Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் துரோகியா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடன் பிறப்பே!

இணையத்தில் என்னைப்பற்றி வரும் செய்திகளை நீயும் படித்திருப்பாய் என்று நம்புகிறேன். கருணாநிதி ஒரு துரோகி, முதுகில் குத்துபவன் என்றெல்லாம் இவர்கள் பேசுவதை கேட்கும்போது, தமிழினத்திற்கே என்னை தாரை வார்த்திட்ட நீண்ட நெடும் பயணங்களை, அறிஞர் அண்ணாவின் பாதையை பின் பற்றி என் ஈழத்து ததம்பிகளை காக்க நான் மேற்கொண்ட இடைவிடா முயற்சிகளை சற்றே எண்ணிப்பார்க்கிறேன்.

இலங்கையிலே எம்மினம் படும் துயர்களை எல்லாம் கேள்வியுற்று இன்று நீ கலங்குவதை போலவே நானும் கலங்கினேன். அய்யகோ, என் செய்வேன், அன்று நான் முதல்வர் நாற்காலியில் இல்லை. இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? வேதனையில் வெம்பினேன். துடித்தேன். துவண்டேன். கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக, வரைந்திட்டேன் உனக்கொரு மடல் முரசொலியின் மூலமாக. என் நெஞ்சத்து கனலை, ஆறாத ரணங்களை எல்லாம் நீயுமறிந்தாய். கண்ணீர் உகுத்தாய்.

புறநானூற்று போர்ப்படையே! எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அறிஞர் அண்ணா சொன்னதை அடியொற்றி வருபவன் உன் அண்ணன் என்பது பிறர் சொல்லியா உனக்கு தெரிய வேண்டும்? ஆயினும், கண்மணீ, ஈழ உடன்பிறப்புகளின் துயரம் வஜ்ஜிரம் போன்ற கடினமான என் இருதயத்தையும் பிளந்து, ரத்தம் வழிய செய்துவிட்டதடா! என் செய்வான் உன் அண்ணன்? புண்பட்ட நெஞ்சத்திற்கு மருந்தாக மதுவை நாட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளானான் உன் அண்ணன். மதுவின் போதையிலும் உன்னை மறப்பவனா இந்த அண்ணன்? என்னைபோல் நீயும் புண்பட்டிருப்பாய், வேதனையில் துடிப்பாய், அழுது புரள்வாய் என்றெல்லாம் எனக்கு தெரியாதா? நீயும் மதுவை நாடுவாய் என்று எனக்கு தெரியாதா? ஆனால் பாவம் நீ என்ன செய்வாய்? தேர்தல் வந்தால்தானே உனக்கு கோழி பிரியாணியும் ,குவார்டருன் கிடைக்கிறது? அது இல்லாத நேரங்களில் நீ உன் துயரை மறக்க என்ன செய்வாய்? உன் வருமானம் உன் வயிற்றை கழுவவே போதாதே?அன்றே முடிவு செய்தான் இந்த அண்ணன், உன் துயரத்தையும் தீர்க்க வேண்டுமென்று.

ஆமடா செல்லமே! அண்ணன் ஆட்சிக்கு வந்ததும், உன் நலனே என் நலனென்று கருதி, முந்தைய ஆட்சியில் அரசுடமையாக்கப்பட மது கடைகளை அப்படியே தொடர செய்தேன். அது மட்டுமா? baar நடத்த அனுமதி இல்லாமலிருந்ததை மாற்றி, அதற்கு அனுமதியும் கொடுத்தேன். நீ அலைந்து திரிய கூடாது என்று வீதிகள்தோறும் மதுகடைகள் திறக்க செய்தேன். அண்ணனின் அன்பையும், வாஞ்சையையும் புரிந்து கொண்ட நீயும் அங்கேயே குடித்தனம் நடத்தினாய். ஈழ துயரில் நாமிருவரும் பங்கு கொண்ட இந்த கண்ணீர் வரலாற்றை அறியாத புல்லர்கள் சொல்லுகின்றார், நான் ஈழ தமிழனின் எதிரியாம்.

ஈழ தமிழனின் சோகத்திலிருந்து உன்னை காக்க வேண்டிய மாபெரும் பொறுப்பை காலம் என் மீது சுமத்தியதை வரலாறு தெரிந்த எவரும் மறுக்க இயலாது. அதனால்தான் நீ சிரித்திருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழர் பண்பாடாம் ஆடல் கலையை முன்னிறுத்தி 'மானாட மயிலாட' என்னும் நவீன காவியத்தை, கருத்தோவியத்தை, இதயமெல்லாம் இனிக்க செய்கிற இன்னமுதை, தரணி வாழ் தமிழரெல்லாம் பரணி பாடும் வண்ணமாக எம் குடும்ப தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகிறோம். நீ சிரித்திருக்க வேண்டும் என்று இந்த அண்ணன் பாடுபடுவது தவறென்றால், ஆம், நான் துரோகிதான்.

கலிங்கத்துப் பரணியே! அண்ணன் செய்த சாதனைகளை இன்னும் கேள்! நீ மனம் மகிழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, உன் தளபதியாம், உன் தமையனாம், தமிழகம் ஈன்றெடுத்த தவப்புதல்வனாம், எதிரிகள் நடுங்கும்படி கர்ஜனை புரியும் இளம் சிங்கமாம், அடலேறு ஸ்டாலினை அகவை ஐம்பதை தாண்டினாலும் இளைஞர் அணியின் தலைவராக நியமித்தேன். இதனால் நீ உவகை கொண்டிட்டாய் என்பதும் தமிழர் வாழ்வு தக்கதோர் தலைமையின் கீழ் மலரும் என்று பேருவகை கொண்டிட்டாய் என்பதும் அண்ணன் நான் அறியாததல்ல. கட்சியில் மூத்தோர் பலரிருக்க ஸ்டாலினை ஏன் நியமித்தீர்கள் என்று சில அற்பப் பதர்கள் வினவும்போடு, அவர்களுக்கு வயதாகிவிட்டதால், சரியான முடிவெடுக்கும் ஆற்றல் இல்லாததால்தான் இந்த நியமனம் என்று நீ பதிலளிப்பாய் என்றும் இந்த அண்ணனுக்கு தெரியும்.

(நீ இத்தனைகாலம் இந்த பதவியில் இருந்து கிழிச்ச லட்சணம் எனகளுக்குதானே தெரியும்! வைகோவை வெளியேற்றியது , ஸ்டாலினை வளர்க்கத்தான் )

தமிழகத்தில் மட்டும் உன் சகோதரர்கள் கோலோச்சினால் போதுமா? இந்திய திருநாட்டின் தலைநகராம் டெல்லியில் அதிகாரம் செலுத்த வேண்டாமா என்னும் மனக்குறை உனக்கு நெடுநாளாய் இருப்பது அண்ணன் எனக்கு தெரியாததல்ல. உன்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய சாதனைகளில் அடுத்ததை என் பேரன் தயாநிதிமாறனை டெல்லியில் மத்திய அமைச்சராக நியமித்ததை சொல்லுவேன். வயிற்றெரிச்சல் படுபவர்கள் மறுபடியும், மூத்தோர் பலரிருக்க இவருக்கா பதவி என்று கூக்குரலிட்டபோது, இவருக்கு மட்டும்தான் இந்தி மொழி சரளமாக பேச எழுது முடியும் என்று நான் அளித்த பதிலில் நீ உச்சி குளிர்ந்திட்டாய் என்பதும் எனக்கு தெரியும். அல்லும் பகலும் அனவரதமும் உன் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாய் பணியாற்றி வரும் எனக்கு இவர்களின் கேலி ஒரு பொருட்டல்ல. ஈழ துயரை மறந்து நீ சிரித்திட்டால் போதும் என்னும் உயரிய நோக்கம் தவிர வேறொன்ருமில்லையடா செல்லமே!

(தமிழர்களை இந்தி படிக்கவிடாமல் தடுத்தது இந்த குள்ள நரிதான்)

சிலப்பதிகாரம் போற்றும் சீரிய சிங்கமே!

இலங்கை தமிழனுக்காய் நான் ஆற்றிட்ட எண்ணிலா பணிகளில் சிலவற்றை கூறுகிறேன் கேள். இவைகளை நீ நன்கு அறிந்துள்ளாய் என்றபோதும், கேட்பவர்கள் வாயடைக்க அண்ணன் இவற்றை மறுபடியும் உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தமிழர்கள் அங்கு கொல்லப்படுகிறார்கள் எனு கேள்விப்பட்டதும், நெஞ்சு கொதித்தேன், உன்னை தந்தி அடிக்க வேண்டுகோள் வைத்தேன். நீயும் ஆயிரகணக்கில் தந்திகள் அடித்தாய். இதோடு நம் வேலை முடிந்தது அல்லவா? நாம் என்ன மத்தியிலா ஆட்சி செலுத்துகிறோம்? அவர்கள் தயவினால்தானே இங்கே ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது? அவர்களை பகைக்க முடியுமா? அப்படி பகைத்தால், அண்ணனின் ஆட்சி போனால், என் கண்ணே, நீ துக்கம் தாங்காமல் குடித்து குடித்தே உன் உடல்நலனை கெடுத்துகொள்வாய் என்றுதானே அண்ணன் அமைதி காத்தேன்? உன் மீது நான் காட்டும் அன்பை பொறுக்க மாட்டாத சிலர் நான் பதவி ஆசை பிடித்தவன் என்றும், பொல்லாத குள்ள நரி என்றும் பலவிதமாய் தூற்றி திரிகிறார்கள். இவர்கள் எல்லாம் பொறாமைகாரர்கள், சிறிய மனம் கொண்டவர்கள்.

தந்தி அடித்ததுடன் நமது தார்மீக கடமை முடிந்துவிட்டாலும், உலகில் யாருமே செய்யாத சாதனையை, வரலாற்றில் பொன்னேடுகளில் பொறிக்க தக்கதாய், இமயம் வரை சென்ற கரிகால் சோழனின் பெருமைக்கு சற்றும் குறையாததாய், எண்ணுந்தோறும் இதயம் களிக்க செய்வதாய், தமிழன் வீட்டிலே நடமாடும் எலியல்ல , காட்டிலே உலவும் புலிக்கு ஒப்பானவன் என்று கேட்டோர் வியக்கும் வண்ணமாக சட்ட சபையிலே, 'அய்யகோ காப்பாற்றுங்கள்' என்றொரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினோம். நாம் தீர்மானம் அனுப்பத்தான் முடியும்; நடவடிக்கை எடுப்பது மத்திய அரசின் பொறுப்பு என்று அறியாத சிறுமதியாளர் சிந்தனைக்கு நாம் அணை போட முடியுமா அடலேறே?

மணிமேகலை போற்றும் மறவனே!

தேர்தல் வந்துவிட்டது. நீ சோர்வடைந்து விட்டால், மனம் துவண்டு விட்டால் தமிழர் (முட்டாப் பய மவனே, தமிழன்னா நானும் என் குடும்பத்தாரும் மட்டும்தாண்டா) வாழ்வும் இருண்டு விடுமே என்று இந்த அண்ணன் துடித்த வேளையிலேதான் உதித்தது உண்ணாவிரத யோசனை. காலையில் உணவு உண்டு முடித்ததுமே வந்த இந்த சீரிய எண்ணத்தினால், அண்ணன் காற்றை போல் கடுகி, புயலைபோல் விரைந்து, சிங்கம் போல் சீறி உண்ணாவிரதம் இருந்தேன், இலங்கை தமிழர் நலன்வேண்டி. ஏற் கூலரின் குளுமையிலே, மனைவி மக்கள் சகிதமாய் சுமார் மூன்று மணி நேரம் நீண்ட அந்த கொடிய போராட்டத்திற்கு உடனே பலன் கிடைத்தது. ஆம், இது நாள் வரை முறுக்கிகொண்டிருந்த சொக்க தங்கம் உடனடியாக தொடர்பு கொண்டு, இலங்கையிலே இன்னும் சிறிது நாளில் எல்லாம் முடிந்து விடும் என்று எனக்களித்த வாக்குறுதி கேட்டு நான் உண்ணாவிரதம் முடித்தது உனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது என்பது நான் அறியாததா?

இதோ உன் அண்ணனின் தளர்விலா முயற்சியால் இலங்கையில் குண்டு சத்தமே கேட்பதில்லை. விமானங்கள் குண்டுகள் போடுவதில்லை. துப்பாக்கிகள் வெடிப்பதில்லை. குழந்தைகள் பாலுக்காய் அழுவதில்லை. ரத்தம் இல்லை. கண்ணீர் இல்லை. எங்கும் அமைதி. ஆழ்ந்த அமைதி. இல்லையென்று மறுக்க முடியுமா எதிரிகளால்?. (எல்லோரையும்தான் நயவஞ்சகமா விட்டுவிட்டாயேடா.....மவனே ) நான் பாடுபட்டு நிகழ்த்திய சாதனையை கண்டு வாயடைத்து நிற்கின்றார்கள் எதிரிகள். துக்கம் அவர்கள் தொண்டையை அடைக்கிறது. போர் நிறுத்தம் வேண்டும் என்றார்கள். போரை நிறுத்தியாகி விட்டது. இது உன் அண்ணனின் சாதனை இல்லையா? இதை என் சாதனை என்று சொல்லுவதை விட, உன் சாதனை, சொக்கத் தங்கத்தின் சாதனை என்று சொல்லுவதிலும் எனக்கு மகிழ்ச்சிதான். சாதனைகளை பாராட்ட மனமில்லாவிட்டாலும் குறை கூறாமலாவது இருக்க வேண்டும். இந்த சிறு மதியாளர்களிடம் இவற்றையெல்லாம் எதிர்பார்ப்பது வீண் வேலை.

தமிழர்களுக்கு நான் ஆற்றிய பணிகள் போதாது; இன்னும் நிறைய செய்ய வேண்டும் (அய்யய்யோ!) என்று என் உடன் பிறப்பு நீ நினைப்பது இந்த அண்ணனுக்கு தெரியாது என்றா நினைத்தாய் ? உயிரின் கடைசி மூச்சு உள்ளவரையில், நான் யாருக்கு பணிசெய்தால் நீ உள்ளம் மகிழ்வாயோ, நான் யாருக்கு சொத்து சேர்த்தால் நீ பேருவகை கொள்வாயோ, அவர்களுக்காகவே, அதாவது உனக்காகவே, நீ மகிழவே பணி செய்வேன் என்று அண்ணன் இந்த தருணத்திலே உறுதியோடும் , உண்மையோடும் தெரிவித்துகொள்கிறேன் .

அண்ணா வழியில் நீ மட்டும் நடைபோடு. எனக்கு வேறு வேலை இருக்கிறது.

மு .க .

பின் குறிப்பு:

இவன் தொல்லை இங்கே தாங்க முடியவில்லை. தினமும் ஏதாவது அறிக்கைவிட்டு தாங்க முடியாத அளவுக்கு குடைச்சல் கொடுக்கிறான். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயர்ந்த நோக்கில், இவன், இன்றைய நிலையில், தன்னிலை விளக்கம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்ததின் விளைவுதான் இந்த அறிக்கை. இதனால் உங்களுக்கு முறுக்கம் அதிகமானால் திட்ட வேண்டியது என்னையல்ல, இந்த மொள்ளமாரியைதான். அடைப்புக்குறிக்குள் இருப்பது, இதை எழுதும்போதே என்னுள் எழுந்த எதிர் வார்த்தைகள்.

சட்டபூர்வமான எச்சரிக்கை: இதே போன்று ஒரு கடிதத்தை அவன் எழுதினாலும் எழுதுவான். தமிழன் என்ற இளிச்சவாயன் இருக்கும்வரை இவன் போன்றவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.