Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் உய்க்குர் மக்கள்!

Featured Replies

சீனாவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் உய்க்குர் மக்கள்!

ஜி8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி நாட்டுக்குப் பயணம் செய்திருந்த சீனாவின் ஆட்சித்தலைவர் கு ஜிந்தாவோ தனது பயணத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

உலகத் தலைவர்களின் ஒரு முக்கிய மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற சீனாவின் ஆட்சித்தலைவர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவசர அவசரமாக ஏன் நாடு திரும்ப வேண்டும்?

சீனாவின் வடமேற்கு தன்னாட்சி மாகாணமான சிங்ஜியாங் மாகாணத்தின் (Xinjiang Province) தலைநகர் உரும்கியில் (Urumqi) கடந்த 5 ஆம் நாள் அங்கு வாழும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தவரான உய்க்குர் மக்களுக்கும் (Uighur Muslims) ஹன் இன சீனர்களுக்கும் இடையில் வன்முறைகள் வெடித்தன. இந்த மோதலில் பொல்லுகள், கத்திகள், கம்புகள், உருக்குக் குழாய்கள் தாங்கிய 2000 – 3000 உய்க்குர் – சீனர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டார்கள். 156 பேர் கொல்லப்பட்டனர். 816 பேர் காயப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார்.

பெரும்பான்மை சீனக் கலகக்காரர்களால் சிறுபான்மை முஸ்லிம்களுக்குச் சொந்தமான 203 கடைகள் தீயிடப்பட்டன. 300 க்கும் அதிகமான வண்டிகள் எரியூட்டப்பட்டன. 14 வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்ட பல்வகை கட்டிடங்களின் நிலப்பரப்பு 56ஆயிரம் சதுர மீட்டரை எட்டியது. காவல்துறையினர் 1,434 பேரை சங்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

கலகக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

இரவு நேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இனக் கலவரம் நடந்த மறுநாள் திங்கட்கிழமை (யூன் 06) உள்ளூர் போக்குவரத்தும் சமூக ஒழுங்கும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

கலவரத்தை அடக்க சீன அரசு தலைநகர் உரும்கிக்கு பல்லாயிரக்கணக்கான படையினரை அனுப்பி வைத்தது. இரு சாராருக்கும் இடையில் மீண்டும் வன்முறைகள் வெடிப்பதைத் தடுக்கப் படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிங்ஜியாங் மாகாணம் எண்ணெய், இயற்கை வாயு மற்றும் இரும்பு, நிலக்கரி, ஈயம் முதலிய கனிவளங்கள் கொண்டது. எண்ணெய் மட்டும் அண்ணளவாக 20,000 – 40,000 மில்லியன் தொன் இருப்பதாகக் மதிப்பிடப்பட்டுள்ளது.

சோவியத் நாட்டில் இருந்த பல நாடுகள் பிரிந்து போனது போல உய்க்குர் மக்களும் பிரிந்து தனிநாடு அமைப்பதைத் தடுப்பதில் சீனா அக்கறை காட்டிவருகிறது.

சிங்ஜியாங் மாகாணத்தின் எல்லைகள் வடக்கே மொங்கோலியா, தெற்கே திபெத், மேற்கே பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் ஆகியவற்றோடு இருக்கின்றன. இந்த மாகாணத்தில் பெரும்பகுதி வனாந்திரமாக இருந்தாலும் இங்கே 320 ஆறுகள், 100 ஏரிகள், பத்தாயிரத்துக்கும் அதிகமான பனிப்பாறைகள் (படயஉநைசள) காணப்படுகின்றன.

சிங்ஜியாங் மாகாணம் திபெத் மாதிரி தனிநாடு கோரிப் போராட்டம் நடைபெறும் மாநிலம் ஆகும். அங்கு முஸ்லிம்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் மத அடிப்படையிலும் இன அடிப்படையிலும் பெரும்பான்மை சீனர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் ஆவார்.

பெரும்பான்மை உய்க்குர் மக்கள் சிங்ஜியாங்கை கிழக்கு துருக்கிஸ்தான் என்றே அழைக்கின்றனர்.

சிங்ஜியாங் மாகாணம் துருக்கி மன்னர்களினதும் அரபியர்களுடய ஆட்சிக்குள்ளும் இருந்துள்ளது. 1757-59 காலப்பகுதியில் மன்சுஸ் (Manchus) படையெடுப்பின் போது சீனாவிடம் அது விழுந்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட காலனித்துவ ஆட்சிமுறை மாற்றங்களுடன் 1949 இல் பீஜிங் (Beijing) சிங்ஜியாங் மீதான கட்டுப்பாட்டை இழந்தது. இச்சூழலில் ஏறக்குறையப் பத்து ஆண்டுகளாக ஓரு தனி நாடாக இருந்து வந்த சிங்ஜியாங் மாகாணம் 1960 இல் சீனாவின் பிடிக்குள் மீண்டும் சிக்கிக் கொண்டது. அதன் பின்னர் அங்கு பொருளாதார மேம்பாடு என்ற போர்வையில் ஹன் சீனர்களைக் குடியமர்த்தத் தொடங்கிய சீனா அந்த மாகாணத்தின் மக்கள் தொகை விழுக்காட்டை தலைகீழாக மாற்றிவிடடது.

இந்த இனக்கலவரம் Shaoguan என்ற நகரில் உள்ள பொம்மை தயாரிப்பு தொழிற்சாலையிலேயே தொடங்கியது. பின்னர் கலவரம் தலைநகர் உரும்கிக்குப் பரவியது. வேலை இழந்த ஹன் சீனர் ஒருவர் தனது இணையதளத்தில் ஹன் இனச் சீன இளம் பெண்களை உய்க்குர் இனத்தவர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள் என்பதே கலவரம் வெடிப்பதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

வேறு செய்திகள் கடந்த யூன் மாதம் Shaoguan என்ற நகரில் உள்ள பொம்மை தயாரிப்பு தொழிற்சாலையில் தொழிலாளர் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அந்த நிகழ்வை அரசு கையாண்டவிதத்தை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்த போது தான் சீனர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் வெடித்தது என்கின்றன.

எவ்வித வன்முறைகளும் இல்லாது அமைதியாகவே கவனயீர்ப்பு போராட்டத்தினைத் தாம் முன்னெடுத்ததாகவும் சீன அதிரடிப்படையே தம்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியதாகவும் உய்க்குர் இனத்தவர் தெரிவிக்கின்றனர்.

இக்கலவரத்தைச் சுட்டிக்காட்டிப் பெருந்தொகையான உய்க்குர் இன முஸ்லீம்களை சீனா கொன்று குவித்துள்ளதாகவும் இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டு வோஷிங்டனை தலைமையகமாகக் கொண்ட உலக உய்க்குர் பேரவை (World Uighur Congress) யின் துணைத் தலைவர் அலிம் செய்டொப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் முஸ்லிம் இனத்தவரான உய்க்குர்களுக்கும் ஹன் இன சீனர்களுக்கும் இடையில் கடந்த காலத்திலும் கலவரங்கள் வெடித்துள்ளன. உய்க்குர்களில் ஒரு சாரார் தனிநாடு கேட்டுப் போராடி வருகிறார்கள். தாங்கள் பெரும்பான்மை ஹன் சீனர்களால் அடக்கி ஒடுக்கப்படுவதாக இவர்கள் முறையிடுகிறார்கள்.

சீனா ஒரு பொதுவுடமை நாடு. பொதுவுடமை நாடுகளில் இனமோதலுக்கு இடம் இல்லை என்றுதான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் மண்ணாசை என்று வரும் போது இந்தக் காலத்துப் பொதுவுடமைவாதிகளுக்கும் பழங்காலத்து மன்னர்களுக்கும் வேற்றுமையே இல்லை. இருசாராரும் ஒரே மாதிரி நடந்து கொள்கிறார்கள்.

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் – நீங்கள் இழப்பதற்கு உங்கள் அடிமைச் சங்கிலியை விட வேறொன்றும் இல்லை” (Workers of the world unite you have nothing to lose except your chains) என்ற முழக்கம் 1848 ஆம் ஆண்டு முயசட ஆயசஒ யனெ குசநைனசiஉh நுபெநடள இருவராலும் தயாரிக்கப்பட்ட பொதுவுடமை அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. உண்மையில் இந்த அறிக்கையை காரல் மார்க்ஸ் தனது கைப்பட எழுதியிருந்தார். அதனை பிரட்ரிக் ஈன்;ஜல்ஸ் சரிபார்த்துத் திருத்தியிருந்தார். இந்த முழக்கமே சோவியத் நாட்டின் அரச முழக்கமாக (Пролетарии всех стран соединяйтесь!) இருந்தது. நாணயத்தில் கூட அது அச்சடிக்கப்பட்டது. மார்க்சின் கல்லறையில் இது எழுதப்பட்டுள்ளது. இன்று இந்த அறிக்கை கனவாய் பழங்கதையாய் போய்விட்டது என்பது வேறு கதை.

அன்றும் சரி இன்றும் சரி உலகில் நடக்கிற போர்களுக்கு நிலத்தைப் பிடிக்கும் ஆசைதான் முக்கிய காரணம். அடுத்து சமயம் ஒரு காரணமாக இருந்து வந்துள்ளது.

வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல உருசியா சிங்ஜியாங் தன்னாட்சி மாகாணம் சீனாவின் பிரிக்க முடியாத நிலப் பகுதி என்றும் அங்கே பிரிவினைவாதிகளுக்கு இடம் இல்லையென்றும் அங்கு நடந்த கலவரம் முற்றிலும் அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்றும் உருசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் “உரும்கியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டிருந்த சிலருக்கு அல்கைதாவுடனும் பிற வெளிநாட்டு ஆயுதக் குழுக்களுடனும் தொடர்பு இருப்பதற்கு தமக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக” சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. அனால் அதற்கான சான்றுகளை அமைச்சகம் சார்பாகப் பேசியவர் வெளியிடவில்லை. சீனாவின் சமூக இறுக்கப்பாடு குலையாமல் பாதுகாக்கும் அரசின் முயற்சிகளுக்கு அனைத்துலக சமூகம் ஆதரவளிக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

கலகக்காரர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய சீன அரசு செய்தித் தணிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் செய்திகள் மின்னஞ்சல் வழியாகவும் இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்கள் மூலமாகவும் வெளியுலகுக்குக் கசிவதை சீனாவால் தடுக்க முடியவில்லை.

கடந்த ஏப்ரில் – மே மாதங்களில் திபேத்தில் சீனாவுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது நினைவிருக்கலாம். அப்போதும் சீனா கலவரத்துக்கு வெளிநாட்டு சக்திகளே காரணம் எனக் குற்றம் சாட்டியது.

இந்தக் கலவரத்துக்குப் பிரிவினைவாத அமைப்பான உலக உய்க்குர் காங்கிரஸ் தலைவர் ரெபியா காதர் (Rebiya Kadeer) தான் சூத்திரதாரி எனச் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. காதர் இப்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். தொடக்க கட்ட ஆய்வில் இந்தக் கலவரத்தை காதர் தான் தூண்டிவிட்டதாக தெரியவந்து உள்ளது என்று சிங்ஜியாங் காவல்துறை கூறுகிறது.

“இந்த அமைப்பு, மனித உரிமை மற்றும் மக்களாட்சிமுறைமையைப் பயன்படுத்தி, பயங்கரவாதத்தை மூடிமறைத்து, பன்னாட்டுச் சமூகத்தை ஏமாற்றுகின்றது. இந்த வன்முறை சம்பவத்தின் மூலம், இவ்வமைப்பின் மனித உரிமை மற்றும் அமைதி எனக் கூறப்படும் உண்மைத் தன்மை, வெளிப்படுத்தப்பட்டது” என்று சீன சமூக அறிவியல் கழகத்தின் எல்லைப் பகுதி ஆய்வு மையத்தின் துணை ஆய்வாளர் செய்தியாளருக்கு செவ்வியளித்த போது தெரிவித்தார்.

ஆனால் உய்க்குர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தில்ஷத் ரஷித் சுவீடன் நாட்டில் இருந்து தொலைபேசி மூலம் அளித்த செவ்வியில் “இந்தக் கலவரத்தை தூண்டிவிட்டதாக தேவையில்லாது எங்கள் மீது பழி போடுகிறார்கள். இன அடிப்படையில் காட்டப்படும் பாபாடும் இன ஒடுக்குமுறையும் தான் கலவரத்துக்குக் காரணம் ஆகும்” என்று கூறியுள்ளார்.

இதே உய்க்குர் இனத்தைச் சேர்ந்த 13 பேர் ஆப்கனிஸ்தானில் கைது செய்யப்பட்டு குவந்தமானா வளைகுடா முகாமில் அமெரிக்காவால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் 9 பேர் பலோ (Paluo) என்ற தீவுக்கும் 4 பேர் பெர்முடாவுக்கும் (Burmuda) அனுப்பி வைக்கப்பட்டார்கள். பலோ தீவு சீனாவுக்குப் பதில் தைவானை அங்கீகரித்துள்ளது.

சீனாவில் 35 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். முழசீனாவிலும் 55 க்கும் அதிகமான சிறுபான்மை இனத்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் ஆவர். சிங்ஜியாங் மாகாணத்தில் மட்டும் 90 இலட்சம் உய்க்குர்கள் வாழ்கிறார்கள். அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களை அரசு அடக்கி ஒடுக்கி வைத்துள்ளது.

உய்க்கர்களின் போராட்டம் பயங்கரவாதம் என்று சீனர்கள் முத்திரை குத்தினாலும் உலக உய்க்குர் பேரவையைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார்கள்.

நீலநிறக் கண்களும் மண்நிற முடியும் உடைய உய்க்குர் மக்கள் துருக்கி நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஆனால் இன்று இவர்களைவிட ஹன் சீனர்கள் அங்கு பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். குறிப்பாக தலைநகர் உரும்கியில் வாழும் 22 இலட்சம் மக்களில் பெரும்பான்மையினர் ஹன் சீனர்கள்தான். இரு இனத்தவர்களுக்கும் இடையில் பகைமையும் அவநம்பிக்கையும் நிலவுகிறது. இதன் காரணமாக தலைநகர் உரும்கியில் எப்போதும் இராணுவ ஆட்சி தான் நடைமுறையில் உள்ளது.

இந்த இனக் கலவரம் சீனாவின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. சீனப் பொதுவுடமைக் கட்சியின் பல இலக்குகளில் சமூக இணக்கம் (“Harmonious Society”) முக்கியமானது. அந்த இலக்கு வெகு தூரத்தில் உள்ளது என்பதை இந்த இனக்கலவரம் எடுத்துக் காட்டிவிட்டது. அது மட்டுமல்லாமல் சீனா தனது 60 ஆண்டு பொதுவுடமை ஆட்சியைக் கொண்டாடும் வேளை பார்த்து இந்தக் இனக் கலவரம் இடம்பெற்றிருப்பது சீனாவுக்கு உலக அரங்கில் பெரிய சங்கடத்தையும் தலைக்குனிவையும் ஏற்படுத்தியுள்ளன.

இன்றைய உலக ஒழுங்கில் அடக்கி ஆளும் பெரும்பான்மை தேசிய இனங்களின் பிடியிலிருந்து சிறுபான்மை தேசிய இனங்கள் பிரிந்து போவதை சீனா, உருசியா, இந்தியா, பாகிஸ்தான், சுடான், துருக்கி, இராக், யோர்ஜியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் தீவிராமாக எதிர்க்கின்றன.

சீனாவைப் போலவே இந்தியாவில் கஷ்மீர், அசாம், நாகலாந்து மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை படைபலம் கொண்டு அடக்கப்படுகிறது. பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை ஆயுதமுனையில் ஒடுக்கப்படுகிறது. உருசியாவில் செச்சீனியா மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை படைபலம் கொண்டு நசுக்கப்படுகிறது.

அய்யன்னாவைப் பொறுத்தளவில் இறைமையுள்ள நாடுகளின் உள் விவகாரங்களில் அது தலையிடாது – தலையிடக் கூடாது என்ற கோட்பாடு விதியாகவுள்ளது.

இதனால் உலகளாவிய அளவில் சுதந்திரத்துக்காகப் போராடும் சிறுபான்மை தேசிய இனங்கள் பெரும்பான்மை தேசிய இனங்களின் அடக்குமுறைக்கு தொடர்ந்து ஆளாகி வருகின்றன.

சிங்ஜியாங் மாகாணத்தில் இடம்பெற்ற இனக் கலவரமும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற உய்க்குர் மக்களின் உயிர் உடமை அழிவுகளும் இந்த உண்மையையே எடுத்துக் காட்டுகின்றது.

[தமிழ்ச்செய்திகள்]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.