Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞரின் பேச்சு சரியா?

Featured Replies

"இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக அங்கு மோதலில் ஈடுபடும் இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கான விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய பல விடயங்கள் தமிழ்நாட்டின் சட்டசபையில் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த அநியாயங்கள் பற்றி பேசியவர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் பிழையான ஒரு வரலாற்றுத் தகவல் அவைக் குறிப்பில் பதியப்பட்டு விட்டது. அதற்கு காரணம், அதைக் கூறியது தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

"இந்தியா தலையிட்டு இரண்டு பிரிவினரையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர வேண்டும்" என்ற தீர்மானத்தை கொண்டு வந்த கலைஞர் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் போகிற போக்கில் அவர் சொல்லி விட்டு போயிருக்கும் சில வார்த்தைகள் ஈழத் தமிழர்களை புண்படுத்தி விட்டன என்பதுதான் இங்கே வருந்தத்தக்க விடயம்.

அவர் சொன்னது இதுதான். "ஒரு குழுவாக அவர்கள் இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளை போல விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது. இன்று அவர்களுக்கு பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கிறது. இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் மோதும் போக்கை கடைப்பிடித்தது. தலைவர்கள் கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள்.

அங்கு ம.பொ.சி. போன்று இருந்த அமிர்தலிங்கம் கொல்லப்பட வேண்டியவரா? விருந்துக்கு அழைக்கப்பட்டு சிற்றூண்டி வழங்கி தேனீர் எடுத்து வர அவரது மனைவி மங்கையற்கரசி சென்று வருவதற்குள் கணவரும் உடனிருந்த தோழர்களும் பிணமாக கிடந்தார்கள். போராளிகளே அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு போராட்டத்தை பலவீனமாக்கி விட்டார்கள்"

இதுதான் கலைஞர் சொன்னது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

நேபாளத்தில் நடந்தது அங்கே உள்ள அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம். ஒரு நாட்டுக்குள்ளேயே நடந்த பிரச்சனை அது. இலங்கைத் தீவில் நடப்பது ஒரு தேசிய இனம் தன்னை அடக்குகின்ற ஒரு நாட்டிடம் இருந்து விடுதலையாகும் போராட்டம். இது இரண்டு நாடுகளுக்கு (தமிழீழம், சிறிலங்கா) இடையிலான போராட்டம். இரண்டு தேசிய இனங்களுக்கு (தமிழர், சிங்களர்) இடையிலான போராட்டம்.

ஒரு தேசிய இனம் இன்னொரு நாட்டிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு போராடுகின்ற போது, பல குழுக்களாக போராடி வெற்றி பெற முடியாது. அப்படி வெற்றி பெற்ற வரலாறும் உலகத்தில் வெகு வெகு குறைவு. அந்த வெற்றிகளும் தற்காலிகமான வெற்றிகளாக போனதையும் வரலாறு எமக்கு சொல்லித் தந்திருக்கிறது.

நேபாளத்தைப் போன்று ஒரு நாட்டுக்குள்ளேயே ஆட்சி மற்றும் அரசு மாற்றத்திற்கு போராடுகின்ற மக்கள் எத்தனை ஆயிரம் குழுக்களாக வேண்டுமென்றாலும் போராட முடியும். ஆனால் ஒரு பெரும்பான்மை இனத்திடம் இருந்து விடுதலை பெறப் போராடும் ஒரு இனம் அப்படிப் போராட முடியாது. நேபாளத்தை ஈழத்துடன் ஒப்பிடுவது மிகத் தவறான ஒன்று.

போராளிக் குழுக்களுக்குள் நடந்த மோதல்கள் போராட்டத்தைப் பலவீனப்படுத்தி விட்டன என்றும் கலைஞர் சொல்கிறார். இதை அவர் அன்றும் சொன்னார், இன்றும் சொல்கிறார். இப்படி ஒரு கருத்து உண்மையிலேயே அவருடைய மனதில் ஆழப் பதிந்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

ஆனால் இங்கே ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இந்திராகாந்தியின் பிரத்தியேகச் செயலாளராக இருந்தவர் இந்திராகாந்தி குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறார். இந்திராகாந்தி விடுதலைப் புலிகள் குறித்து கொண்டிருந்த கருத்து அந்த நூலில் கூறப்படுகிறது. 'ஏனைய தமிழ்ப் போராளிக் குழுக்களையும் விட, தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க உறுப்பினர்கள் தனித்துவமாகவும், கொள்கைப் பிடிப்பு உடையவர்களாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளார்கள். எதிர்காலத்தில், இந்தியாவின் அழுத்தத்திற்கு, விடுதலைப் புலிகள் பணிய மாட்டார்கள். ஏனென்றால் விடுதலைப் புலிகள் இயக்;கம், தன்னுடைய இலட்சியத்தில் உறுதி கொண்ட ஓர் இயக்கமாக வளர்ந்து வருகின்றது. அவர்களின் வளர்ச்சியை நாம் தடுக்க வேண்டும்." இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கருத்து இங்கே இந்திராகாந்தியின் கருத்தாக வெளிப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கோடு பல போராளிக் குழுக்களை அன்றைக்கு உருவாக்கிது இந்தியாதான். அந்தப் போராளிக் குழுக்களை விடுதலைப் புலிகளோடு மோதுவதற்கு தூண்டியதும் இந்தியாதான். கலைஞரும் அன்றைக்கு ரெலோ இயக்கத்திற்கு ஆதரவாக நின்று போராளிக் குழுக்களின் மோதல்களுக்கு ஏதோ ஒரு வகையில் துணை போனார் என்பதும் வரலாற்றில் உள்ள ஒரு செய்தி.

இந்தியாவின் திட்டப்படி பல போராளிக் குழக்கள் வளர்ச்சி பெற்று, விடுதலைப் புலிகளை இல்லாது ஒழித்து, கடைசியில் இந்தியா காட்டுகின்ற இடத்தில் கையெழுத்தைப் போட்டு விட்டு, அப்படியே தமிழீழ விடுதலைப் போராட்டமும் முடிவுறுவதானது கலைஞரின் விருப்பமாக இருக்காது என்று நாம் நம்புகிறோம். தமிழீழ போராட்டத்தை திசைதிருப்பிய மற்றைய போராளிக் குழுக்களை விடுதலைப் புலிகள் அடக்கி வைத்ததாற்தான் தமிழீழப் போராட்டம் இன்று வரை தக்க வைக்கப்பட்டு முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கலைஞர் இன்னும் ஒரு குற்றச்சாட்டையும் சொல்லியிருக்கிறார். அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது பற்றிய விடயத்தை பேசியிருக்கிறார். தற்பொழுது இதற்கு என்ன அவசியம் வந்தது என்று தெரியவில்லை. தமிழ்செல்வனிற்கு அழுத என்னுடைய மனம் அமிர்தலிங்கத்திற்கும் அழுகிறது என்ற செய்தியை சொல்லி தன்னை நடுநிலையாளராக காட்ட கலைஞர் முனைகிறார் என்பது புரிகிறது.

அமிர்தலிங்கத்திற்காக யார் அழுகிறார்களோ இல்லையோ, தமிழீழ மக்கள் அழவில்லை என்பது இங்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம். மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு, இந்தியப் படையின் பாதுகாப்பு இருந்தும் தன் சொந்தத் தொகுதியில் போட்டியிடாது, மட்டக்களப்பில் போட்டியிட்டு, அங்கும் வெற்றி பெறாது, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர்தான் அமிர்தலிங்கம்.

இதை விட அமிர்தலிங்கம் கொலைக்குப் பின்னால் இந்திய உளவுத் துறையின் கரங்கள் இருக்கின்றன என்பதும் இங்கு கட்டாயம் சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம்.

தமிழீழ மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் துரோகம் புரிந்த பலரை விடுதலைப் புலிகள் தண்டித்துள்ளார்கள். அவைகளுக்கான உரிமைகோரல்களையும் விடுதலைப் புலிகள் செய்துள்ளார்கள். அதே போன்று சிங்களத் தலைவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கான பொறுப்பு விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்ட நேரங்களில் சிலவற்றை மறுத்து இருக்கிறார்கள். சிலவற்றை மறுக்காது மௌனமாகவும் இருந்திருக்கிறார்கள்.

ஆனால் உறுதியான முறையில் உத்தியோகபூர்வமாக மறுத்து விட்டு, பின்பு ஏற்றுக்கொண்ட ஒரு சம்பவமாக அமிர்தலிங்கம் மீதான தாக்குதல் அமைகிறது. முதலில் மறுப்பு, பின்பு உரிமை கோரல் என்று நடந்த இந்த குழப்பத்திற்கு ஒரு காரணம் இருக்கிறது.

தமிழீழ மக்களுக்கு செய்த துரோகத்தின் காரணமாக ஏறக்குறைய அனைத்துப் போரளிக் குழுக்களுமே அமிர்தலிங்கத்திற்கு மரண தண்டனை விதிப்பதாக அறிவித்திருந்தன. இது 80களின் தொடக்க காலத்தில் நடந்த ஒரு விடயம்.

1989ஆம் ஆண்டு ஜுலை 13ஆம் நாள் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அமிர்தலிங்கம் என்பவரையே மக்கள் ஏறக்குறைய மறந்து போயிருந்தார்கள். ஒரு செல்லாக்காசாகிப் போய் விட்ட அவரை தண்டிக்க வேண்டும் என்ற சிந்தனையும் விடுதலைப் புலிகளிடமும் இல்லாது போயிருந்தது. அப்பொழுது சிறிலங்காவின் பிரேமதாசா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கொழும்பில் நின்றனர்.

அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருக்குள் ஆச்சரியமும் குழப்பமும்தான் நிலவியது. இதை யார் செய்தார்கள், ஏன் செய்தார்கள் என்று அவர்களுக்கு புரியவில்லை. அப்பொழுது கொழும்பின் பிரபல அரசியல் ஆய்வாளராக இருந்து "ரீட்டா செபஸ்ரியான்" என்பவர் பேச்சுவார்த்தைக் குழுவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமிர்தலிங்கம் கொலை பற்றி கருத்து கேட்டார். எந்தக் கருத்தும் உடனடியாக சொல்ல முடியாத காரணத்தினால் அவரை நேரடியாக வரச் சொல்லி விட்டு, பேச்சுவார்த்தைக் குழவினர் ஆழ்ந்த யோசனையில் இருந்தனர்.

இதை விட இன்னும் ஒரு செய்தி பரவியது. தாக்குதலின் போது அமிர்தலிங்கம் வீட்டுக் சென்றிருந்த பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டு விட்டார் என்று வதந்தி சிலரால் பரப்பப்பட்டது. உடனடியாக பிரேமதாசா அப்பொழுது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேயரட்ணாவை பேச்சுவார்த்தைக் குழுவினர் இருந்த இடத்திற்கு அனுப்பினார். ரஞ்சன் விஜேயரட்ண பேச்சுவார்த்தைக் குழுவினரை சந்தித்து, அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தார்.

ஏற்கனவே இந்திய உளவுத்துறையால் வாங்கப்பட்டு விட்ட மாத்தையாவே அனைத்திற்கும் பின்னால் இருந்தார் என்பது பின்புதான் மெதுமெதுவாகத்தான் தெரிய வந்தது. விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா அரசுக்கும் நடந்த பேச்சுவார்த்தையை குழப்புவதற்காக மாத்தையாவின் ஆட்கள் மூலம் அமிர்தலிங்கத்தை இந்திய உளவுத் துறை கொலை செய்தது என்பதுதான் இங்கு அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

அமிர்தலிங்கத்தை கொலை செய்வதன் மூலம் இலங்கையில் பெரும் குழப்பம் தோன்றும், விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடையும் என்று இந்திய உளவுத் துறை கணக்குப் போட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது இலங்கைத்தீவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் இதைப் பற்றி பேசிய அளவிற்கு கூட யாரும் ஈழத்தில் பேசவில்லை. விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்தியப் படை ஈழத்தை விட்டு வெளியேற்றப்பட்டது.

ஆனால் தொடர்ந்தும் மாத்தையா மூலம் இந்திய உளவுத்துறை ஈழத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தன்னுடைய ஆட்களின் மூலம் பல அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் பற்றிய அதிருப்தி அலைகளை உருவாக்குவதற்கு மாத்தையா முயன்றார். ஒரு நேரத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மக்களை நேரடியாக திடீர் திடீர் என்று சந்தித்து கருத்துக் கேட்கின்ற நிலைமை உருவானது. மக்களும் தமது அதிருப்திகளை அப்பொழுது தெரிவித்திருந்தனர். கடைசியில் மாத்தையா தலைவராக இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியையே கலைக்கின்ற அளவிற்கு நிலைமை போனதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி மாத்தையாவின் மூலம் இந்திய உளவுத்துறை மேற்கொண்ட நாசகார சதி நடவடிக்கைகள் நிறைய உண்டு. இதன் ஆரம்பமாக அமிர்தலிங்கம் மீதான கொலை அமைந்தது. அப்பொழுது மாத்தையா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்ததனால் அவர் செய்த குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளே பொறுப்பேற்க வேண்டியும் வந்தது.

ஆகவே கலைஞர் தமிழீழப் போராட்டம் பற்றி கூறிய விடயங்கள் சரியானவை அல்ல. அவர் கூறிய விடயங்களுக்கு குற்றம் சாட்டப்பட வேண்டியது இந்திய அரசும் அதன் உளவுத்துறையும்தான். இனியாவது இந்திய அரசு முன்பு விட்ட தவறுகளை மீண்டும் செய்யாது இருக்க வேண்டும். அதற்கு கலைஞர் தன்னால் ஆனதை செய்வார் என்று நம்புவோம்.

அவர் சொன்னது இதுதான். "ஒரு குழுவாக அவர்கள் இருந்து போராடியிருந்தால் நேபாளம் போல வெற்றி பெற்று இருப்பார்கள். வேறு பல நாடுகளை போல விடுதலை பெற்றிருப்பார்கள். போராளிக் குழுக்களுக்குள்ளேயே நடந்த மோதல் காரணமாகத்தான் இந்த போராட்டம் பலவீனமாகி விட்டது. இன்று அவர்களுக்கு பரிந்துரை செய்து பேச வேண்டி இருக்கிறது. இலங்கையில் விடுதலை பெற சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்று போராளிகளுக்கு வேண்டுகோள் விடும் நிலைமை ஏற்பட்டது. ஒரு குழு இன்னொரு குழுவுடன் மோதும் போக்கை கடைப்பிடித்தது. தலைவர்கள் கொல்லப்பட்டார்கள், வெட்டப்பட்டார்கள், சுடப்பட்டார்கள்.

என்ன சபேசன்... கலைஞர் சொன்னதில என்ன பிழை இருக்கிது? நீங்கள் அவர் சொன்ன மெயின் பொயிட்டை விட்டுட்டு வேற எதையோ பற்றி பூராயம் கதைக்கிறீங்கள்.

Edited by முரளி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் சொன்னது நூற்றுக்கு நூறு சரியே.

கலைஞரின் பேச்சில்90% எமக்கு சாதகமாகவே இருக்கிறது, 10% விமரிசனம்மும் இருக்கிறது.

புலிகளும் 100% சரியாக நடக்கவில்லையே, அவர்கள் செயலிலும் 10% பிழைகள் இருக்கத்தானே செய்கிறது.

கலைஞர் தமிழ் நாட்டின் பிரதிநிதி எனும் வகையில் அவருக்கு இதை சொல்லும் உரிமை இருப்பதாகவே தெரிகிறது.

எதிரிகளை நாம் வெல்வதற்க்கு எதிரிகளை விட பலமான நண்பர்கள் எமக்குத்தேவை.

கலைஞர் நண்பர் மட்டுமல்ல சகோதரர்.

கலைஞரும் அப்படியே விட்டு விடாமல் ஒரு நியாயமான நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.

பிரெஞ்சு காரர்களின் பலம் இருந்ததால்தான் இங்கிலாந்திடம் இருந்து அமேரிக்கா சுதந்திரம் அடைய முடிந்தது.

நாமும் நல்ல விவேகிகளாக, ராஜதந்திரிகளாக இருக்க வேண்டிய காலம் இது.

நம்மால் முடியுமா? கொஞ்சம் நெகிழ்வுதன்மையும், ஆயுத்தத்தால் அனைத்தையும் செய்யலாம் என நம்பும் போக்கும் இல்லாமல் இருந்தால் எம்மாலும் முடியும்.

அப்படி நடந்தால்,

தலைவரினது,ம் இயக்கத்தினதும் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக அது இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் சபேசனுக்கு,

நீங்கள் சொல்வது போல உண்மையிலேயெ அமிர்தலிங்கம் (ராஜீவ்?) போன்ற தவறுகள் தலைவரின் அனுமதியின்றி, அவருக்கு தெரியாமல் சொல்லப் போனால் அவருக்கு எதிராக மாத்தையாவால் நடத்தப் பட்ட சதி என்றால்; அதை உலகத்துக்கு தெளிவாக்குவது இயக்க்கத்தின் தலையாய கடமை.

மாத்தையா என்ன செய்தாரோ தெரியாது, ஆனால் புலிகளின் இயக்கத்தின் பிரதி தலைவராக அவர் செய்தவற்றிக்கு புலிகளே பொறுப்பு, அதை அவர்கள் தெளிவாக மறுக்கும் வரை.

அமிர் கொல்லப்பட்டது 1989ல்......மத்தையா பிடி பட்டது 1993ல். இந்த இடைப்பட்ட காலத்தில் தன் உறுப்பினர்கள், தமக்கு தெரியாமலே அமிரை ஏன் கொன்றார்கள் என புலி ஆராயவில்லையே.

உண்மையிலே அமிரை, விசு எனும் இயக்கத்தின் உத்தரவுக்கு அடிபணிந்து நடந்த ஒரு உண்மையான போராளி, மாத்தையாவின் தனிப்பட்ட உத்தரவிம் பேரில்தான் சுட்டார் என்றால், 89 லேயே மாத்தையாவின் குட்டு வெளித்து இருக்குமே?

நீங்கள் சொல்வதை போல ஒரு காரணத்தைதான் மதிப்புக்குரிய சிவநாயகம் ஐயாவும் ராஜீவ் விவகாரத்தில் சொல்லுகிறார். அதாவது மாத்தையாவிம் உத்தரவில் புலிக்கு தெரியாமல் அது நடந்ததாம்.

இதுவே உண்மை என்றால், இந்திய இலங்கை மக்களுக்கும், அமிர், ராஜீவ் குடும்பத்துக்கும் இது சம்பந்தமாக புலி ஒரு விளக்கம் கொடுக்க வேண்டாமா?

Edited by me_tamilan

  • தொடங்கியவர்

ஒன்று உங்களுக்கு கலைஞரின் பேச்சு புரியவில்லை அல்லது நேபாளம் பற்றி தெரியவில்லை.

கலைஞர் "ஒரு குழுவாக போராடியிருந்தால் விரைவாக வெற்றி பெற்றிருப்பார்கள்" என்று மட்டும் சொல்லியிருந்தால், அதை ஏற்றுக் கொள்ளலாம்.

அவர் நேபாளத்தை உதாரணம் எடுத்ததுதான் இங்கே பிரச்சனை.

நேபாளத்தில் ஒரு குழு போராடவில்லை. கலைஞருக்கு இது நன்கு தெரியும் என்று நம்புகிறேன். நேபாளத்தில் 7 கட்சிகள் போராட்டம் நடத்தின. அத்துடன் நேபாள மவோசிய இயக்கமும் போராடியது. ஆயுத இயக்கமாகிய மாவோசிய இயக்கமும் வேறொரு இடதுசாரி இயக்கத்தில் இருந்து பிரிந்த ஒரு அமைப்புத்தான். இதை விட 7 கட்சிகளுக்குள்ளும் நிறைய முரண்பாடுகள் இருந்தன. ஆனால் அவைகள் தங்களுக்குள் மோதாமல் ஒரு கூட்டமைப்பு உருவாக்கி அரசை எதிர்த்துப் போராடியதால், அங்கு தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருந்தும் இன்னும் பல பிரச்சனைகள் அங்கே இருக்கின்றன.

கலைஞர் என்ன சொல்கிறார் என்றால், ஈழத் தமிழ் போராளிக் குழுக்களும் ஒருவருடன் ஒருவர் மோதாமல் தொடர்ந்து போராடி இருந்தால் வெற்றி பெற்றிருப்பார்களாம். ஆனால்அவர்களுக்குள் மோதியதால் இன்றைக்கு அவர்களுக்காக பரிதாபப்பட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை வந்து விட்டதாம்.

எமது போராட்டம் சந்தித்த சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வேறொரு இனமோ, அல்லது வேறொரு இயக்கமோ இத்தனை சவால்களை சந்தித்திருந்தால், என்றைக்கோ எதிரியிடம் சரணடைந்திருப்பார்கள்.

ஆனால் இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் எமது போராட்டம் முழு வீச்சோடு முன்னகர்கிறது.

இந்தச் சவால்களில் பெரும் சவாலே இந்தியா செய்கின்ற இடையூறுகள்தான்.

உண்மை நிலை இப்படியிருக்க, நாம் ஏதோ போராடி களைத்துப் போய் தற்பொழுது கெஞ்சுகின்ற நிலைக்கு வந்து விட்டது போலவும், இந்த நிலைக்கு நாம்தான் காரணம் என்பது போலவும் கலைஞர் பேசுகிறார்.

கலைஞர் சொல்வது போன்று ஒரு குழுவாக போராட வேண்டும் என்றுதான், விடுதலைப் புலிகளும் போராட்டத்தை திசை திருப்பிய மற்றைய குழுக்களை அடக்கி வைத்தார்கள்.

போராளிக் குழுக்களுக்கு மோதல்களை தாம்தான் தூண்டினோம் என்பதை இந்தியாவின் பல்வேறு தரப்பினர் பல முறை ஒப்புக் கொண்டு விட்டார்கள். போராளிக் குழுக்களுக்குள் நடந்த மோதல்களுக்கு காரணமானவர்களை கலைஞர் கண்டிப்பதுதான் சரியாக இருக்கும்.

அடுத்தது அமிர்தலிங்கம் கொலை பற்றிய கேள்விக்கு வருகிறேன். நான் அமிர்தலிங்கம் கொலை பற்றி எழுதியிருப்பதை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். அதில் கொலை நடந்த பிறகு நடந்த இரண்டு சம்பவங்கள் சொல்லியிருக்கிறேன். இவைகளையும் படித்து விட்டு நுண்மாண்நுழைபுலம் கொண்டு சிந்தியுங்கள். சிந்தித்தால் செய்தியில் உள்ள உண்மைத் தன்மை புரியும்.

ஏன் விடுதலைப் புலிகள் இவைகளை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று கேட்கிறீர்கள். விடுதலைப் புலிகள் இவைகளை சொல்வதில் உள்ள சங்கடங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆயினும் நேரம் வரும்போது இவைகளை சொல்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.