில் இருந்து எழுச்சி பெற்ற பல தளபதிகள், இடைநிலைத் தளபதிகள், அரசியல் பிரிவு முக்கியஸ்தர்கள் உண்டு. ஈழப் போராட்டம் மலையகத் தமிழர்களுக்கு கௌரவமான,மதிப்பு மிகுந்த இடத்தைக் கொடுத்தது.

தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய அறிவு ஜீவிகளில் ஒருவராகிய மு.திருநாவுக்கரசு தன்னுடைய “இலங்கை அரசியல் யாப்பு:டொனமூரிலிருந்து இருந்து சிறுசேன வரை” என்ற நூலில் ஓரிடத்தில் பின்வருமாறு கூறுகிறார்….”மலையகத் தமிழரின் பிரச்சினையில்,அவர்கள் வாழும் மாலையகத்தைச் சார்ந்த புவியியல் பின்னணியில், அவர்களுக்குரிய ஓர் அரசியல் நிர்வாகப் பிரிவைக் கோரும் உரிமை அவர்களுக்கு உண்டு. (உதாரணமாக இந்தியாவில் புதுச்சேரி மாநிலம் இருப்பது போன்ற அமைப்பு). அந்த வகையில் அவர்களுக்கான தீர்வு புதிய யாப்பில் உருவாக்கப்பட வேண்டும்.

அதேவேளை மலையகத் தமிழர் விரும்புமிடத்து, ஈழத்தமிழ் மாநிலத்தின் குடிமக்களாகக் குடியேறும் உரிமை உடையவர் என்பதை ஈழத்தமிழ் மாநிலம் தனது யாப்பில் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் அவ்வாறு ஈழத்தமிழ் மாநிலத்தில் குடியேற விரும்பும் மலையத் தமிழர்களுக்கு காணி மற்றும் வீட்டு வசதிகளை ஈழத்தமிழ் மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்பதுடன், அவ்வாறு குடியேறிய குடும்பங்களில் ஒருவருக்காவது வேலைவாய்ப்பை வழங்கவேண்டிய பொறுப்பும் ஈழத்தமிழ் மாநில அரசுக்குரியதாகும்.”

மலையகத்  தமிழர்களை ஈழத் தமிழ் நோக்கு நிலையில் இருந்து ஓர் இறுதித் தீர்வில் எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதற்கு திருநாவுக்கரசு முன்வைக்கும் முன்மொழிவு அது. அதேசமயம் மலையகத்  தமிழர்களை ஒரு தேசிய இனமாக வரையறுத்து இறுதித் தீர்வில் அவர்களுக்கும் ஒரு பொருத்தமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது,கடந்த 16ஆண்டுகளுக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசியத் தரப்பால் முன்மொழிக்கப்பட்ட தீர்வு முன்மொழிவுகளில் கூறப்பட்டுள்ளது.

நிலத்தைத்தவிர அதாவது தாயகத்தைத்தவிர, மற்ற எல்லா விடயங்களிலும் ஒரே பண்புகளைக் கொண்டிருக்கும் இரண்டு மக்கள் கூட்டங்களும் தீர்வு முயற்சிகளில் ஒன்றிணைந்து செயற்படுவதே பலம்.மலையகத் தமிழர் மத்தியில் ஒரு பலமான நடுத்தர வர்க்கம் மேலெழுந்துவிட்டது.ஒரு தேசிய இனமாக மலையகத் தமிழர்களைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியும். ஓர் இணைத் தேசிய இனமாக,ஈழத்து தமிழர்கள் மலையகத்தை நோக்கிச் செல்ல வேண்டியது ஈழத் தமிழர்களுடைய தவிர்க்கப்பட முடியாத ஒரு தேசியக் கடமை.மலையகத் தமிழரை அவர்களுடைய தாயத்தில் வைத்தே பலப்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் அதை நோக்கி தன்னால் முடிந்த எல்லாவறையும் செய்ய வேண்டும் ஒரு பேரிடர் காலம்  தமிழ் ஐக்கியத்தை, தமிழ் சகோதரத்துவத்தைப் பலப்படுத்தியிருக்கிறது.

https://www.nillanthan.com/8007/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.