Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான  வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான  வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன?

February 16, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான  வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன? 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட “பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு” (protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத்  தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக  முன்னெடுக்கப்படுகின்ற  மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு  குறித்து பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு  அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது.

அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் 2018 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடுப்புச் சட்ட வரைவும் ( Counter Terrorism Act – CTA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் 2023 ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவும் (Anti – Terrorism Act -ATA) முன்வைக்கப்பட்டன.

முன்னைய இரு வரைவுகளையும் போன்றே தற்போதைய அரசாங்கத்தின்  வரைவும்  பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாக அரசியல் கட்சிகள், மனித உரிமைகள் அமைப்புக்கள், சட்டத்துறை சாரந்த அமைப்புக்கள், மத அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இடம்பெற்று வந்திருக்கின்ற மக்களின் அடிப்படை உரிமை மீறல்களும் படுமோசமான  துஷ்பிரயோகங்களும்  இனிமேலும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை இந்த வரைவுகள்  கொண்டிருக்கவில்லை என்பதே முன்வைக்கப்படுகின்ற  முக்கியமான குற்றச்சாட்டாகும். 

நீதியமைச்சின் இணையத் தளத்தில் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட புதிய வரைவும்  ஜனாதிபதியினதும் பாதுகாப்புத்துறை அமைப்புக்களினதும் அதிகாரங்களை பெரியளவில் விரிவுபடுத்தும்  ஏற்பாடுகளைப்  கொண்டிருப்பது மாத்திரமல்ல, மக்களின் ஜனநாயக மற்றும் குடியியல் சுதந்திரங்களை பாரதூரமான அளவுக்கு கட்டுப்படுத்தக்கூடிய ஆபத்தையும் கொண்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. 

புதிய வரைவு தொடர்பில்  தற்போது மூண்டிருக்கும் பொது விவாதத்தில்  முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களையும் மாற்று யோசனைகளையும் அரசாங்கம் எந்தளவுக்கு கவனத்தில் எடுத்து  போதுமானளவு  மாற்றங்களைச் செய்வதில் நாட்டம் காட்டும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான முன்னைய இரு முயற்சிகளுக்கும் நேர்ந்த அதே  கதி தற்போதைய முயற்சிக்கும்  நேராது என்று எவராலும் உத்தரவாதம் கூறமுடியாது. 

பயங்கரவாதம் என்பதற்கு சட்ட வரைவில் கொடுக்கப்பட்டிருக்கும்  வரைவிலக்கணம் ஜனநாயக ரீதியான எதிர்பியக்கங்களை ஒடுக்குவதற்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படக்கூடியதாக விசாலமானதாகவும் தெளிவற்றதாகவும் இருக்கிறது. பயங்கரவாதக் குற்றங்கள் என்று வரைவில் வகைப்படுத்தப்பட்டிருப்பவை சாதாரண குடிமக்களைக் கூட 20 வருடங்கள் வரை சிறைவைக்கக்கூடிய  ஆபத்தைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இலங்கையில் இதுவரையில் அறிமுகப்படுத்தப்பட்ட 

ஆபத்தான சட்டங்களில் ஒன்று என்று இதை வர்ணித்திருக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த வரைவு தற்போதைய வடிவில்  நிறைவேற்றப்படுமானால் ஜனநாயக சுதந்திரங்களுக்கு சாவுமணியாக அமையும் என்பதுடன் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

வீடுகளுக்குள் பிரவேசிப்பது, அந்தரங்கமான ஆவணங்களைக் கைப்பற்றுவது மற்றும் ஆட்களை சோதனை செய்வது உட்பட பரந்தளவிலான அதிகாரங்களை ஆயுதப் படைகள்,பொலிஸ் மற்றும் கரையோரக் காவல்படைக்கு வழங்கும் ஏற்பாடுகளை உத்தேச சட்டம் கொண்டிருக்கிறது. ஒரு வருடம் வரையான தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளருக்கு அதிகாரமளிப்பதுடன் வழமையாக நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ்  விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டிய சந்தேகநபர்களை பொலிஸ் காவலுக்கு மாற்றுவதற்கும் அனுமதிக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன.

ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக எந்தவொரு அமைப்பையும் தடை செய்யலாம்.  தடை உத்தரவை ஜனாதிபதி விலக்கிக்கொள்ளும்  வரை அத்தகைய அமைப்புக்கள் உறுப்பினர்களைச் சேர்ப்பதை, கூட்டங்களை நடத்துவதற்கு அல்லது வங்கிக்கணக்கு ஒன்றை கையாளுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. எந்தவொரு இடத்தையும் ஜனாதிபதி தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்து மக்கள் பிரவேசிப்பதை தடுக்க முடியும். அந்த தடையை மீறுபவர்கள் மூன்று வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் அல்லது 3 மில்லியன் ரூபா அபராதத்தை செலுத்த வேண்டும்.

முன்னைய இரு அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட மூலங்களில் பயங்கரவாதத்துக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் தொடர்பில் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட பாரதூரமான  குறைபாடுகளையும் நீதித்துறை விதந்துரைத்த திருத்தங்களையும் கருத்தில் எடுக்காமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய வரைவை வெளியிட்டிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் அரசியலமைப்புத் தகுதியை கேள்விக்கு உள்ளாக்கி தாக்கல் செய்யப்பட்ட  முப்பதுக்கும் அதிகமான மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக் குற்றச்செயல்கள்’ என்று வர்ணிக்கப்பட்டிருந்தவை பெருமளவுக்கு சர்வதேச சட்டங்களுக்கு பொருத்தமான முறையில் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.   பயங்கரவாதத்துக்கு அந்த சட்டமூலம் கொடுத்த  வரைவிலக்கணத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் ஐக்கிய நாடுகளின் வரைவிலக்கணத்தின் வழியில் அமைய வேண்டும் என்கிற அதேவேளை, அந்த வரைவிலக்கணத்தை தீர்மானிக்கும்போது ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளின் சட்டங்களில் கூறப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை பரிசீலனைக்கு எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது உண்மையில் ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் கூட இதுவரையில் உலகளாவிய கருத்தொருமிப்பைக் காணமுடியவில்லை என்பதே யதார்த்தம்.

ஒருவருக்கு பயங்கரவாதியாகத் தோன்றுபவர் இன்னொருவருக்கு விடுதலை போராளியாக தென்படுவார் என்று  நாம் வழமையாக பேசுவதுண்டு. நாடுகள் அவை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே  பயங்கரவாதத்துக்கு வியாக்கியானம் செய்கின்றன.  இலங்கை அதற்கு விதிவிலக்கு அல்ல.

நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீதான  2001 செப்டெம்பர் 11 விமானத் தாக்குதல்களைத்  தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் மேற்குலகம் பயங்கவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனம் செய்தபோது அன்றைய கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  கருத்தை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானது.  பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்ற போர்வையில் அவர்கள் அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் (naked terrorism) நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் (Legitimate Armed struggle)  இடையிலான வேறுபாட்டை அழிக்கப் போகிறார்கள் என்று அவர் எச்சரிக்கை செய்தார்.

இது இவ்வாறிருக்க, பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவரைவு ஒன்றை வெளியிட்டிருப்பதில் ஒரு முரண்நிலை இருக்கிறது.

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்பட சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்து நாட்டின் சகல பாகங்களிலும் மக்களின் குடியியல் உரிமைகளை உறுதிசெய்வதாக வாக்குறுதியளித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால், திசநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில வாரங்களில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தங்களது அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவோ அல்லது திருத்தவோ போவதில்லை என்று அறிவித்தார். புதிய அரசாங்கம் உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகிவந்திருக்கும் அந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்று அவர் உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி மீறிய முதல் தேர்தல் வாக்குறுதி பெரும்பாலும் அதுவாகவே இருக்கலாம்.

இன்னொரு விசித்திரம் என்னவென்றால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கப்போவதாக வாக்குறுதியளித்த ஒரு அரசாங்கம் அதே சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக தற்போது வெளியிட்டிருக்கும் சட்ட வரைவு முன்னைய இரு அரசாங்கங்கள்  கொண்டுவந்த சட்டமூலங்களை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகும்.

இதுவரையான மூன்று சட்ட வரைவுகளுமே எந்தச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டனவோ அதே சட்டத்தில் உள்ளதை விடவும் கொடூரமான ஏற்பாடுகளை கொண்டிருப்பதை நோக்கும்போது அதுவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சித்தனமான நோக்கத்துடனேயே அரசாங்கங்கள் செயற்படுகின்றன என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

https://arangamnews.com/?p=12680

  • கருத்துக்கள உறவுகள்

'நாடு திறந்தவெளி சிறையாக மாறும்' - இலங்கையில் புதிய சட்ட வரைவுக்கு எதிர்ப்பு ஏன்?

இலங்கை, பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

பட மூலாதாரம்,UGC

கட்டுரை தகவல்

  • ஆர்.யசிஹரன்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இலங்கையின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் அடக்குமுறைச் சட்டமாகக் கருதப்படும் 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) முழுமையாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்'' (பிஎஸ்டிஏ) எனும் புதிய சட்ட மூலத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது தயார் செய்துள்ளது.

எனினும், இந்த புதிய வரைவு பழைய சட்டத்தை விடவும் அதிக அடக்குமுறைத் தன்மைகளைக் கொண்டிருப்பதாக சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்குறுதி மீறப்படுகிறதா?

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனது தேர்தல் பரப்புரைகளின் போது 'அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்போம்' என உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், புதிய சட்ட மூலம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள 'அனைவருக்கும் நீதி' என்ற சிவில் சமூகக் கூட்டமைப்பு, அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

பேராசிரியர் ஜயதேவ உயாங்கொட, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்ட மூத்த புத்திஜீவிகள் கையெழுத்திட்டுள்ள அந்த அறிக்கையில், "இப்புதிய சட்டம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ஒடுக்குமுறையையே சட்டப்பூர்வமாக்குகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அனைவருக்கும் நீதி' அமைப்பு புதிய சட்டமூலத்தில் பிரதான சிக்கல்களாக சிலவற்றை சுட்டிக்காட்டியுள்ளது.

''பரந்த வரையறை: பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்களைக் கூட 'பயங்கரவாதம்' என முத்திரை குத்த வழிவகுக்கும்.

கைது செய்யும் அதிகாரம்: பழைய பிடிஏ சட்டத்தில் கைது செய்ய உயர் அதிகாரிகள் அனுமதி தேவைப்பட்டது. ஆனால் புதிய சட்டத்தில் பொலிஸார் மட்டுமன்றி, ராணுவம் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினருக்கும் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாகத் தடுப்புக்காவல்: குற்றப்பத்திரிகை இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை தடுத்து வைக்க இது வழிசெய்கிறது

நிறைவேற்று அதிகார விரிவாக்கம்: ஜனாதிபதியினால் அமைப்புகளைத் தடை செய்யவும், அவசரகால சட்டத்தை அறிவிக்கவும், பாதுகாப்புச் செயலாளர் சில இடங்களை 'தடைசெய்யப்பட்ட இடமாக' அறிவிக்கவும் மேலுயர் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட 4 விஷயங்கள் புதிய சட்ட வரைவில் சிக்கல்களாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை, பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பம்பலோனி

ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்வி

இந்நிலையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு கொழும்பில், இலங்கை கூட்டு ஆணைக்குழுவுடன் நடத்திய சந்திப்பின் போது, அரசாங்கத்தின் இந்தத் திடீர் நிலைப்பாட்டு மாற்றம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளமையானது சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பாவோலா பம்பலோனி, "பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) நீக்க வேண்டும் என முன்னர் உறுதியாக இருந்த தேசிய மக்கள் சக்தியினர், இப்போது ஏன் அதற்கு நேரெதிரான சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், "முதலில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், இப்போது அரசாங்கத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால் இப்போதும் பாதுகாப்புத் தரப்பின் வசமே முழுமையான கட்டுப்பாடு இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது," எனத் தெரிவித்துள்ளார்.

'தந்திரோபாயமான ஏமாற்று வேலை'

புதிய சட்ட வரைவின் பின்னணியில் ஒரு அரசியல் தந்திரம் ஒளிந்திருப்பதாவும் எம்.ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (பிடிஏ) விட மிக மோசமான ஒரு சட்டத்தை அரசாங்கம் முன்மொழியும். அதற்கு எதிராக மக்கள் போராடுவார்கள். பின்னர் அரசாங்கம் அந்த புதிய வரைவை வாபஸ் பெறும். ஆனால், உண்மையில் பழைய பிடிஏ சட்டம் தொடர்ந்து அமலிலேயே இருக்கும். இதுவே இந்த புதிய வரைவு முன்மொழியப்பட்டதன் உண்மையான உள்நோக்கமாகும்," என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை, பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

இலங்கையில் பல தசாப்தங்களாக அமலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (பிடிஏ) பதிலாக, "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்'' (பிஎஸ்டிஏ) என்ற புதிய சட்டமூலத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. எனினும், இது 'பழைய வீணையில் புதிய ராகம்' என சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

"பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்'' குறித்து தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த சிவில் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், அரசாங்கம் மக்கள் கருத்துக்கு கொடுத்துள்ள காலக்கெடுவான பிப்ரவரி 28ஆம் திகதி வரையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கும், புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை வாபஸ் பெறுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து நாடளாவிய ரீதியில் பல்வேறு கலந்துரையாடல்களையும், விழிப்புணர்வூட்டல் கூட்டங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

'செயற்பட முடியாமல் இருப்பது கவலைக்குரியது'

இலங்கை, பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

பட மூலாதாரம்,Facebook/shanakiyan rasamanickam

படக்குறிப்பு,இரா.சாணக்கியன்

இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சாணக்கியன், "2023-ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டபோது, தற்போது அமைச்சர்களாக இருக்கும் வசந்த சமரசிங்க, நளிந்த ஜயதிஸ்ஸ, சுனில் ஹந்துனெத்தி ஆகியோர் அதற்கு எதிராகக் கையெழுத்திட்டனர். ஆனால் இன்று அதே நபர்கள் அமைச்சரவையில் இருக்கும்போது, மிக மோசமான சட்ட வரைவு கொண்டுவரப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது." என்று அவர் தெரிவித்தார்.

மேலும், "நீதித்துறை அனுபவம் வாய்ந்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது அல்லது செயற்பட முடியாமல் இருப்பது கவலைக்குரியது." என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை, பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

படக்குறிப்பு,அருட்தந்தை சக்திவேல்

'நாடு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாறும்'

சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் இந்தப் புதிய சட்ட மூலத்தை 'அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கவசம்' என விமர்சித்தார்.

வட கிழக்கில் மாத்திரமன்றி தற்போது தெற்கிலும் எழுந்துள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"இச்சட்டத்தின் ஊடாக மதவழிபாட்டுத் தலங்கள், போராட்டங்கள் மற்றும் கருத்து வெளிப்பாடுகள் என அனைத்தும் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படும். இளைஞர்கள், அரசியல் ஆர்வலர்கள் என யாருக்குமே எதிர்காலம் இல்லாமல் போய்விடும். இறுதியில் நாடு ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாறும்," என அவர் தெரிவித்தார்.

இலங்கை, பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

பட மூலாதாரம்,UGC

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைச் சந்தித்து இப்புதிய சட்ட வரைவின் உள்ளடக்கம் குறித்து பேசியுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் புதிய சட்டமூலங்கள் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

"சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அவற்றின் கொள்ளளவை விடப் பன்மடங்கு உயர்வாகக் காணப்படுவதால் கைதிகள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். மரணதண்டனை வழங்கலை முடிவுக்குக் கொண்டுவருவதாக அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை," என்றும் குறிப்பிட்டார் அவர்.

இலங்கை, பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

படக்குறிப்பு,சிவில் சமூக செயற்பாட்டாரான அம்பிகா சற்குணநாதன்

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் குமுதினி சாமுவேல், தனது 70 வயதிலும் அதே போராட்டக்களத்தில் நிற்க வேண்டி இருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

1979 இல் 'தற்காலிக ஏற்பாடாக' கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், எவ்வாறு வலிந்து காணாமலாக்கப்படுதலுக்கும், குடும்பங்களின் சிதைவுக்கும் காரணமாக அமைந்தது என்பது அனைவரும் அறிந்ததே என்கிறார் அவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம்

கொழும்பில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27-வது கூட்டத்தில், இலங்கைக்கான வரிச்சலுகை ஒப்பந்தங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஆகியோரின் இணைத்தலைமையில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது.

அதில் ஜிஎஸ்பி+ வரிச்சலுகையின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என இலங்கையிடம் வலியுறுத்தப்பட்டது.

முக்கியமாக, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

'பொதுமக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிப்போம்'

பட மூலாதாரம்,Facebook/Harshana Nanayakkara

7b1a9f30-0b1f-11f1-b2d9-a9bd89759413.jpg

படக்குறிப்பு,நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

இந்தப் பின்னணியில், புதிய சட்டமூலம் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பாக பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, புதிய சட்டம் தொடர்பான ஆலோசனைகளை ஆராய அரசாங்கம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

"இந்த விவகாரத்தில் முதலில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காகவே இம்மாதம் 28ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஆலோசனைகளை சாதகமாகப் பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மிகவும் வலுவான மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டத்தையே அரசாங்கம் நடைமுறைப்படுத்தும்," என அவர் தெரிவித்தார்.

மேலும், இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கும் அரசாங்கம் உரிய விளக்கங்களை அளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தரவுகள் கூறுவது என்ன?

நீண்டகாலத் தடுப்புக்காவல்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) தரவுகளின்படி, 2018ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 29 கைதிகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையும், 11 கைதிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரையும் எந்தவித விசாரணையுமின்றி தடுப்புக்காவலில் வைக்கப்படிருந்தனர்.

சித்திரவதை புகார்கள்: ஐநா மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.

அண்மைக்கால கைதுகள்: 2024ஆம் ஆண்டு முழுவதும் 38 கைதுகள் இடம்பெற்ற நிலையில், 2025ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 49 கைதுகள் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளதாக ஐநா மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது இந்தச் சட்டத்தின் பயன்பாடு குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czx4kllp7g9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.