Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாயும்புலி சர்க்கஸ்புலி ஆனகதை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெருகேறிக் கொண்டிருந்தது மெரீனா கடற்கரை. தேசப்பிதா மகாத்மா காந்தி சிலையின் அருகே கூடியது அலப்பறை டீம். தலையை தொங்கவிட்டுக் கொண்டே சுவருமுட்டி சுந்தரம், "தப்பா நினைக்கக் கூடாது. தேர்தல் நெருங்கிட்டு வருது. பிரச்சாரம் சூடுபிடிக்குது. வேண்டப்பட்ட கட்சிக்கு கூடமாட சுத்தினாதான் தண்ணீர் பஞ்சம் இல்லாம இருக்க முடியும். அதனால அடிக்கடி அலப்பறைய கூட்டணுமான்னு யோசிங்க..." என்றார். அவரது தண்ணீர் பற்றை நினைத்து கொல்லென்று சிரித்து விட்டது டீம்.

"ஏலே சுவருமுட்டி. எதுக்குய்யா தண்ணீர் விஷயம் பற்றி அம்புட்டு அக்கறை காட்டுறே. விஷயம் இல்லாம இப்படி உளற மாட்டாயே..."- கோபாலு.

"அப்படிப் போடு ஃபுல்பாட்டிலை. என்னா விஷயம்னா சென்னைக்கு அடுத்து இருக்கிற அரக்கோணம் தொகுதியில எம்.பி.க்கு நிக்குறாரே... அதாம்பா ஆளுங்கட்சி ஆசீர்வாதத்துல ஜெகமானவரு. நாம ஜெயிக்கிறோமோ தோக்குறோமோ, தொகுதிக்கு தண்ணீர் பஞ்சம் வந்துடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு வேலை செய்யறாராம்..."- சுவருமுட்டி.

"எம்புட்டு நல்ல விஷயம். இந்த வெயில் காலத்துல தண்ணி பஞ்சம் இல்லாம வச்சுக்க பாடுபடறாருன்னா நல்ல விஷயம்தானே...?"- அன்வர்.

"அட நீங்க நினைக்குற மாதிரி இல்லப்பா. இது டாஸ்மாக் தண்ணி. ஜெகமான அந்த வேட்பாளருக்கு சொந்தமா ஒரு மதுபான கம்பெனி இருக்கு. ஆளும்கட்சி ஆசீர்வாதத்துல ஒதுக்கிக் கொடுத்தது. அதுல ஆளுங்கட்சி முக்கிய பெண்மணி ஒருவருக்கும் பங்கு இருக்குன்னு வேற பேச்சு இருந்தது. அந்தக் கம்பெனியிலதான் இப்போ கணக்கு வழக்கு இல்லாம டாஸ்மாக் பானம் தயாராகுதாம். அவரோட தொகுதிக்கு மட்டும்தான் சப்ளைன்னு நினைச்சா தப்பு. தெற்கே வரைக்கும் பாயுதாம். இதுவெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். ஆழமா இறங்கி பேசுனா ஏடாகூடம் வந்துடும். எதுக்கு வம்பு..?" என்று கண்சிமிட்டிய சுவருமுட்டி, "நாட்டுல வேற என்னப்பா விசேஷம்..?" என்றார்.

"நிறைய இருக்கு. முக்கியமானதை மட்டும் சொல்றேன்..." என்ற சித்தன், குறிப்புத் தாளை புரட்டிப் புரட்டிப் பார்த்தார். "ஐகோர்ட் மூலமா புதுவிஷயம் ஒண்ணு வெடிக்கப்போகுது. ரெண்டு வழக்கு. ரெண்டுமே தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தலைவலிய கொடுக்கறதுதான். ஒன்று மூத்த வக்கீல் கருப்பன் மூலமா கிளம்புது. இலங்கைக்கு ஆயுத உதவி, ஆள் உதவி யாரை கேட்டுக் கொடுத்தீங்க. ஆயிரம்கோடி பணம் கொடுத்த நோக்கமென்ன...? இந்தியர்களோட வரிப்பணத்தை இப்படி கண்டமேனிக்கு செலவு செய்ய அதிகாரம் கொடுத்தது யாரு. மந்திரிசபையா? எப்போ கூடி முடிவெடுத்துச்சு. என்னவென்று முடிவெடித்தது. இல்ல, பிரதமரா...? இப்படி அவர் தனியா முடிவெடுக்க அதிகாரம் இருக்கா? அப்படீன்னு கேட்டு ஒரு வழக்கு போட்டிருக்காரு. எப்படியோ வழக்கு ஏற்கப்-பட்டிருக்கு. பிரதமருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் விளக்கம் தாங்கோ அப்படீன்னு உத்தரவு போட்டிருக்காரு நீதிபதி..."

"அப்படிப்போடு அருவாளை. செம கேள்விப்பா. தேர்தல் நேரத்துல காங்கிரஸ் எப்படி சமாளிக்கப் போகுதோ. சபாஷ் சரியான போட்டின்னு சொல்ல வேண்டியதுதான். அடுத்ததை சொல்லுப்பா"- கோபாலு.

"இன்னொரு வழக்கு, திருச்சி வேலுசாமி போடுறது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பல திருப்புமுனை அவரை மையமா வெச்சுதான் நடந்தது. ஜெயின் கமிஷன் அபிடவிட் தாக்கல் செய்தவரு. அவரோட வாக்குமூலத்தை வச்சுதான் சுப்ரமணியசாமி, சந்திராசாமி மேல எல்லாம் விசாரணை நடத்தணும்னு ஜெயின் கமிஷன் சொன்னது. உண்மைக் குற்றவாளிகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று தீர்ப்பு சொன்னது. அந்த அடிப்படையில்தான் இப்போ நீதிமன்றத்துல ஒரு வழக்கு போட்டிருக்காரு வேலுசாமி. இதுக்கு வழக்கறிஞரும் அதே கருப்பன்தான். ராஜீவ் கொலையில் உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெயின் கமிஷன் சொன்னபடி சுப்ரமணிய சாமி, சந்திராசாமியை எல்லாம் கடந்த பத்து வருஷமா விசாரிக்காமலே விட்டு வச்சிருக்கிறது ஏன்? என்ன காரணம். இப்படி ஜெயின் கமிஷன் சொன்ன பிறகும் மௌனமாக இருந்து கொண்டு நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட பலரையும் 17 வருஷமா ஜெயிலுக்குள்ள வச்சிருந்தா எப்படி..? அதுக்கு யார் பொறுப்பு..? ஜெயின் கமிஷன் சொன்ன உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சிக்காமலேயே நளினி வகையறாக்களை சிறையில் வைத்திருக்க காரணம் என்ன? பதில் சொல்வது யார் என்றெல்லாம் கேட்டிருக்கிறார். சர்வதேச மனித உரிமை எல்லாம் இதில் வருது. பெரும்தொகை நஷ்டஈடும் கோரப்படுகிறது. இதுல யார் யார் தலையை உருட்டப் போகுதுன்னு தெரியல..." என்ற சித்தன்.. "நான் வேற விஷயத்துக்கு வர்றேன். பண்பாடான ஒரு அரசியல் தலைவரே இப்படி பேசலாமான்னு சிறுத்தைகள் கோபமா இருக்காம்" என்று அடுத்த விஷயத்துக்குத் தாவினார்.

"மொட்டையா சொல்லாதய்யா. முழுசா சொல்லும்யா..."- அன்வர்.

"யாரு. நம்ப கம்யூனிஸ்ட் தா. பாண்டியன்தான். இலங்கைத் தமிழர் படுகொலை பிரச்னையில முன்ன திருமாவளவன் காங்கிரஸ் அரசுதான் காரணம்னு எகிறினாரு. புலி மாதிரி பாய்ஞ்சாரு. இப்போ பார்த்தா சர்க்கஸ் புலி மாதிரி வித்தை காட்டிக்கிட்டு வர்றாருன்னு ஒரு பேட்டியில சொல்லிட்டாரு. அதுலதான் திருமா தரப்பு கடுப்பாயிருக்கு. அந்த மாதிரி பேசலாமான்னு குமுறுது. ஆனா கம்யூனிஸ்ட்டுங்க மட்டுமில்ல. அந்த பேட்டிய படிச்சவங்க எல்லோருமே தோழர் சொன்னது ரொம்பக் கம்மி. கௌரவமா சொல்லியிருக்காரு அப்படீன்னு காய்ச்சுறாங்க. உலகத் தமிழர்கள் மத்தியிலேயும் திருமா மீது கடும் அதிருப்தியாம். அதையெல்லாம் எப்படி தீர்க்கப்போறாரோன்னு தெரியலைப்பா..." என்றார் சித்தன் வருத்தமாக.

"அதுக்கென்னா போச்சு. சர்க்கஸ் புலிதான. திரும்ப ஒரு பல்டி அடிச்சாப் போதும். எல்லாம் சரியாப் போயிடும்..." என்ற சுவருமுட்டி, "நான் அண்ணன் வைகோ விஷயத்துக்கு வாரேன். அவரை வச்சு உள்ளே வா, வெளியே வா பந்தயம் நடக்குதே தெரியுமா? போன ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு விடுதலைப்புலிகள் மேல ரசாயன குண்டை வீசியிருக்கார் ராஜபக்சே. சர்வதேசமே குமுறிக்கிட்டு இருக்கு. போர்விதி மீறல் எனக்கு கிடையாதுன்னு சொல்றாரு ராஜபக்சே. நேருக்கு நேரா மோத முடியாம ரசாயன குண்டு வீசுனதுல முக்கியத் தளபதிகள் உள்பட ஐநூறு புலிகள்வரை அப்படியே செத்துப் போயிருக்காங்க. அந்த செய்தி வைகோவுக்கு எட்டினப்பவே குமுறி அழுதுட்டாராம். முன்ன ஒரு தடவை இவரு அங்க போயிருந்தப்போ பொடியர்களா பாதுகாப்புக்கு இருந்தவங்கதான் இப்போ இறந்து போன முக்கிய தளபதிகளாம். மனரீதியா ரொம்ப துவண்டு போயிட்டாரு வைகோ. அந்த அநியாயத்தை எதிர்த்துதான் புதன்கிழமை தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் போராட வந்துடுச்சு. பழ.நெடுமாறன், ராமதாஸ், வைகோ என பழைய டீம் எல்லாம் அப்படியே இருந்தது. திருமாவளவன் மட்டும்தான் மிஸ்ஸிங். கூட்டணி வேற. இது வேற. வாங்க சேர்ந்து நடத்தலாம்னு கூப்பிட்டாங்க. கூட்டத்துல காங்கிரசையும் தி.மு.க.வையும் தாக்கிப்பேசுனா தனக்கு சிக்கலாயிடுமோன்னு பயந்தாரோ என்னவோ, நான் மாட்டேன். தனியா ஒரு போராட்டத்தை நடத்திக்கிறேன்னு சொல்லிட்டாராம். அதுக்குப் பிறவுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் போராட்டத்துக்கு வந்தது. அதுல உணர்ச்சி வசப்பட்ட வைகோ, பிரபாகரன் மீது ஒரு துரும்பு விழுந்தாலும் ரத்த ஆறு ஓடும். இளம்படை கடல்தாண்டிச் சென்று ஆயுதம் ஏந்தும். நானும் அங்கு ஆயுதத்தை எடுப்பேன் என்றெல்லாம் குமுறி விட்டார். கூடவே காங்கிரஸ், தி.மு.க.வை காய்ச்சிட்டாரு. அதை அதுக்கென்றே இருக்கும் மீடியாக்கள் விடாம நியூஸ் போட்டு பெரிசா ஊதிக்கிட்டே இருந்தாங்க. இறையாண்மைக்கு எதிரா பேசுன வைகோ மீது நடவடிக்கை என்று கிளப்பி விட்டுட்டாங்க. அதே மாதிரி ஆயிடுச்சு. இப்போ அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வார்களா இல்லையா என்று பந்தயமே நடக்குதுப்பா"

"ஆமாம்யா. அதைக்கூட ஒரு குரூப் வேறமாதிரி கிளப்பி விடுது. அ.தி.மு.க கொடுத்த நாலு தொகுதியிலேயும் அவருக்கு திருப்தியில்லை. சீட்டு கொடுக்கிறதுலேயும் இழுத்தடிச்சு அவமானப்படுத்திட்டாங்க. அதனால வெறுப்பு. இப்படி ஏதுனா ஏடாகூடமா பேசி உள்ளே போய் உட்கார்ந்துட்டா வசதின்னு நினைக்குறாரு அப்படீன்னு பேசிக்கிட்டு திரியறாங்க. உண்மையா?"- சித்தன்.

"என்னைய மாதிரி குடிகாரன்கூட ஓரளவு நிதானமா பேசுவாங்க. வைகோ மேல இருக்குற கடுப்புல அப்படிக் கிளப்பி விடுவதே தி.மு.க தரப்புதானாம். பிரபாகரன் விஷயத்திலேயும் சரி. புலிகள் விஷயத்திலேயும் சரி. வைகோ எப்பவும் அப்படித்தான். ஒரிஜினலாவே உணர்ச்சி வசப்படுவாரு. வேண்டப்பட்டா ஒரு பேச்சு. வேண்டாதப்போ ஒரு பேச்சுன்னு ஆகிப்போச்சு உலகம்..." என்ற சுவருமுட்டி,

"தி.மு.க கூட்டின இலங்கைத்தமிழர் ஆதரவுப் பேரணிக்கு போயிருந்தேன். பேரணி முடிவுல கூட்டம் நடந்துச்சு. கி.வீரமணி பேசுனப்போ கூட்டணிக்காக கதவைத் தட்டி கெஞ்சோ கெஞ்சு எனக் கேட்டு சீட்டு வாங்குகிறார்கள்... என்று பேசி எதிரணியை தாக்குவதாக கொஞ்சம் ஓவராகவே அடிச்சாரு. திருமா பேசும்போது, கலைஞர்தான் ஒரே தமிழின பாதுகாவலர். அவர்தான் காப்பாற்ற முடியும். வேறு யாராலேயும் முடியாதுன்னு சர்க்கஸ் காட்டினவரு, கலைஞர் ஏதும் முடியாத கையறு நிலையில் இருக்காருன்னு திருப்பித்திருப்பி சொல்லிக்கிட்டே இருந்தது தி.மு.க லீடர்கள் மத்தியில முகம் சுளிக்க வச்சுடுச்சு..."

"அது சரி. எப்படிப்பட்ட வேலைக்காரர் கலைஞர். அவரைப்போய் முடியாதவர்னு சொன்னா சரிப்படுமா..?"- கோபாலு.

"சரி. விஷயத்துக்கு வாரேன். கலைஞர் அந்தக்கூட்டத்துல ஒரு கதை சொன்னாரு. அர்த்தம் புரியுதா பாரு. மாவீரன் அலெக்சாண்டர் பலநாடுகளை வென்றவன். இந்தியாவுக்கும் வந்தான். புருஷோத்தமன் என்ற போரஸையும் வென்றான். தோல்வியுற்ற புருஷோத்தமனைப் பார்த்து உன்னை எப்படி நடத்த வேண்டும் எனக் கேட்க, ஒரு மன்னனாகவே நடத்த வேண்டும் என்றார் போரஸ். அதன்படியே செய்தான் அலெக்சாண்டர். அதைப்போன்று இலங்கையில் பிரபாகரனை பிடித்தால், அதிபர் ராஜபக்சே அவரை மதித்து நடத்த வேண்டும். இது பிரபாகரனை மட்டும் எனக் கூறவில்லை. அங்குள்ள தமிழர்கள் அனைவரையும் சமமாக மதித்து நடத்த வேண்டும். இல்லையென்றால் வரலாறு மன்னிக்காது... என்று பேசினார். ஏதாவது புரிகிறதா?"

"புரியுது. ஆனா புரியல. அதுதான் கலைஞர் பேச்சு. பிரபாகரன் பிடிபடுவார் என சூசகமாக கூறுகிறார் போலும். டெல்லித் திட்டம் அவருக்குத்தானே தெரியும்..."- அன்வர்.

"இதுதான் வம்பு விலைக்கு வந்து சேரும்னு சொல்றது. தேவையில்லாத விஷயத்தை ஏன்யா சொல்ற. சரி... நான் ம.தி.மு.க பக்கம் வாரேன். ஒருவழியாக அடம்பிடிச்சு அ.தி.மு.க.விடம் இருந்து நாலு சீட் வாங்கிட்டாரு. விருதுநகர் தொகுதியில வைகோ நிக்காரு. அந்தத் தொகுதில தி.மு.க- காங். கூட்டணி ரொம்பவும் கண் வச்சிருக்கு. விலைபோகக்கூடிய நல்ல ஆட்கள் யாராக இருந்தாலும் வாங்கிடணும். அந்தத் தொகுதியில வைகோவுக்கு வேலை செய்ய ஆளே இல்லைங்கிற சூழ்நிலைய ஏற்படுத்தணும். அவரு பாராளுமன்றத்துக்கு போகவேக் கூடாதென கங்கனம் கட்டியிருக்காங்க. போகப்போகப் பாருங்க..." என்றபடியே நேரத்தைப் பார்த்தார். "டாஸ்மாக் பானக்கடைக்கு முன்னாடியே போகணும். இல்லேன்னா கடைக்காரர் கோபப்பட்டுக்குவாரு. எம்மேல அம்புட்டுப் பாசம்..." என்றபடியே எழுந்தார் சுவருமுட்டி.

http://www.kumudam.com/dotcom/muchandi/ima...er/muchandi.jpg

குமுதம்

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்கஸ் கோமாளி என்பது தான் சரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.