Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுபாய் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் ; விமான பயணங்கள் இடைநிறுத்தம்

Published By: Digital Desk 3

16 Mar, 2026 | 09:05 AM

image

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே திங்கள்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு காரணங்களால் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டுபாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட ட்ரோன் தாக்குதலில் எரிபொருள் கொள்கலன் ஒன்று சேதமடைந்துள்ளதாக டுபாய் ஊடக நிறுவனம் எக்ஸ்  தளத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், டுபாய்க்கு வருகை தரும் மற்றும் டுபாயிலிருந்து புறப்படும் விமானப் பயணங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் போர் ஆரம்பத்தித்த பின்னர், வளைகுடா அரபு நாடுகள் 2,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் அமெரிக்க இராஜதந்திர அலுவலகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை மட்டுமன்றி, வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டிடங்களையும் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கிய ஐக்கிய அரபு அமீரகம், தாக்குதல்களின் பெரும் தாக்குதலை எதிர்கொண்டது. ஆனால் அனைத்து வளைகுடா அரபு நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் அனைவரும் ஈரானை கண்டித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/241069

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது பயங்கர தாக்குதல்

Mar 17, 2026 - 07:23 AM

பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது பயங்கர தாக்குதல்

பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை தூதரகம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmmtyjfwq0005356prg6x7er7

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்

Mar 18, 2026 - 06:59 AM

ஈராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் இராஜதந்திர தளம் ஒன்றின் மீது நேற்று (17) மீண்டும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தைக் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் ஏற்றிய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அங்கு அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், தூதரக வளாகத்திற்கு அருகில் பலத்த வெடிப்புச் சத்தமும் கேட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmmvd3ih40003356pla2h2uyu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலி லாரிஜானி படுகொலை எதிரொலி: இஸ்ரேல் தலைநகரில் ஈரான் ‘க்ளஸ்டர் குண்டு’ வீச்சு!

hindutamil-prod%2F2026-03-18%2Fa1x7w31d%

டெல் அவிவ்: இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறது ஈரான்.

செவ்வாய்க்கிழமை இரவில் நடத்தப்பட்ட இந்த கொத்து குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஈரான், கொத்து குண்டுகளை அடிக்கடி பிரயோகப் படுத்துவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. “ஈரான் ராணுவம் க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகளை வீசுகிறது அவை நடுவானில் பல்வேறு சிறு சிறு குண்டுகளாகப் பிரிந்து பரந்துபட்ட பகுதியை குறிவைத்து விழுவதால் அவற்றை இடைமறித்து அழிப்பது கடினமாக இருக்கிறது” என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்தச் சூழலில், மக்கள் தொகை அதிகம் உள்ள டெல் அவிவ் நகரில் இந்த குண்டுகளை நேற்றிரவு ஈரான் ராணுவம் பயன்படுத்திய நிலையில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், இதுவரையிலும் இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 14 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று மாலை ஈரானின் புஷெர் அணுசக்தி நிலையம் அருகே ஏவுகணை ஒன்று விழுந்தது. ஆனால் இதனால் அணுசக்தி நிலையத்துக்கோ மக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை ஐஏஇஏ தலைவர் ரஃபேல் க்ராஸி தெரிவித்துள்ளார். மேலும், அணுசக்தி நிலையத்தின் மீது தவறுதலாகக் கூட தாக்குதல் நடந்துவிடக் கூடாது அளவுக்கு மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் கவனமாக இருக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது கூட்டாக தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்க - இஸ்ரேல் நாடுகள், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தை முறியடிக்கவே இத்தாக்குதல் என்று விளக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சகம் சார்பில் போர் பதற்றத்தைக் குறைப்பது, மோதலை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பாக வழங்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் ஈரானின் உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச தலைவராக பதவியேற்ற பின்னர் காமேனி முதன்முறையாக வெளியுறவுக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர், “அமெரிக்காவும், இஸ்ரேலும் அடிபணியும் வரை அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது என்பது சரியானது அல்ல. அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று கூறியதாகத் தகவல்.

இருப்பினும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரம் ஏதும் வெளியிடப்படவில்லை. அவர் நேரில் பங்கேற்றாரா அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் பங்கேற்றாரா என்பதுகூட தெரியவில்லை.

ஈரான் கடற்கரையை குறிவைக்கும் அமெரிக்கா:

போர்ப் பதற்றச் சூழல் சற்றும் குறையாத சூழலில், ஈரானின் கடற்கரை பகுதிகளை அமெரிக்க ராணுவம் குறிவைத்துள்ளது. கடற்கரை பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஈரான் ஏவுகணைக் கப்பல்களை அழித்து ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை 3% உயர்ந்தது. பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியதிலிருந்தே எண்ணெய் விலை 45% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போர் ஜூன் மாதம் வரை நீடிக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கடும் உணவுப் பஞ்சத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் கடற்கரை பகுதியில் அமெரிக்க ராணுவம் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

https://www.hindutamil.in/news/world/iran-strikes-tel-aviv-with-cluster-warheads-after-israel-kills-larijani

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை? - சவுதி வெளியுறவு அமைச்சர்

Mar 19, 2026 - 08:16 AM

ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை?  - சவுதி வெளியுறவு அமைச்சர்

சவுதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு என சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார்.

ரியாத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இவ்வாறான தாக்குதல்கள் மூலம் டெஹ்ரான் எவ்வித நன்மையையும் அடையப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். 

ஈரான் தனது அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விட, அவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவே முயற்சிப்பதாக இளவரசர் பைசல் மேலும் சுட்டிக்காட்டினார். 

எவ்வாறாயினும், இந்த அணுகுமுறை ஒருபோதும் வெற்றியளிக்காது என்பதுடன், இது அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் ஈரானுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmwv90lx0007356pcx5mi5am

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல் - புதிய தகவல்

சமீபத்தில், இராக்கின் பாக்தாத்தில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன (கோப்புப்படம்).

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சமீபத்தில், இராக்கின் பாக்தாத்தில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன (கோப்புப்படம்).

இராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் (Islamic Resistance) என்ற ஆயுதக் குழு, கடந்த 24 மணி நேரத்தில் 27 நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதில் “இராக் மற்றும் பிராந்தியத்தில் உள்ள எதிரி இலக்குகளுக்கு எதிரான" டஜன்கணக்கான ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களும் அடங்கும் என்றும் கூறியுள்ளது.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க தூதரகத்தின் மீது மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் தூதரக மற்றும் தளவாட மையத்தின் மீது குறைந்தது மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்குத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மூன்றாவது தாக்குதலுக்குப் பிறகு அந்தத் தளத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதை ஓர் அதிகாரி ஏஎஃப்பி-யிடம் உறுதிப்படுத்தினார்.

சில நாட்களுக்கு முன்புதான், இராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது பல ஆளில்லா விமான மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; கடந்த வாரமும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது.

இராக்கில் அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல் - புதிய தகவல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

Published By: Digital Desk 3

25 Mar, 2026 | 10:14 AM

image

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அங்கிருந்த எரிபொருள் தாங்கி ஒன்று தீப்பற்றியுள்ளது.

ட்ரோன்கள் நடத்திய தாக்குதலால் விமான நிலையத்திலுள்ள எரிபொருள் சேமிப்பு தாங்கி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குவைத் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையலி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் சொத்துக்களுக்கு மாத்திரமே சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்புப் படையினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குவைத் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்துள்ளது.

வெடிப்புச் சத்தங்கள் கேட்டால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, குவைத் விமான நிலையம் பலமுறை ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி ராடார் கட்டமைப்பை இலக்கு வைத்தும், 8 ஆம் திகதி அன்று எரிபொருள் தாங்கிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

தற்போது நிலவும் போர்ச் சூழலால் குவைத் சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே வழமையான வணிக விமான சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் ஆதரவுப் படைகளே இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/241870

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலிவு டிரோன்கள் மூலம் வளைகுடா நாடுகளுக்கு இரான் ஏற்படுத்தும் மறைமுக ஆபத்து என்ன?

இரான் நாட்டின் குறைந்த செலவிலான ட்ரோன்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images

படக்குறிப்பு,இரான் நாட்டின் குறைந்த செலவிலான டிரோன்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கட்டுரை தகவல்

  • சுசேத் வீர் சிங்

  • பாதுகாப்பு நிபுணர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தொடங்கிய பிறகு, மத்திய கிழக்கில் அழிவை ஏற்படுத்தவும், மிகவும் சிக்கலான வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவவும் இரான் நாட்டின் குறைந்த செலவிலான 'காமிகாஸி ஷாஹெத்' டிரோன்கள் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த டிரோன்கள் நவீன போர் முறை மற்றும் அதன் பொருளாதார சமன்பாடுகளில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளன.

இரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் சேர்த்து, இந்த ஷாஹெத் டிரோன்களைப் பயன்படுத்தி மத்திய கிழக்கு முழுவதும் உள்ள சென்சார்கள், ராடார்கள், ராணுவத் தளங்கள், எண்ணெய்-எரிவாயு உள்கட்டமைப்புகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் குழப்பம், நவீன போர்க்களத்தில் டிரோன்கள் மற்றும் வான் சக்தியின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 2022-இல் ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து இந்த ராணுவக் கோட்பாடு உலகெங்கும் பின்பற்றப்படுகிறது.

ஷாஹெத் டிரோன்களால் ஏற்பட்ட பெரும் சேதம், மலிவான காமிகாஸி டிரோன்களைப் பெரிய அளவில் ராணுவ ஆயுதக் கிடங்குகளில் சேர்ப்பதன் உத்தி ரீதியான நன்மை எவ்வளவு பெரியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியாவிற்கு இந்தப் பாடம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இந்தியா தற்போதைய மோதல் பகுதியிலிருந்து சில ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தாலும், அதன் எல்லைகள் 'எதிரிகளால்' சூழப்பட்டுள்ளன.

தாட் (THAAD) அமைப்பு அல்லது PAC-3 மூலம் செய்யப்படும் ஒவ்வொரு இடைமறிப்பும்  1 மில்லியன்  டாலர் முதல் 4மில்லியன் டாலர் வரை செலவாகிறது.

பட மூலாதாரம்,Lockheed Martin

படக்குறிப்பு,தாட் (THAAD) அமைப்பு அல்லது PAC-3 மூலம் செய்யப்படும் ஒவ்வொரு இடைமறிப்பும் 1 மில்லியன் டாலர் முதல் 4மில்லியன் டாலர் வரை செலவாகிறது.

சமமற்ற பொருளாதாரக் கணக்கீடு

பிப்ரவரி 28 அன்று மோதல்கள் தொடங்கியதிலிருந்து, இரான் டிரோன் கூட்டங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குறிப்பாக ஷாஹெத்-136, ஷாஹெத்-107 மற்றும் ஷாஹெத்-238 டிரோன்கள் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்தப்பட்டன.

ஷாஹெத் 136 மற்றும் ஷாஹெத் 107 ஆகியவை பிஸ்டன் இன்ஜின் மூலம் இயங்கும், ஒருமுறை மட்டுமே தாக்கும் 'லாயிட்டரிங் மியூனிஷன்' (இலக்கு இருக்கும் பகுதியில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் ஆயுதங்கள்) ரகத்தைச் சேர்ந்தவை.

அதேசமயம், ஷாஹெத் 238 என்பது ஜெட் இன்ஜின் மூலம் இயங்கும் லாயிட்டரிங் மியூனிஷன் ஆகும்.

இரான் நாட்டு டிரோன்களின் மிகப் பெரிய பலமே, அவை விலை குறைவானவை மற்றும் மிக எளிதாகத் தயாரிக்கக்கூடியவை என்பதுதான். போரில் பயன்படுத்தப்படும் இந்த ஷாஹெத் டிரோன்களின் விலை ஒரு டிரோனுக்குத் தோராயமாக 20,000 முதல் 50,000 டாலர் வரை மட்டுமே ஆகிறது.

இதற்கு நேர்மாறாக, இவற்றைத் தடுப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் மிக மிக விலை உயர்ந்தவை. அமெரிக்காவின் 'தாட்' (THAAD) அல்லது 'பேட்ரியாட்' ஏவுகணை அமைப்பு (PAC-3) மூலம் ஒரு தாக்குதல் ஏவுகணையையோ அல்லது டிரோனையோ நடுவழியில் சுட்டு வீழ்த்த 1மில்லியன் முதல் 4 மில்லியன் டாலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செலவு வேறுபாடு ஒருபுறமிருக்க, மற்றுமொரு சிக்கலும் உள்ளது. எதிரியின் தாக்குதலை தடுக்கும் ஏவுகணைகள் வேகமாகத் தீர்ந்துவிடுவதுடன், அவற்றை மீண்டும் தயாரித்து நிலைநிறுத்த நீண்ட காலம் எடுக்கும்.

விநியோகச் சங்கிலியில் உள்ள பலவீனங்களால், போரில் ஏவப்பட்ட 'டொமாஹாக்' ஏவுகணைகளை ஈடுகட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதலின் ஆரம்ப நாட்களில், இரான் நாட்டு டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தடுக்க அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் 800-க்கும் மேற்பட்ட தடுப்பு ஏவுகணைகளைச் செலவழித்தன.

ஆனால், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் 2025-ஆம் ஆண்டு முழுவதும் வெறும் 620 PAC-3 ஏவுகணைகளை மட்டுமே தயாரித்திருந்தது.

உண்மையில், இரான் அனுப்பும் டிரோன் கூட்டங்களின் விலையை விட, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அவற்றைத் தடுக்கப் பயன்படுத்தும் அமைப்புகளின் விலை பலமடங்கு அதிகம்.

விநியோகச் சங்கிலியில் உள்ள கட்டமைப்பு ரீதியான வரம்புகள் மற்றும் சேதமடைந்தவற்றை மீண்டும் ஈடு செய்வதில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றால் இந்தச் செலவு சமநிலையின்மை இன்னும் தீவிரமடைந்துள்ளது.

இது இந்த மோதலில் ஒரு பாதகமான பொருளாதாரச் சூழலை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம், தன்னை எதிர்க்கும் நாடுகளின் ஒன்றுபட்ட கூட்டணிக்கு எதிராகத் தனது ஒப்பீட்டளவிலான ராணுவப் பலவீனத்தை ஈடுகட்ட இரான் நாட்டுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இரான் நாட்டின் ட்ரோன்கள் அவற்றை எதிர்கொள்ளும் தடுப்பு ஏவுகணைகளை விட மிகக் குறைந்த விலையிலானவை; மேலும் அவற்றை எளிதாகத் தயாரிப்பதோடு மீண்டும் போர்க்களத்தில் பயன்படுத்துவதும் மிக எளிது.

பட மூலாதாரம்,Gailan Haji / Middle East Images / AFP via Getty Images

போரின் மாறியுள்ள இந்த பொருளாதாரச் சமன்பாடுகள், இரான் தனக்குச் சாதகமான உத்திகளைக் கையாளுவதற்கு உதவியுள்ளன.

இரான் நாட்டு டிரோன்கள், அவற்றைத் தடுத்து அழிக்கும் 'இன்டர்செப்டர்' ஏவுகணைகளை விட மிகக் குறைந்த விலையிலானவை.

அதோடு அவற்றை உருவாக்குவதும், மீண்டும் போர்க்களத்தில் நிலைநிறுத்துவதும் மிக எளிது.

இதன் காரணமாக, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் அந்தத் தடுப்பு ஏவுகணைகளை ஏவும் முடிவை எடுப்பதிலும், அதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

இந்தச் செலவு சார்ந்த பொருளாதார நெருக்கடி எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், சில வளைகுடா நாடுகள் தங்கள் வசம் உள்ள தடுப்பு ஏவுகணைகளின் இருப்பைப் பாதுகாப்பதற்காக மாற்று உத்திகளைக் கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஷாஹெத் டிரோன்களைச் சுட்டு வீழ்த்துவதற்காக வளைகுடா நாடுகள் 'எஃப் 16' போர் விமானங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளன. இருப்பினும், இந்த முறையும் கூட அதிகச் செலவு பிடிக்கக்கூடியதுதான். ஒரு F-16 விமானத்தை ஒரு மணிநேரம் விண்ணில் பறக்க விடுவதற்கான செலவு சுமார் 25,000 டாலர் ஆகிறது. இது போரின் மாறியுள்ள பொருளாதாரச் சித்திரத்தை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

இதனால் புதிய ஆயுதங்களையும், தடுப்பு ஏவுகணைகளையும் வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகளின் தொழில் துறைத் திறனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

போரின் இந்த மாறிய பொருளாதாரச் சமன்பாடு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய மற்றும் அதிக நிதி பலம் கொண்ட ராணுவங்களுக்குக் கூட, குறைந்த செலவிலான ஆயுத அமைப்புகளைக் கொண்ட ஒரு சாமர்த்தியமான மற்றும் திறமையான எதிரி சவால் விடுக்க முடியும் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

உளவுத் தகவல்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை போரின் தொழில்நுட்பக் கட்டமைப்பையே தலைகீழாக மாற்றிவிட்டன.

தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய விருப்பத்தேர்வுகள் ராணுவங்களின் திறனைச் சந்தேகத்திற்கு இடமின்றி பல மடங்கு அதிகரிக்கின்றன என்றாலும், எதிர்கால மோதல்களுக்கு இந்த ராணுவங்களுக்குக் குறைந்த செலவிலான தாக்குதல் மற்றும் பாதுகாப்பு விருப்பத்தேர்வுகளும் தேவைப்படும்.

குறைந்த மூலதனம் மற்றும் சாதாரண தொழில்நுட்பம் கொண்ட ராணுவங்களே வெற்றி பெறும் என்பது இதன் பொருளல்ல; ஆனால் இது போர்க்களத்தை நிச்சயமாக இன்னும் சிக்கலானதாக மாற்றுகிறது. இந்தச் சமத்துவமின்மையின் தாக்கம் மேற்கு ஆசியாவின் தற்போதைய மோதலோடு மட்டும் நின்றுவிடாது, வருங்காலத்திலும் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஜனவரி 25 அன்று ஜம்மு-காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியது; தற்போது தெற்காசிய மோதல்களில் ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.

பட மூலாதாரம்,Nasir Kachroo/NurPhoto via Getty Images

படக்குறிப்பு,ஜனவரி 25 அன்று ஜம்மு-காஷ்மீரில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியது

இந்தியாவுக்கான பாடம்

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரிலிருந்து இந்தியா தள்ளி இருந்தாலும், அதன் பொருளாதார மற்றும் எரிசக்தி அதிர்வுகளிலிருந்து முற்றிலும் தப்பிவிட முடியாது. இந்தப் போர் இந்தியாவிற்குப் பல முக்கியமான அர்த்தங்களைக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு கோடையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட வான்வழி மோதலில் தெளிவாகத் தெரிந்தது போல, டிரோன் கூட்டங்கள் இப்போது தெற்காசிய மோதல்களிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன.

மியான்மரில் கூட அரசு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே டிரோன் போர் நடப்பதைக் காண முடிகிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய மோதலிலிருந்து வெளிப்பட்டு வரும் வேகமான தொழில்நுட்ப முன்னேற்றமும், சமச்சீரற்ற டிரோன் உத்திகளும் துணைக்கண்டத்தில் டிரோன் போரை இன்னும் சிக்கலாக்கும்.

இந்திய ராணுவத்தின் டிரோன் ஆயுதக் கிடங்கில் பல 'ஹை-டெக்' டிரோன்கள் உள்ளன. இதில் இஸ்ரேலின் உளவு டிரோன்களான 'ஐஏஐ சர்ச்சர்' மற்றும் 'ஹார்ப்பர்' ஆகியவை அடங்கும். இது தவிர இஸ்ரேலில் இருந்தே வந்த 'லாயிட்டரிங் மியூனிஷன்' ரகங்களான 'ஹாரோப்' மற்றும் 'ஹார்ப்பி' ஆகியவையும் உள்ளன; இவை 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டன.

'ஹார்ப்பி'யின் ஒரு வகையான 'ஸ்கை ஸ்ட்ரைக்கர்', இந்தியாவில் கூட்டுத் தயாரிப்பின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கத் தயாரிப்பான 'எம் கியூ-9 ரீப்பர்' டிரோன்களும் காலப்போக்கில் இந்தியக் கையிருப்பில் சேர்க்கப்படும். 'நாகஸ்த்ரா 1' போன்ற உள்நாட்டு காமிகாஸி டிரோன்களும் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டன.

இருப்பினும், இந்திய ராணுவ ஆயுத கையிருப்பில் உள்ள ஒரு பெரிய மற்றும் தெளிவான குறைபாடு என்னவென்றால், மலிவான மற்றும் எளிதாகத் தயாரிக்கக்கூடிய காமிகாஸி டிரோன்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கின்றன.

இந்தியா காமிகாஸி டிரோன்களைத் தயாரிப்பதற்கும் வாங்குவதற்குமான திட்டங்களை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க வேண்டியது அவசியம். 'நாகஸ்த்ரா' போன்ற உள்நாட்டுத் தீர்வுகளும், சமீபத்திய திட்டங்களான 'கால்' மற்றும் 'சேஷ்நாக்' போன்ற டிரோன்களும் இருந்தாலும், சிறிய அளவிலும் துண்டு துண்டாகவும் செய்யப்படும் கொள்முதல்கள் இவற்றை பெரிய அளவில் பயன்படுத்த ஏற்றதாக மாற்றாது.

ராணுவம் குறைந்த விலை காமிகாஸி டிரோன்களை பத்தாயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், ஆயிரக்கணக்கிலாவது ஆர்டர் செய்ய வேண்டியது அவசியமாகும். குறைந்த எண்ணிக்கையில் ஆர்டர் கொடுத்துவிட்டு அவை கிடைப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்கும் தற்போதைய முறை, நீண்ட காலத்திற்குப் பலன் தராது; குறிப்பாகத் தயாரிப்பாளர்களுக்கு நிதி ரீதியாக இது உதவாது.

இரான் நாட்டின் ட்ரோன்களின் மிகப்பெரிய பலமே அவை மிக மலிவானவை மற்றும் எளிதில் தயாரிக்கப்படக் கூடியவை என்பதுதான்.

பட மூலாதாரம்,Imad Basiri/Anadolu via Getty Images

படக்குறிப்பு,இரான் நாட்டின் டிரோன்களின் மிகப்பெரிய பலமே அவை மிக மலிவானவை மற்றும் எளிதில் தயாரிக்கப்படக் கூடியவை என்பதுதான்.

போர்களில் குறைந்த விலை 'லாயிட்டரிங் மியூனிஷன்' பயன்பாடு இனி வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கவே செய்யும்; இதற்கு இரானின் உத்திகள் மேலும் வேகத்தைக் கொடுத்துள்ளன. அமெரிக்கா கூட தற்போதைய மோதலில் இரானின் சமச்சீரற்ற உத்திகளை எதிர்கொள்ள 'குறைந்த விலை ஆளில்லா போர் தாக்குதல் அமைப்பை' (LUCAS) களமிறக்கியுள்ளது. அமெரிக்காவின் பிரம்மாண்டமான ராணுவத் தளவாட உற்பத்தி கட்டமைப்பைக் கவனிக்கும்போது, இந்தியாவின் மீது இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது.

மேற்கு ஆசியாவிலிருந்து கிடைக்கும் மற்றொரு முக்கியமான பாடம் என்னவென்றால், மலிவான மற்றும் செலவு குறைந்த 'கவுன்டர் டிரோன்' அமைப்புகளைப் பெரிய அளவில் உருவாக்கவும், தயாரிக்கவும், வாங்கவும் வேண்டிய தேவை உள்ளது – யுக்ரேன் - ரஷ்யா போரின் போது இத்தகைய அமைப்புகள் உருவாக்கப்பட்டது போலவே இதுவும் அமைய வேண்டும்.

வளைகுடா நாடுகளிடம் இத்தகைய அமைப்புகள் இல்லாததன் எதிர்மறையான தாக்கம் தற்போதைய போரில் காணப்படுகிறது. இந்த குறைந்த விலை அல்லது மலிவான அமைப்புகள், தற்போதைய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மேலாக ஒரு கூடுதல் பாதுகாப்பாகச் செயல்படும்.

இதன் மூலம் விலை உயர்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்த உறுதி செய்ய முடியும் மற்றும் எதிரியின் குறைந்த விலை காமிகாஸி டிரோன்களை எதிர்கொள்ள அவற்றைப் பயன்படுத்துவதைக் குறைக்க முடியும்.

இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த இந்தியாவில் நிறுவன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மன உறுதி தேவைப்படும்.

ராணுவம் எவ்வளவு விரைவாகவும் திறமையாகவும் பெரிய அளவிலான கொள்முதல் செயல்முறையைச் செய்கிறது என்பதில் இது தங்கியுள்ளது. ஆனால் உண்மையான சிக்கலே இங்குதான் உள்ளது - ஏனென்றால் முழுச் சமன்பாடும் கொள்முதல் செயல்முறையைத் தான் நம்பியுள்ளது, மேலும் இந்தச் செயல்முறை ஒவ்வொரு நிலையிலும் சிக்கல்களை கொண்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0j64ln44qpo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.