Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராக்கப்பட்டதற்கான தகுதிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராக்கப்பட்டதற்கான தகுதிகள்!

கிழக்கு மாகாண அரசின் முதலமைச்சராகத் தயாரிக்கப்பட்டுள்ள பிள்ளையான் கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை அரசின் படைப் பிரிவினருடன் கூட்டுச் சேர்ந்தும் தனியாகவும் பலதரப்பட்ட கொலைகளையும், கொள்ளைகளையும் நடத்தியுள்ளார். இவர் படுகொலை செய்தது அனைவருமே ஏறக்குறைய வட மகாணத்தைச் சேர்ந்த தமிழர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வர்த்தகர்கள், சமூகசேவகர்கள் மற்றும் ஒரு சிங்கள வர்த்தகருமாவார்.

ஆரம்பத்தில் கருணாவின் உத்தரவுகளை மட்டும் செயற்படுத்தி வந்த பிள்ளையான் பின்நாளில் தானே முடிவெடுத்தும் சிங்கள உளவுத்துறையின் உத்தரவுகளையும் ஏற்று கொலை கொள்ளைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். கெந்த விதாரண என்ற சிங்கள உளவுத்துறை அதிகாரியும், ஜனாதிபதி ராஜபக்சேயின் சகோதரரான பசில் ராஜபக்சேயும் பிள்iயானை வழி நடத்தியதில் பெரும் பங்கு வகித்துள்ளனர். தனது சகோதரனின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, நாடாளுமன்றம் வரவிருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொலை செய்யும்படி பசில் ராஜபக்சேயும், மகிந்த ராஜபக்சேயும் பிள்ளையானை அழைத்து நேரடியாகவே உத்தரவிட்டுள்னர்.

இலங்கை வரலாற்றில் இப்படி ஓர் ஆட்சியாளர் சிங்கள இனத்தில் ஆட்சிப் பீடம் ஏறியதில்லை. படு பிற்போக்குத் தனமானதும், கொடூரமானதும், பயங்கரவாதத்தையும் தாண்டிய கொடிய தந்திரக் கொடூரர்களாகத் திகழ்கின்றனர் ராஜபக்சேயும் அவரது சகோதரர்களும். மனித உரிமை என்பது இவர்களின் கால்களுக்குள் மிதிபட்டு நசுங்கிப் போய்விட்டது இலங்கையில்.

இதோ கிழக்கின் விடிவெள்ளி பிள்ளையானின் கொலைகளில் சிலவற்றைத் தருகிறோம்:

24-12-2005 அன்று நள்ளிரவில் மட்டக்களப்பு கிறித்துவ தேவாலயத்தில் வழிபாட்டுக்காக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தனது குடும்பத்துடன் வரவிருக்கிறார் என்ற தகவல் உளவுத்துறை மூலம் பிள்ளையானுக்கு எட்டியது. அப்போது புலிகளுக்கு அஞ்சி அவரது (பிள்ளையானின்) அன்றைய தலைவர் கருணா மறைந்து வாழ்ந்து வந்தார். தொலைபேசி வழியாக அவரிடத்து விடயததைச் சொன்னார் பிள்ளையான். கருணாவின் பாணியில் “போட்டுவிடு அவரை” என்ற உத்தரவு வந்தது.

ஊத்தரவு கிடைத்த மகிழ்ச்சியை பலரிடத்திலும் சொல்லி மகிழ்ந்தார் பிள்ளையான். அன்று பிள்ளையானின் உளவாளியாகச் செயற்பட்டு வந்த சித்தா மாஸ்ரரை அழைத்து இதனை நீதான் செய்து முடிக்க வேண்டும் என்றார். இராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்த பிள்ளையான் பரராஜசிங்கம் எம்.பி.யை சுட்டுக் கொல்வது பற்றி விவாதித்தார்.

நள்ளிரவு பூசை நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை பாதிரியாரின் உடையில் சென்று அவரைச் சுட வேண்டும் என்று அந்த உளவுத்துறை அதிகாரி தெரிவித்தார். உரிய நேரத்தில் அங்கி தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. நாளும் நேரமும் நெருங்கிவிட்டதால் சாதாரண உடையில் சென்று சுடுவது என்று தீர்மானித்தனர்.

ஒரு வானில் அதன் சாரதி, மேலும் இருவர் உட்பட சித்தா மாஸ்ரருடன் நால்வர் சென்றனர். ஏனைய இருவரும் இரண்டு கைத்துப்பாக்கிகள் வைத்திருந்தனர். இவர்களில் ஒருவர் சிங்கள வாலிபர் ஆவார். மங்களன்மாஸ்ரர் முகாமில் பல மாதங்களாக இருந்தவர் இந்த நபர். இவர் கெல உரிமைய இயக்கத்தைச் சேர்ந்தவர். பல சிங்கள பகுதியினூடாக பயணங்கள் செல்லும் போது, இவர் சிங்களத்தில் கதைத்து யார் மீதும் சந்தேகம் வராதபடி பார்த்துக்கொள்வார்.

மட்டக்களப்பு ரி.எம்.வி.பி. அலுவலகத்திலிருந்து வாகனத்தில் புறப்பட்டு தேவாலயத்தை அடைந்தனர். அப்போது ஆலயத்தில் பூசை ஆரம்பித்துக் கொண்டிருந்தது. பலத்தப் பாதுகாப்புடன் இருந்த அந்த இடத்தினுள் செல்லும் போது யாரும் தடுக்கவில்லை. இராணுவ உளவுத்துறை அதிகாரி அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

சித்தா மாஸ்ரரை பொதுமக்களில் யாரும் சந்தேகப்படவில்லை. நேராக ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.க்கு அருகாமையில் சென்று அவரைச் சுட்டுக்கொன்றார் சித்தா மாஸ்ரர். சித்தா மாஸ்ரருக்குத் துணையாக மேற்சொன்ன சிங்கள நபர் சென்றிருந்தார். சிலவேளை சித்தா மாஸ்ரரின் துப்பாக்கிச் சூட்டில் பரராஜசிங்கம் எம்.பி. சில வேளை தப்பினால், இந்த நபர் அவரைச் சுட்டுக்கொள்வார்.

வெளியே அதிக அளவு பாதுகாப்பு இருந்தும் யாரும் எதிர் தாக்குதல் நடத்தவில்லை. இராணுவ புலனாய்வு நபர் சரியான பாதுகாப்பினை சித்தா மாஸ்ரருக்கு வழங்கியிருந்தார். இதுவும் அல்லாமல் தேவாலயத்தின் எதிர்ப்புறத்திலிருந்த கட்டடம் ஒன்றின் மீதும் பிள்ளையானின் மூன்று நபர்களை ஏ.கே. ரக துப்பாக்கியுடன் நிறுத்தியிருந்தார். சித்தா மாஸ்ரர் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அவர்களைச் சுடுவதற்காக இந்த நபர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

சித்தா மாஸ்ரர், ஜோசப் பரராஜசிங்ம் எம்.பி.யைச் சுட்டுக் கொன்றுவிட்டு வாகனத்தில் ஏறி நேராக சிங்கபுர முகாமுக்கு சென்றார். சித்தா மாஸ்ரரைக் கட்டித் தழுவி வாழ்த்துச் சொன்னார் பிள்ளையான். கச்சிதமாகக் காரியத்தை முடித்ததற்காக சித்தா மாஸ்ரருக்கு ரூ. 50,000 ( ஐம்பதினாயிரம்) ரூபாவை அன்பளிப்பாகக் கொடுத்தார் பிள்ளையான். அத்துடன் விலையுயர்ந்த கையடக்க தொலைபேசி ஒன்றையும் பரிசாகக் கொடுத்து சந்தோசமாக இருக்கும்படி கூறினார்.

அத்துடன், ஏனைய மூவர் பக்கமும் திரும்பி, ஆளுக்கு 10,000 (பத்தாயிரம்) ரூபாவைக் கொடுத்து இரண்டு நாட்கள் ஓய்வெடுத்து மகிழ்ச்சியாக இருக்கும்படி கூறினார் பிள்ளையான்.

அடுத்து, ரி.ஆர்.ஓ. சமூக நிறுவனத்தைச் சேர்ந்த 13 பேர் கடத்தல்:

கருணா திடீரென செல் தொலைபேசியில் அழைத்து ரி.ஆர்.ஓ. நபர்கள் ஒரு வாகனத்தில் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கடத்தி வெலிகந்தைக்குக் கொண்டு வரவேண்டும் என்று பிள்ளையானுக்கு உத்தரவு போட, பதறியடித்துக் கொண்டு பிள்ளையான் இருந்த சிங்கபுர முகாமிலிருந்து வெலிகந்த முகாமுக்கு ஓடி வந்தார். பத்துக்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு வெலிகந்தை பாதைக்குச் சென்றார் பிள்ளையான்.

கருணாவின் ஏற்பாட்டினால், சில நிமிடங்களில் இராணுவப் புலனாய்வு நபர் ஒருவர் பிள்ளையானின் செல் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு, ரி.ஆர்.ஓ. நபர்கள் வரும் வாகனத்தின் இலக்கம் மற்றும் அவ்வாகனம் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலையும் தெரிவித்தார்.

பிள்ளையானின் உத்தரவை சிந்துஜன் என்பவர் நடைமுறைப்படுத்தினார். பிள்ளையானும் நேரடியாகச் சென்று அந்த ரி.ஆர்.ஓ. பணியாளர்கள் 13 பேரையும் கடத்திக்கொண்டு வெலிகந்த முகாமுக்குக் கொண்டு வந்தனர்.

இரண்டு நாட்கள் அவர்களை வைத்து விசாரித்தார் சிந்துஜன். கடத்தப்பட்ட 13 பேரில் 8 பேர் வடமாகணத்தைச் சேர்ந்தவர்கள். அந்த யாழ்ப்பாணிகளைச் சுட்டுக் கொல்லும்படி பிள்ளையான் உத்தரவிட்டார். எட்டுப் பேரது கண்களைக் கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்றார் சிந்துஜன். கொன்று விட்டு வந்ததும் பிள்ளையானிடம் அவர்களை எப்படிக் கொன்றேன் என்று விபரித்தார் சிந்துஜன். பெருமகிழ்ச்சியடைந்த பிள்ளையான் கையிலிருந்த செல் தொலைபேசியில் கருணாவைத் தொடர்புகொண்டு எட்டுப் பேரைப் போட்டாச்சு என்று கூறினார். மற்றதுகள் எல்லாம் மட்டக்களப்பு நாய்கள். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

மறுநாள் மீதமுள்ள 5 பேரில் நால்வரை விடுதலை செய்தனர். அவர்களில் அழகான பெண் ஒருவரை சித்தா மாஸ்ரர் தனியாக அழைத்துச் சென்றுவிட்டார். சில நாட்களில் சித்தா மாஸ்ரர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் இப்போதும் சித்தா மாஸ்ரருடன்தான் இருக்கிறார்.

அடுத்து, - திருகோணமலை கடற்படை உளவுப் பிரிவு கப்ரன் சுமித் என்பவருடன் பிள்ளையான் இணைந்து ஓர் விருந்து நடத்தினார். அந்த விருந்துக்கு முக்கிய அன்பளிப்பாக பிள்ளையான் ஓர் ஏற்பாடு செய்திருந்தார். விருந்தில் கலந்துகொண்ட கடற்படை புலனாய்வு அதிகாரிகள் அசந்து விட்டனர்.

சுமித் , சிசில் குமார, இரட்ணநாயக்கா ஆகியவர்கள் கலந்து கொண்ட விருந்தில் பிள்ளையான் அதிரடியாக இரவு ஒன்பது (09) மணியளவில் இரண்டு இளம் பெண்களை அவர்கள் முன் ஆஜர் படுத்தினார். அந்தப் பெண்களைக் கண்டதும் அதிகாரிகளின் முகங்கள் 1,500 வாட் மின்சார பல்புகள் போன்று பிரகாசித்தது. எதற்காக இவர்களை அழைத்து வந்துள்ளீர்கள் என்று கப்ரன் சுமித் கேட்டதற்கு ‘என்ஜோய்” என்று பிள்ளையான் கூற, அந்த நான்கு அதிகாரிகளாலும் அந்த இரு இளம்பெண்களின் கற்பு சூறையாடப்பட்டது.

ஆம், அங்கு அழைத்துவரப்பட்ட இளம் பெண்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள். திருகோணமலையில் குடியிருந்த அவர்களை பிள்ளையான் தனது நபர்களை அனுப்பிக் கடத்தி வந்திருந்தார். ஒரு பெண்ணின் பெயர் விஜி (வயது 22), அடுத்தப் பெண்ணின் பெயர் தெரியவில்லை (வயது 23) இருக்கும். சிங்கள அதிகாரிகளை மகிழ்விக்க யாழ்ப்பாணப் பெண்களைக் கடத்தி வந்து விருந்து படைத்தவர் இந்தப் பிள்ளையான்.

விருந்து முடிய நள்ளிரவுக்கு மேலானது. சிதைக்கப்பட்ட அந்தப் பெண்கள் இருவரையும் பிள்ளையானது நபர்கள் கந்தளாய் காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுவிட்டு உடல்களை காட்டுக் குளைகளால் மூடிவிட்டுச் சென்றனர்.

புலியாக வளர்ந்து ஓநாயாக மாறிய பிள்ளையானின் செயலை கண்டிப்பாக ராஜபக்சே பாராட்டித்தான் இருப்பார். சிங்கள புலனாய்வுத் துறையினரும் பிள்ளையானுக்குக் கண்டிப்பாக கடமைப்பட்ட நன்றியுணர்வுடன்தான் வாழ்நாள் முழுவதும் இருப்பர்.

அடுத்து, - 11-07-2007 ஆம் ஆண்டு ராஜபக்சேவுக்கு ஓர் சோதனைக் காலம் வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக் கோருவதுதான் அந்தச் சோதனை. இந்த சோதனைக்கு ராஜபக்சே நம்பியிருந்தது பிள்ளையானைத்தான் என்று சொன்னால் பலரும் நம்புவார்களா? நம்பினால் நம்புங்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது. அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்குச் சரியான ஆள் பிள்ளையான்தான் என்று புலனாய்வுத்துறை கெந்தவிதாரண கூற, பசில் ராஜபக்சே பிள்ளையானை அழைத்து அவரிடத்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ராஜபக்சேயிடம் நேராக அழைத்துச் சென்றார் பசில்.

ராஜபக்சே முக்கிய ஆலோசனை நடத்தினார் பிள்ளையானுடன். “நீங்கள் கேட்கும் உதவிகள் அனைத்தையும் எங்கள் புலனாய்வுத்துறையினர் செய்து கொடுப்பார்கள். ரி.என்.ஏ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது. அவர்களைக் கொன்றாவது நாடாளுமன்றத்துக்கு வருவதை நீங்கள் தடுத்தாக வேண்டும். வன்னிக்குள் மட்டுமே எங்களால் எந்த உதவியையும் செய்ய முடியாது. ஏனைய பிரதேசங்கள் அனைத்திலும் புலனாய்வுத்துறையினர் பக்கபலமாக இருப்பார்கள். உங்களை நம்பித்தான் எங்கள் அரசாங்கமே இருக்கிறது.” என்று கூறி பிள்ளையானின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு ராஜபக்சே கண்கள் கலங்க இந்த உதவியைச் செய்து தருமாறு மன்றாடினார்.

ஏந்தக் கொடுஞ் செயலுக்கும் அஞ்சாத பிள்ளையானின் கண்களிலும் நீர் நிரம்பியது. அந்த அளவுக்கு ராஜபக்சேயைப் பார்க்கும் போது பிள்ளையானுக்கு பரிதாபம் ஏற்பட்டது. எப்படியும் உங்களை வெற்றியடையச் செய்வேன் என்று ஆவேசத்துடன் உறுதி கூறிவிட்டு புறப்பட்டார் கிழக்குக்கு!

பிள்ளையான் தலைமை தாங்க வெள்ளை வானில் மேலும் ஐவருடன் மட்டக்களப்பு எம்.பி.க்கள் இருவரது இல்லங்களுக்குச் சென்றார். அங்கு அவர்கள் இல்லையென்றதும், அவர்களது உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று அங்கு இருந்தவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு நேராகக் கொழும்புக்குச் சென்றார். போகும் வழிகளில் எல்லாம் இவரது வாகனத்தைக் கண்டு இராணுவச் சிப்பாய்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். எம்.பி.க்களின் உறவினர்கள் ஒரு வானிலும், பிள்ளையான் வெள்ளை வானிலும், இன்னுமோர் வாகனம் பின்னாலுமாக மொத்தம் மூன்று வாகனங்கள் சென்றன.

எம்.பி.க்களின் உறவினர்களுக்கும் அரசின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பிள்ளையான் வரும்போது அங்கிருக்கும் காவல் அதிகாரிகள் விலகிச் சென்று விட வேண்டும் என்று உயர் உளவுத்துறை தகவல் அனுப்பியிருந்தது அந்தக் காவலர்களுக்கு.

கொழும்பு சென்றதும் சிங்கள இராணுவம் அவர்களைக் காவல் காத்தது. பிள்ளையான் எம்.பி.க்களது தொலை பேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் யாரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது. மீறிக் கலந்து கொண்டால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று மிரட்டினார்.

திருக்கோவில் எம்.பி. சந்திகாந்தன் தொலைபேசியில் அகப்படவில்லை. கோபம் வந்தது பிள்ளையானுக்கு. தனது நம்பிக்கைக்குரிய நபரான சீலனை அழைத்து மேலும் ஐந்துபேரை வானில் ஏற்றிக் கொண்டு சந்திரகாந்தன் வீட்டுக்குச் சென்று அவ்வீட்டில் இருப்பவர்களை மிரட்டும்படி உத்தரவிட்டார்.

அதன்படி சீலன் திருக்கோவிலிலிருக்கும் எம்.பி. சந்திரகாந்தனின் வீட்டுக்குச் சென்று அவரது தாயாரை மிரட்டினார். வாக்கெடுப்பில் கலந்து கொண்டால் குடும்பத்துடன் தொலைத்துவிடுவோம். வாக்கெடுப்புத் தினத்தில் அவர் கொழும்பில் தென்படக்கூடாது என்று மிரட்டிவிட்டு வந்தனர்.

அதே தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிள்ளையான். “நான் உங்களுக்கு வேண்டிய ஒருவர்தான் கதைக்கிறேன் ஐயா, நீங்கள் அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடாது, அதைச் சொல்லத்தான் போன் எடுத்தனான்.” என்றார்.

எதிர் முனையில் சம்பந்தர் எம்.பி. அதைச் சொல்ல நீர் யார் தம்பி? நான் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன் என்றதற்கு, அப்படியா! சரி, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி தொலை பேசியை வைத்துவிட்டார் பிள்ளையான்.

இந்தத் தகவல் பசில் ராஜபக்சேவுக்குச் சொல்லப்பட அவர் மூலம் மகிந்த ராஜபக்சேவுக்கு சென்றது செய்தி. அப்படியா சொன்னான் சம்பந்தன்! என்று கூறிய அடுத்தக்கணம் மகிந்த பிள்ளையானைத் தொடர்பு கொண்டு, பாராளுமன்றம் வருவதற்கு முன்னர் சம்பந்தனை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று நேராக உத்தரவிட்டார்.

அடுத்த வினாடியே, உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் ஆவேசத்துடன் கதைத்தார் பிள்ளையான். அந்தக் கிழவனை நாளைக்கு எப்படியேனும் போட வேணும், நீங்கள் பார்த்து வைத்திருக்கும் இடத்தில் சக்கையை வைப்போம் என்றார். அன்று பகல் சம்பந்தன் எம்.பி. நாடாளுமன்றம் செல்லும் வழியை பிள்ளையானும் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவரும் தனியாகச் சென்று பார்வையிட்டு வந்தனர்.

நிலக்கன்ணி வெடியை புதைத்து இணைப்புக் கொடுக்கவென ராணுவ வல்லுநர் ஒருவரை புலனாய்வு அதிகாரி திருகோணமலையிலிருந்து வரவழைத்திருந்தார். அவர் இரவு ஏழுமணியளவில் கொழும்பு வந்தடைந்ததும் பிள்ளையானை சந்திப்பதற்காக இவரது இடத்துக்கு வந்தார். திட்டம் பற்றி மூவரும் நீண்டநேரம் கதைத்தனர்.

அன்றைய பிற்பகலில் மட்டக்களப்பிலிருந்து தனது நம்பிக்கைக்குரிய ஐவரையும் வாகனத்தையும் எடுத்துக்கொண்டு வரும்படி உத்தரவிட்டார். அவர்களில் தேவிகாந், சூட்டி, கண்ணன், வெள்ளையன் மற்றும் வாகன சாரதியுமாக ஐந்து பேரும் இரவு 11மணியளவில் வந்து சேர்ந்தனர் கொழும்புக்கு.

எம்.பி.க்களின் வாசஸ்தல விடுதியிலிருந்து சரியாக 1.5 (ஒன்றரை) கிலோ மீற்றர் தொலைவில் கன்ணி வெடியைப் புதைத்து வெடிக்கச் செய்வதற்காக இயங்கு சக்தியை அருகில் இருக்கும் இராணுவ அரணினுள் இருந்து இயக்குவிக்க வேண்டும் என்று வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார் பிள்ளையான்.

இரவு 1.30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து வந்த ஐவரும், இராணுவ வல்லுநரும், மேலும் இரு சிங்களப் புலனாய்வு அதிகாரிகளுமாக இணைந்து அந்த வீதியில் கன்ணி வெடியைப் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நபர்களது நடவடிக்கைகளில் அந்த வழியாகச் சென்ற ஒருவரும், சில பொதுமக்களும் பார்த்துவிட்டனர். இந்த வேலையில் ஈடுபட்டவர்கள் அங்கும் இங்கும் பார்ப்பதும், அவசரப்படுவதும், தார் சாலையைத் தோண்டுவதுமாக தங்களை ஓர் திருட்டுக் கூட்டம் போல் காண்பித்தனர். அதனால் சிலர் தொலைபேசி மூலம் பொலிசாருக்குத் தகவல் கொடுத்தனர். விடுதலைப் புலிகள்தான் கன்ணி வெடி வைக்கின்றனர் என்று பொலிசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த பொலிசாரிடம், இந்த நபர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர். உடனே உளவுதுத்துறை அதிகாரிகள் தலையிட்டு அடையாள அட்டைகளைக் காண்பித்து அனைவரும் தப்பித்துக்கொண்டனர். பொதுமக்கள் காணவில்லை என்றால் சம்பந்தன் எம்.பி. இப்போது அமரராயிருப்பார்.

வெடிகுண்டு, செயற்படுத்தப்படும் றிமோற் கொன்றோல் கருவி, அனைத்தையும் வழங்கியது இராணுவ உளவுத்துறைதான். இந்தச் செயலுக்கு உதவுவதற்காக பெயர் மாற்றப்பட்ட சிங்களச் சிப்பாய்களில் சிறந்த வல்லுநர் ஒருவரும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஒரு அரசாங்கமும் அதன் தலைவரும் எப்படிப்பட்டவர்கள் என்பதனை இதன் மூலம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மிகவும் மோசமான கொலைகாரர்கள் இந்த ராஜபக்சே சகோதரர்கள். இவர்கள் துட்டகை முனுவின் வாரிசுகள் என்பதில் சிங்கள மக்கள் பெருமைப்படுவார்களா? அல்லது சிறுமைப் படுவார்களா? என்பது தெரியவில்லை.

அடுத்து,- வாழைச் சேனையில் இரண்டு முஸ்லீம் இளைஞர்களை பிள்ளையான் கொலை செய்தார். அந்த இரு இளைஞர்களும் கிழக்கு மாகாண உணர்வு கொண்டவர்கள். தமிழர் என்று தங்களைக் கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டுக்கொண்டனர். இதனால் ஒருவரது பெயரை சுரேஸ் என்றும் மாற்றிக் கொண்டார். மற்றவரது பெயர் தெரியவில்லை.

இவர்களைக் கொண்டு இஸ்லாமிய வர்த்தகர்கள், மற்றும் பணக்காரர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கடத்தி பணம் பறித்து வந்தார் பிள்ளையான். வாழைச்சேனை. ஏறாவூர் பகுதியில் இஸ்லாமியப் பணக்காரர்கள் கடத்தப்பட்டதும், மிரட்டிப் பணம்பறிக்கப்பட்டதும் இந்த இருவரின் துணையினால்தான்.

பெரிய அளவில் பணம் பறிக்கப்பட்டதும் பிள்ளையானுக்கு சந்தேகம் வந்தது. பின்னாளில் இவர்கள் பிடிபட்டால் அனைத்தையும் உளறிவிடுவார்கள். எனவே, கொலை செய்துவிட்டால் இரகசியம் காக்கப்படும் என்று நாசி மூளை பிள்ளையானுக்குச் சொல்லியது. உடனே பிள்ளையானின் அடுத்த நம்பிக்கை கொலையாளியான ரியசீலன் என்பவரை அழைத்து அந்த இரு இஸ்லாமியரையும் சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்டார்.

அதன்படி ரியசீலன் அந்த இருவரையும் ஓட்டுமாவடிப் பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டார். ஒருவர் அதே இடத்திலேயே இறக்க, மற்றவர் (சுரேஸ்) காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். சுரேசின் பெற்றோர் அவரை கொழும்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குணமடையச் செய்து மீண்டும் ஓட்டுமாவடிக்கு அழைத்துவந்து அவர்களது வீட்டில் வைத்திருந்தனர் சுரேசை. குணமடைந்த சுரேஸ் வீட்டில்தான் இருக்கிறார் என்ற செய்தி எப்படியோ பிள்ளையானை அடைந்தது.

மீண்டும் ரியசீலனுக்கு கட்டளை சென்றடைய, ரியசீலனது நண்பர்கள் சுரேசை தூக்கி வந்தனர். ‘நீ என்னட்ட இருந்து தப்ப முடியுமா?” என்று ஆவேசப்பட்ட ரியசீலன் தனது கைத்துப்பாக்கியால் சுரேசின் நெத்தியில் சுட்டு அந்த இஸ்லாமியரைக் கொன்றார்.

அடுத்து,- யாழ்ப்பாணத்து வர்த்தகர்கள், மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களைக் கடத்திப் பணம் பறிப்பதற்கு என்று பிள்ளையான் ஒரு குழுவை நியமித்திருந்தார். அதன் தலைவர் “தரன்”.

கொழும்பில் ஒரு யாழ்ப்பாண வர்த்தகரைக் கடத்தினால் யாராலும் கடத்தப்பட்டவரைக் கண்டுபிடிக்க முடியாது. பிள்ளையான் அவ்வளவு திறமையானவர் என்று பலரும் கதைத்துக்கொள்ளவர். கடத்தப்பட்டவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று கொழும்பு பொலிசார் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அவர்களது கவலையில் பங்குபெறுவர்.

இதுவரை கடத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் பிள்ளையான் கொண்டு சென்று மறைத்து வைத்த இடம் கபறண இராணுவ முகாமாகும். இராணுவ முகாமினுள் சிறைச் சாலை ஒன்று சிறிய அளவில் உள்ளது. பணம் பறிக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று முன்னரே தீர்மானிக்கப்பட்டால் அவரை நேராக கபறண இராணுவ முகாம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்வார் பிள்ளையான். இராணுவமும் பிள்ளையானும் சேர்ந்துதான் பறிக்கப்பட்ட பணத்தைப் பங்கு போடுவர்.

கபறணைக்குக் கொண்டு செல்லப்பட்டால் அவர் திரும்பி வரமாட்டார் என்பது பிள்ளையானது நபர்களுக்கு மட்டுமே தெரியும். சில வர்த்தகர்களை மட்டும் பிள்ளையான் தனது வெலிகந்த முகாமுக்கு கொண்டுவருவார். அவர்களிடம் இரண்டு நாட்கள் விசாரணை செய்வார். தொலைபேசியில் அவர்களது உறவினர்களுடன் தனது நபர்களை வைத்துப் பேசுவார். கடத்தப்பட்டவரின் கைத் தொலைபேசியைத்தான் இதற்குப் பயன்படுத்துவர். கடத்தப்பட்டவரது உறவினர்கள் சிலர் பொலிசில் முறையிடுவர். பொலிசில் முறையிட்டால் உடனே அதுபற்றி பிள்ளையானுக்குத் தகவல் வந்தடையும். பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரை சுட்டுக் கொன்றுவிடுவர்.

கபறண இராணுவ முகாமினுள் இருக்கும் சிறை பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இங்கு கொண்டு சென்று கொல்லப்பட்டுள்ளனர். பிள்ளையானும் கெல உரிமைய இயக்க நபர் ஒருவரும்தான் இந்தச் சிறையினுள் செல்வது வழக்கம். பிள்ளையானுக்கு வேண்டப்படாதவர்கள், ராஜபக்சே சகோதரர்களுக்கு வேண்டப்படாதவர்கள், புலிகளின் ஆதரவாளர்கள் போன்றோரும் இந்தச் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சிறையின் இராணுவ அதிகாரிகள் கூட பிள்ளையானைக் கண்டால் எழுந்து நின்று மரியாதை செய்வர். அப்படி ஒரு மதிப்பு பிள்ளையானுக்கு. யாழ்ப்பாணத்தவரைக் கொல்வதில் ஈடு இணையற்றவர் பிள்ளையான். பிள்ளையான் பற்றி இராணுவச் சிப்பாய்கள் மிகவும் பெருமையாகக் கதைப்பார்கள். எப்படி எல்லாம் பிள்ளையான் தமிழர்களைக் கொல்வார் என்று பிரமித்து ஆச்சரியப்படுவார்கள் சிங்களச் சிப்பாய்கள்.

அடுத்து,- ரவிராஜ் எம்.பி. சுடப்பட்டது:

ரவிராஜ் எம்.பி. அரசுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார். சிங்களப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அடிக்கடி அரசாங்கத்தைப் பற்றி தவறாக சிங்களத்தில் கதைப்பார். புலனாய்வுத் துறை இதனை பிள்ளையானிடத்தில் கூற, பனாகொடையிலிருந்த கருணாவிடத்து பிள்ளையான் ரவிராஜ் எம்.பி. பற்றிய விவரங்களைக் கூறினார்.

வழக்கம்போல், கருணா “போட்டுத் தள்ள வேண்டியதுதானே” என்று கூற, சரியண்ணே! என்று கூறிவிட்டு புலனாய்வு அதிகாரியைத் தொடர்பு கொண்டார். அந்தப் புலனாய்வு அதிகாரி வேறு ஒரு புலனாய்வை அனுப்பிவைத்தார். இவர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவார். நீங்கள் சரியான நபர்களைக் கொடுத்தால் கச்சிதமாகக் காரியத்தை முடிக்கலாம் என்று அந்தச் சிங்களப் புலனாய்வு கூற பிள்ளையான் தயாரானார்.

வெலிகந்தையிலிருந்து தேவிகாந், மற்றும் வினோத் ஆகியோரைப் பிள்ளையான் அழைத்தார். அவர்கள் குறித்த நாளில் கொழும்பு வந்து சேர்ந்தனர். இரண்டு கைத்துப்பாக்கிகளைக் கொடுத்து அந்த புலனாய்வுடன் அனுப்பிவைத்தார் பிள்ளையான்.

10-11-2006 அன்று ரவிராஜ் எம்.பி.யைச் சுட்டுக் கொன்றுவிட்டு வந்த தேவிகாந்துக்கும் வினோத்துக்கும் ஆளுக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கி வெள்ளை வானில் அனுப்பிவைத்தார் பிள்ளையான்.

இந்தச் செய்தியை பசில் ராஜபக்சேவுக்கும் பிள்ளையான் தொலைபேசியில் கூறினார். காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிட்டோம் என்று பிள்ளையான் கூற நன்றி கூறிய பசில், “வெல்டண்” என்று கூறி இணைப்பைத் துண்டித்துக் கொண்டார். பிள்ளையான் கலோ, கலோ, என்று சத்தமாகக் கத்தியும் இணைப்புக் கிடைக்க வில்லை. பசில் எதற்காக இணைப்பைத் துண்டித்தார் என்று பிள்ளையானின் நீண்ட நேரம் குழம்பியிருந்தார்.

அடுத்து,- ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேயின் நண்பரான சிங்களவர் ஒருவரையும் பிள்ளையான் கடத்தி காசு பறித்துக் கொலைசெய்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 2006 ஆரம்பத்தில் பிள்ளையான் பணத்துக்காக பலரையும் கடத்தி வந்தார். கருணா பல தகவல்களை பனாகொடையிலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். குறும்புக்கார சிங்கள அதிகாரி ஒருவர் ராஜபக்சேயின் நெருங்கிய நண்பர் ஒருவரின் பணவிபரங்களைக் கருணாவிடம் கூற அந்தத் தகவல் பிள்ளையானுக்குச் சென்றடைந்தது.

கொழும்பிலிருந்து வெலிகந்தைக்கு தனது சொந்த வேலையின் நிமித்தம் சிவப்புக் கலர் வாகனம் ஒன்றில் பயணமானார் அந்தச் சிங்களவர். புலனாய்வு அதிகாரி கருணா சொன்னபடி பிள்ளையானுக்குத் தகவல் கொடுத்தார். வாகன இலக்கம், நிறம், வரும் நேரம் அனைத்தும் பிள்ளையானுக்கு புலனாய்வு அதிகாரியால் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டது. பிள்ளையான் குழுவினர் அந்தச் சிங்களவரை வாகனத்துடன் மடக்கிப் பிடித்து, அவரை தனது முகாமான வெலிகந்தை முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

இந்தக் கடத்தலுக்குத் தலைமை தாங்கியது இனிய பாரதி. இரண்டு நாட்களாக அவரைச் சித்திரவதை செய்து அவரிடத்திருந்து இலங்கைப் பணத்தில் ரூபா 8 கோடி பெற்றுக்கொண்டனர். ராஜபக்சே தனது நண்பர் கடத்தப்பட்டது பற்றி அதிகாரிகளிடத்துக் கேட்டுள்ளார். யாருக்கும் தெரியாது என்று கூறினர். ராஜபக்சே பிள்ளையானிடத்து விசாரிக்கும்படி கேட்டுள்ளார். அவர் மறுத்ததும் அந்தக் கடத்தல் புலிகளின் தலையில் போடப்பட்டது.

பிள்ளையானிடத்து விசாரணை செய்யப்பட்டதும், பிள்ளையானும் கருணாவும் அவசரமாக பனாகொடையில் சந்தித்துக் கொண்டனர். என்ன செய்வது? ஜனாதிபதியின் நண்பர் என்று உளவு சொல்லவில்லை. நாங்கள் மாட்டிக்கொள்வோம் போல் தெரிகிறது என்று இருவரும் தலையைப் பிய்த்துக் கொண்டு இறுதியில் அவர்களது வழக்கமான முடிவான போட்டுத் தள்ளுதலைச் செய்தனர். அவர் பயணம் செய்த சிவப்புக் கலர் வாகனத்தை கருப்பளையில் உள்ள குளத்தின் சேற்றுக்குள் மூழ்கடித்துவிட்டனர்.

இக்கடத்தல் சம்பவத்தை வெலிகந்தை உளவுப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ மற்றும் தாகீர் என்ற காவல்துறையினர் மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்துவிட்டனர். அவர்களுக்கு இக்கடத்தல் விடயம் முழுமையாக தெரியும் என்பதால், பிள்ளையான் நேரடியாக கடத்தப்பட்டவரிடமிருந்து வாங்கிய பணத்தில் பெரும் தொகையை அந்த பொலிசாருக்குக் கொடுத்து, இச்சம்பவத்தை மறைத்துவிட்டார்.

ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்சே “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கலாம், அவரை விடச் சொல்லுங்கள் என்று புலனாய்விடம் கேட்டதாகவும், உளவுத் துறையோ அவர் வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பார் என்று நழுவிக் கொண்டனராம். தலை தப்பியது என்று கருணாவும் பிள்ளையானும் மகிழ்ச்சியடைந்ததாக பின்னர் அறியப்பட்டது.

கிழக்கில் தயாரிக்கப்பட்ட முதலமைச்சரான பிள்ளையானின் தகுதிகளில் சிலவற்றைத்தான் இங்கு கூறியுள்ளோம். இன்னும் நிறையவே வரவிருக்கின்றன.

ஓனாய்க்கு கருணை காட்டினால், ஆட்டுக் குட்டிக்கு கொடுமை செய்ததுக்கு ஒப்பாகும்!

http://www.theepori.com/newsfull.php?newsid=3396

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.