Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் புயல் உருவாகுமா? நிலவரம் என்ன?

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,MET.DEPARTMENT (SRI LANKA)

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 52 நிமிடங்களுக்கு முன்னர்

திட்வா புயலின் பாதிப்புகளில் இருந்து இலங்கை மக்கள் இன்னமும் மீண்டு வராத நிலையில், நாட்டில் மீண்டுமொரு அனர்த்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாக வானிலை அவதானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையை அண்மித்துள்ள வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை காரணமாகவே இந்த அனர்த்த அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தாழமுக்க நிலைமையானது, பொத்துவில் பகுதியில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (ஜனவரி 08) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதைக் குறிப்பிட்டார்.

''இலங்கையை அண்மித்து ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமையானது, தற்போது வலுவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த தாழமுக்கமானது, இலங்கையின் கிழக்கு கரையோர பகுதியான பொத்துவில் பிரதேசத்தில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தென்கிழக்கு திசையாக நிலைகொண்டுள்ளது'' என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க குறிப்பிடுகின்றார்.

இந்தத் தாழமுக்கமானது, படிப்படியாக கிழக்கு கரையோரத்தை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறுகின்றார்.

''இது தாழமுக்கமாகவே தற்போது வரை காணப்படுகின்றது. இன்று முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கெனவே கூறியிருக்கின்றோம். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலேயே அதிகளவான மழை வீழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானில் மேக மூட்டங்கள் காணப்படும். ஏனைய பகுதிகளில் 50 முதல் 75 மீல்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சி இன்றைய தினத்தில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வானிலை நிலைமையால், நாட்டிற்குள் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,MET.DEPARTMENT (SRI LANKA)

இந்தத் தாழமுக்கமானது, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு திசையாகப் பயணித்து கிழக்கு கரையோரப் பகுதியை அண்மிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது, எதிர்வரும் 12 மணிநேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான காலி வரையான கரையோர பகுதிகளில் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்படுகின்றது.

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கரையோரப் பகுதிகளிலும் சில சந்தர்ப்பங்களில் இடைக்கிடை இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகமானது 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், நாட்டைச் சூழவுள்ள சில கரையோரப் பகுதிகளில் கடல் அலை 2 முதல் 3 மீட்டர் வரை உயர்ந்து, சற்று சீற்றத்துடன் காணப்படும் எனக் கூறப்படுகின்றது.

இந்தக் காலப்பகுதியில் கடல்சார் தொழிலாளர்கள் கடல் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரித்து வீசுகின்றமையினால், மரங்களின் கிளைகள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், கூரை தகடுகள் காற்றில் அள்ளுண்டு செல்லும் அபாயமும் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,DEPARTMENT OF INFORMATION

படக்குறிப்பு,வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க

தாழமுக்கம் புயலாக மாறுமா?

இலங்கையின் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமையானது, புயலாக மாறும் நிலைமை தற்போதைய சூழ்நிலையில் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.

''இந்தத் தாழமுக்க நிலைமையானது, தற்போதுள்ள ஆய்வுகளின் ஊடாகப் பாரிய புயலாக மாறும் நிலைமை ஏற்படும் சாத்தியம் இல்லை எனத் தென்படுகின்றது. அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. எனினும், வலுவான தாழமுக்கமாக நாட்டின் நிலப் பரப்பிற்குள் நாளைய தினத்தில் இது பிரவேசிக்கும் பட்சத்தில், மழையுடனான வானிலையில் கடுமையான அதிகரிப்பு ஏற்படும்'' என அவர் கூறுகின்றார்.

கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் சுமார் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறு கணிப்பிடப்பட்டுள்ள 150 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியானது, சில சந்தர்ப்பங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியாகப் பதிவாகக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மீல்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி நாளைய தினத்தில் பதிவாகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,Getty Images

நாட்டின் நிலப்பரப்பிற்குள் இந்தத் தாழமுக்கம் பிரவேசித்ததை அடுத்து, நாளை மறுதினம் (ஜனவரி 10) முதல் மழை சற்று குறைவடைந்து பெய்யும் என அவர் கூறுகின்றார்.

எனினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை அன்றைய காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியும் என அவர் எதிர்வு கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஜனவரி 11ம் தேதிக்குப் பின்னர் இந்தத் தாழமுக்கம் முழுமையாக வலுவிழந்து, பாதிப்புகள் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.

வெள்ளப் பெருக்கு அபாயம்

இலங்கையிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில், 25 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் விஞ்ஞான மற்றும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவிக்கின்றார்.

மத்திய தரத்திலுள்ள 24 நீர்த்தேக்கங்களிலுள்ள வான் கதவுகள் திறக்கப்பட்டு, நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

''மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதுருஓயா மற்றும் முந்தனியாறு நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. யாங்ஓயா மற்றும் பதவி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிக்கப்பட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, நீர் விடுவிக்கப்பட்டு வருகின்றன.'' என்கிறார் எல்.எஸ்.சூரியபண்டார.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,DEPARTMENT OF INFORMATION

படக்குறிப்பு,நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் விஞ்ஞான மற்றும் இடர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார

''குறிப்பாக பராக்கிரம சமுத்திரம், கவ்டுல்ல நீர்த்தேக்கங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருகின்றோம். வானிலை அவதானிப்புகளின் பிரகாரம், அதிகளவிலான மழை வீழ்ச்சி ஒரே சந்தர்ப்பத்தில் பதிவாகும் பட்சத்தில், நீர்மட்டம் சடுதியாக அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன" என எல்.எஸ்.சூரியபண்டார குறிப்பிடுகின்றார்.

அதனால், "அம்பாறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால், குறித்த பகுதிகளில் நீர்நிலைகளை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,NBRO

படக்குறிப்பு,தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர

மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையை அண்மித்து நிலைகொண்டுள்ள தாழமுக்க நிலைமையை அடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவிக்கின்றார்.

இதன்படி, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதிக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தன்தாஹின்ன, வலபனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, மாத்தளை, மொனராகலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை: வங்காள விரிகுடாவில் உள்ள தாழமுக்கம் புயலாக மாறுமா? நிலவரம் என்ன?

பட மூலாதாரம்,DEPARTMENT OF INFORMATION

படக்குறிப்பு,இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட

அவசர அனர்த்தங்களின் போது என்ன செய்வது?

திடீர் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில், அது குறித்து உடனடியாக அறிவிப்பதற்காக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற தொலைபேசி இலக்கத்தை 24 மணிநேரமும் செயற்பாட்டில் வைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவிக்கின்றார்.

''அவசர அனர்த்த மத்திய நிலையம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தின் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் 80 குழுக்களும், கடற்படையின் 16 மீட்புக் குழுக்களும், விமானப்படையின் 66 மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில், அதில் பயணிக்கக்கூடிய வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

அவசர நிலைகளில் உதவிகளைச் செய்வதற்காக விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளும் வகையில் தம்முடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்'' என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவிக்கின்றார்.

இலங்கையில் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cevnxerddy1o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி அம்பாறையில்

Jan 9, 2026 - 07:43 AM

24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி அம்பாறையில்

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 

அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (9) காலை தெரிவித்தார். 

அதேநேரம் நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் 10 மி.மீ. க்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது. 

இதன் காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். 

இருப்பினும், 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 28 நீர்த்தேக்கங்களும், அதேபோல் 22 நடுத்தர அளவிலான குளங்களும் இன்னும் வான் பாய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

யான் ஓயா மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எனினும் எந்தவொரு ஆற்றுப் பள்ளத்தாக்கிலும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் வகையில் நீர் வெளியேற்றப்படவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmk68s3r403pdo29n1e0bmg4g

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்கிழக்கு கடலில் நிலைகொண்டுள்ள சக்தி மிக்க தாழமுக்கம் : இன்று மாலை இலங்கையின் கரையை நோக்கி நகரும் சாத்தியம்!

09 Jan, 2026 | 07:06 AM

image

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று அதிகாலை நான்கு மணியளவில் மட்டக்களப்புக்கு தென்கிழக்காக சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் சக்தி மிக்க தாழ் அமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேலும் தீவிரமடைவதுடன் இன்று மாலையளவில் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையாக இலங்கையின் கரையை நோக்கி வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். கண்டி, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் 50 - 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, கிழக்கு , வடமத்திய, மத்திய ,வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக் கூடும். காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சக்தி வாய்ந்த தாழ் அமுக்கம் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 km தொலைவில் நிலை கொண்டுள்ளது.

அதன்படியினால் நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு  மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிலாபம் தொடக்கம் மன்னார், ‌காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 35 - 45 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.  காற்றின் வேகமானது மணிக்கு 60 - 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பான நிலையில் இருந்து மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

https://www.virakesari.lk/article/235567

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.