Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வளமும் எனதே, மண்ணும் எனதே!

sudumanal

வெனிசுவேலாவை சூழும் போர் மேகம்

flugzeugtraeger-100-1920x1080-1.jpg?w=10

Thanks for image: deutschlandfunk. de

இன்றைய இன்னொரு போர்ச் சூழல் கரீபியன் கடலில் தகிக்கத் தொடங்கி சில வாரங்களாகின்றன. வெனிசுவேலா மீது அமெரிக்கா சிலுப்பிக் காட்டுகிற போர் அரசியல்தான் அது. ட்றம்ப் இன் முதல் ஆட்சிக் காலகட்டத்தில் (2017-2021) வெனிசுவேலா மீதான ட்றம்பின் கழுகுப் பார்வை விழுந்தது. வெனிசுவேலாவுக்கு எதிரான பாரிய பொருளாதாரத் தடைகள் 2017 இல் அறிவிக்கப்பட்டன. வெனிசுவேலா பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியது. மீண்டும் ஏழ்மை பெரும் பகுதி மக்களை படிப்படியாக அழுத்தத் தொடங்கியது. அது பைடன் காலத்திலும் தொடர்ந்தது. இப்போ ட்றம்ப் இன் இரண்டாவது ஆட்சிக் காலம் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்பதுபோல், இன்றைய நெருக்கடி தோன்றியிருக்கிறது. ட்றம்ப் இன் இறுதி இலக்கு வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை மீண்டும் கைப்பற்றி கொள்ளை அடிப்பதுதான்.

உலகத்திலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடாக வெனிசுவேலா இருக்கிறது. 1900 களில் இருந்து கால்பதித்த சர்வதேச எண்ணெய்க் கம்பனிகள் காசு பார்க்கத் தொடங்கியிருந்தன. 1972 இல்  அன்றைய வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக இருந்த Carlos Andres Perez அவர்கள் பெற்றோலிய உற்பத்தியை தேசியமயமாக்கம் செய்தார். அப்போது எண்ணெய் உற்பத்தியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மேற்குலக நாடுகளில் பிரித்தானியா-டச்சு பல்தேசியக் கம்பனியான SHELL உம், அமெரிக்காவின் Texaco, Exxon, Chevron போன்ற பரகாசுரக் கம்பனிகளும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். வேறும் பல கம்பனிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்தன. சமாதான முறையில் பேசித் தீர்க்கப்பட்டு, தேசியமயமாக்கம் கம்பனிகளின் ஒப்புதலுடன் நடந்தேறியது. 1.3 பில்லியன் நட்ட ஈடாகவும் வழங்கப்பட்டது. என்றபோதும் சில கம்பனிகள் தாம் எதிர்பார்த்த நட்ட ஈடு கிடைக்கவில்லை என்ற திருப்தியின்மையுடன் இருந்தன. இந்த தேசிய மயமாக்கலின்போது PDVSA என்ற அரச எண்ணெய்க் கம்பனியை வெனிசுவேலா அரசு உருவாக்கியது. இது எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, எண்ணெய் வளக் கண்டுபிடிப்புகள், ஏற்றுமதி என எல்லாவற்றுடனும் தொடர்புபட்டிருந்தது.

1998 இல் வெனிசுவேலாவில் சாவோஸ் (Hugo Chavez) ஆட்சிக்கு வந்தார். கியூபாவாலும் சோசலிசத்தாலும் ஈர்க்கப்பட்ட அவர் வெனிசுவேலாவை சோசலிசக் கூறுகளுடன் மாற்றியமைத்தார். 2007 இல் அவர் எல்லா எண்ணெய்க் கம்பனிகளின் மீதான PDVSA இன் கட்டுப்பாட்டை 60 வீதமாக அதிகப்படுத்தினார். Chevron (USA),Total (France), Statoil (Norway), BP (UK) கம்பனிகள் அதை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து இயங்கின. உடன்பாடின்மை கொண்ட அமெரிக்காவின் Exxon, Conoco Phillips கம்பனிகள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறின. சாவேஸ் எல்லா கம்பனிகளினதும் சொத்துகளையும் கட்டுமானங்களையும் அரச உடைமை ஆக்கினார். 2005 இலிருந்து வெனிசுவேலாவின் சில தனிநபர்கள் மீதான ஆரம்பநிலை பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிக்கத் தொடங்கியது. சாவேஸை ஆட்சியிலிருந்து கவிழ்க்க சிஐஏ செய்த சதிகள் வெற்றிபெறவில்லை.

2000 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் பீப்பாக்களை வெனிசுவேலா உற்பத்தி செய்தது. எண்ணெய் ஏற்றுமதியால் வந்த பணத்தை சமூக நலத் திட்டங்களுக்கு சாவேஸ் செலவிட்டார். அதன்மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். 2013 மார்ச் இல் தனது மரணம் நிகழும்வரையான ஆட்சிக்காலத்துள் 70 வீதமாக இருந்த ஏழ்மையை வெறும் ஏழு வீதமாக குறைத்தார். ஒன்பது மில்லியன் குடும்பங்களுக்கு வீடுகள் சொந்தமாகக் கிடைத்தன. அப்போது சாவேஸின் வலது கரமாக இருந்தவர்தான் -ஒரு பஸ் சாரதியான- நிக்கொலாஸ் மடுரோ.

2013 இல் மடுரோ தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆனார். மடுரோவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையாலும் பெரும் எண்ணெய்க் கம்பனிகளின் வெளியேற்றத்தாலும் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி காணத் தொடங்கியிருந்தது. மடுரோவின் ஆட்சித் திறமையின்மையும் காரணம் என சொல்லப்படுகிறது. 2000 களில் நாளொன்றுக்கு 3 மில்லியன் பரல்களாக இருந்த எண்ணெய் உற்பத்தி 2024 இல் எட்டு இலட்சத்துக்கு குறைவாக வீழ்ச்சி கண்டது.

venezuvela-oil-export-diagram.png?w=841

2017 இல் முதல் கட்டமாக ஆட்சிக்கு வந்த ட்றம்ப் தமது எண்ணெய் கம்பனிகளுக்கும் அமெரிக்காவுக்கும் வெனிசுவேலா அநீதி இழைத்துவிட்டதாக சொல்லி, வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை பாரிய அளவில் செயற்படுத்தினார். அது வெனிசுவேலாவினை மோசமாகப் பாதித்தது.  எண்ணெய் ஏற்றுமதி மேலும் வீழ்ச்சி கண்டது. ஏழ்மை மீண்டும் அதிகரித்தது. பெருமளவான அகதிகள் அல்லது குடியேற்றவாசிகள் வெனிசுவேலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வரத் தொடங்கினர். ட்றம் 2021 இல் போனார். பைடன் வந்தார். ட்றம்ப் 2025 இல் மீண்டும் வந்தார். வெனிசுவேலாவின் நிலைமை அப்படியே தொடர்ந்தது.

வெனிசுவேலாவிலிருந்து பெருந்தொகையானவர்கள் அமெரிக்காவுக்குள் வருகிறார்கள். அவர்கள் கிரிமினல்கள், சிறைக் கைதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என்றார். அதைத் தடுக்க வேண்டும் என கரீபியன் கடலில் முதலாவது கடற்படைக் கப்பலை விட்டார். பிறகு சுருதியை மாற்றி வெனிசுவேலாவிலிருந்து பெருந்தொகை போதைப் பொருள் அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது, வெனிசுவேலா அரசு இலட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மரணத்துக்கு காரணமாக இருக்கிறது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானம் தாங்கிக் கப்பலையும் அதில் 15000 இராணுவத்தனரையும் ஏற்றினார். 

40 க்கு மேற்பட்ட சிறு படகுகளும் அதில் பயணித்த சுமார் 80 க்கு மேற்பட்டவர்களும் கரீபியன் கடலில் அடுத்தடுத்து குண்டுவீசி தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.  அந்தப் படகில் இருந்தது என்ன, போதைப்பொருள்தானா என்ற எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. படகுகளை மறித்து சோதனை செய்யவுமில்லை. அதிலிருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படவுமில்லை. குண்டுகள் அவர்களை படகோடு எரியூட்டின. அதெல்லாம் மீன்பிடிப் படகுகள் என வெனிசுவேலா சொல்கிறது. எந்த ஆதாரமும் ட்றம்புக்கு தேவைப்படவில்லை. ஏனெனில் அவரது கரிசனையில் குடிபெயர்வாளர்களுமில்லை. போதைப் பொருளுமில்லை.

ஒபாமாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கொண்டுராஸ் இன் முன்னாள் ஜனாதிபதி  Juan Orlando 2019 இல் நியுயோர்க் நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டவர்.  400 தொன் போதைப் பொருளை அமெரிக்காவுக்குள் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2022 இல் அவர் (பதவிக் காலம் முடிந்தபின்)  அமெரிக்காவால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து இப்போ ட்றம்ப் ஆலோசித்து வருகிறார். போதைப்பொருளுக்கு எதிராக போராடும் மக்கள் தலைவர் ட்றம்பின் அழகு இதுதான். ஆக வெனிசுவேலாவுக்கு எதிரான சண்டித்தனத்துக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டை வைக்கும் அவரது சமூகப் பொறுப்பு புல்லரிக்காமல் என்ன செய்யும்.

இப்போ நேரடியாகவே விசயத்துக்கு வந்திருக்கிறார். “வெனிசுவேலாவின் எண்ணெய் வளமும் எனதே. இயற்கை வளமும் எனதே. அந்த நிலமும் எனதே” என வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டார். “அமெரிக்க எண்ணெய் கம்பனிகளை சட்டத்துக்கு புறம்பான வழியில் நாட்டிலிருந்து ‘கம்யூனிஸ்ட்’ சாவேஸ் இன் அரசாங்கம் வெளியேற்றி கொள்ளையடித்தது. அமெரிக்காவை ஏமாற்றியுள்ளது” என குமுறுகிறார். ஆக அவரது இலக்கு அந்த வளத்தை களவெடுப்பதுதான்.

இதை சாதிக்க அவர் முதலாவதாக தேர்ந்தெடுத்திருக்கிற வழி ஆட்சிமாற்றத்தை ஒரு சதிப்புரட்சியின் மூலம் அடைவது. ஏற்கனவே இந்த வழியை சாவேஸ் அரசாங்கத்துக்கு எதிராக பல முறை செய்து தோற்றது சிஐஏ. பிறகு 2018 இல் இராணுவ அணிவகுப்பு நடந்துகொண்டிருந்த நிகழ்வில் வைத்து இப்போதைய ஜனாதிபதி மடுரோவை ட்றோண் தாக்குதல் மூலம் கொல்ல முயற்சிசெய்து தோற்றது. இப்போ மீண்டும் இன்னொரு முயற்சியில் இறங்கியிருக்கிறது. சிஐஏ வெனிசுவேலாவுக்குள் சென்று சதியில் இறங்க, அதற்காகச் செயற்பட அனுமதியளித்து ஏற்கனவே ட்றம்ப் கையொப்பமிட்டிருந்தார். இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற மரியா கொரீனாவை ஆட்சிக்கு கொண்டுவர சிஐஏ நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. இவர் அமெரிகக் கம்பனிகளுக்கு வாயிலைத் திறந்து தடங்கலற்ற களவை செய்ய அனுமதிக்க தயாராக இருப்பவர். அத்தோடு அவர் சியோனிச இஸ்ரேலிய அரசின் ஆதரவாளர். ஆனால் மடுரோ பலஸ்தீனத்தை அங்கீகரித்ததோடு, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருபவரும் ஆவார். அதனால் நெத்தன்யாகு உட்பட சியோனிஸ்டுகள் மடுரோவை வீழ்த்தி மரியா கொரீனாவை ஆட்சியிலமர்த்துவதை ஊக்குவிக்கின்றனர்.

மடுரோ நாட்டைவிட்டு வெளியேறி ரசியாவுக்கு குடும்பத்துடன் செல்ல நவம்பர் 30 வரை காலக்கெடு விதித்தார் ட்றம்ப். மடுரோ மறுத்துவிட்டார். இப்போ காலக்கெடு முடிந்துவிட்டது. தனது அடிவருடி ஆட்சியை அங்கு நிறுவி மீண்டும் வெனிசுவேலாவின் முழு எண்ணெய் வளத்தையும் கொள்ளை அடிப்பது இலகுவான வழிமுறை என அவர் நம்புகிறார். ஆட்சிமாற்றத்துக்கான நியாயமாக ஒரு கதையாடலை அவர் உருவாக்குகிறார். “மடுரோ ஒரு சர்வாதிகாரி, அமெரிக்காவுக்குள் குடியேற்றவாசிகள் மூலம் பயங்கரவாதத்தை கடத்துகிறார். தூளைக் கடத்துகிறார். வெனிசுவேலாவில் ஜனநாயகம் இல்லை. வெனிசுவேலாவில் மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள். அவருக்கு மக்கள் ஆதரவு கிடையாது” என்று அவரது பட்டியல் நீள்கிறது.

மடுரோவின் ஆட்சியை பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை என்று என்று புலம்பெயர்ந்த வெனிசுவேலாவின் ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள். ஊடக சுதந்திரம் என்பதும் நசுக்கப்பட்டிருந்ததாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மடுரோ ஆட்சியின் கீழ் அந்த மக்களை ஒருங்கிணைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் வீதிக்கு வந்து குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அமெரிக்கா ஒரு ஆணியும் பிடுங்கத் தேவையில்லை என்ற தொனியில் ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் ஊடகங்களுக்கு சொல்கிறார்கள்.

ட்றம்ப் இன் இரண்டாவது வழிமுறையானது, ஆட்சி மாற்றம் சாத்தியப்படாத பட்சத்தில், இராணுவ நடவடிக்கை மூலம் அந்த எண்ணெய் வளப் பிரதேசத்தைக் நிரந்தரமாகக் கைப்பற்றும் நோக்கமாகவும் இருக்கலாம். இதன்மூலம் எண்ணெய் வளத்தை கொள்ளை அடிக்க முடியும். இது நடந்தால், வெனிசுவேலா அமெரிக்கத் தாக்குதலால் சின்னாபின்னமாக போக இடமுண்டு. பெரும் பேரழிவுகளும் கொலைகளும் நடந்தேறும். எவளவுதான் தேசியவெறியை வெனிசுவேலாவின் மடுரோ ஆயுதமாக எடுத்தாலும் பெரும் படைபலமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாது.

அதேநேரம் சில ஆய்வாளர்கள் “அப்படியொரு யுத்தம் நடந்தால் அது இலகுவில் முடிவடைந்துவிடப் போவதில்லை. வெனிசுவேலா ஒரு வியட்நாமாக, ஆப்கானிஸ்தானாக, நிக்கரகுவாவாக மாறும். மீண்டும் 10, 20 வருடங்கள் அமெரிக்கா களமாடவேண்டிய நிலை உருவாகலாம்” என்கின்றனர். வரலாற்று ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் ஏற்கனவே இதற்கெதிராக குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர். பிரேசில், கொலம்பியா, உருகுவே, மத்திய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் அணுகுமுறை பேரழிவை ஏற்படுத்தக் கூடியது என எச்சரித்துள்ளனர். வெனிசுவேலாவின் இறைமை மீதான தாக்குதலாக இது இருக்கிறது என கண்டிக்கின்றனர். தென் அமெரிக்கா ஸ்திரத்தன்மையற்றதாக மாற இடமுண்டு என்ற அச்சம் புறக்கணிக்க முடியாதது.

இதற்குள் இயங்குகிற பூகோள அரசியல்தான் பிரமாண்டமானது. வெனிசுவேலாவின் எண்ணெயில் பெருமளவை சீனா இறக்குமதி செய்கிறது. அதுமட்டுமல்ல 500 க்கு மேற்பட்ட எண்ணைக் கிணறுகளை சீனா நவீனமயப்படுத்தியுள்ளன. சீனாவின் மேற்பார்வையின் கீழும் அவை உள்ளன. ஏற்கனவே கடந்த ஏப்ரலிலிருந்து ட்றம்ப் உருவாக்கிவிட்டிருக்கும் உலக பொருளாதாரப் போர் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் மோதிக்கொண்டிருக்கும் இரு பெரும் வல்லரசுகள் அமெரிக்காவும் சீனாவும் ஆகும். வெனிசுவேலா எண்ணெய் வளத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் சீனாவிற்கான வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி இல்லாமல் போகும். அது சீனாவுக்கு பாதகமான பொருளாதார விளைவை ஏற்படுத்தும். அத்தோடு கரீபியன் கடலில் சீனாவின் தலையீட்டை அல்லது நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவும் வெனிசுவேலாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இன்னொரு முக்கியமான பிரிக்ஸ் நாடு ஆகும்.

பெற்றோலியப் பொருட்களை வாங்குகிற, விற்கிற நாடுகள் அதற்கான பணப்பரிவர்த்தனையை டொலரில் மேற்கொள்ள வேண்டும் என்பதை 1973 இல் அமெரிக்கா நிறுவியதன் மூலம் இலாபமீட்டி வருவதோடு, உலக பொருளாதாரத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவும் டொலர்மயமாக்கல் தன்பங்குக்கு வழிசமைத்திருந்தது. அதை “பெற்றோ டொலர்” முறைமை என அழைப்பர். இந்த முறைமைக்கு சவாலாக இப்போ பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் எடுத்திருக்கிற எதிர்பாராத நகர்வு அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ரசியா, சீனா, இந்தியா, ஈரான் மட்டுமல்ல, சவூதி உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் டொலரை விட்டு அந்தந்த நாடுகளின் பணப் பரிவர்த்தனையில் ஈடுபத் தொடங்கிவிட்டன. இது அமெரிக்காவுக்குக் கிடைத்த பெரும் அடி. அத்தோடு அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த இரண்டாவது பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடான சவுதி அரேபியா பிரிக்ஸ் இல் இணைந்தும் விட்டது. ஜி7 (G7) இன் பொருளாதாரத்தை பிரிக்ஸ் சரிவு நோக்கி தள்ளியுள்ளதால் பிரிக்ஸ் நாடுகளை வரிப் போரால் மிரட்டியும் வருகிறார் ட்றம்ப். வெனிசுவேலாவும் ப்ரிக்ஸ் இல் இணைய விருப்பம் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவில் கிடைக்கும் எண்ணெய் வளம் மிகப் பெரியதல்ல. அமெரிக்காவுக்கு ஆதாரமாக இருந்த கனடிய எண்ணெய் வளமும் இந்த வரிப் போரில் ஏற்பட்ட முரண்பாட்டால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆக அமெரிக்காவுக்கு நிரந்தரமான எண்ணெய்வள நாடு என்று எதுவும் இப்போது இல்லை. அந்த இடைவெளியை வெனிசுவேலா எண்ணெய் வளப் பிரதேசத்தை கைப்பற்றி வைத்திருப்பதன் மூலம் நிரப்ப ட்றம்ப் முயற்சிக்கிறார் என இன்னொரு கோணத்திலும் நோக்க முடியும்.

வெனிசுவேலாவின் இன்னொரு பாதுகாப்பு அரணான நாடாக ரசியாவை பலரும் சொல்கின்றனர். வெனிசுவேலாவுடனான இந்த நெருக்கடி தோன்றப் போவதான சமிக்ஞைகள் தெரிந்ததும் ரசியா வெனிசுவேலாவுக்கு இன்னும் மேலதிகமாக உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை வழங்கியுள்ளது. சரியாகச் சொன்னால் வியாபாரம் செய்தது என்பதே பொருத்தமானது. இந்தப் போரில் வெனிசுவேலாவுக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் ரசியாவோ, சீனாவோ வந்திறங்கும் என யாரும் எதிர்பார்த்தால், அது ஒரு ஜனரஞ்சக நினைப்பு மட்டுமே. அது யதார்த்தமேயில்லை. வல்லரசுகள் இலகுவில் தமக்குள் நேரடியாக மோதிக் கொள்வதில்லை. அது இன்னொரு நாட்டை மைதானமாக வைத்துத்தான் போர்களை நடத்துகின்றன.  எனவே வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்தால், சீனாவோ ரசியாவோ நேரடியாக துணைக்கு இறங்கப் போவதில்லை. அப்படி இறங்கும் என நினைக்கும் அரசியல் ஜனரஞ்சகமானது, அது அடுத்த உலகயுத்தத்தையும் சேர்த்தே கொண்டுவரும் என்ற யதார்த்தத்தை மறுக்க வக்கற்றதாக இருக்கும். இது அதிகாரத்துக்கான போட்டி என்ற புரிதலில் கவனம் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் ஆகும். வெனிசுவேலா மீது அமெரிக்கா போர் தொடுத்து நில ஆக்கிரமிப்பு செய்தால், அதன்பின் அது வல்லரசுகளின் இன்னொரு களமாக சிக்கிச் சீரழியும்.

பூகோள அரசியலில் இன்னொரு பரிமாணமும் உள்ளது. இதுபற்றி அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள் பேசியிருக்கிறார். கடந்த வருட மார்ச் மாதம் ரசியாவும் கியூபாவும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தத்தை செய்தன. இந்த வருடம் யூன் மாதம் -அணுவாயுதத்தை ஏவக்கூடிய ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும்- ரசிய நீர்மூழ்கிக் கப்பல் கருங்கடலில் புளோரிடாவிலிருந்து 90 கடல் மைல் தூரத்தில் உள்ள கியூப கடற் பரப்பினுள் வந்து நின்றது. இது ஒரு சமாந்தரமான நடவடிக்கை என ரசியா இதற்கு விளக்கம் கொடுத்தது. அதாவது உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணையை கொடுக்க எடுத்த முடிவுக்கு சமாந்தரமான எதிர் நடவடிக்கை என்பதே அதன் பொருளாகும். இன்னொரு வகையில் சொல்வதானால் “நீ எனது எல்லை அருகில் உக்ரைனுக்குள் ஏவுகணையை நிறுத்தினால், நானும் உனது எல்லை அருகில் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துவேன்” என்றும் எடுத்துக் கொள்ளலாம். 1962 இல் துருக்கியில் அமெரிக்கா நிறுத்திய ஏவுகணைக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் தனது ஏவுகணையை நிறுத்த கப்பலில் வந்திருந்ததும், அது ஓர் அணுவாயுதப் போராக வெடிக்குமோ என உலகை அச்சுறுத்தியதுமான வரலாறு உண்டு.

இந்த வருடம் கரீபியன் கடலில் ரசிய நீர்மூழ்கிக் கப்பல் பின் அரங்க நிகழ்வுகள் நடந்து சில மாதங்களின் பின்னர், கரீபியன் கடலில் பெரும் எடுப்பிலான இராணுவ பிரசன்னத்தை அமெரிக்கா செய்துள்ளது. வெனிசுவேலாவுடன் ரசியா மட்டுமல்ல சீனாவும் நெருங்கிய உறவு வைத்திருக்கிறது. அமெரிக்காவின் படையெடுப்புக் கண்காட்சி இரண்டு நாட்டுக்கும் “எங்களது அதிகார பரப்புக்குள்ளிருந்து வெளியே நில்லுங்கள்” என்ற செய்தியை சொல்லியிருப்பதாகவும் எடுத்துக் கொள்ள முடியும். கருங்கடலில் நீர்மூழ்கிக் கப்பலுடன் நடமாடுகிற ரசியாவுக்கும், வியாபார வழித் தடத்தில் அமளியாக இயங்குகிற சீனாவுக்கும் மறைமுகமான ஓர் இராணுவ ரீதியிலான எச்சரிக்கையாகவும் வெனிசுவேலாவின் கடற்பரப்பில் சூழ்ந்து நடத்தப்படும் அமெரிக்கப் படைக் கண்காட்சி இருக்கிறது.

இராஜதந்திர ரீதியில் உக்ரைனை நேட்டோவில் அங்கம் வகிக்க முடியாதவாறும், ரசியா கைப்பற்றிய டொன்பாஸ் மற்றும் கிரைமியா பகுதிகளை ரசியாவுக்கு உக்ரைன் வழங்க நிர்ப்பந்தித்தும் ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார். நேட்டோவில் உக்ரைன் அங்கம் வகிக்க முடியாது என்பது நேட்டோ ரசிய எல்லை வரை வராது என்ற உத்தரவாதத்தை ரசியாவுக்குக் கொடுப்பதாகிறது. ஆகவே “அதுபோலவே நீ எனது கரீபியன் கடல் எல்லைவரை வராமல் இரு” என்ற செய்தியை இதற்குள்ளால் வாசிக்க முடியும். இது ஓர் எழுதப்படாத டீல் ஆக அவரவர் நலன் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையில் அமைந்து விடுகிறது.

இதேபோலவே உக்ரைன் நிலப் பரப்பை ரசியாவுக்கு விட்டுக் கொடுக்கச் செய்வதன் மூலம் வெனிசுவேலாவின் எண்ணை வளப் பிரதேசத்தை நிரந்தரமாக தன்னுடன் வைத்திருக்க அமெரிக்கா ஒரு ‘லைசன்ஸ்’ இனை பெற்றுக் கொள்கிறது. ரசியாவைப் பொறுத்தவரை, டொன்பாஸை தமதாக்குகிற இலக்கை முதன்மையில் வைத்திருக்கவே செய்யும். அதனால் வெனிசுவேலா மீது அமெரிக்கா போர் தொடுத்தால், ரசியா தலையிடாமல் இருப்பதற்கான இன்னொரு காரணம் இராஜதந்திர ரீதியில் உருவாக்கப்படுகிறது. இதை சூட்சுமமாக அணுகும் ட்றம்ப் வெனிசுவேலா தமது எண்ணெய் கம்பனிகளுக்கு அநீதி இழைத்தது என்ற தொனியை இப்போ உருமாற்றி, “அது எங்களது எண்ணெய்” என்று சொன்னதை விரிவுபடுத்தி, “எங்களது எண்ணெய். எங்களது வளம். எங்களது நிலம்” என்று நிலத்தையும் சேர்த்து பேசத் தொடங்கியிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான காலனிய மனக்கட்டமைப்பு என்பதை மடுரோ உரத்துச் சொல்கிறார்.

அமெரிக்காவின் இந்த படையெடுப்பு குறித்தும் மனித உரிமை மீறல் குறித்தும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளும் ஊடகங்களும் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஐரோப்பாவும் கள்ள மவுனம் சாதிக்கிறது. வெனிசுவேலா மீதான இந்த அச்சுறுத்தல் அல்லது சாத்தியமாகக் கூடிய ஆக்கிரமிப்பு யுத்தம் குறித்து ஐநா சபையும் இதுவரை எதுவும் செய்யவில்லை. மடுரோ ஐநா செயலாளருடன் பேசியபின்னரே பாதுகாப்புச் சபையை கூட்ட ஐநா செயலர் முடிவெடுத்திருக்கிறார். அமெரிக்காவிடம் வீட்டோ அதிகாரம் இருக்கும்போது இந்த கூட்டம் ஒரு ஒப்புக்கு நடந்தேறுவதாகவே அமையும். அமெரிக்க மக்களும்கூட இதுவரை வீதிக்கு வந்து இந்த காலனிய மனக்கட்டமைப்புக்கு எதிராக போராடவில்லை. வெனிசுவேலாவின் எண்ணை வளத்தை திருடுவதன் மூலம் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளாடும் தமது வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட மட்டுமல்ல, தமது சலுகைபெற்ற வாழ்வை இழந்துவிடத் தயாராக இல்லாத காலனிய கருத்தியல் சிந்தனை முறையின் கைதிகளா அமெரிக்க மக்கள் என எண்ணத் தோன்றுகிறது. 

கரீபியன் கடல் போர்க் கோலம் பூண்டது போன்று அமளியாக மாறியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் வெனிசுவேலாவை அண்டிய கடற்பரப்பில் நிற்கிறது. வெனிசுவேலாவை கடல்வழியாக முற்றுகையிட்டு பல போர்க்க கப்பல்கள் நிற்கின்றன. இதுவரை 16000 இராணுவத்தினர் காவல்நாய்களாகவும், ட்றம்ப் ஏவினால் கடித்துக் குதற தயாராக இருப்பவர்களாகவும் கடற்பரப்பில் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர். எண்ணெய் பீப்பாக்களை தாங்கியபடி வெனிசுவேலாவுக்குள் வரவும் வெனிசுவேலாவிலிருந்து வெளியே போகவும் எந்த கப்பலுக்கும் அனுமதியில்லை. அதை செயலில் எச்சரிக்கும் விதமாக 1.9 மில்லியன் எண்ணெய்ப் பீப்பாக்களுடன் கருங்கடலில் காணப்பட்ட ‘நிழல் கப்பலை’ டிசம்பர் 10ம் தேதி அமெரிக்கா தடாலடியாக கைப்பற்றியது. அதிலிருந்த எண்ணெய் முழுவதையும் திருடியுமுள்ளது. கப்பலை தடுத்தும் வைத்துள்ளது. அதற்குப் பிறகு மேலும் இரண்டு கப்பல்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் வெனிசுவேலாவில் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கம்பனியான செவ்ரோன் 500’000 பீப்பாக்களுடன் அமெரிக்கா போய்க்கொண்டிருந்த காணொளி வெளியாகியிருந்தது.

உலக சமாதான நாயகனாக படம் காட்டி நோபல் பரிசுக்கு அலையும் ட்றம்ப், அதற்கு முரண்நிலையாக செயற்பட்டு இந்தப் போரை நடத்துவாரா, அல்லது அழுத்தச் செயற்பாடாக தனது இராணுவ மிரட்டலை செய்து வெனிசுவேலாவில் தனது எடுபிடி ஆட்சியொன்றை நிறுவி, எண்ணை வளத்தை கொள்ளையடிக்கப் போகிறாரா என்பது விரைவில் தெரிய வந்துவிடும். அப்படியொன்று நடந்தால் வெனிசுவேலாவின் ஜனாதிபதி மடுரோவையும் குடும்பத்தையும் (சிரியாவிலிருந்து அசாத் இனை ரசியாவுக்குள் கொணர்ந்ததுபோல) ரசியாவுக்கு அழைத்துவர புட்டினுக்கு ட்றம் அனுமதியளிப்பார் என்பது மட்டும் உறுதி. மடுரோ வெனிசுவேலாவை விட்டு வெளியேற வேண்டி வந்தால், தனது நாடு அவரை வரவேற்கும் என (ரசியாவின் செல்லப்பிள்ளையான) பெலாருஸ் அதிபர் அலெக்ஸண்டர் லூக்காசெங்கோ கூறியிருப்பதை வெறும் கூற்றாக மட்டும் எடுப்பதா, அதோடு சேர்த்து ஓர் எதிர்கால அரசியல் நிகழ்வின் சாத்தியப்பாட்டை முன்னறிவிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாமா?.

https://sudumanal.com/2026/01/01/இந்த-வளமும்-எனதே-மண்ணும்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.