Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபஞ்சத்தின் முடிவு பற்றி 'விசித்திரமான' இருண்ட ஆற்றலின் ஆய்வு என்ன சொல்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சத்தின் முடிவு பற்றி 'விசித்திரமான' இருண்ட ஆற்றலின் ஆய்வு என்ன சொல்கிறது?

அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தனிமையான தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக மில்லியன் கணக்கான தொலைதூர விண்மீன் திரள்களைக் கண்காணித்து வருகிறது.

பட மூலாதாரம்,KPNO/NOIRLab

படக்குறிப்பு,அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக தொலைதூர நட்சத்திர மண்டலங்களை கண்காணித்து வருகிறது.

கட்டுரை தகவல்

  • பல்லப் கோஷ்

  • பிபிசி

  • 30 டிசம்பர் 2025

இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான விசை, காலம் மற்றும் விண்வெளி குறித்த நமது தற்போதைய புரிதலுக்கு சவால் விடும் வகையில் மாறிக்கொண்டிருக்கலாம் என்ற சமீபத்திய சான்றுகள் குறித்த சர்ச்சை வளர்ந்து வருகிறது.

பிரபஞ்சம், தொடர்ந்து விரிவடைவதற்குப் பதிலாக நட்சத்திர மண்டலங்கள் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றாக இழுக்கப்பட்டு வானியலாளர்கள் பெருஞ் சிதைவு (பிக் கிரஞ்ச்) என்று அழைக்கப்படும் நிகழ்வுடன் முடிவுக்கு வரலாம் என்று தென்கொரிய குழுவின் ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

இதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், ஒரு தலைமுறையின் மிகப்பெரிய வானியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றின் விளிம்பில் தாங்கள் இருப்பதாக நம்புகின்றனர்.

பிற வானியலாளர்கள் இந்த கண்டுபிடிப்புகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர், ஆனால் இந்த விமர்சகர்களால் தென்கொரிய குழுவின் வாதங்களை முழுமையாக நிராகரிக்க முடியவில்லை.

இவை ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்கள். இருண்ட ஆற்றல் இவற்றைத் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேகத்தில் ஒன்றைவிட்டு ஒன்று பிரித்துச் செல்கிறது.

பட மூலாதாரம்,NASA/ESA

இருண்ட ஆற்றல் என்றால் என்ன?

சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்புடன் (பிக் பேங்) தொடங்கிய பிரபஞ்சத்தின் விரிவாக்கம், ஈர்ப்பு விசையினால் படிப்படியாக வேகம் குறையும் என்று வானியலாளர்கள் முன்பு நினைத்தார்கள்.

பின்னர் 1998-ஆம் ஆண்டில், பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை துரிதப்படுத்தும் ஒரு விசையாக இருண்ட ஆற்றலுக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 'சூப்பர்நோவாக்கள்' எனப்படும் மிகவும் பிரகாசமான வெடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த ஆய்வுகள், தொலைதூர நட்சத்திர மண்டலங்கள் வேகம் குறைவதற்குப் பதிலாக, உண்மையில் ஒன்றைவிட்டு ஒன்று அதிவேகமாக விலகிச் செல்வதைக் காட்டின.

பிரபஞ்சம் தொடர்ந்து வேகமாக விரிவடைவதால், நட்சத்திரங்கள் மிகவும் தூரமாகப் பிரிந்து போகும் அப்போது ஒருநாள் இரவு வானில் கிட்டத்தட்ட எதுவுமே தெரியாத நிலை கூட வரலாம் என்றும், இன்னும் அதிர்ச்சியூட்டும் விதமாக, இறுதியில் அணுக்களையே சிதைத்துவிடும் பெருங் கிழிசல் (பிக் ரிப்) ஏற்படலாம் என்றும் சில கோட்பாடுகள் தெரிவித்தன

இந்த விவாதம் மார்ச் மாதம் அரிசோனா பாலைவனத்தில் ஒரு தொலைநோக்கியில் இருக்கும் 'டார்க் எனர்ஜி ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இன்ஸ்ட்ரூமென்ட்' (DESI- டெசி) என்ற உபகரணத்தில் கிடைத்த எதிர்பாராத முடிவுகளுடன் தொடங்கியது.

இருண்ட ஆற்றல் பற்றி மேலும் அறிய டெசி உருவாக்கப்பட்டது. இது மில்லியன் கணக்கான நட்சத்திர மண்டலங்கள் எவ்வாறு வேகமடைகின்றன என்பதை மிக நுணுக்கமாகக் கண்காணித்தது, ஆனால் அது வழங்கிய முடிவுகள் வானியலாளர்கள் எதிர்பார்க்காததாக இருந்தது.

'விசித்திரமானது'

நட்சத்திர மண்டலம் வேகமடைதல் காலப்போக்கில் மாறியுள்ளதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. இது வழக்கமான புரிதலுக்கு உட்பட்டது அல்ல என்று டெசி திட்டத்தில் ஈடுபட்டுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் பேராசிரியர் ஓஃபர் லஹவ் கூறுகிறார்.

"இப்போது இந்த மாறும் இருண்ட ஆற்றல் ஏறி இறங்குவதால், நமக்கு ஒரு புதிய வழிமுறை தேவைப்படுகிறது. இது முழு இயற்பியலையுமே உலுக்கக்கூடும்," என்று அவர் கூறுகிறார்.

பின்னர் நவம்பர் மாதம், 'ராயல் அஸ்ட்ரோனோமிகல் சொசைட்டி' (ஆர்ஏஎஸ்), தென்கொரிய குழுவின் ஆராய்ச்சியை வெளியிட்டது. இது இருண்ட ஆற்றலின் விசித்திரத்தன்மை நாம் நினைத்ததைவிட விசித்திரமானது என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது.

யோன்செய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யங் வூக் லீ மற்றும் அவரது குழுவினர், 27 ஆண்டுகளுக்கு முன்பு இருண்ட ஆற்றலை முதலில் வெளிப்படுத்திய அதே வகை சூப்பர்நோவா தரவுகளை மீண்டும் ஆய்வு செய்தனர். இந்த நட்சத்திர வெடிப்புகளை ஒரு நிலையான பிரகாசம் கொண்டவையாக கருதுவதற்குப் பதிலாக, அவை உருவான நட்சத்திர மண்டலத்தின் வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அந்த சூப்பர்நோவாக்கள் உண்மையில் எவ்வளவு பிரகாசமாக இருந்தன என்பதை அவர்கள் கணக்கிட்டனர்.

இந்தச் சரிசெய்தல், இருண்ட ஆற்றல் காலப்போக்கில் மாறியது மட்டுமல்லாமல், அதிர்ச்சியூட்டும் விதமாக அதன் வேகம் குறைந்து வருவதையும் காட்டியது.

"பிரபஞ்சத்தின் விதி மாறும்," என்று பேராசிரியர் லீ பிபிசி நியூஸிடம் வெளிப்படையாகக் கூறுகிறார்.

"இருண்ட ஆற்றல் நிலையானது அல்ல மற்றும் அது பலவீனமடைந்து வருகிறது என்றால், இது நவீன அண்டவியலின் முழு கருத்தோட்டத்தையும் மாற்றிவிடும்."

பேராசிரியர் லீயின் முடிவுகள் தெரிவிப்பது போல, நட்சத்திர மண்டலங்களை ஒன்றைவிட்டு ஒன்று தள்ளும் விசையான இருண்ட ஆற்றல் பலவீனமடைந்தால், ஈர்ப்பு விசை நட்சத்திர மண்டலங்களை மீண்டும் ஒன்றாக இழுக்கத் தொடங்கும் சாத்தியம் உள்ளது.

"ஒரு 'பெருங் கிழிசல்' உடன் முடிவடைவதற்குப் பதிலாக, ஒரு 'பெருஞ் சிதைவு' இப்போது சாத்தியமாகிறது. எந்த முடிவு வெற்றி பெறும் என்பது இருண்ட ஆற்றலின் உண்மையான தன்மையைப் பொறுத்தது, அதற்கான பதில் நமக்கு இன்னும் தெரியவில்லை," என்கிறார் பேராசிரியர் லீ.

பேராசிரியர் லீயின் பணி சக நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு ஆர்ஏஎஸ்-இன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது வாதங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜ் எஃப்ஸ்டதியு போன்ற மூத்த வானியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

"இது சூப்பர்நோவாக்களின் குழப்பமான விவரங்களை மட்டுமே பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன். வயதுடனான தொடர்பு அவ்வளவு நெருக்கமானது அல்ல, எனவே 'சரிசெய்தல்' முறையைப் பயன்படுத்துவது ஆபத்தானது. இது எனக்குப் பலவீனமாகத் தோன்றுகிறது," என்று அவர் கூறுகிறார்.

டார்க் எனர்ஜி பெரிதாக மாறாமல் இருப்பதுடன், பிரபஞ்சம் இன்னும் வேகமாக விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாக உள்ளது.

ஆனால் பேராசிரியர் லீ இத்தகைய விமர்சனங்களை வலுவாக எதிர்க்கிறார்.

"எங்கள் தரவு 300 நட்சத்திர மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு தற்செயலான நிகழ்வாக இருப்பதற்கு டிரில்லியனில் ஒரு பங்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. எனவே, எங்களது ஆராய்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கது என்று நான் நினைக்கிறேன்."

அண்டத்திற்கான ஒரு தேவாலயம்: இந்த தொலைநோக்கிக்குள் இருக்கும் ஒரு கருவி ஒரே நேரத்தில் 5,000 விண்மீன் திரள்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும்.

பட மூலாதாரம்,Marilyn Sargent/Berkeley Lab

படக்குறிப்பு,இந்த தொலைநோக்கிக்குள் இருக்கும் ஒரு கருவி ஒரே நேரத்தில் 5,000 நட்சத்திர மண்டலங்களின் இயக்கத்தைக் கண்காணிக்க முடியும்.

தென்கொரிய முடிவுகளுக்குப் பிறகு, இரண்டு குழுக்கள் சில சூப்பர்நோவாக்களின் பிரகாசத்தை மீண்டும் மதிப்பீடு செய்தன.

மொத்த பரபரப்பையும் தொடங்கிய டெசி முடிவுகளுக்கு அடிப்படையாக இருந்த முந்தைய ஆய்வு ஒன்றினை அவர்கள் மீண்டும் பரிசீலித்தனர். இருண்ட ஆற்றல் மாறிக்கொண்டிருக்கிறது என்ற வாதம் மிகுந்த சர்ச்சைக்குரியதாக இருந்ததால், மார்ச் மாத முடிவுகளை மீண்டும் ஒருமுறை சரிபார்ப்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர்.

இரண்டு குழுக்களும் அசல் குறிப்புகளிலிருந்து சற்றே பின்வாங்கினாலும், விரிவான ஆய்வுக்குப் பிறகும் அந்தக் குறிப்புகள் முழுமையாக மறைந்துவிடவில்லை.

இது தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன மற்றும் சிறந்த விளக்கம் எது என்பதில் வானியலாளர்கள் வேறுபடுகின்றனர். இது ஒரு மோசமான விஷயம் அல்ல என்கிறார் ஆர்ஏஎஸ்-ன் துணை இயக்குநர் பேராசிரியர் ராபர்ட் மாஸ்ஸி.

"பிரபஞ்சம் எப்படி முடியப் போகிறது மற்றும் அது எப்படித் தொடங்கியது என்பதைப் புரிந்து கொள்ள யார் தான் விரும்ப மாட்டார்கள்? மனிதர்கள் எப்போதுமே மத ரீதியாகவோ அல்லது அறிவியல் ரீதியாகவோ இதில் ஆர்வம் காட்டியுள்ளனர்," என்று அவர் கூறுகிறார்.

"இன்னும் பல பில்லியன் ஆண்டுகளில் விஷயங்கள் இப்படித்தான் முடிவடையும் என்று சிந்திக்க முடிவது அசாதாரணமானது அல்லவா?"

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crl9lz099d6o

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்? மூன்று சாத்தியங்கள்

பிரபஞ்சத்தின் முடிவு எவ்வாறு இருக்கும்?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • ஆண்ட்ரே பியர்நாத்

  • பிபிசி நியூஸ் பிரேசில்

  • 18 மார்ச் 2026, 03:09 GMT

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரபஞ்சத்தின் முடிவு பல்வேறு வழிகளில் நிகழக்கூடும். அதுவொரு மெதுவான, குளிர்ந்த, அமைதியான முடிவாக இருக்கலாம். அல்லது அது திடீரெனவும் வன்முறையானதாகவும் நிகழலாம். சிலர், அதுவொரு புதிய தொடக்கத்திற்கு வழிவகுக்கும் முடிவாக இருக்கக்கூடும் எனவும் கருதுகின்றனர்.

எதிர்காலத்தில் ஒருவேளை பிரபஞ்சம் அதன் முடிவைச் சந்தித்தால், அது எவ்வாறு அதன் முடிவு இருக்கக் கூடும் என்பது குறித்து விஞ்ஞானிகள் கொண்டுள்ள 3 முக்கியக் கருதுகோள்களை இங்கு பார்ப்போம்.

பிரபஞ்சத்தின் எதிர்காலம் அறிவியலில் உள்ள மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக இன்றளவும் உள்ளது. நிபுணர்களே கூட தங்களிடம் இன்னும் தெளிவான பதில்கள் இல்லையென்று கூறுகின்றனர்.

பிரபஞ்சம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும் என்பதைப் புரிந்துகொள்ள, அதன் தொடக்கம் எவ்வாறானது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.

எல்லாவற்றுக்குமான தொடக்கம்

பிரபஞ்சம் என்பது அனைத்தையும் குறிக்கிறது. நாசாவின் கூற்றுப்படி, அது அனைத்து வெளி, பருப்பொருள் (எடையுள்ள மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கும் எதுவும்), ஆற்றல் மற்றும் காலம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது.

பெருவெடிப்புக் கோட்பாடு எனப்படும் ஒன்றில் இருந்து பிரபஞ்சம் தொடங்கியதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இந்தக் கோட்பாட்டின்படி, சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பிரபஞ்சம் மிகவும் சூடாகவும் நெருக்கமாகவும் இருந்தது. பின்னர் அது விரிவடையத் தொடங்கியது. அன்று முதல் அது வளர்ந்துகொண்டே இருக்கிறது.

பிரபஞ்சம் நீண்ட காலமாக விரிவடைந்தபோது, விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை மெதுவாக உருவாயின.

இன்றும்கூட, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில், அதைப் பற்றி நமக்கு இன்னும் மிகக் குறைவாகவே தெரியும்.

பிரேசிலில் உள்ள சாண்டா கத்தாரினா ஃபெடரல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர் அலெக்சாண்டர் ஸாபோட், "நமது பணி என்பது ஒரு நதியின் வழியே செல்லும் அனைத்து நீர் மூலக்கூறுகளையும் முழுமையாக மதிப்பீடு செய்யாமல், அந்த நதியின் நடத்தையையும் ஓட்டத்தையும் மட்டுமே கவனிப்பதைப் போன்றது." என்று விளக்குகிறார்.

அதாவது, பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதன் பெரிய சித்திரத்தை விஞ்ஞானிகளால் காண முடிகிறது. ஆனால், அதனுள்ளே இருக்கும் அனைத்து சிறிய விவரங்களையும் அவர்களால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

பிரபஞ்சம் அதன் அழிவை நெருங்கப் போவது எப்போது? எப்படி?

பட மூலாதாரம்,FlashMovie via GettyImages

படக்குறிப்பு,பிரபஞ்சம் ஓர் ஒற்றைப் புள்ளியாகத் தொடங்கி, விரிவடைந்து நீண்டுள்ளது என்று பெருவெடிப்புக் கோட்பாடு கூறுகிறது.

பெருங்குளிர் உறைவு

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்தால், ஆற்றல் மென்மேலும் பரவும். இதன் காரணமாக, விண்மீன் திரள்கள் மெதுவாக மேலும் விலகிச் செல்லும். காலப்போக்கில் புதிய நட்சத்திரங்கள் உருவாவது நின்றுவிடும். மேலும், ஏற்கெனவே இருக்கும் நட்சத்திரங்கள் மெதுவாக இறந்துவிடும் என்று ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் விளக்குகிறது.

டிரில்லியன்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சம் இருண்டு, குளிராகி, கிட்டத்தட்ட வெறுமையாகிவிடும். இந்தக் கருத்து பெருங்குளிர் உறைவு (Big Freeze) என்று அழைக்கப்படுகிறது. இது வெப்ப மரணம் எனவும் அறியப்படுகிறது.

இதன் பொருள், இறுதியில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனைத்து இடங்களிலும் ஒரே வெப்பநிலையை அடையும் என்பதாகும். அது நிகழும்போது, அதன் பிறகு பெரிதாக எதுவும் நடக்காது, எல்லாம் அசைவற்று ஸ்தம்பித்துவிடும் என்று ராயல் இன்ஸ்டிடியூஷன் விவரிக்கிறது.

பிரேசிலில் உள்ள சாவ் பாலோ பல்கலைக் கழகத்தின் இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் ரவுல் அப்ராமோ, "பிரபஞ்சம் மென்மேலும் வெறுமையாகவும், குளிராகவும், பெரிதாகவும் மாறும் என்பதையே அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன" என்று விளக்குகிறார்.

அதாவது, "விண்மீன் திரள்கள் மேலும் மேலும் விலகிச் செல்லும், நட்சத்திரங்கள் வயதாகி இறந்துவிடும். இதுவோர் இறுதி நிலை. இதில் பிரபஞ்சம் அடிப்படையில் ஒரு மயானமாக மாறும்" என்கிறார் அவர்.

எளிதாகக் கூறுவதெனில், பிரபஞ்சம் மெதுவாக மறைந்து, கிட்டத்தட்ட எதுவுமே மிஞ்சாத ஒரு குளிர்ந்த, இருண்ட, அமைதியான இடமாக மாறிவிடும்.

பிரபஞ்சம் அதன் அழிவை நெருங்கப் போவது எப்போது? எப்படி?

பட மூலாதாரம்,Arctic Images via Getty Images

படக்குறிப்பு,பெருங்குளிர் உறைவு (Big Freeze), பெரும்பிளவு (Big Rip), பெருஞ்சுருக்கம் (Big Crunch) என்பவை பிரபஞ்சம் எவ்வாறு அதன் அழிவைச் சந்திக்கக்கூடும் என்பது குறித்த கோட்பாடுகளாகும்.

பெரும்பிளவு

பெருங்குளிர் உறைவு என்ற கருத்து நம்பும்படியாக இல்லையெனில், மற்றொரு கோட்பாடு உள்ளது. அது மிகவும் தீவிரமானது.

இந்தக் கருதுகோள், பிரபஞ்சம் வெறுமனே விரிவடைவது மட்டுமின்றி, இருண்ட ஆற்றல் எனப்படும் ஒன்றின் காரணமாக மென்மேலும் வேகமாக விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டது. இது தொடர்ந்து நடந்தால், இந்த விரிவாக்கம் மிகவும் வலுவாகி, ஈர்ப்பு விசையால்கூட இனி பொருட்களை ஒன்றாக வைத்திருக்க முடியாத நிலை உருவாகும் என்று ராயல் மியூசியம்ஸ் கிரீன்விச் கூறுகிறது.

இந்தக் கோட்பாடு பெரும்பிளவு என்று அழைக்கப்படுகிறது.

ஈர்ப்பு விசை என்பது பொருட்களை ஒன்றாக இழுக்கும் ஒரு விசையாகும். நாசாவின் கூற்றுப்படி, இது கோள்கள் சூரியனை சுற்றி வர வைக்கிறது. பூமியை ஒன்றாக வைத்திருக்கிறது. நாம் விண்வெளியில் அதன் போக்கில் மிதந்து செல்வதைத் தடுக்கிறது. இது நட்சத்திரங்கள், சூரிய மண்டலங்கள், விண்மீன் திரள்களை ஒன்றாக கட்டி வைத்திருக்கிறது.

இருண்ட ஆற்றல் இதற்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. அது பொருட்களை வெளியே தள்ளிவிட்டுப் பிரிக்கிறது என்கிறார் அலெக்சாண்டர் ஸாபோட்.

"இருண்ட ஆற்றல் எதனால் ஆனது என்று நமக்கு இன்னும் தெரியவில்லை. ஆனால், அது ஈர்ப்பு விசைக்கு எதிரானதைப் போல, விலக்கு விசையை ஏற்படுத்துகிறது என்பது அறியப்பட்டுள்ளது" என்கிறார் அவர்.

நாசாவின் கூற்றுப்படி, இருண்ட ஆற்றல் பிரபஞ்சத்தை மென்மேலும் விரிவடையச் செய்கிறது. சுமார் 68.3% முதல் 70% வரையிலான பிரபஞ்சம் இருண்ட ஆற்றலால் ஆனது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

கோள்கள், விண்மீன் திரள்கள் போன்ற சிறிய மட்டங்களில் ஈர்ப்பு விசை வலிமையாக இருப்பதால், இது நீண்டகாலமாக கண்டுபிடிக்கப்படாமலே இருந்தது. பின்னர் 1990களின் பிற்பகுதியில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. இருண்ட ஆற்றல் மிகப்பெரிய விண்மீன் திரள்களுக்கு இடையிலான அளவுகளில் மட்டுமே கவனித்தக்கதாக இருக்கிறது.

"பிரபஞ்சம் எவ்வளவு அதிகமாக வளர்ந்து அதன் கன அளவைப் பெறுகிறதோ, அந்த அளவுக்கு இருண்ட ஆற்றலுடன் தொடர்புடைய விலக்கு விசை அதிகரிக்கிறது," என்று விளக்குகிறார் ஸாபோட்.

"பிரபஞ்சத்தின் அளவு அதிகரிக்கும்போது, இருண்ட ஆற்றல் சிறிய அளவுகளில் அதிக முக்கியத்துவம் பெறக்கூடும்."

இருண்ட ஆற்றல் நிலையற்றதாக மாறினால், அதுவொரு பெரும்பிளவுக்கு வழிவகுக்கும். இந்தச் சூழ்நிலையில், பிரபஞ்சம் மிகத் தீவிரமாக விரிவடையும். அதன் விளைவாக, நட்சத்திரங்கள், கோள்கள், அவ்வளவு ஏன் அணுக்கள்கூட, நாசா விவரிப்பது போல, முழுவதுமாகப் பிரிக்கப்பட்டுவிடும் அல்லது 'ஒட்டாமல் விலகிவிடும்.'

"அதனால்தான் இந்தக் கோட்பாட்டிற்கான ஆங்கிலப் பெயர் இரட்டை அர்த்தம் கொண்டுள்ளது. இது 'பிக் ரிப்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு பெரிய பிளவு அல்லது கிழிவு. ஆனால், ரிப் என்பது ரெஸ்ட் இன் பீஸ் (rest in peace) என்பதன் சுருக்கமும் ஆகும்" என்று அலெக்சாண்டர் ஸாபோட் விவரிக்கிறார்.

எளிமையாகக் கூறுவதெனில், ஒரு நாள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் முற்றிலுமாகக் கிழித்து எறியப்படலாம் என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது.

பிரபஞ்சம் அதன் அழிவை நெருங்கப் போவது எப்போது? எப்படி?

பட மூலாதாரம்,Fotograzia via Getty Images

படக்குறிப்பு,பிரபஞ்சம் என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாகும்; இதில் நமது விண்மீன் மண்டலம், முழு விண்வெளி மற்றும் அந்த விண்வெளியில் அடங்கியுள்ள அனைத்துப் பருப்பொருள்களும் ஆற்றலும் அடங்கும்.

பெருஞ்சுருக்கம்

பிரபஞ்சத்திற்கு இன்னும் வியத்தகு முடிவுகளைத் தரக்கூடிய பிற சாத்தியக்கூறுகளும் உள்ளன.

இருண்ட ஆற்றல் வலுவிழந்து அதன் விளைவை மாற்றினால், ஈர்ப்பு விசை எல்லாவற்றையும் மீண்டும் ஒன்றாக இழுக்கத் தொடங்கும். இது பிரபஞ்சத்தை ஓர் ஒற்றைப் புள்ளியாகச் சுருங்கச் செய்யலாம். நாசாவின் கூற்றுப்படி, இந்தக் கருத்து 'பெருஞ்சுருக்கம்' என்று அழைக்கப்படுகிறது.

மற்றொரு கருத்து 'பெரும் மீள்வு' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டில், பிரபஞ்சம் மீண்டும் ஓர் ஒற்றைப் புள்ளியாகச் சுருங்கி, பின்னர் மற்றொரு பெருவெடிப்புடன் மீண்டும் தொடங்குகிறது. இதன் பொருள், பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சியில் மீண்டும் மீண்டும் விரிவடைந்து சுருங்கிக்கொண்டே இருக்கலாம் என்பதாகும்.

"ஆனால், இது முற்றிலும் விசித்திரமான ஒரு மாதிரி. இதற்கு நம்மிடம் எவ்வித தரவுகளோ ஆதாரங்களோ இல்லை" என்கிறார் ரவுல் அப்ராமோ.

அப்படியானால், பிரபஞ்சம் எப்போது அழியக்கூடும் என்பதை விஞ்ஞானிகளால் கணிக்க முடியுமா?

"இல்லை, எதிர்காலத்தில் ஒரு பெரிய பிளவோ அல்லது பெரும் சரிவோ ஏற்படும் என்பதற்கு நம்மிடம் எந்த அறிகுறியும் இல்லை," என்கிறார் அப்ராமோ.

"இந்த முடிவைப் பற்றிய சில மதிப்பீடுகள் டிரில்லியன்கணக்கான ஆண்டுகளைக் குறிப்பிடுகின்றன. மற்றவை அதைவிட இன்னும் நீண்டகால அளவுகளைப் பற்றி ஊகிக்கின்றன" என்கிறார் அலெக்சாண்டர் ஸாபோட்.

அது எவ்வளவு காலம் என்பதைப் புரிந்துகொள்ள, பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஒரு டிரில்லியன் ஆண்டுகளை எட்டுவதற்கு மட்டுமே இன்னும் சுமார் 986.2 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.

நாம் நினைத்ததைவிட பிரபஞ்சம் வேகமாக மங்கி வருவதாக ராட்பவுட் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எஞ்சியிருக்கும் கடைசி நட்சத்திரங்கள் மறைவதற்கு சுமார் 10⁷⁸ ஆண்டுகள் (அதாவது 1-ஐ தொடர்ந்து 78 பூஜ்ஜியங்கள்) ஆகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதைக் காண மனித இனம் உயிர்ப்புடன் இருக்காது. பூமிகூட அதற்கும் மிக முன்னதாகவே அழிந்துவிடும். சுமார் ஆறு பில்லியன் ஆண்டுகளில், சூரியன் ஒரு ரெட் ஜெயன்டாக வளர்ந்து அருகிலுள்ள கோள்களை அழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"உண்மை என்னவெனில், அண்டவியல் பற்றி நமக்கு இன்னும் மிகக் குறைவாகவே தெரியும்" என்கிறார் அப்ராமோ.

பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவோ அல்லது அளவிடவோ விஞ்ஞானிகளிடம் இன்னும் போதுமான கருவிகள் இல்லை என்று அவர் விளக்குகிறார்.

இதன் காரணமாக, பல கருத்துகள் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றன. ஒரேயொரு பிரபஞ்சம் மட்டுமே இல்லை, பல பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும் என்ற கருத்தான பல்பிரபஞ்சம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c24dej96ddeo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.