Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவரும் போற்றும் சிறுத்தை பிரிகேடியர் பால்ராஜ்..!

Featured Replies

வாரமொரு சிந்தனைத் தொடர் இல. 241

May 30, 2008

சிங்களவரும் போற்றும் சிறுத்தை பிரிகேடியர் பால்ராஜ் !

balraj-flash310508.jpg

பிரிகேடியர் பால்ராஜ் என்றும் வீர வேங்கை காற்றோடு காற்றாகி ஒரு வாரம் ஓடிவிட்டது. நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமை மிக்கது என்று போற்றப்படும் உலகு அந்த வீரனின் நினைவுகளை தன் உடலில் பச்சை குத்திக்கொண்டு மாற்றமின்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. அத்தோடு மனிதர்கள் வடித்த கண்ணீர், கவலை, கவிதை, வீர அஞ்சலிகள் என்று பெற வேண்டிய மரியாதைகள் யாவும் பெற்று அந்த வீரன் போகாமல் போனதையும் நாம் பார்த்துவிட்டோம். இப்போது மனதில் மலையாக உயர்வு பெற்று நிற்கும் வீரன் பிரிகேடியர் பால்ராஜ் நினைவலைகள் மனத்திரையில் ஓடை நீராய் சலசலத்து ஓடுகிறது.

ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனின் மரணமும் வேறு வேறானது. அவனுடைய வாழ்க்கையை ஆழ்ந்த அறிவோடு, சரியான கோணத்தில் எடுத்துரைப்பதுதான் விடுதலைப் போராட்டத்திற்கு வீறு கொடுக்கும் செயலாகும். ஏனென்றால் விடுதலை என்பது புத்துணர்ச்சி கொண்டது, அதன் ஒவ்வொரு கணமும் புதுமையானது. அதை புதிய கோணத்தில் எடுத்துரைக்க வேண்டும், தினமும் தினமும் அந்தப் புதுமை நம்மிடையே பூத்துக் குலுங்க வேண்டும். எந்தப் போராட்டமாக இருந்தாலும் அப்போராட்டம்பற்றிய உரைகளும், கவிதைகளும் நீர்த்துப் போய் ஒரேமாதிரியாக இருந்தால் அவை விடுதலைப் போராளியின் சிறப்பையும் அப்படைப்புக்கள் போலவே நீர்த்துப் போக வைத்துவிடும் என்று ஐரோப்பிய போராட்ட வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவைபற்றி இனியும் நாம் சிந்திக்காவிட்டால் நமது வீரம் செறிந்த வாழ்வை உலகத்தரமான இலக்கியமாக்க முடியாது என்பதை முன்னரே பலர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

பிரிகேடியர் பால்ராஜ் சிறந்த போர்முனைத் தளபதி, அவனுடைய தலைமையில் படைகள் வந்தால் எதிரிகளே நடுங்குவார்கள். கடினமான போர்க்களங்களை எல்லாம் குறைந்தளவு படைகளுடன் சென்று வெற்றிவாகை சூடியவர் அவர் என்பதை அதிகமாக எல்லோரும் ஒரே குரலில் கூறிவிட்டார்கள். ஆனால் பால்ராஜின் சாதனையை இலங்கை வரலாற்றோடு யாரும் ஒப்பிட்டு அடையாளம் காணவில்லை என்பதால் இக்கட்டுரை அதற்கான தேடலில் நகர்கிறது.

இலங்கைத் தீவின் வரலாறு என்பது மன்னர்களுடையது என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் கூட, கூர்ந்து கவனித்துப் பார்த்தால் கடந்த பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றை போரினாலேயே நகர்த்தியிருப்பவர்கள் இலங்கைத் தீவில் ஆயுதமேந்திப் போராடிய தளபதிகளே. மேலும் சிங்கள மன்னர்களுடைய பெரிய வெற்றிகளுக்கு பின்னணியில் நின்றவர்கள் தமிழ்த்தளபதிகளே என்பது பலருக்குத் தெரியாது. சிங்கள அரசன் முதலாம் பராக்கிரமபாகு பர்மாவிற்கு படையனுப்பி அந்நாட்டு அரசன் அலவுங்குசித்தை வெற்றி கொண்டபோது அந்தப் படை நடாத்தலுக்கு தலைமை தாங்கியவர்கள் தமிழ் தளபதிகளே. மறுபுறம் அதே பராக்கிரமபாகு தமிழகத்திற்கு படையெடுத்தபோது தமிழ் தளபதிகள் அதற்கு இணங்க மறுத்ததையும் தமிழக மக்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

இவை மட்டுமல்லாமல் இலங்கையில் சிங்கள அரசர்கள் பெற்ற எத்தனையோ பெரிய போர்களுக்கு தமிழ் தளபதிகள் தலைமை தாங்கியிருக்கிறார்கள். ஆனால் எந்தவொரு தளபதியும் தமிழருக்கு துரோகம் செய்து சிங்களவருக்கு சேவையாற்றிய துரோகச் செயலைச் செய்ததாக பண்டைய வரலாறுகளில் கூறப்படவில்லை. இது மிக முக்கியமான விடயமாகும்.

இலங்கையின் கடைசி அரசனான சிறீவிக்கிரமராஜசிங்கள் ஒரு தமிழனே. இவன் சிங்களத் தளபதி பிலிமத்தலாவையின் குழந்தையை துண்டு துண்டாக வெட்டி உரலில் போட்டு இடித்த கதை அனைவரும் அறிந்ததே. அதேபோல கண்டியில் நடைபெற்ற போர்களில் தளபதிகளின் உடல்களை தோலுரித்து, இரத்தம் சீறிப்பாய வீதி வீதிவீதியாக கொண்டு சென்றவர்கள் ஆங்கிலேயர். தளபதிகளை வெல்வதே வெற்றிக்கு வழி கோலும் என்ற கதையை சிங்களப் பாணியிலேயே ஆங்கிலேயரும் கைக்கொண்டே கண்டியை வென்றனர்.

சிங்கள மக்கள் தமது வரலாற்றில் மன்னர்களை விட தளபதிகளுக்கே அதிக முக்கியம் கொடுக்கும் இயல்புடையவர் என்பதற்கு இவை சிறந்த உதாரணங்கள். தமிழ் தளபதிகள் சிங்களவரை வென்று அனுராதபுரத்தில் இருந்து விரட்டியடித்து தம்பேதெனிய, குருநாகலை, தம்புள்ளை போன்ற இடங்களுக்கு பின்வாங்கச் செய்தபோது அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள் தமிழ் மன்னர்கள் அல்ல தமிழ் தளபதிகளே.

அதனால்தான் சிங்கள அரசியல் தலைவர்களை விட, சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் தளபதிகள் முக்கியமான பாத்திரங்களாக இருந்து வருகிறார்கள். இது தற்செயலானதல்ல இதுதான் சிங்கள வரலாற்று மனம். சரத்பொன்சேகா, காலஞ்சென்ற கொப்பேகடுவ போன்றவர்கள் சிங்களத் தளபதிகளாக இருந்தாலும், அவர்கள் பெறாத புகழை எல்லாம் சிங்கள மக்கள் மத்தியில் பெற்றிருப்பவர்கள் விடுதலைப் புலிகளின் தளபதிகளே. இதுபற்றி நம்மிடையே யாரும் பேசுவதோ எழுதுவதோ இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன என்ற கோணத்தில் நம்மிடம் பார்வை இல்லை என்ற உண்மைக்கு இது ஓர் உதாரணம்.

நமது தமிழ் தளபதிகளின் வீரமென்ன என்பதற்கான உரைகல்லும் நமது மடியிலேயே இருப்பது நமக்கு மகிழ்வுதரும் என்பதும் உண்மையே. இருப்பினும் எதிரிகள் என்ன கூறுகிறார்கள் என்று ஆராய்ந்து பார்ப்பதும் முக்கியமான விடயமே.

இலங்கைத் தீவில் கடந்த காலங்களில் தமிழ் தளபதிகள் என்ன செய்தார்கள், அவர்களுடைய போர்த்தந்திரம் எப்படியானது என்பதை புத்தபிக்குகள் இன்றுவரை மறக்கவில்லை. அவர்களுடைய மதப் பிரச்சாரம் புத்தர் சொன்ன ஜாதக் கதைகளைவிட கூடுதல் பட்சம் தமிழரின் போர்கள் பற்றியதாகவே உள்ளது. பாஞ்சாலைகளில் அவர்கள் நடாத்தும் போதனைகளின் ஜீவ நாடியே தமிழ் தளபதிகளால் தமது இனத்திற்கு உருவாகிய ஆபத்து குறித்ததாகவே இருந்து வருகிறது.

சிங்களப் பகுதிகளில் ஒவ்வொரு இடத்திலும் புத்தபிக்குகளின் போதனைக்காக கூடாரங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்தக் கூடாரங்களில் இருந்து நடாத்தப்படும் பிரச்சாரங்கள் போல உலகின் வேறெந்த மதங்களுமே பிரச்சாரம் செய்ய முடியாது. யாழ்ப்பாண இராட்சியம் எழுச்சி பெற்றிருந்தபோது குருநாகல் தம்புள்ளைவரை சிங்கள மக்களை விரட்டியடித்த தமிழர்களுக்கு ஒரு நாடு வந்தால் நாம் காலிக்கு சென்று கடலில் விழுந்து சாகவேண்டியதுதான் என்று பிக்குகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்தக் காலத்து தமிழ் தளபதிகள் பாணந்துறைவரை சென்று சிங்களவரிடமிருந்து வரி வசூலித்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் மறக்கவில்லை.

இத்தகைய வரலாற்றை மறக்காத பிரச்சாரங்களால் அஞ்சிக்கிடக்கும் சிங்களப் பாமர மக்களுக்கு விடுதலைப்புலிகளின் தளபதிகள் பெரும் அச்சமூட்டும் வீரர்களாகவே இருந்து வருவது வியப்பான ஒன்றல்ல. சிங்களக் கிராமங்களின் சாதாரண தேநீர்க்கடைகளில் நின்று கேட்டுப்பாருங்கள். அவர்கள் விடுதலைப்புலிகளின் அத்தனை தளபதிகளின் பெயர்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் விரல் நுனியில் பாடம் பண்ணி வைத்திருப்பதைக் காண்பீர்கள்.

தமிழ் மக்கள் ஒரு சரத்பொன்சேகாவைப் பார்ப்பதைப் போல சிங்கள மக்கள் தமிழ் தளபதிகளை பார்க்கவில்லை என்பது முக்கிய விடயமாகும். பிரபாகரனைப் போல ஒரு தலைவர், அவருடைய தளபதிகள் போல தளபதிகள் தமக்கும் வாய்க்கவில்லையே என்றும், அப்படி வாய்த்திருந்தால் இந்தநாடு எவ்வளவோ பலம் பெற்றிருக்க முடியுமே என்ற ஆதங்கம் சாதாரண சிங்களக் குடிமக்களுக்கு இருக்கிறது.

சமாதான காலத்தில் சாதாரண சிங்களக் கிராமங்களுக்கு சென்று போராட்டம் பற்றி சிங்கள மக்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்று விசாரித்தபோது அவர்கள் கூறிய பல கருத்துக்கள் ஆச்சரியம் தந்தன. பிரிகேடியர் பால்ராஜ் நடாத்திய போர்க்களங்கள் அவருடைய திறமைகள் யாவற்றையும் அவர்கள் ஆச்சரியத்துடன் ஆங்காங்கு தமக்குள் பேசி வருவதைக் காண முடிந்தது. பால்ராஜ்ஜின் படைகள் வந்தால் சிங்கள நாடே பறிபோய்விடுமென்ற அளவுக்கு அவருடைய வீரத்தின் மீது அவர்களுக்கு பிரமிப்பு இருந்தது. இதுதான் பால்ராஜ் எதிரிகளிடமிருந்து பெற்ற வீரத்தின் முத்திரையாகும்.

தம்புள்ளவில் ஒரு யானைப்பாகனுடன் பேசிப் பார்த்தேன். அவன் உலகம் அறியாத சாதாரண குடிமகன் ஆனால் பால்ராஜ் பற்றி அவன் நன்கு தெரிந்து வைத்திருந்தான். அவருடைய சிறப்புக்களை சொன்னால் அருகில் நிற்கும் சிங்களப் போலீஸ்காரனுக்கு பிடிக்காது என்று கண்களை அசைத்தபடியே பால்ராஜின் சிறப்புக்களை அந்த யானைப்பாகன் கூறினான். பால்ராஜ் அரசாங்கம் போல வசதிகள் படைத்த படையணியைக் கொண்டவரல்ல. வசதிகள் இல்லாத நிலையில் கூட இவ்வளவு சிறப்பாக போரை நடாத்துகிறார் என்பது நினைக்க முடியாத சாதனை என்றும் தெரிவித்தான்.

எல்லாளன் படைத்தளபதியாக இருந்து இலங்கையை 44 வருடங்கள் ஆட்சி செய்தபோது புத்த பிக்குகளுக்கு பெரும் உதவிகள் செய்தான் என்று மகாவிகாரைப் பிக்குகள் எழுதியுள்ளார்கள். போரில் எல்லாளன் மடிந்தபோது அவனுக்காக சமாதி கட்டி, அந்த வழியால் போவோர் வருவோர் அனைவரும் அதற்கு மரியாதை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டவன் துட்டகைமுனு. இன்றும் எல்லாளன் சமாதி முன்னால் வாத்தியங்கள் இசைத்தபடி போக சிங்கள மக்களுக்கு அனுமதி கிடையாது.

அன்றய எல்லாளன் போலவே சிங்களப் பொது மக்களாலும் பாராட்டப்பட்ட தளபதிதான் பிரிகேடியர் பால்ராஜ். சிங்களப் படைகள் பால்ராஜ் வருகிறார் என்றதுமே பயப்படுகிறார்கள் என்றால் முழு சிங்கள இராணுவக் கட்டமைவுக்குள்ளும் அவருடைய திறமையின் ஊடுருவல் எப்படி பாய்ந்திருக்கிறது என்பது இன்னொரு பக்கப் பார்வையாக இருக்கிறது.

பால்ரராஜ் என்ற வீரனின் வரலாற்றை நாம் தமிழீழ விடுதலைப் போராட்ட எல்லைக்குள் மட்டுமே பார்த்து மகிழக்கூடாது. தென்னாசியப் பிராந்தியத்திலேயே அவர் பெரும் தளபதி என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். உலகத்தின் பெரும் போர்க்களங்களுக்கெல்லாம் அவரை அனுப்பியிருந்தால் எத்தனையோ போர்களை பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவு செய்திருப்பார்.

இத்தனை திறமைகள் பால்ராஜிற்கு எங்கிருந்து வந்தது என்பது முக்கிய கேள்வி. எல்லோருக்கும் எல்லாச் சிறப்பும் வந்து வாய்க்காது. பால்ராஜிற்கு வாய்த்தது போர்தான். கல்கியின் கதையில் உடம்பில் 64 காயங்கள் பெற்ற பெரிய பழுவேட்டையர் போல பால்ராஜ் பெற்ற பதக்கங்கள் அவர் தாங்கிய விழுப்புண்கள்தான். இன்று சிங்கள அரசு கூட பிரிகேடியர் பால்ராஜ் மரணத்தை மௌனமாகவே பார்த்திருக்கிறது.

ஆயிரம் வருடங்களுக்கு ஒரு தடவை மகாகவி தோன்றுவான் என்பார்கள். அதுபோல ஆசியாக் கண்டத்தி;ல் தோன்றிய பெரும் போர்வாள் பிரிகேடியர் பால்ராஜ் என்பது மறுக்க முடியாத உண்மை.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்,

அதுவரை நம்பிக்கைகளுடன்,

கி.செ.துரை 31.05.2008

http://www.alaikal.com/news/?p=4246

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.