Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரானில் புரட்சியை தூண்டிய ஒரு விமானப் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரானில் புரட்சியை தூண்டிய ஒரு விமானப் பயணம்

அயதுல்லா ருஹொல்லா கொமேனி, இரான்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,15 ஆண்டு காலமாக நாடு கடத்தப்பட்டிருந்த ஆயதுல்லா ருஹொல்லா கொமேனி 1979 பிப்ரவரி ஒன்றாம் தேதி இரான் திரும்பினார்

கட்டுரை தகவல்

  • ஜான் சிம்ப்சன்

  • பிபிசி சர்வதேச விவகாரங்களுக்கான ஆசிரியர்

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தனியார் போயிங் 747 விமானத்தின் முதல் வகுப்புப் பிரிவில் அமர்ந்திருந்த கொமேனி, 15 ஆண்டுகளுக்கு முன்பு, தான் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நாட்டை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டு வந்தார்.

கேமராமேனுடன் அவருக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த நான், நாடு கடத்தப்பட்ட அவர் மீண்டும் தாயகம் திரும்புவதை எப்படி உணர்கிறார் என்று கேட்டேன். என்னுடைய கேள்விக்கு அவர் பதிலளிக்கவிலை.

இருந்தபோதிலும் அதே கேள்வியை அங்கிருந்த ஓர் அமெரிக்கச் செய்தியாளர் மீண்டும் கேட்டார். அதற்கு கொமேனி, "ஹிச்சி" அதாவது "ஒன்றுமில்லை" என்று பதிலளித்தார்.

கொமேனியின் ஒன்றுமில்லை என்ற உணர்ச்சியற்ற பதில், அதற்கு சில நாட்களுக்கு முன்பு நாடு கடத்தப்பட்ட ஷா முகமது ரெசா பஹ்லவியின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

ஆனால் கொமேனி சொல்ல வந்தது என்னவென்றால், அவரது நாடு திரும்புதல் என்பது மனித உணர்வுகள் சார்ந்த விஷயமல்ல; கடவுளின் விருப்பம் மட்டுமே முக்கியமானது என்பதே.

இந்த நிகழ்வுக்கு ஒரு மாதம் முன்பு, பாரிஸிற்கு வெளியே அவர் தங்கியிருந்த நியூஃபில்-லே-சாட்டோ என்ற இடத்தில் நான் அவரை பேட்டி எடுத்த போது, கொமேனி பேசியது அவரது மன உறுதியைக் காட்டியது.

"மன்னராட்சி ஒழிக்கப்படும்," என என்னிடம் உறுதியாக சொன்ன அவர், "இரானின் தற்போதைய ஊழல் நிறைந்த அரசாங்கத்தின் கீழ் உள்ள சில வாழ்க்கை முறைகள் மாற்றப்பட வேண்டும்... மது போன்ற போதைப்பொருட்கள் தடை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

"இரான் மீது ஷா மன்னரைத் திணித்த வெளிநாட்டு அரசாங்கங்களின் மீது எங்களுக்கு வெறுப்பு இருக்கிறது."

இன்றும் கூட நிலைமை அப்படியேதான் இருக்கிறது.

ஜான் சிம்ப்சன், அயதுல்லா கொமேனி, இரான்

படக்குறிப்பு,பாரிஸிலிருந்து டெஹ்ரானுக்கு கொமேனி சென்ற விமானத்தில் ஜான் சிம்ப்சன் இருந்தார்

ஆரம்பத்தில், இந்த இஸ்லாமியக் குடியரசு நீடிக்கும் என்பது சாத்தியமற்றதாகவே தோன்றியது, ஆனால் இப்போது அது 40 ஆண்டுகளைக் கடந்துவிட்டது, (1979 முதல் தற்போது வரை (2026-ல் 47 ஆண்டுகள்) .

ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கிலான மக்கள் திரளாக வந்து வாக்களிக்கின்றனர். இருப்பினும் அரசியலில் தாராளவாத மற்றும் பழமைவாத போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களே வேட்பாளர்களாக இருக்கின்றனர். பொதுவாக தாராளவாத வேட்பாளர்களே பெரும்பான்மையாக வெற்றி பெறுகிறார்கள்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகே, தங்களால் எதையும் மாற்ற முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

இரான் அரசியலமைப்பின் கீழ், தேர்தலில் வாக்களித்து ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், மதகுருமார்கள் மற்றும் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பழமைவாத சக்திகளிடமே அதிகாரக் கட்டுப்பாடு உள்ளது.

டெஹ்ரான், கொமேனி ஆதரவாளர்கள்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,டெஹ்ரான் விமான நிலையத்தில் கொமேனியை வரவேற்ற ஆதரவாளர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை விட நாட்டின் அதிஉயர் தலைவர் அதிகாரம் கொண்டவராக உயர் இடத்தில் இருக்கிறார் என்றால், பழமைவாதிகள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள எத்தகைய போராட்டத்தையும் நடத்தத் தயாராக உள்ளனர்.

2009-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு, தாராளவாத வேட்பாளர் மிர் ஹொசைன் மௌசவி அநேகமாக பெரும்பான்மை பெற்றிருந்தாலும், பழமைவாதியான அஹ்மதிநிஜாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தொடங்கிய போராட்டங்கள் உச்சத்தை எட்டிய போது புதிய புரட்சி உருவாவதைப் போல் தோன்றியது. ஆனால் போராட்டக்காரர்களை வீதிகளில் இருந்து விரட்ட பழமைவாதிகள் மிகவும் கொடூரமாக செயல்பட்டனர்.

இஸ்லாமியப் புரட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

இஸ்லாமியப் புரட்சி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்பு, 2009-ல் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல் இரானில் மாபெரும் போராட்டங்களைத் தூண்டியது

இரானில் வசிக்கும் இஸ்லாமியர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஷியா பிரிவினர். 1979-ல் ஷியா இஸ்லாமியப் புரட்சியாளர்களால் ஷா மன்னர் பதவியிறக்கப்பட்டது, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகையும் அதிர்ச்சிக்கும் வியப்பிற்கும் உள்ளாக்கியது.

இதன் விளைவாக, லெபனான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் சில பகுதிகளில் வாழ்ந்த ஷியாக்கள், தாங்கள் சமூக மற்றும் அரசியல் ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருப்பதை இனி ஏற்க முடியாது என முடிவெடுத்தனர். ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கு அதிகப் பங்கு வேண்டுமெனக் கோரத் தொடங்கினர்.

அந்தப் பிராந்தியத்தில் இருந்த சுன்னி பிரிவினருக்கு இந்த மாற்றம் ஆழ்ந்த கவலையளித்தது. இருப்பினும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஒரு தலைவர் வீழ்த்தப்பட்டதைக் கண்டு அவர்களும் வியப்படைந்தனர்.

அமெரிக்கர்கள் அவமானப்படுத்தப்பட்டனர், அதை மத்திய கிழக்கில் இருக்கும் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.

1980 முதல் 1988 வரையிலான காலகட்டத்தில், இராக்குடன் இரானுக்கு ஏற்பட்ட கடுமையான போரின்போது தப்பிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் இரான் இருந்தது.

ஆனால் 2003-இல் இராக் மீது அமெரிக்கா படையெடுத்து அங்கிருந்த சிறுபான்மை சுன்னிகளின் அதிகாரத்தை அழித்த பிறகு, இரானின் வலுவான ஆதரவுடன் இராக் நாட்டின் பெரும்பான்மை ஷியாக்கள் நாட்டை ஆளத் தொடங்கினர்.

அந்த பிராந்தியத்தில் இரான் வலிமை வாய்ந்ததாக மாறியது; இதற்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தான் ஒருவகையில் காரணமானார். இதைவிட ஒரு பெரிய முரண்பாடு இருக்கவே முடியாது.

இன்று, இஸ்ரேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகமும் இரானை மிகப்பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கின்றன.

ஆனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரானை வேறுவிதமாகப் பார்க்கின்றன. இரான் கடினமானது மற்றும் மோதல் போக்கு கொண்டது என்பதை அவை ஒப்புக்கொண்டாலும், இரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஐரோப்பிய ஆதரவுடன் எட்டிய உடன்படிக்கையைப் பின்பற்ற இரான் இன்னும் தயாராக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

இன்று, இரான் வெளியாட்கள் கற்பனை செய்வதை விட மிகவும் எளிதான நாடாகத் தோன்றுகிறது.

பெண்களின் உடை குறித்த விதிகள் சில நேரங்களில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால் செளதி அரேபியாவில் வழக்கமாக காணப்படும் 'ஆண் பாதுகாவலர் முறை' போன்ற கட்டுப்பாடு ஒன்றை பெண்களின் நடமாட்ட சுதந்திரத்தின் மீது இஸ்லாமியக் குடியரசு ஒருபோதும் திணித்ததில்லை.

எனது அனுபவத்தில், புள்ளிவிவரங்கள் இதற்கு மாறாக தெரிந்தாலும், இரானியப் பெண்கள் சுயமாக தொழில் செய்ய முடியும், சொந்தமாக சொத்து வைத்திருக்க முடியும், பெண்கள் கார் ஓட்ட முடியும். அரசியலில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என இரானிய பெண்கள் நம்புகின்றனர்.

இரான், ஆடைக் கட்டுப்பாடு

பட மூலாதாரம்,Anadolu Agency

படக்குறிப்பு,புரட்சிக்குப் பிறகு இரான் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதித்திருந்தது

புரட்சிக்கு பிறகு அமைந்த அரசாங்கங்களிலேயே, தற்போதைய அரசாங்கம் ஒருவேளை மற்றெல்லாவற்றையும் விட அதிக தாராளவாத போக்கு கொண்டதாக இருக்கலாம்.

ஆயதுல்லா கொமேனி இதை ஒருவேளை அங்கீகரித்திருக்க மாட்டார், ஆனால் இந்த அணுகுமுறை பல ஆண்டுகளாக இஸ்லாமியக் குடியரசைப் பாதுகாக்க உதவியுள்ளது.

புரட்சிக்குப் பிறகு நான் முதன்முதலில் இரானுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்ட 1986-ஆம் ஆண்டிலேயே, புதிய இரானைப் பற்றி நான் உணர்ந்ததை இவ்வாறு விளக்கினேன்: அது 'நிலையானது, ஆனால் நிரந்தரமானது அல்ல' (Stable, but not permanent).

இப்போதும் கூட நிலைமை அப்படித்தான் இருப்பதாகத் தோன்றுகிறது.

ஊழல் குறித்து இரான் மக்களிடையே கோபம் மிகுந்திருந்தாலும், ஷா மன்னரின் ஆட்சியில் இருந்த அளவு இல்லை.

தற்போதைய ஆட்சி முறைக்கு பெரிய அளவிலான அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லாததால், இரான் பெரும்பாலும் நிதானமாகவே தெரிகிறது. ஆனால், மக்களின் பெரும் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பலவீனமான தாராளவாத அரசாங்கத்திற்கும், அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள உறுதியான பழமைவாத மையத்திற்கும் இடையிலான இந்த விசித்திரமான சமநிலை என்றென்றும் நீடிக்கும் என்று நினைப்பது கடினம்.

பழிவாங்கும் உணர்ச்சியும், இரக்கமற்ற தன்மையும் கொண்ட கொமேனி தனது போயிங் 747 விமானத்தில் நாடு திரும்பியபோது கொண்டு வந்த அந்தத் தீவிரம் இப்போது பெருமளவில் தணிந்துவிட்டபோதிலும், அது இன்னும் அங்கே நீடித்திருக்கிறது.

நாடு எப்படி ஆளப்பட வேண்டும் என்பதில் தாராளவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையே ஏதேனும் ஒரு அடிப்படை சமரசம் ஏற்படும் வரை, கொமேனியின் புரட்சி எப்போதும் ஒரு முற்றுப்பெறாத ஒன்றாகவே உணரப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c98gjdnk7dko

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.