Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது : சயந்தன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

thisaionpathu.jpg?resize=1024%2C754&ssl=

கேள்வி: ஆறாவடு வெளியாகி சில வருடங்கள் கழித்து, ஆதிரை வெளியாகியது. அதன் பின்னர் கணிசமான காலம் கழித்து அசேரா, மீண்டும் நீண்ட காலம் கடந்து ‘திசை ஒன்பது’ வெளியாகிறது. நாவல்கள் எழுதப்படுவதற்கு இடையிலான பருவங்கள் அதிகமாகவே உங்களுக்கு இருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலங்கள் உங்களுக்கு எவ்வாறு கழியும், என்ன வகையான தொந்தரவுகளை எதிர்கொள்வீர்கள் ஒரு எழுத்தாளராக?

பதில்: நாவல்கள் மட்டுமல்ல, பொதுவாக நான் எழுதுவதே அதிக கால இடைவெளியைக் கொண்டிருக்கிறது. கடைசியாக பூரணம் சிறுகதையை 2019இல் எழுதிய பிறகு இன்னொரு சிறுகதையை இன்னமும் எழுதவில்லை. நாவல்களுக்கிடையிலும் கிட்டத்தட்ட 5 ஆண்டுகால இடைவெளி உண்டு. இடைப்பட்ட காலங்களில் தொந்தரவெல்லாம் இல்லை. எழுத்தை தலையிலே சுமந்தபடி இறக்கிவைக்க முடியாத அவஸ்தையிலும் தத்தளிப்பிலும் சிக்கினேன், அதை உருவாக்கும் வேதனையில் உழன்றேன் என்றெல்லாம் சொல்லும்படியாக எழுத்தை நான் ‘அந்தளவுக்கு’ ரொமான்டிசைஸ் செய்யவில்லை. அப்ப நான் ஏன் எழுதுகிறேன்… என்றால் எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எழுதுகிறேன். அதை எனக்குப் பிடித்த மாதிரி எழுதுகிறேன். வாசிப்பவர்களுக்கும் பிடித்தால் மகிழ்கிறேன். அவ்வளவுதான். எழுத்தென்றல்ல, எல்லா இலக்கியச் செயற்பாடுகளும் எனக்கு விருப்பமானவையே… எழுதாத நேரங்களில் அப்படியொன்றில் ஈடுபடுவேன். வாசிப்பேன். மொழிபெயர்ப்புகளில், குறிப்பாக ஆபிரிக்க எழுத்துகளில் ஆர்வம் உண்டு. இப்ப கொஞ்சக்காலமாக தமிழிலிருந்து சிங்களத்துக்குக் கொண்டுசெல்கிற வேலைகளை விரும்பிச் செய்கிறேன். சிங்களப் புத்தகங்களைப் பதிப்பிக்கிறேன். எதுவுமில்லையென்றால் ஆகக் குறைந்தது அகழ் இணையத்தின் லேஅவுட் டிசைனை மாற்றுகிறேன் பேர்வழி என்று எதையாவது நோண்டுவேன். அதுவும் ஒருவகையில் இலக்கியச் செயற்பாடுதானே…நாவல்களுக்கிடையில் ஐந்து ஆண்டுகள் என்று சொன்னேன்…அதில் எழுதும் காலமும் அடக்கம். ஆதிரைக்கு மூன்று ஆண்டுகள். திசை ஒன்பதுக்கு இரண்டு ஆண்டுகள். அப்படிப் பார்த்தால் நான் கொஞ்சம் ஸ்லோதான். அதுவொன்றும் பெரிய பிரச்சனை இல்லைத்தானே..

கேள்வி: ஒவ்வொரு நாவலுக்கும் நீங்கள் பயன்படுத்தும் மொழி வித்தியாசமானது. ஆறாவடு வில் இருந்த துள்ளலான நடை, ஆதிரையில் இருக்காது. அஷேராவில் வேறு மாதிரி. திசை ஒன்பது நாவலில், மீண்டும் ஆறாவடுவில் பார்த்த நடையை உணர இயல்கிறது. நாவலின் கரு, மொழியைத் தேர்வு செய்கிறதா? அல்லது மொழிக்காக நாவலின் கருக்களைப் பெறுகிறீர்களா?, சுருக்கமாகக் கேட்டால், வடிவத்தை நோக்கி நீங்கள் செல்கிறீர்களா அல்லது வடிவம் உங்களை நோக்கி வருகிறதா?

பதில்: பார்ப்பதற்கு அப்பாவி போல இருக்கும் இவர்… என்றுதான் தொடங்க வேண்டும். உங்களுக்கே தெரியும், கேலியும் கிண்டலும், நக்கலும் நையாண்டியும் counter பகிடிகளும்தான் என்னுடைய இயல்பு. ஆறாவடுவில் அது அழகாக வெளிப்பட்டது. ஆறாவடுவை புறவயமான சம்பவங்களுக்கூடாக, பாத்திரங்களின் அகத்தைத் தொடாமல், அதை விசாரணை செய்யாமல் எழுதி இருந்ததால் அந்த மொழி பொருத்தமாக வசப்பட்டிக்கக் கூடும். முகத்துக்கு நேரே நீட்டப்பட்டிருக்கும் துவக்கிலிருந்து சீறி வெளியேறும் சன்னம் நெற்றியைத் தொடுமுன்னர் மனதில் அலைஅலையென எழும் எண்ணங்களை பத்துப் பக்கங்களுக்குக் குறையாமல் எழுதலாம் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அதற்குப் பிறகு ஆதிரை. அது மாபெரும் துயரக்கதை. ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் கதைகளைச் சொல்லும்போது சிரித்துவிளையாட முடியாது. அது அறமும் இல்லை. அதேபோல அஷேராவும் பிறழ்வடைந்த மனங்களின் கதை. ஆங்காங்கே கறுப்புப் பகிடிகள் இடப்பெற்றாலும் அந்த மொழியும் தீவிரமானது. திசை ஒன்பது கதையாகத் திரண்டபோதே, அது கோர்த்துச் செல்கிற சம்பவங்கள் கற்பனையில் விரிந்தபோதே, இதற்குத் தீவிரமற்ற கொஞ்சம் பகிடியான மொழி போதும் என்றும் தோன்றிவிட்டது. ஆழத்தில் எங்கோ ஒரு நெஞ்சடைப்பை உணரமுடிந்தாலும் திசை ஒன்பது பெரும் துயரோ கடும் வலியோ கொண்ட ஒன்றல்ல. அதே நேரம், துப்பாக்கிச் சன்னம் நெற்றியைத் தொடுவதற்கிடையில் பத்துப் பக்கங்களுக்கு மனம் அலைபாயவும் செய்கிற கதை. இப்போதெல்லாம் புறச் சம்பவங்களை விட்டுவிட்டு மனித மனங்களை நெருங்கி ஆராய்ந்து எழுதுவது கிளர்ச்சியாக இருக்கிறது. கதை மாந்தர்களுடைய மூளையை நான் எழுத்தால் துப்பறிவதுபோன்ற ஓர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

இன்னொரு விதத்தில் ஆதிரைக்கும் அஷேராவுக்கும் பிறகு குண்டு வெடிக்காத கதையொன்றை எழுதவும் விரும்பியிருந்தேன். அதனாலும் திசை ஒன்பதை எழுதினேன். உங்களுடைய கேள்விக்கான பதில் – எழுதும் கருவே மொழியைத் தெரிவு செய்கிறது. அப்புறம் மொழியிலும் வடிவத்திலும் உத்திகளிலும் ஒவ்வொரு நாவல்களிலும் வேறுபட்டிருப்பது, ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மையைக் கொடுக்குமல்லவா…

WhatsApp-Image-2026-01-10-at-21.39.29.jp

சயந்தன்

கேள்வி: திசை ஒன்பது நாவலின் கரு எப்படி உருவாகியது? அதன் வீச்சை விரிவாக்க என்ன வகையான தயாரிப்புகளைச் செய்தீர்கள்?

பதில்: ஒரு தமிழ் இளைஞரை தற்செயலாகச் சந்தித்ததுதான் நாவலுக்கான தொடக்கம். அதற்கு முன்னிருந்தே, ஒரு கதையை இலங்கைக்கு வெளியே எழுதினால்தான் என்ன என்று மனது அசைபோட்டுக்கொண்டே இருந்தது. அஷேராவில் அதை முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என் திட்டத்தையும் மீறி அது ஈழத்துக்குப் போய்விட்டது. ஆகவே, மேற்சொன்ன தற்செயல் சந்திப்பு ஒரு முழுமையான கதைப்படத்தை இலங்கைக்கு வெளியே எனக்குள் வரைந்தது. எழுதத் தொடங்கிவிட்டேன். அதற்குப் பிறகு எழுத்துக் கோரிய தயாரிப்புக்களைச் செய்தேன். அது பெருமளவுக்கு நிலவரைபியல் தொடர்புபட்டதுதான். பிறகு கதையின் மையத்துடன் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத உலகளாவிய புவியியலும் வரலாற்றுத் துன்பங்களும் இயல்பாக இணைந்தன. முக்கியமான ஒரு விஷயம்.

கேள்வி: ஆதிரை நாவலில், நிலப்பரப்பு சார்ந்த சித்தரிப்பில், மிக நுண்மையான அவதானங்கள் திரண்டு வந்தன – மரம், செடி, பறவைகள் என்பன துல்லியமக உள்வந்தன. திசை ஒன்பது, முழுக்க ஐரோப்பாவைச் சுற்றி வருகின்றது. இங்கே அதே வகையான துல்லியத்தைக் கொண்டுவருவதற்குக் கடும் சவால்கள் இருந்தனவா?

பதில்: ஆதிரை பற்றிய உங்களுடைய அவதானங்களைச் சொன்னது, சந்தோசம். தெரிந்த நிலத்தை எழுதுவதற்கும் தெரியாத நிலத்தை எழுதுவதற்கும் சவால்கள் உண்டுதானே.. இடைவெளிகள் இருக்கும்தானே. அவற்றை புனைவால் இட்டு நிரப்புவதால்தானே புனைவெழுத்தாளர் எனப்படுகிறோம். உக்ரேனையும் ரஷ்யாவையும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன். நாவலில் இரண்டு பாத்திரங்களாகக் கூடவே வருகிற குளிரையும் இருளையும் எழுதுவதற்கு எனக்குச் சிரமமாகவே இருக்கவில்லை. அந்த இரண்டும் இங்கே ஐரோப்பாவிலே என்னைக் கொல்லும் சனியன்கள். அப்புறம், பரீட்சயம் இல்லாத நிலத்தை எழுதுவதில் ஒரு நல்வாய்ப்பும் இருக்கிறது. அந்த நிலத்தை, சூழலை முதலில் நமக்குள் இழைத்து இழைத்து கற்பனையில் உருவாக்க வேண்டியிருக்கும். அது எதையும் தவறவிடமால் எழுதுவதற்கு உதவும். ஆறாவடு எழுதியிருந்த சமயத்தில் ஒரு விமர்சகர், “அளவெட்டியில் நீங்கள் சொன்ன இடத்தில் மதிலே இல்லை. வேலிதான் இருக்கிறது” என்று சொன்னார். அளவெட்டியைத் தெரியாதவர்களுக்கு அங்கே ஒரு மதில் இருந்தது என்று நம்பப்பண்ணுவதுதானே புனைவின் வெற்றி.

கேள்வி: கதையின் மையப்பாத்திரம், இத்தனைத் தடைகளைக் கடந்து புலம்பெயர்வதற்கு பின்னுள்ள காரணத்தை, அவனது தேசிய அடையாளத்தின் ஒரு அங்கமாக மட்டும் நாம் குறுக்கிக்கொள்ள இயலுமா?

பதில்: நாங்கள் புலம்பெயர்வதற்கு நிறையக் காரணங்களைச் சொல்கிறோம். போர், உயிர் அச்சம் இந்த மாதிரி.. யோசித்துப்பார்த்தால் இது எதுவுமே இல்லாமல் கூட.. “நான் எனக்குப் பிடித்த ஒரு வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். அவ்வளவுதான்” என்பதற்காகக் கூட எவரொருவரும் புலம்பெயரலாம் என்றே தோன்றுகிறது. ஒரு பொறியியலாளர் புலம்பெயர்வதைப்போல.. ஒரு டொக்ரர் புலம்பெயர்வதைப்போல.. எவரொருவரும் நானும் புலம்பெயரப் போகிறேன் என்று ஆசைப்படுவதில் தப்பிருக்குமா என்ன? இருக்காது. அப்படிப்பட்ட ஆசையில் ஒருவருடைய தேசிய அடையாளம் என்ன செல்வாக்குச் செலுத்துகிறது என்பதுதான் கதை.

கேள்வி: சமகாலத்தில் வெளியாகும் ஈழ நாவல்கள், பெரும்பாலும் நினைவு கூர்தலை அடிப்படையாகக் கொண்டவை என்று கூடச் சொல்லலாம். சமகாலத்தில் இருந்து விலகி பத்து வருடங்கள் தொலைவிற்குச் சென்றே கதைகள் ஆரம்பிக்கின்றன அல்லது நிகழ்கின்றன. திசை ஒன்பது சமகாலத்தில் உள்ளது. உலகம் முழுவதும் எழுந்து வரும் வலது சாரிய எழுச்சி, குடியேற்றம் மற்றும் அகதிகளுக்கு எதிரான மனநிலை, என்று பல்வேறு தரப்புகளை அணுகுகிறது. அதில் அதிகம் சுவாரசியம் தருவது, பொதுவாக அகதிகள் என்று நாம் சுருக்கினாலும், எந்த நாட்டில் இருந்து, எந்த நிறத்தில் இருந்து வரும் அகதி என்பதற்கு ஏற்ப வரவேற்பு மாறுபடுகின்றது என்ற நுட்பமான இடத்தை நாவல் பிரதானமாக தொடுகிறது. இந்த நாவலின் அடிப்படை conflict இதுதான் என்று தோன்றுகிறது. ஏற்கிறீர்களா?

பதில்: ஏற்கலாம். ஆயினும் அடிப்படை என்று பார்த்தால் மனிதர்களுடைய அச்சமும், தப்பியோடும் விருப்பும் மரியாதைக்குரியது, மதிக்கப்பட வேண்டியது என்பதுதான். குழந்தை வீரர்களின் கதைகள் மட்டுமல்ல வளர்ந்த கோழைகளின் கதைகளும் பாடப்படவேண்டியவை. அவர்களுடைய ஓட்டத்தில் குறுக்கிடும் (அகதிகள் விவகாரத்தில்) ஐரோப்பிய மனநிலை என்றவாறாக ஒரு கோட்டை நாம் வரையலாம்.

கேள்வி: ஈழநாவல்கள் பெரும்பாலும் ஒரு பெரிய நாவலின் தனித் தனி அத்தியாயங்களாக மதிப்பிடப்படுகிறன. மதிப்பிடத்தக்க மாதிரியே அமைந்தும் விடுகின்றன. இந்தச் சவாலை மீறி கதை சொல்வது எப்படி?

பதில்: நான் தனிப்பட இதற்கு வெளியே வரவேண்டுமென்று விரும்புகிறேன்தான், ஆதிரையை எழுதிவிட்டு அப்படி நினைப்பதும் தகும். அது வேறு விடயம், ஆனால் ‘இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஈழத்துப் போரையே எழுதிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்’ என்ற கேள்வியை ஈழ எழுத்தாளர்கள் சட்டை செய்யவே தேவை இல்லை. அழுது தீராத துயரங்கள், நீதி கிடைக்காத குற்றங்கள் இருக்கும்வரை சொல்லித் தீராத கதைகளும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த வாழ்வை நீங்களும் வாழ்ந்து பாருங்கள் என்பது எழுத்தாளரின் கோபமாக வெளிப்படலாம். கெஞ்சலாக வெளிப்படலாம். ஆனால் வெளிப்படும்.

கேள்வி: உங்களுடைய முதல் நாவலுக்கு பதினைந்து வயதாகிறது. இன்றைக்கு இலக்கியத்தை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்?

பதில்: நாவலுக்கு நிறையக் காலத்துக்கு முன்னரே எழுதிக்கொண்டுதான் இருந்தேன். போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் இலக்கியம் எப்படி அறிமுகமாயிற்று என்றால், புலிகள் ஒரு போரைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்தப் போரின் நியாயத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவே கதைகளும் கவிதைகளும் நாடகங்களும் ஓவியங்களும் எழுதப்படுகின்றன என்ற ஒரு சித்திரமாகத்தான் அறிமுகமாயிற்று. தொன்னூறுகளில் பத்து வயதில் இருந்த எல்லோருக்கும் இது பொருந்தும். ஈழநாதமும் வெளிச்சமும் எங்களுக்கு அதைத்தான் சொல்லித்தந்தன. இதிலிருந்து வெளியேறி இலக்கியத்தை வேறு விதமாகப் புரிந்துகொள்வதற்கு எனக்கு நிறையக் காலங்கள் ஆனது. அதற்குப் பிறகுதான் நிறையத் தயக்கங்களைக் களைந்தேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைச் சிறு உதாரணத்துடன் சொல்வதென்றால், அஷேரா நாவலில் புலிகளால் நடாத்தப்பட்ட ‘கந்தன் கருணைப் படுகொலை’ வரிக்கு வரி விபரிக்கப்படும். ஒரு நண்பர், நீயா இப்படி எழுதினாய் என்று கேட்டார். ஓம். எழுத்துக் கோரினால், எழுதுவேன் என்றேன். இதுதான் இப்போது வந்திருக்கிற இடம்.

000

திசை ஒன்பது : தமிழினி வெளியீடு

https://akazhonline.com/?p=11255

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.