Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞர் அரசு இருப்பதால்தான் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது!-திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரத்யேக பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அரசு இருப்பதால்தான்

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது!

-திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரத்யேக பேட்டி

பெயர்தான் பெரியார் திடல். ஆனால், பெரியார் என்ற முத்தை தன்னகத்தே கொண்டுள்ள கடல் அது! அங்கே அய்யாவின் கனவை நிறைவேற்றும் நவீன தொழிற்சாலையாக பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் அவரின் பக்தர்கள். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக அய்யாவின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்களை சந்திக்க காத்திருக்கிறோம். ஐந்து நிமிடத்தில் தரிசனம் கொடுக்கிறது அந்த கருப்பு சூரியன்! எல்லா கேள்விகளுக்கும் முகம் சுளிக்காமல் வந்து விழுகின்றன கூர்மையான பதில்கள்.

இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் முதல்வர் கலைஞரை சந்தித்து கீதை நூலை கொடுத்தார். அப்போது கலைஞர், நீங்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை கொடுத்து அவரை படிக்க சொன்னார். பகுத்தறிவு தொடர்பான எத்தனையோ நூல்கள் இருக்க, குறிப்பாக நீங்கள் எழுதிய புத்தகத்தை கலைஞர் கொடுத்தது உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்வை ஏற்படுத்தியது?

அந்த நிகழ்ச்சி நடந்த சில நிமிடங்களிலேயே செய்தியாளர் ஒருவர் மூலமாக நான் அதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். பின்பு கலைஞரிடம் தொலைபேசியில் பேசிய போதும் இந்த நிகழ்ச்சி பற்றி விவரித்தார். நான் எழுதிய அந்த நூல் இதற்கு முன்பே பல பதிப்புகள் வந்திருந்தன. நான் முன்னாள் முதல்வரான ஜெலலிதாவுக்கும் அந்த நூலை கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறேன். ஆனாலும், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அந்த புத்தகத்திற்கு பெரும் விளம்பரம் கிடைத்து ஏராளமான புத்தகங்கள் விற்று தீர்ந்தன. உளவுத்துறை அதிகாரிகள் அன்று பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து புத்தகம் கிடைக்காமல், பின்பு என்னை தொடர்பு கொண்டு என்னுடைய இல்லத்தில் இருந்து அதை வாங்கி சென்றார்கள்.

சேது சமுத்திர திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்று, நிதி ஒதுக்கப்பட்டவுடன், இந்த திட்டம் எங்களால்தான் வந்தது என்று தமிழகத்தில் எல்லா கட்சிகளும் உரிமை கொண்டாடின. அ.தி.மு.க வும் இந்த திட்டம் வந்ததற்கு நாங்கள்தான் காரணம் என்று போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். ஆனால், திடீரென்று இந்த திட்டத்திற்கு அ.தி.மு.க வே முட்டுக்கட்டை போட முயற்சிக்கிறதே?

அண்ணா அவர்கள் சேது சமுத்திர திட்டத்திற்காக எழுச்சி நாள் நடத்தினார். பெரியார் காலத்திலிருந்தும் அதற்கு முன்பாகவும் சேது சமுத்திர திட்டத்திற்காக குரல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் என் தலைமையில் போராட்டம் நடத்தினோம். எங்கள் இயக்கத்தின் சார்பாக சுவரெழுத்துக்களில் இந்த திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். 2001 சட்டமன்றம், 2004 நாடாளுமன்றம் இந்த இரண்டு தேர்தல் அறிக்கையிலும், ஜெயலலிதா சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொன்னார். அவருடைய தேர்தல் அறிக்கையில் இன்று என்னென்ன குற்றச்சாட்டுகளை சொல்லி அது கூடாது என்று அவர் சொல்லி வருகிறாரோ, அதே காரணங்களை அப்போது அவரே அழகாக மறுத்திருக்கிறார். இந்த திட்டத்தின் பயன்களாக அவர் சொன்னது என்னவென்றால், தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக ஆக்குவோம். அதனால் தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்பதுதான். கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர் பாலு, 2008-ல் சேது சமுத்திரத்தில் கப்பல் ஓடும். அதை சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், முதல்வர் கலைஞர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைப்பார்கள் என்று அறிவித்ததுதான் ஜெயலலிதாவுக்கு பொறுக்கவில்லை. காரணம் 2009-ல் தேர்தல் வரும். இதை காட்டி மக்கள் மத்தியிலே அவர்கள் செல்வாக்கு பெற்று விடுவார்கள். தங்களின் செல்வாக்கு பாதிக்கப்படும் என்று முடிவு செய்த அவர், இந்த திட்டத்தை தடுக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் தாமதிக்கவாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழித்தடத்தை தேர்வு செய்தது ழிணிணிஸிமி என்ற அமைப்பை சேர்ந்த அறிவியலாளர்கள். முதலில் ஆறாவது வழித்தடம் வேண்டாம் என்றுதான் பிரச்சனையை ஆரம்பித்தார் ஜெயலலிதா. இப்போது இந்த திட்டமே வேண்டாம் என்று சொன்னால், அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்கிற பச்சை துரோகம். இவர்கள் நோக்கம் இந்த திட்டத்தை நிறைவேற்றிய பெருமை தி.மு.க வுக்கும், காங்கிரசுக்கும் போய்விட கூடாது என்பதுதான்.

சேது சமுத்திர திட்டம் தடைபடாமல் நடக்கிறது என்று டி.ஆர் பாலுவும், அந்த திட்டம் இனிமேல் நிறைவேறவே வாய்ப்பில்லை என்று ஜெயலலிதாவும் கூறி வருகிறார்கள். உண்மையில் அந்த திட்டத்தின் இன்றைய நிலைமை என்ன?

நீதிமன்றத்தின் மூலமாகவாவது இந்த திட்டத்தை முடக்கி விடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா. அது நடக்காது. திட்டம் கொஞ்சம் தாமதமாகலாமே தவிர, முடக்க முடியாது. ராமேஸ்வரத்தை ஒட்டி 32 கிலோ மீட்டர் மட்டுமே தோண்ட வேண்டியிருக்கிறது. திட்டம் தாமதமானதால் கொஞ்சம் செலவும் அதிகரிக்கும். அதற்கு ஜெயலலிதா, சுப்ரமணியம்சாமி போன்றவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த திட்டம் நிறைவேறக்கூடாது என்று இலங்கை அரசு மறைமுகமாக முட்டுக்கட்டை போடுவதாக கருதுகிறீர்களா?

நிச்சயமாக. இலங்கையின் மறைமுக தூண்டுதலும் இதில் இருக்கிறது. இந்த திட்டம் நிறைவேறினால், 90 விழுக்காடு வருமான இழப்பு ஏற்படும் அபாயம் இலங்கைக்கு இருக்கிறது. எனவே இவர்களை போன்ற முகவர்களை இலங்கை பயன்படுத்தியிருக்கலாம். இந்த திட்டம் கூடாது என்று சொல்கிறவர்கள் இலங்கையின் ஒலி குழாயாகதான் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இன்னொன்றையும் நினைவுபடுத்த வேண்டும். வாஜ்பாய் அரசு சேது சமுத்திர திட்டத்தை துவங்க வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில், தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் கப்பல் போக்குவரத்தை துவங்க வேண்டும் என்று ஒரு குறுக்கு சால் ஓட்டினார்கள். அதன் நோக்கம் என்னவென்றால் அப்படி ஒரு திட்டம் துவங்கிவிட்டால் சேது சமுத்திர திட்ட வேலைகள் நடக்காது என்பதுதான். அப்படியிருந்தும் அது நடக்காமல் போனது.

சேது சமுத்திர திட்டம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்று கூறலாமா?

விழிப்புணர்வு இல்லை என்று சொல்லவே முடியாது. லயோலா கல்லூரி சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் 80 விழுக்காடு இந்த திட்டம் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் நாங்கள் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் குறித்து சொற்பொழிவு ஆற்றி வருகிறோம். மிகப்பெரிய மாநாடுகள் போட்டிருக்கிறோம். அண்மையில் கூட மதுரையில் என் தலைமையில் ஒரு மாநாடு நடந்தது. நான்கு அணியாக பிரிந்து பிரச்சாரம் செய்தோம். எங்கள் தொண்டர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து கிராமங்கள் வழியாக பிரச்சாரம் செய்து கொண்டு மதுரைக்கு வந்து சேர்ந்தார்கள். மற்றொரு அணி கோவையிலிருந்து பிரச்சாரம் செய்து கொண்டு வேலூர் வந்தார்கள். திருத்தணியிலிருந்து பிரச்சாரம் செய்து கொண்டு வந்தார்கள். 'சேது சமுத்திர திட்டமும், ராமர் பாலமும்Õ என்ற தலைப்பில் நாங்கள் எழுதிய கேள்வி பதில் தொகுப்பு லட்சத்திற்கு மேற்பட்ட பிரதிகள் தமிழ்நாடு முழுவதும் விற்பனை ஆகியுள்ளது. அதனுடைய இந்த பதிப்பு அண்மையில் பெரியார் திடலில் வெளியிடப்பட்டது. ஏனென்றால் வட நாட்டில் இருப்பவர்களுக்கும் இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு வேண்டும் என்பதால் இந்தியில் மொழி பெயர்த்தோம். புவியியல் ரீதியாகவும், தொல்லியல் ரீதியாகவும் அதில் ஆதாரங்களை எடுத்து வைத்திருக்கிறோம். முதன் முதலாக இந்தியாவில் கட்டப்பட்ட பாலம் என்பதே 1500 ஆண்டுகளுக்குள்ளாகதான். உலகத்திலேயே முதலில் கட்டப்பட்ட பாலம் எகிப்தில்தான். இதையெல்லாம் சொல்லும் அந்த புத்தகத்தை 5 ரூபாய்க்கு மலிவு பதிப்பாக போட்டு எல்லா கிராமங்களிலும் விற்றிருக்கிறோம். ஒரு பெட்டி வைத்து சேது சமுத்திர திட்டம் வேண்டாம் என்பவர்கள் வாக்களியுங்கள் என்றால் 10 விழுக்காடு வாக்கு கூட விழாது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு தமிழன் கால்வாய் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று ஆதித்தனார் போன்ற தலைவர்கள் விரும்பினார்கள். இந்த பெயரை வைக்க வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துவீர்களா?

ஆமாம்! சேது, சமுத்திரம் என்பதெல்லாம் தமிழ் சொல்லே அல்ல. ஆனால், இதற்கு தமிழன் கால்வாய் என்று பெயர் வைத்து அதன் மூலம் சில எதிர்ப்புகள் வந்தால் என்ன செய்வது? முதலில் திட்டம் வரட்டும் என்று கலைஞர் விரும்பினார். இதுவரைக்கும் மத்திய அரசு 2500 கோடி ரூபாயை ஒரு திட்டத்திற்காக ஒதுக்கியிருக்கிறது என்றால் அண்மைகால வரலாற்றில் இது பெரிய சாதனை. முதலில் அதை நிறைவேற்ற வேண்டும். அதற்குண்டான தடைகளை உடைக்க வேண்டும்.

குஜராத்தில் மோடி வெற்றி பெற்றதற்கு, ராமர் பற்றி கலைஞர் பேசிய சில கருத்துகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறதே?

அதெல்லாம் ஒன்றுமேயில்லை. திட்டமிட்டு இப்படிப்பட்ட செய்திகளை பரப்புகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷித், போன்றவர்கள்தான் இப்படி பரப்பிவிடுகிறார்கள். இந்துத்வா அமைப்பை சேர்ந்தவர்கள்தான் ராமர் பாலம் பற்றி வலியுறுத்தி பேசுகிறார்களே தவிர, வட மாநிலத்தில் இருக்கிற பி.ஜே.பி யினர் கூட கலைஞரின் ராமர் பால கருத்தை பெரிதாக எதிர்க்கவில்லை. ராமகோபாலன், ஜெயலலிதா, சுப்ரமணியம்சாமி போன்றவர்கள்தான் இப்படி செய்திகளை கிளப்பி விடுகிறார்கள்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசினாலே அவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட நிலை கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. அது கலைஞர் ஆட்சியிலும் தொடர்வது வேதனை அளிக்கவில்லையா?

அப்படியில்லை. இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். மாநில ஆட்சி, மத்திய ஆட்சியின் கொள்கைக்கு வேறு விதமாக போக முடியாது. இன்னும் சொல்ல போனால் மத்திய அரசையும் சேர்த்து கவனிக்கிற பொறுப்பில் அவர் இருக்கிறார். தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு அவர் இரங்கல் கவிதை படித்ததை பலரும் விமர்சித்தார்கள். ஆனால், அவர் நான் தவறாக சொல்லிவிட்டேன் என்று தன்னுடைய கருத்தை திரும்ப பெறவில்லையே? என்னுடைய உணர்வைதான் நான் காட்டினேன் என்றார். அந்த துணிச்சல் அவரை தவிர யாருக்கும் வராது.

அதே உணர்வை மற்றவர்கள் காட்டினால் அவர்களை கைது செய்கிறார்களே?

அரசாங்கத்திற்கு சில எல்லைகள் இருக்கிறதல்லவா? இலங்கைக்கு பிரதமர் போக கூடாது என்று நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதை அனுமதித்தார்களே? விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வந்தார். சுப.வீரபாண்டியன் வந்தார். உலக தமிழர் பேரவை ஜனார்தனம் வந்தார். சேதுராமன் வந்தார். இப்படி பல தலைவர்கள் அதில் கலந்து கொண்டார்களே. அரசாங்கத்திற்கு சில கடமைகள் உண்டு. உயர்நீதிமன்றத்திற்கு எதிராக நான் ஒரு போராட்டம் நடத்தினேன். என்னை கைது செய்துதான் அழைத்துப் போனார்கள். கட்சி ரீதியாக சில கொள்கைகள் இருக்கலாம். அவர்களே அரசாங்கத்திற்கு வரும்போது கடமையை சரிவர செய்ய வேண்டும். நான் சட்டம் மீறக்கூடிய சூழ்நிலை இருக்கும்போது என்னுடைய உறவினரே போலீஸ் அதிகாரியாக இருந்தால் விட்டு விடுவாரா? கலைஞர் அரசு இருப்பதால்தான் குரல் கொடுக்கவே வாய்ப்பு இருக்கிறது. இதுவே அந்த அம்மா இருந்திருந்தால் என்னாகும்? வைகோவை கேட்டால் தெரியும்!

சாதிக்கலவரங்கள் நடக்கிறது என்பதற்காக போக்குவரத்து கழகங்களிலும், மாவட்டங்களுக்கும் வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயரை நீக்கிய கலைஞரே, மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைப்போம் என்று கூறி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறாரே? முரண்பாடாக இல்லையா?

இதில் முரண்பாடு இல்லை. முத்துராமலிங்க தேவரை ஏன் சாதி தலைவராக பார்க்க வேண்டும்? சென்னை விமான நிலையங்களுக்கு காமராசர் பெயரையும், அண்ணா பெயரையும் சூட்டியிருக்கிறார்களே? பொதுவாக நமக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அம்பேத்காரையும், காமராசரையும் கூட சாதி தலைவர்களாக பார்க்கிறார்கள். அம்பேத்கார் உலகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர். வ.ஊ.சி யையே கூட சாதி தலைவராக்கி விட்டார்கள். இல்லத்து பிள்ளைமார்கள் சார்பில் மாலை போட்டோம் என்கிறார்கள். அவர் கப்பல் ஓட்டிய தமிழன் அல்லவா? அவரைப்போய் சாதி என்ற சிமிழிற்குள்ளா அடைப்பது? திருவள்ளுவரைதான் இன்னும் ஒரு சாதியினரும் உரிமை கொண்டாடவில்லை. ஏனென்றால் அவர் என்ன சாதி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. தலைவர்களின் பெயரை விமான நிலையங்களுக்கு வைக்கிற வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது.

பெரியார் பல ஆண்டுகளாக போராடி ஒழித்த சாதி, இன்று அரசியல் கட்சிகளின் பெயரால் வளர்ந்து நிற்கிறதே?

அப்படி நான் கருதவில்லை. யார் தோளிலாவது ஏறி சவாரி செய்து ஜெயித்துவிட்டால் அது பெரிய விஷயமா? வெறும் சாதி பெயரை சொல்லி இன்றைக்கு யாராவது தனித்து நின்று வெற்றி பெற்றிருக்கிறார்களா? மாற்றி மாற்றி யார் தோளிலாவது சவாரிதான் செய்து கொண்டிருக்கிறார்கள். இது சாதிக்கட்சி இல்லை என்று சொல்லிதானே சாதிக்கட்சி நடத்த முடிகிறது? சாதிக்காகவே மட்டும் நடத்துகிற கட்சி என்று சொல்லி, கட்சி நடத்துகிற துணிச்சல் யாருக்காவது இருக்கிறதா?

இப்போதெல்லாம் செய்தித்தாளை திறந்தால் போலி சாமியார்களின் செய்திதான் அதிகம் வருகிறது. திராவிடர் கழகத்து இளைஞர்கள் இவர்களை களையெடுப்பதில்லையா? அல்லது தி.க வில் இளைஞர்கள் குறைந்துவிட்டார்களா?

எங்கள் இளைஞர்கள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த 2008- ம் ஆண்டையே சாமியார்கள் மோசடி ஒழிப்பு ஆண்டாகதான் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். எல்லா இடத்திலேயும் இந்த மோசடி சாமியார்களை களை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் நாங்கள் சொன்ன பிறகுதான் சென்னையை சுற்றியே 23 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நாங்கள் பறக்கும் படை என்ற அமைப்பை வைத்திருக்கிறோம். போலி சாமியார்களை பற்றி நாங்கள் கேள்விப்படுகிற நேரத்தில் அங்கு போய் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி வருகிறோம். மீடியா இது போன்ற செய்திகளை ஊதாமல் இருந்தாலே போதும். இதே மீடியாக்கள் அவர்களை விளம்பர படுத்துகிற அளவுக்கு, எதிர்த்து செயல்படுகிற எங்களை விளம்பரப்படுத்துவதில்லை. நாங்கள் அடக்கமாக எங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பெரியாரை பற்றி யாராவது படம் எடுக்க முன்வந்தால், நான் இலவசமாக நடிக்கிறேன் என்று சத்யராஜ் அறிவித்து பல வருடங்கள் கழித்துதான் அதற்கு செயல் வடிவம் கொடுக்க முடிந்தது. ஏன், இந்த பணியை கழகத்தின் சார்பில் முன்பே செய்திருக்க முடியாதா?

கழகத்தின் உதவியோடுதான் அந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. முன்பே செய்திருக்கலாம் என்றால், சினிமா என்பது ஒரு விசித்திரமான துறை. அதற்குள் போய் அவ்வளவு சுலபமாக வெளியே வந்துவிட முடியாது. தகுதியான ஒருவர் நான்கு ஆண்டுகளாக அந்த பணியை எங்களிடம் காட்டி, நாங்கள் அதில் திருத்தம் தெரிவித்து மெருகேற்றிக் கொண்டிருந்தோம். அது ஒரு வியாபார நிமித்தமான படம் என்பதாலும் வெற்றியடையக் கூடிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அது தொழில் ரீதியான படம் என்பதால் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் அது திரையிடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் அது ஓடாத நகரங்களே இல்லை. சர்வதேச பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய அளவில் பரிசுகள் அந்த படத்திற்கு கிடைக்கவிருக்கிறது. இதையெல்லாம் சினிமாவுலகில் அனுபவம் உள்ளவர்களால்தான் செய்ய முடியும். இதை கழகம் செய்ய முடியாது. நீங்கள் கேட்பது எப்படியிருக்கிறது என்றால், கலைஞரை ஆதரிக்கிறீர்களே, கலைஞர் மாதிரி தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டியதுதானே என்பது மாதிரி இருக்கிறது.

சத்யராஜ் அந்த படத்தில் பெரியாராகவே வாழ்ந்திருந்தார். அவர் இடத்தில் வேறொரு நடிகரை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதே நேரத்தில் பெரியாரின் மோதிரத்தை அவருக்கு கொடுத்திருக்க வேண்டுமா என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்களே?

அவர் ஒரு கோடி சம்பளம் வாங்குகிற நடிகர். இந்த படத்தில் ஒரு பைசா கூட வாங்காமல் நடித்தார். கொள்கை ரீதியாகவே அவர் நாத்திகர். அவருக்கு சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அந்த மோதிரம் பெரியார் டிரஸ்டுக்கு சொந்தமானது. நாங்கள் டிரஸ்ட்டை கூட்டி விவாதித்து லிபர்டி கிரியேஷன்சிடமிருந்து ஐந்து லட்ச ரூபாய் டிரஸ்டுக்கு செலுத்திய பின்தான் அதை சத்யராஜுக்கு வழங்கினோம். இன்று பெரியாரை உலகம் முழுக்க எடுத்து சென்ற பெருமை சத்யராஜுக்கு உண்டு. பெரியாரின் கருத்துகளை மேடை தோறும் முழங்குகிறவர். இயக்கத்தில் எல்லாரின் ஒப்புதலோடும்தான் அந்த மோதிரத்தை அவருக்கு வழங்கினோம்.

கமல், சத்யராஜ், வேலுபிரபாகரன் போன்ற சினிமா கலைஞர்கள் முன்பெல்லாம் பெரியார் திடலில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தால், இளைஞர்கள் மத்தியில் கழகத்தின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட உதவியாக இருக்குமே?

அரசியலில் எப்படி கூட்டணி இருக்கிறதோ, அதைப்போலவே கலைத்துறையில் இருக்கக்கூடிய பகுத்தறிவு சிந்தனையாளர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள எப்போதுமே நாங்கள் தயங்கியது கிடையாது. பெரியார் படம் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்கியிருக்கிறது. ரஜினியே பெரியார் படத்தை பார்த்துவிட்டு பெரியாரை பற்றி முன்பே தெரிந்திருந்தால், என்னுடைய காலத்திலேயே நான் பெரியாரோடு கலைஞர், மாதிரி வீரமணி மாதிரி இருந்திருப்பேனே என்று பேசியிருக்கிறார். ரஜினியிடம் அவ்வளவு பெரிய மனமாற்றத்தை பெரியார் படம் ஏற்படுத்தியிருக்கிறது. கலையுலகத்தில் அப்படிப்பட்ட ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. கலையுலகத்தில் ஏராளமானவர்களுக்கு இன உணர்வு, பகுத்தறிவு சிந்தனை எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. திராவிடர் கழகம் ஆண்டுதோறும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம், பாரதிதாசன் தமிழர் பண்பாட்டு விழா, போன்ற விழாக்களை ஏற்படுத்தி கலையுலகை சேர்ந்த பகுத்தறிவாளர்களை அழைத்து விருது கொடுக்கிறோம். வைரமுத்து, அறிவுமதி, கபிலன், யுகபாரதி, பழனிபாரதி, தாமரை போன்ற இளம் சிந்தனையாளர்கள் இங்கே வருகிறார்கள். விவேக், பெரியாருடைய சிந்தனையை திரைப்படத்தில் பிரதிபலித்த போது அவரை அழைத்து பாராட்டு விழா நடத்தினோம். சமீபத்தில் நடிகர் சிவகுமார் பெரியாரின் மிகப்பெரிய ஓவியத்தை வரைந்து கொடுத்தார். அதை பெரியார் திடலில் வைத்திருக்கிறோம்.

பெரியார் திடலில் மத கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது முரண்பாடாக இருக்கிறதே?

பெரியாருக்கு கிறிஸ்தவர்கள் மெமோரியல் ஹாலில் இடம் கொடுக்க மறுத்தார்கள். அதன் பிறகுதான் அய்யா, இங்கு மன்றத்தை துவங்கினார். அப்போதிலிருந்தே இங்கு மதக்கூட்டங்கள் நடந்து வருகிறது. அய்யா சொன்னது என்னவென்றால், என்னை திட்டுகிறவர்கள் என்றால் கூட கருத்து மாறுபாடு பார்க்காமல் இந்த மன்றத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான். கீதையின் மறுபக்கம் நூலை ஒரு அய்யர் கேட்டால் கொடுக்க மாட்டோமா? வியாபாரம் என்று வந்த பிறகு யார் கேட்டாலும் கொடுக்க வேண்டியதுதான். விடுதலை பேப்பரில் நாங்கள் மத பிரச்சாரம் செய்யவில்லையே? பெரியார் திடலில் இருக்கக்கூடிய ஒரு அம்சம் இந்த பொது மன்றம். மதக்கூட்டங்களுக்கு தொடர்ந்து இனிமேலும் கொடுப்போம். இதில் மனித நேயம் இருக்கிறது. எல்லாவற்றையும் விட பெரியாரின் ஆணை இது.

சந்திப்பு - ஆர்.எஸ்.அந்தணன்

படங்கள் - பிரகதீஷ்

-தமிழ் சினிமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.