Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெறுப்புணர்வின் வெளிப்பாடு

லக்ஸ்மன்

அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியைக் கடந்து வழிபாட்டிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருவது 'வெறுப்பு' காரணமாகவே, ஒவ்வொரு 'போயா' தினத்திலும் யாழ்ப்பாணத்தின் ஓரிடத்தில் கூடிக் காணி கேட்டுப் போராடுவதும் வெறுப்புணர்வினாலேயே, இவ்வாறு போராடுபவர்களுக்கு அந்த இடத்தில் உண்மையில் காணிகள் இருக்கிறதா என்று ஆராயுமாறு புலனாய்வுப் பிரிவினருக்குத் பணிப்புரை விடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். இதிலுள்ள மூன்று விடயத்தையும் ஒன்றாகவும் பார்க்கலாம். வெவ்வேறாகவும் விளக்கத்துக்குட்படுத்தலாம். ஆனால் இது தையிட்டி விகாரையை மையப்படுத்தியதாக மட்டுமே நகர்த்தப்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கொழும்பில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவைத் தவிர்த்து வடமாகாண பொங்கல் விழாவுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தமை பெரும் விமர்சனத்துக்குரியதாக இருந்தது.  அங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய வெறுப்புணர்வு தொடர்பான விடயம்  நாட்டில் களேபரமாக மாறி வருகிறது. பௌத்தமே முதன்மையான நாட்டில், விகாரைகளுக்கு வழிபாட்டிற்காக  வருகை தரும் பௌத்தர்கள் மனதில் குரோத்துடன்  வருகிறார்கள் என்ற கருத்துப்பட பேசியிருந்தார். அவர் இந்தக் கருத்தை வாபஸ் பெறுவாரா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்  உட்பட பல அரசியல் தலைவர்களும் ஜனாதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலை உருவாகி வருவதனை அவதானிக்க முடிகிறது. ஆனால்,ஒரு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது மாத்திரம் வெளிப்படை. அதேநேரத்தில், அவருடைய கருத்துக்கு ஆதரவான கருத்துக்களும் வெளிவராமலில்லை. அது அவர்களுடைய அரசியலாகவும் இருக்கலாம்.

ஆனால், பௌத்தம் என்பது மனித குலத்துக்கு, அதன் வாழ்வியலுக்குத் தேவையான பல்வேறு நல்ல விடயங்களைக் கற்பிக்கின்ற ஒருமார்க்கம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி தனது கருத்தை முன்வைத்திருக்கலாம் என்ற அளவீட்டில் கடந்து போய்விட யாரும் தயாரில்லாத நிலை காணப்படுகிறது. இது மிக மோசமானதே.

இலங்கையின் கடந்த கால  வரலாறு ஜே.வி.பியின் இரண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கும். தமிழ் மக்களின்  சுய நிர்ணயப் போராட்டத்துக்கும் உட்பட்டிருக்கிறது. ஜே.வி.பி. தமது போராட்டத்தில் தோற்று, மண்டியிட்டு தற்போது அரசியல் ரீதியாக நாட்டைக் கைப்பற்றியிருக்கிறது. அதே நேரத்தில், தமிழ் மக்களின் ஆயுத ரீதியான போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையுடன் அரசியல் ரீதியான போராட்டம் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. இந்த நிலையில் ஜே.வி.பி. தலைமையில் நடைபெறுகின்ற தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளியிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் கருத்துக்களே என்ற வகையில் யாழ்ப்பாணத்தில் அவர் வெளியிட்ட கருத்தும் அரசின் கருத்தே என்பது மாத்திரம் உறுதியானது. அந்த வகையில்தான், ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்கள் வெளியாவது, அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதும் நடைபெற்று வருகின்றன.

நாட்டில் நடைபெற்ற 'அரகலய' போராட்டம் ஒரு ஜனாதிபதியைப் பதவியிலிருந்து தப்பியோட வைத்திருந்தது. அதன்பின்னர் இலங்கை வரலாற்றில் நடைபெறாத பாராளுமன்றத் தெரிவுமூலம் நாட்டுக்கு ஜனாதிபதி ஒருவர் தெரிவானார்.

பின்னர் யாரும் எதிர்பார்த்திராத வகையில் பெரும்பான்மை தேசியக் கட்சிகளை மேவியவகையில் ஜனாதிபதியாக ஜே.வி.பியின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க தெரிவானார். அவர் பெரும்பான்மையற்ற வகையில் தெரிவானார் என்பது வேறுகதை. அதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சியே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம். ஊழலற்ற நாட்டை உருவாக்குவோம். போதையற்ற நாட்டை எதிர்கால சந்ததிகளிடம் கையளிப்போம் என பல கோசங்களுடன் ஆட்சியைப் பொறுப்பேற்ற தேசிய மக்கள் சக்தி ஒருவருடத்தைக் கடந்த ஆட்சியில் சற்றுத் தீவிரமாகச் செயற்படுவதாகவே மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அதிகாலையில் எழுந்து யாழ்ப்பாணத்தின் பிரதான வீதியில் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டார். சாதாரண மக்களுடன் உரையாடினார். இவையெல்லாம் சாதாரணமான செயற்பாடுகளாகப் போயின. அங்கு அவர் பேசிய பேச்சு விமர்சனத்துக்குள்ளானது. உண்மையில் ஜே.வி.பியின் செயற்பாடுகள்  விமர்சிப்பதற்கும், ஆராய்வதற்கும் ஏற்ற வகையில் இருந்தாலும், சற்று வித்தியாசமுடனேயே இருக்கிறது என்று மக்கள் சிந்திக்கின்றனர். இருந்த போதிலும், ஏற்கெனவே அமைச்சுப் பொறுப்புக்களுடன் சிறிது காலம் இருந்த அனுபவம் உள்ளதாக ஜே.வி.பி. இருந்தாலும்,  தற்போதைய ஆட்சி சற்று வித்தியாசமானது என்பதனை அவர்கள் மறந்து விடுகிறார்களாக என்று எண்ணத் தோன்றுகிறது.

அந்த ஒழுங்கில்தான், பௌத்தத்தை முதன்மைப்படுத்தியதான நாட்டில் ஜனாதிபதியும், அரசாங்கமும் அதனை அவமதிக்கிறது என்ற அரசியல் தரப்பினரது முன்வைப்புக்கள் தவறல்ல. ஆனால், இனவாதமற்ற, மத வாதமற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டில் இந்த விமர்சனங்கள் பட்டை தீட்டலாக அமையக்கூடும். ஆனால்,  வங்குரோத்தாகியிருந்த நாட்டை, ஆட்சிக்கு வந்தவுடன்  ஜனாதிபதி மீட்டெடுத்துவிட்டார் என்று கூறுமளவிற்கு நாடு மீட்சி பெறவில்லை என்பது மாத்திரம் உண்மை.

காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விஹாரைப் பிரச்சினை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. திருகோணமலையில் விகாரை அமைக்க முயன்ற பிக்குகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் தொல்பொருள் தரப்பினர் தமது அடையாளங்களை நிறுவி வருகின்றனர். அது பிரச்சினையாகிக் கொண்டும் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் இப்போது தொடங்கியதல்ல. இது கடந்த ஆட்சிக்காலத்திலேயே தொடங்கி விட்டது. தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிக்குள் அடாத்தாக அமைக்கப்பட்டதே அந்த விகாரை என்பது அம் மக்களது போராட்டம். அதேபோன்று, தொல்பொருள் சின்னங்கள் நிறுவுதலும் நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. பல்வேறு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டதும் கடந்த ஆட்சிக் காலங்களிலேயே ஆகும். இருந்தாலும் பிரச்சினைகள் இந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த இடத்தில்தான், வடக்கு கிழக்கில் பௌத்தத்தை நிலைநாட்டத் துடிக்கும் பிக்குகளினதும் பௌத்த மதவாதச் சிந்தனையும் தமிழ் மக்களது விடயத்துக்குள் உரசிக் கொள்கின்றன என்று கூறலாம். திஸ்ஸ விஹாரை என்பது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் வரை செல்லும் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு பௌத்த விகாரையாகும். தேவநாம்பியதிஸ்ஸ மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த விகாரை, கனிஷ்டதிஸ்ஸ, வோஹாரிகதிஸ்ஸ போன்ற மன்னர்களால் அபிவிருத்தி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொன்மை வாய்ந்த புனிதத்தலம் வடக்கின் யுத்த காலத்தில் பாழடைந்து போனது என்ற நிலைமையொன்று உருவாகிறது.

இந்த விகாரை யுத்தக் காலத்திற்கு முன்னர் செயற்பாட்டில் இருந்ததா? என்ற கேள்வியும் இருக்கிறது. இருந்தாலும். இதற்கென ஒதுக்கப்பட்ட நிலம் ஒன்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ விஹாரைக்குச் சொந்தமான காணி தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் நாகதீப விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பதுமகித்தி ஹிமி தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரே தற்போது வாகாரை அமைந்திருக்கும் இடம் அதற்குரிய இடமல்ல என்றும் கூறியிருக்கிறார்.

எவ்வாறானாலும், போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன திஸ்ஸ விகாரை விவகாரம் அரசாங்கத்தால் சுமுகமாகத் தீர்க்கப்பட்டேயாகவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், நாட்டில் பௌத்த மத்துக்கெதிராக ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருப்பதாக உருவாகியிருக்கும் பிரச்சினை திஸ்ஸ விகாரையால்தான் உருவானதென்று மட்டுப்படுத்திவிட முடியாது. இது காலங்காலமாக இருந்து வருவதேயாகும். அடிப்படையில் ஊட்டப்பட்டதாக இருக்கின்ற இந்த மனோநிலையை மாற்றியமைப்பதானது சிறு முயற்சியால் குறிப்பிட்ட காலத்தில் களைந்துவிடக்கூடியதல்ல என்பது உண்மையானதே.

இருந்தாலும், வடக்கைப் பிரதானமாக மையப்படுத்தியதாகவே நகரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் செயற்பாட்டில் வடக்கு மக்களின் மனங்களை வென்றால் தமிழ் மக்களின் மனங்களையும் வென்றுவிடலாம் என்பது ஒரு எடுகோளாகும். அந்தவகையில், நடைபெறும் ஒரு அரசியலாக ஜனாதிபதியின் இந்த பௌத்த்துக்கு எதிரான என்று சொல்கின்ற கருத்தையும் நாம் கடந்துவிட முயலவேண்டும்.

எவ்வாறானாலும், 2009இல் யுத்தம் முடிவடைந்த கையோடு இராணுவ முகாம் இருந்த காணியில் இராணுவத்தினரால் தையிட்டி  திஸ்ஸ விஹாரை கட்டப்பட்டது. பௌத்த பிக்கு ஒருவரை அழைத்து வந்து அங்கே தங்க வைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை தேசிய ரீதியில் முக்கியமானது. திஸ்ஸ விஹாரையை மீண்டும் நிறுவுவது இராணுவத்தின் ஒரு தேசியப் பணியே தவிர, அது ஒரு வெறுப்புணர்வுச் செயலல்ல என்ற சிந்தனை பெரும்பான்மை மக்களிடம் இருக்கையில்  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்து அவருடைய அரசியலாலேயே முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். இருந்தாலும் அந்தக் கருத்துக்கெதிராக உருவாகிவருகின்ற எதிர்ப்பலையானது வெறுப்புணர்வின் வெளிப்பாடென்றே முடிவுக்கு வரவும் வேண்டும். ஜனாதிபதி தனது கருத்தை வாபஸ் பெறுவாரா என்பதைப் பொறுத்தே அதற்கான முடிவும் கிடைக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வெறுப்புணர்வின்-வெளிப்பாடு/91-371589

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.