Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் மீது தாக்குதல் - அலுவலகமும் அடித்து நொருக்கி தீ வைக்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் மீது தாக்குதல் - அலுவலகமும் அடித்து நொருக்கி தீ வைக்கப்பட்டது

திகதி: 02.04.2009 // தமிழீழம் // [விடியல்]

உலகில் ஊடகவியலார்ளகளுக்கு மிக மோசமான நாடாகக் கணிக்கப்பட்டுள்ள சிறிலங்காவில் மேலும் ஒரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். அவரது பத்திரிகை அலுவலகமும் அடித்து நொக்கி தீ வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்திலிருந்து வெளியாகும் 'வார உரைகல்' பத்திரிகையின் ஆசிரியரான புவி ரஹ்மத்துல்லாஹ் நேற்றிரவு வீட்டிலிருந்த வேளை, இனந்தெரியாத குழுவொன்று தாக்கியதையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்களை அடையாளம் காண முடியாதவாறு முகத்தை துணியொன்றினால் மறைத்திருந்த சுமார் 5 பேர் கொண்ட குழுவொன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவரைத் தாக்கிய குழுவினர் அருகிலிருந்த பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று கணினி உட்பட சில உடைமைகளையும் ஆவணங்களையும் சேதப்படுத்தியதோடு தீ வைத்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பிரதேச பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

sankathi

பேடிகள்!துணிவற்ற ஆண்கள்! சீ வெட்ககேடு நேருக்கு நேராக மோத தகுதியற்ற இனம்.

இலங்கை அரசுக்கு இது புதிதல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு சகோதரர் ஒருவரின் கருத்து:

புவி என்றழைக்கப்படும் ரஹ்மத்துல்லா யார் என்று தெரியாமல் பலரும் கருத்து எழுதியிருந்தார்கள். எப்பொழுதும் அவர் யார் என்ன பின்னணி என்று தெரியாமல் முந்திரிக்கொட்டை மாதிரி கருத்து எழுதும் போக்கே பலரிடமும் காணப்படுகிறது. ரவுப் மெளலவியின் புரட்சிகர முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்தான் இவர். அல்லாவுக்கு உருவம் இருக்கிறது என 1981ஆம் ஆண்டில் சர்ச்சையை ஏற்படுத்தி காத்தான்குடியில் உள்ள முஸ்லீம்கள் இரண்டாயிரம் பேர் பிரிந்து சென்றார்கள். அவர்கள் இப்பொழுதும் தனியான பள்ளிவாசலை அமைத்துள்ளனர். கடந்த வருடத்தில் ரவுப் மெளலவி இறந்தபோது அந்த சடலத்தை காத்தான்குடியில் புதைக்க கூடாது என பெரிய பிரச்சினையும் கலவரங்களும் நடந்ததை பலரும் அறிவீர்கள். அந்த பிரிவின் முக்கியமானவர்தான் இந்த புவி என்றழைக்கப்படும் ரஹ்மத்துல்லா. இவரை 1982ஆம் ஆண்டிலும் கத்தியால் குத்தி ஆபத்தான நிலையில் இருந்தார். இவர் தாக்கப்படுவது இது நான்காவது தடவையாகும். காத்தான்குடியில் உள்ள பழமைவாத முஸ்லீம்களுக்கும் இவர்களுக்கும் இடையில் நடந்த மோதலே இதுவாகும். இது மதப்பிரச்சனையே அன்றி அரசியல் பிரச்சனை அல்ல. ..... என கத்தியோடு நிற்கிற போது இந்த காத்தான்குடி முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றாக நிற்பார்கள். தமிழர் தான் ஒற்றுமையில்லாமல் பிரிந்து நின்று மொக்குத்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

vaarauraikal.jpg

thanks gtn.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு சகோதரர் ஒருவரின் கருத்து:

புவி என்றழைக்கப்படும் ரஹ்மத்துல்லா யார் என்று தெரியாமல் பலரும் கருத்து எழுதியிருந்தார்கள். எப்பொழுதும் அவர் யார் என்ன பின்னணி என்று தெரியாமல் முந்திரிக்கொட்டை மாதிரி கருத்து எழுதும் போக்கே பலரிடமும் காணப்படுகிறது. ரவுப் மெளலவியின் புரட்சிகர முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்தான் இவர். அல்லாவுக்கு உருவம் இருக்கிறது என 1981ஆம் ஆண்டில் சர்ச்சையை ஏற்படுத்தி காத்தான்குடியில் உள்ள முஸ்லீம்கள் இரண்டாயிரம் பேர் பிரிந்து சென்றார்கள். அவர்கள் இப்பொழுதும் தனியான பள்ளிவாசலை அமைத்துள்ளனர். கடந்த வருடத்தில் ரவுப் மெளலவி இறந்தபோது அந்த சடலத்தை காத்தான்குடியில் புதைக்க கூடாது என பெரிய பிரச்சினையும் கலவரங்களும் நடந்ததை பலரும் அறிவீர்கள். அந்த பிரிவின் முக்கியமானவர்தான் இந்த புவி என்றழைக்கப்படும் ரஹ்மத்துல்லா. இவரை 1982ஆம் ஆண்டிலும் கத்தியால் குத்தி ஆபத்தான நிலையில் இருந்தார். இவர் தாக்கப்படுவது இது நான்காவது தடவையாகும். காத்தான்குடியில் உள்ள பழமைவாத முஸ்லீம்களுக்கும் இவர்களுக்கும் இடையில் நடந்த மோதலே இதுவாகும். இது மதப்பிரச்சனையே அன்றி அரசியல் பிரச்சனை அல்ல. ..... என கத்தியோடு நிற்கிற போது இந்த காத்தான்குடி முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றாக நிற்பார்கள். தமிழர் தான் ஒற்றுமையில்லாமல் பிரிந்து நின்று மொக்குத்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில இருந்து நாங்கள் எடுக்க வேண்டிய செய்தி...

சிறீலங்காவில் மற்றுமொரு ஊடகவியலாளர் தாக்கப்பட்டார்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் புகழ்ச்சிகளால் அழிக்க முனையாமல் விமர்சனங்களால் வாழவைப்போம்!-பிர்தௌஸ் நளீமி பேருரை

ஜனவரி 1, 2009 by புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்

‘காத்தான்குடியில் முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகக் கருத்தரங்கொன்றில் நான் கலந்துகொண்டு தெரிவித்த முஸ்லிம் சமூகத்துக்கான ஊடகத்தேவை தொடர்பான கருத்துக்களை கவனமாகச் செவியேற்ற சகோதரர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்கள், தனது தனி முயற்சியாக ‘வார உரைகல்’ என்ற இப்பத்திரிகையை மிகச்சிறிய அளவில் 2005ல் வெளியிடத் தொடங்கினார். எனினும் அவரால் இதனைத் தொடர்ந்து வெளியிட முடியுமா? இதனை எமது கல்விச் சமூகமும், வியாபாரச் சமூகமும், மக்களும் அங்கீகரிப்பார்களா? என்றொரு கேள்வி அன்று தோன்றியிருந்தது. இருந்தும், அல்லாஹ்வின் உதவியாலும் அவரின் கடினமான முயற்சிகள் நிறைந்த உழைப்பினாலும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் என்ற சுய கௌரவத்திற்கும் அப்பால் அதன் விற்பனையாளராகவும் வீதிகளில் இறங்கி வந்து சந்தைப்படுத்தி இப்பத்திரிகையை தன்னுடையதும், தனது சமூகத்தினுடையதும் மிகப் பெரிய சொத்தாகக் கருதி அவர் மேற்கொண்டு வந்த இம்முயற்சி, ஐம்பதாவது வெளியீட்டை அடைந்தபோது ஒரு பாரிய விருட்சமாக நமது பிரதேசத்தில் வளர்ந்திருந்ததை நம்மால் காண முடிந்தது.’

‘சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஐம்பதாவது பதிவுக்கான வெளியீட்டு விழா இதே மண்டபத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூகப் பிரமுகர்களும் நிறைந்திருக்க மிகவும் கோலாகலமாக நடைபெற்றதை நான் இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். அன்றும் இந்த மேடையில் ஒரு விடயத்தை இந்த சமூகத்தின் முன்னே சொல்லி வைத்தேன், சகோதரர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்கள் தூக்கியிருக்கின்ற இந்தப்பேனையை இச்சமூகத்தின் யாராவது ஒரு அங்கத்தவன் துப்பாக்கியால் நிறுத்துவான் என்று.’

‘65வது வெளியீட்டை அவர் வெளியிட்டபோது ஒரு அரசியல் தரப்பின் குண்டர்கள் நள்ளிரவில் அவரின் வீட்டைத் தாக்கி அங்கிருந்த பத்திரிகைகளை அபகரித்துச்சென்று தீவைத்து அழித்ததன்மூலம் அவர்களது மோசமான சமூக நடவடிக்கைகளை மறைத்துக் கொள்ள முயன்ற அத்தாக்குதல், மோசமான ஒரு ஆரம்ப வரலாற்றை இப்பத்திரிகையின் வரலாற்றில் இம்மண்ணில் ஏற்படுத்தியது.’

‘இப்படிப்பட்ட கோமாளிகளுக்கு மத்தியில்தான் முஸ்லிம் சமூகத்தின் ஊடகம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் சமூகத்தில் இப்போதிருக்கின்ற அரசியல் தலைமைத்துவங்கள் இந்த முஸ்லிம் சமூகத்தின் விடுதலைபற்றிப் பேசுகிறார்கள் என்றால் வெறும் நாவால்தான் அவர்கள் பேசுகிறார்களே தவிர, உள்ளத்தால் பேசவில்லை என்பதனை இப்பத்திரிகை ஆசிரியரின் வீட்டைத்தாக்கி பத்திரிகைகளை எரித்தழித்த அந்தக் குண்டர்களை நாங்கள் இனங்கண்டு அறிந்தபோது ஏங்கி நிற்கின்ற நிலைமை எங்களுக்கு ஏற்பட்டது.’

‘கருத்தைக் கருத்தால் மோதுகின்ற நாகரீக வழக்கத்தை, உயரிய பண்பாட்டை இந்த மண்ணிலே உருவாக்கி வைக்க முயற்சியுங்கள் சமூகத் தலைவர்களே! உங்களால் அவ்வாறு உருவாக்க இயலாது என்றால், ‘எங்களால் முடியாது. நாங்கள் ஒதுங்கிக் கொள்கின்றோம். அடுத்த பரம்பரையினரே நீங்கள் முன்னே வாருங்கள் நாங்கள் விலகிச் செல்கின்றோம்’ என்று இந்த சமூகத்தின் முன்னே சொல்லுங்கள்.’

‘முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காக உண்மையாகவே எழுதத் துணிந்துள்ள எழுத்தாணிகளும், எழுத்தாளர்களும் உங்களது அட்டகாசங்களுக்கும், அடாவடித்தனங்களுக்கும், பயந்து தங்களின் உயிரினும் மேலான இந்த ஊடகப் போராட்டப் பணியை ஒருபோதும் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், உங்களால் எங்களின் ஊடகப்பணிக்கு உதவி ஒத்துழைக்க முடியாது என்றால் அடுத்த சமூகத்தின் உதவியோடும், ஒத்துழைப்போடும் இந்த முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காகவும், விமோசனத்திற்காகவும் இதனோடு இன்னுமொரு பத்திரிகையை வேண்டுமானாலும் நாங்கள் தொடங்கிட திராணி உள்ளவர்களாகத்தான் இருக்கின்றோம் என்பதையும் இந்த நூறாவது ‘வார உரைகல்’ வெளியீட்டு விழா மேடையில் இருந்து உங்களுக்குச் சொல்லி வைக்க விரும்புகின்றோம்!’

‘மௌனித்து மௌனித்துக் கிடந்து எங்களது பிரச்சினைகளைப் பேசுவதற்கு எந்தச் சக்தியும் வழியுமில்லாது நாங்கள் அடிபட்டுத்திரிந்த அந்த வரலாற்று மாயைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு இப்பொழுது புதிய பரம்பரையின் உதவியோடும், நம்பிக்கையோடும், திராணியோடும் நமது முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான எழுத்தாணியை நாங்கள் தூக்கியிருக்கின்றோம். அதன் ஆரம்பப் பணியைத்தான் கிழக்கு மாகாணத்தில் நமதூரில் சகோதரர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்கள் கடந்த மூன்றாண்டுகாலமாக முன்னெடுத்து வந்துள்ளார். இந்த நூறாவது இதழிலிருந்து மேலும் மும்முரமாக இப்பெரும் பணியை அவர் முன்னெடுப்பார் எனத் திடமாக நாம் நம்புகின்றோம்.’

‘இந்தப் பத்திரிகையில் நமக்கு உடன்பாடான விடயங்களும் வரமுடியும். முரண்பாடான விடயங்களும் வரமுடியும். எப்படி வந்த போதிலும் கருத்தைக் கருத்தால் மோதுகின்ற ஒரு உயரிய கலாசாரத்தை உருவாக்குவதன் மூலம்தான் நாம் இந்த நாட்டிலும், சர்வதேச சமூகங்களிடமும் நமது பிரச்சினைகளைக் கவனமாகக் கையாள முடியும்.’

‘எல்லோரும் விரும்புவதைத்தான் இப்பத்திரிகையில் எழுத வேண்டுமென இருந்தால் இது ஒரு சமூகப் பத்திரிகையாக அல்லாது தனி மனிதர்களைப் புகழ்பாடும் பத்திரிகையாகத்தான் இருக்கும். அதனை நாங்கள் இருபது ரூபாய்களைக் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. புகழப்படுபவர்களே வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். எனவே, இது சமூகப் பத்திரிகை என்றால் உண்மையை, நீதியை, நியாயத்தை அது பேச வேண்டும். யார் ஊழல் செய்தாலும் அது குரல் கொடுக்க வேண்டும். யார் நல்லது செய்தாலும் அது பாராட்ட வேண்டும். அதற்காக புவி றஹ்மதுல்லாஹ் அவர்கள் தனது தனிப்பட்ட குரோதங்களையும், விருப்பு வெறுப்புக்களையும் ஒருபோதும் இப்பத்திரிகையில் அம்பலப்படுத்தக் கூடாது. அது இஸ்லாமிய தர்மமுமல்ல. இஸ்லாமிய ஊடக தர்மமுமல்ல. அவ்வாறு அவர் ஒரு போதும் செயற்படமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.’

‘இந்த ஊர் மிகப்பாரிய வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்ட ஊர். கிழக்கு முஸ்லீம்களின் வரலாற்றில் மாத்திரமல்ல, இந்நாட்டு முஸ்லீம்களின் வரலாற்றிலும்கூட பல புதிய அத்தியாயங்களைத் தொடக்கிவைப்பதில் பாரிய பங்களிப்புக்களைச் செய்து வந்துள்ள ஊர். இந்த ஊர், இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் ஊடகத் தேவை பற்றியும் நீண்ட காலமாகவே பேசி வந்திருக்கின்றது. மறைந்த எமது மதிப்புக்குரிய தலைவர் மர்ஹும் அல்ஹாஜ் ஏ. அஹமது லெப்பை அவர்கள் பல பத்திரிகைகளில் முஸ்லிம்களுக்குத் தனியான பத்திரிகை, தனியான தொலைக்காட்சி அலைவரிசை தேவை என்று அவர் வாழ்ந்த காலத்திலே பலமாகக் குரல் கொடுத்து வந்துள்ளதை நாமறிவோம்.’

‘இவ்வாறு குரல் கொடுத்த இம்மண்ணில் பல பத்திரிகைகள் பெரும் முன்னெடுப்புக்களில் இதுவரை காலமும் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அவைகள் தனிமனிதர்களையும், அரசியல் சக்திகளையும் திருப்திப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டதால் அவைகள் முஸ்லிம் சமூகத்திடம் எடுபடாமல் மதிப்பிழந்து காலப்போக்கில் மறைந்து போக நேரிட்டது.’

‘ஆனால், ‘வார உரைகல்’லின் வரவு என்பது, இந்த ஊரின் எல்லாத் தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் அது செய்திகளை வெளிக்கொணர்வதாக ஒரு மாற்றத்துடன் வெளிவந்தது. இருந்த போதிலும் அது, சில செய்திகளை சமூகத்தின் முன்னே கொண்டு வருவதிலும் பல கோணங்களில் அவற்றை அலசுவதிலும் உருவான பல சாதக பாதகங் களையும் நாம் அவதானித்தே வந்துள்ளோம். அதற்காக இருக்கின்ற இந்த ஊடகத்தையும் அழித்து விடுதல் அல்லது இல்லாமல் செய்து விடுதல் என்ற முடிவுக்கு நாம் வருவதை விட, இந்த ஊரிலிருக்கின்ற புத்திஜீவிகளும், இந்த ஊரின் அரசியல் தலைமைகளும், ஏனைய தரப்புக்களும் ஒன்றிணைந்து எப்படி நாம் இதனை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக வழி நடாத்த முடியுமென்று கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர முடியுமாக இருந்தால் அது எமது ஊடகத்தேவை தொடர்பான நீண்டகால நமது எதிர்பார்ப்பிற்கு ஆரோக்கியமானதாக இருக்க முடியும்’

‘சமூக வானொலி என்று றிஸாலா எப்.எம். நமதூரில் வந்தபோது எல்லோரும் அதனை வரவேற்றோம். ஆனால், பின்னர் அதனை நிறுத்த வேண்டுமென பலர் முற்சித்து அதற்கு எதிராக பாரிய போராட்டங்களை மேற்கொண்ட போதும் அது இன்னமும் நம்மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. எனவே, இன்று தொடங்கப்படுகின்ற எந்த முயற்சியும் ஒரு தரப்பை மாத்திரம்தான் அது திருப்திப்படுத்த வேண்டுமென எதிர்பார்த்தால் உண்மையில் அது அநியாயமானது. நியாயமற்றது. இஸ்லாத்தின் பார்வையில்கூட அது பக்கச்சார்பானது.’

‘சொல்வதைத் தெளிவாகவும், உறுதியாகவும் சொல்லுங்கள் என்று இஸ்லாம் சொல்கிறது. ‘தெளிவாவும், உறுதியாகவும் சொல்லுங்கள்’ என்பது, சர்ச்சையான முரண்பாடான விடயங்களைச் சொல்வதென்பதல்ல. சமூகம் எதனை எதிர்பார்த்து வேண்டி நிற்கின்றதோ அதனை மிகவும் கவனமாகவும், ஆணித்தரமாகவும், உறுதியாகவும் சொல்ல வேண்டுமென்பது இஸ்லாத்தின் ஊடகப் பார்வையில் ஒரு முக்கியமான அம்சமாகும்.’

‘றசூல் (ஸல்) அவர்கள் அதனைத் தங்களின் மிம்பர் மேடைகளில் பயன்படுத்தினார்கள். எதிர் சமூகத்தின் முன்னே தங்களுடைய கருத்தை மிக ஆணித்தரமாகச் சொன்னார்கள். கலீபாக்கள் தங்கள் மிம்பர்களையும் அவ்வாறே பயன் படுத்தினார்கள். தாபிஈன்களும், தபஉத் தாபிஈன்களும் தங்களுடைய புத்தகங்களைப் பயன்படுத்தினார்கள். பின்னர் வந்த இமாம்கள் பத்திரிகைகளைத் தொடங்கினார்கள். வரலாற்றில் பல இஸ்லாமிய அறிஞர்கள் பல பத்திரிகைகளின் ஆசிரியர்களாக இருந்துள்ளார்கள். உலக வரலாற்றில் முஸ்லிம்கள் தங்களின் இருப்பையும், உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்காக ஊடகங்களைப் பெருமளவில் பயன்படுத்தியுள்ளார்கள்.’

‘நூர்ஸிய இயக்கம் துருக்கியில் தோற்றம் பெற்றபோது அதனை வழி நடாத்திய தலைவர்கள் பல பத்திரிகைகளின் ஆசிரியர்களாக இருந்தார்கள். அவர்களின் பத்திரிகைகள் அச்சகத்திலிருந்து வெளிவரவுள்ளதென்றால் இன்று எதனை எழுதியுள்ளார்களோ என்று அந்த அரசாங்கமே நடுநடுங்குமாம். அந்த அளவுக்கு முஸ்லிம் சமூக விடுதலை குறித்து எழுதியதற்காக பல எழுத்தாளர்களும், பத்திரிகைகளின் ஆசிரியர்களும் தூக்கு மேடைகளையும் சந்தித்து தங்களின் வீரமரணத்தை ஏற்றிருக்கின்றார்கள்.’

‘வரலாற்றில் முஸ்லிம் சமூகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு ஊடகத்தைப் பயன்படுத்துவதில் பாரிய செல்வாக்கையும், பங்களிப்புக்களையும் செய்துள்ளது. இந்த உலகத்தில் பல பத்திரிகைகளும், பல சஞ்சிகைகளும் தங்களின் தனித்துவத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் முஸ்லிம்களின் இருப்பை உறுதிசெய்து கொள்வதற்காகவும் பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளன. இன்றும் செய்து வருகின்றன. ஆனால், நமது இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மாத்திரம்தான் அது வெறும் அற்பத்தனமான சுய இலாபங்களுக்காக, தனிப்பட்ட தேவைகளுக்காக, பத்திரிகைகள் வெளியிடப்பட்டு வந்துள்ளதைக் காண முடிகின்றது.’

‘நம்மை எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகளின் ஆழ அகலங்களை நாங்கள் ஆழ்ந்து நோக்கினால் நிம்மதியாக நம்மால் வீடுகளில் தூங்க முடியாது சகோதரர்களே..! இன்று முஸ்லிம் சமூகத்தின் கல்வி அதல பாதாளத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. கொழும்புப் பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மிகப்பாரிய வீழ்ச்சியைக் கண்டு வருகின்றது. மத்திய மலை நாடுகளில் சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற முஸ்லிம் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் சிக்கலான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. எமது மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டு சென்று கொண்டிருக்கின்றது. கடந்த ஒன்பது மாத காலத்தில் நமது பிரதான வீதியில் இருந்த 23 கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. 640 சகோதரர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை வாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். இதில் 53 வயதுடைய முதியவர் ஒருவரும் அடங்குகின்றார். இன்று பொருளாதாரத்தில் நாம் வளர்ந்து வருவதாக தம்பட்டம் அடிக்கின்றோம். ஆனால் நமது பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. புதிய வியாபார உத்திகளைப்பற்றி நாம் சிந்திப்பதில்லை. இந்நிலையில் சகோதரர் முஹ்ஸின் ஆசிரியர் அவர்கள் சொல்வதுபோல் எமது பூர்வீகமும் மறுக்கப்பட்டு நாங்கள் அறபு நாடுகளிலிருந்து வியாபாரத்துக்காக வந்தவர்கள்; அங்கேயே சென்று விட வேண்டும் என்றும் சொல்லுகின்ற அளவுக்கு சிங்களப் பேரினவாதம் இந்நாட்டில் தலைதூக்கியிருக்கின்றது.’

‘எமது பூர்வீக மறுப்புக்கு எதிராகத் துணிந்து ஒரு வார்த்தையேனும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு மஹிந்தவின் சால்வையில் தொங்கிக் கொண்டிருக்கின்ற நமது அரசியல் தலைவர்கள் இன்று நக்குண்டு நாவிழந்து கிடக்கின்றார்கள்! ஏனிந்த அவலம் இந்த முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளுக்கு வர வேண்டும்?’

‘நாங்கள் வந்தேறு குடிகளல்ல; இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள்தான் என்று இந்த சகோதரர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்களின் ‘வார உரைகல்’ பத்திரிகையைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையுமே இது வரைக்கும் முஸ்லிம் சமூகத்தின் பூர்வீகத்தை மறுத்த சம்பிக்க ரணவக்கவுக்கு தமிழில்கூட பதில் சொல்வதற்கு திராணியற்றதாக முஸ்லிம் ஊடகங்களை வைத்துக் கொண்டிருக்கின்ற நமது முஸ்லிம் சமூகம், எதிர்காலத்தில் எதனைச் சாதிக்கப் போகின்றது? என்று இந்த நூறாவது இதழின் பெயரால் கேட்கின்றேன்.’

‘சிங்கள ஊடகங்களில் இப்போது பேசவும், எழுதவும் வேண்டிய கடமைப்பாட்டில் நாம் இன்று இருக்கின்றோம். இந்த நாட்டின் வரலாற்றில் முஸ்லிம்களான நாம் செய்த பங்களிப்புக்கள் என்னென்ன என்பதை சிங்கள சமூகத்தின் புதிய பரம்பரைக்குச் சொல்லிவைத்து அவர்களின் தவறான முடிவுகளைத் திசை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். தமிழ்ப் பேரினவாதத்தின் அடக்கு முறைகளுக்குள் இருந்து இப்போது நாம் ஓரளவு விடுபட்டு இருந்தாலும், இன்னுமொரு சிங்கள அடக்கு முறைக்கு நாம் ஆட்படுவோமோ? என்றொரு அச்சம் எமது சமூகத்திற்கு இப்போது ஏற்பட்டு இருக்கின்றது.’

‘ஏனெனில் அவர்கள் தங்களின் பரம்பரைக்கு புதிய வரலாறொன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். தமிழர்கள் சொல்வது போன்று இன்று அவர்களும் சொல்கிறார்கள். சேர். பொன்னம்பலம் இராமநாதன், ‘எங்களுக்கு இங்கே எந்த உரிமையும் கிடையாது; நீங்கள் தமிழர்களின் வழிவாறுதான்’ என்று சொன்னது போன்று இன்று சிங்களவர்களும் ‘நீங்கள் இந்நாட்டுக்குரியவர்களல்ல; நீங்கள் அரேபியாவிலிருந்து வந்தவர்கள், அங்கேயே சென்று விடுங்கள்’ என்று கூறுகிறார்கள். சிங்கள மொழியில் இன்று நாங்கள் எதனைப் பேசிக் கொண்டிருக்கின்றோம்? எதனை எழுத்துருவில் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்? எதுவுமே இல்லை!’

‘எனவே, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கின்ற இன்றைய நிலையில் முஸ்லிம் சமூகம் மிகக் கனதியாகச் சிந்திக்க வேண்டிய ஒரு சூழலில் இவ்வாறு ஒரு சிறிய கூட்டத்தை இங்கே வைத்துக்கொண்டு முஸ்லிம் ஊடகம் பற்றி இந்நூறாவது வெளியீட்டில் பேசிக் கொண்டிருக்கின்றோம்.’

‘எங்களுக்குத் தலைகளோ எண்ணிக்கைகளோ முக்கியமல்ல. சாதிக்கின்ற பத்து மனிதர்கள் இருந்தால் எதனையும் சாதிக்க முடியும்! அதற்கு சகோதரர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்கள் நல்லதோர் உதாரணம். ஒரேயொரு மனிதன்! அவர் வெளியிடுவதோ ஒரு வாரப் பத்திரிகை!! இங்கு பல ஊடகவியலாளர்கள் இருக்கின்றார்கள். ஒரு வாரப் பத்திரிகையைக் கொண்டு வருவதென்றால் அதற்குப் பின்னால் இருக்கின்ற சிக்கல்கள், கஷ்டங்கள், பிரச்சினைகள் எல்லாம் எவ்வளவு என்பது அவர்களுக்குத் தெரியும். சகோதரர் புவி அவர்கள் இரவு வேளைகளில் தூங்காமல்தான் இப்பணியைச் செய்து வருகின்றார் என நான் நினைக்கின்றேன். இல்லாவிட்டால் இப்படியொரு வாரப் பத்திரிகையை இலகுவாகக் கொண்டுவர முடியாது. அவரே இப்பத்திரிகையின் அத்தனை பணிகளையும் தனியொரு மனிதனாக இருந்து செய்வது வருவதுடன் முஸ்லிம் சமூகம் இன்று எதிர்நோக்கியிருக்கின்ற ஊடகப் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்கின்ற ஒரு பெரிய போராட்டத்திற்கும் அவர் முகங்கொடுத்துச் செல்கின்றார்.’

‘அதற்காக அவர் கொண்டிருக்கின்ற எல்லாக் கருத்துக்களையும் நான் அங்கீகரிக்கவில்லை. எனக்கும் மாற்றுக் கருத்தும், விமர்சனங்களும் அதில் இருக்கின்றன. ஆனால், அந்த சகோதரனின் இந்தப் பாரிய முயற்சியை என்னுடைய சுயநலத்திற்காக, என்னுடைய தேவைக்காக, என்னுடைய அரசியல் எதிர்பார்ப்புக்காக ஒரு போதும் எள்ளிநகையாடவோ, தரங்குறைத்து மதிப்பிடவோ, குண்டர்களை வைத்து அடித்து நொறுக்கி அழித்தொழிக்கவோ முயற்சிக்க மாட்டேன்!’

‘கடந்த 99வது வார இதழைப் பார்த்தபோது அதில் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகின்றது என்ற செய்தியைப் பார்த்ததும் மிகவும் மனவேதனையாக இருந்தது. ஏன் இந்த அநாகரீகமான பண்பாட்டுக் கலாசாரத்தை நாம் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம்? விமர்சனங்களை விமர்சனங்களால் பேசுவோம். எழுத்துக்களை எழுத்துக்களால் எதிர்கொள்வோம். கருத்துக்களை கருத்துக்களால் வெல்வோம். இப்பத்திரிகையைப் பயன்படுத்தி ஆரோக்கியமான விவாதங்களை நாம் முன்னெடுப்போம்.’

‘சகோதரர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்களின் இந்த ‘வார உரைகல்’ பத்திரிகை, அநியாயத்தை அநியாயமென்று சொல்ல வேண்டும். நியாயத்தை நியாயமென்று சொல்ல வேண்டும். விமர்சிக்க வேண்டும். ஆரோக்கியமான கருத்தாடல்களை அது கொண்டுவர வேண்டும். அதற்கு இங்கு வந்திருக்கின்ற சமூக அக்கறையுள்ள நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர் தான் ஏழாம் வகுப்பு வரைக்கும்தான் படித்திருப்பதாகச் சொல்லுகின்றார். அவருக்கு 52 வயது. பல நோய்களுக்கு மத்தியில் இருக்கின்ற இந்தச் சகோதரர் அவரால் முடிந்த பணியை செய்து கொண்டிருக்கின்றார். இதனை ஒரு புதிய பரம்பரையினரிடம் கையளித்துச் செல்ல நாம் வழி வகுக்க வேண்டும். புதிய பரம்பரை அவரது இப்பணியை முன்னெடுத்துச்செல்ல முன்வர வேண்டும்.’

‘இந்தப் பத்திரிகையில் பெண்களுக்கான ஒரு பகுதியும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கின்றோம். அவரது மகள் அப்பகுதியை மிகக்கவனமாக எழுதி வருகின்றார். அவருடைய எழுத்துக்களை நான் மிகக் கவனமாக வாசித்து வருகின்றேன். உண்மையில் பெண்களின் சீர்திருத்தத்தை நோக்கி அவர் அந்தச் சிறிய பகுதியை நகர்த்தி வருவதை நான் கவனிக்கின்றேன். இதிலிருந்து சகோதரர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்கள் ஒரு வாரிசையும் இந்தச் சமூகத்துக்கு உருவாக்கி வைத்திருப்பது எமக்குப் புலனாகின்றது. எனவே எதிர்காலத்தில் அவரிடமிருந்து இப்பத்திரிகை ஒரு புதிய பரம்பரையிடம் கைமாறுவதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது. அதனையும் நாம் கவனமாகக் கட்டமைக்க வேண்டிய தேவை எமக்கெல்லாம் இருந்து கொண்டிருக்கின்றது.’

‘ஊடகம் என்பது இன்று ஒரு பாரிய துறையாகும். கலாநிதிப் பட்டம் வரைக்கும் பல்கலைக் கழகங்களில் கற்பதற்கான பாடத் திட்டங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு பாரிய துறை. இப்பொழுதுதான் நமது ஒருசில மாணவர்கள் டிப்ளோமா வரைக்கும் இத்துறையில் சென்றிருக்கிறார்கள். ஆனால் புவி றஹ்மதுல்லாஹ் அவர்களுக்கு அதில் ‘அ’னாவும் தெரியாது. ‘ஆ’வன்னாவும் தெரியாது. அவர் எந்தப் பல்கலைக் கழகத்திலும், எந்தப் பாடத்திட்டத்தையும் கற்கவில்லை. ஆனால், மிகக் கனகச்சிதமாக ஒரு திறமையான பத்திரிகையாளன் செய்கின்ற பணியை அவர் செய்து வருகின்றார். அது அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருக்கின்ற ஆற்றல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.’

‘இப்பொழுது இந்த சகோதரன் இந்த சமூகத்தின் பாரிய பிரச்சினைகளை தனது பிரச்சினைகளாக தன்னுடைய முதுகின்மேல் சுமந்துகொண்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இந்த சமூகத்தின் பிரச்சினைகளை எல்லோருக்கும் தெரியப்படுத்துகின்ற அளவுக்கு இந்த சமூகக்களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கின்றார். அதனால், பல வீதிகள் இன்று சீர்திருத்தம் கண்டிருக்கின்றன. கவனிப்பாரற்றுக்கிடந்த பல வீதிகளை பலர் இன்று கவனத்தில் எடுத் திருக்கின்றார்கள். எத்தனையோ வீதிகளில் மின்விளக்குகள் இல்லாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி அவர் எழுதியதால் இன்று அந்த வீதிகள் வெளிச்சம் அடைந்துள்ளன. இவையெல்லாம் ஒரு ஊடகம் செய்கின்ற பாரிய சமுதாயப் பணிகள் என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது.’

‘எனவே அவரால் முடிந்ததைச் செய்வோம் என்பதை விட்டுவிட்டு, செய்ய வேண்டியதைச் செய்வோம் என்ற பணியில் அவர் இப்போது இறங்கியிருக்கின்றார். இந்தச் சமூகத்தில் அவர் எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்து கொண்டிருக்கின்றார். எனவேதான் நாங்களும் அவருக்கு பக்கபலமாக இருக்கின்றோம். எங்களின் தேவைக்காக, எங்களைப் புகழ்வதற்காக, எங்களைத் தூக்கிப் பிடிப்பதற்காக, எங்களுடைய அரசியல் அஸ்திவாரத்தை இங்கு நாம் போட்டுக் கொள்வதற்காக அவரை நாம் ஆதரிக்கவுமில்லை. அவர் எங்களை ஆதரிக்கவுமில்லை. கொள்கைக்காக அவரை ஆதரிக்கின்றோம்! கொள்கையில் நான் தவறு செய்தாலும் அவர் என்னையும் கேள்விக்குட்படுத்த வேண்டும். கொட்டை எழுத்துக்களில் விமர்சிக்க வேண்டும். அதனை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம். ஆரோக்கியமாக அதுபற்றி விமர்சிப்போம். எங்களை விமர்சிக்கக் கூடாது, எங்களைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அவரை, அவரது இந்த பத்திரிகை வெளியீட்டு முயற்சியை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.’

‘என்னிடம், ஏன் இந்த ‘முஸீபத்’தை நீங்கள் ஆதரிக்கின்றீர்கள்? ஊட்டி வளர்க்கின்றீர்கள்? என நேரில் பலர் கேட்டிருக்கின்றார்கள். அவர்களை நான் எனது வீட்டுக்கு அழைத்துச் சென்று எனது புத்தக அலுமாரியிலிருந்த அத்தனை பத்திரிகைகளையும் எடுத்து எண்ணிக் காண்பித்து, ‘இத்தனையும் பிற ஊர்களில் இருந்தும், நிறுவனங்களாலும் வெளிவருகின்ற பத்திரிகைகள். இதில் ஒன்றாவது எமதூரைப்பற்றிப் பேசுகின்றதா? எமது மக்களின் பிரச்சினைகளை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றதா?’ என்று திருப்பிக் கேட்டிருக்கின்றேன். இல்லை என்பது தான் அவர்களின் பதிலாக இருந்தது. அதற்காகத்தான் இந்த ‘முஸீபத்’தை நாங்கள் ஊட்டி வளர்க்கின்றோம் என்று அவர்களிடம் சொல்லி இருக்கின்றேன்.’

‘உங்களால் இதைவிட ஒரு நல்ல ‘முஸீபத்’ தைக் கொண்டுவர முடியுமாக இருந்தால் கொண்டு வாருங்கள். இதனை விட்டுவிட்டு அதற்கு உதவி செய்வோம். உங்கள் பார்வையில் ‘வார உரைகல்’ ஒரு ‘முஸீபத்’ தாகவே இருக்கட்டும். என்னுடைய பார்வையில் இத்தனை பிற ஊர்ப் பத்திரிகைகளுக்கு மத்தியில் ‘வார உரைகல்’லை ஒரு அருளாகவே நான் பார்க்கின்றேன். அதற்கு ஊக்கம் கொடுக்கின்றேன் என்று அவர்களுக்குச் சொல்லி அனுப்பினேன்.’

‘எனவே, பிழையாக விளங்கிக்கொண்டு எங்களைப் பிழையாக விமர்சிப்பவர்களுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களின் பிழையான விமர்சனங்களுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். ஒதுங்கிக் கொள்ள மாட்டோம். ஓடி ஒளித்துக் கொள்ளவும் மாட்டோம்! சமூகத்தில் அவ்வப்போது ஏற்படுகின்ற பிரச்சினைகளையும், சிக்கல்களையும் எந்தத் தளத்தில் நின்று பேச வேண்டுமோ அந்தத் தளத்தில் நின்று நாங்கள் அவற்றை அணுகிக் கொண்டேயிருப்போம்.’

‘எனவே அன்புக்குரிய சகோதரர்களே..! சகோதரர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இந்த வகையில் நூறாவது இதழில் இருந்து அது இன்னுமொரு படியை எட்டுகின்றது.’

‘இன்று முதல் இணையதளத்திலே ‘வார உரைகல்’ தன்னுடைய பதிவுகளை ஆரம்பிக்கின்றது. எதிர்காலத்தில் சர்வதேச வலைப்பின்னலொன்றை அது பெற்றுக்கொள்வதோடு இந்த நாட்டிற்குள்ளேயும், வெளியேயும் வாழுகின்ற பல சகோதரர்களுக்கும் பல செய்திகளைக் கொண்டு செல்லப் போகின்றது. இன்று தொடக்கம் சர்வதேச தளத்தை நோக்கிச் செல்லப்போகும் சகோதரர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்களின் பணி மிகக் கவனமாகவும், சமூகப்பொறுப்புடனும் முன்னெடுக் கப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் நான் இத்தருணத்தில் அவரின் கவனத்திற்கு எத்திவைக்க விரும்புகின்றேன்.’

‘நான் ஐம்பதாவது இதழ் வெளியீட்டில் சொன்னது போன்றும் நீங்கள் எதிர்பார்ப்பது போன்றும் ‘வார உரைகல்’லின் முடக்கம் அல்லது அதன் இறுதி அஸ்தமனம் என்பது சில வேளை இந்த ஊரில் ஒரு தாய் பெற்ற மகனின் கையிலிருந்து வரும் ஒரு துப்பாக்கி வேட்டால்கூட வர முடியும்! இந்தப் புவி றஹ்மதுல்லாஹ்வின் எழுத்துக்களில் உடன்பாடில்லாத சக்திகள் அவருடைய உயிருக்கே உலை வைக்க முடியும்! அது இந்த சமூகத்தில் நடந்து விடக்கூடாது என நான் பிரார்த்திக் கின்றேன். அவ்வாறு நடந்தால், ஊடகம் என்ற இந்தப் போராட்டத்தில் - ஊடகப் போராட்டம் என்ற இந்தப் பயணத்தில் அவர் தூய்மையோடு பயணித்திருந்தால் அது அவருக்கு ஒரு உயர்ந்த சுவனத்திற்கான முதலீடாக மாறும்!’

‘எனவே, ஆசிரியர் புவி றஹ்மதுல்லாஹ் அவர்களே! மிகத் தூய்மையோடு நீங்கள் கால்பதித்து வருகின்ற இந்த ஊடகப் போராட்டப் பயணத்திலே நீங்கள் தொடர்ந்தும் முன்னேறிச் செல்லுங்கள். இன்னும் ஒரு பரம்பரை இதனைப் பாதுகாத்துக் கையேற்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. இன்ஷா அல்லாஹ்! எதிர்காலத்தில் நாம் இந்தக் கிழக்கு மாகாண முஸ்லிம்களினதும், தேசிய முஸ்லிம்களினதும் பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்ற - ஆரோக்கியமாக விமர்சிக்கின்ற, கருத்தாடல் செய்கின்ற ஒரு ஊடக தர்மத்தை உருவாக்கிட அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பான். அதற்கு முன்னணியில் நின்று போராடிய ஒரு போராளி என்ற அந்தஸ்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். வேறு எங்களால் உங்களைப் புகழ முடியாது. உங்களைப் புகழ்ச்சிகளால் அழித்துவிட நான் விரும்பவில்லை. விமர்சனங்களால் வாழ வைக்கவே விரும்புகின்றேன். எனவே, விமர்சனங்களால் வாழ்வோம்! வெறும் புகழ்ச்சிகளால் அழியாதிருப்போம்!! அல்லாஹுத் தஆலா நம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக, வஆஹிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்!!!

(உரைவடிவ உதவி: எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ்)

http://vaarauraikal.wordpress.com/2009/01/...F%8D-%E0%AE%85/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.