Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரினவாத ஒடுக்கு முறையாளர்களின் போர் மாத்திரையால் மயங்கி நிற்கும் சிங்கள மக்கள் விரைவில் உண்மைகளை உணரும் நிலை வரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாத ஒடுக்கு முறையாளர்களின் போர் மாத்திரையால் மயங்கி நிற்கும் சிங்கள மக்கள் விரைவில் உண்மைகளை உணரும் நிலை வரும்

[06 - September - 2008]

காலகண்டன்

"பயங்கரவாதத்தை முறியடிப்பேன். பிரபாகரனை எனது காலடிக்கு கொண்டு வருவேன். வடக்கு மக்களைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்பேன். கிழக்குப் போன்று வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவேன்' மேற்கூறிய வசனங்கள் அண்மைய மாதங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் சூளுரைகளாக முன்வைக்கப்பட்ட கருத்துகளாகும். இவை வெறும் உரைகளாக அன்றி வடக்கு நோக்கி முடுக்கி விடப்பட்ட போரின் நடுவே கூறப்பட்டு வந்த பேரினவாத உணர்ச்சி மிக்க வரிகளுமாகும். இவற்றின் மொத்த வெளிப்பாட்டை இன்றைய வன்னிப் போர்க்களம் வெளிப் படுத்தி நிற்கிறது.

காடுகளும் களனிகளும் வயல்களும் தோட்டங்களும் குளங்களும் நிறைந்த வன்னிப் பெரும் நிலப்பரப்பு இன்று எறிகணை வீச்சுகளாலும் பல்குழல் குண்டுகளாலும் அதிர்ந்து வருகின்றன. பகல் இரவாக விமானக் குண்டுகள் வீசப்படுகின்றன. அவை விழும் இடங்கள் யாவும் புலிகளின் தளங்கள் எனவும் சாவடைவோர் யாவரும் புலிகள் இயக்கப் போராளிகள் எனவும் இராணுவத் தகவல் மையம் கூறி வருகிறது. அரச ஊடகங்கள் அவற்றுக்கு அணி மணி பூட்டி பயங்கரவாத ஒழிப்பு எனப் பரப்புரை செய்தும் வருகின்றன.

அதேவேளை கிழக்கில் பின்னடைவைச் சந்தித்து தம் பலத்தை வன்னிக்கு நகர்த்திய புலிகள் இயக்கம், மேற்குப் புறமான மன்னாரில் இருந்து முன்னேறிய அரச இராணுவத்துடன் முழுமையான மோதலில் ஈடுபடவில்லை. அதனால் மேற்குக் கரையோரமாக A 32 நெடுஞ்சாலையை உள்ளடக்கிய நாச்சிக்குடா வரை அரச இராணுவம் முன்னேறி இருக்கிறது. அதேவேளை A32, A9 நெடுஞ்சாலைகளுக்கு இடைப்பட்ட பிரதேசங்களான மல்லாவி, துணுக்காய், வன்னேரிக்குளம் பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதாக இராணுவத் தரப்பு கூறுகின்றது. அதனைப் புலிகள் இயக்கம் மறுத்திருப்பதுடன், தாம் இப் பிரதேசங்களில் வழிமறித்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

அதேவேளை, வன்னியின் கிழக்குப் பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தில் நெடுங்கேணி வரை பல பிரதேசங்கள் தம்மால் பிடிக்கப்பட்டிருப்பதாக இராணுவம் கூறியுள்ளது. அங்கெல்லாம் தாங்கள் இராணுவத்தை முன்னேறவிடாது தடுத்துள்ளதாக புலிகள் தரப்பு தெரிவித்து வருகின்றது. தரைவழியான இராணுவ முன்னேற்றத்திற்கு தாக்குதல் விமானங்கள் மூலமும் கடற்படைக் கப்பல்கள் மூலமும் ஒத்துழைப்புத் தாக்குதல்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன. அரச இராணுவத் தரப்பு சகல வித நவீன சுடுகலன்களையும் நவீன டாங்கிகள், கவச வாகனங்களையும் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுடன் மாதா மாதம் பயிற்சி முகாம்களில் இருந்து வெளியே வரும் பன்முகப் பயிற்சி பெற்ற இராணுவத்தினர் உடனடியாகவே கள முனைகளுக்கு அனுப்பப்பட்டும் வருவதைச் செய்திகள் தெரிவித்த வண்ணமே உள்ளன. இராணுவத்தினரை உற்சாகப்படுத்தி அவர்களது மனவலிமையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இராணுவத் தளபதி அடிக்கடி வன்னிக்கும் மன்னாருக்கும் பலாலிக்கும் சென்று வருகிறார்.

இவை அனைத்தினதும் ஒட்டுமொத்த வெளிப்பாட்டையே இன்று வன்னிப் போர்க் களத்தில் இடம்பெறும் இராணுவ முன்னேற்றத் தாக்குதல்களில் காண முடிகின்றது. வன்னிப் போர்க்களத்தில் முன்னேறிய இராணுவத்தை எதிர்த்த புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் கடந்த வாரம் வரை அதிக உக்கிரமானவையாக அமைந்திருக்கவில்லை. ஆனால் இந்த வாரத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் கடுமையானவையாக அமைந்திருந்தன. இது ஆழ உள்ளிழுத்துத் தாக்கி அழிக்கும் இராணுவ தந்திரோபாயம் என்றே சில இராணுவ ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது. ஆனால், அத்தகையதொரு பொறிக்குள் தாம் சிக்கிவிடப் போவதில்லை என்றே இராணுவத் தரப்பு ஏற்கனவே கூறி வந்துள்ளது. இதனால் இருதரப்பு மோதல்களும் மிக உக்கிரமானவையாக நீடிக்கப்போகும் அறிகுறி மேன்மேலும் அதிகரித்து வருகின்றது. வன்னியில் மூண்டுள்ள போர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான விடுதலைப் போர் என்றே புலிகள் இயக்கம் கூறி நிற்கிறது. அதேவேளை, மகிந்த சிந்தனை அரசாங்கம் பயங்கரவாதத்தை அழித்தொழிக்கும் இறுதிப்போர் என முழங்கி நிற்கின்றது.

இவ்வாறு உக்கிரப்படுத்தப்பட்டுள்ள போரின் நடுவே வன்னி வாழ் பொது மக்கள் நிலை மிக மிக மோசமடைந்துள்ளதாகவே காணப்படுகிறது. தமது சொந்த இருப்பிடங்களையும் கிராமங்களையும் விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நாடிச் சென்றுள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் இரண்டு இலட்சம் பேர் வரையாகும் என்றே கூறப்படுகின்றது. இதுவரை வன்னிப் பெருநிலப்பரப்பில் இத்தகையதொரு பாரிய இடப்பெயர்வு இடம்பெற்றதில்லை. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னியானது முற்றிலும் விவசாயமும் மீன்பிடியுமே பிரதான தொழில் முயற்சிகளாகவும் பொருளாதார அடிப்படையாகவும் கொண்டுள்ளது. அதன் காரணமாக நகரங்களுக்கப்பாலான பிரதேசங்களில் கட்டிட வசதிகளும் வீட்டு வசதிகளும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருந்து வந்துள்ளன. பாடசாலைகளோ பொதுவான கட்டிட வசதிகளை ஓரளவிற்கு கொண்டிருந்தன. இதனால் தற்போதைய பாரிய இடம்பெயர்வைத் தாங்கிக் கொள்ளக் கூடியதாக வன்னிப் பிரதேசம் இல்லாத நிலையிலேயே இருந்து வருகிறது.

அதனால் மக்கள் காடுகள், வயல்வெளிகளில், மரநிழல்களில் விஷ ஜந்துகளின் நடுவே தமது பொழுதைக் கழித்து வருகின்றனர். பாடசாலைகள் அனைத்தும் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி வழிகின்றன. இதனால் சுமார் முப்பதினாயிரம் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாதுள்ளனர். மழை பெய்து வருவதால் கூடாரங்களிலும் தங்க முடியாதுள்ள அவல நிலை அங்கு காணப்படுகின்றது. மருத்துவ வசதிகள் அங்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ வன்னிப் பிரதேசம் சகல புறங்களாலும் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரதேசமாகவே காணப்படுகின்றது. உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் யாவும் இழந்த நிலையில் இருந்து வரும் வன்னி மக்களின் அவலங்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைப்பதாக இல்லை. அரசாங்கம் தனது வழங்கல்கள் யாவற்றையும் நிறுத்தியுள்ளது. அல்லது மட்டுப்படுத்தியுள்ளது. அதேவேளை, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளுக்கும் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐ.நா. நிறுவன உதவிகள் மட்டுமே ஓரளவிற்கு செல்கின்றன அவை போதுமானவையாக இல்லை.

இவ்வாறான ஒரு மனிதப் பேரவலம் வன்னிப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வேளை தெற்கில் அதுபற்றி எவ்வித பிரதிபலிப்பும் வெளிக்காட்டப்படவில்லை. வன்னி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழும் கோட்டையாகவும் இருப்பதால் அங்குள்ள மக்கள் பற்றிஒருவகைப் பாராமுகம் அல்லது கண்டுகொள்ளாமை அரசாங்க மட்டத்திலும் அதற்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. அதற்கு இரண்டு காரணங்களைக் கூற முடியும். ஒன்று மகிந்த சிந்தனை அரசாங்கம் சிங்கள மக்களுக்கு ஏற்றிய""போர்வெற்றி' போதை மருந்தின் மயக்கத்திலிருந்து அவர்கள் விடுபடாமை. இரண்டு சிங்கள மக்கள் மத்தியில் சிவிலியன் இலக்கு எனக் கூறி குடிமக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டு வந்த சம்பவங்களினால் ஏற்பட்ட விரக்தியும் வக்கிரமுமாகும். இச் சூழலில் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பது சிங்களத்திற்குச் செய்யும் துரோகம் என்றவாறு ஆக்கப்பட்டுள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, ஆனானப்பட்ட பெரும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் கூடத் தமது யுத்த எதிர்ப்பு சமாதானக் குரலைக் கைவிட்டு வேறு குரல்களில் பாட்டிசைத்து வருகின்றன.

இன்று அரசாங்கம் முன்னெடுக்கும் போரையும் பயங்கரவாத எதிர்ப்பு என்பதையும் காணும் போது இவை இலங்கையில் பூதாகரமாகி நிற்கும் தேசிய இனப் பிரச்சினையை எவ்வாறு மூடிக்கட்டி மறைத்து நிற்கின்றன என்பதைக் காணமுடியும். தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வோ அதிகாரப் பகிர்வோ அவசியமில்லை. யாவற்றையும் இராணுவ ஒடுக்குமுறையினால் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மேலோங்க வைக்கப்பட்டுள்ளது. இது இன்று மட்டும் அபாயம் தரும் ஒன்றல்ல. எதிர்காலத்தில் அப்பட்டமான ஃபாசிச சர்வாதிகாரத்திற்கான பாதை இடுவதுமாகும். இத்தூரநோக்கு ஆபத்தை சிங்கள மக்கள் உரியவாறு விளங்கிக் கொள்ளத் தயாராக இல்லை. அவர்களின் நடுவே உள்ள வாக்கு வங்கிகளைக் குறியாகக் கொண்டியங்கும் பாராளுமன்றக் கட்சிகளுக்கும் அக்கறை கிடையாது. அதற்கும் அப்பால் மனித உரிமை மனிதாபிமானக் குரல் எழுப்பி தமது உலக மேலாதிக்கத்திற்கு இடம் தேடும் அமெரிக்காவும் மௌனம் சாதித்து வருகின்றது. அவ்வாறே தமது பொருளாதார மூலதனத்தை உட்புகுத்தி வரும் இந்திய ஆளுவோரும் வன்னிக்கு விழும் அடியைப் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு தான் தமிழகத்துக் கட்சிகளும் தத்தமக்கு அளவான நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினையை குரல் வைப்பதும் தணிப்பதுமாக உள்ளன.

அதேவேளை, மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழரில் ஒரு பகுதியினர் எழுப்பும் குரல்கள் பற்றி சர்வதேச சமூகம் எனத் தமிழர் தரப்பால் ஏற்றிப் புகழப்பட்ட நாடுகள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் உலகைக் கட்டியாண்ட வெள்ளைச் சீமான்கள். அவர்கள் தொடர்ந்து எமது நாடுகள் போன்ற மூன்றாம் உலக நாடுகளை ஆளவும் வளங்களைச் சுரண்டவுமே நமது பிரச்சினைகளுக்காக அவ்வப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனரே தவிர வேறு எதற்காகவும் இல்லை. எந்த ஒரு இனத்தினதும் நாட்டினதும் சுயநிர்ணய உரிமையும் விடுதலையும் அவர்களின் ஆதிக்க நலன் தேவைகளுக்கு உட்பட்டதேயாகும். கொசவாவோவும் ஜோர்ஜியாவும் கண்முன்னே காணும் உதாரணங்களாகும்.

எனவே இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை விடயத்திலும் தமிழர் தரப்புப் போராட்டங்களிலும் இந்தியா, அமெரிக்கா, சர்வதேச சமூகம் என்பனவற்றின் கபடங்களையும் வஞ்சனைகளையும் சுயநலன்களையும் இன்றும் காணத் தவறும் தமிழர் தலைமைகளை எவ்வாறு அழைக்க முடியும். பட்டப் பகல் கொள்ளைக்காரனை அடையாளம் தெரியாதுவிட்டால் அந்தக் கொள்ளைக்காரனில் தவறு காண முடியாது. காணும் கண்களிலேயே தவறு இருக்கிறது.

எனவே பேரினவாத இராணுவ ஒடுக்குமுறை வன்னிப் போர் மூலம் தனது உச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றது. இவ்வேளை இரண்டு விடயங்கள் நம்முன் அவசியமாகின்றன. ஒன்று இருப்பிடங்கள் விட்டகன்று பசி பட்டினியுடன் உயிர்களைக் கையில் பிடித்தவாறு வாழ்ந்து வரும் வன்னி மக்கள். அந்தப் பேரவலத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும். அதற்கான வழிவகைகள் தேடப்பட வேண்டும். இரண்டாவது சுயநிர்ணய உரிமைக்கான தமிழர் போராட்டம் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு சரியான வழித்தடத்தில் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

இவற்றுக்கு யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை அவசியம். அவற்றுக்கு சிறு ஒளி கூடத்தெரியாதவாறான இருள் மூட்டமே காணப்படுகின்றது. ஆயினும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் இருக்கவே செய்கிறது. ஒரு தேசிய இனம் பயங்கரவாத ஒழிப்பின் பெயரால் அடக்கி ஒடுக்கப்படுவதையும் அழிக்கப்படுவதையும் மனச்சாட்சி மிக்க எந்த ஒரு மனிதரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் பேரினவாத ஒடுக்குமுறையாளர்களின் போர் மயக்க மாத்திரைகளால் மயங்கி நிற்கும் சாதாரண சிங்கள மக்கள் விரைவில் அம் மயக்கத்திலிருந்து விடுபட்டு உண்மைகளைக் காணவே செய்வர். அவ்வேளை அவர்களுக்குப் பதில் கூற வேண்டிய தேவையும் அவசியமும் போர் வெறி கொண்ட பேரினவாதிகளுக்கு ஏற்படவே செய்யும்.

http://www.thinakkural.com/news/2008/9/6/a...s_page57450.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.