Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்

கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம்

தமிழாக்கம்:

திரு ஏ. ஜே. கனகரட்னா

மறுமலர்ச்சிக் கழகம்

1981

------------------------------------------------------------------------------------

எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்

கலாநிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம்

A translation of James T. Rutnams

The Tomb of Elara at Anuradhapura

(Jaffna-1981)

யாழ்ப்பாண தொல்பொருளியல் கழகம்

ஈவ்லின் இரத்தினம் நிறுவனக் கட்டிடம்

பல்கலைக் கழக ஒழுங்கை

திருநெல்வேலி

யாழ்ப்பாணம்

தமிழாக்கம்:

திரு ஏ. ஜே. கனகரட்னா

வெளியீடு: 1981 ஆண்டு ஆகஸ்ட்

மறுமலர்ச்சிக் கழகம்

பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணம்

அச்சிட்டது

நொதேர்ண் பிறின்ரேர்ஸ்

411, ஸ்ரான்லி வீதி

யாழ்ப்பாணம்.

----------------------------------------------------------------------

".....( துட்ட கெமுனுவின்) இக் கட்டளைக்குப் பணிந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மக்கள் ஒரு வீரனாகவும், நீதியும் மனிதப் பண்பும் கொண்ட மன்னனாகவும் விளங்கிய ஒருவனுக்கு (எல்லாளனுக்கு) தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வந்துள்ளமை இம்மக்களுக்குரிய சிறப்பைக் காட்டும்"

G. P. மலலசேகர என்ற காலஞ் சென்ற பிரபல சிங்கள பௌத்தத் தலைவரும், அறிஞரும் தனது "The Pali Literature of Ceylon" (Colombo 1928, p.34) எனும் நூலில் எல்லாளனுக்குச் சிங்கள மக்கள் செலுத்திவந்த அஞ்சலி பற்றிப் பாராட்டிக் கூறிய கூற்று.

---------------------------------------------------------------------------

இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1981 மார்ச் 24ல் யாழ்ப்பாணத் தொல்பொருளியல் கழகம், தென்னாசியவியற் கருத்தரங்கு ஆகியவற்றின் ஆதரவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரையாகும்.

--------------------------------------------------------------------------------

புகைப்படம்: அநுராதபுரத்தில் உள்ள 'எல்லாளன் சமாதி' எனப்படும் கட்டிடம்.

------------------------------------------------------------------------------

முன்னுரை

இலங்கையில் தமிழ் இனத்துடன் தொடர்பான வரலாற்றுச் சின்னங்கள் மிக முற்பட்ட காலத்திலிருந்தே காணப்படுகின்றன. இவற்றைத் தமிழ் மக்கள் சரியான முறையில் அறியாதிருக்கும் நிலையில், தமிழ் இனத்தைப் பல வகையாலும் தாக்கிவரும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தமிழருடைய வரலாற்றுச் சின்னங்களை மறைத்தும், மறுத்தும், அழித்தும் வருகின்றது. இச் செயல்களுக்கு ஓர் உதாரணம்தான் 2200 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த தமிழ் மன்னன் ஒருவனின் சமாதியை, எல்லாளப் பெருமன்னனின் சமாதியை, இன்று துட்டகைமுனுவின் சமாதி என்று கூறுவது.

கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே எல்லளன் சமாதியென மரபு ரீதியாகவும், வரலாற்றுச் சான்று ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த உண்மையைத் திரித்து துட்டகைமுனுவின் சமாதியெனச் சிங்கள பௌத்தப் பெருந்தேசியவாதத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறினர். அவ்வாறே எல்லாளன் ச்மாதி துட்டகைமுனுவின் சமாதியெனப் பெயர் மாற்றிப் பெருவிழாவும் எடுக்கப்பட்டது.

இவ்வநியாயத்தில் பெரும் கல்விமான்களும் அரசியல்வாதிகளும் பங்கெடுத்துக் கொண்டார்கள். இவ்வநியாயத்தை எதிர்த்து, கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம் அவர்களின் இவ்வாராய்ச்சி நூல் வெளிவருவது ஓர் வரப்பிரசாதமாகும். கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம் அவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகம் அண்மையில் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. இவ்வாராய்ச்சி நூலை எழுதியதன் மூலம் தனக்கு வழங்கிய கலாநிதிப் பட்டத்திற்கு மேலும் ஓர் மெருகூட்டியுள்ளார் எனக் குறிப்பிடலாம்.

அறிவாளிகள் என்ற கோணத்தில் இருந்து தம்மாலான கடமையைச் செய்யத் தவறாமைக்காக வரலாறு கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம் அவர்களின் பெயரை உரியவாறு நினைவு கூரத் தவறாது.

இந்நூலை ஆங்கிலத்தில் இருந்து உரியவாறு தமிழில் மொழிபெயர்த்துத் தந்த திரு. ஏ. ஜே. கனகரட்னா அவர்களுக்கு எமது கழகம் பெரிதும் கடமைப்பட்டதும் நன்றியுடையதுமாகும். அட்டைப்படம் வரைந்துதவிய ஓவியர் ரமணிக்கும் எமது நன்றிகள். இந் நூலை சிறந்த முறையில் அச்சிட்டுத் தந்த நொதேர்ண் பிறிதேர்ஸுக்கும், ஊழியர்களுக்கும் கழகம் நன்றியுடையதாகும்.

இந் நூலை வெளியிட எமக்குச் சந்தர்ப்பம் கிடைத்தமையை எண்ணிக் கழகம் மகிழ்ச்சியடைகிறது.

மறுமலர்ச்சிக் கழகம்.

பல்கலைக் கழகம்

யாழ்ப்பாணம்.

ஆகஸ்ட் 1981

----------------------------------------------------------

மூப்படைந்து இருந்த போதிலும் வீரனாகத் திகழ்ந்த இலங்கைத் தமிழ் மன்னன் எல்லாளன் தன்னை விட வயதில் மிக இளையவனான- "மகாவம்சத்தின் காவியத் தலைவனாக" விளங்குபவனான- துட்டகைமுனுவினால் தனிச்சமரில் கொல்லப்பட்ட நாள் தொடக்கம் எல்லாளனுடைய உடல் தகனம் செய்யப்பட்ட போர்க்களம், வீர தர்மம் மிக்க அவனுடைய பகைவனின் திட்டவட்டமான ஆணைக்கேற்ப புனித ஸ்தானமாக கருதப்பட்டு வந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சி 2000-ம் ஆண்டுகளுக்கு முன் அதாவது கி. மு. 161ல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. நாற்பத்தி நான்கு ஆண்டுகளாக இச் சோழ மன்னன் இந்நாட்டை ஆண்டான். மகாவம்சத்தின் கூற்றுப்படி இம் மன்னன் நீதி வழுவாது நண்பனையும் பகைவனையும் சமமாகக் கருதி நீதி வழங்கினான்; மகாவம்சத்திலே வேறு எந்த இடத்திலாவது ஒரு மன்னன் இவ்வாறு தாராளமாகப் பாராட்டப் பட்டதில்லை.

மகாவம்சம் தரும் சான்று

மகாவம்சம் மேலும் கூறுவதாவது "இச்சை, வெறுப்பு, பயம், மாயை ஆகியவற்றை தவிர்த்து ஒப்பாரும் மிக்கரும் இன்றி அவன் நேர்மையாக செங்கோல் ஓச்சி வந்தான். இரவிலே முகில்கள் மழையைப் பொழிந்தன. பகலில் மழை பெய்யவே இல்லை." இச் செங்கோலனை இயற்கை கூட ஆதரித்தது போலும்.

அக்கால கட்டத்திலே வழக்கிலுருந்த ஐதீகங்களுடன் மன்னனை இணைத்து மகாவம்சம் தனது பாராட்டை விளக்கிச் செல்கிறது; "இந்த மன்னன் துன்மார்க்கத்தில் காலடி எடுத்து வைக்காததினால்தான் அவனுடைய நம்பிக்கைகள் பொய்யனவையாய் இருந்த போதிலும் அதிசயிக்கத்தக்க சக்திகளை அவர் வரமாகப் பெற்றிருந்தார்"

எனவே துட்டகைமுனு தான் ஈட்டிய உன்னத வெற்றி வேளையிலும்- அவன் தன் மனச் சாட்சியுடன் போராடியதைப் பின்னர் பார்ப்போம்- இதனால்தான் தனது உயர்ந்த பகைவனின் ஈமைக் கிரியைகளில் உடனடியாகப் பங்கு பற்றினான். இது வியப்பன்று.

மகாவம்சம் பின்வருமாறு கூறுகிறது; "நகரத்தின் தெற்கு வாசலில் அண்மையில் இரு மன்னர்களும் பொருதினர். எல்லாளன் குறிநோக்கி தனது ஈட்டியை எறிந்தான். துட்டகைமுனு அக் குறியில் இருந்து தப்பித்துக் கொண்டு எல்லாளனின் யானையை தந்தங்களினால் துளைப்பதற்கு தனது யானையை ஏவினான். எல்லளனை நோக்கி தனது ஈட்டியை எறிந்தான். யானையுடன் எல்லளனும் சரிந்தான். இவ்வாறு துட்டகைமுனு வெற்றிவாகை சூடி இலங்கையை ஒரே ஆட்சிக்குள் இணைத்தபின்னர் தலை நகருக்குள் தேர்ப்படையுடனும், காலாட்படையுடனும், யானைப்படையுடனும் அணிவகுத்துச் சென்றான். நகரிலே முரசு அறையும்படி ஆணையிட்டான். முரசொலி காதுக்கு எட்டிய தூரத்தில் இருந்து மக்கள் எல்லோரும் கூடிய பின்னர் எல்லாள மன்னனின் ஈமைக் கிரியைகளை துட்டகைமுனு நடத்தினான். போர்க்களத்திலேயே எல்லாளனின் உடல் பாடையில் வைக்கப்பட்டு, துட்டகைமுனு அச்சிதைக்கு கொள்ளி வைத்தான். அங்கு ஒரு நினைவுத் தூபியைக் கட்டி எழுப்பி அதனை வைபடுமாறு ஆணையிட்டான். அன்று தொடக்கம் இலங்கை மன்னர்கள் இந்நினைவுத் தூபியை அண்மித்ததும் இசை வாத்தியங்கள் வாசிப்பதை நிறுத்தி மௌன அஞ்சலி செய்வது வழக்கம்"

இந்த நினைவுத் தூபிக்கு அண்மையில் ஒரு தூணில் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அக் கல்வெட்டின் வாசகம்; "அரசனாயிருந்தால் என்ன, குடியானவனாகவிருந்தால் என்ன ஒருவருமே இவ்வழியால் பல்லக்கிலோ. சிவிகையிலோ முரசு கொட்டி எதிர்காலத்தில் செல்லலாகாது" எனெக் கூறுகிறது.

ஒரு தமிழ் மன்னனுக்கு "இன்று வரையும் கூட" தனித்துவமான அஞ்சலி செலுத்தப்பட்டமைக்கு மகாவம்சத்தை இயற்றியவர், 700 ஆண்டுகளுக்கு மேல் கழிந்தும், (மகாவம்சம் கி. பி. 6-ம் நூற்றாண்டில்தான் இயற்றப்பட்டது) சான்று பகர்கின்றார். மகாவம்சத்தில் காணப்படும் சான்றுகளிலிருந்து நாம் பெறும் தகவல்களாவன;

இரு மன்னர்களும் நகரத்தின் "தெற்கு வாசலுக்கு (புரதக்கிண துவாரம் ஹி) அண்மையில் பொருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குதான் எல்லாளனின் உடல் பாடையோடு எரிக்கப்பட்டது. அவ்விடத்தில்தான் துட்டகைமுனு "நினைவுத் தூபியைக்" கட்டினான். நினைவுத் தூபிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் பாளிச் சொல் "Cetiya". அத்துடன் அந்நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமெனவும் ஆணையிட்டான்".

பிற ஆதாரங்கள்

மகாவம்சத்திற்கு உரையாக அமைகிறது "வம்சத்த பக்காசினி" எனும் நூலாகும். இதன் பதிப்பாசிரியர் G. P. மலலசேகர, இந்நூல் கி. பி. "8-ம் அல்லது 9-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது" என்கிறார். வில் கெல்ம் கைகர் என்பவர் இந்நூல் 11-ம் நூற்றாண்டிற்கும் 13-ம் நூற்றாண்டிற்கும் இடையில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதினார். இவ்விளக்க உரையின்படி மன்னர்கள் தனிச்சமர் பொருதிய இடம் (புரதக்கிண துவாரம்ஹி) "எலார பட்டிமாகரவுக்கு கிழக்கேயும் அனுராதபுரத்தின் தெற்குப் பகுதியிலும் உள்ள குயவரின் கிராமத்திற்கு மேற்கேயும்" அமைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

உரை ஆசிரியர் எலகரபட்டிமாகர எனும் இடத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது அதத் தலைமுறைக்கு நன்கு பரிச்சயப்பட்ட ஒரு இடமாகவும் எல்லொருக்கும் தெரிந்த இடமாகவும் குறிப்பிடுவது நோக்கற்பாலது. எலகரபட்டிமாகர என்றால் என்ன? "எல்லாள விக்கிரக அகம்" என்பதே அதன் பொருள். வேறு எந்த அர்த்தமும் அதற்குக் கொடுக்க முடியாது. இப்புனித இடம் முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. வம்சத்தபக்காசினி இயற்றப்பட்ட காலத்திலும் அது இருந்திருக்கிறது.

கி. மு. 2-ம் நூற்றாண்டில் துட்டகைமுனுவால் பிரகடனம் செய்யப்பட்டு 6-ம் நூற்றாண்டில் அனுஷ்டிக்கப்பட்டு வந்ததாக மகாவம்சத்தின் ஆசிரியரால் சான்று பகரப்படும் வழக்கம் பற்றி உரை ஆசிரியர் சான்று பகருகிறார். இவ்வாறு செய்யும் பொழுது அவர் தனது நேரடி அனுபவத்தினையே குறிப்பிடுகின்றார் என்பது வெளிப்படை. இவ்வுரை ஆசிரியர் வாழ்ந்த காலத்திலும் இலங்கை அரசர்கள் தூபியை அண்மித்ததும் இசை வாத்தியங்கள் வாசிப்பதை நிறுத்தி மாகைகளையும் வாசனைப் பொருட்களையும் தாங்கிய வண்ணம் புனித இடத்தை வலம் வந்து இவ் ஸ்தூபியை (Cetiya) வழிபட்டனர். பரணவித்தானாவும் உரையாசிரியர் வாழ்ந்த காலம் வரையிலும் அதாவது எல்லாளன் இறந்து 1000 ஆண்டிற்கு பின்னரும் எல்லாளனின் "பிரதிமை"க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்.

எல்லாளன் இறந்த பின்னர் அவன் எவ்வாறு புனிதமான ஒருவனாய்க் கருதப்பட்டான் என்பதை அவனுக்கு உருவாக்கப்பட்ட சிலையும் அச்சிலைக்கு அமைக்கப்பட்ட ஒரு அகமும் வெளிக்காட்டுகின்றன. "சேத்திய" (Cetiya) என்ற சொல்லை கைகர் "நினைவுச் சின்னம்" (Monument) என மொழி பெயர்த்தமை தவறு என்பது புலனாகிறது. உண்மையில் இதற்குப் பொருத்தமான சொல் தூபி அல்லது தாதுகோபம் ஆகும்.

சமய குரவர்களாகிய மகிந்த, சங்கமித்த ஆகியோர் தகனம் செய்யப்பட்ட இடங்களிலே எழுப்பப்பட்ட கட்டிடங்களை வர்ணிக்கும்போது பயன்படுத்தப்பட்ட பாள்ச் சொற்களாகிய சேத்திய, தூப ஆகிய சொற்களை கைகர் மொழி பெயர்க்காது விட்டமை விசித்திரமானது. மகிந்தரைக் குறிப்பிடுகையில் (அவரது ஞாபகார்த்தமாக) "இங்கு ஒரு சேத்தியாவைக் கட்டி எழுப்பப்பட்டுள்ளது" எனவும், சங்கமித்தையைப் பற்றிக் குறிப்பிடுகையில் "மதிநுட்பம் மிக்க உதிய அங்கு ஒரு தூபியைக் கட்டுவித்தான்" எனவும் குறிப்பிட்டுள்ளார். பிறிதொரு இடத்தில் கைகர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். அஃதாவது "எனது மகாவம்ச மொழிபெயர்ப்பு பற்றி நான் திருப்திப் படவேயில்லை" என்பதாகும். மாண்ட தனது பகைவனான செங்கோலனான எல்லாளனுக்குத் துட்டகைமுனு அளித்த மதிப்பும் பயபக்தியும் இத்தீவின் வரலாற்றிலேயே ஈடு இணையற்றது என்பதில் ஐயமில்லை. இறக்கும் தறுவாயில் இருந்த துட்டகைமுனுவை ஏன் மனச்சாட்சி உறுத்தியது என்பது இப்போது எமக்குப் புரிகிறது. எல்லாளன் கொல்லப்பட்ட காலத்தில் துட்டகைமுனு அவருக்கு தனிச்சிறப்பு வாய்ந்த வணக்கத்தையும் அளித்தது எம்மால் புரந்து கொள்ள முடிகிறது. இலட்சக் கணக்கானோரை படுகொலை செய்தமை ஒன்றரை மனித்ரை படுகொலை செய்தமைக்கு ஒப்பாகும் எனப் புத்த குரமார் அவனைத் தேற்றினர். ஏனையோர் நாத்திகரும் துட்டரும் என அவர்கள் விளக்கி, அவர்களை விலங்குகளுக்கு மேலாகக் கணிக்க வேண்டியதில்லை எனவும் கூறினர்.

விதிவிலக்கானவர்களில் ஒருவர் "மூன்று நெறிகளைக் கடைப்பிடித்தவர்" என்றும் மற்றவர் " ஐந்து ஒழுக்க சீலங்களைக் கடைப்பிடிப்பதாக வாக்குப் பண்ணியவர்" என்றும் அவர்கள் விளக்கினர். இவ்வாறு விதிவிலக்கானவர்களில் ஒருவன் எல்லாளன் போலும்! E. W. அதிகாரத்தின் கருத்துப்படி எல்லாளன் பயபக்தி மிக்க இந்து சமயத்தவன். எனவே 2000 ஆண்டுகளுக்கு மேலாக எல்லாளன் வழிபடப்பட்டு வந்தமைக்குக் காரணம் அரசாணைக்குக் கீழ்ப்படிந்தமை அல்ல. ஓர் மேன்மகன் - தேசத்தவர் வழிபடும் தெய்வங்களுள் ஒருவராகக் கருதப்பட்டு - வணக்கம் செலுத்தப்பட வேண்டும் என்று கருதப்பட்டமையே.

14-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சத்தர்மாலங்காரய என்னும் நூல் "எல்லாளன் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவரது பெயருடன் விளங்கிய தாதுகோபுரத்தை துட்டகைமுனு கட்டுவித்தான்" எனத் திட்டவட்டமாகக் கூறுகிறது.

எனவே 6-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட மகாவம்சமும் பின் வந்த உரையும் கூறும் வழக்கம் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு வந்ததை இந்நூலாசிரியர் உறுதிப் படுத்துகிறார். "இற்றை வரையும் (அதாவது 14-ம் நூற்றாண்டில்) இவ்விடத்துக்கு மன்னர்கள் வரும்போது முரசு கொட்டப்படுவதில்லை" என சத்தர்மாலங்காரய கூறுகின்றது. சோழர்கள் அனுராதபுரத்தை கைப்பற்றிய பின்னரும் கூட இது கடைப்பிடிக்கபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே எல்லாளன் தூதுகோபுரம் போரின் அழிபடுகளையும் எஞ்சிப் பிழைத்தது எனலாம்.

போத்துக்கேயரதும் ஒல்லாந்தரதும் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டின் சில பகுதிகள் காடாக மாறிற்று. எடுத்துக் காட்டாகப் பலன்னறுவையும் அதன் சுற்றுப்புறமும் காடாக மாறி ஏறக்குறைய 500 ஆண்டுகளாக எவராலும் அறியப்படாது கிடந்ததைக் கூறலாம். ஆனால் அனுராதபுரமோ எனில் மக்களின் நினைவில் தொடர்ந்தும் இடம்பெற்று இருந்தது. அங்கு உள்ள சில நினைவுச் சின்னங்களை புனருத்தாரணம் செய்வதற்கு கீர்த்தி சிறீ இராசசிங்கன் முயன்றான் என்பதை நாம் அறிவோம்.

அனுராதபுரத்தில் காணப்படும் சில அழிபாடுகள் பொருத்தமான முறையில் இனம் காணப்படவில்லை என்பது உண்மையே. ஆனால் அரசர்களாயினும் சாதாரண மக்களாயினும் மரியாதையாக அஞ்சலி செலுத்திச் செல்ல வேண்டிய இடம் வாழையடி வாழையாக நன்கு தெரிந்து இருந்தது. தலைமுறை தலைமுறையாக இந்த ஆணை வாய்மொழியாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்ததினால் தவறு ஏதும் ஏற்பட்டு இருப்பதற்கு சாத்தியமில்லை எனலாம்.

வரலாற்று ஆசிரியர்கள் பார்வையில்

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது பகைவனிடமிருந்து தப்பி ஓடிகொண்டு இருந்த பிலிமத்தலாவ அனுராதபுரத்தில் இருக்கையில் காலாதி காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த இந்த வழக்கத்தை தான் கடைப்பிடிக்க வேண்டுமென விடாப்பிடியாக வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.1840இல் வெளிவந்த "இலங்கையில் பதினொரு ஆண்டுக்ள்" என்ற நூலில் அதன் ஆசிரியரான போப்ஸ் என்பவர் பின்வருமாறு கூறுகின்றார். "ஒரு நாத்திகனின் பாழடைந்த கல்லறையை பல பௌத்த யாத்திரீகர்கள் ஒரு புனிதக் கட்டிடத்தின் அழிபாடு எனக் கருதுகின்றனர். எல்லாளன் இறந்து 20 நூற்றாண்டுகளாகியும் எல்லாளனைத் தோற்கடித்தவனது ஆணையை எந்த ஒரு சுதேசியும் எக்கட்டத்திலும் தட்டிக் கழித்து இருப்பான் என நான் நம்பவில்லை. 1818ல் பிலிமத்தலாவ -மிகப் பழைய கண்டிய குடும்பத்தின் தலைவன்- தான் ஈடுபட்டு இருந்த கிளர்ச்சி நசுக்கப்பட்டு தப்பி ஓடிக் கொண்டு இருந்த வேளையில் மிகக் களைப்புற்று கால் கைகள் அசைக்க முடியாது இருந்த போதிலும் தனது சிவிகையில் இருந்து கீழிறங்கினான். இடத்தினைச் சரியாகத் தெரியாததினால் இந்த பண்டைய நினைவுச் சின்னத்தை எப்போதோ கடந்தாகி விட்டது என உறுதி அளிக்கப்படும் வரை அவன் தொரர்ந்து நடந்தான்."

19ம் நூற்றாண்டு முழுவதிலும் அதற்கு எவ்வளவோ காலத்திற்கு முன்ன்ரும் இந்தப் பாழடைந்த கட்டிடம் 'எலாள சொகென' என அழைக்கப்பட்டது. பண்டைய பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அனுராதபுரத்திற்கு சென்ற யாத்திரீகர்கள் இதற்கு பயபக்தியாக வணக்கம் செலுத்தி வந்தனர். எமேசன் ரெனன்ற் எழுதிய "இலங்கை" என்ற நூல் 1859-1860ம் ஆண்டு காலப்பகுதியில் 5 பதிப்பகளில் வெளிவந்தன. இந்நூலின் முதற் தொகுதியில் 3ம் பாகத்திலுள்ள 5ம் அத்தியாயம் சிங்கள வீரதர்மம் -எல்லாளனும் துட்டகெமுனுவும்- என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகிறது. "இரு தலைவர்களுக்குமிடையே ஏற்பட்ட போரே இலங்கை வீரதர்மத்தைப் பற்றிய ஒரே ஒரு எடுத்துக்காட்டு. எல்லாளனுடைய வீரத்தை உண்மையில் மெச்சிய அவ்னது பகைவன் எல்லாளன் மாண்ட அதே இடத்தில் ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டி எழுப்பினான். அதன் அழிபாடுகள் இன்றும் கூடக் காணப்படுகின்றன. இன்றும் கூட சிங்கள மக்கள் பயபக்தியோடு அதனை வழிபடுகின்றனர்"

தொல்லியலாளர் நோக்கில்

எஸ். எம். பறோஸ் என்பவர் இலங்கையிலே ஆகஸ்ட் 1884ம் ஆண்டு தொடக்கம் 1886ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முடியும் வரை தொல்பொருளியல் திணைக்கள நில அளவையாளராக கடமையாற்றினார். 1885ல் அவர் "இலங்கையின் புதையுண்ட நகரங்கள்" என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். அது நான்கு தடவை பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிலே பறோஸ் பின்வருமாரு எழுதுகிறார். "தெவிட்டும் அளவிற்கு போரிலே வெற்றி வாகை சூடிய துட்டகைமுனு தான் சிந்திய இரத்தத்தை நினைத்து மனம் வருந்தி எஞ்சிய வாழ்நாளில் பிராயச்சித்தம் தேடுவதென தீர்மானித்தான். தனது பகைவனான எல்லாளனுக்கு ஏற்ற ஓர் நினைவுச் சின்னத்தினை கட்டுவித்து இக் கல்லறையை கடக்கும் போது இசை வாத்தியங்கள் ஒலிக்கப்படாது என்றும் மன்னர்கள் தமது பல்லக்கிலிருந்து இறங்கி நடக்க வேண்டும் என்றும் ஆணையிடுவதே அவனது முதல் அக்கறையாய் இருந்தது." இது அவ்விடத்தில் மண் கூம்பு வடிவத்தில் அமைக்கப்பட்ட்து. இவ்வாறு தாராள சிந்தையுடன் அமைக்கப்பட்ட இந்நினைவுச் சின்னம் தொடர்ந்தும் இருந்தது என்பதற்கு 1816ல் பிலிமத்தலாவை இவ் இடத்தைக் கடந்து வெகுதூரம் வரை நடந்து சென்றமை சான்று பகரும். பறோஸின் நூலில் தரப்பட்டுள்ள அனுராதபுரத்தின் வரைபடத்தில் இவ் இடம் "எல்லாளனின் கல்லறை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1896ல் பறோஸுக்குப் பின்வந்த H. C. P. பெல் என்பவர் மிக நிதானமான ஆராய்ச்சியாளர் என்பது நன்கு தெரிந்ததே. "மரங்கள் வளர்ந்திருந்த மண்மேட்டை- பண்டைக் காலத்தில் அனுராதபுரத்தில் இருந்த பழைய தாது கோபுரத்தை ஆனால் இப்பொழுது மக்களிடையே எல்லாளைன் கல்லறை என வழங்கப்படுகின்ற இடத்தை" அகழத் தொடங்கினார். அகழ்வாராய்ச்சிக் கிடங்குகளை வெட்ட ஆரம்பிக்கும் போதே இது கணித்ததிஸ்ஸவினால் (கி. பி. 165-193) கட்டப்பட்ட தாதுகோபுரமாக இருக்கலாம் என ஓர் அடிக்குறிப்பில் பெல் சரியாக ஊகித்தார்.

தொடர்ந்து அடுத்துவரும் இரு பந்திகளிலும் பெல் பின்வரும் முடிவுக்கு வருகிறார். "எல்லாளனின் உடல் தகனம் செய்யப்பட்டு அவனது அஸ்தி அவன் மாண்ட இடமாகிய நகரத்தின் தெற்கு வாசலுக்கு அண்மையில் ஓர் கல்லறையில் இடப்பட்டது; ஆகவே இவ் இடம் தக்கிண விகாரைக்கு அண்மையில் இருத்தல் வேண்டும். இவ்விகாரை அரை நூற்றாண்டுக்குப் பின்னர் வட்டகாமினி அபயாவின் ஆட்சியில் உந்திய என்ற போர்வீரனால் கட்டப்பட்டது."

பெல் முன்வைத்த காரணங்கள் மகாவம்சத்திலும் தீபவம்சத்திலும் இருந்து எடுத்த மேற்கோள்களில் தங்கியிருதன. நகரத்தின் தெற்கு வாசலுக்கு அண்மையில் கட்டப்பட்ட எல்லாளனின் கல்லறை தக்கிண விகாரைக்கு அண்மையில் இருக்கின்றது என அவர் திருப்திப்பட்டார். அப்பொழுது அங்குதான் அகழ்வாராய்ச்சி நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

1895ம் ஆண்டு தொடக்கம் 1900ம் ஆண்டு வரை எல்லாளனின் கல்லறையில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி போதாமையக இருந்தமையால் 1900ம் ஆண்டில் இவ் வேலைகள் நிறுத்தப்பட்டன. பெல் எழுதிய 5 ஆண்டு அறிக்கைகளிலும் இவ்விடத்தை எல்லாளனின் கல்லறை என்றே குறிப்பிட்டார். 1900ம் ஆண்டு வரை இதுவே நிலைமை.

எட்டு ஆண்டுகளின் பின்னர் இது தொடர்பாக H. W. கேவ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்; "துட்டகைமுனுவின் தனிச்சிறப்பு வாய்ந்த தருமச் செயல் 2000 ஆண்டுகளாக மெச்சப்பட்டு வந்திருக்கிறது. எல்லாளன் மாண்ட இடத்திலேயே தகனம் செய்யும்படி ஆணையிட்டு அவ்விடத்திலேயே கல்லறை ஒன்றைக் கட்டுவித்தான். இக் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்றும் அதைக் கடக்கும் போது ஒருவருமே அதை வழிபடாது செல்லக்கூடாது என்றும் ஆணையிட்டான். இற்றைவரை கூட இவ் ஆணைகள் ஓரளவுக்காயினும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கல்லறை பெரும் மண்மேடையாக இப்பொழுதும் அமைந்துள்ளது."

இங்கு நன்கு கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என துட்டகைமுனு கி. மு. 2ம் நூற்றாண்டில் ஆணையிட்டதே. கி. பி. 6ம் நூற்றாண்டில் இவ் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தமைக்கு மகாவம்சத்தை இயற்றிய புகழ் வாய்ந்த நூலாசிரியர் மகாநாம சான்று பகருகின்றார். வம்சத்தப்பக்காசினியின் நூலாசிரியர் அந்நூல் தோன்றிய காலத்திலும் இப் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை உறுதிப்படுத்துகிறார். மலலசேகரவின் கருத்துப்படி இந்நூல் 8ம் அல்லது 9ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். கைகர் கருத்துப்படி இந் நூல் 11ம் நூற்றாண்டிற்கும் 13ம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றியிருக்கலாம். சத்தர்மாலங்காரய என்ற நூலை இயற்றிய ஆசிரியர் இவ் வழக்கம் 14ம் நூற்றாண்டில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தமைக்கு சான்று பகர்கின்றார். 19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டிலும் இவ் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தமைக்கு முறையே போப்சும் , கேவும் சான்று பகருகின்றனர். ஆனால் இன்றோ இந்த உயர்ந்த மரபு மறைந்து விட்டது. 1948ம் ஆண்டு வரை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு வழக்கம் - வீர தருமத்தில் ஒரு நாட்டையும் ஒரு மக்களையும் அதி உன்னத நிலைக்கு உயர்த்திய ஒரு வழக்கம் - ஐய்யகோ! மழுங்கடிக்கப்பட்டு விட்டதே. உண்மையில் எல்லாளனின் கல்லறை அல்ல என்று நாம் வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் இக் கல்லறையை கண்டுபிடிப்பதற்கு நேரிய முயற்சிகள் ஏதாவது மேற்கொள்ளப் பட்டுள்ளனவா? 1948ம் ஆண்டிலே தொல்பொருளியல் ஆணையாளராக கடமையாற்றிய சேனரத் பரண வித்தான தனது ஆண்டறிக்கையில் வெளியிட்ட கோரமான ஒரு குறிப்பே ஒரே ஒரு தடயமாக அமைகின்றது. அக் குறிப்பு வருமாறு; "எல்லாளனின் அஸ்திக்கு மேலே அனுராதபுரத்தின் வைத்திய அதிகாரி படுத்து உறங்குகின்றார் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல." இவ்வாறு தானா நாம் துட்டகைமுனுவின் வீரதர்மத்தை மதித்து கௌரவிப்பது?

பரணவித்தானாவின் விதண்டாவாதம்

மக்களிடையே நிலவிய நம்பிக்கையை 1948ம் ஆண்டு வரை ஒருவரும் எதிர்க்க முன்வரவில்லை. அவ் ஆண்டிலே தான் பரணவித்தான இந்த மண்மேடு துட்டகைமுனுவின் கல்லறையாக இருக்கலாம் என கூற முன்வந்தார். மிக விரைவில் பரணவித்தானவின் உத்தரவுக்கு அமைய அவ்விடத்தில் ஒரு விளம்பரப் பலகை இம் "மண் மேடு துட்டகைமுனுவின் கல்லறை" என அறிவித்தது. இப்பொழுதோ ஒருவரும் தாம் செல்லும் வாகனத்தில் இருந்து பயபக்தியோடு நடந்து செல்வதில்லை.

பரணவித்தான ஒரு மாபெரும் தொல்பொருளியலாளர் என இலங்கையில் கௌரவிக்கப்படுகிறார். ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? எம் எல்லோரையும் போன்று அவரும் அவரும் தவறு விடக்கூடியவர்தான். எத்தனையோ விடயங்களில் அவர் அவர் தவறு விட்டிருக்கிறார் என்பதை இப்பொழுது நிரூபிக்கக் கூடியதாக இருக்கின்றது. உதாரணங்கள் பல பெருகிக்க் கொண்டே வருகின்றன. சில வேளைகளில் அவர் படுமோசமாகத் தவறு விட்டிருக்கிறார். கல்வெட்டுக்களிலே வரிகளுக்கிடையே எழுதப்பட்டவை எனக் கூறப்படுபவற்றிற்கு அவர் கொடுத்துள்ள விளக்கங்கள் புனைவுகள் அல்லாவிட்டாலும் வெறும் மருட்சிகளே. இத்தகைய கல்வெட்டுக்கள் பற்றி அவர் ந்ழுதிய நூல்கள் வெறும் கட்டுக் கதைகளே.

1946ம் ஆண்டில் பரணவித்தானா எல்லாளனின் கல்லறையை அகழ்ந்து ஆராயத் தொடங்கினார். 1949ம் ஆண்டு வரை இவ்வேலையை அவர் தொடர்ந்தார்.அவரது அவதானிப்புகளும் குறிப்புகளும் தொல்பொருளியல் திணைக்களம் 46, 47, 48, 49ம் ஆண்டுகளில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் உள்ளன. பரணவித்தானவின் இந்நான்கு அறிக்கைகளும் ஒரு கட்டுரையாக இணைக்கப்பட்டன. அதன் தலைப்பு அனுராதபுரத்தில் உள்ள தக்கிணதூபி; துட்டகைமுனுவின் கல்லறை. இலங்கையின் கடந்த காலத் தோற்றங்கள் என்ற தலைப்பில் 1972ல் வெளிவந்த பரணவித்தானவின் நூலில் இக் கட்டுரை இடம் பெறுகின்றது.

பெல் விட்ட இடத்திலிருந்து 1946-ம் ஆண்டு ஆண்டறிக்கையில் பரணவித்தானா கதையைத் தொடங்குகிறார். பரணவித்தானா பின்வருமாறு எழுதுகின்றார். "இம் மண்மேடு பொதுவாக அடையாளம் காணப்படுவதை சந்தேகிப்பதற்கும் அதை தக்கிண விகாரையின் தூபியாக கொள்வதற்கும் திருவாளர் பெல் நம்பத்தகுந்த காரணங்களை முன்வைத்தார்". பெல்லின் 5 அறிக்கைகளும் எமக்கு கிடைத்துள்ளன. இந்த அறிக்கைகளில் இரண்டே இரண்டு தடவைகளில்தான் பெல் தக்கிண விகாரையைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். பெல்லின் முதல் அறிக்கையில் இடம்பெற்ற ஒரே ஒரு அடிக் குறிப்பில் நாம் ஏற்கனவே கண்டுள்ளது போன்று அங்கு எல்லாளனின் கல்லறை தீபவம்சத்தில் குறிப்பிடப்பட்ட தூபியாக இருக்கலாம் என அவர் ஊகம் தெரிவித்தார். அதே அடிக்குறிப்பில் எல்லாளனின் அஸ்தி இடப்பட்ட கல்லறை அமைந்த இடம் தக்கின விகாரைக்கு அண்மையில் இருக்க வேண்டும் என்றும் பெல் குறிப்பிட்டார். இங்குதான் மகாவம்சத்திலும் தீபவம்சத்திலும் இருந்தும் நம்பத் தகுந்த காரணங்களை மேற்கோள் காட்டுகின்றார். இரண்டாவது தடவையாக தக்கின விகாரையைப் பற்றிய குறிப்பு பெல்லின் 1898-ம் ஆண்டறிக்கையில் இடம் பெறுகின்றது. அங்கு வேறு பெரிய விகாரைகளுடன் தனது "ஊக" தக்கின விகாரையை குறிப்பிடுகின்றார். இதற்கு மேல் வேறு ஒன்றும் குறிப்பிடவில்லை. எந்த இடத்திலாவது மண்மேடை பற்றிய பொது நம்பிக்கையை பெல் சந்தேகிக்கவில்லை. பெல்லின் அறிக்கைகளை வாசிக்க விழையும் எவருக்கும் இது தெட்டத் தெளிவு.

விடயம் இதோடு முடியவில்லை. பரணவித்தானா மேலும் கூறுகின்றார்- "ஞாபகம் இருக்கலாம். பெல் அரை நூற்றாண்டுக்கு முன்னர் இந்த மண்மேடு தக்கின விகாரையின் அழிபாடுகளை மறைக்கின்றதேயொழிய பொதுவாக நம்பப்படுவது போன்று எல்லாளனின் கல்லறையை அல்ல என்ற கருத்தை வெளியிட்டார். தனது கருத்தை அரண் செய்ய பெல் தனது (1898-ம் ஆண்டு) அறிக்கையில் முன்வைத்த காரணங்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை". முன்வைக்கப்படாத காரணங்களை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? இது பரணவித்தானாவின் கல்வெட்டு இடைவரி வாசிப்புப் போன்று மர்மமாக அல்லவா இருக்கிறது.

பொதுவாக நம்பப்படுவது போன்று இம் மண்மேடு எல்லாளனின் கல்லறையல்ல என பெல் ஒருபோதும் கூறவில்லை. அவரது அறிக்கைகளை துருவித் துருவி ஆராய்ந்தாலும் இக்கருத்தை நீங்கள் கண்டுபிடிக்கவே மாட்டீர்கள். பெல் எழுதிய 5 அறிக்கைகளிலும் இவ் இடத்தைப் பற்றி அவர் இரண்டே இரண்டு கருத்தைத்தான் வெளியிட்டார் என்பதை நான் திரும்பத் திரும்ப அழுத்த வேண்டியுள்ளது. முதலாவது கருத்து; "இம் மண்மேடு தக்கிண தூபியாய் இருக்கலாம்". இரண்டாவதாக எல்லாளனின் கல்லறை அதற்கு அண்மையில் அமைந்திருக்கும் என்பதாகும். தனக்கு முன் பதவியிலிருந்த பெல்லை வானளாவப் புகழ்வதில் பரணவித்தானா பரவசமடைகிறார். இந்தப் பாராட்டு நியாயம் என்பதில் ஐயமில்லை. ஆனால் வேடிக்கை என்னவெனில் பெல் கூறாதவற்றிற்கு தான் பாராட்டைப் பெறுகின்றார்.

மறுபுறம் இன்னொரு முன்னாள் தொல்பொருளியல் ஆணையாளராகிய A. M. கொக்காட் என்பவரின் குறிப்புகளை பரணவித்தானா அவ்வளவு சாதகமாக நோக்கவுமில்லை, பாராடவுமில்லை. எல்லாளனின் கல்லறை ஓர் தூபியாக கொள்ளப்பட்டலும் அக் கருத்துக்கும் எல்லளனை நினைவுகூர கட்டப்பட்ட நினைவுச் சின்னமே இது என்ற பொது நம்பிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக கருத வேண்டியதில்லை என கொக்காட் சுட்டிக்காட்டினார். இடக்கிடப்பியல் சார்ந்த தகவல்களை கொக்காட் படித்தறியவில்லை எனக் கூறி பரணவித்தானா அதை மறுத்துரைக்க விழைந்தார்.

தொல்பொருளியலில் பரணவித்தானாவின் ஆசானாக இருந்த கொக்காட்டை விடயம் அறியாதவர் என பழி கூறுவது மிக அவலமே. பரணவித்தானா சிறந்த அறிஞன் என்பதில் ஐயமில்லை. ஆராய்ச்சித் துறையில் முயற்சி மிக்கவராய் அவர் விளங்கினார். ஆனால் தன்னைப் பற்றியும் தனது நூதனமான ஊகங்கள் பற்றியும் அவர் அதீத தன்மதிப்பு உடையவராய் இருந்ததினால் கண்டனத்தையோ திருத்தத்தையோ அவர் ஏற்கத் தயாராக இல்லை. பெல்லையும் கொக்காட்டையும் தவிர்ந்த எமது முன்னாள் தொல்பொருளியல் ஆணையாளரில் இருவர் பரணவித்தானாவின் கருத்துக்கு மாறுபட்டனர். ஆனால் அவர்களுக்கு பதிலளிக்க பரணவித்தானா முயலவேயில்லை. ஏளனத்தோடு அவர்களை முற்றாகவே புறக்கணித்தார். இதனால் உண்மையான ஆய்வுத் துறைக்கு பங்கம் ஏற்படுகிறது.

சில்வாவின் அசைக்க முடியாத வாதங்கள்

தக்கின தூபியை பற்றி பரணவித்தானாவின் கருத்துக்களை அப்பொழுது உதவித் தொல்பொருளிய்ல் ஆணையாளராக இருந்த கலாநிதி R. S. D. சில்வா விமர்சிக்கத் துணிந்தவருள் ஒருவர். சில்வாவின் நீண்ட நுணுக்கமான ஆராய்ச்சி தன்மைமிக்க கட்டுரை 1957, பங்குனி 24-ம் திகதி "சிலோன் ஒப்சேவர்" (Ceylon Observer) ஞாயிறு பதிப்பில் வெளிவந்தது. ஒரு முழுப் பக்கத்தில் அமைந்த கட்டுரை "தக்கின தூபி - துட்டகைமுனுவின் கல்லறை அல்ல" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. பரணவித்தானாவின் அறிக்கைகளில் சம்பந்தப்பட்ட பகுதிகளை வரிக்கு வரி டீ. சில்வா ஆராய்ந்து பரணவித்தானாவின் முடிவகளை ஆணித்தரமாக மறுத்துரைத்தார். டி. சில்வா அவர்கள் தகைமை வாய்ந்த தொல்பொருளியலாளர். தொல்பொருளியலின் இரசாயன அம்சங்களில் அவர் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தவர். எனவே அவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்ட களிமண் கட்டிகளையே அவர் பரிசோதனைக்கு உட்படுத்தினார். சத்தர்மாலங்காரவிலும் வேறு நூல்களிலும் காணப்பட்ட மேற்கோள்களையும் ஆராய்ந்து பரணவித்தானா முன்வைத்த சான்றுகள் தக்கின தூபி துட்டகைமுனுவின் கல்லறை என்ற பரணவித்தானாவின் முடிவுக்கு அரண் செய்வதாக இல்லை என திட்டவட்டமாக கூறினார்.

டி. சில்வா ஒரு முக்கிய அம்சத்தினை வலியுறுத்தினார். எந்த ஒரு நூலிலாவது துட்டகைமுனுவின் சடலம் தகனம் செய்யப்பட்ட இடத்தில் தூபி ஒன்று கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கவில்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.