Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னி போர்க்களம் - கேள்விகள் பதில்களாக – பதில்கள் கேள்விகளாக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி போர்க்களம் - கேள்விகள் பதில்களாக – பதில்கள் கேள்விகளாக

வன்னியில் விசேடமாகப் புதுக்குடியிருப்பைச் சுற்றிய பிரதேசங்களில் குறிப்பாக சாலையில் நடந்தது நடப்பது நடக்கப் போவது என்ன என்பது குறித்து இலங்கையிலும் புலம்பெயர்வாழ் தேசங்களிலும் உள்நாட்டு சர்வதேச ராஜதந்திர மட்டங்களிலும் பெரும் கேள்விக்குரிய விடயமாகி பலருடைய சிந்தனைகளையும் குடைந்து கொண்டிக்கின்றது.

உண்மையில் சுயாதீன ஊடகவிலாளர்கள் நடமாட முடியாத, உள்நாட்டு சர்வதேச நடுநிலையாளர்கள் எவரும் உலாவ முடியாத எந்த செய்திகளையுமே பெற்றுக் கொள்ள முடியாத போர்க்களமாக வன்னி மாறிவிட்டது.

கடந்த கால யுத்தங்களில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தமது தரப்புகளை திருப்திப்படுத்துகின்ற, போர் நிலவர செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வந்தனர். ஆனால் தற்போதைய யுத்த களம் அவற்றிலிருந்து முற்றுமுழுதாக மாறுபட்ட தன்மையினை, பண்பினை பெற்றிருப்பதனை காண முடிகின்றது.

வழமைக்கு மாறாக விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து யுத்தம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் தணிக்கைக்குட்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் சார்பு ஊடகங்களெனப் பேசப்படுகின்ற ஊடகங்களில் கூட யுத்தம் தொடர்பான பல செய்திகள் தற்போது தவிர்க்கப்படுகின்றன.

அரச பாதுகாப்புத் தரப்பினரைப் பொறுத்த வரை அனைத்து யுத்தங்களிலுமே இழப்புக்களைக் குறைத்து அல்லது அது பற்றி எதனையுமே பேசாது விடுகின்ற நிலைமையை விடுதலைப்புலிகளின் தற்போதைய மௌனம் சாதகமாக்கியுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்புப் பத்தி எழுத்தாளர்களின் பேனாக்களை பிடுங்கி எறிந்து குரல்வளைகளை நெரித்துள்ள அரச பாதுகாப்புத்தரப்பு இப்போது பாதுகாப்புக் குறித்த எத்தகைய தகவல்களும் வெளியிடப்படுவது தேச விரோத செயல்கள் எனவும் தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவித்துள்ளது.

வன்னியிலே நிகழ்கின்ற உக்கிர மோதல்களை அடிப்படையாகக் கொண்டு படையினரின் இழப்புகள் குறித்து எதுவுமே வரக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவசர அவசரமாக கடுமையான தொனியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஆக விடுதலைப்புலிகளின் மௌனமும் அதனை சாதகமாகப் பயன்படுத்தி மறுபுறம் தென்பகுதி ஊடகங்களுக்கு மிரட்டலை விடுக்கும் அரச தரப்பின் செயற்பாடுகள், யுத்தம் குறித்த ஒட்டு மொத்த உண்மைத் தகவல்களையே வெளிவராது செய்து விட்டன. ஆனால் அரச தரப்பால் வெளியிடப்படும் ஒரு பக்கம் சார்ந்த குறிப்பாக விடுதலைப்புலிகளுக் கெதிரான ஊடக யுத்தத்தின்பாற்பட்ட பிரச்சார தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன.

அவ்வாறாயின் வன்னிக்களமுனையில் நடப்பது என்ன?

இலங்கையின் 61வது சுதந்திர தினத்தில், விடுதலைப்புலிகளின் இதயம் எனக் கூறப்படும் பிரதான மையமான முல்லைத்தீவை முழுமையான கட்டுப்பாட்டுள் கொண்டுவந்து, கிளிநொச்சியில் சுதந்திரக் கொடியை ஜனாதிபதி ஏற்றி, கொழும்பில் உரையாற்றுவது என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில், முல்லைத்தீவை நோக்கிய பாரிய நகர்வு ஆரம்பிக்கப்பட்டது.

நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எறிகணைவீச்சுகள் வான் தாக்குதல்கள் மோட்டார், ரொக்கட் தாக்குதல்கள் என, பாதுகாப்பு வலயம் வைத்தியசாலைகள் என்ற வேறுபாடுகளின்றி பொழியப்பட்ட குண்டுமழையில், படையினரின் நகர்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் 733 பேர் பலியெடுக்கப்பட்டு 2615 பேர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். காயப்பட்டவர்களுக்கு விறைப்பூசி கூடப் போட முடியாது கால்கள் கைகள் எடுக்கப்பட்ட கொடுமையிலும் கொடுமை நடப்பதாக செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நூற்றுக் கணக்கான பாடசாலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை வரவேற்பதற்கு தயார் நிலையில் அரச நிர்வாகம் தயார்ப்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பர்த்த எவையுமே இதுவரை நடைபெறவில்லை. 60 ஆவது சுதந்திர தினம் போலவே 61 வது சுதந்திர தினமும் விடுதலைப் புலிகளுக்கெதிராக பெறப்பட்ட சில வெற்றிகளை முன்னிலைப்படுத்தி எதிர்பார்த்த அளவிற்கான ஆரவாரமின்றி முற்றுப் பெற்றது.

அப்படியாயின் அரசாங்க நிகழ்ச்சி நிரலின்படி மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் எண்ணப்படி கிளிநொச்சியில் ஜனாதிபதியினால் ஏன் கொடியேற்ற முடியவில்லை. முல்லைத்தீவையும் கைப்பற்றி விடுதலைப்புலிகளை அழித்து அல்லது பயங்கரவாதத்தை தோற்கடித்து 61 வது சுதந்திர தினத்தில் நாடு சுபீட்சமடைந்து விட்டது என ஏன் அறிவிக்க முடியவில்லை. இங்குதான் பல விடயங்கள் தொக்கி நிற்கின்றன.

இந்த ஒரு வார காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அரச படையினருக்கெதிரான கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த பெப்ரவரி 2ம் திகதியும் 3ம் திகதியும் விடுதலைப்புலிகள் 3 கரும்புலித் தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். இந்தத் தாதக்குதல்கள் வெடிபொருட்கள் நிரப்பிய வாகனங்களில் சென்று நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகின்றது. தாக்குதல் குறித்த விபரங்களை அல்லது அவற்றின ஊடாக எய்தப்பட்ட இலக்குகளை விடுதலைப்புலிகள் வெளியிடாது விடினும் கரும்புலித் தாக்குதல்களை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு நகரைக் கைப்பற்றுவதற்கான தயார்ப்படுத்தலை மேற்கொண்டு அதற்கான படையணிகளை நிறுத்தி ஆயுத தளபாடங்களைக் களஞ்சியப்படுத்தி தாக்குதலுக்காக தயாரான நிலையிலிருந்த பொழுது விடுதலைப்புலிகளின் விசேட படையணி ஒன்று இந்தப் பிரதேசத்திற்கு ஊடறுத்து தாக்குதல் நடத்தி மிகப் பெருமளவிலான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜெயசிஜக்குறு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட ஆயுத அளவை விட இந்தத் தொகை மிக அதிகமானது என கூறப்படுகின்றது. இருந்த போதும் இது குறித்து சில தகவல்களைத் தவிர விடுதலைப்புலிகள் தரப்பில் தொடர்ந்தும் மௌனமே சாதிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக தொடருகின்ற மோதல்களில் ராணுவத் தரப்பின் ஒரு பிரிகேட் அணியினர் கொல்லப்பட்டோ அல்லது கடுமையான காயங்களுக்குள்ளாகியோ யுத்த களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

எண்ணிக்கையின் அடிப்படையில் கூறுகின்றபொழுது ஆயிரம் முதல் 1200 வரையிலான படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆயிரத்துக்கும் அதிகமான படையினர் காயமடைந்ததாக அனுராதபுரம் கொழும்பு பலாலி உள்ளிட்ட பல வைத்தியசாலைகளினை ஆதாரம் காட்டி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பெயர் கூற விரும்பாத வன்னிக் களமுனையுடன் தொடர்புடைய ஒருவர் 300ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதனை தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனக் கூறினார்.

எல்லைப்புறக் கிராமங்கள் பலவற்றில் குறிப்பாக புத்தளம் முதல் அனுராதபுரம் வரை நூற்றுக் கணக்கான மரண நிகழ்வுகளை கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் காணக் கூடியதாக இருப்பதாகவும் அங்கு வெள்ளைக் கொடிகள் பறப்பதாகவும் அவ்வப்பகுதி ஊடகவிலாளர்கள் கூறுகின்றார்கள். எனினும் இவற்றிற்கும் அப்பால் 800க்கும் மேற்பட்ட ராணுவத்தினரின் சடலங்கள் அவ்வப் பிரதேசங்களிலேயே புதைக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றிற்கும் அப்பால் படைச்சிப்பாய்கள் பலர் விடுதலைப்புலிகளால் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மறுபுறம் தமது தரப்பு உயிரிழப்புகளை குறைப்பதில் கரிசனையாக உள்ள விடுதலைப்புலிகள் தரப்பிலும் கடந்த ஒரு வார காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

குறைந்தது 100 முதல் 200 வரையிலான உறுப்பினர்களை விடுதலைப்புலிகள் இழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சாலையை இலங்கைப் படையினர் முற்றுகையிட்டுக் கைப்பற்றிய மோதலில் விடுதலைப்புலிகளின் 12 பேர் அடங்கிய சிறிய அணியொன்று படையினரின் தரை மற்றும் ஆகாய மார்க்கத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களில் கடற் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விநாயகம் உள்ளிட்ட 3 தாக்குதல் தளபதிகளும் கொல்லப்பட்டதாக தெரிய வருகின்றது. இவர்கள் கொல்லப்பட்டமை குறித்து விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. படைத்தரப்பினர் இவர்களது மரணம் குறித்து செய்திகளை வெளியிட்டு இருந்தனர். அத்துடன் வன்னியில் இருந்து கிடைக்கும் சுயாதீனத் தகவல்களும் இந்த 3 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கின்றன.

யுத்த களத்தில் தற்போது எட்டப்படும் சில வெற்றிகள் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பினர் தமது தரப்பில் பாரிய உயிர்ச் சேதங்களைக் குறைத்து படைத்தரப்பில் சேதங்களை அதிகரித்து ஆயுதங்களைக் கைப்பற்றும் உத்திகளையே கையாண்டு வருவதாக கூறப்படுகிறது.

எனினும் இன்னும் 10 அல்லது 15 நாட்களே விடுதலைப் புலிகளால் தாக்குப் பிடிக்க முடியும். அதன்பின்பு படையினர் முல்லைத் தீவை தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வந்து விடுவர் என அரசாங்க தரப்பினர் முதல் புலி எதிர்ப்பாளர்கள் வரை அறுதியிட்டுக் கூறிவருகின்றனர். அதற்கான காரணமாக விழவிழ எழுவோம் என்ற புலிகளின் தாரக மந்திரத்தை படையினரும் தமதாக்கி விழவிழ முன்செல்வோம் எனச் செல்வதாகவும் 40 ஆயிரம் படையினரை இழக்கவும் தாம் தயாராக இருப்பதாக கோத்தபாயராஜபக்ஸ சொல்லியிருப்பதனையும் சுட்டிக் காட்டுகின்றனர்.

அப்படியாயின் 15 நாட்களுக்குள் புலிகள் முடிந்துவிடுவார்களா? 3 தசாப்தகால வரலாற்றைக் கொண்ட இயக்கம் அழிந்து விடுமா? இத்துடன் புலிகளின் போராட்டம் முற்றுப் பெற்றுவிடுமா? 1960 களின் பின் பலம் பொருந்திய ஒரு போராட்ட இயக்கம் அழிக்கப்பட்ட வரலாறு எழுதப்படப் போகின்றதா?

தென்னாசியாவில், ஆசியாவில் ஏன் உலகிலேயே இனிவரும் காலங்களில் ஆயுதங்களைக் கையில் எடுப்பவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக ஆயுத போராட்டப் பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படப் போகிறதா? 21 ஆம் நூற்றாண்டில் ஒரு பலம்பொருந்திய ஆயுத இயக்கத்தை அல்லது பயங்கரவாத இயக்கம் என பெயர் சூட்டப்பட்ட இயக்கத்தை அழித்தமைக்கான முன் உதாரணமாக இலங்கையும் மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களும் விளங்கப் போகிறார்களா? என்ற கேள்விகளும் அனைவர் முன்னே எழத்தான் செய்கின்றன.

அவ்வாறு எழுகின்ற கேள்விகளுக்கு விடையாக ஆம் என பதில் அளிப்பவர்கள் இதன் பின்னால் எழும் சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள் ஆகின்றனா.;

அதாவது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தளபதிகள் எங்கே? அந்தத் தளபதிகளின் வழிகாட்டலில் இயங்கிய படையணிகள் எங்கே? கப்பல் கணக்காக இறக்கப்பட்ட ஆயுதங்கள் எங்கே? பாரிய கனரக ஆயுதங்கள், பாரிய தாக்குதல் படகுகள், விமானங்கள், நவீனரக போக்குவரத்து வாகனங்கள், கட்டடங்களின் கூரைகளில் இருந்து கதவு யன்னல்கள் வரை எங்கே? அச்சு யந்திரங்கள், கணனிகள், தொலைத்தொடர்புக் கருவிகள் என அடுக்கிக் கொண்டே போகலாம் இவையாவும் எங்கே? கடந்த சில நாட்களுக்கு முன் கைப்பற்றப்பட்ட சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிவேக தாக்குதல் கலங்கள் எங்கே? தற்போதைய தாக்குதல்களில் பெறப்படும் ஆயுதங்கள் எங்கே? இப்போதும் கேட்கும் புலிகளின் குரல் எங்கே? தற்போதும் வெளிவரும் ஈழநாதம் எங்கே? விடுவிக்கப்பட்ட கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் தொடரும் தாக்குதல்களை வழிநடத்துபவர்கள் யார்? அவர்கள் எங்கே?

கேள்விகள் கேள்விகளாக ஊகங்கள் ஊகங்களாக வதந்திகள் வதந்திகளாக இருக்கும் அதே வேளை செய்திகளும் செய்திகளாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடுத்த வார போர்நிலவர செய்தி ஆய்வில் இவற்றுக்கு விடை கிடைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

GTN - போர்நிலவரச் செய்தியாளர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.