Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது

01 Mar, 2026 | 07:39 AM

image

ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்கா– இஸ்ரேல் இணைந்து நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த இராணுவ நடவடிக்கை வாரம் முழுவதும் கடும் குண்டுவீச்சுகளுடன் தொடரும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கை தெஹ்ரான் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுஷ்டிக்கப்படுவதுடன் 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களில் ஒன்றாக தெற்கு ஈரான் பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை குறிவைக்கப்பட்டதாகவும், அதில் பல மாணவர்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்கள், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் நெரிசலான நகரப்பகுதிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதுடன், விமானப் போக்குவரத்து மற்றும் எண்ணெய் கப்பல் அனுப்புகைகளிலும் கடுமையான இடையூறுகளை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அமெரிக்க இராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இதுவரை எந்த அமெரிக்க இராணுவ வீரர்களும் போர்சார்ந்த உயிரிழப்புக்கு உள்ளாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் இந்த தாக்குதல்களை “மத்திய கிழக்கின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்” என விவரித்ததுடன், உலகத் தலைவர்கள் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

மத்திய கிழக்கு முழுவதும் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சமூகம் தணிக்கை முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய அரசு ஊடகம்

காமனெயி கொல்லப்பட்டார், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

1 மார்ச் 2026, 01:08 GMT

புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது அயதுல்லா அலி காமனெயி மரணத்தை இரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

காமனெயி மரணத்திற்கு இரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் தெரிவித்தார்.

இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையுடன், இரானில் உள்ள பல அரசு ஊடகங்கள் அயதுல்லா காமனெயி மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

அதன் அறிக்கையில் 86 வயது அயதுல்லா எப்படி இறந்தார் என்பது குறித்தோ அல்லது அடுத்த தலைவர் யார் என்பது குறித்த தகவல்களோ இல்லை.

தற்போது இரானின் அரசு தொலைக்காட்சி சேனலான IRINN, காமனெயி புகைப்படங்களுடன் பின்னணியில் குரான் ஓதப்படுகிறது.

முன்னதாக, அத்தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் காமனெயி மரணத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டிய இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ அறிக்கையை வாசித்தார். காமனெயியின் "தியாகம்" "அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு எழுச்சியின்" தொடக்கமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் பல இரானிய நகரங்களைத் தாக்கின, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அமெரிக்க அதிபர் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் காமனெயி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அலி காமனெயி மரணம் குறித்த செய்தி தவறானது என்றும், அது அமெரிக்க உளவியல் போரின் விளைவு என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக, இரானின் செய்தி நிறுவனமான ஃபார்ஸ் கூறுகிறது.

புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், டிரம்பின் தகவலை மறுத்து, "டிரம்ப் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்திகளைப் பரப்புவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளார். இதுபோன்ற நடத்தைக்கான முந்தைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று, மஷாத் நகரத்தின் வீழ்ச்சி குறித்த அவரது கூற்று ஆகும், இது பின்னர் ஆதாரமற்றது மற்றும் வெறும் பரபரப்பான ஊடக பிரசாரம் என்று நிரூபிக்கப்பட்டது." என தெரிவித்துள்ளது.

"வரலாற்றில் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கூறியது என்ன?

காமனெயி கொல்லப்பட்டார், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,காமனெயி மரணம் இரான் மக்களுக்கு நீதி என்று டிரம்ப் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார். இது இரான் மக்களுக்கு மட்டுமல்ல, காமனெயி மற்றும் அவரது ரத்தவெறி பிடித்த கும்பலால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் சிறந்த அமெரிக்கர்கள் மற்றும் மக்களுக்குமான நீதி." என பதிவிட்டுள்ளார்.

"அவரால் எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து தப்ப முடியவில்லை, மேலும் இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதுவும் செய்ய முடியாது."

"இரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அவர்களது ஐ.ஆர்.ஜி.சி (புரட்சிகர காவல் படை), ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் பலரும் இனி சண்டையிட விரும்பவில்லை என்றும், எங்களிடம் பாதுகாப்பு கேட்கிறார்கள் என்றும் நாங்கள் கேள்விப்படுகிறோம். நேற்று இரவு நான் சொன்னது போல், 'அவர்களுக்கு இப்போது பாதுகாப்பு கிடைக்கலாம், ஆனால் பின்னர் அவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும்.'"

"ஐ.ஆர்.ஜி.சி மற்றும் காவல்துறை இரானின் தேசபக்தர்களுடன் அமைதியாக ஒன்றிணைந்து, ஒரு பிரிவாக, நாட்டை அதற்கு தகுதியான மகத்துவத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இந்த செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும், ஏனென்றால் காமனெயி இறந்தது மட்டுமல்லாமல், நாடு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட ஒரே நாளில் அழிக்கப்பட்டுள்ளது."

"இருப்பினும், மத்திய கிழக்கு மற்றும் உண்மையில் உலகம் முழுவதும் அமைதிக்கான நமது இலக்கை அடைய, வாரம் முழுவதும் அல்லது தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு தொடரும்."

இதற்கிடையில், காமனெயி மரணம் குறித்த கூற்றுகளைத் தொடர்ந்து, இரானிய நகரமான கராஜில் கொண்டாட்டங்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்டு பிபிசி பாரசீக மொழி சேவையால் சரிபார்க்கப்பட்ட ஒரு காணொளியில், இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி மரணம் குறித்த செய்திகளுக்குப் பிறகு, கராஜில் சில இரானியர்கள் கொண்டாடுவதைக் காண முடிகிறது. இருப்பினும், டொனால்ட் டிரம்ப் பதிவிடுவதற்கு முன்பே இது நிகழ்ந்தது.

காமனெயி கொல்லப்பட்டார், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Reuters

'இரானிய அதிகாரிகள் 40 பேர் உயிரிழப்பு'

பிபிசி கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசிய உளவு மற்றும் ராணுவ வட்டாரங்கள், தாக்குதல்களில் இரானிய அதிகாரிகள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன.

இந்த அதிகாரிகள் ஒரே இடத்தில் இருந்தார்களா அல்லது பல்வேறு இடங்களில் இருந்தார்களா என்பது தெரியவில்லை.

இறந்தவர்களுள் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் அடங்குவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

'இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய அரசு ஊடகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் - நெதன்யாகு

Mar 1, 2026 - 12:58 AM

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் - நெதன்யாகு

ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தெஹ்ரான் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வௌியிட்டுள்ளார்.

இந்த சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.

எனினும், அவர் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இன்றைய தினம் உயர்மட்டத் தலைவரிடமிருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தேவையான காலம் வரை தொடரும் என்று குறிப்பிட்ட இஸ்ரேலியப் பிரதமர், இஸ்ரேலின் முன்னணி கட்டளைப்பிரிவு வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலிய குடிமக்களைக் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரான் மக்களுக்கு உரையாற்றிய நெதன்யாகு, இந்தத் தாக்குதல்கள் அவர்கள் தாம் அனுபவித்து வரும் கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள உதவும் என்று கூறினார்.

ஈரான் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக இது அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெருந்திரளாகத் வீதிகளில் இறங்கி இந்தப் பணியை முடித்துவிடுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் நீங்கள் ஒன்றிணைவதற்கு இதுவே சரியான நேரம் என்றும், ஒரு வரலாற்றுப் பணிக்காக ஒன்றுபடுங்கள் என்றும் அவர் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தலைவர் உயிருடன் இருப்பதாக ஈரான் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் - நெதன்யாகு

ஈரான் அதி உயர் தலைவரின் மகள், மருமகன் கொலை!

Mar 1, 2026 - 06:24 AM

ஈரான்  அதி உயர்  தலைவரின் மகள், மருமகன் கொலை!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரானில் நடத்திய தாக்குதலில் ஈரானின் அதி உச்ச தலைவரின் மகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஊடகம் ஒன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த தாக்குதலில் ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போரில் காமேனியும் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஈரானிய அதிகாரிகள் இத்தகைய தகவல்களை உளவியல் போர் எனக் கூறி மறுப்பு வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதி உயர் தலைவரின் மகள், மருமகன் கொலை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

Mar 1, 2026 - 07:50 AM

யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

1939 ஆம் ஆண்டு வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் ஒரு மத அறிஞரின் மகனாக அலி கமேனி பிறந்தார்.

1962 இல் ஷா மொஹமட் ரேசா பஹ்லவிக்கு எதிராக அயதுல்லா கொமேனியின் மத எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தார்.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அலி கமேனி துணை பாதுகாப்பு அமைச்சரானார் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை ஒழுங்கமைக்க உதவினார்.

1989 ஜூன் மாதம் கொமேனியின் மறைவுக்குப் பிறகு, நிபுணர்கள் பேரவை அலி கமேனியை புதிய அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

அரசியலமைப்பு விதிகளின்படி ஷியா மத குருமார்களிடையே தேவையான தகுதியான 'மர்ஜா-ஏ தக்லித்' அல்லது 'கிராண்ட் அயதுல்லா' நிலையை அவர் அடைந்திருக்கவில்லை என்றாலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தச் சூழலைச் சரிசெய்யும் வகையில், அதி உயர் தலைவர் இஸ்லாமிய புலமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு திருத்தப்பட்டது.

இதன் மூலம் அலி கமேனி அயதுல்லாவாக மாறவும், அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது.

அவர் ஈரானின் அரசியல் மற்றும் அதன் ஆயுதப்படைகளின் மீது ஒரு வலுவான பிடியைப் பேணி வந்தார்.

மேலும் ஆளும் முறைக்கு எதிரான சவால்களை சில நேரங்களில் வன்முறை மூலம் கடுமையாக ஒடுக்கினார்.

அயதுல்லா கமேனி, அமெரிக்காவுடனான தற்போதைய மோதல் உட்பட வெளிவிவகாரங்களில் தொடர்ந்து கடும்போக்கு நிலைப்பாடுகளை கையாண்டார்.

அவர் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து சந்தேகம் கொண்டவராகவே இருந்தார்.

மேலும் இஸ்ரேல் அரசு அழிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என பகிரங்கமாக அறிவித்தார்.

இறுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்.

ஆறு குழந்தைகளைக் கொண்ட கமேனியின் ஆட்சியின் போது, ஈரானில் ஏழு ஜனாதிபதிகள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் அரசியலுக்கு அப்பால்….

ஈரான்…. ரஷ்யாவையும், சீனாவையும் நம்பி….

அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கண் மூடித்தனமாக எதிர்க்க வெளிக்கிட்டு, இன்று தனது நாட்டின் தலைவரையே இழந்து நிற்கிறது.

அந்த இரு நண்பர்களும்…. ஈரானை உசுப்பேத்தி விட்டுட்டு, கழன்று விட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமனெயி கொல்லப்பட்ட பிறகு இரானில் என்ன நடக்கிறது? ஒரு புகைப்படத் தொகுப்பு

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

9 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட செய்தியை சில இரானியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நேற்று இரவு பல நகரங்களில் மக்கள் கொண்டாடியதாக வெளியான வீடியோக்களை பிபிசி பெர்சியன் சரிபார்த்தது.

இன்று காலை, தெருக்களில் நடக்கும் பெரும்பாலானவை அதிஉயர் தலைவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் அரசாங்க சார்பு நிகழ்வுகளாகத் தெரிகிறது என்று பிபிசி பெர்சியன் தெரிவித்துள்ளது. இரானில் இன்னும் அதிகாலை நேரம் தான், அது பிற்பகலில் மாறக்கூடும்.

மத்திய இரானில் உள்ள இஸ்ஃபஹானின் தெருக்களில் உள்ள காட்சி மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் கார் ஹாரன்களை அடித்து ஆரவாரம் செய்வதை காட்டுகின்றன.

இரவு வானத்தில் பட்டாசுகள் வெடிக்கும்போது, நெருப்பைச் சுற்றி மக்கள் கூடிவருவதை மற்றொரு வீடியோ காட்டுகிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் பல குடும்பங்களும் தெருக்களிலும் வீடுகளிலும் கொண்டாடினர்.

டெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜிலும் கொண்டாட்டங்கள் நடந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

டெஹ்ரான் தெருக்களில் மக்கள் துக்கத்தில் இருப்பதையும், சிலர் காமனெயி புகைப்படங்களை வைத்திருப்பதையும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள படங்கள் காட்டுகின்றன.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,IRINN

படக்குறிப்பு,ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பல இரானிய அரசு ஊடக தொலைக்காட்சி சேனல்கள் காமனெயி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தின.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Mamlekate/X

படக்குறிப்பு,இரானின் மத்திய நகரமான கஜாரில் எடுக்கப்பட்ட சரிபார்க்கப்பட்ட வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டில் உள்ளதைப் போல, சனிக்கிழமை பிற்பகுதியில், சில இடங்களில் இரானிய அதிஉயர் தலைவர் காமனெயி மரணத்தை சிலர் கூடி கொண்டாடியதைக் காண முடிந்தது.

டெஹ்ரானில் சூரியன் உதிப்பதற்கு முன்பே, சில மணி நேரமாக வெடிப்புச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டன.

சனிக்கிழமை இரானிய தலைநகரம் டஜன்கணக்கான கொடிய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொண்டது. இரான் அதிஉயர் தலைவர் அலி காமனெயி மரணத்துக்குப் பிறகும் தாக்குதல் தொடரும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இரானின் பல இலக்குகளைத் தாக்கத் தொடங்கி 24 மணிநேரம் நெருங்கி வரும் நிலையில், இரானில் என்ன நடக்கிறது என்பதை காட்டும் புகைப்படங்களின் தொகுப்பைப் பார்க்கலாம்.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,SUPPLIED

படக்குறிப்பு,டெஹ்ரானில் சூரியன் உதிப்பதற்கு முன்பே, சில மணி நேரமாக வெடிப்புச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டன.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, இரானின் தலைநகர் டெஹ்ரானில் புகை மூட்டம் எழுவதைக் காணலாம்.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடும் காட்சி.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பல இரானியர்கள் தலைநகரிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கிய பின்னர், தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு தேடி ஓடுவதைக் காண முடிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

காமனெயி கொல்லப்பட்ட பிறகு இரானில் என்ன நடக்கிறது? ஒரு புகைப்படத் தொகுப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் உயர் தலைவர் உயிரிழப்பு : 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்; ஒரு வாரம் பொது விடுமுறை - ஈரான் அரசு அறிவிப்பு

01 Mar, 2026 | 11:45 AM

image

ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் ஈரானின் உயர் தலைவரின் மறைவை முன்னிட்டு அந்நாட்டில் ஒரு வாரத்துக்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய பாரிய தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, அவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோரும் உயிரிழந்துவிட்டதாக ஈரானின் ஃபோர்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டது.

மேலும், ஈரானின் உயர் தலைவர் உயிரிழந்த தகவலை அந்நாட்டு அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதிப்படுத்தியதையடுத்து, பல்வேறு நாடுகளில் உள்ள ஈரான் தூதரகங்களில் அந்நாட்டு கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஈரானின் உயர் தலைவர் உயிரிழப்பு : 40 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்; ஒரு வாரம் பொது விடுமுறை - ஈரான் அரசு அறிவிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமனெயி மட்டுமல்ல இரானில் கொல்லப்பட்ட மற்ற தலைவர்கள் யார்? முழு விவரம்

புரட்சிகர காவல் படையின் தளபதி முகமது பக்போர்(இடது), ஆயதுல்லா அலி காமனெயி, பாதுகாப்பு அமைச்சர் அஸிஸ் நசிர்ஸதே (வலது)

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,புரட்சிகர காவல் படையின் தளபதி முகமது பக்போர் (இடது), ஆயதுல்லா அலி காமனெயி, பாதுகாப்பு அமைச்சர் அஸிஸ் நசிர்ஸதே (வலது)

கட்டுரை தகவல்

  • ஹஃப்சா கலீல் மற்றும் டேவிட் கிரிட்டன்

  • பிபிசி நியூஸ்

  • 1 மார்ச் 2026, 07:19 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

இரான் நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மரணமடைந்துவிட்டதாக, அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் காமனெயி மரணம் குறித்து பதிவிட்டிருந்தார்.

சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது நடத்திய மிகப்பெரிய அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து காமனெயி மரணச் செய்தி வெளியாகியுள்ளது.

"டெஹ்ரானில் உள்ள காமனெயி இல்லம் ஒரு தீவிரமான திடீர் தாக்குதலில் அழிக்கப்பட்டது. 86 வயதான அந்த மதத் தலைவர் உயிரிழந்ததற்கான பல அறிகுறிகள் உள்ளன," என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள நான்கு வளைகுடா அரபு நாடுகளான - பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் - ஆகியவற்றின் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவித் தாக்கியது.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆயதுல்லா அலி காமனெயி (கோப்புப் படம்)

இரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையின்படி, ஆயதுல்லா அலி காமனெயி சனிக்கிழமை அதிகாலை தனது அலுவலகத்தில் "பணிகளில் தீவிரமாக இருந்தபோது" உயிரிழந்தார் என அரசு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் அறிக்கைகளை வாசித்தார்.

இதற்கிடையில், டெஹ்ரானில் உள்ள காமனெயி அலுவலகமான 'லீடர்ஷிப் ஹவுஸ்' வளாகத்தின் பல பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பிபிசி வெரிஃபை (BBC Verify) உறுதிப்படுத்தியுள்ளது.

இரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், காமனெயி தனது அலுவலகத்திலேயே உயிரிழந்தது, அவர் எங்கோ ஒளிந்துகொண்டிருப்பதாக பரவிய செய்திகள் "எதிரிகளின் உளவியல் போர்" என்பதற்கான ஆதாரம் என்று கூறியுள்ளது.

இரான் ராணுவத்தின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் வான் தாக்குதலில் உயிரிழப்பு

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அப்துல்ரஹிம் மௌசவி (கோப்புப் படம்)

இரானிய ராணுவத்தின் தலைமை தளபதி அப்துல்ரஹிம் மௌசவி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அஸிஸ் நசிர்ஸதே ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் மேலும் பல மூத்த ராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

பிபிசி பாரசீக மொழி சேவையின்படி, மௌசவியின் மரணத்தை 'நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல் மற்றும் புனித பாதுகாப்பு விழுமியங்களைப் பரப்புவதற்கான அறக்கட்டளை' என்கிற இரானிய அமைப்பு உறுதி செய்துள்ளது.

"சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் மௌசவி மற்றும் அஸிஸ் நசிர்ஸதே உடன் புரட்சிகர காவல் படையின் தளபதி முகமது பக்போர் மற்றும் உச்ச பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி ஷம்கானி ஆகியோர் கொல்லப்பட்டனர்," என அந்த இரானிய அமைப்பு தெரிவித்துள்ளது.

"அவர்கள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது கொல்லப்பட்டனர், பாதிக்கப்பட்ட மற்றவர்களின் பெயர்கள் பின்னர் வெளியிடப்படும்," எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரானில் என்ன நடக்கிறது?

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பிந்தைய காட்சி

சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 09:30 மணியளவில், தலைநகர் டெஹ்ரானில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இரான் ஊடகங்கள் தெரிவித்தன. நகரின் ஜம்ஹூரி சதுக்கம் மற்றும் ஹசன் அபாத் சதுக்கத்துக்கு மேல் புகை மூட்டம் காணப்பட்டது.

டெஹ்ரானுக்கு அருகிலுள்ள கரஜ், நாட்டின் மையப்பகுதியில் உள்ள இஸ்ஃபஹான் மற்றும் கோம், மற்றும் மேற்கில் உள்ள கெர்மான்ஷா ஆகிய நகரங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிபிசி உறுதிப்படுத்திய காணொளிகளில், டெஹ்ரானில் உள்ள காமனெயி இல்லமான லீடர்ஷிப் ஹவுஸ் வளாகத்தின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வெடிப்புகள் நிகழ்ந்ததைக் காண முடிந்தது.

செயற்கைக்கோள் படங்களும் அந்த வளாகத்தில் கட்டடங்கள் கருப்பாக மாறியிருப்பது, இடிபாடுகள் மற்றும் புகை மண்டலத்தைக் காட்டின.

தாக்குதல் நடந்த சமயத்தில் ஆயதுல்லா அலி காமனெயி அங்கு இருந்தாரா, இல்லையா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்ல

சனிக்கிழமை மதியம் அதிஉயர் தலைவரின் உடல்நிலை குறித்துக் கேட்கப்பட்டபோது, இரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், 'எதையும் உறுதிப்படுத்தும் நிலையில் தான் இல்லை' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், சனிக்கிழமை மாலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு தொலைக்காட்சி உரையில், 'டெஹ்ரானின் மையப்பகுதியில் இருந்த சர்வாதிகாரி காமனெயியின் வளாகத்தை நாங்கள் அழித்துவிட்டோம். அந்தச் சர்வாதிகாரி இப்போது உயிருடன் இல்லை என்பதற்கான பல அறிகுறிகள் உள்ளன' என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், 'வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமனெயி இறந்துவிட்டார்' என்று எழுதினார்.

டிரம்ப் மேலும் கூறுகையில், 'இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றிய எங்களது உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதையும் செய்ய முடியாமல் போனது. இரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

டெஹ்ரானில் தாக்குதல்கள்

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,ISNA/AFP via Getty Images

படக்குறிப்பு,இரான் தலைநகர் டெஹ்ரான் அருகே நடைபெற்ற தாக்குதலுக்கு பிந்தைய காட்சி

செய்திகளின்படி, தலைநகரில் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் அலுவலகமும் முதல் தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டது. அதிபர் பெசெஷ்கியான் 'பாதுகாப்பாக' இருப்பதாக இரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது, பின்னர் அவர் ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.

நாள் முழுவதும் தாக்குதல்கள் மற்றும் வெடிப்புகள் குறித்த பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் சனிக்கிழமை காலை கிட்டத்தட்ட முழுமையான இணைய முடக்கம் இருந்ததை கண்காணிப்பாளர்கள் கண்டறிந்தனர்.

டெஹ்ரான், கரஜ் மற்றும் கோம் ஆகியவற்றுடன் மேற்கு மாகாணங்களான லோரெஸ்தான், ஹமாதான், கெர்மான்ஷா மற்றும் இலாம், வடமேற்கில் தப்ரிஸ், மற்றும் தெற்கு வளைகுடா மாகாணமான ஹோர்மோஸ்கானின் சில பகுதிகள், கெஷ்ம் தீவு உட்பட பல இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக, இரான் அரசு செய்தி நிறுவனமான இர்னா தெரிவித்துள்ளது.

மேற்கு நகரமான டெஸ்புல், தெற்கில் ஷிராஸ் மற்றும் கெர்மானின் புறநகர்ப் பகுதிகள், வடமேற்கில் குர்திஸ்தான் மற்றும் மேற்கு அஜர்பைஜான், மத்திய மாகாணமான மர்காசி, வடக்கில் கஸ்வின் மற்றும் ஜான்ஜன், மற்றும் தென்கிழக்கில் சிஸ்தான் பலுசிஸ்தான் ஆகியவற்றிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சனிக்கிழமை மாலை, இரான் செம்பிறை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறுகையில், இரான் நாட்டின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இலக்கு வைக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அன்று இரவு 20:45 மணி வரை நாடு முழுவதும் மொத்தம் 201 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 747 பேர் காயமடைந்தனர், ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த விரிவான விவரங்களை அவர் அளிக்கவில்லை.

ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் மினாப்பில் உள்ள சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

பிபிசியால் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை நாட்டின் வான்பரப்பு மூடப்படுவதாக இரான் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறியது என்ன?

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,@netanyahu

படக்குறிப்பு,இஸ்ரேலின் இருப்புக்கான அச்சுறுத்தலை நீக்கவே இரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நெதன்யாகு கூறினார்

சனிக்கிழமை காலை முதல் அறிக்கையை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டார். அவர் கூறுகையில், தனது நாடு "அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக இரான் மீது முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்தியுள்ளது" என்றும், இஸ்ரேலியர்கள் பதில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்குத் தயாராக இருக்குமாறும் எச்சரித்தார்.

சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டார். அதில் தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்திய அவர், இதன் நோக்கம் "இரான் ஆட்சியிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதாகும்" என்று கூறினார்.

"நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழிப்போம், அவர்களின் ஏவுகணைத் தொழிலை மண்ணோடு மண்ணாக ஆக்குவோம். அது முழுமையாக அழிக்கப்படும். நாங்கள் அவர்களின் கடற்படையை அழிப்போம். இப்பிராந்தியத்தின் பயங்கரவாத பினாமிகள் இனி இப்பகுதியையோ அல்லது உலகையோ சீர்குலைக்க முடியாது என்பதையும், எங்களது ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த முடியாது என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்," என அவர் மேலும் கூறினார்.

"இரான் அணு ஆயுதங்களைப் பெறாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று டிரம்ப் கூறினார்.

முன்னதாக, டிரம்ப் பல வாரங்களாக இரான் நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார். "இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்த புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், ராணுவ நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவேன்" என்று அவர் கூறியிருந்தார்.

தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்கானது என்றும், தான் அணு ஆயுதங்களைப் பெற விரும்பவில்லை என்றும் இரான் பலமுறை கூறியுள்ளது.

இரான் பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை கைவிட்டால் முழுமையான பாதுகாப்பை பெறலாம் அல்லது "நிச்சயமான மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று டிரம்ப் கூறினார்.

இரான் குடிமக்களையும் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், மதகுருமார்கள் வர்க்கத்தை தூக்கியெறியத் தயாராக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

"எங்கள் வேலை முடிந்ததும், உங்கள் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை நீங்களே எடுத்துக்கொள்ள வேண்டும். இது பல தலைமுறைகளில் உங்களுக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார்.

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இரான் மக்களின் சுதந்திரத்துக்கான நேரம் நெருங்கிவிட்டது என்று டிரம்ப் கூறினார்

இஸ்ரேலும் அமெரிக்காவும் "இரான் பயங்கரவாத ஆட்சியால் உருவான தனது (இஸ்ரேலின்) இருப்புக்கான அச்சுறுத்தலை அகற்ற இந்த நடவடிக்கையை" மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

டிரம்புக்கு நன்றி தெரிவித்த அவர், "முழு மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாக மாறும் வகையில் இரான் அணு ஆயுதங்களை பெற அனுமதிக்கக் கூடாது" என்ற தனது செய்தியை மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தத் தாக்குதல்கள் "வீரம் மிக்க இரான் மக்கள் தங்கள் விதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கும்" என்று அவர் கூறினார்.

"இரான் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அடக்குமுறையிலிருந்து விடுபடவும், சுதந்திரமான மற்றும் அமைதியை விரும்பும் இரான் நாட்டை உருவாக்கவும் இதுவே தருணம்" என்று நெதன்யாகு கூறினார்.

அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் "இரான் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைப்பைத் தகர்க்க, உடனடி அச்சுறுத்தலாக இருக்கும் இடங்களுக்கு முன்னுரிமை அளித்து இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளன" என்று தெரிவித்தது.

இந்த இலக்குகளில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையகம் மற்றும் கட்டுப்பாட்டு வசதிகள், வான் பாதுகாப்பு திறன்கள், ஏவுகணை மற்றும் டிரோன் ஏவுதளங்கள் மற்றும் ராணுவ விமான ஓடுதளங்கள் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மேற்கு மற்றும் மத்திய இரான் பகுதிகளில் "ஏவுகணை வரிசைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலில்" சுமார் 200 போர் விமானங்கள் பங்கேற்றதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

போர் விமானங்கள் ஒரே நேரத்தில் சுமார் ஐந்நூறு இலக்குகளின் மீது நூற்றுக்கணக்கான ஆயுதங்களை வீசியதாகவும், இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் அடங்கும் என்றும், இது இரான் நாட்டின் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவு குறைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் "காமனெயி ஆட்சியின் முக்கிய அதிகாரிகள், புரட்சிகர காவல்படையின் தளபதிகள் மற்றும் அணுசக்தி திட்டத்தின் முக்கிய நபர்களைச் செயலிழக்கச் செய்துவிட்டன" என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.

இரான் பாதுகாப்பு அமைப்பின் ஏழு முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் இரான் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும் காமனெயியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான அலி சம்கானி, ஐஆர்ஜிசி தளபதி மேஜர் ஜெனரல் முகமது பாக்பூர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே ஆகியோர் அடங்குவர்.

ஐடிஎஃப் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர் கூறுகையில், கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுக்கும் இரான் நாட்டுக்கும் இடையே நடந்த 12 நாள் போருக்குப் பிறகு, இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க அரசியல் மற்றும் ராணுவத் தலைமை சனிக்கிழமை தாக்குதல்களுக்காக ஓர் "ஆழமான மற்றும் முழுமையான கூட்டு செயல்பாட்டுத் திட்டமிடல் செயல்முறையை" தொடங்கியதாகத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்களின் போது, இரான் நாட்டின் மூன்று குறிப்பிட்ட அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது.

இரான் என்ன பதில் அளித்துள்ளது?

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் ஏவுகணைகளை ஏவியது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா "முற்றிலும் தூண்டுதலற்ற, சட்டவிரோதமான மற்றும் அநியாயமான" போரைத் தொடங்கியதாக இரான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டினார்.

இரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி எக்ஸ் தளத்தில், "எமது சக்திவாய்ந்த ராணுவம் இந்த நாளுக்காகத் தயாராக உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு தகுந்த பாடத்தைக் கற்பிப்போம்" என்று எழுதினார்.

இரான் பாதுகாப்பு அமைச்சகமும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் "கொடூரமான தாக்குதலுக்கு" "கடுமையான மற்றும் இரு நாடுகளிலும் வருத்தத்தை ஏற்படுத்தும்" பதிலடியைக் கொடுப்பதாகச் சூளுரைத்தது.

இரான் நாட்டின் தஸ்னிம் செய்தி நிறுவனம், ஐஆர்ஜிசி-யை மேற்கோள் காட்டி, அதன் படைகள் இஸ்ரேலின் பல இடங்கள் மீதும், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ஐந்து முக்கிய ராணுவ தளங்களான - கத்தாரில் உள்ள அல் உதைத் விமான தளம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஐந்தாவது கடற்படைத் தலைமையகம், குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமான தளம் மற்றும் ஜோர்டானில் உள்ள முவஃபக் சால்டி விமான தளம் - ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாகக் கூறியது.

அந்த செய்தியின்படி, அமெரிக்காவின் போருக்கு உறுதுணையாக இருக்கும் கப்பல் மீது ஏவுகணைகளால் "கடுமையான தாக்குதல்கள்" நடத்தப்பட்டதாகவும், கத்தாரில் உள்ள அமெரிக்காவின் PF-132 ரேடார் அமைப்பு "முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும்" ஐஆர்ஜிசி கூறியுள்ளது.

இதற்கிடையில், இப்பிராந்தியத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படைப் பிரிவான 'யுனாவ்ஃபோர் அஸ்பைட்ஸ்' (EUNAVFOR ASPIDES), வளைகுடா பகுதியில் "எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை" என்று ஐஆர்ஜிசி வானொலி செய்தி மூலம் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தது. உலகின் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20% இந்த வழியாகவே செல்கிறது.

அமெரிக்க மத்திய கட்டளை மையம் தனது படைகள் சனிக்கிழமை "இரான் ஏவுகணை மற்றும் டிரோன்களின் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தன" என்று கூறியது.

அமெரிக்கர்கள் எவரும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்றும், இப்பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகளுக்கு "குறைந்தபட்ச சேதமே ஏற்பட்டுள்ளது மற்றும் இதனால் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் இல்லை" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் இஸ்ரேலிய ஊடகங்கள், இரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 150 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சிறியவை என்றும், அத்துடன் டஜன்கணக்கான தாக்குதல் டிரோன்களையும் ஏவியதாகத் தெரிவித்தன.

வான் பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகளைத் தடுத்ததாகவும், சில திறந்தவெளிகளில் விழுந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேகன் டேவிட் அடோம் ஆம்புலன்ஸ் சேவை, மத்திய இஸ்ரேலில் காயமடைந்த ஒரு சிறுவனுக்கும், வடக்கில் காயமடைந்த ஒருவருக்கும் சிகிச்சை அளித்துள்ளதாகக் கூறியது.

வடக்கில் மற்றொரு நபர் ஏவுகணை வெடிப்புக்குப் பிறகு உயரமான இடத்திலிருந்து விழுந்து காயமடைந்ததாகவும் அது மேலும் கூறியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம், தனது வான் பாதுகாப்பு அமைப்பு "இரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்ளடக்கிய ஒரு தாக்குதலை" எதிர்கொண்டதாகவும், அவற்றில் பலவற்றைத் இடைமறித்ததாகவும் கூறியது.

இருப்பினும், அபுதாபி நகரில் விழுந்த இடிபாடுகளால் பாகிஸ்தான் குடிமகன் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். துபையில் உள்ள பிரபலமான பாம் டெவலப்மென்ட் பகுதியில் நான்கு பேர் காயமடைந்தனர்.

துபை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை மாலை நடந்த ஒரு "சம்பவத்தில்", உலகின் பரபரப்பான சர்வதேச போக்குவரத்து விமான நிலையமான துபை சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததாகவும், நான்கு பணியாளர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான முனையங்களிலிருந்து பயணிகள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டதாக அது தெரிவித்தது.

அமெரிக்க தளம் அமைத்திருக்கும் அலி அல் சலேம் விமான தளத்தை இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் குறி வைத்ததாகவும், இதனால் மூன்று குவைத் வீரர்கள் காயமடைந்ததாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் ஒரு டிரோன் தாக்குதல் நடந்துள்ளது, இதனால் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதுடன், பொருட் சேதமும் ஏற்பட்டது.

பஹ்ரைன் உள்துறை அமைச்சகம், மனாமா மற்றும் முஹராக் ஆகிய இடங்களில் மூன்று குடியிருப்பு கட்டடங்கள் டரோன் தாக்குதல்கள் மற்றும் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணையின் உடைந்த துண்டுகள் விழுந்ததால் சேதமடைந்ததாகக் கூறியது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவு சேவை மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடந்ததாகவும் பஹ்ரைன் அரசாங்கம் தெரிவித்தது.

தனது நாட்டை நோக்கி ஏவப்பட்ட பல ஏவுகணைகளைத் தனது ராணுவம் தடுத்து நிறுத்தியதாக கத்தார் கூறியது. தலைநகர் தோஹாவில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

இங்கே பயணம் செய்வது பாதுகாப்பானதா?

காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மத்திய கிழக்கு நிலவரம் காரணமாக விமான சேவைகள் பெரிய அளவில் நிறுத்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமை பெய்ரூட் விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது

பெரிய விமான நிறுவனங்கள் பாதுகாப்பு கவலைகளைச் சுட்டிக்காட்டி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான விமானங்களைத் திருப்பிவிட்டுள்ளன அல்லது ரத்து செய்துள்ளன.

வான்பயணங்கள் பகுப்பாய்வு நிறுவனமான 'சிரியம்' அளித்த தரவுகளின்படி, சனிக்கிழமை இப்பகுதியில் தரையிறங்க வேண்டிய சுமார் 4,218 விமானங்களில் 966 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை 4,329 திட்டமிடப்பட்ட விமானங்களில் 716 விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

விஸ்ஏர் (Wizz Air) நிறுவனம் இஸ்ரேலுக்கு மார்ச் 7 வரைpயலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபை மற்றும் அபுதாபி, ஜோர்டானில் உள்ள அம்மான் மற்றும் செளதி அரேபியாவிற்கு செல்லும் விமானங்களை செவ்வாய்க்கிழமை வரையிலும் நிறுத்தி வைத்துள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் டெல் அவிவ் மற்றும் பஹ்ரைனுக்கான விமானங்களை புதன்கிழமை வரை ரத்து செய்துள்ளது.

"நீங்கள் லண்டன் ஹீத்ரோ மற்றும் அபுதாபி, அம்மான், பஹ்ரைன், தோஹா, துபை அல்லது டெல் அவிவ் இடையே விமானத்தில் செல்லவிருந்தால், மார்ச் 6 வரை உங்கள் விமானத்தை எவ்வித கட்டணமும் இன்றி மாற்றிக்கொள்ளலாம்" என்று நிறுவனம் கூறியுள்ளது.

அந்த நிறுவனத்தின் படி, "மார்ச் 4 வரை பயணம் செய்யும் வாடிக்கையாளர்கள் முழு பணத்தையும் திரும்பப் பெற கோரலாம்."

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில், "சுவிஸ் மற்றும் லுஃப்தான்சா குழும ஏர்லைன்ஸ் மார்ச் 7 வரை டெல் அவிவ், (லெபனானில் உள்ள) பெய்ரூட், அம்மான், (இராக்கில் உள்ள) எர்பில் மற்றும் டெஹ்ரானுக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன" என்று கூறியது.

அரசு ஊடகங்களின்படி, குவைத் விமான போக்குவரத்து ஆணையம் அடுத்த அறிவிப்பு வரும் வரை இரான் நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாகக் கூறியுள்ளது.

துபைக்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் விமானங்களை எமிரேட்ஸ் நிறுவனம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. லுஃப்தான்சா, ஏர் இந்தியா, விர்ஜின் அட்லாண்டிக் மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

இராக் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட இப்பகுதியின் சில நாடுகளும் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது வான்வெளியைச் "சிறிதளவும் மற்றும் சில காலத்துக்கும்" மூடியுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c99j7myzxv8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.