Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றியண்ணை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கொஞ்சம் படபடப்பாக படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். ஓடி வந்ததினால் மூச்சு வாங்கியது. ´´ஏன்ரா ஓடுறாய்´´ என வழியில் கேட்ட சுதனண்ணைக்கு, கடைசி விரலைத் தூக்கிக் காட்டி விட்டு வந்ததை நினைக்க சிரிப்பா இருந்தது. பள்ளிக் குடத்தில் இருக்கும் போதே சுற்றிவர நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டது. அப்போதிருந்தே துருதுருவென இருந்தேன். அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்ப்பதை மனோன்மணி ரீச்சர் (டீச்சர்) வேறு கண்டு விட்டா. ´´என்ன பிரச்சனை உனக்கு.. அடிவாங்கப் போறியோ´´ ´´இல்லை ரீச்சர் வெளியில ஆமிக் காரர்´´

´´அதுக்கென்ன.. உன்னையோ தேடி வந்தவங்கள்? பேசாமல் படத்தைக் கீறு பாப்பம்´´ நான் கடற்கரை என்று தலைப்பிட்டு விட்டு கீழே கொஞ்சம் நீலம், மேலே கொஞ்சம், நீலம் நடுவில் மண்ணிறமென மெழுகு கலரால்த் தேய்த்தேன். மனிதர்களை வரையும் போது அவர்களுக்கு தொப்பியும் போட்டு கையில் துப்பாக்கியும் வரைந்தால் என்ன என மூளை யோசித்தது. வெளியே நாய்கள் ஓய்வதும் குரைப்பதுமாக இருந்தது. மணியடித்ததும் முதலாக வரிசையில் போய் நின்றேன். வழியில் வேலிகளை வெட்டிக் கொண்டு ஆமிக்காரர் கள் நின்றிருந்தார்கள். சிலர் சிரித்தார்கள்.

விறாந்தையில் அம்மம்மா பனையோலைப் பெட்டி செய்து கொண்டிருந்தா. ´´அம்மம்மா வெற்றியண்ணையாக்கள் உள்ளை நிக்கினமோ´´

´´ம்.. ஒரு மணித்தியாலத்துக்கு முதலே போயிட்டாங்கள். இஞ்சை ஒரு பத்துமணி போலவே ரவுண்டப். காலமமை சந்தைக்கு போன சாந்தா இடையில வந்து சொன்னது. பொடியள் அப்பவே போயிட்டாங்கள். ´´ சாந்தாக்கா முன் வீட்டில இருக்கிறவ. அவவுக்கு இஞ்கை பொடியள் வந்து போறது தெரியும். அவவின்ர அம்மாக்குத்தான் பொடியள் வந்து போறது விருப்பமில்லை. ´´என்னத்துக்கு தேவையில்லாத பிரச்சனையள். உதாலை அயலில இருக்கிற எங்களுக்கும் வில்லங்கம் வரும். ´´ என்று ஒரு தடவை அம்மாவிடம் சொல்லியிருக்கிறா. ´

நான் அறைக்குள்ள போனேன். அங்கை தான் வெற்றியண்ணையாக்கள் இருக்கிறவை. நினைச்ச உடனை ஓடிப்போறதுக்கு வசதியான அறையும் கூட. கதவைத் திறந்து சிறியண்ணையின் கிணற்றடி வளவைத் தாண்டினால் போதும் பிறகு அங்காலை குடிமனையற்ற வளவுகளும், வயற்காணிகளும் தான். அதையும் தாண்டினால் அடுத்த கிராமம்.

அந்த அறையை ஒருதடவை நோட்டம் விட்டேன். ஒருமுறை இப்பிடித்தான் இரவு வந்து தங்கியிருந்தார்கள். காலையில் கச்சான் விக்கப் போன அம்மம்மா வியர்வை வழிய படபடப்புடன் ஓடிவந்து கடகத்தை இறக்கினா. ´´ஒழுங்கை.. ஒழுங்கை வாசலில ஆமி.. அறுவாங்கள் காலைமையே வந்திட்டாங்கள் போல.. ஓடிப்போங்கோடா..´´ அவாவுக்கு குரல் ஒரு சீராக வரவில்லை. விக்கி விக்கித் தான் கதைத்தா.

வெற்றியண்ணையோடு இன்னும் இரண்டு பேர் தங்கியிருந்தார்கள். சடசடவெண்டு துவக்குகளை உரைப்பையில் திணித்து விட்டு கட்டியிருந்த சாரத்தை கழட்டிவிட்டு ஓட்டமெடுத்தார்கள். தெருவில் நாய்கள் குரைப்பது அதிகமானது. ´´உள்ளை வருவாங்கள் போலத்தான் கிடக்கு´´ என்றா அம்மா. ´´இந்த சாரங்களை என்ன செய்யிறது? இதை யார் கட்டுறது எண்டு கேட்டா என்ன சொல்லுறது.. எட்டு வயது பொடியன் கட்டுறது எண்டு சொன்னால் நம்புவாங்களோ..´´ அது கொஞ்சம் மிகையான பயம்போலத்தான் இருந்தது. ஆனாலும் குப்பைகளையே கிளறிப் பார்ப்பவர்கள் அவர்கள்.

அம்மம்மா சாரங்களை சுருட்டி எடுத்துக் கொண்டா. ´´இஞ்சை விடு பிள்ளை.. நான் கட்டியிருக்கிறன். கேட்டா என்ரை சாரம் எண்டு சொல்லுறன்´´

அன்று இராணுவம் வீட்டுக்குள் வரவில்லை. வீதிகளில் ரவுண்டப் செய்து யாரையோ கைது செய்து கொண்டு போனார்களாம். அவர் கிட்டடியிலதான் கல்யாணம் கட்டியவர் என வீட்டில் பேசிக்கொண்டார்கள்.

´´வெற்றியண்ணை வீணா ஓடினது.. பேசாமல் வீட்டிலயே இருந்திருக்கலாம்´´ என நான் நினைத்துக் கொண்டேன். வாரத்தில் ஒருதடவையேனும் அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். சில நாட்களில் இரவுகளிலும் தங்குவதுண்டு. சுவர்களில் சாத்தப்பட்டிருக்கும் துப்பாக்கிகள் பெரும்பாலும் உரப் பையின் வெளியே தலை நீட்டிக் கொண்டிருக்கும். கிரேனைட்டுக்கள் பெல்ட்டுக்களில் பொருத்தப் பட்டிருக்கும். வெற்றியண்ணையிடம் ஒரு அல்பம் இருந்தது. அதில் அவரது சிறு வயதுப் படங்கள், அவரது அம்மா அப்பா சகோதரங்களுடனான படங்கள் முதல் பயிற்சியெடுக்கின்ற படங்கள் வரை இருக்கும். அப்பா அம்மாவுடனான படங்களை அவர் அதிக நேரம் பார்ப்பதை நான் கண்டுகொண்டிருக்கிறேன்.

மற்ற ரண்டு பேரும் நிறைய அமைதியானவர்கள். அதிகம் பேச மாட்டார்கள். நான் ஆர்வத்தில் கேட்கும் கேள்விகளுக்குக் கூட சிலசமயங்களில் அவர்களிடமிருந்து பதில் வராது. ஆனால் வெற்றியண்ணை அப்படியில்லை. ஏதாவது பேசிக்கொண்டு இருப்பதுதான் அவருக்கு பழக்கம். என்னோடும் நல்ல வாரப்பாடு. ´´வோக்கி டோக்கியென்பதும் ரெலிபோனும் ஒண்டு தானோ.. இதில யாரோடும் கதைக்கலாமோ.. எவ்வளவு தூரத்திலிருந்தாலும் கதைக்கலாமோ.. ´´ இப்படி நானும் ஏதாவது கேட்டுக்கொண்டிருப்பேன்.

ஒருமுறை ´´ஆமிக் காரர் வைச்சிருக்கிற துவக்கில எல்லாப் பக்கமும் ஓட்டை இருக்கே.. அதெல்லாத்தாலையும் குண்டு வருமோ´´ என்று கேட்டதுக்கு ´´ம் அதாலை தான் பக்கத்தில நிக்கிற சனமெல்லாம் சாகுது´´ என்றவர் கொஞ்சக் காலத்துக்குப் பிறகு ´´எங்களிட்டையும் எல்லாப் பக்கத்தாலையும் குண்டு வாற துவக்கு இருக்கு பாக்கப் போறியோ எண்டு கேட்டுக் காட்டினார்.

´´யார் தந்தது உது´´

´´ஒரு ஆமிக்காரர் தனக்குத் தேவையில்லையெண்டு எடுக்கச் சொன்னவர்´´

இப்போதெல்லாம் பாடசாலை விட்டு வரும்போதே வாசலில் வைத்து வெற்றியண்ணை வந்தவரோ எனக் கேட்டு வருவது என் வழக்கமாகி விட்டிருந்தது. ஆரம்பத்தில் ஒரு வித இடைவெளியுடன் பழகியவர்கள் இப்போது குடும்பத்தில் மிக நெருக்கமாகிப் போனார்கள்.

எனக்கு ஞாபகமிருக்கிறது. கொஞ்சக் காலத்திற்கு முதல், இரண்டு மூன்று பேர் கொஞ்ச மூட்டைகளுடன் வந்து தயங்கித் தயங்கி கேட்டார்கள். ´´அக்கா உங்கடை கிணத்தில குளிச்சிட்டு போகலாமோ.´´ அம்மா மோட்டரைப் போட்டு தொட்டியில் நீர் நிரப்பி விட்டா. எல்லோரும் வெளியே நின்று குளிக்க, ஒருவர் மட்டும் உள்ளே ஏறிக் குதித்து கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார். தண்ணியில் சட சட வென கைகளால் அடிப்பதும், வாயில் தண்ணியெடுத்து அதை மேலே பாய்ச்சுவதுமென ஏதோ என் வயதொத்தவர்கள் போல இருந்தது அவரது செய்கைகள்.

குளித்து முடித்தபிறகும் அவர்கள் தயங்கித் தயங்கி நின்றார்கள். ´´தம்பி அம்மாவைக் கூப்பிடும்´´

´´அக்கா சரியா பசிக்குது. எங்களிட்டை பாண் வாங்க காசிருக்கு. கறி ஏதாவது தருவியளே..´´ அம்மாவின் கண்களில் நீர் கசிந்ததை நான் பார்த்தேன். ´´கறி வைக்கிறன்..இருந்து சாப்பிட்டுட்டு போங்கோ.. ம்.. ஆராவது கோழி உரிப்பியளே..´´

´´நான் உரிப்பன் அக்கா´´ என்று சொன்னவர் தானாகவே தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். ´´என்ரை பேர் வெற்றி.. ´´

அதற்குப் பிறகு அவர்கள் வருவதும், போவதும் சில சமயங்களில் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவதும் வழமையாகி விட்டது.

பாடசாலை விட்டோ ரியுசன் முடிந்தோ வரும் வழிகளில் எந்த வீட்டிலிருந்தாவது சமையல் தாளிக்கும் வாசம் வந்தாலும் அது சப்பாத்தியெண்ணை வாசமா என மணந்து பார்க்கின்ற பழக்கமொன்று எனக்கு கொஞ்சக் காலமாகவே வந்துவிட்டிருந்தது. வீட்டில் அன்று வெற்றியண்ணையாக்கள் இருந்தார்கள். வெற்றியண்ணை நிலத்தில் படுத்திருந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் புத்தகங்களில் மூழ்கியிருந்தனர்.

´´எனக்கும் ஒரு வீடியோ கேம் அப்பா அனுப்பறவர் எண்டு எழுதினவர்´´ நான் வெற்றியைப் பாத்துச் சொன்னேன். ´´அவர் சும்மா எழுதியிருப்பார். இருந்து பார் அனுப்ப மாட்டார்.´´ நான் அதை பெரிசா எடுத்துக் கொள்ளவில்லை.

´´உதுவும் யாரும் ஆமிக்காரர் தேவையில்லையெண்டு தந்ததோ´´ எனக் கேட்டேன். எனக்கு வீடியோ கேம் ஒன்று வைத்திருக்கவேண்டும் என்று நிறைய நாள் ஆசையிருந்தது. பக்கத்து வீட்டு செல்வன் அண்ணைக்கு அவரின்ர அப்பா ஒன்று அனுப்பியிருந்தவர். ஒரிரண்டு தடவைகள் அவரிடம் வாங்கி விளையாடியிருப்பேன். ஆனால் பெரும்பாலான நேரம் நான் அவர்கள் வீட்டுக்கு போனதும் அவர் அதை எடுத்து விளையாடத் தொடங்கிவிடுவார். பிறகு எப்படிக் கேட்பது என்ற தயக்கம் எனக்குள் ஏற்பட்டு விடும். எனக்கும் ஒரு வீடியோ கேம் வேணுமென்று அப்பாக்கு எழுதிவிட்டு நிறைய நாளாயிற்று. அதை யாருக்கும் குறிப்பா செல்வன் அண்ணைக்கு கொடுப்பதில்லையென்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தேன்.

செல்வமண்ணையிட்டை வீடியோ கேம் இருக்கு. இப்ப வெற்றியண்ணையிட்டையும் இருக்கு. எனக்குத் தான் இன்னமும் இல்லை என்று மனசுக்குள் ஓடிய ஏமாற்ற உணர்வு என் முகங்களிலும் தெரிந்திருக்க வேண்டும்.

´´இஞ்சை வாடா .. உன்ரை கொப்பர் தான் அனுப்பினவர் இது. ஆரோ கொண்டந்து தந்திட்டு போகினம். நான் பொழுது போகேல்லையெண்டு வாங்கி விளையாடுறன். இந்தா..´´

அன்று முழுவதும் நான் அதோடையே இருந்தன். அது ஒரு சின்னக் கறுப்பு வெள்ளைக் கேம். மேலே இருந்து பாயும் தவளைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வளவும் தான்.

மாலை வெற்றியண்ணை அதை கேட்டபோது எதுவும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தது ஏன் என்று இரவு முழுதும் யோசித்தேன். அவசரப் பட்டு குடுத்திட்டேனோ என்று இருந்தது. அம்மாக்கும், அம்மம்மாவிற்கும் கூட சரியான ஆச்சரியம். அதற்குப் பிறகு நிறைய நாட்கள் வெற்றியண்ணையைக் காணவில்லை. அவர் மீது எரிச்சல் எரிச்சலாக வந்தது.

பறாளாய் முருகன் கோவில் திருவிழா ஒன்றில் வெற்றியண்ணையைக் கண்டேன். வேட்டி கட்டி, கைகளுக்கும் நெஞ்சுக்கும் சந்தனம் பூசி ஆளை அடையாளமே தெரியவில்லை. ´´என்ரை வீடியோ கேம் எங்கை.. ´´ என்று கேட்டது அம்மாவுக்குப் பிடிக்கவில்லைப் போலிருந்தது. ´´இருக்கு இருக்கு.. கொஞ்சம் அவசர வேலையள். கொண்டு வந்து தாறன்´´ வெற்றியண்ணை கூட்டத்தோடு கலந்து போனார்.

பாடசாலை நண்பர்களிடம் எனக்கொரு வீடியோ கேம் வந்ததாக சொல்லிவிட்டு, நாளைக்கு கொண்டு வருகிறேன் நாளைக்கு கொண்டு வருகிறேன் என நாட்களைக் கடத்தினேன். ´´நீ சும்மா புளுகிறாய். உன்னட்டை அப்பிடியொண்டும் இல்லை´´ என்று நண்பர்கள் கேலி செய்த போது வெற்றியண்ணை மீது கோபம் கோபமாக வந்தது. ஒரு நாள் வீட்டை சண்டை பிடிப்பதென்ற முடிவுடன் தான் வந்தேன். வீட்டில பெரியப்பா இருந்தார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

´´சண்டை நடந்ததாம். எல்லாம் முடிஞ்சுதெண்டு அவங்களை சரண்டர் பண்ணச் சொல்லி வெற்றி வெளியில வந்தவனாம். சுட்டுப் போட்டாங்கள். அந்த இடத்திலேயே சரி. அவசரப்பட்டிட்டான் போல´´

நான் மரணம் ஒன்றிற்காக முதன் முதலில் அழத் தொடங்கினேன்.

அதற்கடுத்த நாட்களில் வீடியோ கேம் எங்கு என்ற கேட்ட நண்பர்களுக்குச் சொன்னேன். ´´ஓம்.. நான் சும்மாதான் சொன்னனான். அப்பா எனக்கு அப்பிடியொண்டும் அனுப்பவில்லை. எனக்கு அதில பெரிசா விருப்பமும் இல்லை. ´´

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது இந்திய இராணுவ காலத்தில் எங்கட வீட்டுக்கு ஒருமுறை வந்து போன வெற்றியண்ணாவைப் போல ஒருவர் யாபகத்துக்கு வந்து செல்கிறார். அவர் வந்து சென்ற சில நாட்களுக்குள் இந்தியப்படையினால் கொல்லப்பட்டது பெரும் சோகம். அவரது உடலை இந்தியப்படைகள் கவசவாகனத்தில் கட்டி இழுத்துச் சென்றதைப் பலர் பார்த்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்தான்.

நீங்கள் சொன்ன வெற்றியண்ணை வேறு ஒருவர் என நினைக்கிறேன். எனென்றால் நான் சொன்னவர் , வீதியில் துவிச்சக்கரவண்டியில் செல்லும் போது எதிர்ப்பாராமல் வந்த இராணுவத்தினால் கொல்லப்பட்டவர். ஆனால் நீங்கள் சொல்பவர் எதிரியைச் சரணடையச் சொல்லும் போது எதிரியினால் கொல்லப்பட்டவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியானால் வேறு.. ஆனால் இவரது உடலையும் வாகனத்தில் கட்டியிழுத்தே சென்றார்கள்..

ம்.. இந்திய ராணுவம் சகல உடல்களையும் அப்படிச்செய்கிற புத்தி கொண்டதாகத்தானே இருந்தது..

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் வேறு.. ஆனால் இவரது உடலையும் வாகனத்தில் கட்டியிழுத்தே சென்றார்கள்..

ம்.. இந்திய ராணுவம் சகல உடல்களையும் அப்படிச்செய்கிற புத்தி கொண்டதாகத்தானே இருந்தது..

இந்திய இராணுவம் கிராமப்புறம்களில் நடந்து செல்லும் போது கைகளில் வீடுகளில் இருந்து திருடப்பட்ட கோழிகள், எலுமிச்சைப்பழங்கள் எனக் கொண்டு செல்வார்கள்.இந்திய இராணுவ வீரர்களிடமிருந்து ஒருவிதமான எண்ணையின் மணம் வீசும். தமிழீழத்தில் இருந்த நாய்கள் தான் இந்திய இராணுவம் வரும் போது குரைத்து பல இளையோரை இந்திய இராணுவத்தின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றியது.

உங்கள் பதிவுக்கு நன்றி. எழுத்து எனக்கு கைவருவதில்லை. உங்களுக்கு நன்றாகவே வருகிறது. தொடருங்கள்.

எனக்கும் உறவினர், நண்பர்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளார்கள். இந்திய ராணுவத்தின் அட்டகாசங்களின் போது நானும் அங்கிருந்தேன்.

தமிழீழ நாய்களுக்குத்தான் அவர்களைப்பற்றி முன்பே தெரிந்துள்ளது போலும். இந்திய ராணுவம் ' நட்பாக' இருந்தகாலத்திலேயே நாய்களுக்கு அவங்களைப்பிடிக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.