Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயப் போரும் ரெண்டுகால் பூச்சிகளும் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாயப் போரும் ரெண்டுகால் பூச்சிகளும் - நிலாந்தன்

649957838_1094640113722373_1961580324951

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கார்ல் மார்க்ஸ் சொன்னார் “மதம் ஓர் அபின்” என்று. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஹெபர்ட் மார்க்யூஸ் சொன்னார் “நுகர்வுப்பண்டங்களே அபின்” என்று. இந்த நூற்றாண்டில் தகவல் ஓர் அபினா?

சமூக வலைத்தள “அல்கோரிதம்” எனப்படுவது ஒருவகை போதை ஊக்குவிப்புத்தான். நீங்கள் எதை தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடி வரும். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்று கண்டு அதை நோக்கி உங்களை ஊக்குவிப்பது. ஒரு போதைப்பொருள் பாவனையாளர் எந்தப் போதைக்குப் பழக்கப்படுகிறாரோ, அதே போதையை அவருக்குத் தொடர்ந்து ஊட்டுவதன் மூலம் அவரை அதற்கு அடிமையாக்கிவிடுவது. அதாவது இலத்திரனியல்  அடிமைகள். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் உலகளாவிய பரந்த மாய வலைப்  பின்னலுக்குள் சிக்கிய ரெண்டு கால் பூச்சிகள்.

தகவல் ஒரு போதை மட்டும் அல்ல. கவிஞரும் திசை வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவருமாகிய  மு.பொன்னம்பலம் கூறுவார் “தகவல் ஒரு மாயை” என்று. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியோடு அது இப்பொழுது மகா மாயையாக உருவெடுத்துவிட்டது. தகவல் புரட்சியின் ரெண்டுகால் பூச்சிகள் ஒரே சமயத்தில் மாயப் போரின் பலியாடுகளாகவும் இருக்கிறார்கள்; பரிசோதனைக்கூட எலிகளாகவும் இருக்கிறார்கள்; தம்வசமிழந்த பார்வையாளர்களாகவும் இருக்கிறார்கள்.

இஸ்ரேல் அண்மை ஆண்டுகளாக  ஈரானிய தலைவர்கள் தளபதிகள் விஞ்ஞானிகளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் தாக்குதல்கள் பெருமளவுக்கு மாயத் தொழில்நுட்ப வகைப்பட்டவைதான். இப்பொழுதும் மேற்காசியாவில் திறக்கப்பட்டிருக்கும் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெரியது. அந்த மாயப் போர்க்களத்தில்  அதிகம் பலியாவது ஆசியர்கள்தான். மேற்கு நாடுகள் தங்களுடைய நவீன தொழில்நுட்பத் திறன்களையும் புதிய போர்த் தளபாடங்களையும் கண்டுபிடிப்புகளையும் பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடங்கள் பெருமளவுக்கு ஆசிய, ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க, கிழக்கு ஐரோப்பியப் போர்க் களங்கள்தான். மேற்கு ஐரோப்பாவும் அமெரிக்காவும் அனேகமாகப் பாதுகாப்பாக இருக்கும். ஏனைய பகுதிகள்தான் புதிய யுத்தத் தளபாடங்களின் பரிசோதனைக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும். குறிப்பாக உலகப் பேரரசு அமேரிக்கா எல்லா யுத்த அரங்குகளுக்கும் வெளியே ,தொலைவில் பத்திரமாக இருக்கிறது. ஒசாமா பின் லேடன்தான் அமெரிக்காவை அதன் வாசற்படிவரை சென்று தாக்கினார்.

அணுகுண்டை தூய விஞ்ஞானத்தின் வார்த்தைகளில் சொன்னால் அது ஒரு யூதக் குண்டு. அதற்குரிய சமன்பாட்டை கண்டுபிடித்தது யூதரான ஐன்ஸ்டீன். அதனை ஒரு செய்முறையாக மாற்றியவர் யூதராகிய ஓபன் ஹெய்மர். அதனால்  பிரயோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் கூறினால் அது முதலில் அமெரிக்க யூதக் குண்டு. ஆனால் அதை அவர்கள் பரிசோதித்த இடம் ஆசிய ஜப்பானில்தான். அணுகுண்டின் முதலாவது பரிசோதனைக் கூட எலிகள் ஆசியர்கள்தான். இப்பொழுது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியோடு முன்னெடுக்கப்படும் மாயப் போரிலும் முதல் பலிகளும் பரிசோதனை கூட எலிகளும் பெருமளவுக்கு ஆசிரியர்களும் ஆபிரிக்கர்களும் உக்ரேனியர்களும்தான். ஆளில்லா விமானங்களின் மாயத் தாக்குதல்கள் அதிகம் நடந்த இடங்கள் ஆசிய, ஆப்பிரிக்க, கிழக்கு ஐரோப்பியப் பிராந்தியங்கள்தான்.

மூன்றாவது உலகப்போர் என்று ஒன்று இதுவரை நடக்கவில்லை. ஆனால் பனிப் போர் நடந்தது.அந்தப் பனிப் போரானது மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு நிழல் போராக இருந்தது. ஆனால் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களில் நிஜப் போராக இருந்தது. பேரரசுகளின் நிழல் போரை ஏனைய நாடுகள் நிஜப் போராக முன்னெடுத்தன.

ஈழப்போரும் அப்படித்தான். ஜெயவர்த்தனா அமெரிக்காவின் நண்பனாக இருந்தார்.இந்தியா, ரஸ்சியாவின் கூட்டாளியாக இருந்தது. 1983க்குப் பின் ஈழப் போர் எனப்படுவது பனிப்போரின் ஒரு பகுதியாக மாறியது. அதனாலேயே வளர்ந்தது. ஆசிரியர்களாகிய சிங்களவர்களும் ஆசிரியர்களாகிய தமிழர்களும் ஐரோப்பியர்களின் நிழல்போரை நிஜப்போராக முன்னெடுத்தார்கள்.

ஆசியர்களாகிய, அரசில்லாத, சிறிய ஈழத் தமிழர்கள் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் உசார் மனோ நிலையிலிருந்தும் தற்காப்பு உணர்விலிருந்து விடுபடவில்லை. அதனால்தான் மேற்காசியாவில் போர் வெடித்தபோது யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக வரிசைகள் நின்றன. அதைப் பலரும் நக்கல் அடித்தார்கள். ஆனால் அது யாழ்ப்பாணத்து நோக்கு நிலையில் தவிர்க்க முடியாதது.

ஒரு குடா நாட்டு மனோநிலை அப்படித்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தவர்களின் தற்காப்பு உணர்வின் விளைவுதான் சேமிப்பு பண்பாடு. அது குடா நாட்டு மனோநிலையின் பிரதான அம்சம். போர் இந்த சேமிப்பு பண்பாட்டை மேலும் பலப்படுத்தியது. ஒருவகையில் போருக்குள் நின்று நிலைத்தமைக்கு அதுவும் காரணம்.

போருக்குப் பின்னரும் அந்த மனோநிலை அப்படியே மாறாமல் இருக்கிறது. ஏனென்றால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அதனால் யாழ்ப்பாணத்தவர்களின் மனோநிலை மட்டுமல்ல முழு ஈழத் தமிழர்களின் மனோநிலையும் ஒருவிதத்தில் அமைதியுறாத, கொந்தளித்த, ”அண்செற்றில்ட்” மனோநிலையாகத்தான் காணப்படுகிறது. சதா உஷாராகவும், அளவுக்கு மிஞ்சிய தற்காப்பு உணர்வோடும் காணப்படுகிறது. எனினும் மேற்காசியாவில் யுத்தம் வெடித்த உடனே வரிசையில் நின்ற பலரும் இப்பொழுது தாங்கள் செய்தது சரிதான் என்று திருப்திப்படுகிறார்கள். ஒரு சிறிய மக்கள் கூட்டம் தற்காப்பு உணர்வோடு இருப்பதில், முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்வதில் தவறில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ராஜதந்திரி என்னிடம் கேட்டார் யாழ்ப்பாணத்தை “ஒரு தூங்கா நகரமாக மாற்ற முடியுமா?” என்று. யாழ்ப்பாணம் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் பல நகரங்கள் இரவு கிட்டத்தட்ட எட்டு மணிக்கு பின் தூங்கும் நகரங்கள்தான். விசேஷமாக வடக்கு கிழக்கில் உள்ள நகரங்கள் அதிகாலையில் சூரியனோடு சேர்ந்து விழித்தெழுவதில்லை. இரவானதும் ஒன்பது மணிக்கு முன்னரே பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுவிடும். அதற்குக் காரணம் தமிழ்மக்களின் கூட்டு உளவியலில் ஒருவித “உளவியல் ஊரடங்குச் சட்டம்”தொடர்ந்தும் அமுலில் இருப்பதுதான் என்று எனது நண்பன் ஒருவர் கூறுவார்.

இந்த “உளவியல் ஊரடங்குச் சட்டம்” என்பது முன்சொன்னதுபோல அண்செற்றில்ட்டான ஒரு கூட்டு உளவிகளின் விளைவு. இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதவரை அது தொடர்ந்தும் இருக்கும்.2009க்குப் பின்னரான தொடர்ச்சியான புலப்பெயர்ச்சிக்கு அதுவும் ஒரு பிரதான காரணம்.

அரசில்லாத சிறிய,ஆசிய மக்கள் கூட்டம் ஆகிய ஈழத் தமிழர்கள் மேற்காசியப் போரில் நேரடியாகச் சம்பந்தப்படவில்லை. ஆனால் அமெரிக்கா போரை இலங்கை கடற்கரையில் இருந்து 19 கடல் மைல்வரை கொண்டு வந்துவிட்டது. ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர் மூழ்கியால் தாக்கப்பட்டது. எனவே இலங்கை போர்க்களத்துக்கு வெளியே இருக்கிறது என்று கூறமுடியாது. மேலும் எரிவாயுவுக்கும் எரிபொருளுக்குமாக வரிசையில் நிற்கும் ஒரு நிலை வந்திருக்கிறது. புதன் கிழமை விடுமுறையாக்கப்பட்டிருக்கிறது. அதாவது போர் நமது குசினி, அலுவலகம் ,பாடசாலை வரை வந்துவிட்டது.

அமெரிக்கா எதிர்பார்த்ததுபோல ஈரான் துவண்டு விடவில்லை. தலையை நசக்கினால் பாம்பு செத்துவிடும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நம்பியிருக்கலாம். ஆனால் ஈரான் நின்று பிடிக்கின்றது. இந்தப் போரில் சீனாவும் ரஷ்யாவும் நேரடியாக போர்க்களத்தில் இறங்கவில்லை. ஆனால் ஈரானின் பின்னணிப்பலம் அந்த நாடுகள்தான். நிகழும் போரில் சீனா ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளினதும் பங்களிப்பின் அளவும் பங்களிப்பின் தன்மையும்தான் புதிய உலக வலுச் சமநிலையைத் தீர்மானிக்கும்.

அவ்வாறு உலக வலுச்சமநிலையில் ஏற்படும் தளம்பல்கள் சிறிய ஈழத் தமிழர்களின் அரசியலிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். பனிப்போர் எப்படி ஈழப் போரில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியதோ அப்படி. கடந்த 16 ஆண்டு காலமாக சீனாவுக்கு எதிரான மேற்கத்திய வியூகத்தின் ஒரு பகுதியாக ஈழத் தமிழர்கள் ஐநாவில் கையாளப்படுவதையும் அவ்வாறுதான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே பிராந்தியத்தில்,கண்டத்தில், பூகோள அளவில் ஏற்படும் திருப்பகரமான மாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கக்கூடும். சில சமயம் இருக்கின்ற வாய்ப்புகளை மூடவும்கூடும்.

ஆனால் அவ்வாறு ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஈழத் தமிழ் அரசியலில்,இலங்கை அரசியலில் என்னதான் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தினாலும், அவற்றைக் கையாள்வதற்கு ஈழத் தமிழர்கள் தயாராக இருக்கிறார்களா ?

https://www.nillanthan.com/8207/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்காசியப் போர்: தமிழ்மக்களின் நிலைப்பாடு ? - நிலாந்தன்

655744137_1105054679347583_7927539137583

1991ஆம் ஆண்டு,”ஓபரேஷன் டிசேர்ட் ஸ்ட்ரோம்”- “பாலைவனப் புயல்” என்ற பெயரில் ஒரு படை நடவடிக்கையை, அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஈராக்குக்கு எதிராக முன்னெடுத்தன. 42 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படை நடவடிக்கையின் ராணுவ இலக்கு குவைத் நாட்டுக்குள் புகுந்த ஈராக்கியப் படைகளை அங்கிருந்து அகற்றுவது.

இதுதொடர்பாக அப்பொழுது யாழ். பல்கலைக்கழகத்தில், புவியியல் துறையில் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கருத்தரங்கில் ஆய்வுரை நிகழ்த்திய புவியியல் துறையைச் சேர்ந்த புலமையாளர் தனது ஆய்வுரையில் “மத்திய கிழக்கு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அப்பொழுது அங்கே பார்வையாளராக வந்திருந்த பௌதீகவியல் துறையைச் சேர்ந்த ஒரு புலமையாளர் உரை நிகழ்த்தியவரிடம் கேட்டார், “ஏன் மத்திய கிழக்கு என்று அழைக்கிறீர்கள்? அது எங்களுக்கு மத்தியகிழக்கு இல்லைத்தானே? அப்படியென்றால் நீங்கள் எங்க நின்று கதைக்கிறீர்கள்? இங்க இருந்தா ? அல்லது ஐரோப்பாவிலிருந்தா ? என்று.

அந்தக் கேள்வி ஆழமானது. மத்தியகிழக்கு என்பது பிரித்தானிய குடியேற்றவாத காலத்தில் குடியேற்றவாத நோக்குநிலையில் இருந்து பிரித்தானிய குடியேற்றவாத அதிகாரி ஒருவரால் 1850ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட ஒரு  வார்த்தை. பிரித்தானியாவின் நோக்குநிலையில் இருந்து கிழக்கை அவர்கள் தூர கிழக்கு(far East) அண்மை கிழக்கு(near east) மத்திய கிழக்கு (Middle East) என்று பிரித்தார்கள். பின்னர் அந்த வார்த்தை அமெரிக்கரும் கடல்சார் மூலோபாய ஆராய்ச்சியாளருமாகிய அல்பிரட் தாயர் மாகன் என்பவரால் ஆய்வு நோக்கு நிலையில் இருந்து(1902இல்) அதிகமாகப்  பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்து இந்த வார்த்தை பரவலாக உபயோகிக்கப்படுகிறது.

ஆனால் அது பிரித்தானிய “கொலோனியல் நோக்கு நிலையில்”-குடியேற்றவாத நோக்கு நிலையில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை என்பதனால் அதை நிராகரித்து இந்தியாவின் முதலாவது பிரதமர் ஆகிய ஜவஹர்லால் நேரு மேற்காசியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ஆசிய நோக்கு நிலையிலிருந்து அது ஆசியாவின் மேற்கே காணப்படுவதனால் அவ்வாறு அவர் அழைத்தார்.

எனவே அதை மத்திய கிழக்கு என்று அழைப்பதா அல்லது மேற்காசியா என்று அழைப்பதா என்பது அரசறிவியல் ஒழுக்கத்தின்படி எந்த மையத்திலிருந்து அந்தப் பிராந்தியத்தை நாங்கள் நோக்குகிறோம் என்பதைக் குறிக்கும். ஆனால் அதற்காக இப்பொழுது மேற்கு ஆசியாவை மத்திய கிழக்கு என்று அழைக்கும் ஆசியர்கள் இப்பொழுதும் “கொலோனியல் நீக்கம்” செய்யப்படவில்லை என்று மிகைப்படுத்திக் கூறத்தேவையில்லை. இப்பொழுது ஈரானை ஆதரிப்பவர்களும் மத்திய கிழக்கு என்கிறார்கள். அமெரிக்காவை ஆதரிப்பவர்களும் மத்திய கிழக்கு என்கிறார்கள். இங்கே வார்த்தைகள் அவற்றின் பெறுமதியுணர்ந்து பயன்படுத்தப்படுவது குறைவு.

அமெரிக்க எழுத்தாளர் ஏர்ணஸ்ற் ஹெமிங்வே கூறியதுபோல புனிதமிழந்த வார்த்தைகள். ஹெமிங்வே எழுதிய உலகப் புகழ் பெற்ற நாவலாகிய போரே நீ போ(“A farewell to Arms” (1929) என்ற நாவலின் இறுதிப் பகுதியில் கதாநாயகன் சலிப்போடு பின்வரும் பொருள்படக் கூறுவான்… ”போர் நிறுத்தம், சமாதானம், பேச்சுவார்த்தை போன்ற வார்த்தைகளுக்கு இப்பொழுது பொருள் இல்லை. புனிதமும் இல்லை. புனிதம் கெடாமல் இருக்கும் வார்த்தைகள் எவையென்றால், படைப்பிரிவின் பெயர்கள், படை அணிகளின் பெயர்கள், வீதிகளின் பெயர்கள், நகரங்களின் பெயர்கள் மட்டும்தான்”… என்று.

எனவே கடந்த மூன்று கிழமைகளுக்கு மேலாக நடந்து வரும் போர்க் களத்தை மத்திய கிழக்கு என்று அழைப்பவர்கள் அநேகமானவர்கள் அதன் சரியான பொருள் உணர்ந்து அழைக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அது நூற்றாண்டு காலமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்,நன்கு பழகிய வார்த்தை என்பதனால் பழக்கதோஷத்தில் அவர்கள் அதை அவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அதை அவர்களுடைய அரசியல் சாய்வாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?.

ஆனால் நிகழும் போரில் ஈழத்தமிழர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் இதில் எடுக்கக்கூடிய நிலைப்பாடு யுத்தத்தின் போக்கை மாற்றப் போவதில்லை என்பதனால் தமிழர்கள் நிலைப்பாடு ஒன்றை எடுக்கவேண்டிய தேவை என்ன? என்று ஒரு பகுதியினர் கேட்கின்றார்கள். ஆனால், அரசு இல்லாத, நீதிக்காகப் போராடுகின்ற ஒரு மக்கள் கூட்டம் உலகில் நடக்கும் மோதல்கள் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டை அறத்தின் அடிப்படையில் எடுப்பதா? அல்லது ஒர் அரசுபோல சிந்தித்து முடிவெடுப்பதா?

மேற்காசிய யுத்தம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவடையுமாக இருந்தால் அது இப்போதுள்ள உலக அரசியலில் துருவ நிலைப் போக்குகளை மாற்றக்கூடும். எனவே கேந்திர முக்கியத்துவம்மிக்க ஓர் அமைவிடத்தைக் கொண்ட மக்களாகிய ஈழத்தமிழர்கள் இந்தவிடயத்தில் தெளிவாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

போர் நிகழ்வது ஆசியக் களம். நேரடியாக மோதுவது இரண்டு ஆசிய நாடுகளும் அமெரிக்காவும். தவிர ஈரானைச் சுற்றியிருக்கும் நாடுகளில் அமெரிக்காவின் தளங்கள் உண்டு. எனவே போர்க்களம் அங்கேயும் விரிவடைந்திருக்கிறது. இதுவரையிலுமான உயிர்ச் சேதத்தைக் கணக்கிட்டால் அதிகமாகக் கொல்லப்பட்டிருப்பது ஆசியர்கள்தான். மிகச்சொற்பமான தொகை அமெரிக்கர்கள்தான் இறந்திருக்கிறார்கள். ஆசியாவுக்கே சேதம் அதிகம். ஆசியாவுக்கே உயிரிழப்புகள் அதிகம். ஆசியர்கள் ஒருவர் மற்றவரோடு மோதிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டதோர் பிராந்திய அரசியல் பின்னணிக்குள் ஆசியர்களாகிய ஈழத் தமிழர்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்?

ஆசிய சகோதரத்துவம் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாமா? ஈழத் தமிழர்களின் விவகாரத்தில், இறுதிக்கட்டப் போரில் ஆசிய நாடுகள் ஈழத் தமிழர்களோடு  நிற்கவில்லை. ஈரானும் உட்பட பெரும்பாலான ஆசிய நாடுகள் அரசாங்கத்தோடுதான் நின்றன. அங்கே ஆசியர்கள் என்பதற்காக அவர்கள் ஈழத் தமிழர்களோடு தமது சகோதரத்துவத்தை நிரூபிக்கவில்லை.

மேலும் பொறுப்புக்கூறலுக்கான ஐநா நடவடிக்கைகளிலும் ஆசிய நாடுகள் பெருமளவுக்கு ஈழத் தமிழர்களோடு நிற்கவில்லை. அமெரிக்காவின் மேலாண்மையை அனுசரித்துப்போகும் மேற்கத்திய நாடுகள்தான் பெருமளவுக்கு ஐநா தீர்மானங்களைக் கொண்டு வருகின்றன. அப்படிப் பார்த்தால் கடந்த 16 ஆண்டுகால ஐநாமைய அரசியலின் அடிப்படையில் ஈழத் தமிழர்கள் மேற்கு நாடுகளின் பக்கம் நிற்கவேண்டுமா?

649957838_1094640113722373_1961580324951

ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுதும் பலஸ்தீனத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால் பலஸ்தீன தன்னாட்சி அதிகார அமைப்பானது இலங்கை அரசாங்கத்தோடுதான் நிற்கின்றது. போராடி வென்ற நாடுகளான வியட்நாம்,கியூபா, எரித்திரியா போன்ற நாடுகளும் ஈழத்தமிழர்களோடு இல்லை. அந்த நாடுகள் அறநெறி, நீதிநெறி என்பவற்றின் அடிப்படையிலோ அல்லது நீதிக்கான போராட்டம் என்ற அடிப்படையிலோ ஈழத்தமிழர்களோடு தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தவில்லை.

அதேசமயம் ஐநாவில் தீர்மானங்களைக் கொண்டுவரும் மேற்கு நாடுகள் தமிழர்கள் மீது கொண்ட காதலால், அன்பினால் அல்லது அறத்தின் அடிப்படையில் அந்த முடிவை எடுக்கின்றன என்பதல்ல. பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கத்தை தடுப்பதற்கான ஒரு கருவியாக இலங்கை அரசாங்கத்தின் மீது எப்பொழுதும் ஒரு பிடியைப் பேணுவதற்கு அவர்கள் ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையாண்டு வருகிறார்கள் என்பதுதான் ராஜதந்திர யதார்த்தம்.

இதுதான் அரசுகளின் உலகம். எந்த ஒரு நாடும் இன்னொரு நாட்டுடன் அல்லது அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டத்துடன் வைத்துக்கொள்ளும் உறவு என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்பு சார்ந்த நலன்களின் அடிப்படையில்தான் பேணப்படும். அங்கே அறநெறி, நீதிநெறி, பிராந்திய சகோதரத்துவம் போன்றவை கிடையாது. அவையெல்லாம் “அம்புலிமாமா” கதைகளில் வருபவை.

ஈழப்போரின் போதும் போருக்கு முன்னரும் பின்னரும் இலங்கை இனப் பிரச்சினையில் பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசாங்கத்தைத்தான் கையாள முயற்சித்தன. அரசாங்கத்தைக் கையாள முடியாத நிலை வரும்பொழுது அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்காக தமிழ்மக்களை, தமிழ் மக்களின் போராட்டத்தை,தமிழ் மக்களின் அரசியலை ஓர் அழுத்தப் பிரயோக கருவியாக அவை கையாண்டன. இப்பொழுதும் கையாண்டு வருகின்றன. இதுதான் கடந்த சுமார் அரை நூற்றாண்டு கால அனுபவம்.

இப்படிப்பட்டதோர் குரூர உலகில், அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத் தமிழர்கள் எப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம்? எனது கட்டுரைகளில் நான் திரும்பத்திரும்பக் கூறும் ஓர் ஆபிரிக்கப் பழமொழி உண்டு. “நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்க்காதே. அவ்வாறு எதிர்பார்ப்பது, நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று நம்புவதற்கு நிகரானது.”

இதுதான் உலக அரசியல்.ஈழத் தமிழர்கள் ஒரு தேசமாகத் திரளும்போது ஜோன் லொகே கூறுவது போல “ஒரு சமூகத்தின் பலமானது அந்தச் சமூகத்தின் தார்மீக ஒருமைப்பாட்டில் தங்கியிருக்கிறது” என்ற அடிப்படையில் திரளவும் வேண்டும். அதேசமயம் அரசுகளின் அரங்கில் ஓர் அரசைப்போலவும் சிந்திக்க வேண்டும். செயற்பட வேண்டும். “புலிகள் சண்டையிடும்போது மலை உச்சியில் அமர்ந்திருந்து அதைப் பார்க்கவேண்டும்” என்ற சீனப் பழமொழி இங்கே பொருத்தமாக இருக்குமா?

https://www.nillanthan.com/8211/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.