Jump to content

பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள்


Recommended Posts

பழந்தமிழர்களின் விநோத தண்டனைகள் - ச.சுவாமிநாதன்

சங்க காலத் தமிழகத்திலும் அதற்குப் பின்னரும் விநோதமான தண்டனைகள் வழக்கத்தில் இருந்தன. அரசன், போரில் வெற்றி பெற்றால் தோல்வியுற்ற மன்னர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவது, அவன் மனைவியரின் கூந்தலை அறுத்துக் கயிறு திரிப்பது, தோல்வியடைந்த மன்னரின் திருமுடிகளை அல்லது மகுடங்களை உருக்கிக் காலடியில் பலகையாகப் போடுவது, தோற்ற மன்னரின் அரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்கி அவ்விடத்தில் கழுதை பூட்டிய ஏரால் உழுவது, யவனர் போன்ற வெளிநாட்டினர் பிடிபட்டால் அவர்கள் தலையை மொட்டையடித்து நெய்யை ஊற்றி அவமதிப்பது, பெண்ணைத் திருமணம் செய்யவில்லை என்று பொய் சொன்னவனை மரத்தில் கட்டிச் சாம்பல் பூசுவது, மாற்று மன்னர்களின் குழந்தைகளை யானையின் காலால் இடறச் செய்து கொல்வது, ஒற்றர்களுக்கு மரண தண்டனை அளிப்பது, கொலைத் தண்டனை கிடைத்தோருக்குச் செம்மாலைகளை அணிவிப்பது - இப்படி எத்தனையோ விசித்திரமான வழக்கங்களைக் காண முடிகிறது.

1. சிறுமிக்கு மரண தண்டனை

சங்க இலக்கியத்தில் மிகவும் கொடுமையான செய்தி, ஒரு சிறுமிக்கு மரண தண்டனை கொடுத்ததாகும். நன்னன் என்ற கொடுங்கோலன் ஆட்சியில் இது நடந்தது. இதனால் அவனைக் கண்டித்த பரணர் போன்ற புலவர்கள் அவன் பரம்பரையில் வந்த மன்னர்களைக் கூடப் பாட மறுத்து விட்டனர். பெண் கொலை புரிந்த நன்னன் மரபில் வந்த இளம் விச்சிக்கோ என்ற மன்னனைப் பாட மறுத்து விட்டார் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் (புறம் 151).

நன்னன் என்பவன் பூழி நாட்டையாண்ட (கேரளாவின் ஒரு பகுதி) ஒரு சிற்றரசன். நன்னனது தோட்டத்திலுள்ள மரத்திலிருந்து விழுந்த மாங்காய் ஒரு கால்வாயில் மிதந்து வந்தது. அதனை அங்கு நீராடச் சென்ற ஒரு பெண் எடுத்துத் தின்று விட்டாள். உடனே அப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான் நன்னன். இதை எதிர்த்த நல்லோர் அனைவரும் கொதித்து எழுந்தனர். அப்பெண்ணின் நிறைக்கு நிறை (துலாபாரம்) தங்கம் தருவதாகவும், 81 யானைகள் தருவதாகவும் பெண்ணின் தந்தை கெஞ்சிப் பார்த்தார். ஆனால் ஈவு இரக்கமற்ற நன்னன் அப்பெண்ணின் மரண தண்டனையை நிறைவேற்றினான். இதைப் பரணர் குறுந்தொகைப் பாடலில் (292) விரிவாக எடுத்துரைக்கிறார்.

2. எடைக்கு எடை தங்கம்

அரசனுக்குத் தீங்கிழைப்பவர் அவர்களுடைய நிறைக்குத் தங்கத்தால் உருவம் (பாவை) செய்து கொடுப்பது அக்கால மரபு. இதைக் குறுந்தொகையிலும் (பாடல் 292) பெருங்கதையிலும் (1:40:371) காணலாம்.

2300 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் நாடகம் எழுதிய பாஷை என்ற அறிஞன் 'தூத வாக்ய' என்ற அவனது நாடகத்தில் ஒரு சுவையான சம்பவத்தைக் கூறுகிறான். பாண்டவர்க்காகக் கிருஷ்ணன் தூது வருகிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன், சபைக்குள் கிருஷ்ணன் நுழைகையில் எவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யக் கூடாதென்றும் அப்படி எழுந்து நிற்போருக்கு 12 தங்கக் காசு அபராதம் என்றும் துரியோதனன் கூறுகிறான். ஆனால் கிருஷ்ணன் சபைக்குள் நுழையும் போது துரோணர், பீஷ்மர், விதுரன் போன்ற பெரியவர்களும் கூட அவர்களை அறியாமலே எழுந்து நிற்கின்றனர். துரியோதனனோ ஆசனத்திலிருந்து கீழே விழுகிறான்!! அரசன் கட்டளையை மீறும் அமைச்சருக்கு 12 பொற்காசு தண்டனை என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

3. பெண்கள் முடியில் கயிறு திரித்தல்

சங்க கால மன்னர்கள், அவர்களிடம் தோற்றுப் போன அரசனின் மனவியரை இழுத்து வந்து அவர்களுடய தலைமுடியைச் சிரைத்து அதிலிருந்து கயிறு திரித்து அக் கயிற்றால் பகையரசரின் யானையப் பிடித்து இழுத்து வந்தனர். நன்னன் என்ற கொடுங்கோலரசன் இப்படிச் செய்ததைப் பரணர் என்னும் புலவர் நற்றிணைப் பாடலில் (270) குறிப்பிட்டுக் கண்டித்துள்ளார்.

4. பாவங்களுக்குப் பரிகாரம் (கழுவாய்)

பசு மாட்டின் மடியினை அறுத்தவர்க்கும், பெண்களின் கருவைச் சிதைத்தவர்க்கும், பார்ப்பனர்களுக்குக் கொடுமை செய்தவர்களுக்கும் பரிகாரம் (கழுவாய்) உண்டு. ஆனால் செய்ந்நன்றி கொன்றவர்க்குக் கழுவாயே இல்லை என்று ஆலத்தூர்க் கிழார் (புறம் 34) என்ற புலவர் பாடுகிறார். இதே கருத்தை வால்மீகி ராமாயணத்திலும் பஞ்ச தந்திரக் கதைகளிலும் காண்கிறோம்.

இதிலிருந்து அக்காலத்தில் சில குற்றங்கள் இருந்ததையும் அதற்குப் பரிகாரமாகக் கடுமை குறைந்த தண்டனைகள் அளிக்கப்பட்டதையும் அறிகிறோம்.

புறம் 34-வது பாடலில் மூன்றாவது வரியில் பார்ப்பனர் (அந்தணர்கள்) என்ற சொல்லைச் சில புதிய பதிப்புக்களில் குரவர் (அறிஞர்/ஆசிரியர்) என்று திருத்தியுள்ளனர். இது சரியில்ல என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. பசுவையும், பார்ப்பனரையும் அடுத்தடுத்துக் கூறுவது சங்க இலக்கிய மரபு. எட்டுத் தொகையிலும் பத்துப் பாட்டிலும் ஏராளமான இடங்களில் பசு-பார்ப்பனை என்ற சொற்றொடர் வருகிறது. இது வடமொழி இலக்கியங்களில் வரும் 'கோப்ராம்மணஸ்ய' என்ற சொற்றொடரின் மொழி பெயர்ப்பு. கண்ணகி மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய போது பசு, பெண்டிர், பார்ப்பனர் உள்ள பக்கம் எரியக் கூடாது என்று அக்கினி தேவனுக்குக் கட்டளையிடுகிறாள். ஞானசம்பந்தரும் வாழ்க அந்தணர், வானவர், ஆவினம் என்று பாடுகிறார்.

5. ஊரைத் தீக்கிரையாக்குதல்

பழந்தமிழர்கள் செய்த பெரிய தவறுகளில் ஒன்று பகையரசர்களின் ஊரைத் தீக்கிரையாக்குவதாகும். இதனால் வரலாற்றுத் தடயங்கள் ஏதுமின்றி, இன்று நாம் தவிக்கிறோம். சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் இப்படித் தீக்கிரையாக்கப்பட்டுப் பகையரசர்களின் ஊர்கள் பாழாய்ப் போனதையும் அவ்விடங்களில் ஆந்தையும் கூகையும் அலறுவதையும் படித்தறிகிறோம். தனி ஒருத்திக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்காக மதுரை நகரையே கண்ணகி தீக்கிரையாக்கியதைச் சிலப்பதிகாரம் அறிவிக்கிறது.

6. கழுதை ஏர் பூட்டி உழுவது

அதியமான் அஞ்சியின் மகன் பொருட்டெழினியைப் புகழ்ந்து பாடிய ஒளவையார் (புறம் 39) ''திறை கொடாத மன்னனின் மதில்களை வஞ்சனையின்றி அழித்துக் கழுதை பூட்டி உழுது வரகும் கொள்ளும் விதைக்கும் மன்னன்'' என்று கூறுகிறார். இவ்வாறு எதிரியின் நிலத்தைக் கழுதை கொண்டு உழுவதைக் கி.மு. முதல் நூற்றாண்டில் ஒரிஸ்ஸாவை ஆண்ட காரவேலன் என்ற கலிங்க மன்னனும் அவனுடய கல்வெட்டில் கூறுகிறான். ஆக இது பரவலாக இருந்த வழக்கம் என்று தெரிகிறது. சிலப்பதிகாரத்தில் நீர்ப்படக் காதையில் மருதப் பண்ணிலும் கழுதை பூட்டிய ஏரால் உழுது வரகு பயிரிடுவது குறிப்பிடப்பட்டுள்ளது.

7. தோற்ற மன்னர்களைச் சிறையில் அடைப்பது

சோழன் செங்கணானோடு சேரமான் கணக்கால் இரும்பொறை போர் புரிந்தான். இதில் இரும்பொறை தோற்றான். உடனே இரும்பொறையைச் சிறைப் பிடித்துக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான். தண்ணீர் தா என்று கேட்ட போது காவலாளி தண்ணீர் கொண்டு வரத் தாமதித்ததால் சேரன் அவமானம் தாளாது உயிர் துறந்தான் (புறம் 74).

8. கண்களைப் பறித்துத் தண்டனை

பயறு விளைந்த ஒரு நிலத்தில் ஒரு பசு மேய்ந்ததற்காகப் பசுவின் சொந்தக்காரர் ஒருவரின் கண்களைப் பறித்தனர் கோசர்கள். ஊர் மன்றத்தில் இந்தக் கடும் தண்டனை பற்றிக் கோசர்கள் முடிவு செய்தனர். கண்களை இழந்த தந்தைக்கு நியாயம் கிடக்கும் வரை நோன்பு இருக்க அவனுடைய மகள் அன்னிமிஞிலி முடிவெடுத்தாள். உண்கலத்தில் உண்ண மாட்டேன் என்றும் புத்தாடைகளை உடுக்க மாட்டேன் என்றும் உறுதி எடுத்தாள். பின்னர் குதிரைப் படைத் தலைவனான திதியன் என்பவனிடம் சென்று கோசர்களைப் பழி வாங்கும் படி முறையிட்டாள். திதியனும் படையெடுத்துச் சென்று கோசர்களைக் கொன்றான். அன்னிமிஞிலி சினம் தணிந்து உடல் பூரித்து நின்றாள். இந்தச் செய்தியை (அகம் 262, 196) பரணர் நமக்கு அழகிய கவிதையில் தெரிவிக்கிறார். இதைப் படிக்கையில் மதுரையை எரித்த கண்ணகியும், துரியோதனின் தொடையைப் பிளந்த போது மகிழ்ந்த திரௌபதியும் நம் மனக்கண் முன் வருகின்றனர்.

9. பல்லைப் பிடுங்கிக் கதவில் புதைத்தது

அகநானூறு 211-வது பாடலில் புலவர் மாமூலனார் நமக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறார்:

யானை பிடிக்க வருமாறு அனைத்துப் படைத் தலைவர்களுக்கும் சோழ மன்னன் உத்தரவிடுகிறான். அரச நெறிகளை அறியாத எழினி என்பவன் மட்டும் வரவில்லை. உடனே மத்தி என்ற படைத் தலைவனைச் சோழன் அனுப்புகிறான். அவன் எழினியை எளிதில் கொன்று விடுகிறான். அத்தோடு நில்லாமல் எழினியின் பல்லை எடுத்து வந்து 'பெண்மணி வாயில்' என்னும் கோட்டை வாயிலில் கதவில் அழுத்தி வைக்கிறான். இதே புலவர் மாமூலனார் பாடல் 197-ல் கண்ணன் எழினி என்று ஒருவரைக் குறிப்பிடுகிறார். அவனுடய மகன் தான் பல்லைப் பறி கொடுத்த எழினியோ அல்லது இருவரும் ஒருவரா என்று தெரியவில்லை.

பல்லையும், கண்ணையும் பறித்த சம்பவங்களைப் பார்க்கையில் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற பாபிலோனிய மன்னன் ஹமுரபியின் நீதியை இவர்கள் பின்பற்றினர் போலும்!

புத்தரின் பல்லையும் முகம்மது நபியின் முடியையும் பாக்தாத் வழிபாட்டுத் தலங்களில் வைத்திருப்பதை நாம் அறிவோம். ஆனால் அவை அவர்களின் மீதுள்ள மதிப்பின்பால் செய்யப்பட்டவை. இங்கே எழினியை அவமதிப்பதற்காக மத்தி அப்படிச் செய்தான்.

10. தலை கொண்டு வந்தால் பரிசு

குமணனுக்கும் அவன் தம்பி இளங்குமணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு, குமணனைக் காட்டிற்கு விரட்டினான் இளங்குமணன். அத்தோடு நில்லாமல் அவன் (குமணனின்) தலையைக் கொண்டு வருபவருக்கு பரிசு என்றும் இளங்குமணன் அறிவித்தான். பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் காட்டிற்குச் சென்று, குமணனைப் பாடினார். ஆனால் குமணன் கானகத்தில் வாழ்ந்ததால் அவர் கையில் பரிசு கொடுப்பதற்குப் பொருள் ஏதும் இல்லை. தன் இடுப்பிலிருந்த வாளை உருவிப் புலவர் கையில் கொடுத்தான். இதனால் என் தலையை வெட்டி எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு என் தம்பி பரிசு தருவான் என்று தன் இன்னுயிரையும் தியாகம் செய்ய முன்வந்தான் குமணன். ஆனால் புலவர் சாத்தனாரோ பெரும் அறிவாளி. கையில் வாளை வாங்கிக் கொண்டு ஒரு செவ்வாழை மரத்தை வெட்டி வாழைத் தண்டைத் துணியில் சுற்றிக் கொண்டு இளங்குமணனிடம் வந்தார். அவரைப் பார்த்த இளங்குமணன் அண்ணன் தலையோ எனத் திடுக்கிடவே புலவர் உண்மையைக் கூறி அவர்களை ஒன்று படுத்தினார்.

இதைப் புறநானூறு 165-ம் பாடலில் ஓரளவு அறிய முடிகிறது. ஏனைய கதையை உரை மூலமே அறிகிறோம். ஆனால் பகைவனின் தலைக்குப் பரிசுப் பணம் கொடுக்கும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்தது என்பது இதில் தெளிவாகிறது.

11. யானையின் காலால் இடறிக் கொல்லுதல்

தற்காலத்தில் தூக்குத் தண்டனை, மின்சார நாற்காலி, விஷ ஊசி போன்றவை மூலம் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. பழந்தமிழகத்தில் கழுவேற்றுதல், யானையின் காலால் தலையை இடறிக் கொல்லுதல், வாளால் வெட்டிக் கொல்லுதல், சுண்ணாம்புக் காளவாயில் போடுதல் முதலிய மரண தண்டனை முறைகள் இருந்தன. பகை மன்னனின் குழந்தைகளையும் கூட இப்படி இரையாக்க முயன்றதைப் புறநானூறு (46) மூலம் அறிகிறோம்.

மலையமான் மகன்களை யானையின் கால்களால் நசுக்கிக் கொல்லுமாறு சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உத்தரவிடுகிறான். அது கண்டு வருந்திய கோவூர்க்கிழார் என்ற புலவர், ''சோழ மன்னனே! ஒரு புறாவின் உடலைக் காப்பதற்காகத் தன்னையே பருந்துக்கு ஈந்த செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி) பரம்பரையில் வந்தவன் நீ. இந்தச் சிறுவர்களோ கொல்ல வரும் யானையை, அது தீங்கு செய்யப் போகிறது என்பதைக் கூட உணராமல், அதைக் கண்டு மகிழும் இளம் வயதினர்.

பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகள் இவர்கள். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். இனி உன் விருப்பம்'' என்று கூறினார். இதைக் கேட்ட சோழ மன்னன் மனம் மாறி மலையமான் புதல்வர்களை விடுதலை செய்தான் என்பது வரலாறு. இவ்வாறு யானையை விட்டு ஆட்களைக் கொல்லுவதைப் பிற்கால வரலாற்றிலும் காண முடிகிறது.

அப்பரைக் கொல்வதற்காக ஏவப்பட்ட யானை, அவரை வணங்கிச் சென்றது. (கிருஷ்ணனும் சிவனும் அவர்களைக் கொல்ல வந்த யானைகளைக் கொன்றனர்).

12. ஒற்றர்களுக்கு மரண தண்டனை

பழந்தமிழகத்தில் ஒற்றர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதைக் கோவூர்க்கிழாரின் (புறம் 47) பாடல் மூலம் அறிய முடிகிறது. சோழ மன்னர்கள் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே சண்டை.

இந்நேரத்தில் நலங்கிள்ளியைப் பார்த்துவிட்டு இளம் தத்தன் என்ற புலவன் உறையூருக்கு வருகிறான். அவனை ஒற்றாட வந்தவன் என்று கருதிக் கொல்லும் படி உத்தரவிடுகிறான் நெடுங்கிள்ளி. உடனே கோவூர்க்கிழார் தலையிடுகிறார்.

''மன்னனே! பறவைகள் பழ மரத்தை நாடி ஓடுவது போலப் பரிசிலரைத் தேடி ஓடுவது புலவர் வாழ்க்கை. தாமும் உண்டு பிறரையும் உண்ணச் செய்வதேயன்றி எவருக்கும் தீங்கு செய்யாதார் இவர்கள்'' என்றார். இதைக் கேட்ட மன்னன், புலவர் இளம் தத்தனை விடுதலை செய்தான்.

13. பொய் சொன்ன கணவனுக்கு முகத்தில் கரி

ஒருவன் ஒரு பெண்ணைக் கள்ளத்தனமாகத் திருமணம் செய்துவிட்டுப் பின்னர் பிரிந்து சென்று விடுகிறான். அப்பெண் ஊர் மக்களிடம் முறையிடவே அவர்கள் உண்மையை விசாரித்துத் தவறிழைத்த ஆடவனை மரக்கிளையில் கட்டித் தொங்க விட்டு முகத்தில் சாம்பலைப் பூசுகின்றனர். இந்தச் செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.

முற்காலத்தில் தவறு செய்தவர்களைக் கழுதை மீது ஏற்றி வைத்து மொட்டையடித்துக் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி ஊர்வலம் விடும் வழக்கமும் இருந்தது.

14. மனு நீதிச் சோழன்

சோழ மன்னர் பரம்பரையில் தோன்றிய 2 மன்னர்களைத் தமிழ் இலக்கியம் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசுகிறது. ஒருவர் புறாவுக்குத் தன் சதையை வெட்டிக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி. மற்றொருவர் ஒரு பசு மாட்டின் முறையீட்டின் பேரில் மகனையே தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன்.

மனுநீதிச் சோழனின் மகன் ஓட்டிச் சென்ற தேரானது ஒரு கன்றின் மீது ஏறி அதைக் கொன்று விட்டது. கன்றை இழந்த பசு உடனே மன்னனின் கோட்டை வாயிலுக்குச் சென்று அங்கு கட்டி விடப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியினை அடித்தது. பசுவின் துயரத்தை அறிந்த சோழ மன்னன், அமைச்சரை அழைத்து, கன்று இறந்தது போலவே தனது மகனையும் தேர்க்காலில் இட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டான்.

பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்னும் ஹமுராபியின் சட்டமே மனுவின் ஸ்மிருதியிலும் இருந்ததாகத் தமிழர் நம்பி, அந்தச் சோழனுக்கு மனுநீதிச் சோழன் என்று பெயரிட்டனர்.

''அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்'' என்று சிலப்பதிகாரமும் ''மகனை முறை செய்த மன்னவன்'' என்று மணிமேகலையும் மனுநீதிச் சோழனைப் புகழ்ந்து பேசுகின்றன.

இலங்கையின் வரலாற்றை விரிவாகக் கூறும் மகாவம்சம் என்ற நூலும் (21 வது அத்தியாயம்) மனுநீதிச் சோழன் கதையைக் குறிப்பிடுகிறது. ஏலாரா (ஏழாரன்) என்ற சோழ மன்னன் இலங்கையை 44 ஆண்டுகளுக்கு நீதி நெறி தவறாமல் ஆண்டான் என்றும் அப்பொழுது இது நடந்தது என்றும் மகாவம்சம் கூறுகிறது. அவன் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.

15. ஆராய்ச்சி மணி

தமிழ் மன்னர்கள் நீதிநெறி தவறாது ஆட்சி புரிந்தனர். ஆயினும் எங்கேனும் நீதி தவறினால் மன்னரைக் காண நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. கோட்டை வாயிலில் தொங்க விடப்பட்டுள்ள ஆராய்ச்சி மணியை எவரும் வந்து அடிக்கலாம். மன்னன் ஓடோடி வந்து நீதி வழங்குவான்.

கணவனை இழந்த கண்ணகி மதுரை நகரைத் தீக்கிரையாக்கிய பின்னரும், ஆத்திரமும் வருத்தமும் தணியாமல் நின்றாள். மதுரையின் காவல் தெய்வமாகிய மதுராபதி அவள் முன் தோன்றிப் பாண்டிய மன்னனின் செங்கோல் ஆட்சியை எடுத்துரைக்கிறாள்:

''மறை நா ஓசை அல்ல தியாவதும்

மணி நா ஓசை கேட்டதும் இலனே''

(சிலப்பதிகாரம் கட்டுரைக் காதை)

பாண்டிய மன்னரின் ஆட்சியில் அந்தணர்கள் ஓதும் வேதத்தைத் தான் அவன் காதுகள் கேட்டுப் பழகியிருக்கின்றன. இது வரை அவன் ஆட்சியில் எவரும் ஆராய்ச்சி மணியை அடித்துக் கேட்டதேயில்லை என்று மதுராபதித் தெய்வம் கூறுகிறது.

நீதிநெறி தவறாத ஏலாரா (ஏழாரன்) என்ற சோழ மன்னனின் ஆட்சியைப் புகழும் மகாவம்சமும் இந்த ஆராய்ச்சி மணி பற்றிக் குறிப்பிடுகிறது (21-வது அத்தியாயம்)

16. பொற்கைப் பாண்டியன்

சிலப்பதிகாரம் பொற்கைப் பாண்டியன் என்ற மன்னரின் சுவையான கதை ஒன்றையும் கூறுகிறது (கட்டுரைக் காதை).

கீரந்தை என்ற பார்ப்பனன் ஒருவன் ஒருநாள் வேற்றூர் செல்ல நேரிட்டது. அப்போது பாண்டிய மன்னன் அவ்வீட்டைக் காவல் காத்தான். அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில் அரவம் கேட்கவே அந்த வீட்டின் கதவைப் பாண்டியன் தட்டினான். "பாண்டியன் காவல் இருப்பதால் ஒன்றும் நிகழா என்று கூறி என்னை விட்டுவிட்டுச் சென்று விட்டாரே என் கணவன்" என்று கீரந்தையின் மனைவி புலம்பினாள். மன்னன் இதைக் கேட்டுத் திகைத்து, எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டி விட்டுச் செல்வோம். அப்போது தான் இப்பெண் அஞ்சாமல் இருப்பாள் என்று கருதிப் பலர் வீடுகளின் கதவுகளையும் தட்டிவிட்டுச் செல்கிறான். மறு நாள் அந்தத் தெருவைச் சேர்ந்த அந்தணர்கள் அனைவரும் அரசனிடம் முறையிடவே அரசன் தானே அத்தவறைச் செய்தவன் என்று கூறித் தனது வாளால் தன் கையை வெட்டிக் கொள்கிறான். பின்னர் அரசவை மருத்துவர்கள் அவனுக்கு பொற்கையைப் பொருத்தியதால் பொற்கைப் பாண்டியன் (GOLDEN HAND) என்று பெயர் பெறுகிறான்.

எந்த உறுப்பைக் கொண்டு ஒருவன் தவறு இழைக்கிறானோ அந்த உறுப்பை வெட்டி நீதி வழங்குவது பழந்தமிழர் கண்ட முறை போலும்.

பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழியிலும் (எனக்குத் தகைவன்றால்....) இந்தச் சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

17. நரைமுடி தரித்து நீதி வழங்கல்

பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் இன்றும் கூட நீதிபதிகள் நரைமுடி தரித்துத் தான் நீதி வழங்குகின்றனர். இந்த வழக்கத்தைக் கரிகால் சோழன் தான் துவக்கி வைத்தான் போலும்.

சோழ மன்னரின் தலைநகராக விளங்கிய உறையூரில் இருந்த அறங்கூறு அவையம் மிகவும் புகழ் பெற்றது. ஒருநாள் இரு முதியவர்கள் நீதி வேண்டிச் சோழனின் அரசவைக்கு வந்தனர். ஆனால் வழக்கைக் கேட்கவுள்ள கரிகாலனின் இளம் வயதைக் கண்டு இவரால் சரியான தீர்ப்புக் கூற முடியாதென எண்ணித் தயங்கினர். அவர்களுடய ஏமாற்றத்தை உணர்ந்த கரிகால் சோழன் அவர்களை மறுநாள் வரும்படிக் கூறி, அன்று ஒரு முதியவர் அவைநீதி வழங்குவார் என்றும் சொன்னான்.

மறு நாள் அவர்கள் அவைக்கு வந்த பொழுது கரிகாலனே நரைமுடி தரித்து முதியோர் போல வேடம் அணிந்து வந்து தீர்ப்புக் கூறினான். முதியோர் இருவரும் அந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இச் செய்தியைப் பொருநராற்றுப் படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்கள் எடுத்துக் காட்டியுள்ளன.

18. யவனர் தலையில் எண்ணெய் தடவி அவமதித்தது

பதிற்றுப் பத்து என்னும் நூலில் குமட்டூர் கண்ணனார் பாடிய இரண்டாம் பத்து நமக்கு ஒரு புதிய செய்தியைத் தருகிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற மன்னன், இனிமையற்ற கடுஞ்சொற்களை உடைய யவனர்களைச் சிறைப்படுத்தி, அவர்கள் தலையில் நெய்யினை ஊற்றி, கைகளைப் பின்னால் கட்டி அவமதித்தான். பின்னர் அவர்களிடமிருந்த விலைமிக்க அணிகலன்களையும், உயர்ந்த வைரங்களையும் பெற்று அவர்களை விடுதலை செய்தான்.

நன்றி: நிலாச்சாரல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.