Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதகை: காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலி இறப்பு - சிகிச்சை அளிக்காதது ஏன்?

புலி

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வக்குமார்

  • பிபிசி தமிழ்

  • 7 ஜனவரி 2026, 13:36 GMT

    புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

உதகை அருகில் காயத்துடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த புலி, சிகிச்சை தரப்படாததால் உயிரிழந்தது.

இயற்கையான நிகழ்வு என்பதன் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்ததாக வனத்துறை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

புலிக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து, சமூக ஊடகங்களில் பலவிதமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இரு புலிகளுக்கு இடையில் நடந்த 'ஏரியா' சண்டை!

உதகை அருகேயுள்ள போர்த்தி ஆடா என்ற கிராமத்தையொட்டியுள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று ஒரு புலி படுத்துக்கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அந்த புலி, வேறெங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்துள்ளது. தகவல் கேள்விப்பட்டு, வனத்துறையினர் அங்கு வந்தனர். டிரோன் மூலமாக புலியின் நடமாட்டத்தைப் பார்த்தபோது, அதன் முன்னங்கால் ஒன்றில் பலத்த காயமடைந்திருப்பதால் நடக்க முடியாமலிருப்பதைக் கண்டறிந்தனர்.

அந்தத் தேயிலைத் தோட்டத்துக்கு மக்கள் வந்து செல்லும் நிலையில், அந்தப் புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் அந்த புலியைப் பிடிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். கோபமடைந்த சிலர், 'அந்தப் புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும், அதுவரை அதற்கு உணவாக இறைச்சி வழங்கவேண்டுமென்றும்' ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்தனர்.

புலியைப் பிடிப்பதற்கு வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறையினர், நேரடியாகவும், டிரோன் மூலமாகவும் புலியின் நிலையை கண்காணித்து வந்தனர். அங்கிருந்து வேறெங்கும் நகராமலிருந்த புலி, கடந்த 5 ஆம் தேதியன்று உயிரிழந்தது. அதே இடத்தில் அந்த புலிக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அதன்பின்பு புதைக்கப்பட்டது.

புலிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், ''அந்த புலி மற்றொரு புலியுடன் சண்டையிட்டபோதுதான் காயமடைந்திருந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.டி.சி.ஏ.) வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, இதுவொரு இயற்கையான நிகழ்வு என்பதால் அந்த புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்தோம்.'' என்றார்.

வனத்துறையினரின் இந்த விளக்கம், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

காயமடைந்துள்ள ஒரு புலிக்கு சிகிச்சை அளிக்காமலிருக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறை அறிவுறுத்துகிறது என்றால், புலிகளை கையாள்வது தொடர்பாக வேறு என்னென்ன வழிகாட்டுதல்கள் உள்ளன என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் 248 பக்கங்களுக்கு மிக விரிவாகவுள்ளது. புலிகளைக் கையாள்வது குறித்து அதிலுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் மூத்த ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் சிலர் பிபிசி தமிழிடம் விளக்கினர்.

வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் இந்த கேள்வி–பதில் தொகுக்கப்பட்டுள்ளது.

புலி

சிகிச்சை அளிக்காமல் இறக்கும் வரை கண்காணித்தது ஏன்?

கேள்வி: உதகை அருகே காயம்பட்டிருந்த புலியை பிடித்து சிகிச்சை அளிக்காமல் இறக்கும் வரை கண்காணித்ததற்கு காரணமென்ன...இயற்கையாக நடந்த சண்டையில்தான் இந்த புலி காயமடைந்தது என்பது எப்படி உறுதிப்படுத்தப்பட்டது?

''அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று சண்டை நடந்துள்ளது. அந்த சண்டையில் படுகாயமடைந்த பின்பே அந்த புலி, தேயிலைத் தோட்டப்பகுதிக்கு வந்துள்ளது. இது இயற்கையான நிகழ்வு என்பதால், அதற்கு சிகிச்சை அளிக்காமல் அதனால் மக்களுக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் கண்காணிக்க வேண்டுமென்பதே என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் நெறிமுறை'' என்கின்றனர் வனத்துறையினர்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், ''அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் எல்லையை வரையறுப்பதில் சண்டை நடந்துள்ளது. நாங்கள் அந்த சூழல் காரணிகளை ஆய்வு செய்து மாதிரிகளைச் சேகரித்து இரு புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்துள்ளதை உறுதிசெய்துள்ளோம். அதில் புலியின் 2 முன்னங்கால்களும் மிகக்கடுமையாக பாதிப்படைந்திருந்தன. இறந்த ஆண் புலிக்கு 7 முதல் 8 வயது இருக்கும். அதை விட வயது முதிர்ந்த ஒரு புலி இதைத் தாக்கியிருக்கலாம். '' என்றார்.

''அதன் உடலில் வேறு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்பது உடற்கூராய்வில் தெரியவந்தது. இயற்கையாக நடந்த சண்டையில்தான் காயம் ஏற்பட்டது என்பதால்தான் சிகிச்சை தரவில்லை. என்.டி.சி.ஏ. கூறியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையின்படி அதைக் கண்காணித்தோம். வேறு ஏதாவது விபத்து போன்ற மனித செயல்களால் காயம் ஏற்பட்டிருந்ததாகத் தெரிந்திருந்தால் நிச்சயம் சிகிச்சை அளித்திருப்போம்.'' என்றார்.

இறந்து போன புலிக்கு, சண்டைக்குப் பின் நிறைய ரத்தம் வெளியேறியதுடன் 3–4 நாட்களாக எதுவும் உண்ணவில்லை என்று உடற்கூராய்வில் தெரியவந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

அந்த புலி இரையை அடிப்பதற்கு உதவும் முன்னங்கால்கள் இரண்டும் முற்றிலும் சேதமடைந்திருந்ததாகக் கூறிய வனத்துறையினர், அதற்கு மேல் அந்த புலியால் வேட்டையாடவும் முடியாது என்ற தகவலையும் பிபிசியிடம் பகிர்ந்தனர்.

புலி பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியல் ஒன்றில் (schedule 1 animals) இருக்கும் உயிரினம் என்பது போலவே, கடமானும் அதே பட்டியலில் உள்ள உயிரினம்தான் என்று கூறிய மாவட்ட வன அலுவலர், ஒரு புலி அடித்து கடமான் காயப்பட்டிருந்தாலும் அதற்கு சிகிச்சை தரமுடியாது என்றார். அப்படிச் செய்வது காடு மற்றும் காட்டுயிர்களின் உணவுச் சங்கிலியை அறுக்கின்ற ஒரு செயலாக இருக்குமென்கிறார் அவர்.

நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம்

படக்குறிப்பு,நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம்

'தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு மட்டுமே அதிகாரம்'

கேள்வி: இதுபோன்று காயமடைந்த ஒரு புலிக்கு சிகிச்சையளித்து, வன உயிரினப் பூங்காவில் வைத்து பாதுகாத்திருக்க முடியாதா?

இதற்கு பதிலளித்த கெளதம், ''அதற்கான தேவையும், அவசியமும் எழவில்லை'' என்றார்.

''புலிகளைப் பிடித்து காட்டுக்குள் விடுவதற்கும் தலைமை வன உயிரினக் காப்பாளரின் அனுமதி பெற வேண்டுமென்பதே என்.டி.சி.ஏ. தரும் வழிகாட்டுதல். அதேபோன்று பிடித்து வன உயிரினப் பூங்காவுக்குக் கொண்டு செல்லவும் அவரின் அனுமதி பெறவேண்டும்.'' என்றார் கெளதம்.

உதகையில் காயமடைந்து 2 நாளாக ஒரே இடத்தில் இருந்த புலிக்கு சிகிச்சை அளிக்காது ஏன்?

'சட்டமே சொல்கிறது'

கேள்வி: இதே புலி ஓர் ஊருக்குள் நுழைந்திருந்தால் அதைப் பிடிக்காமல் கண்காணிக்க முடியாது என்பதால், அப்போது வனத்துறை என்ன செய்திருக்கும்? இதுகுறித்து என்.டி.சி.ஏ. கூறும் வழிகாட்டுதல் என்ன?

''என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் என்பது எல்லாப்பகுதிகளுக்கும் ஒரே மாதிரியானதுதான். அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் முதலில் புலியை காட்டுக்குள் துரத்துவதற்கு முயற்சி எடுக்கப்படும். முடியாதபட்சத்தில் மாநிலத்தின் தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு (Chief Wildlife Warden) முறைப்படி விண்ணப்பித்து, அதை கூண்டு வைத்து அல்லது மயக்க மருந்து செலுத்திப்பிடிப்பதற்கு அனுமதி பெற்று பிடிக்கப்படும்.'' என்றார் கெளதம்.

கேள்வி: ஒரு புலியால் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தாலும் அந்த நேரத்திலும் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெறவேண்டியது அவசியமா?

இதுகுறித்து விளக்கிய பெயர் கூற விரும்பாத மூத்த ஐ.எஃப்.எஸ். அதிகாரி, ''வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் பட்டியலில் உள்ள புலி உள்ளிட்ட வனவிலங்குகளைப் பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு மட்டுமே உள்ளது. '' என்றார்.

''ஒரு புலி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கே வந்துவிட்டாலும் தலைமை வன உயிரினக் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல் அதைப் பிடிக்கவோ, சுடவோ கூடாது என்பதே என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் நெறிமுறை. எந்த சூழ்நிலையாக இருந்தால் வன உயிரினக் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டியதும் கட்டாயம். இதை வழிகாட்டுதல் விதிகளில்லை; வன உயிரினப் பாதுகாப்புச் சட்டமே சொல்கிறது. '' என்றார் அவர்.

புலி

படக்குறிப்பு,கூண்டு வைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட ஒரு புலி

கேள்வி: ஒரு புலியைப் பிடிப்பதற்கு எந்தெந்த சூழ்நிலைகளில் அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது?

''வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு புலியால் மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாகக் கருதினால் அதைப் பிடிக்கவும், பிடித்து இடமாற்றம் செய்யவும் அல்லது சுடவும் தலைமை வன உயிரினக்காப்பாளரால் அனுமதியளிக்க முடியும். அதேபோன்று அறிவியல்பூர்வமான காரணங்களுக்காக ஒரு புலியைப் பிடிப்பதாக இருந்தாலும் அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அதிகாரத்தை அவர் வேறு யாருக்கும் பகிர்ந்தளிக்க முடியாது. மாவட்டம் அல்லது மண்டல அளவிலான அதிகாரிகளுக்கு இந்த அதிகாரம் தரப்பட்டிருந்தால், சூழ்நிலை அல்லது நிர்பந்தத்துக்கேற்ப புலிகளைப் பிடிக்கவும் கொல்லவும் அனுமதியளிக்கும் அபாயம் இருப்பதால்தான் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இத்தகைய வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது என கூறினார் ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஒருவர்.

இயற்கையாக இறக்கும் காட்டுயிர்களை காப்பாற்றினால் என்னவாகும்?

கேள்வி: காயமடைந்த புலியை சிகிச்சையளித்து மீண்டும் காட்டுக்குள் விட வேண்டியதில்லை என்ற முடிவை எதன் அடிப்படையில் தலைமை வன உயிரினக்காப்பாளர் எடுக்கிறார்?

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே, ஒரு குறிப்பிட்ட விலங்கைப் பாதுகாப்பது குறித்த முடிவை தலைமை வன உயிரினக் காப்பாளர் எடுக்கிறார் என்று வனத்துறையினர் விளக்குகின்றனர்.

''நீலகிரி மாவட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை நன்றாகவுள்ளது. மாவட்டம் முழுவதும் 250–300 எண்ணிக்கையிலான புலிகள் இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அப்படியிருக்கும்போது, இதுபோன்று இயற்கை நிகழ்வில் காயம் ஏற்படும் புலிகளையும் காப்பாற்றினால் இயற்கையாக நடக்கும் புலிகளின் பிறப்புக்கும், இறப்புக்குமான விகிதாச்சாரம் மாறுபட்டு, புலிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிடும். அதனால் இது தேவையற்றது.'' என்றார் கெளதம்

கேள்வி: யானை, புலி போன்ற காட்டுயிர்கள் பெருமளவில் நோய் அல்லது காட்டுக்குள் உள்ள சூழல் பாதிப்பில் இறக்க நேரிட்டால் அப்போதும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் கையாளப்பட வேண்டுமா?

இதற்கு பதிலளித்த வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ''சாலை விபத்து, வேட்டை, மின்சார வேலி, வெடி போன்ற மனித செயல்பாடுகளால் காட்டுயிர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அது நிச்சயம் கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் காட்டுக்குள் இயற்கையாக நிகழும் காட்டுயிர்களின் மரணங்களைத் தடுக்கக்கூடாது. '' என்றார்.

உதாரணமாக 300 யானைகள் வாழும் ஒரு காட்டில் ஆண்டுக்கு 10 சதவீதம் யானைகள் இயற்கையாக இறக்கும் எனும்போது, அவற்றுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றப்படும்பட்சத்தில் 10 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடும் என்பதை விளக்கும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், அப்படி அதிகரித்தால் காடு அழியும் ஆபத்து இருப்பதாக கூறினர்.

ஜிம்பாப்வே போன்ற தென் ஆப்ரிக்கா நாடுகளில் காடுகளின் வளம் பெருமளவில் குறைந்துவிட்ட நிலையில், காட்டுயிர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை அழிக்கும் முறை இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெயர் கூற விரும்பாத ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஒருவர், ''காட்டைக் காப்பதா, காட்டுயிர்களைக் காப்பதா என்றால் காட்டைக் காப்பதுதான் வனத்துறையின் முதல் பணி. காட்டுயிர்களைக் காக்க வேண்டுமென்று, இயற்கையாக, நோய் வாய்ப்பட்ட காட்டுயிர்களுக்கு எல்லாம் காட்டுக்குள் சென்று சிகிச்சை அளிக்க வனத்துறை முயற்சி எடுத்தால் அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி காடே காலியாகிவிடும். காடழிந்தால் அதன்பின் காட்டுயிர்களும் அழிந்துவிடும். அதனால் காட்டுயிர்கள் குறித்த புரிதல் மக்களுக்கு வேண்டும்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1evz9dvze9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.