Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி!

Featured Replies

வைதீகத்தின் அடாவடியிலும் கொடுமையிலும்

சிக்கித்தவிக்கும் சிவத்தலங்களில், சைவத்தின்

முகன்மைத் தலமான தில்லையம்பதியும் இன்னலில்

இருப்பது, தமிழ் நெறிகளுக்கும், திருமுறை தந்த

ஞானிகளுக்கும் பெரிய இழுக்கு சேர்ப்பதாகும்.

அந்த இழுக்கினில் இருந்து சிறிதேனும் காப்பது போல

தமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது தமிழர்களுக்கு

மகிழ்வான விதயம். தேவையில்லாத ஆர்ப்பரிப்புகள்

இல்லாமல் அமைதியாக இதனைக் கலைஞர்

செய்திருக்கிறார்.

அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம் சிறிது

வழவழ கொழகொழ வென்று இருந்த போதிலும்,

அது முழுமையான மனநிறைவு

அளிக்கவில்லையாயினும், இதனை வாயார

வரவேற்கிறேன். தி.மு.க செய்த தமிழ்ப்பணிகளில்

மிக உயர்ந்தது இதுதான் என்று சொல்வேன்.

"வைதீக அடாவடி" என்று மேலே சொல்வது

வைதீகர்களுக்கு பொறுக்க முடியாமல் இருக்கலாம்.

கோயில்களில் என்ன நடக்கிறது என்று தெரியாத,

கோயிலுக்குப் போனாலும் இதனை அறியாத

பத்தர்களுக்கு, சற்று குழப்பமாகக் கூட இருக்கலாம்.

கோயிலில் இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்

போது பலருக்கும் சில விதயங்களை கவனிக்க

முடியாதுதான்.

தில்லையில் தமிழ் ஓதலாம் என்று அரசு சட்டம்

வைத்தவுடன், வைதீகக் கொடுக்குகள் தங்கள்

ஆற்றாமையில் அள்ளித்தெளிக்கும் சப்பைக்கட்டுகளைக்

காணும்பொழுது, இவர்களுக்கு ஏன் இந்த

தமிழ்-எதிர் போக்குகளைக் கொண்டிருக்கிறார்கள்

என்பது புரிவதில்லை என்று சொன்னபோதிலும் நமக்குப்

புரியத்தான் செய்கிறது.

தமிழுக்கும் தமிழ் நெறிகளுக்கும் எதிரான வைதீக

அடாவடி என்பது பல நூறாண்டுகளை விழுங்கியது.

இதற்கு வரலாற்றிலும் குமுகத்திலும் எண்ணற்ற

சான்றுகள் உள்ளன.

தில்லையில் ஆறுமுகச் சாமி திருமுறை ஓதுவதற்கு

தீட்சிதர்கள் காட்டும் எதிர்ப்பு எல்லோரும் அறிந்தது.

தமிழ் மந்திரங்களான திருமுறைகள் தில்லையில்

எப்படி நடத்தப்படுகின்றன?

திருமுறைகளும் இறைவனும் இழிவு படுத்தப் படும்

அந்தக் கொடுமையை என் கண்களால் கண்டு

சொல்லவொன்னா துன்பம் அடைந்தேன்.

சிற்றம்பலத்திற்கு ஒருநாள் உச்சிகால பூசையின் போது

செல்லும் வாய்ப்பு அமைந்தது. தீட்சிதர்கள் வடமொழி

மந்திரங்கள் ஓதி பூசை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தமிழையா கேட்க முடியும்?

வடமொழியைக் கேட்டுதான் பழகி விட்டோமே!

நீண்ட நேரம் சிற்றம்பலத்தில் கருவறையில் ஒருவர் வடமொழி

மந்திரத்தை ஓதுகிறார்.

பூசையும் தரிசனமும் மங்கல மணிஒலியும் அருமையாக

இருக்கின்றன. பூசை முடிகிறது. எல்லா தீட்சிதர்களும்

சன்னதியை விட்டு தள்ளிப் போய் புறவு பார்த்துக்

கொண்டு எனக்கென்ன என்பது போல நிற்கிறார்கள்.

பொன்னம்பலத்திற்கும் இறைவன் இருக்கும்

சிற்றம்பலத்திற்கும் இடையே கோயிலின் உள்ச் சுற்று

உண்டு. இந்த வெளியில் கழுத்தளவு

உயரத்தில் சிற்றம்பல மேடை இருக்கும். இறைவன்

இருக்கும் கருவறையில் இருந்து நன்கு தள்ளியிருக்கும்

இந்த உள்ச் சுற்றுப் பாதையில் கூட்டத்தோடு கூட்டமாக

நானும். மேலே பூசை முடிந்து தீட்சிதர்கள் ஒதுங்கிக்

கொண்டவுடன் திடீரென்று கூட்டத்தில் இருந்து

தேவாரக் குரல் ஒன்று ஒலிக்கிறது. வியப்போடு

பார்க்கிறேன்.

அந்த மேடையை ஒட்டி, கூட்டத்தில் எனக்கு சற்று

முன்னால் சிரங்குவித்து எட்டிப் பார்த்துக் கொண்டு

ஒரு கருப்பு ஓதுவார் (கோயிலால் நியமிக்கப்பட்டிருக்கும்

ஓதுவார்) தேவாரப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்.

மொத்தம் நாலே வரிகள். அது முடிந்தவுடன் இன்னொருவர்

அதேபோல நுனிக்காலில் நின்று கொண்டு

எட்டி எட்டிப் பார்த்து இன்னொரு பாடலைப் பாடுகிறார்.

அது முடிய பக்தர்களில் சிலர் பாட முனைகிறார்கள்;

உச்சிவேளை பூசை முடிந்து கருவறை மூடப்படுகிறது.

ஏறத்தாழ 15-20 நிமிடங்கள் வடமொழி மந்திரங்கள்

கருவறையில் ஓதப்பட்டு பூசைகள் முடிந்து, "காதில்

விழுந்தால் தீட்டு ஒட்டிக்கும்" என்பது போல

தீட்சிதர்கள் ஒதுங்கிக் கொண்டவுடன் அந்த மேடையின்

வெளிவிளிம்பில் ஒண்டிககொண்டும் எட்டி எட்டிப்

பார்த்துக் கொண்டும் ஒரு நிமிடம் இரண்டு பேரால்

திருமுறைகள் பாடப்பட்டன.

திருமுறை சிற்றம்பலத்து மேடையில் ஏறி நின்று

பாடப்படாத அந்த அவலத்தைக் கண்டு நாணியும்

கூனியும் போனேன். அதுவும் கோயிலால் நியமிக்கப்

பட்டிருக்கும் ஓதுவாரும் மேடையில் பாடஅனுமதிக்கப்

படுவதில்லை என்ற நிலைகண்டு வெட்கித்

திரும்பினேன்.

தமிழ்நாட்டில் தமிழ்க்கடவுளுக்கு

வடமொழி மந்திரங்களை சிற்றம்பலத்தில் பாடலாம்;

ஆனால் தமிழ் பாடக்கூடாது!? வெளியார் பாடினால்

மற்றவர்களுக்கு தொல்லையாயிருக்கும் என்று

போகிற போக்கில் கருத்து சொல்பவர்களும்,

"ஏன் கோயிலால் நியமிக்கப் பட்டிருக்கும் ஓதுவார்கள்

மேடையில் இருந்து பாடக் கூடாது? என்று சிந்தித்துப்

பார்க்க வேண்டும்.

இப்படித் தமிழைத் தள்ளி வைப்பதையே கண்டு

பழகிப் போய் வைதீகத்தில் கரைந்து போனவர்களும்,

"தேவாரம் எல்லாம் மண்டபத்தில்

பாடவேண்டியவை" என்ற பரப்புரையைச் செய்யவும்

முற்பட்டிருக்கிறார்கள்

கோயில் ஓதுவார்களைக் கூனி, குறுகி, ஒளிந்து நின்று

கொண்டு ஏதோ போனால் போகிறது நாலுவரி

திருமுறை பாடிக்கோ என்று இன்றைக்கும்

செய்து வரும் வெளியூர் தீட்சிதப் பூசாரிகளின் ஆணவம்

தில்லையில் நம்மை வாட்டுகிறது என்றால்,

திருவண்ணாமலையில் நம்ம ஊர் ஐயர் பூசாரிகள்

செய்யும் அடாவடி அதுக்கும் மேலே.

பிறிதொரு நாளில் அண்னாமலையில் உண்னாமுலை

அம்மன் சன்னதி. அதே உச்சிக்கால பூசை.

கருவறையில் பூசை நடக்கிறது. வடமொழி மந்திரங்கள்

ஓதப்படுகிறது. மங்கல ஓசைகள். கருவறைக்கு முன்

சிறுமண்டபம். வெளியேயும் பெருங்கூட்டம்.

மெய்மறந்த பத்தர்கள். அந்த முன்மண்டபத்தில் நானும்.

பூசை முடிகிறது. திடீரென்று "தனம்தரும் கல்விதரும்...."

என்ற அபிராமி அந்தாதிப் பாட்டொன்று கணீரென்று

ஒலிக்கிறது. ஆகா, இதுவரை அம்மன் கோயில்களில்

பூசை வேளையில் கேட்டறியாத் தமிழ் ஒலிக்கிறதே என்று

மனத்தின் கிளர்ச்சி எனக்கு.

பாடுபவரை கருவறையில் தேடுகிறேன். கருவறையில்

யாருமே தெரியவில்லை. கண்கள் நொடிக்குள்

இடப்புறம் பார்க்க, அங்கே ஒரு கருப்பர் (தோளில்

புரிநூல் இல்லை), கருவறைக்கு வலப்புறம், சிறிய

கருவறை மண்டபத்திற்கும், அதைவிட சற்றுப் பெரிய

முன்மண்டபத்திற்கும் இடைப்பட்ட சுவருக்கு முன்னால்

நின்று கொண்டு (ஒளிந்து கொண்டு) சிரங்குவித்து

அந்தப் பாட்டைப் பாடுகிறார். அபிராமி அந்தாதியின்

100 பாடல்களில் அந்தப் பாடல் ஒன்று. நான்கு

வரிகள். என் கண்கள் பரபரக்க, நெஞ்சம் வாட அந்தக்

காட்சியைப் பார்க்கிறேன். பாடி விட்டு அவர் விடுவிடு

வென்று வெளியே செல்கிறார். ஒரு ஐயர்

முன்மண்டபத்தில் இருந்தவர்களுக்குக் குங்குமம்

கொடுக்கிறார். இன்னொருவர் வெளியே குங்குமத்

தட்டை எடுத்துக் கொண்டு செல்கிறார்.

தில்லையில் தமிழ்த் திருமுறைகள் பள்ளத்தில்

நிற்கவைக்கப்படுகின்றன. உண்னாமுலை அம்மன்

சன்னதியில் அபிராமி அந்தாதி சுவரைப் பார்த்து

ஒளிந்து கொண்டு பாடப்படுகிறது.

இந்த இரண்டு உச்சிக்கால பூசைகளையும் பார்த்தது

எனக்கு கொடுப்பினை போலும்!

ஆறு/ஏழு மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் சம்பந்தர்,

அப்பர் மற்றும் சுந்தரரால் பாடப் பட்ட தேவாரப்

பாடல்கள், மூவேந்தராலும் விரும்பப் பட்ட தேவாரப்

பாடல்கள் சுந்தரருக்குப் பிந்தைய காலத்தில்

(ஏறத்தாழ 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்

சோழர்கள் தலையெடுக்க ஆரம்பித்த காலத்தில்)

அப்படியே அமுக்கப் பட்டு தில்லையில் ஒரு

மண்டபத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக

பூட்டப்பட்டு கரையானுக்கு இரையாக விட்டார்கள்

தில்லை தீட்சிதர்கள். (பூட்டி அழியவிட்டவர்களுக்குப்

பரிந்து "இராசராசன் கேட்டவுடன் எவ்வளவு பெருந்தன்மையாக

தீட்சிதர்கள் கொடுத்தார்கள் பாருங்கோ" என்று எழுதுபவர்கள்

என்ன பிறவி என்று தெரியவில்லை :( )

மூவேந்தரும் திருமுறைகளைப் போற்றி சைவநெறிகளை

வளர்த்தனர் என்பதற்கு எத்தனையோ சான்றுகள்

உண்டு. 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்

திருப்பரங்குன்றத்திற்கு சுந்தரர் மூவேந்தருடன் சென்று

பதிகம் பாடினார் என்பதும் வரலாறு. (கோத்திட்டையும்..

என்று தொடங்கும் பதிகம்).

திருமுறைகளின் பெருமைகள் பரவுவதைத் தடுத்து,

சிவத்தை வைதீகத்துக்குள் அடக்கும் சதிச்செயல்தான்

திருமுறைகளை கரையானுக்கு இரையாகத் தந்தது.

நம்பியாண்டார் நம்பியின் விடா முயற்சியாலும்,

இராசராசனின் ஆதரவாலும் தேவாரப் பாடல்களில்

கொஞ்சம் நமக்குக் கிடைத்தன. இது 11 ஆம்

நூற்றாண்டின் ஆரம்பத்தில் நடந்தது. இராசராசன்

ஆட்சி 1014 வரை இருந்தது. அவன் அதிக இறை

நாட்டம் கொண்டிருந்த காலம் 1014க்கு முந்தைய

ஒரு 10 ஆண்டுகள் எனலாம். (1004-1014).

அப்படி அவனால் தமிழருக்குத் தில்லை தீட்சிதரிடம்

இருந்து விடுவிக்கப் பட்ட தேவாரப் பாடல்கள்

அதே தில்லையில் இறைவனுக்கு முன்னால்

பாடப்படலாம் என்று அரசால் சொல்லப்படுவதற்கு

ஆகியிருக்கும் ஆண்டுகள் சரியாக 1000.

தில்லையிலேயே சிறைவைக்கப் பட்டு 100/150

ஆண்டுகளில் மீட்கப் பட்டு, பின்னர் அதைப் பாட

1000 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதனை வைதீக

அடாவடி, திமிர் மற்றும் வைதீக மத வெறி என்று

சொல்லாமல் வேறென்ன சொல்வது?

இத்தனை ஆண்டுகளும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள்

தமிழர்கள்தான். ஆனால் தம்மை வைதீகத்திற்கு

முழுமையாக அடகு வைத்துவிட்டு

சோற்றுமூட்டைகளாக வாழ்ந்த தமிழர்கள். அதனால்

அவர்களுக்கும் இந்த அடாவடியில் பங்குண்டு.

இந்தச் சட்டத்தைப் போட்டதற்காகக் அரசை வாயார

வாழ்த்துகிறேன். அதே நேரததில் தமிழிலேதான்

பூசையே செய்யவேண்டும் என்று சட்டம்

போட்டிருந்தால் நெஞ்சார வாழ்த்தியிருப்பேன்.

பூசைகளுக்கு இடையே ஒரு முப்பது நிமிடம், அதுவும்

முன் கூட்டி சொல்லி விட்டுப் பாடலாம் என்று சட்டம்

போட்டிருப்பது அரசின் தவறு என்றும் சுட்டிக்

காட்டுகிறேன்.

அரசு சட்டம் போட்டபின்னும் கருவறையை

மறைத்துக் கொண்டு 20/25 பேர் நின்று

ஆறுமுகச்சாமியைப் பாடவிடாமல் செய்ததிலேயே

தீட்சிதர்களின் பண்பு அனைவருக்கும் புரிந்திருக்கும்.

தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள் தமிழரை

சாமி கும்பிட அனுப்பியதே கருப்புசட்டைக் கட்சிதான்.

ஆன்மீகம் என்று சொல்லும் வைதீகப் பொய்யர்கள்

நாண வேண்டிய விதயம் இது.

ஆயினும், ஆறுமுகச்சாமி என்ன கருப்பு சட்டை போடும்

நாத்திகரா? மாணிக்க வாசகர் சொன்னது

போல இறைவனைப் பாடப் போகிறார்.

அதை ஏன் ஆன்மீகக் கூட்டம் என்று சொல்லிக்

கொள்பவர்கள் எதிர்க்க வேண்டும்?

இராமகோபாலன்களும் இல.கணேசன்களும்

நேர்மையான ஆன்மிக ஆதரவாளர்கள் என்றால்

அவர்கள் ஏன் ஆறுமுகச்சாமியை ஆதரிக்க வில்லை?

இல்லாத இராமர் பாலத்தைக் காப்பதில் இருக்கும்

அக்கறை, இருக்கும் தமிழ்நாட்டு ஆன்மீகத்

திருமுறைகளை, மரபுகளைக் காப்பதிலே இல்லையே

இவர்களுக்கு! அப்படியென்றால் இவர்களெல்லாம் யார்?

யாரை, எதைக் காக்க இருக்கிறார்கள்?

கொஞ்சமாவது திருந்துங்கள் என்று சொல்வதைத் தவிர

வைதீக நஞ்சுகளுக்கு நாம் வேறேதும் சொல்ல இல்லை.

அன்றைக்கு நம்பியாண்டார் நம்பியின் விடாமுயற்சி.

இன்றைக்கு ஆறுமுகச்சாமியின் விடாமுயற்சி.

ஆயினும் இன்னும் அடைய வேண்டியதை அடையவே

இல்லை. இவர்கள் இரண்டு பேரையும் ஒவ்வொரு

நேர்மையான சைவனும் தமிழனும் என்றைக்கும் தலை

வணங்குவான்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

http://nayanam.blogspot.com/2008/03/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனையுது என்று ஓநாய்கள் கும்பலாக அழுகின்றன.

  • தொடங்கியவர்

தமிழர்களின் தன்மானத்திற்கு அறைகூவல் இனியும் தயக்கம் ஏன்?

தமிழகத்தின் மய்யத்தில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலில் மாபெரும் போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக தேவாரம் பாடப்பட்டது.

உண்மை.. சிற்றம்பல மேடையில் தேவாரம் முழங்கியது. ஆனால் இது உண்மையிலேயே தமிழ் வழிபாட்டு ரிமைக்குக் கிடைத்த வெற்றியா?

சிதம்பரம் நடராசர் கோவில் பல நூற்றாண்டு பழமையானது. பன்னெடுங் காலமாக சைவர்களுக்கு (சிவனை வழிபடுபவர்கள்) இதுதான் முக்கிய வழிபாட்டு தலமாக இருக்கிறது.

வரலாற்று ரீதியாகவும் சிதம்பரம் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தே இருந்தது. சோழ மன்னர்களின் முடி சூட்டு விழா சிதம்பரம் கோயிலிலேயே நடந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. பிற்காலச் சோழ மன்னர்களான முதலாம் ஆதித்தனும் அவனைப் பின் தொடர்ந்து முதலாம் பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் கூரை வேய்ந்தனர் என்றும் வரலாறு கூறுகிறது.

சோழ மன்னர்கள் மட்டுமல்லாது பாண்டிய மன்னர்களும், நாயக்க மன்னர்களுமே சிதம்பரம் கோவிலுக்கு முக்கயத்துவம் அளித்து பல மானியங்களையும் புனரமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

சிவபக்தர்களில் முதன்மை யானவர்களாக கருதப்படும் நாயன்மார்களில் முக்கியமானவர்களான திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வருமே சிதம்பரத்தைப் பற்றி பாடியுள்ளனர்.

இன்று வரை எங்கு சிவ பூசை நடந்தாலும் பூசை தொடங்குவதற்கும் முன்னும் முடித்தப் பிறகும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லியே நடத்துவது வழக்கமாக உள்ளது. அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த தலம் அது.

அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் கோயிலைத் தரிசிப்பதை முக்கியமாக கருதுகின்றனர்.

இந்த அளவிற்கு சிதம்பரம் கோயிலுக்கு முக்கியத்துவம் அளித்த இன்று வரை தொடர்ந்து அளிக்கக் கூடிய சிவ பக்தர்கள் யாரும் வட நாட்டினரோ அல்லது வேற்று மொழியினரோ அல்ல. அனைவருமே சுத்தமான தமிழர்கள். வட நாட்டில் சிவனை வழிபடுபவர்கள் முக்கியமாகக் கருதுவது வடக்கில் காசியையும் தெற்கில் இராமேசுவரத்தையும் மட்டுமே.

ஆனால், இவ்வாறு தமிழர்கள் போற்றி துதிக்கும் நடராசனின் காதில் தமிழ் விழுந்தால் அது அந்த நடராசனைத் தீட்டுப் படுத்திவிடும் என்று ஒரு கும்பல் கூச்சலிடுகிறது. அதை பல நூற்றாண்டுகளாக சாதித்தும் வருகிறது.

ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டு காலத்தில் சிதம்பரத்தில் குடியமர்ந்த தீட்சிதர்கள், இன்று சிதம்பரம் கோவிலே சட்டப்படி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடுகின்றனர். அதில் தாங்கள் வைத்ததே சட்டம் எனவும், வேறு எந்த சட்டமும் அங்கு செல்லுபடியாகாது எனவும் துணிச்சலாகக் கூறுகின்றனர்.

சிதம்பரம் கோயில் ஒரு பொதுக் கோயில் என்பதும் அதன் மீது தீட்சிதர்களுக்கு எந்த சட்டப்படியான அதிகாரமும் கிடையாது என்றும், இக்கோயில் தீட்சிதர்களின் சொந்த சொத்து என்பதற்குத் துளியளவு கூட ஆதாரம் கிடையாது என்றும் 1888-இலும், 1951-இலும் நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. அதிலும் 1888-இல் சர். டி. முத்துசாமி அய்யர் என்ற பார்ப்பனரும், 1951-இல் சத்தியநாராயண ராவ், ராஜ கோபாலன் என்ற இரண்டு பார்ப்பன நீதிபதிகளை கொண்ட டிவிசன் பெஞ்சுமே இத்தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

1922-இல் இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை நீதிக்கட்சி அரசால் ஏற்படுத்தப்பட்டு அது 1925-இல் செயலாக்கத்திற்கு வந்த உடனேயே தீட்சிதர்கள் இந்த சட்டம் சிதம்பரம் கோயிலுக்குச் செல்லாது என வாதிடத் தொடங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் வாதம் தவறு என்று நீதிமன்றம் தெளிவுற உரைத்த பின்னும், 60 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னமும் சிதம்பரம் கோயில் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டுவரப்படவில்லை.

முழுமையாக தீட்சிதர்களின் நிருவாகத்தின் கீழ் இருக்கும் சிதம்பரம் கோயிலில் அம்பாள் கழுத்திலிருந்த தாலி உட்பட கோயிலுக்குச் சொந்தமான நகைகள் மட்டுமல்ல சோழ மன்னர்கள் வேய்ந்த பொன் கூரையின் பகுதிகளே காணாமல் போய்விட்டதாக இதே தீட்சிதர்கள் பல முறை அறிவித்திருக்கின்றனர்.

நிலைமை இப்படியே தொடர்ந்தால், ஒரு நாள் கோயில் நகைகள் அனைத்தும் காணாமல் போவதும், பொன் கூரை தகரக் கூரையாக மாறுவதற்கும் பெரும் வாய்ப்பிருக்கிறது.

இது மட்டுமல்ல. பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலக்கட்டங்களில் கோயிலுக்கு மானியமாக அளிக்கப்பட்ட நிலங்களைக்.. கொஞ்சம் நஞ்சமல்ல.. ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் நிலங்களை முழுவதுமாக தீட்சிதர்களே அனுபவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் மய்யத்தில் இருந்து கொண்டு, சுற்றிலும் தமிழர்களுக்கு நடுவே வாழ்ந்து கொண்டு, தமிழர்கள் இடும் தட்சிணைக் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு, தமிழர்களின் கோயிலையும் நிலங்களையும் ஆக்கிரமிக்கவும், தமிழைத் தீட்டு மொழி என்று சொல்லவும், தமிழர்களைக் கோயிலுக்குள் விட மாட்டோம் என்று சொல்லவுமான துணிவு எங்கிருந்த வந்தது இவர்களுக்கு?

தீட்சிதர்களின் கணக்குப்படியே வைத்துக் கொண்டாலும், சிதம்பரத்தில் இன்று அவர்கள் முன்னூறு குடும்பங்களாக வாழ்கின்றனர். இந்த முன்னூறு குடும்பங்களுக்காக, அவர்களின் மிரட்டலுக்கும் பார்ப்பனத் திமிருக்கும் அடி பணிந்து, ஒட்டு மொத்தத் தமிழினமும் தமிழ் மன்னர்களால் தமிழ் மக்களை கொண்டு கட்டப்பட்ட, தங்களுக்கு உரிமையான, தாங்கள் போற்றி வழிபடக் கூடிய கோயிலை, அக்கோயிலில் தங்கள் தாய் மொழியில் வழிபடும் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமா?

இதை விட அவமானம் தமிழர்களுக்கு நேர முடியாது.

பல்லவ மன்னர்கள் காலத்தில் கோயில்களில் வட மொழி நுழைந்த காலம் தொட்டு இன்று வரை ஏறத்தாழ 13 நூற்றாண்டுகளாக தமிழர்கள் நடுவே, தமிழ் நீச மொழி என்றும் வட மொழியே உயர்ந்த மொழி என்றும் கைப்பிடி அளவு கூட இல்லாத பார்ப்பனர்கள் தொடர்ந்து துணிவாகச் சொல்லி வருகிறார்கள், நாம் இன்று வரை அரசாணை மேல் அரசாணையாகப் போட்டு கையை பிசைந்து கொண்டு நிற்கிறோம்

கோயிலகளில் வடமொழியில் மட்டுமல்லாது தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அரசாணைப் போட்டால், "தமிழிலிலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று எழுதி வைத்து அவமானப் படுத்துகிறான். அதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

"தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும்" என்று அரசாணை போட நமக்கு இன்னமும் துணிச்சல் வரவில்லை. தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பது அப்படி என்ன பஞ்சமா பாதகமா? உண்மையில் அதுதானே இயற்கையாக இருக்க இயலும்? வடமொழி வழிபாடு என்பது இடையில் வந்ததுதானே?

ஆங்கிலேயர் பெயர் சூட்டிய மதராஸ் சென்னையாக மாற்றம் கொள்வது போலத்தானே இடையில் வந்த வடமொழி வழிபாட்டை நீக்கிவிட்டு தமிழ் வழிபாட்டை உறுதியாக்குவது?

இதை நடைமுறைப்படுத்த நமக்கு எதனால் அச்சம்? யாரைக் கண்டு பயம்? நிச்சயம் வாக்குக்காக இருக்க இயலாது. ஏனெனில் பார்ப்பனர்கள் மொத்தமே 3 விழுக்காட்டினர்தான். அப்படியானால், பன்னெடுங்காலமாக நமக்குள் ஊறிப் போன சூத்திர அடிமை மனோபாவம்தான் இன்றளவிலும் பார்ப்பனர்களை எதிர்க்கத் தடையாக இருக்கிறதா?

சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட அனுமதி அளித்து அரசே ஒரு ஆணையிடுகிறது. அந்த ஆணையை செயல்படுத்த சென்றவர்களையும், அரசாணையை மதிக்காமல் அதனை செயல்படுத்த விடாமல் தடுத்தவர்களையும் ஒன்றாக பாவித்து இரு தரப்பினரையும் அதே அரசு கைது செய்கிறது.

இந்த செய்கையால் துணிவுப் பெறப் போவது யார்? யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை?

தமிழ் வழிபாடு, தமிழ் வழிக் கல்வி, நீதிமன்றத்தில் தமிழ், தமிழ்த் தேசிய சிக்கல்களான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஈழம் என எல்லாவற்றிலும் தமிழர்களின் நலனுக்கு, தமிழ் மொழிக்கு எதிர் நிலை எடுத்து தமிழர்களிடமே அது குறித்து வெளிப்படையாகப் பேசி தொடர்ந்தும் தமிழ்நாட்டில் இவர்களால் வாழ முடிகிறது என்றால் எந்த அளவிற்கு நாம் தன்மானம் அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புலப்படும்.

"உங்களை சூத்திரர்களாகவே விட்டுச் செல்கிறேனே" என்று பெரியார் தனது இறுதி காலத்தில் மனம் நொந்து கூறினார். அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இன்னமும் சூத்திரர்களாக, அடிமை மனோபாவத்தோடே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிகுந்த அவமானத்திற்குரியது. சூத்திர இழிவை நீக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும்,, அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும்.. அதனைச் செயல்படுத்துவதில் விழிப்புணர்வோடு வேகம் காட்டாவிடில், செயல்படுத்த தடையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக அணி திரளாவிடில், எத்தனை நூற்றாண்டுகளானாலும் நாமும் நம் தலைமுறையினரும் சூத்திரர்களாக நீச மொழியைப் பேசிக் கொண்டு வாழ்ந்து மடிய வேண்டியதுதான்.

நன்றி:- பூங்குழலி

Posted by yarl at 6:34 PM

http://seythialasal.blogspot.com/2008/03/blog-post_23.html

தமிழ் தமிழன் வழிபாட்டுத்தலங்க்ளில் வழிபாட்டு மொழியாக வேண்டும்.... என்பதே பெரியார் தொண்டர்களின் அவா

ஆடு நனையுது என்று ஓநாய்கள் கும்பலாக அழுகின்றன.

பூங்குழலி நெடுமாறன் அய்யாவின் புதல்வி இது தென்செய்தியில் அவர் எழுதியது.....

]

Edited by வேலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.