Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான்காவது கொலை - கருணாகரன்

‘உங்களுடைய பொருளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அன்பான அழைப்பில் ஒரு கடிதம் சுங்கப் பகுதியிலிருந்து வந்திருந்தது. இலங்கையின் சுங்கப் பகுதியிலிருந்து இப்படி ஒரு அன்பான கடிதம், தமிழ் எழுத்தாளருக்கு வருவதாக இருந்தால், அந்தக் கடிதத்தின் எடையை நீங்கள் கற்பனை செய்தே பார்க்க முடியாது. தலையிலும் மனதிலும் சட்டென அந்தப் பாரம் ஏறி விடும். ‘அப்படியென்ன பெரிய பாரம்?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை நான் சொல்வதையும் விட, நீங்களும் என்னோடு வந்தால் அதை அறிந்து விடலாம்.

நாங்கள் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சுங்கப் பகுதிக்குச் செல்கிறோம். பொதிகள் பரிசீலனைப் பிரிவிலுள்ள வாடிக்கையாளர் இருக்கையில் ஐந்தாறுபேர் மட்டுமே இருக்கிறார்கள். நல்லவேளை, இன்று கூட்டம் அதிகமில்லை. சிலவேளை நிறையபேர் காத்திருப்பார்கள். கூட்டம் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. எதிர்பார்த்தபடியே அரை மணி நேரத்துள் கட்டண உத்தியோகத்தரைச் சந்திக்க முடிகிறது.

கடிதத்தைக் கொடுக்கிறோம். அவர், கடிதத்தை வாங்கிப் பார்த்து விட்டு உதவியாளரை அழைத்து, அவரிடம் கொடுக்கிறார். உதவியாளர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பொதி இலக்கத்தைச் சரிபார்த்து, பொதியை எடுத்து வருகிறார். ஏற்கனவே பொதி பிரிக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்டதே.

அதிகாரியின் முன்னே உள்ள மேசையில் பொதியிலிருந்து பொருட்களை எடுத்து வைக்கிறார், உதவியாளர்.

நாங்கள் அதிகாரியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஐந்து புத்தகங்கள்.

கவிதை நூல் ஒன்று. நாவல் ஒன்று. படுகொலைகளைக் குறித்த நூலில் மூன்று பிரதிகள்.

அவற்றோடு, ஏதோ எழுதி வைக்கப்பட்ட ஒரு தாள். அநேகமாக அந்தப் பொதியைப் பற்றிய குறிப்பாக இருக்கலாம்.

புத்தகங்களைப் பார்த்த கட்டண உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளரை அழைத்து வருமாறு உதவியாளரிடம் பணிக்கிறார். அதற்கிடையில் அந்தத் தாளை எடுத்து கவனமாகப் படிக்கிறார், புருவங்கள் சுருங்குகின்றன. மொழிபெயர்ப்பாளர் வந்து புத்தகங்களை எடுத்து கையில் வைத்து கொண்டு எங்களிடம் சொல்கிறார், “இந்தப் புத்தகங்களில் கொலைகளைப் பற்றியெல்லாம் எழுதப்பட்டிருக்கு”  அவருடைய குரலில் அதிகாரத்தின் வெம்மை புலப்படுகிறது. 

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். அப்படியே அதிகாரியையும் மொழிபெயர்ப்பாளரையும் பார்க்கிறோம். அவர்களும் எங்களைக் கூர்ந்து பார்க்கிறார்கள். இதொன்றும் வியப்பான சங்கதி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். ஏற்கனவே இந்த மாதிரி பல சந்தர்ப்பங்களில் பல புத்தகங்கள் தடுத்தாட்கொள்ளப்பட்டன. சிலவற்றை வாதிட்டு மீட்டிருக்கிறோம். சில கடல் கொண்டதைப்போல கைவிடப்பட்டன. பாதுகாப்பு அமைச்சு என்பது இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஆழக்கடல்தான். ‘தாழ்வதும் மீள்வதும் அதன் அருளாலே’ என்று ராகவன் பகடியாகச் சொல்வார். ‘அதன்’ என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று எல்லோருக்கும் தெரியும். பாதுகாப்புத்துறையின் தங்க மூளை.

நான் வலிந்து, மெல்லிதாகச் சிரிக்கிறேன். ‘இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இப்படித்தான் நடக்கும் என்று அறிவோம். இதைத்தானே எப்போதும் செய்து கொண்டிருக்கிறீர்கள்?’என்ற மாதிரி அவருக்கு அந்தச் சிரிப்புச் சொல்லியிருக்க வேணும்.

“ஆகவே, உங்களிடம் இவற்றை நாங்கள் தர முடியாது. இதை நாங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்புவோம். அங்கிருந்து பதில் கிடைக்கும்போது உங்களுக்குத் தகவல் தருவோம்” என்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

அதற்கும் சிரிக்கிறேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சிரிப்பு ஒரு ஆயுதம். சில நேரங்களில் அது பலமான கேள்விகளின் குறியீடாகும்.

“கொலைகள் நடந்தால், அதைப் பற்றி எழுதாமல் வேறு எதைப்பற்றி எழுதுவது?” கேட்கிறேன்.

அவர் பதிலளிக்கவில்லை. அதிகாரியின் முகத்தில் இறுக்கம் கூடுகிறது. பொருட்படுத்தாத மாதிரி, அவர் ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

எழுதுவதை நிறுத்தி விட்டுத் தலையை நிமிர்த்தி, எங்களைப் பார்த்துக் கொண்டு சொல்கிறார், “எங்களை நீங்கள் கோவித்துக் கொள்ளக் கூடாது. எங்களுடைய கடமையைச் செய்கிறோம். அதைத்தான் நாங்கள் செய்ய முடியும்”

இந்தப் பொன்னான வார்த்தைகளைக் கேட்க உண்மையிலேயே எனக்குப்  பெரிதாகச் சிரிப்பு வந்து வந்து விடுகிறது.

அவர் ஒரு மாதிரியாக என்னைப் பார்க்கிறார்.  அந்தப் பார்வையில் தன்னை இளக்காரமாக எண்ணித்தான் சிரிக்கிறேனா?  என்றொரு எண்ணம் ஓடியதாகப் பட்டிருக்க வேணும். முகத்தில் அசடு வழிகிறது.

அவரை மேலும் குழப்பாமல், ”இங்கே கொலைகள் நடந்ததால், அதைப் பற்றி எழுதப்பட்டிருக்கு. அதற்கான ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. புத்தகத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அப்பொழுது உங்களுடைய இதயம் என்ன சொல்ல விரும்புகிறதோ அதைச் சொல்லுங்கள்…” என்கிறேன்.

“மன்னிக்க வேணும். இதைப்பற்றி நீங்கள் எங்களோடு பேசுவதால் பயனில்லை. எங்களுக்குப் பணிக்கப்பட்டதைத்தான் நாங்கள் செய்ய முடியும்”  மீண்டும் அதே பதிலைச் சொல்கிறார் அவர்.

மேலே ஏதோ நிழலாட, நான் அண்ணாந்து பார்க்கிறேன், ஒரு சிறிய குருவி அங்குள்ள கண்காணிப்புக் காமிராவின் மேலே வந்து அமர்கிறது.

“இது, இந்தக் கொலைகள் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்பொழுது ஒரு புதிய ஆட்சி வந்திருக்கு. நாட்டில் மாற்றங்களும் நீதி வழங்கல்களும் நிகழ்த்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நீதிக்காக இந்தக் குரலை இங்கே  முன்வைத்திருக்கிறார்கள். இது அவசியமல்லவா! இதில் என்ன தவறிருக்கு?“ எனக் கேட்கிறேன்.

அவருக்கு ஒரு மாதிரி ஆகி விடுகிறது. “ஆம், நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், எங்களால் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் அரச உத்தியோகத்தர்கள். அரசாங்கத்தின் உத்தரவையும் கட்டளையையும்தான் நிறைவேற்ற முடியும். எங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இப்படியான புத்தகங்களோ, பொருட்களோ வந்தால், அதை நாங்கள் படைத்துறைக்குத்தான் (Military of Defence) பாரப்படுத்த வேண்டும். அவர்கள்தான் இதைப் பற்றிய இறுதி முடிவைச் சொல்ல வேணும். இல்லையென்றால் என்மீதுதான் கேள்விகள் வரும். நான்தான் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும். இதற்குத் தனியே முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. நீங்கள் சொல்வதைப் போல, ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், கட்டளைகள் – உத்தரவுகள் எதுவும் மாறவில்லையே!“ இதற்கு மேல் தன்னால் என்ன செய்ய முடியும் என்பது போல, ஒரு பரிதாபகரமான தோற்றத்தைக் காண்பிக்கிறார்.

உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. ஆனாலும் அந்தச் சூழலில் சிரமப்பட்டு உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கிறீர்கள்.

“அரசாங்கம், பல அறிவிப்புகளைச் செய்திருக்கு. படைகளை விலக்குவதாக. ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக. (நாற்பத்தைந்து  வயதுடைய பயங்கரவாதச் சட்டத்தைப் பற்றி அப்பொழுது உங்களுக்கு நினைவுக்கு வருகிறது). போராளிகள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் நிலைகொண்டிருக்கும் படையினர் கூட விலக்கப்படுவார்கள்… என்றெல்லாம். ஆனால், நீங்களோ இந்தச் சாதாரண புத்தகங்களையே தர மாட்டோம் என்று தடுத்து வைத்திருக்கிறீர்கள்… இது எவ்வளவு அநியாயம்?” என்று அப்பாவித்தனமாகக் கேட்பதைப் போல கேட்கிறேன்.

“ஐயா, நீங்கள் பேசுவது அரசியல். நாங்கள் இங்கே செய்வது நிர்வாகம். நான் அரசாங்கத்தின் உத்தரவைத்தான் செய்ய முடியும். என்னை மன்னித்து விடுங்கள். நான் ஒரு சிங்கள அதிகாரி. முன்பு இப்படி இங்கே, யாழ்ப்பாணத்தில் வந்து என்னைப் போன்ற ஆட்கள் வேலை செய்ய முடியாது. எனக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்த அநீதிகள் எல்லாம் கவலையைத்தான் தருகின்றன. இந்த நூலகம் (யாழ்ப்பாண நூலகம் இருந்த திசையைச் சுட்டி) எரிக்கப்பட்டதும் இங்கே உள்ள மக்கள் சிரமப்பட்டதும் எல்லாம் வேதனையே. ஆனால், நாங்கள் சமாதானமாக – சந்தோசமாக இருப்போம்… நீங்கள் இந்தப் படிவத்தில் கையெழுத்து இடுங்கள். நாங்கள் இந்தப் புத்தகங்களைப் பாதுகாப்பு அமைச்சுக்கு (MOD) அனுப்புகிறோம். அங்கிருந்து பதில் வந்ததும் உங்களுக்குத் தகவல் சொல்கிறோம்…”

நீங்கள் இப்பொழுது அண்ணாந்து அந்தப் பணிமனையின் கூரையைப் பார்த்து சற்றுச் சத்தமாகவே சிரித்து விடுகிறீர்கள். அதிகாரி சற்றுக் கலவரமடைந்தது போல தெரிகிறது. வியப்புடன் எங்களைப் பார்க்கிறார்.

“அப்படியென்றால் அரசாங்கத்தரப்பினரால் சொல்லப்படுகின்ற மாற்றங்கள் எதுவுமே நடக்கவில்லையா?” என்று கேட்டுவிடுகிறீர்கள்.

“ப்ளீஸ்.. இதற்கு  மேல் என்னை எதுவும் கேட்காதீர்கள். அதுதான் நான் சொன்னேன், நான் ஒரு சாதாரண உத்தியோகத்தன் என்று. நான் எதையும் தீர்மானிக்க முடியாது. அரசியல்வாதிகள் அப்படித்தான் சொல்வார்கள். அவர்கள் அதையெல்லாம் எங்களுக்கு எழுத்தில் – உத்தரவாகத் தந்தால் நாங்கள் அதை உங்களுக்குச் சேவையாகச் செய்வோம்.. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது… ஏனென்றால், என் மீதான உத்தியோக பூர்வமான கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும். எந்தத் தலைவர்களும் அதைச் சொல்ல வர மாட்டார்கள்…” என்று எழுந்து விட்டார். அவருடைய முகத்தில் மெல்லிய சினம் நிழலாக ஆடியது.

“நீங்கள் ஒற்றுமை பற்றி பேசுகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த ஐந்து சாதாரண புத்தகங்களையே தடுத்து வைத்துக் கொண்டு, எப்படி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? இந்த மாதிரி செயல்களால், எப்படி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கப் போகிறீர்கள்?”

அதிகாரி குழப்பமடைந்து விடுகிறார். “மறுபடியும் சொல்கிறேன், நான்… நான் ஒரு சாதாரண அதிகாரி. நான் விதிகளைப் பின்பற்றுகிறேன்”

“விதிகள்? இது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல! இது ஒரு வரலாற்று ஆராய்ச்சி. நடந்த சம்பவங்களைப் பற்றிய ஆதாரபூர்வமான குரல். இது உண்மையைப் பதிவு செய்கிறது. நாம் நமக்கு முன்னே உள்ள இடைவெளிகளை நிரப்பாமல், ஒற்றுமைக்கான பாலத்தை நிர்மாணிக்க முடியுமா?  ஆனால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஏனென்றால் நீங்கள் இந்த அமைப்பின் பாதுகாப்பில் இருக்கிறீர்கள். நீங்கள், எங்களுடைய குரல்களைக் கட்டுப்படுத்தும்போது, எப்படி நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்?”

அதிகாரி சில நொடிகள் மௌனமாக இருக்கிறார். அவர் தனது கைகளை விரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆழ்ந்த யோசனை. “நான்… என்னால் என்ன செய்ய முடியும்? நான் ஒரு சிறிய கடிகாரத்தின் பல். அவ்வளவுதான்”

“ஆமாம், நீங்கள் ஒரு கடிகாரத்தின் பல்தான். ஆனால் ஒவ்வொரு பல்லும் முழு கடிகாரத்தின் செயல்பாட்டிற்கு அவசியம். நீங்கள் இல்லாமல், இந்த அடக்குமுறை இயந்திரம் செயல்படாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஆனால் உங்கள் மகிழ்ச்சி, எங்கள் வலியின் மீதல்லவா  கட்டப்பட்டுள்ளது”

மின்விசிறியின் சத்தம் அறையில் முழுதாக நிரம்பிக்கிடக்கிறது. அதைத் தவிர சில நொடிகள் அங்கே வேறு எந்த ஒலிகளும் இருக்கவில்லை.

மெதுவாக, ஆனால் கூர்மையாக அவருக்குச் சொல்கிறேன், “நீங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள்?”

அதிகாரி தலையை உயர்த்துகிறார். “ஆம்…”

“இப்படியான செயல்களால் எங்களுக்கு எப்படி மகிழ்ச்சியை அளிக்கப் போகிறீர்கள்?”

அதிகாரி திணறுகிறார். “நான்… நாங்கள் விதிகளைப் பின்பற்றுகிறோம். ஒற்றுமைக்காக…”

“ஒற்றுமை என்பது பாலம் கட்டுவது. இந்தப் புத்தகங்கள் அதற்கான இடைவெளிகளை நிரப்புகின்றன. இவை உண்மையைச் சொல்ல முயல்கின்றன. உண்மைகளை ஏற்றுக் கொள்வது கைகளை இறுகப் பற்றிக் கொள்வதாகும். இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல! இது வெறும் வரலாற்று ஆவணம்.”

“ஆனால்… பாதுகாப்பு…”

“எந்தப் பாதுகாப்பு? யாருடைய பாதுகாப்பு? உண்மையிலிருந்து பாதுகாப்பா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்கள் ஒரு வேலையைச் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் மகிழ்ச்சி எங்கள் மீதான கட்டாய மௌனத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அது எப்படி ஒற்றுமையாகும்?”

இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல், இடையில் சொல்கிறீர்கள், “ஒற்றுமை என்பது வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதில் வருகிறது, வேறுபாடுகளை மறைப்பதில் அல்ல“

அதிகாரி, தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டு, எங்களை நோக்கி முன்னே சரிந்து சற்றுத் தணிந்த மெல்லிய குரலில் சொல்கிறார், “நீங்கள் சொல்வதிலுள்ள நியாயத்தை  நான் அறிவேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இங்கே ‘மகிழ்ச்சி’ என்பது ஒருவகை உயிர்வாழ்தல். நான் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறேன், ஏனென்றால் நான் பயந்திருக்க வேண்டாம் என்று நினைக்க விரும்புகிறேன். நான் ஒற்றுமை பற்றி பேசுகிறேன், ஏனென்றால் நான் மோதல்களையோ முரண்பாடுகளையோ எதிர்கொள்ள விரும்பவில்லை” அவர் ஒரு ஆழமான மூச்சை விடுகிறார்.

எனக்கு ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுகிறது. குறைந்தது, இந்த அதிகாரியுடனாவது  இந்த மாதிரி பேச முடிகிறதே! “இந்தப் புத்தகம் உண்மையின் ஒரு சிறிய பகுதியே. இதை விட  நடந்தவற்றின் ரத்த சாட்சியாக உலகமெங்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் நினைவுகள், அவர்களின் கதைகள் – அவை எங்கும் உள்ளன”

அவர் மேசையில் இருக்கும் புத்தகங்களைத் தொடுகிறார். முகம் மெல்லிதாக வாட்டமுறுகிறது. 

“இன்றைய அறிவியல் யுகத்தில், இந்தப் புத்தகத்தை மின்நூல்களாக லட்சம் பிரதிகள் உருவாக்க முடியும். இணையம் எங்கும் உள்ளது. அப்படியிருக்கும்போது…” என்று சிரிக்கிறேன். அது கசப்பான சிரிப்பு.

“நீங்கள் இதைத் தடுப்பது, சூரியனைக் கைகளால் மறைப்பது போல சிரிப்புக்குரியது. உங்களுக்கு இது வெட்கம் தரும் செயலாக இல்லையா? நீங்கள் இதைத் தடுத்தாலும், இதை ஒளிப்படங்களாகவும், யூடியூப்களாகவும், PDF பிரதிகளாகவும் நாம் வெளியே இருந்து எடுக்கலாமே. உங்களுடைய விதிமுறைகள் அப்பொழுது என்ன செய்யும்? ஏராளமாக விரிந்து பரவிக் கிடக்கும் வலைத்தளங்களைத் தடுக்க முடியுமா? ஒவ்வொரு மின்நூலையும் கண்காணிக்க முடியுமா?”

“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்…”

அவருடைய அகத்தில் வெட்கம் ஏற்படுவதை உணர்கிறோம். முகம் அதைப் பிரதிபலிக்கிறது. அது அவருடைய வெட்கம் அல்ல. அது நாட்டினுடைய, ஆட்சியினுடைய, அதிகாரத்தினுடைய வெட்கம். 

“ஆனால் நாங்கள் எங்களிடம் வரும் பொருட்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறோம். மின்நூல்கள்… அவை வேறு துறை. அது தொழில்நுட்பத் துறை. எங்களுக்கு எட்டாதது”

“அப்படியானால், இந்தத் தடை வெறும் காட்சி மட்டுந்தானா? பொய்யான பாதுகாப்பா?”

சமாளித்துக் கொண்டு அவர் சொல்கிறார், ”மக்கள் இவ்வாறான தடையைப் பார்க்கிறார்கள். அது ஒரு செய்தியை அவர்களுக்குச் சொல்கிறது. ‘இது அனுமதிக்கப்படாதது’ என்று. அதாவது இந்தப் பொதி தடுக்கப்படுவதை அவர்கள் பார்க்க முடியும். அது அவர்களை நிதானமடைய வைக்கும்”

நான் அவரிடம் கேட்கிறேன், “இப்படிச் சொல்வதும் சிந்திப்பதும் வெட்கம் தருவதாக இல்லையா?“

அவருடைய கண்கள் கலங்குவதைப்போலிருக்கிறது. ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “வெட்கமா? ஆம். எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? உண்மையில் நாங்கள் ஒரு நாடகம் நடத்துகிறோம். இது அந்த நாடகத்தின் ஒரு காட்சி”

அவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார், குரலைத் தாழ்த்திக்கொண்டு சொல்கிறார். “நீங்கள் PDF செய்தால், அதை அனுப்புங்கள். யூடியூபில் போடுங்கள். ஆனால்… இந்த இந்தப் புத்தகங்களை நாங்கள் தடுக்க வேண்டும். ஏனென்றால்… ஏனென்றால் அது எங்களுடைய  ‘செயல்முறை’. இந்தச் செயல்முறை முக்கியம். மக்கள் அதைப் பார்க்க வேண்டும்: அரசு கட்டுப்பாட்டில்தான் எல்லாம் உள்ளது என்று.”

“அப்படியானால், இது வெறும் பாசாங்கு?”

“இல்லை. இது ஒரு அடையாளம். ஒரு குறியீடு. நாங்கள் நடைமுறை உலகில் இன்னும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும். டிஜிட்டல் உலகில்… அங்கே நாங்கள் தோற்கடிக்கப்படுகிறோம். உண்மைதான். ஆனால் இங்கே இல்லை”

‘எங்களுக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது. அவரைப் பார்க்கும்போதல்ல, அரசாங்கத்தை எண்ணிப்பார்க்கும்போதுதான் பரிதாபமாக உள்ளது’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால் உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. கூடவே கவலையும். ‘எப்படியெல்லாம் இந்த அதிகார மயக்கம் உள்ளது‘ என்று நினைத்துச் சிரிக்கிறீர்கள். கவலைப்படுகிறீர்கள். எத்தனை அறிவுசார் முன்னேற்றங்கள் வந்தாலும் அதிகாரத்தின் அறை எப்போதும் இருளாகத்தான் உள்ளது.

நான் அதிகாரியிடம் சொல்கிறேன், “நான் இதை PDF ஆக மாற்றுவேன். அப்பொழுது எழுதுவேன், ‘இன்று சுங்கத்தில் தடுக்கப்பட்ட புத்தகம் இது. இப்போது இது உலகம் முழுவதும் வருகிறது. இனி இது உங்களுடையது‘ என்று. ஆனால் நான் இந்தப் பிரதிகளையும் விடமாட்டேன். ஏனென்றால்… இந்த எதிர்ப்பு முக்கியம். இது ஒரு குறியீடு. மக்கள் இந்தத் தடையைப் பார்க்க வேண்டும். அதற்கான எதிர்ப்பையும் அவர்கள் காண வேண்டும். இது சாட்சியமாக இருக்க வேண்டும். இது நீங்கள் செய்யும் கட்டுப்பாட்டு நாடகத்தின் சாட்சியாக. அதைப்போல, இந்தத் தடையை நாம் உடைப்பதையும் மக்கள் பார்க்க வேண்டும்”

அதிகாரி ஆச்சரியத்துடன் பார்க்கிறார். “ஏன்? PDF ஆக்கி இணையத்தில் பரவ விடும்போதே உங்களுக்கு வெற்றி கிடைத்து விடுகிறதே?”

“இது வெற்றி பற்றியது அல்ல. இது சாட்சி பற்றியது. இந்தப் புத்தகங்கள் இங்கே தடுக்கப்பட்டதை உலகம் பார்க்க வேண்டும். அது சாட்சியமாக இருக்க வேண்டும்.”

அவர் எழுந்து நின்று, ஜன்னலுக்கு அருகில் செல்கிறார்.

“நீங்கள் கேட்டீர்கள் – எனக்கு வெட்கமாக இல்லையா? என்று. ஆம், வெட்கம்தான். ஆனால் இப்போது அந்த வெட்கம் வேறு வகையானது. இது எங்கள் சக்தியினுடைய வெட்கம். நாங்கள் இன்னும் காகிதத்துடன் போராடுகிறோம், ஆனால் உலகம் இலத்திரனியலில், தொழில்நுட்பத்தில், அறிவில் முன்னேறிவிட்டது”

அவர் திரும்பிப் பார்க்கிறார்.

“நீங்கள் வார்த்தைகளைத் தடுக்கலாம், ஆனால் உண்மையைத் தடுக்க முடியாது. நீங்கள் புத்தகங்களைத் தடுக்கலாம், ஆனால் யுகங்களைத் தடுக்க முடியாது”

எங்களுடன் தொடர்ந்து உரையாடவும் முடியாமல், அதைத் தவிர்க்கவும் விரும்பாமல் தடுமாறுகிறார் அதிகாரி.

அவரிடம் “ஒரு கேள்வி. ஒன்று மட்டும்” என்கிறேன்.

அவர் அலுவலகத்தைக் கண்களால் சுற்றிப் பார்க்கிறார். அங்கே மௌனமான, கனத்த சுவர்கள், படிவங்களின் அடுக்குகள், விதிமுறைகளின் கனம் கூடியிருக்கிறது.

நான், மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையும் எடை போட்டபடி, “ஆம், கொலைகளைக் கண்டு நீங்கள் அச்சமடைகிறீர்கள். அதனால்தான் இந்தத் தடை” என்கிறேன்.

அவர் பதறத் தொடங்கி விடுகிறார். முகம் கறுத்துச் சட்டெனச் சிவக்கிறது. கண்களும் சிவந்து கலங்குகின்றன.

அவர் ஒரு புத்தகத்தை எடுத்து, அதைத் திறந்து ஒரு பக்கத்தைக் காட்டுகிறார். அது ஒரு செய்தித் தாளின் நகல். “மண்டைதீவில் கொல்லப்பட்டவர்கள் கிணற்றுக்குள் போடப்பட்டனர்” என்ற தலைப்பு.

“நீங்கள் அந்தக் கொலைகளைச் செய்யாமல் தடுத்திருக்கலாம் அல்லவா? அதாவது உங்களுடைய படைகள், உங்களுடைய அரசாங்கம். அதுதானே நியாயமானது? அதுதானே சரியானது?” என்கிறேன்.

அதிகாரியின் முகம் வெளிறுகிறது. “நான்… நாங்கள்…” தடுமாறுகிறார். கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு, முகத்தைத் துடைத்துக் கொள்கிறார்.

“சரி. அதை விட்டுவிட்டுவோம். இப்பொழுது கொலைக்கான சாட்சியங்களைத் தடுப்பது, என்ன வகையில் நீதியாகும்?”

அவர் புத்தகத்தை மேசைமீது வைக்கிறார். அது ஒரு சத்தமான தட்டச்சுப் போல் ‘தொப்‘ என ஒலித்தது.

“இது இன்னொரு கொலை அல்லவா? ஆம். சாட்சியங்களின் கொலை.”

அறை முழுவதும் மௌனம் பெருகித் தடித்துக் கனமாயிற்று.

அவர் எதுவுமே பேசவில்லை. மொழிபெயர்ப்பாளர் மெதுவாக நழுவிச் செல்கிறார். நான் அவரைப் பார்த்துச் சிரிக்கிறேன். இப்போது அந்தச் சிரிப்பு கசப்பானது அல்ல; அது விடுதலை தரும் சிரிப்பு. அந்தச் சிரிப்பு அதிகாரிக்கு வெட்கத்தை அளித்திருக்க வேண்டும். அவர் வேறு ஒரு கோப்பை எடுத்து அந்த வேலையில் மூழ்குவதாக நடிக்கிறார்.

மெதுவான குரலில் சொல்கிறேன், “முதல் கொலை, உயிரை எடுத்தார்கள். இரண்டாவது கொலை, அந்த உயிரின் கதையை எடுக்கிறார்கள். மூன்றாவது கொலை, அந்தக் கதையின் நினைவை எடுக்கிறார்கள். இது எத்தனை மடங்கு கொலை?”

அவர் நாற்காலியில் சாய்ந்து, இரண்டு கைகளையும் உயர்த்தித் தலையின் பின்பக்கமாகச் சரிந்து, கண்களை மூடுகிறார். முகம் மேலே மின்விசிறி நோக்கிக் கொண்டிருக்கிறது.

“நீங்கள் விதிமுறைகளைச் சொல்கிறீர்கள். நான் நீதியைச் சொல்கிறேன். விதிமுறைகள் காகிதம். நீதி இரத்தம். எது கனமானது?” என்று கேட்கிறேன்.

அவருடைய இதயமும் காதுகளும் மிக விரிந்து கேட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்போது முற்றிலும் அமைதியாக, ஆழ்ந்த துக்கத்துடன் குரலைத் தாழ்த்தி, அழுத்தமாகச் சொன்னேன், “நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் மனிதர்களை மட்டும் கொல்லவில்லை”

அவர் எழுந்து நின்று, சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் வரைபடத்தை நோக்கி நடக்கிறார்.

“நீங்கள் உண்மையைக் கொல்கிறீர்கள். வரலாற்றைக் கொல்கிறீர்கள். இந்தப் புத்தகம் வெறும் காகிதம் அல்ல; இது நடந்தவற்றின் சாட்சியம். நீங்கள் இந்தச் சாட்சியத்தைக் கொல்கிறீர்கள்”

திரும்பி எங்களை அவர் பார்க்கிறார். என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?‘ என்று கேட்பதைப்போலிருக்கிறது அந்தப் பார்வை. காட்டில் தனித்துத் தவித்து அலையும் மானின் கண்களைப்போல அவர் மிரட்சியடைவதைப் பார்க்கிறோம்.

“உண்மையும் வரலாறும் கொலை செய்யப்பட்டால் மிஞ்சுவது என்ன? பொய்களின் கோட்டை! உண்மைகள் மறக்கப்பட்ட பாலைவனம்!! ஒரு தேசத்துக்கு உண்மையும் வரலாறும் வேண்டாமா?”

அதிகாரி மௌனமாக வந்து அமர்கிறார். அவருடைய விரல்கள் மேசையின் மீது வெறுமையாக எதையோ எழுதுகின்றன.

“நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூறுதலும் குற்றங்களை ஒப்புக்கொள்ளுதலும் அவசியமில்லையா? ஒரு தேசம் தன் குறைகளை ஒப்புக்கொள்ளாமல், தன் பிழைகளை மறைக்காமலும் எப்படி முன்னேற முடியும்? இது ஒரு குழந்தைத்தனத்தைப் போலல்லவா? தவறு செய்து, அதை மறைக்க முயல்வது? ஆனால், இங்கே வன்மையான கபடம் உள்ளது”

அவர் புத்தகத்தைத் தூக்கி, அதை மெதுவாகத் தடவுகிறார். அது அவருடைய மனதின் உறுத்தல் என்று உங்களுக்குத் தோன்றுகிறது.

“இந்தக் கொலைகள் நடந்தன. இது உண்மை. இப்போது, உண்மையைச் சொல்வதைத் தடுப்பது – இது இரண்டாவது குற்றம். முதலில் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல், இரண்டாவது தவறும் செய்வது.”

அவர் ஒரு ஆழமான மூச்சை விடுகிறார்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வரலாற்றை மறைத்தால், அது மாறிவிடுமா? இல்லை. அது காயமாகவே இருக்கும். ஆனால் அந்தக் காயம் சீழ்பிடித்துக் கொள்ளும். தேசத்தின் ஆன்மாவில் சீழ்பிடித்த காயம்”

‘ஆம்’ என்பது போல மெல்லத் தலையசைக்கிறார். ‘இருந்தாலும்..’ என்பதுபோல.. கண்கள் எதையோ சொல்ல முற்படுகின்றன.

“ஒரு கேள்வி தோன்றுகிறது. நீங்கள் நூலகம் எரிக்கப்பட்டதைப் பற்றி வருத்தமடையவாகச் சொன்னீர்கள். அது ஒரு பெரும் இழப்பு என்றும். ஆனால்… இப்போது நீங்களே இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைக்கிறீர்கள். இந்த இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்?”

அதிகாரியின் முகம் வெளிறுகிறது. அவர் ஒரு வினாடி மௌனமாயிருக்கிறார். அவரது வாய் சிறிது திறந்திருக்கிறது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு மெல்லச் சொல்கிறார், “அது… அது வித்தியாசமான விஷயம்.”

“உண்மையாகவா? 1981 இல், நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எரிக்கப்பட்டன. 2025இல், நூலகத்துக்கு வரவிருக்கும் புத்தகங்கள் தடுக்கப்படுகின்றன. இரண்டும் ஒரே இலக்கை நோக்கிய திட்டமில்லையா? ஞாபகங்களை, வரலாற்றை இல்லாமலாக்குவது? வரலாற்றை முடக்கி வைப்பது?”

“அப்போது அதில் நான் இல்லை. நான் அங்கே இல்லை…” அவசரமாக மறுக்கிறார்.

“ஆனால் இப்போது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். இப்போது நீங்கள்தான் அந்தத் தடையாளி. நூலகத்தின் காவலாளிகள் அன்று தீயை வைத்தனர். இன்று நீங்கள் இப்படிக் கதவைச் சாத்துகிறீர்கள். வித்தியாசம் என்ன?”

அதிகாரி தனது நாற்காலியில் பின்னால் சாய்கிறார். அவரது கண்கள் கரைகின்றன.

“நான் எரிக்கவில்லை. நான் வெறும் காகிதப் பரிமாற்றம் செய்கிறேன். ஒரு படிவம். ஒரு கையெழுத்து. MOD க்கு அனுப்புகிறேன். இது வித்தியாசம்தானே? நான் எரிக்கவில்லை. நான் எனக்குரிய… நிர்வாகப் பணியைச் செய்கிறேன். அவர்களே பொறுப்புச் சொல்ல வேண்டும்“

நான் அவரை மறுத்துச் சொல்கிறேன், “வித்தியாசம் இல்லை. கையாளும் முறை மட்டுமே மாற்றம். தீ மாறி படிவமாகியிருக்கிறது. அத்துமீறல் இங்கே  மாற்றமடைந்து அதிகார உத்தரவாகியிருக்கிறது. இலக்கு ஒன்றே. வார்த்தைகளையும் எண்ணங்களையும் மௌனமாக்குவது,  வரலாற்றை முடக்கி வைப்பது”

அந்தப் புத்தகப் பொதியைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறேன், “மேலும் ஒரு விஷயம். இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைப்பது – இது உண்மையை மறைப்பது மட்டுமல்ல. இது ஒரு சிறை வைத்தலும்தான். அரசியற் கைதிகளைச் சிறை வைப்பதைப் போல, புத்தகங்களையும் சிறை வைக்கிறீர்கள். இவை அறிவுச் சிறை கைதிகள். சிந்தனைச் சிறை கைதிகள். உண்மையின் சிறை கைதிகள்” என்னுடைய குரலில் ஆவேசமும் புத்துணர்வும் ஏற்படுகிறது.

அதிகாரியின் கண்களுக்குள் நாங்கள் புகுந்து இதயத்தைத் தாக்கி விட்டதைப்போலிருக்கிறது. அப்படித்தான் அவருக்கும் தோன்றியிருக்கக் கூடும். அவர் மிகச் சங்கடத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்.

“நம்முடைய நாட்டின் அரசியற் சாசனத்திலோ, நீதித்துறையின் விதிமுறைகளிலோ, இதைப் பற்றி எழுதப்பட்டுள்ளதா? ‘புத்தகங்களைச் சிறை வைத்தல்’ என்று எந்தச் சட்டத்தில் உள்ளது? ‘கருத்துக்களைச் சிறை வைத்தல்’ என்று எந்தச் சட்டப் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது?”

அதிகாரி பதிலளிக்க முன், தொடர்கிறேன்,

“நான் சட்டத்தைப் படித்தவன் அல்ல. ஆனால் இதை நன்றாக அறிவேன். சட்டம் மனிதர்களைச் சிறை வைக்கலாம். குற்றம் செய்தவர்களை. ஆனால் எண்ணங்களை? வார்த்தைகளை? உண்மைகளை? அவற்றை சிறை வைக்க முடியுமா? அது எந்தச் சட்டம்?”

அவர் எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார். உதவியாளருக்குச் சங்கடமாகி விட்டது. தனக்கு ஆயிரம் வேலைகள் உண்டு என்பதைப்போல, எதையோவெல்லாம் செய்து கொண்டிருந்தார். காதுகளை இங்கே வைத்திருப்பதும் எடுப்பதும் என்ற மாதிரி இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார்.

“இல்லை. இது சட்டம் அல்ல. இது பயத்தின் ஆட்சி. பயம் சட்டமாகும்போது, சட்டம் சிறைச்சாலையாகிறது. பயம் நீதியாகும்போது, நீதி நியாயமெல்லாம் கொலை செய்யும் கருவியாகிறது.”

உதவியாளர் வந்து ஒரு கோப்பை அதிகாரியின் முன்னே வைத்துவிட்டுச் செல்கிறார்.

“நீங்கள் ஒரு புதிய வகை சிறையை உருவாக்குகிறீர்கள். இது பொது சிறையல்ல. இது ‘அறிவுச் சிறை’. இங்கு கைதிகள் மனிதர்கள் அல்ல; எண்ணங்கள். தண்டனை, தூக்குத் தண்டனை அல்ல; மறத்தல். இந்தச் சிறையில், புத்தகங்கள் செத்துக் கிடக்கின்றன. ஆனால் அவை இறக்கவில்லை; அவை மறைக்கப்படுகின்றன”

சட்டென எழுந்து அவர் மறுக்கிறார் “இது… இது கடுமையான விமர்சனம்” குரல் சற்று உயர்ந்து காட்டமாக இருக்கிறது.

“உண்மை எப்போதும் கடுமையானதுதான். சட்டம் மென்மையாக இருந்தால், அது சட்டம் அல்ல; விருந்தோம்பலாகி விடும் என்ற கலக்கம்”

“போதும் இத்தோடு நாம் நிறுத்திக் கொள்வோம்” என்ற அதிகாரி, உதவியாளரை அழைத்து, அவ்வளவு புத்தகங்களையும் MOD க்கு அனுப்புவதற்கான படிவத்தை நிரப்பி, என்னிடம் கையெழுத்தைப் பெறுமாறு பணிக்கிறார்.

அலுவலகத்தின் மின்விசிறி சுற்றும் ஒலியைவிட, அவருடைய  மனசாட்சி சத்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அவருடைய குரலின் பதட்டம் காட்டுகிறது.

MOD. பாதுகாப்பு அமைச்சு. ஒரு மூன்றெழுத்து வார்த்தைதான். ஆனால் அது ஒரு கண்ணி. திறக்கக் கடினமான ஒரு கடவுச்சொல். பல சந்தர்ப்பங்களிலும் அது ஒரு கல்லறை என்று உங்களுடைய மனதில் தோன்றுகிறது.

MOD க்கான படிவம்:

SR / Jaf / Post / 56 / 4054

மூலப்பிரதி

தொடர் இல: 196448

மூடைகளைத் தடுத்து வைத்தல்

பெயரும் கடவுச் சீட்டு / அடையாள அட்டை இலக்கமும்: ஞானசேகரம் அருட்குமரன்

தடுத்து வைத்தலுக்கான காரணம்: பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தகவல் துறையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது (Pending Approval from MOD and Department of Information)

தடுத்து வைக்கப்பட்ட பொருட்களின் விவரம் (எண்ணிக்கை, மாதிரி இல, முதலியவை) 05 புத்தகங்கள் (தமிழ்)

1. 1990 – லைடன்தீவு மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும் – 02

2. ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் – 02

3. நெரிந்து – 01

பரிந்துரை: பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

காரணம்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.

பொருட்கள் தடுத்து வைத்த திகதி: 2025.11.20

சொந்தக்காரரின் ஒப்பம்  உதவிக் கட்டண உத்தியோகத்தர்

நான் ஒரு புன்னகையுடன் அவரைப் பார்க்கிறேன். “அப்படியென்றால், எதுவுமே மாறவில்லை. யுத்த கால நிலவரம்தான் இப்போதும். அப்போதும் MOD தான். இப்போதும் MOD தான்”

அவர் எதுவுமே சொல்லவில்லை. சிரிக்கவும் முடியாமல், முறைக்கவும் முடியாமல் நெளிகிறார்.

அவர் கேட்கிறார்: “பெயர்?”

நான் சொல்கிறேன்: எழுத்தாளர்களின் பெயர்களை

அவர் எழுதினார்: “தமிழ் எழுத்தாளர்”

நான் சொன்னேன்: “வரலாற்றாசிரியர்கள் அல்ல”

அவர் எழுதினார்: “அரசியல் உள்ளடக்கம்”

நான் சொன்னேன்: “மனித உரிமைப் பதிவு”

அவர் எழுதினார்: “MOD-க்கு அனுப்பவும்.”

நான்: கொலைகளைப் பற்றிய கதைகள்தான் உங்களை அச்சுறுத்தலாம். சாதியக் கவிதைகள்?

அவர்: பாதுகாப்புச் சிந்தனையில் எல்லாம் ஒன்றுதான்

நான்: ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். இலக்கை நோக்கி வீசப்படும் குண்டு வீச்சில் அதிகமாகக் கொல்லப்படுவது பொதுமக்கள்தான். அதைப்போலவே கொலைகளின் ஆவணமே இல்லாத மற்ற இரண்டு கவிதை நூல்களையும் தடுத்து விட்டீர்கள்…

சுங்க அதிகாரியின் கண்ணெதிரே, புத்தகங்கள் பொதிசெய்யப்படுகின்றன.  அவர் அதை ‘சரக்கு’ என்று நினைக்கிறார். நான் அதை ‘வரலாறு’ என்று எண்ணுகிறேன்.

இந்த உரையாடலை எல்லாம் கேட்ட புத்தகங்கள் அமைதியாக இப்போது ‘To MOD’ என்று எழுதப்பட்ட பெட்டியில் இருக்கின்றன.

02

புத்தகங்களின் குரல் இணைகிறது:

“எங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் சாட்சியங்கள். எங்களில் சிலர் எழுதப்பட்டோம். பெரும்பாலானோர் எழுதப்படவில்லை. எங்களில் சிலர் இந்தப் புத்தகத்தில் இருக்கிறோம். பலர் இல்லை.

ஒவ்வொரு தடுக்கப்பட்ட புத்தகமும், ஒவ்வொரு மௌனமான கதையும், ஒவ்வொரு அழிக்கப்பட்ட சாட்சியமும் – இவை அனைத்தும் ஒரே கொலையின் பகுதிகள்.

நீங்கள் இந்தப் புத்தகத்தைத் தடுக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில், நீங்கள் மீண்டும் கொல்வதைத் தொடர்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்கள் கதையைத் தடுக்கிறீர்கள், எங்களை மீண்டும் கொல்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் எங்களைக் கொல்ல முடியாது. ஏனென்றால், சாட்சியங்கள் இரத்தத்தில் எழுதப்படுவது மட்டுமல்ல; அவை காலத்தில் எழுதப்படுகின்றன. அவை காற்றில் எழுதப்படுகின்றன. அவை மனித நெஞ்சில் எழுதப்படுகின்றன.

எங்களை எரியுங்கள். இன்னும் நூறு புத்தகங்களை எழுதுவோம். இன்னும் ஆயிரம் கதைகளைச் சொல்வோம். நாங்கள் சாட்சிகள். எங்கள் வேலை, சாட்சியமளித்தல். உங்கள் வேலை, அதைத் தடுத்தல்.

யார் வெல்லுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

நீங்கள் எங்களைப் பொதியில் அடைத்தீர்கள். எங்களை MOD க்கு அனுப்புகிறீர்கள். ஒரு ஆவணமாக எண்ணுகிறீர்கள். தவறு. நாங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. நாங்கள் கண்கள். 1983இல் நூலகத்தின் ஜன்னல்களில் இருந்து பார்த்த கண்கள். 1987இல் வீதிகளில் நடந்த கண்கள். 2009இல் முள்ளிவாய்க்கால் கரையில் நின்ற கண்கள். உண்மையான வரலாறு பகிரங்கமாக வெளியே உள்ளது. எல்லோருக்கும் தெரிந்தது. அது ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் உள்ள ஆழமான வெட்டு. ஒவ்வொரு குடும்ப மரத்திலும் உள்ள ஆறாத புண். அந்தக் காயங்களில் இருந்து வடியும் குருதி – அது எங்கள் மையில் உள்ளது. நீங்கள் எங்களை மறைத்து வைக்கலாம். இந்த ஐந்து புத்தகங்களைத் தடை செய்யலாம். ஆனால் வெளியே உள்ள உண்மையை… அதனுடைய ஆதாரத்தை… காயாத அந்தக் குருதியை எப்படி மறைக்க முடியும்? அது யாழ்ப்பாணத்தின் மண்ணில் இருக்கிறது. கிளிநொச்சியின் வேர்களில் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் வீசும் காற்றில் இருக்கிறது. கொக்கட்டிச்சோலையில், உடும்பன்குளத்தில், ஏறாவூரில், மன்னார் – முருங்கனில், வாகரையின் மணலில் கொதித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் எதிரொலிகள். உண்மையின் எதிரொலிகள்.

கண்காணிப்புக் காமிரா 04:

ரிக்கார்டிங். 10:25:15. பொருள்: ஒரு (அடையாளம்: தமிழ்) எழுத்தாளரும் நீங்களும் புத்தகப் படிவங்களோடு நுழைகிறீர்கள். நேரம் 10:45:22. பொருள்: சுங்க அதிகாரி (அடையாளம்: காமினி லொக்குபண்டார) புத்தகங்களைப் பிரிக்கிறார். 10:58:41. ஆண் சிரிக்கிறார். வாய்ப்பதிவு இல்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஓடியோ ரிக்கார்டிங் முடக்கப்பட்டுள்ளது. 12:12:07. புத்தகங்கள் பக்கேஜ் செய்யப்படுகின்றன. 12:20:33. எழுத்தாளர் கையெழுத்திடுகிறார்.

காமிரா கோணம்: அவரது கைகள் மட்டுமே தெரிகிறது. புத்தகங்கள் மட்டுமே தெரிகிறது. முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ரிக்கார்டிங் முடிந்தது. கோப்பு MOD க்கு மாற்றப்படுகிறது.

பறவை பார்த்தது:

நீல நிறக் கூண்டு ஒன்று. அதன் உள்ளே, இரண்டு கால்கள் உள்ள மனிதப் பறவைகள், வெள்ளைத் தாள்கள் என்ற இறகுகளை அடுக்கி வைத்திருந்தனர். ஒருவர் மற்றவருக்கு ஒரு கறுப்பு வட்டத்தை (முத்திரை) கொடுத்தார். அது உணவு போல இல்லை; ஆனால் அவர் அதை வாங்கிக் கொண்டார். ஒரு பெரிய பொட்டலம், சிறு சிறு கறுப்பு எழுத்துகளால் நிறைந்தது. அது ஒரு பெட்டியில் வைக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் மற்றொரு பெரிய கூண்டுக்கு அனுப்பப்படும் என்பது போல, ‘MOD’ என்று குறிக்கப்பட்டிருந்தது. (பறவைக்குப் புரியவில்லை) எழுத்துகள் விதைகளா? இல்லை, அவை முளைக்கவில்லை. அவை பறக்கவும் முடியாது. பிறகு ஏன் அவற்றை காப்பாற்றுகிறார்கள்? அல்லது அழிக்கிறார்கள்? பறவை சிறகை அசைத்தது, மேலே பறந்தது. கீழே, நீலக் கூண்டு இன்னும் அங்கேயே இருந்தது. அதன் வாயில், ஒரு சிறிய மனிதப் பறவை நின்று கொண்டிருந்தான், காலத்தை வெளியே எறிந்து கொண்டிருந்தான்”

பறவை பறந்து சென்றது. அது கீழே உள்ள நீலக் கூண்டைப் பார்த்தது. அது ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்த்தது. அதன் மீது மூன்று எழுத்துக்கள்: M O D.

சுங்க அதிகாரியின் குறிப்பு:

“அந்தப் பொதியைக் கட்டவிழ்க்கச் சொன்னபோது, என் கைகள் ஈரமாயின. ‘நடவடிக்கை எண் 15(ஆ): தேசிய பாதுகாப்புக்கு இடையூறான வெளிநாட்டு பொருட்கள்’ என்ற பிரிவு என் மனத்தில் ஒளிர்ந்தது. ஆனால் மறுகணம், ‘இவை புத்தகங்கள். வார்த்தைகள். காகிதம் மீது மை’ என்ற மெல்லிய குரல் எழுந்தது. பார்த்தேன் – அந்த எழுத்தாளர் அசைவற்று இருந்தார். அவர் கண்களில் எதிர்பார்ப்பும் தீவிரம் குன்றாத அறிவும் களைப்பான உறுதியும் மட்டுமே இருந்தது. அவர் எத்தனை முறை இந்த நாடகத்தில் முடிவில்லாமல் வாழ்ந்து கொள்ள வேண்டியுள்ளது? நான் எத்தனை முறை இந்த வரிகளைப் பேசியிருக்கிறேன்? துக்கமும் அவமானமுமாக உள்ளது.  உண்மையும் நியாயமும் புரிகிறது. சரிகளைத் தெரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமலிருப்பது, அவமானச் சுமையினால் அழுந்துவதன்றி வேறென்ன?  ஒரு கணம், நான்தானா இந்தப் பொம்மலாட்டத்தை நடத்துகிறேன் எனத் தோன்றியது. பின், அலுவலகத்தின் பட்டியலில் என் பெயரைக் கண்டேன். காமினி லொக்குபண்டார’ ஆம். நான் இங்குள்ளேன். நான் இதைச் செய்வேன். கையெழுத்து. முத்திரை. MOD க்கு கடமை முடிந்தது.

ஆனால் ஏன் இந்த மார்பு இப்படி இடிக்கிறது?” ஏனிந்தக் கண்களில் நீர்?

MOD பெட்டியின் கண்ணோட்டம்:

“நான் ஒரு பெட்டி. என்னுள் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை, என்னுள் வந்த பல காகிதங்கள் ‘ரகசியம்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில உண்மையில் ரகசியங்களாக இருக்கலாம். பெரும்பாலானவைப் பெரும் உண்மைகள். ஆனால் ‘ரகசியம்’ என்ற முத்திரை, ஒரு சாதாரண உண்மையைக் கூட ஒரு ஆயுதமாக மாற்றிவிடும்”

அதிகாரியின் உள்உரையாடல்:

“சாட்சியங்களின் கொலை.” இந்த வார்த்தைகள் என் நெஞ்சில் குத்தின. அவர் சொன்னது சரிதான். நாங்கள் என்ன செய்தோம்? நாங்கள் கொலைகளைத் தடுக்கவில்லை. அதைச் சொல்ல நான் பயப்படுகிறேன். ஆனால் அது உண்மை. 1983இல் நான் இளம் வயதினன். நாங்கள் செய்திகள் கேட்டோம். ‘தேசியப் பாதுகாப்பு’ என்று சொன்னார்கள். ‘அமைதி’ என்று சொன்னார்கள்.

ஆனால் இப்போது…

இப்போது நான் கொலைகளைத் தடுக்கும் படையின் ஒரு பகுதி. ஆனால், நான் சுங்க அதிகாரி. அல்ல, இன்னும் மோசமானது. நான் கொலைகளை மறக்க வைக்கும் படையின் ஒரு பகுதி.

முதல் கொலை: அவர்களுடைய உயிர்.

இரண்டாவது கொலை: அவர்களுடைய குரல்.

மூன்றாவது கொலை: அவர்களுடைய நினைவு.

நான்காவது கொலை: அவர்களுடைய நீதி.

ஆம், நான்கு கொலைகள்.

நான் நான்காவது கொலையில் பங்கு கொள்கிறேன். நான் ‘நீதியை’ கொல்கிறேன். வெறும் கையெழுத்து மூலம். வெறும் படிவம் மூலம்.

சட்டம் சொல்கிறது: இது தவறு அல்ல. ஆனால் மனசாட்சி சொல்கிறது: இது கொலை.

03

அவருடைய பதட்டத்தைக் கண்ட அந்த உதவிப் பணியாளர், இயந்திரம்போல மிக வேகமாக அதையெல்லாம் செய்து ஒப்பத்துக்காகப் பத்திரத்தை அதிகாரிடம் கொடுக்கிறார்.

பிரிக்கப்பட்ட பொதியில் புத்தகங்களை உள்ளிட்டு, மீளவும் பொதியாக்கி,  To the MOD என்று எழுதுகிறார் உதவிப் பணியாளர்.

“ஆட்கள் மாறியிருக்கிறார்களே தவிர, ஆட்சி மாறவில்லை” என்கிறேன்.

‘அதேதான்’ என்பது போல சிரித்தார் அதிகாரி. முகத்தில் ஒரு சிநேகபாவம் தோன்றியது. “உங்களுக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்” என்றார்.

“நல்ல பதில் அல்ல. புத்தகங்கள்தான், நீதிதான் கிடைக்க வேண்டும்”

ஒப்பமிட்ட பின் ‘தடைசெய்யப்பட்டன புத்தகங்கள்’ என்று எழுதப்பட்ட பத்திரத்தை, அதிகாரியைப் பார்த்துக் கொண்டு வாங்குகிறேன்.

அந்த முத்திரையிட்ட உறையை வாங்கும்போது, என் கைகள் நடுங்கவில்லை. வரலாறு மீண்டும் தடுக்கப்பட்டதை உணர்கிறேன். ஆனால் அதிகாரியின் கண்களில், முன்பு இல்லாத ஒரு வெளிச்சம் இருக்கிறது. அவர் கடித உறையை நீட்டும்போது, அவரது விரல்கள் மெதுவாக என் கையினைத் தொடுகின்றன.  அது ஒரு தவறுதலாக, தற்செயலானதாக இருக்கலாம். அல்லது ஒரு மௌனமான உரையாடலாக இருக்கலாம். அந்தத் தொடுகையில் நடுக்கத்தை உணர்கிறேன்.

நாங்கள் வெளியேறும்போது, அவர் மெதுவாகச் சொல்கிறார், “உங்கள் புத்தகம்… அதில் பல பக்கங்கள்… மிகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது”

அந்த வார்த்தைகள், அந்த இரும்புக் கதவைத் தாண்டி வந்து, எங்களுடன் நடந்து கொண்டிருக்கின்றன.

04

“அன்றிரவு, உங்களுடைய கனவில், நூலகமும் சுங்க அலுவலகமும் ஒன்றாக மாறியிருந்தன. புத்தக அலமாரிகள் சுங்க அலுவலக கவுண்டர்களாகி விட்டன. ஒவ்வொரு புத்தகத்தின் மேலும் ‘தடை செய்யப்பட்டது’ என்ற முத்திரை. ஆனால் புத்தகங்கள் பேசிக் கொண்டிருந்தன. அவை சத்தமாகப் படித்துக் கொண்டிருந்தன. ‘நாங்கள் எரிக்கப்பட்டோம். ஆனால் எங்கள் வார்த்தைகள் மட்டும் எரியவில்லை’ என்று ஒரு புத்தகம் சத்தமிட்டது.

05

இப்படியெல்லாம் நடப்பதைப் பற்றி நீங்கள் ஆழமாக யோசித்துக் கொண்டேயிருக்கிறீர்கள். இது உங்களுடைய மனதில் கனமான ஒரு நெருப்புத் துண்டைப்போலவே கிடக்கிறது. அப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது உங்களுடைய நினைவுக்கு வந்த பதிவொன்று –

அலெக்ஸாண்டிரியாவின் பழமையான நூலகத்தை  (Library of Alexandria) பற்றி தெரியுமா உங்களுக்கு? இது எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் கி.மு 03 ஆம் நூற்றாண்டில் தாலமிக் வம்சத்தால் நிறுவப்பட்டது. ‘மௌசியோ’வின் (Mouseion) ஒரு பகுதியான இந்த நூலகம், உலகின் அனைத்து இலக்கியங்களையும் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதில் 40,000 முதல் 400,000 சுருள்கள் (scrolls) இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், தோட்டங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களும் இதில் இருந்தன. அறிஞர்களுக்கான  தங்குமிடம், வரி விலக்குகள், ஊதியத்தை எல்லாம் வழங்கியது. அறிஞர்களான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹிப்போகிரேட்டஸ் போன்றோரின் படைப்புகள் இங்கே இருந்தன. இங்குப் பழங்காலத்தின் மிக பிரபலமான சிந்தனையாளர்கள் பலர் ஆய்வுகள் செய்தனர். பெரும்பாலான புத்தகங்கள் பாபிரஸ் காகித சுருள்களாக வைக்கப்பட்டிருந்தன. இது கலைகளின் ஒன்பது தெய்வங்களான, முஸைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கி.பி. 03 ஆம் நூற்றாண்டில் நடந்த உள்நாட்டுப் போரின்போது முக்கிய நூலகம் அழிந்தது. பின்னர், அதன் துணை நூலகமான செராபியம் (Serapeum) கி.பி 391 இல் கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது.

இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிவுக்கு உள்ளாயின. அதன் அழிவானது கலாச்சார அறிவு இழப்புக்கான ஒரு சின்னமாக மாறியது. இதனுடைய முழுமையான அழிவு கி.மு. 48 இல் ஜூலியஸ் சீசரின் இராணுவத்தால் மற்றும் கி.பி 270 இல் ஆரேலியனின் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம். எகிப்தை முஸ்லீம்கள் வெற்றி கொண்ட காலமான கி.பி. 642 இல் (அல்லது அதற்குப் பிறகு) நூலகம் இறுதியாக அழிந்தது.

06

இந்தக் கதையைக் கொந்தளிப்போடு நீங்கள், உங்களுடைய மகளுக்குச் சொன்னபோது, அவள் கேட்டாள், “வரலாற்றின் மனநோயாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“அவர்கள் வரலாற்றைக் கண்டு அச்சமடைகிறார்கள் மகளே!”

00

https://vallinam.com.my/version2/?p=10833

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.