Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Mar 19, 2026 - 07:11 AM

கட்டார், ஈரான் எரிசக்தி மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

ஈரானுக்குச் சொந்தமான 'தெற்கு பார்ஸ்' இயற்கை எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் பாதுகாப்புப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளன. 

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், அந்த எரிவாயு வயலுக்கு அருகில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், அமெரிக்கா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இந்தத் தாக்குதலின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். 

அதன்படி, கத்தார் நாட்டின் ராஸ் லாஃபான் தொழில் நகரத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அங்குள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமொன்று சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டார் மீது ஈரான் 5 ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும், அவற்றில் 4 ஏவுகணைகளை கட்டார் முறியடித்த போதிலும், ஒரு ஏவுகணை ராஸ் லாஃபான் நகரில் விழுந்து வெடித்ததாக கட்டார் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள கட்டார், இது தனது தேசிய பாதுகாப்புக்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் நேரடி அச்சுறுத்தல் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், தனது இறையாண்மையைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ள கட்டார், அங்குள்ள ஈரான் இராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் பணியாளர்களை 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. 

இதேவேளை, சவுதி அரேபியாவின் ரியாத் நகர் மீது ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை முறியடிக்கப்பட்ட போது, அதன் சிதறல்கள் விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படை தளம் மற்றும் அபுதாபி நகர் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியுள்ள போதிலும், அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. 

ஈரானின் இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்ரேலும் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. முதன்முறையாக வடக்கு ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், ஈரானின் தாக்குதலில் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்த 3 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கட்டார் அமீர் ஆகியோருடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmwst1y30002356p13s3r9de

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் செல்லும் ஒரு எண்ணை கப்பலில்… எண்ணை கசிவு ஏற்பட்டாலே, பூமி மாசு படுகின்றது என்று பதறும் உலகம்… மாறி, மாறி எண்ணை உற்பத்தி வயல்களை தாக்கும் போது ஏற்படும் கரும் புகை, முழு உலகத்தையே பாதிப்புக்கு உள்ளாக்கும்.

இந்தப் பாதிப்புக்களை… இந்தப் போரில் எதுவித சம்பந்தமும் இல்லாத, உலகில் ஒவ்வொரு தனி மனிதனும், வருங்கால சந்ததியும் அனுபவிக்க வேண்டி வரும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல்: ட்ரம்ப் கடும் விமர்சனம்

Mar 19, 2026 - 10:16 AM

ஈரானின் எரிவாயு வயல் மீதான இஸ்ரேலிய தாக்குதல்:  ட்ரம்ப் கடும் விமர்சனம்

ஈரானின் தெற்கு பார்ஸ்  இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் இந்த நடவடிக்கையே முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தமது 'Truth Social' சமூக ஊடக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ட்ரம்ப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

 

"மத்திய கிழக்கில் நடப்பவற்றால் கோபமடைந்துள்ள இஸ்ரேல், ஈரானின் 'தெற்கு பார்ஸ்' எனும் பிரம்மாண்ட எரிவாயு வயல் மீது வன்முறையான தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த முழு அமைப்பில் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பகுதிக்கு மாத்திரமே இதனால் சேதம் ஏற்பட்டுள்ளது."

 

"இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அத்துடன் கட்டார் தேசம் எந்த வகையிலும் இதில் தொடர்புபடவில்லை என்பதுடன், இவ்வாறான ஒன்று நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, ஈரான் இந்த உண்மைகளை அறியாமல் அநியாயமாக கட்டாரின் எல்.என்.ஜி (LNG) மையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. மிகவும் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க 'தெற்கு பார்ஸ்' வயல் மீது இஸ்ரேல் இனிமேல் தாக்குதல்களை நடத்தாது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmmwzk1xn000b356pusl4qu5l

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வளைகுடா நாடுகளில் ஈரான் தீவிரத் தாக்குதல் ; பற்றி எரியும் எரிவாயு நிலையங்கள்

Published By: Digital Desk 1

19 Mar, 2026 | 03:58 PM

image

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஈரான் இன்று தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி நாடான கத்தாரில் உள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் கத்தாரின் முக்கிய எல்.என்.ஜி முனையங்கள் தீப்பிடித்து எரிந்தன. ஏற்கனவே நடந்த தாக்குதல்களால் அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போதைய ஏவுகணை வீச்சினால் அந்தத் தளம் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளதாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர் முடிந்த பிறகும்கூட, சர்வதேச சந்தைக்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவதில் இந்தச் சேதங்கள் பெரும் தாமதத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

அபுதாபியில் உள்ள ஹப்ஷன் எரிவாயு நிலையம் மற்றும் பாப் எண்ணெய் வயல் ஆகியவற்றின் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் இந்த இரவு நேரத் தாக்குதலை ஆபத்தான போர் விரிவாக்கம் என்று அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

மறுபுறம், ஐக்கிய அரபு அமீரகக் கடற்கரைக்கு அருகாமையில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிந்ததோடு, கத்தார் அருகே மற்றொரு கப்பலும் சேதமடைந்தது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் கொண்டு செல்லப்படும் 'ஹோர்முஸ் நீரிணை' ஈரானின் பிடியில் உள்ளதால், அந்தப் பாதையில் செல்லும் கப்பல்களுக்குத் தொடர் ஆபத்து நிலவி வருகிறது.

தற்போது அந்த வழித்தடம் கப்பல்கள் பயணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெப்ரவரி 28அம் திகதி ஆரம்பித்த இந்தப் போர், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் குறிவைக்கப்படுவதால், உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகின்றன.

தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

https://www.virakesari.lk/article/241374

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வளைகுடா நாடுகள் அஞ்சிய 'விஷயம்' நடந்துவிட்டது - அடுத்து என்ன?

இரான், கத்தார்

பட மூலாதாரம்,Reuters

கட்டுரை தகவல்

  • ஃப்ரான்க் கார்ட்னர்,

  • பாதுகாப்பு செய்தியாளர்,

  • நிக் மார்ஷ்,

  • ஆசிய வணிக செய்தியாளர்

  • அஸாதே மோஷிரி,

  • தெற்கு ஆசிய செய்தியாளர்

5 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

புதன்கிழமை அன்று இரானின் முக்கியமான தெற்கு பார்ஸ் எரிவாயு உற்பத்தி நிலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதைப்பற்றி அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து கத்தாரின் முக்கிய எரிவாயு தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இரான் "கடுமையான சேதங்களை" ஏற்படுத்தியுள்ளது.

கத்தாருக்கு எதிராக இரான் மேலும் பதில் நடவடிக்கைகளை எடுக்க கூடாது என டிரம்ப் எச்சரித்துள்ளார்

இரானின் எரிவாயு உற்பத்தி நிலை மீதான தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்யாத நிலையில், தனது கூட்டாளி "மத்திய கிழக்கில் நிகழ்ந்த விஷயங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக" இரான் மீது "கடுமையாக தாக்குதல் நடத்தியதாக" டிரம்ப் கூறியுள்ளார்.

கத்தாரின் வடக்கு எரிவாயு நிலையின் நீட்சியாக உள்ள இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு நிலையுடன் தொடர்புடைய தளங்களை ''இஸ்ரேல் இலக்கு வைப்பது மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நகர்வு" என கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் கண்டித்துள்ளது.

தனது ராஸ் லஃபான் ஆற்றல் உற்பத்தி தொழிற்பேட்டை மீதான இரானின் தாக்குதல் "வெட்கக்கேடானது" என்றும் "தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மை மீதான நேரடி அச்சுறுத்தல்" என கத்தார் அரசு குறிப்பிட்டிருந்தது.

இரான், கத்தார்

பட மூலாதாரம்,Getty Images

வளைகுடா நாடுகள் 'அச்சப்பட்ட' விஷயம்

இந்த அதிகரித்த பதற்றத்தை வளைகுடா அரபு நாடுகள் அச்சத்துடன் எதிர்கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிலைகளை குறிவைத்து நிகழ்ந்த இரானிய ஏவுகணை தாக்குதல்கள் தற்போது எரிசக்தி துறை மீதான தாக்குதலாக உருவெடுத்துள்ளன.

இதுதான் வளைகுடா பொருளாதாரங்களின் இதய துடிப்பாக உள்ளது. எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோரசாயனங்கள்தான் வளைகுடா அரபு நாடுகளை சில பத்தாண்டுகளில் பணக்கார நாடுகளாக மாற்றின.

பிப்ரவரி மாதம் இரானை தாக்க வேண்டாம் என வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் தெரிவித்த பிறகும் அமெரிக்கா இரானைத் தாக்கியது கத்தாரை சீற்றமடையச் செய்தது.

இப்போது கத்தார் எரிவாயு துறையின் மணிமகுடமான ராஸ் லஃபான் ஒரே இரவில் இரு முறை தாக்குதலுக்கு உள்ளானது.

வளைகுடா அரபு நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் திறம்பட உள்ளன.

12 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் நிலையில் ரியாத்தில் இரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன.

ஆனால் இரானின் ஆயுதம் தற்போது வரை தீர்ந்துவிடவில்லை. அதன் ஆயுதங்களில் சில பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து செல்ல முடிந்தது.

இரான் போர்: வளைகுடா நாடுகள் அஞ்சிய ‘ஒரு விஷயம்’ நடந்தது -  அடுத்து என்ன?

பட மூலாதாரம்,Getty Images

டிரம்பின் உத்தரவாதம்

இரான் மற்றும் கத்தார் மீதான இந்த தாக்குதல்கள் இந்த மோதலின் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது.

கத்தார் மீதான இரானின் தாக்குதல்கள் தொடர்ந்தால் தெற்கு பார்ஸ் எரிவாயு உற்பத்தி நிலை மொத்தமாக அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

அதே வேளையில் கத்தாரை இரான் தாக்கவில்லை என்றால் தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்கிற டிரம்பின் உத்தரவாதம் உலகளாவிய எரிபொருள் சந்தைக்கு இந்த நிலைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உணர்த்துகிறது.

இரான், கத்தார்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைகளில் ஒன்று

இரான் எதிர்வினைக்கு விலை கொடுக்கும் வளைகுடா நாடுகள்

கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் ஆற்றல் உற்பத்தி தொழிற்பேட்டை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஹப்ஷான் எரிவாயு உற்பத்தி நிலை மற்றும் பாப் நிலைகள் மூடப்பட்டுள்ளன.

இடைமறிக்கப்பட்ட தாக்குதல்களில் இருந்து வந்த சிதறல்களால் அவை சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சௌதி அரேபியாவும் இலக்கு வைக்கப்பட்டது, மேற்குப் பகுதியிலும் தலைநகர் ரியாத்திலும் தாக்குதல்களை தடுத்ததாக அந்நாடு தெரிவிக்கிறது.

ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் தனது உரிமையை நிறுத்தி வைத்திருப்பதாக சௌதி அரேபியா எச்சரித்துள்ளது.

இரான் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அதன் சார்பாக மத்தியஸ்தம் செய்ய தயாராக இருந்த அதன் அண்டை நாடுகளுடான உறவுகளையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

வளைகுடா நாடுகள் அஞ்சிய ‘ஒரு விஷயம்’ நடந்ததுவிட்டது -  அடுத்து என்ன?

பட மூலாதாரம்,Getty Images

இரான், இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்த அரபு நாடுகள்

இந்த நிலையில் ரியாத்தில் நடைபெற்ற அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு அரபு நாடுகள் கூட்டு அறிக்கை மூலம் இரானின் தாக்குதலைக் கண்டித்துள்ளன.

இவர்களில் பஹ்ரைன், குவைத், லெபனான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இதர நாடுகள் அடங்கும்.

குடியிருப்பு பகுதிகள், பொது உள்கட்டமைப்புகள் மற்றும் தூதரக கட்டடங்களை இலக்கு வைத்ததாக அவர்கள் கூறும் இரானின் "திட்டமிட்ட தாக்குதல்களை" அறிக்கையின் மூலம் கண்டித்திருந்தனர்.

எந்தச் சூழலிலும் இவற்றை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஐ.நா பிரிவு 51-இன்படி தங்களின் தற்காப்புக்கான உரிமையையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இரான் தனது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச சட்டம் மற்றும் சிறந்த அண்டைநாடுகள் கொள்கையை மதிக்க வேண்டும் எனக் கோரிய அந்த அறிக்கை, ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதை நோக்கமாகக் கொண்ட "நடவடிக்கைகள் அல்லது அச்சுறுத்தல்களை" தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்த அரபு நாடுகள் அதனை "பிராந்தியத்தில் நிகழும் விரிவாக்க கொள்கை" என்றும் குறிப்பிட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyvjjxjxw3o

ஈரானை கண்டிப்பவர்கள் இந்த யுத்தத்தை ஆரம்பித்தவர்களை கண்டிப்பதில்லையே?!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.