Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Deal) இறுதி செய்துள்ளன. 

இது இந்தியாவின் பரந்த சந்தையை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் திறந்துவிடுவதுடன், உலகப் பொருளாதாரத்தில் சுமார் கால் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பிரம்மாண்டமான பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்குகிறது. 

பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஓன்றிய தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா ஆகியோர் டெல்லி வந்துள்ளதுடன், அங்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவிலிருந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் உலகின் ஏனைய நாடுகளுடன் தங்களது மூலோபாய மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த முனைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmkw9cw3d04h4o29n8adprqxz

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம் டிரம்புக்கு சொல்லும் செய்தி என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டிரம்புக்கு என்ன செய்தியை வழங்குகிறது?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ரஜ்னீஷ் குமார்

  • பிபிசி செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்கா இந்திய இறக்குமதிகள் மீது 50% வரியையும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளின் இறக்குமதிகள் மீது 15% வரியையும் விதித்தது.

தற்போது இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன. இது அமெரிக்காவுக்கு விடுக்கப்படும் ஒரு செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா தற்போது ஆக்ரோஷமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. ஜனவரி 24 அன்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், "ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதிக்க எங்கள் ஐரோப்பிய நட்பு நாடுகள் மறுத்துவிட்டன. ஏனெனில், அவர்கள் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பினர். யுக்ரேனுக்கு எதிரான போரில் ஐரோப்பாவே ரஷ்யாவுக்கு உதவுகிறது" என்றார்.

இந்தியாவுக்கு எதிராக ஐரோப்பாவும் வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது, ஆனால் அது நடக்கவில்லை.

யுக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலை ஐரோப்பா தனக்கு நேர்ந்த பெரிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இருப்பினும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி அமெரிக்கா இந்தியா மீது வரிகளை விதித்தது.

கடந்த மாதம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்தார். அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைவர்கள் இந்தியா வந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் - இந்தியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து அல்பானி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் கிறிஸ்டோஃபர் கிளேரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"மற்ற நாடுகளுக்கும் மாற்று வழிகள் உள்ளன என்பதை இந்த ஒப்பந்தம் நினைவூட்டுகிறது. அமெரிக்கா தனது பொருளாதார ஆதிக்கத்தின் அடிப்படையில் வரி கொள்கையை வகுத்து அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அதன் அழுத்தம் பலனற்றதாகிவிடும். அமெரிக்காவின் தன்னிச்சையான போக்குக்கு உலகளாவிய எதிர்ப்பு அதிகரித்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மீதான இந்தியாவின் சார்புத்தன்மையைக் குறைக்கும் என்று பிரபல உத்தி விவகார நிபுணர் பிரம்மா செலானியும் நம்புகிறார்.

"விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு, பாதுகாப்புவாதம் அதிகரித்து வரும் இக்கட்டான காலத்தில், இது ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்தத்தை விட முக்கியமானது" என்று செலானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் டிரம்பின் உத்தியை இது பலவீனப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் மீதான இந்தியாவின் சார்பைக் குறைக்கிறது" என்றும் அவரது பதிவு கூறுகிறது.

திங்களன்று இந்தியாவின் 77-வது குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் இந்திய வானில் பறப்பதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்திய வானில் அமெரிக்க விமானங்கள் மட்டுமல்ல, ரஷ்ய விமானங்களும் பறந்தன.

குடியரசு தின அணிவகுப்பில் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்தியாவின் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஏனெனில், நேட்டோ அமைப்பு எஸ்-400ஐ தங்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

தி ஹிந்து நாளிதழின் தூதரக விவகாரங்கள் பிரிவின் ஆசிரியர் சுஹாசினி ஹைதர் இது குறித்து வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், "இந்தியாவின் உத்தி சார்ந்த சுயாட்சி குடியரசு தின அணிவகுப்பில் முழுமையாக வெளிப்பட்டது. எஸ்-400 அமைப்பு, டி-90 டாங்கிகள் மற்றும் கூட்டாகத் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட ரஷ்ய ராணுவத் தளவாடங்கள், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன" என்று கூறியிருந்தார்.

டிரம்ப் மற்றும் ஐரோப்பா ஆகிய இரு தரப்புமே ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறைக்க விரும்புகின்றன. ஆனால், அமெரிக்காவைப் போல இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க ஐரோப்பா வரிகளை விதிக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் டிரம்புக்கு என்ன செய்தியை வழங்குகிறது?

பட மூலாதாரம்,Getty Images

உத்தியாக மாறிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

டெல்லியைச் சேர்ந்த 'குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ்' அமைப்பின் அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்தச் சங்கடங்களைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை என்றும், டிரம்ப் இதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

"அமெரிக்காவின் ராஜீய சூழல் இப்போது பழையபடி இல்லை. டிரம்ப் நிர்வாகத்தின் கவனம் உள்நாட்டு அரசியல் மற்றும் பரிவர்த்தனை சார்ந்த உறவுகளிலேயே உள்ளது. அமெரிக்காவுடனான தனது கூட்டாண்மையைத் தொடர இந்தியா விரும்புகிறது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதிகப்படியான சார்பு ஆபத்தானது என்பதையும் இந்தியா புரிந்துகொண்டுள்ளது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு நிலையான தன்மை இல்லை. பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் குறித்த அவரது நிலைப்பாடு அடிக்கடி மாறியுள்ளது. இது இந்தியா ஒரு நீண்ட கால உத்தியை வகுப்பதைக் கடினமாக்குகிறது" என்று குறிப்பிடுகிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் குறைக்க இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

"ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு டிரம்பின் கொள்கைகளே ஒரு காரணமாக அமைந்தன. ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக இரு தரப்புமே தங்களை தாராளமயமாக்கிக்கொண்டுள்ளன. இப்போது கேள்வி என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த ஒப்பந்தம் டிரம்பின் வரிகளின் தாக்கத்தைக் குறைக்குமா என்பதுதான்" என்கிறார்.

மேலும், "அமெரிக்கா ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மிகப்பெரிய சந்தை. கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 20 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வர சுமார் ஒரு வருடம் ஆகும். நிச்சயமாக, இது அமல்படுத்தப்பட்டவுடன் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் மற்றும் டிரம்பின் வரிகளால் ஏற்படும் அழுத்தம் குறையும்.'' என்றார்

''நான் டிரம்புக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம் என்ற உண்மையை அவர் உணர்த்தியுள்ளார். டிரம்பின் நடவடிக்கைகளால் இந்தியா ஏற்கெனவே பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது, மேலும் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவை மட்டுமே நம்பியிருப்பது ஆபத்தானது" என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

முன்னதாக, இந்தியா ஓமன், நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் உலகம் கொந்தளிப்பில் இருக்கும் வேளையில் இது தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வரிகளின் தாக்கத்தைக் குறைக்க இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

பட மூலாதாரம்,@narendramodi

ஒப்பந்தத்தின் தாக்கம் என்ன?

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் மீதான தங்கள் சார்பைக் குறைக்க இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் விரும்புகின்றன.

இதற்கு முன்பு இந்தியா தனது சந்தையை முழுமையாகத் திறக்க முன்வராத ஒரு 'பாதுகாப்புவாத' நாடாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது இந்தியா அந்த பிம்பத்திலிருந்து விடுபட்டு வருவது போல் தோன்றுகிறது.

டிரம்பின் கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வதும், அதே நேரத்தில் ரஷ்யாவுடன் வலுவான உறவைப் பேணுவதும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனக்குச் சாதகமான வர்த்தகத்தை மேற்கொள்வதும் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.

டிரம்பின் கொள்கைகளைச் சுற்றியுள்ள "நிச்சயமற்ற சூழலில்", நாடுகள் தங்கள் கடந்த கால கசப்புகளை மறந்து ஒன்றுசேரத் தயாராகி வருவதாக, தெற்காசிய ஆய்வுகள் நிறுவனத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார ஆராய்ச்சித் தலைவர் அமிதேந்து பாலித் 'ப்ளூம்பெர்க்' செய்தியில் தெரிவித்துள்ளார்.

"ஏதோ ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வருவது இப்போது மிகவும் அவசியமாகியுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மாதவி அரோராவின் அறிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2031ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதியை 50 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது.

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மருந்து, ஜவுளி மற்றும் ரசாயனத் துறைகளுக்கு நேரடிப் பலன் அளிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த நிதியாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 136.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 17 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்கினை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது.

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்பதாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகத் திகழ்கிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியச் சந்தையை ஐரோப்பிய ஒன்றியம் அணுக முடியும்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது.

வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-25 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் டாலர்களாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா 41.18 பில்லியன் டாலர் வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது. அதாவது, அமெரிக்காவிடம் இருந்து வாங்கியதை விட அதிகமான பொருட்களை இந்தியா அங்கு விற்றுள்ளது.

இதில் அதிருப்தி அடைந்துள்ள அதிபர் டிரம்ப், இந்த வர்த்தக உபரி அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

புளூம்பெர்க் எகனாமிக்ஸ் கணிப்பின்படி, டிரம்பின் வரி விதிப்புகளால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 52 சதவிகிதம் வரை குறையக்கூடும்.

டிரம்பின் வரி விதிப்பால் 41 பில்லியன் டாலர் வர்த்தக உபரி மோசமாகப் பாதிக்கப்படும் என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

இருப்பினும், இந்தியா தற்போது மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்கள் இந்த இழப்பை உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஈடுசெய்யும் என்று அவர் கருதுகிறார்.

"ஐரோப்பிய பொருளாதாரங்கள் அமெரிக்காவை விட இந்தியாவுக்கு அதிக நன்மை பயக்கும். ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் ஜெட் என்ஜின்கள் மற்றும் தொழிற்சாலை கட்டுப்பாட்டு வால்வுகள் போன்ற உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் அடங்கும். இதற்கு நேர்மாறாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை மிகவும் பொதுவானவை. இதில் சோளம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற விவசாய பொருட்கள் அடங்கும். இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் ஜவுளி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் அடங்கும்" என்று ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஐரோப்பியப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா நீக்கவோ அல்லது குறைக்கவோ செய்யும்.

குறிப்பாக, ஐரோப்பிய கார்கள் மீதான வரி தற்போதுள்ள 110 சதவிகிதத்திலிருந்து படிப்படியாக 10 சதவிகிதமாகக் குறைக்கப்படும். இந்த சலுகை ஆண்டுக்கு அதிகபட்சமாக 2,50,000 வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இயந்திரங்கள், ரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் மீது இந்தியா விதித்து வரும் வரிகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் முக்கிய விவசாயப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஐரோப்பிய கார்கள் மீதான வரி தற்போதுள்ள 110 சதவீதத்திலிருந்து படிப்படியாக 10 சதவீதமாகக் குறைக்கப்படும்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தியாவும் நியூசிலாந்தும் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம்

கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தன. உலகளாவிய பொருளாதார ரீதியில் தனது எல்லையை விரிவுபடுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் இதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கான தற்போதைய ஏற்றுமதிகளில் 95 சதவிகிதப் பொருட்களுக்கு வரி நீக்கப்படும் அல்லது கணிசமாகக் குறைக்கப்படும் என்று அவர் கூறினார். இதில் நிலக்கரி, ஆட்டுக்கறி மற்றும் குழந்தைகளுக்கான பால் பவுடர் வரை பல பொருட்கள் அடங்கும்.

குறிப்பாக, நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு இந்தியா தனது வரிச் சலுகையை வழங்கியுள்ளது.

அமெரிக்க ஆப்பிள்களுக்கு இந்தியச் சந்தையைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் வேளையில், இந்தியா நியூசிலாந்துக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பதிலாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் நியூசிலாந்து வரிகளை ரத்து செய்யும். மேலும், இந்திய மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் இடப்பெயர்வு விதிகளையும் அந்த நாடு எளிதாக்கும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோஃபர் லக்சனும் தொலைபேசி மூலம் உரையாடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய நியூசிலாந்து ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், தற்போதைய வர்த்தக அளவு குறைவாக இருப்பதால், இது உடனடியாக இந்தியாவின் ஏற்றுமதிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தந்துவிடாது. 2024-25 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் சுமார் 1.3 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவின் ஏற்றுமதி 711 மில்லியன் டாலராகவும், நியூசிலாந்தின் இறக்குமதி 587 மில்லியன் டாலராகவும் உள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர்  ஸ்டார்மர்  -  நரேந்திர மோதி

பட மூலாதாரம்,Getty Images

பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தம்

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவும் பிரிட்டனும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை 34 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்று பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் விஸ்கி மற்றும் ஜின் மீதான வரிகள் தற்போது பாதியாகக் குறைக்கப்பட்டு, பின்னர் 40 சதவிகிதமாகக் குறைக்கப்படும். மேலும், 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த கார்கள் மீதான வரிகளையும் இந்தியா 10 சதவிகிதமாகக் குறைக்கும் (குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களுக்கு மட்டும்).

மறுபுறம் பிரிட்டன் ஆடை, காலணிகள் மற்றும் இறால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் பிரிட்டன் அரசாங்கத் தரவுகளின்படி, பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த வர்த்தக மதிப்பு 58 பில்லியன் டாலராக இருந்தது.

இது பிரிட்டனின் 11-வது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றியுள்ளது.

மேலும், கடந்த டிசம்பர் மாதம், இந்தியாவும் ஓமனும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2024 ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் அரசாங்கத் தரவுகளின்படி, பிரிட்டன் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான சரக்கு மற்றும் சேவைகளின் மொத்த வர்த்தக மதிப்பு 58 பில்லியன் டாலராக இருந்தது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஓமன் சுல்தானுடன் நரேந்திர மோதி (கோப்புப் படம்)

அடுத்து கனடா மற்றும் பிரேசில்?

பிரேசில் அதிபர் லூலா டா சில்வா பிப்ரவரி 19 முதல் 21 வரை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அண்மையில் பிரதமர் நரேந்திர மோதியுடன் அவர் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது இரு நாடுகளுமே டிரம்பின் வர்த்தக வரிகளால் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

மேலும், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2p14nk3xdo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.