Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்கு உள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்

January 15, 2026

கேள்விக்கு உள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும்

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

தனது முதலாவது பதவிக் காலத்தில் (2016 — 2020) வெளிநாடுகளில் சண்டையிடுவதற்காக  ஒரு அமெரிக்கப் படைவீரனைக் கூட அனுப்பவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் பெருமைப்பட்டதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் 2025   ஜனவரியில் பிரவேசித்த பிறகு பத்துமாத காலத்திற்குள் உலகில்  எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதற்காக தனக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்று  அவர் தானாகவே கேட்டார். அந்தப் பரிசு தனக்கு கிடைக்காது என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.  

இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே அவர் நாடுகளை ஆக்கிரமிப்பது குறித்து பேசிவந்திருக்கிறார்.  எந்தவிதமான  பிரச்சினையையும்  தோற்றுவிக்காத அயல் நாடான  கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்குவது குறித்தும் டென்மார்க்கிற்கு சொந்தமான  கிறீன்லாந்து தீவையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றுவது குறித்தும்  அவர் பேசினார்.  இஸ்ரேல் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதை ஆதரித்த ட்ரம்ப்  காசாவில் இருந்து மக்களை வெளியேற்றிவிட்டு அந்தப் பள்ளத்தாக்கை உல்லாசக் கடற்கரையாக மாற்றுவதற்கான தனது விருப்பத்தையும்  வெளிப்படுத்தினார். 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதில் ட்ரம்புக்கு எந்த தொடர்பும்  கிடையாது என்று புதுடில்லி திட்டவட்டமாக மறுத்த போதிலும், இதுவரையில் அவர் எழுபதுக்கும் அதிகமான  தடவைகள் தெற்காசியாவின்  இரு அணுவாயுத நாடுகளும் போரை கைவிட்டதற்கு தானே காரணம் என்று கூறியதாக  சர்வதேச ஊடகங்கள் அறிவித்தன. தன்னை ஒரு சமாதான விரும்பி என்று காண்பித்த அதேவேளை,  ட்ரம்ப் நைஜீரியா, சோமாலியா, ஈராக், சிரியா, யேமன்  மற்றும் ஈரான் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தினார். 

தற்போது புத்தாண்டு பிறந்து மூன்று நாட்களில்  தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில் இரவோடிரவாக குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்திய ட்ரம்ப்,  ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று தடுத்து  வைத்திருக்கிறார்.      ‘போதைப்பொருள் பயங்கரவாத இயக்கம்’ ஒன்றுக்கு தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு மதுரோ நியூயோர்க் நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டிருக்கிறார். 

வெனிசூலாவில் தலையீடு செய்வதற்கு தன்னை அமெரிக்காவின் அரசியலமைப்பு அனுமதிப்பதாக கூறியிருக்கும் ட்ரம்ப், அமெரிக்க படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் அமெரிக்கர்களை பாதுகாப்பது தனது கடமை என்று வாதிடுகிறார். ஆனால்,  அமெரிக்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை வெனிசூலா தோற்றுவித்தது என்று புத்திசுவாதீனமான எவரும் கூறமாட்டார்கள். அத்துடன் மதுரோ போதைப்பொருள் கடத்தல் குழுமம் ஒன்றை நடத்திவந்தார் என்பதற்கு ட்ரம்ப் நிருவாகம் நம்பகத்தன்மையான சான்று எதையும் உலகின் முன் வைக்கவுமில்லை. 

வெனிசூலா மீது ட்ரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்திலேயே  கண்வைத்தார். ஜனாதிபதி மதுரோவுக்கும் அவரது உயர்மட்ட உதவியாளர்களுக்கும் எதிராக  முதலில் 2019 ஆம் ஆண்டில்  போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அமெரிக்காவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சி அரசியல்வாதியான பாராளுமன்ற சபாநாயகர் ஜுவான் குவாய்டோவையே வெனிசூலாவின் பதில் ஜனாதிபதியாக அமெரிக்காவும் அதன் மேற்குலக நேசநாடுகளும் அங்கீகரித்தன.

ட்ரம்ப் கடந்த வருடம் ஜனவரியில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது வெளியுறவுக் கொள்கையில் வெனிசூலாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மதுரோவை உலகில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னர்களில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டிய அமெரிக்கா  ‘போதைப் பொருளுக்கு எதிரான  போர்’ ஒன்றைப் பிரகடனம் செய்தது. மதுரோவை கைது செய்வதற்கு உதவக்கூடிய தகவல்களை தருவோருக்கு  50  மில்லியன் அமெரிக்க டொலர்கள்  சன்மானம் வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் நிருவாகம் அறிவித்தது. 

 கரிபியன் பிராந்தியத்துக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களையும் போர்க் கப்பல்களையும் அனுப்பிய ட்ரம்ப் நிருவாகம் போதைப் பொருளைக் கடத்திச் செல்லும் படகுகள் மீது விமானத்  தாக்குதல் நடத்தியதாக கூறிய போதிலும்,  உண்மையில் நூற்றுக்கணக்கான குடிமக்களே கொல்லப்பட்டார்கள். 

வெனிசூலாவுக்குள் இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு அதிகாரமளித்த ட்ரம்ப் அந்த நாட்டில் இருந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்துக்கு தடை விதித்தார். தடை செய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் சென்றதாக கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து கப்பல்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது. 

தனக்கு வரப்போகின்ற ஆபத்தை உணர்ந்து கொண்ட மதுரோ அமெரிக்காவுடன் ‘அக்கறையுடனான பேச்சுவார்த்தைகளை’ நடத்த  விரும்புவதாக அறிவித்ததற்கு மறுநாளான ஜனவரி 3  வெனிசூலாவின் தலைநகர் மீது   கடுமையான குண்டுத் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கப் படைகள்   மதுரேவையும் மனைவியையும் கைது செய்து நியூயோர்க்கிற்கு கடத்திச் சென்றன. 

ஆனால், பரவலாக எதிர்பார்க்கப்பட்டதை போன்று வெனிசூலாவின் இராணுவக் கட்டமைப்புக்களோ அரச இயந்திரமோ நிலை குலையவில்லை இராணுவ ஆக்கிரமிப்பை கண்டனம் செய்த அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது. கடந்த வருடத்தைய நோபல் சமாதானப் பரிசைப் பெற்றவரான வெனிசூலாவின் வலதுசாரி எதிர்க்கட்சி தலைவியான மறியா கொறினா மச்சாடோ அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கைகளை முற்று முழுதாக ஆதரித்து வருகின்ற  போதிலும், அவர் நாட்டை ஆட்சி செய்வதற்கு தேவையான மக்கள்  ஆதரவையும் மதிப்பையும்  கொண்டவரல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி நிராகரித்துவிட்டார். 

வெனிசூலா உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் துணை ஜனாதிபதி டெல்சி றொட்ரிக்கஸ் மறுநாளே பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார். அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மறுத்தால் டெல்சி பாரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் உடனடியாகவே எச்சரிக்கை செய்தார்.  பொருளாதார நெருக்கடி மற்றும் எதேச்சாதிகார ஆட்சிமுறை காரணமாக மதுரோவின் அரசாங்கம் மீது வெனிசூலா மக்களில் பெரும்பாலானவர்கள்  வெறுப்புக் கொண்டிருந்தார்கள்  என்பது உண்மை. 

ஆனால், இறைமையுடைய ஒரு  நாட்டின் தலைவரை கடத்திச் செல்வதற்கு அமெரிக்காவுக்கு எந்த அருகதையோ அல்லது அதிகாரமோ கிடையாது.  தவறான ஆட்சி மற்றும்  அடக்குமுறைக்காக  வெளிநாட்டுத் தலைவர்களை கடத்திச் சென்று சிறைவைப்பதே ட்ரம்பின் வேலையாக இருக்குமானால், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவுடன் அதிகாரத்தில் இருக்கும் சிலர்  உட்பட அத்தகைய  ஆட்சியாளர்களின்  நீண்ட பட்டியலில் இருந்து அவர் தெரிவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். 

 தான் விரும்பும்வரை வெனிசூலாவை அமெரிக்கா  நிருவகிக்கும் என்றும் அதன் பாரிய எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தப் போவதாகவும்  ட்ரம்ப் வெளிப்படையாகவே பிரகடனம் செய்கிறார்.  சிறையில் இருக்கும் மதுரோவின் விசுவாசிகளினால் நிருவகிக்கப்படும் இடைக்கால அரசாங்கம் அமெரிக்கா தனக்கு அவசியமானது என்று உணருகின்ற சகலதையும் தருகிறது. வெனிசூலாவின் எண்ணெய்த் தொழிற்துறையை அமெரிக்கா இலாபகரமாக மீளக்கட்டியெழுப்பும்  என்றும் அந்த நாட்டுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற பணம் வழங்கப்படும் என்றும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நியூயோர்க் ரைம்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கிறார். 

தென்னமெரிக்காவிலும் கரிபியன் பிராந்தியத்திலும் இரு நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக தலையீடுகளைச் செய்த நீண்ட வரலாற்றை அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஆனால்,  வெனிசூலா மீது ஜனவரி 3  நடத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களே தென்னமெரிக்க நாடொன்றின் மீதான  அமெரிக்காவின் முதன் முதலான நேரடியான  இராணுவ தாக்குதலாகும்.  19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்க கண்டத்தின் அயல்நாடுகளில் அமெரிக்கா பொருளாதார நெருக்குதல்கள் ஊடாக மாத்திரமல்ல,  படையெடுப்புக்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் என்று இராணுவ ரீதியாகவும் தலையீடுகளைச் செய்து வந்திருக்கிறது. 

வெனிசூலாவில் கடந்தவாரம் அமெரிக்கா  மேற்கொண்ட இராணுவ  நடவடிக்கை 1989  ஆம் ஆண்டில் பனாமா நாட்டின் சர்வாதிகாரி மனுவேல் நொறீகாவைக் கைதுசெய்த நடவடிக்கையை நெருக்கமாக ஒத்ததாக இருக்கிறது.  முன்னர் சி.ஐ.ஏ.யின்  நண்பராக  விளங்கிய நொறீகாவை கைது செய்வதற்காக பனாமாவை ஆக்கிரமிப்பதற்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்  சுமார் 27 ஆயிரம் துருப்புக்களை அனுப்பினார். அவரைக் கைதுசெய்து அமெரிக்காவுக்கு கொண்டுசென்று  இன்று மதுரோவுக்கு  ட்ரம்ப்  செய்ததைப் போன்று போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றங்களில்  புஷ் நிருவாகம் நிறுத்தியது. 

 பிரேசில், சிலி மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் ஜனநாயக ரீதியாக  மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களை பதவி கவிழ்த்து இராணுவ சர்வாதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு  அமெரிக்கா உதவிய போதிலும்,  தென்னமெரிக்காவிலும் கரிபியனிலும் வெளிப்படையான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா  வரலாற்று ரீதியாக அதன் நெருங்கிய அயல் நாடுகளுடன் மாத்திரம்  மட்டுப்படுத்தியே வந்திருக்கிறது.   ஆனால்,  தற்போது தென்னமெரிக்க நாடொன்றின் மீது  நடத்தப்பட்ட நேரடியான  இராணுவத் தாக்குதல் அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் முக்கியமான மாற்றத்தைக் குறித்து நிற்கிறது எனலாம்.

அமெரிக்காவுக்கு பாரதூரமான எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் தோற்றுவிக்காத வெனிசூலாவில் எதற்காக ஆட்சி மாற்றத்தை ட்ரம்ப் விரும்புகிறார்?  அந்த நாடு  பெரியளவில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்கின்ற ஒரு நாடுமல்ல. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு மூன்று முக்கிய காரணங்களை  சர்வதேச அரசியல் அவதானிகள் அடையாளம் காண்கிறார்கள். 

முதலாவதாக,  உலகின் மேற்கு அரைக் கோளத்தில் (Western Hemisphere) அமெரிக்காவின் முதன்மையை  மீண்டும் திணிப்பதற்கு ட்ரம்ப் விரும்புகிறார். அமெரிக்காவின் ஐந்தாவது ஜனாதிபதியான ஜேம்ஸ் மொன்றோ அமெரிக்க கண்டத்தின் நாடுகளில் எதிர்காலத்தில்  ஐரோப்பிய வல்லரசுகள் தலையீடுகளைச் செய்யாமலும் காலனித்துவ ஆதிக்கத்தைச் செலுத்தாமலும்  இருப்பதை உறுதிசெய்வதற்காக ஐரோப்பிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்று 1823  ஆம் ஆண்டில் உறுதியளித்து  பிரகடனம் ஒன்றைச் செய்தார். அதுவே மொன்றோ கோட்பாடு (Monroe Doctrine) என்று அழைக்கப்பட்டது. 

அந்த கோட்பாட்டின் வழியில் தற்போது அமெரிக்க நாடுகளை அமெரிக்காவின் செல்வாக்குப் பிராந்தியமாக வைத்திருப்பதில் ட்ரம்ப் நாட்டம் கொண்டிருக்கிறார். அண்மையில் அவரது நிருவாகத்தினால் வெளியிடப்பட்ட ‘தேசிய பாதுகாப்பு கோட்பாடு’ (National Security Doctrine) லத்தீன் அமெரிக்காவையும் கரிபியன் பிராந்தியத்தையும் மூலோபாய முன்னுரிமைக்குரியவையாக அடையாளம் காண்கிறது. இதற்கு  அமெரிக்க ஊடகங்கள் ‘டொன்றோ கோட்பாடு’ (Donroe Doctrine) என்று வேடிக்கையாக பெயர் சூட்டியிருக்கின்றன. 

லத்தீன் அமெரிக்காவில் வெளிப்பிராந்தியத்தைச் சேர்ந்த வல்லரசுகளின் (பிரதானமாக  சீனா) செல்வாக்கை அல்லது கட்டுப்பாட்டை அமெரிக்கா நிராகரித்து அதன்  அரசியல்,  பொருளாதார மற்றும் இராணுவச் செல்வாக்கின் கீழ் மேற்கு அரைக்கோளத்தை வைத்திருக்க  வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கோட்பாட்டு ஆவணம் வலியுறுத்துகிறது.

இரண்டாவதாக,  அமெரிக்காவின் முதன்மைக்கு வலுவூட்டுகின்ற அதேவேளை, மேற்கு அரைக்கோளத்தில் சீனாவினதும் ரஷ்யாவினதும் செல்வாக்கை தடுக்கவும் ட்ரம்ப் நிருவாகம் விரும்புகிறது. சீனா ஏற்கெனவே அதன் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் ஊடாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாரிய முதலீடுகளைச் செய்திருக்கிறது. பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளின் மிகப்பெரிய அல்லது  இரண்டாவது பெரிய  வர்த்தகப் பங்காளியாகவும்  சீனா விளங்குகிறது 

மூன்றாவதாக, லத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரிப் போக்குடைய தலைவர்களுக்கு  பதிலாக தீவிர வலதுசாரிகளை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கும் அமெரிக்கா விரும்புகிறது.  மதுரோவின் கைதுக்குப் பிறகு செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப் ‘மேற்கு அரைக் கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் மீண்டும் ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தப்படமாட்டாது’  என்று கூறியது கவனிக்கத்தக்கது.

வெனிசூலா மீது மேற்கொண்ட தாக்குதல் மூலமாக அமெரிக்கா மற்றைய நாடுகளின் இறைமையையும் பாதூகாப்பையும்  கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அரசுகள் அவற்றின் நிலப்பரப்பு உரிமைக் கோரிக்கைகளுக்காகவோ அல்லது அரசியல் கோரிக்கைகளுக்காகவோ படைபலத்தைப் பிரயோகிக்கக்கூடாது என்று கடந்த நூற்றாண்டில் இரு உலகப்போர்களின் பயங்கரங்களுக்கு பிறகு இணங்கிக்கொள்ளப்பட்ட  சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை  அமெரிக்கத் தாக்குதல் வலுவிழக்கச் செய்திருக்க்கிறது என்றும்  மோதல்களைத் தவிர்ப்பதற்காக உலகிடம் இருக்கும் ஒரேயொரு பொறிமுறையான ஐக்கிய நாடுகளை அமெரிக்காவின் நடவடிக்கை மோசமாகப்  பலவீனப்படுத்தியிருக்கிறது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் கவலை தெரிவித்திருக்கிறார். சட்டத்தின் ஆட்சிக்காக சர்வதேச சமூகம் துணிச்சலுடன் குரல்கொடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

வெனிசூலாவையடுத்து ட்ரம்ப் கொலம்பியா,  கிறீன்லாந்து,  மெக்சிக்கோ,  கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளையும் அச்சுறுத்துகிறார். 

மதுரோ அரசாங்கத்தைக் கண்டனம் செய்வதில் முன்னர் காட்டியதைப் போன்ற  உத்வேகத்தை  அந்த நாட்டின் இறைமையை மீறிய ட்ரம்பின்  ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்வதில் ஐரோப்பிய நாடுகள்  காண்பிக்கவில்லை. 

இலாபத்துக்காகவும் அரசியல் மேலாதிக்கத்துக்காகவும் அமெரிக்காவின் வல்லமையை தொடர்ந்தும் பயன்படுத்துவதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என்பதை அவரின் நியூயோர்க் ரைம்ஸ் நேர்காணல் பிகாசமாக அம்பலப்படுத்துகிறது.

சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கட்டுப்பட்டுச் செயற்படவேண்டும் என்று தான் உணரவில்லை என்று கூறிய அவரிடம் அமெரிக்க இராணுவ வல்லமையைப் பயன்படுத்துவதுவதற்கான ஆற்றலில் ஏதாவது மட்டுப்பாடுகள் இருக்குமா என்று கேட்கப்பட்டபோது தனது சொந்த மனத்தினால் மாத்திரமே அதை நிறுத்த முடியும் என்று பதிலளித்தார். 

 சர்வதேச சட்டம் தனக்கு  தேவையில்லை என்றும் இரண்டாவது உலகப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்பட்ட உலக ஒழுங்கு இன்று அநாவசியமான ஒரு சுமையாக இருக்கிறது என்றும் ட்ரம்ப் கூறிய  வார்த்தைகள் உலகம்  வரும் நாட்களில்  எதிர் நோக்கப்போகும் ஆபத்துக்கு கட்டியம் கூறுகிறது. 

https://arangamnews.com/?p=12595

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.