Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா?

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகளை இரான் உருவாக்கி வருவதாக டிரம்ப் கூறியது, அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளால் ஆதரிக்கப்படவில்லை

கட்டுரை தகவல்

  • ஜெரிமி போவன்

  • சர்வதேச ஆசிரியர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அமெரிக்கா, இஸ்ரேல், இரான் இடையே புதிய போர் தொடங்கி நான்கு நாட்கள் கடந்துவிட்டன.

அமெரிக்காவின் நட்பு நாடுகளான அரபு நாடுகளையும், வளைகுடா முழுவதும் இரானின் அண்டை நாடுகளையும் இரான் தாக்க முடிவெடுத்த பிறகு, இதுவொரு பிராந்திய போராக உருவெடுத்தது. பிரிட்டனில் உள்ள தனது தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு பிரிட்டன் தெரிவித்து வந்த மறுப்பைக் கைவிட்டுள்ளது.

போர் இன்னும் அதிகரித்து வருகிறது. எனது கைபேசியில் செய்திகள் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன. குவைத்தின் வான் பாதுகாப்பு அமைப்பால் மூன்று அமெரிக்க எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வெளியான அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் அறிக்கையை நான் படித்தேன்.

அது அவர்களின் சொந்த தரப்பால் தற்செயலாக நடத்தப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது. இந்தக் கட்டுரையை நான் எழுதி முடிக்கும் நேரத்தில், மேலும் ஏவுகணைகள் ஏவப்பட்டிருக்கலாம், தற்போது உயிருடன் இருக்கும் சிலர் உயிரிழந்திருக்கலாம்.

போர் எப்போது அல்லது எப்படி முடியும் என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் கணித்துவிட இயலாது. ஒரு போர் தொடங்கியவுடன், அடுத்து நடப்பனவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், மோதிக்கொள்ளும் தரப்புகள் இந்தப் போர் எப்படி முடிய வேண்டுமென விரும்புகின்றன என்பது குறித்த சில வழிகளை இங்கு காணலாம்.

வெற்றிக்கான டிரம்பின் வரையறை

ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா லாகோ இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், போர் தொடங்கியதாக அறிவித்ததில் இருந்து, அதிபர் டிரம்ப் எப்போதும் போல அமெரிக்க சக்தியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிற அதிபர்கள் ஓவல் அலுவலகத்தில் உள்ள ரெசலூட் மேசைக்குப் பின்னால் இருந்து ஒரு புனிதமான உரையைப் பேசுவதை தேர்வு செய்திருக்கலாம்.

ஆனால், கழுத்து பட்டன் அணியப்படாத திறந்த சட்டையை அணிந்திருந்தார். அவரது கண்கள் வரை இழுத்துவிட்ட வகையில் ஒரு வெள்ளை பேஸ்பால் தொப்பியை அணிந்திருந்தார். 1979இல் இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலாக இருந்து வருவதாக வாதிட்டு, அவர் ஒரு நீண்ட குற்றப்பத்திரிகையை வாசித்தார்.

டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் தனது மனதை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அந்த உரையில், வெற்றி குறித்த தனது கருத்தாக்கத்திற்கு ஒரு வரையறையை அவர் வழங்கினார். அது ஒரு பட்டியலாக நீண்டது.

"நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழித்து, ஏவுகணைத் தொழிலை தரைமட்டமாக்கப் போகிறோம். அது முற்றிலும் அழிக்கப்படும். அவர்களின் கடற்படையை அழிக்கப் போகிறோம். பிராந்தியத்தின் பயங்கரவாத பிரதிநிதிகள் இனி பிராந்தியத்தையோ அல்லது உலகத்தையோ ஸ்திரமின்மைக்கு ஆளாக்க முடியாது. எங்கள் படைகளைத் தாக்க முடியாது. மேலும், பல அமெரிக்கர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்களைக் கடுமையாகக் காயப்படுத்திக் கொன்றது போல அவர்களால் ஐ.இ.டி வெடிகுண்டுகள், சாலையோர குண்டுகளைப் பயன்படுத்த முடியாது என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்."

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

இரான் அமெரிக்காவை அடையக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக டிரம்ப் கூறினார். இந்த அறிக்கை அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளால் ஆதரிக்கப்படவில்லை. கடந்த கோடையில் அமெரிக்கா இரானின் அணுசக்தி தளங்களை "அழித்துவிட்டதாக" அவர் கூறியதற்கு முரணாக, அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலையை அது நெருங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தெஹ்ரானில் உள்ள ஆட்சியை முடக்க முடியும் என்று டிரம்ப் நம்புகிறார். அது சரணடையவில்லை என்றால், இரானிய மக்கள் பல தலைமுறைகளில் இல்லாத அளவுக்கு வீதிகளில் இறங்கி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெறும் அளவுக்கு இரான் ஆட்சி நொறுக்கப்படும் என்று அவர் கருதுகிறார்.

"நாங்கள் முடித்ததும், உங்கள் அரசாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது பல தலைமுறைகளில் உங்களுக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கும். பல ஆண்டுகளாக, நீங்கள் அமெரிக்காவின் உதவியைக் கேட்டு வந்தீர்கள். ஆனால், அதை ஒருபோதும் பெறவில்லை. இன்றிரவு நான் செய்யத் தயாராக இருப்பதைச் செய்ய எந்த அதிபரும் தயாராக இருக்கவில்லை. இப்போது உங்களுக்கு ஒரு அதிபர் இருக்கிறார், அவர் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறார். எனவே நீங்கள் அதற்கு எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்று பார்ப்போம்."

ஆட்சி மாற்றத்திற்கான பொறுப்பை இரானிய மக்களிடம் கொடுப்பது, அவர்களைச் செயல்பட அவர் நேரடியாக ஊக்குவித்தாலும்கூட, ஆட்சி நீடித்தால் பின்னர் வெளியேறுவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது. ஆனால் அமெரிக்கா அதை நிறைவேற்றுவதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் இதைப் பார்க்கலாம். இருப்பினும், எப்போதும் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்று நம்பும் ஓர் அதிபரை அது எவ்வளவு தூரம் திசைதிருப்பும் என்பது ஒரு வெளிப்படையான கேள்வி.

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

பட மூலாதாரம்,US Navy via Getty Images

படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை இரானின் ராணுவ திறன்களை சிதைத்து வருகிறது

வரலாற்றில் ஓர் அரசாங்கம் அகற்றப்பட்டதற்கான தெளிவான உதாரணம் அல்லது ஒரு போர் வெற்றி பெற்றதற்கான தெளிவான உதாரணம் என எதுவும் இல்லை. அது வலுவான, நன்கு ஆயுதந்தரித்த எதிரிக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களைப் பயன்படுத்தி மட்டுமே நடந்துள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், பிரிட்டன் உள்பட, சதாம் ஹுசேனை அகற்றுவதற்காக இராக்குக்குள் ஏராளமான தரைப்படைகளை அனுப்பின. கடந்த 2011ஆம் ஆண்டில், லிபியாவின் தலைவர் முயம்மர் கடாஃபி, நேட்டோ மற்றும் வளைகுடா நாடுகளின் ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்புடன் ஆதரிக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களால் அகற்றப்பட்டார். ஆனால் இப்போது இரானிய மக்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை அவர்களே அகற்றுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் நம்புகிறார்.

டிரம்பின் திட்டம் மிகவும் ஆபத்தானது. ஓர் அரசாங்கத்தை அகற்ற வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே போதுமானதாக இருக்காது.

மேற்கத்திய நாடுகளை ஆதரிக்கும் தலைவர்கள் நாட்டுக்குள் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா? அது சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது, ஆனால் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. குறிப்பாக போர் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நிலையில்.

தற்போதைய தலைவர்கள் அதிகாரத்தில் நீடிப்பார்கள், ஏவுகணைகளைத் தொடர்ந்து வீசுவார்கள், தங்கள் வலுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்படுவார்கள். அமெரிக்கா, இஸ்ரேல் அல்லது வளைகுடா அரபு நாடுகளைவிட அதிக துன்பங்களைத் தங்களால் கையாள முடியும் என்று அவர்கள் நினைக்கலாம்.

துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான துன்பங்களை இரானிய மக்களே எதிர்கொள்வார்கள். மேலும் நடக்கும் விஷயங்களில் அவர்களின் பங்கு எதுவுமில்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

பட மூலாதாரம்,Anadolu via Getty Images

படக்குறிப்பு,சனிக்கிழமையன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானை தாக்கி, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை கொன்றன

நெதன்யாகுவின் கணக்கு

டொனால்ட் டிரம்பை போலவே, பெஞ்சமின் நெதன்யாகுவும் இரானியர்களை தங்கள் கைகளில் ஆட்சியை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஆனால், இரான் அரசின் இரக்கமற்ற பாதுகாப்புப் படைகளை அவர்களால் வெல்ல முடியாவிட்டால், நெதன்யாகுவின் முன்னுரிமை இரானின் ராணுவ திறனையும், இஸ்ரேலை அச்சுறுத்தக்கூடிய பிராந்தியத்தைச் சுற்றியுள்ள ஆயுதக்குழுக்களை மீண்டும் கட்டியெழுப்பும் திறனையும் நொறுக்குவதாக இருக்கும்.

பெஞ்சமின் நெதன்யாகு, பல தசாப்தங்களாக, இரானை இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரியாகக் கருதி வருகிறார். இஸ்லாமிய குடியரசின் ஆட்சியாளர்கள் யூத அரசை அழிக்க ஓர் அணு ஆயுதத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்று அவர் நம்புகிறார்.

போரின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, அவர் டெல் அவிவ் நகரின் மையப் பகுதியிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டடத்தினுடைய கூரையில் நின்று, போர் முடிவடைவதைக் கண்டதாகக் கூறினார்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து "40 ஆண்டுகளாக நான் சாதிக்க நினைத்ததைச் செய்ய முடியும், பயங்கரவாத ஆட்சியை முற்றிலுமாக நசுக்க முடியும்" என்று அவர் கூறினார். அது ஒரு எதார்த்தமாக மாறுவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

போர்களுக்கு எப்போதும் உள்நாட்டு அரசியல் பரிமாணம் உண்டு. டிரம்பை போலவே, நெதன்யாகுவும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை எதிர்கொள்கிறார். டிரம்பை போலன்றி, அவரது சொந்த பதவி ஆபத்தில் இருக்கிறது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்த வாய்ப்பளித்த பாதுகாப்புத் தவறுகளுக்கு பல இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவை குற்றம் சாட்டுகிறார்கள். இரானுக்கு எதிராக இஸ்ரேலை ஒரு தீர்க்கமான வெற்றிக்கு இட்டுச் சென்றதாக அவரால் கூற முடிந்தால், தேர்தலில் ஒரு பெரிய அடியை முன்னெடுத்து வைப்பார். அவர் தோற்கடிக்க முடியாதவராகக்கூட மாறலாம்.

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

பட மூலாதாரம்,GPO HANDOUT/EPA/Shutterstock

படக்குறிப்பு,பெஞ்சமின் நெதன்யாகு இரானியர்களை ஆட்சியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்

அரசாங்கத்தை தக்கவைப்பதே வெற்றி

அதிஉயர் தலைவரையும் அவரது உயர்மட்ட ராணுவ ஆலோசகர்களையும் கொன்றது இரான் ஆட்சியின் மீது சுத்தியல் அடியாக விழுந்துள்ளது. ஆனால், அது சரிந்துவிடும் என்று அர்த்தமில்லை.

அயதுல்லா ருஹோல்லா காமனெயியும் பிற நிறுவனர்களும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு போர்கள் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பிக்க இரானின் நிறுவனங்களை வடிவமைத்தனர். இது ஒரு நபரால் நடத்தப்படும் ஆட்சி அல்ல. அசாத் மற்றும் கடாஃபியின் கீழ் சிரிய மற்றும் லிபிய அரசுகள் ஆளும் குடும்பங்களைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டன. குடும்பங்கள் அகற்றப்பட்டபோது, கடாஃபி கொல்லப்பட்டார், பஷர் அல் அசத் தப்பி ஓடிவிட்டார், ஆட்சிகள் சரிந்தன.

ஆனால் இரானின் ஆட்சி ஓர் அரசு அமைப்பு. ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட பொறுப்புகளைக் கொண்ட அரசியல் மற்றும் மத நிறுவனங்களின் சிக்கலான, அடர்த்தியான வலையமைப்பில் இது அமைந்துள்ளது. போர்கள் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பிக்க ஏதுவாக இந்த ஆட்சி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதற்காகவே ஆட்சி தப்பிவிடும் என்று அர்த்தமில்லை. இஸ்லாமிய குடியரசின் அமைப்பு அதன் கடுமையான சோதனையை எதிர்கொள்கிறது. ஆனால், அந்த அமைப்பு இத்தகைய தருணத்திற்காகத்தான் திட்டமிட்டுள்ளது.

அதன் வெற்றிக்கான வரையறை ஆட்சியை இழக்காமல் தக்கவைத்திருப்பதே. அதை அடைவதற்கு அதுவொரு வலிமையான அளவிலான பாதுகாப்பால் தன்னைச் சூழ்ந்துகொண்டுள்ளது.

இது பாதுகாப்பு, அடக்குமுறை, வற்புறுத்தல் ஆகியவற்றின் சக்தி வாய்ந்த, இரக்கற்ற கருவியைக் கொண்டுள்ளது. ஜனவரி மாதத்தில் அதன் ஆட்கள் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கொல்வதற்கான உத்தரவுகளைப் பின்பற்றி வீதிகளில் இறங்கினர். இதை எழுதும்போது போரின் மூன்றாவது நாள்தான் ஆகியுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இதுவரை, 2024 டிசம்பரில் மாஸ்கோவுக்கு தப்பிச் சென்ற பிறகு அசத்தின் படைகள் செய்ததுபோல, இரான் அரசாங்கத்தின் ராணுவம் வீழ்ச்சியடைவதற்கான அல்லது போரைக் கைவிடுவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,அதிஉயர் தலைவரின் கொலைக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் தெஹ்ரானின் வீதிகளில் கூடினர்

வழக்கமான ராணுவம் மற்றும் அதிக ஆயுதமேந்திய போலீசாருடன், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையும் உள்ளது. இதன் முக்கிய வேலை நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதாகும். ஓர் உயர் மதத் தலைவர் நாட்டை வழிநடத்தி கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேலாயத்-இ-ஃபாகிஹ் என்ற கருத்தை ஆதரிக்க இந்தப் படை உள்ளது. இந்த நம்பிக்கை இரானிய புரட்சியின் முக்கியக் கொள்கையாகும். மேலும், இது இரானில் ஷியா மதத் தலைவர்களின் ஆட்சியை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை சுமார் 190,000 செயலிலுள்ள உறுப்பினர்களையும் 600,000 வரையிலான ரிசர்வ் வீரர்களையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதோடு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தின் பெரும்பகுதியையும் அது கட்டுப்படுத்துகிறது. அதன் தலைவர்களிடம் பணமும் வலுவான நம்பிக்கைகளும் உள்ளன. அவை அரசுக்கு விசுவாசமாக இருப்பதற்கான காரணங்களைத் தருகின்றன.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, பாசிஜ் என்ற ஒரு தன்னார்வ துணை ராணுவக் குழுவால் ஆதரிக்கப்படுகிறது. அதில் சுமார் 450,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதற்கும் வன்முறையைப் பயன்படுத்துவதற்கும் பெயர் பெற்றவர்கள்.

தெஹ்ரானில் சர்ச்சைக்குரிய 2009 தேர்தலுக்குப் பிறகு நடந்த போராட்டங்களின்போது, அவர்கள் அரசாங்கத்தின் முதல் பாதுகாப்பு வரிசையாகச் செயல்பட்டதைக் காண முடிந்தது. அவர்கள் தெருக்களில் போராட்டக்காரர்களை குச்சிகள் மற்றும் ரப்பர் தடிகளைப் பயன்படுத்தி மிரட்டி அடித்தனர். அவர்களுக்குப் பின்னால் கனரக ஆயுதமேந்திய போலீசார் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை நின்றன. நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களை விரைவாகக் கட்டுப்படுத்த பாசிஜ் வேகமாக நகரும் மோட்டார் சைக்கிள் குழுக்களையும் பயன்படுத்தியது.

டொனால்ட் டிரம்ப் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் பாசிஜை, அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால், அவர்கள் கொடிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். இருப்பினும், அவரது அச்சுறுத்தல்கள் அரசாங்கத்தின் ஆயுதமேந்திய ஆதரவாளர்கள் பலரின் மனதை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

அமெரிக்கா, இஸ்ரேலின் புதிய போர் மத்திய கிழக்கின் பாதுகாப்பையே அபாயத்தில் தள்ளுகிறதா?

இஸ்லாமிய குடியரசும் ஷியா இஸ்லாமும் தியாகம் என்ற எண்ணத்தால் நிறைந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிஉயர் தலைவர் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகப் பல மணிநேரம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, அரசுத் தொலைக்காட்சியில் அழுதுகொண்டே செய்தி வாசிப்பாளர், காமனெயியின் மரணத்தை அறிவித்து, அவர் 'தியாகத்தின் இனிமையான தூய கோப்பையைக் குடித்துவிட்டார்' என்று கூறினார்.

உலகின் பெரும்பகுதியினர் தாக்குதலை எதிர்பார்த்தபோதும், ஆயதுல்லா தனது மூத்த ஆலோசகர்களுடன் தெஹ்ரானில் உள்ள தனது வீட்டில் ஒரு சந்திப்பை நடத்தத் தேர்வு செய்திருக்கலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். அவர் ஒரு தியாகியாக இறக்கத் தயாராக இருந்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

அரசாங்கத்துக்கு இன்னும் சில சாதாரண குடிமக்களிடம் இருந்து வலுவான ஆதரவு உள்ளது. அதிஉயர் தலைவர் கொல்லப்பட்ட பிறகு, 40 நாள் துக்க காலத்தின் முதல் நாளில் ஆயிரக்கணக்கான விசுவாசமான ஆதரவாளர்கள் தெஹ்ரானின் தெருக்களில் கூடினர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களின் புகை பின்னணியில் எழுந்தபோதும், அவர்கள் பொது சதுக்கங்களில் நின்று, மெழுகுவர்த்திகளை ஏற்றினர், தங்கள் மொபைல் டார்ச்சுகளை பிரகாசிக்க விட்டனர்.

மோசமான முன்னுதாரணங்கள்

இந்த முறை, இஸ்ரேலுடன் சேர்ந்து, அதன் வலுவான ராணுவ சக்தியால், குழப்பத்தை ஏற்படுத்தாமல் எதிரி அரசாங்கத்தை அகற்ற முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.

ஆனால், கடந்த கால உதாரணங்கள் அதிக நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. 2003இல் இராக்கில் சதாம் ஹுசேன் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டபோது, அது பல ஆண்டுக்கால வன்முறை மற்றும் போருக்கு வழிவகுத்தது. அந்த நேரத்தில், ஆயுதக்குழுக்கள் வலுப்பெற்றன, அவற்றில் சில இன்றும் உள்ளன.

நல்ல வாழ்க்கைத் தரத்தை ஆதரிக்கப் போதுமான எண்ணெய் வளத்தைக் கொண்ட லிபியாவிலும் நிலைமை மோசமாக உள்ளது. கடாஃபி அகற்றப்பட்டு கொல்லப்பட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும், நாடு பிளவுபட்டு, ஏழையாகவும் நிலையற்றதாகவும் உள்ளது. மேற்கத்திய நாடுகள் அவரை அகற்ற உதவியது, அவரது வீழ்ச்சியைக் கொண்டாடியது. ஆனால் அதன் பிறகு, அவர்கள் பெரும்பாலும் பின்வாங்கி, அதைத் தொடர்ந்து வந்த பிரச்னைகளைச் சரிசெய்ய சிறிதளவும் முயலவில்லை.

இரான் ஒரு பெரிய நாடு. இராக்கைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது. இது 90 மில்லியனுக்கும் அதிகமான கலவையான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இரானில் அரசாங்கம் வீழ்ந்தால், அதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பம், வன்முறை ஆகியவை சிரியா, இராக்கில் நடந்த லட்சக்கணக்கான மக்களை பலிகொண்ட உள்நாட்டுப் போர்களைப் போலவே மோசமாக இருக்கலாம் என்ற கடுமையான அச்சம் நிலவுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல்கள் இரானின் ராணுவ வலிமையைப் பெரியளவில் சேதப்படுத்துகின்றன. அரசாங்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும்கூட, இது மத்திய கிழக்கில் அதிகார சமநிலையை மாற்றுகிறது.

இரான் அரசாங்கம் வீழ்ந்தால், பலர், அநேதகமாகப் பெரும்பாலான இரானியர்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், பலவந்தமாக அகற்றப்பட்ட ஓர் அரசுக்கு மாற்றாக அமைதியான மற்றும் நிலையான புதிய அரசாங்கத்தை அமைப்பது மிகவும் கடினம்.

டொனால்ட் டிரம்ப் ஒரு பெரிய ஆபத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார். இந்தப் போர் மத்திய கிழக்கை பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் மாற்றும் என்று நம்புகிறார். இருப்பினும், அது நிகழ்வதற்கான வாய்ப்புகள் நிச்சயமற்றதாக உள்ளன. அதோடு, அது மிகவும் சவாலானதும்கூட.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இரான்: போர் எந்த பாதையில் செல்கிறது என்பதை இன்னும் கணிக்க முடியவில்லையா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.