Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத சட்ட வரைவு; மனித உரிமை சீர்திருத்தத்தில் தயக்கம் - சர்வதேச ஆய்வாளர் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத சட்ட வரைவு; மனித உரிமை சீர்திருத்தத்தில் தயக்கம் - சர்வதேச ஆய்வாளர் எச்சரிக்கை

Published By: Vishnu

31 Mar, 2026 | 11:02 PM

image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது. இந்த அணுகுமுறை சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கிறது. அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதுமாத்திரமன்றி இந்தப் போக்கு இலங்கைக்கு நீண்டகால அடிப்படையிலான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என நெதர்லாந்தின் டி.எம்.சி அஸேர் நிலையத்தின் ஆய்வாளர் நிக்கி சியாம்பாகோ எச்சரித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தீவிர கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அதேவேளை அவ்வரைவு தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை அனுப்பிவைப்பதற்கு நீதியமைச்சினால் வழங்கப்பட்டிருந்த பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.

இருப்பினும் இவ்விடயத்தில் தாம் முன்னெடுக்கவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் அறிவிக்காத நிலையில், நெதர்லாந்தை தளமாகக்கொண்டு இயங்கிவரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆய்வுக்கட்டமைப்பான டி.எம்.சி அஸேர் நிலையத்தின் ஆய்வாளர் நிக்கி சியாம்பாகோ இப்புதிய வரைவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக அனைத்து ஒடுக்குமுறைச்சட்டங்களையும் நீக்குவதாகவும், நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் உறுதியளித்தது. இருப்பினும் அரசாங்கம் அவ்வாக்குறுதியைத் தற்போதுவரை நிறைவேற்றவில்லை.

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டமானது சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தவறாகப் பிரயோகிக்கப்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கிறது. 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் செயற்திறன்மிக்கதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறத்தக்கதுமான புலனாய்வு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் தேவைப்பாட்டை உணர்த்தின. இத்தகைய பின்னணியில் முன்னைய அரசாங்கங்களினால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கான திருத்தங்களும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவுகளும் முன்மொழியப்பட்ட போதிலும், அவை எவற்றாலும் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புக்கட்டமைப்பை சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் கொண்டுவரமுடியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் 2024 இல் தேர்தல்களின் பின்னர் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம் குறித்து ஆராய்வதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவை முன்மொழிவதற்குமென ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு' கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

போருக்குப் பின்னரான சவால்கள், பயங்கரவாதத்தடைச்சட்டம் மீதான நீண்டகால விமர்சனங்கள், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்துவதற்கான இலங்கையின் அரசியல் கடப்பாடு ஆகியவற்றின் பின்னணியில் வெளியிடப்பட்டிருக்கும் இச்சட்டவரைவு பெரும்பாலும் முன்னைய அரசாங்கங்களின் முன்மொழிவுகளையே பிரதிபலிக்கிறது. அத்தோடு சர்வதேச சட்டத்துக்கு இணங்குவதற்குரிய ஐந்து அத்தியாவசிய முன்நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கும் அது தவறியிருக்கிறது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் பயங்கரவாத செயல்களுக்கு மிகப்பரந்துபட்ட வரையறை வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் செய்யப்படும் பட்சத்தில் எனக் குறிப்பிட்டு, தாக்குதல், சொத்துச்சேதம், கொள்கை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் மத அல்லது கலாசார இடங்களை சேதப்படுத்தல் போன்ற சாதாரண குற்றங்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. இந்த விரிவான வரையறை மற்றும் குற்றவியல் நோக்கத்தின் பரந்துபட்ட தன்மை என்பன அரசியல் எதிரிகளையும் சிவில் சமூகத்தையும் குறிவைப்பதற்குத் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

அதேபோன்று இப்புதிய சட்ட வரைவு படையினருக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்குகிறது. 'நியாயமான சந்தேகம்' என்ற அடிப்படையில் நபர்களை நிறுத்தவும், தேடவும், விசாரணை செய்யவும், வளாகங்களுக்குள் நுழைந்து சோதனையிடவும் சட்டத்தின்கீழ் ஒரு குற்றத்துடன் தொடர்புடைய அல்லது தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொருட்களைக் கைப்பற்றவும் இது இடமளிக்கிறது. இந்தப் பரந்துபட்ட அதிகாரங்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல் வரலாறு என்பவற்றைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இவ்வதிகாரங்கள் தன்னிச்சையான தடுத்துவைப்புகள் மற்றும் சித்திரவதைகளுக்கு வழிகோலும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன.

இவையும், இச்சட்ட வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள ஏனைய பல சரத்துக்களும் மனித உரிமைகளை மட்டுபடுத்துவதற்கோ அல்லது இல்ஙகையின் போருக்குப் பின்னரான விரிவான இடைக்கால நீதிச்செயன்முறையை சீர்குலைப்பதற்கோ வழிவகுக்கக்கூடும். இச்சட்டத்தை நிறைவேற்றுவது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் சார்ந்து இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளை சமரசம் செய்யும் வகையில் அமையும்.

குறிப்பாக இலங்கை தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினால் பயனடைந்து வருவதுடன், அச்சலுகைக்கு மீண்டும் விண்ணபிப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் அதற்கு ஈடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைத்தல் எனும் கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றவேண்டும். இல்லாவிடின் 2010 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப்போல, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் இடைநிறுத்தப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படாமல் போகலாம். இது இலங்கையின் பொருளாதாரத்தில் மோசமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது. இந்த அணுகுமுறை சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கிறது. அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதுமாத்திரமன்றி இந்தப் போக்கு இலங்கைக்கு நீண்டகால அடிப்படையிலான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/242438

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.