Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுட்டுக் கொல்லப்பட்ட போசின் சில கவிதைகள்

Featured Replies

(16-04-2007) எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் சிங்களம் பேசிய ஆயுததாரிகளால் வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கவிஞராகவும், பத்திரிகையாளராகவும், இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர். கவிதைகளுடன், சிறுகதைகளையும், விமர்சனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புத்தக வடிவமைப்பிலும் ஈடுபட்டு வந்தார்.ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி, சரிநிகர், மூன்றாவது மனிதன், தமிழ் உலகம், இன்னொரு காலடி ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வந்திருக்கின்றன.வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு, வீரகேசரி ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். நிலம் என்ற கவிதைக்கான இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.லண்டனிலிருந்து வெளியிடப்பட்ட 'தமிழ் உலகம்' என்ற இதழிற்கு ஆசிரியராக இருந்து கொழும்பில் வைத்து தயாரித்து வழங்கினார். சந்திரபோஸ் சுதாகர் என்ற தன்னுடைய பெயரிலேயே ஆரம்பத்தில் எழுதிவந்தவர் பின்னாளில், எஸ்போஸ், போஸ்நிஹாலே என்ற பெயர்களிலும் எழுதினார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரபோஸ் சுதாகர் பளையில் 1975 இல் பிறந்தார். பிறகு வன்னியில் அக்கராயன்குளத்தில் படித்தார். தந்தை பளை முகமாலையைச் சேர்ந்தவர். தாய் நெடுந்தீவில் பிறந்தவர். தாய் அக்கராயன் பொது மருத்துவ மனையில் தாதியாகப் பணியாற்றியபடியால் அங்கேயே குடும்பத்தினர் குடியேறியிருந்தனர்.: கருணாகரன்

http://esposh.blogspot.com/

=====================================

கடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட் குறிப்பு

தயக்கத்தினூடே நிகழும் வார்த்தைக்கணத்தில்

உன்னுடன் பேசாத நூறு சொற்கள் எழுதித்தீர்ந்தன

மனதில்நாங்களோ எமக்கு எப்போதோ

பரிச்சயமான ஒற்றைச்சொல்லில்

மூன்று நிமிடங்கள் பேசினோம்

அறையின் சுவரில்இரைக்காக அலைந்து கொண்டிருந்தது

பல்லியுகங்களுக்கப்பாலான கவிதையொன்று

லட்சக்கணக்கான கிறுக்கல்களினடியில்

உறைந்துபோயிற்று

பூக்கள் உதிர்ந்து காற்றில்

மிதக்கின்றனகாற்றோ முற்றத்தை

அள்ளிச் செல்கிறது

வானம் நீலநிறமாயிருக்கிறதென்று நானும்

அதே நீலம்பரவசங்களால் ஆகர்ஸிக்கப்பட்டிருக்கிறதென்று நீயும்

ஒருவருக்கொருவர் எண்ணக்கூடும்

எனினுமென்னமனதில்

எழுதிய சொற்களோ இந்தக்கணம் வரை

எந்த உருவமுமற்றுப்போயின நிழலில் கரைந்து

II

உனது முகம் பற்றிய

படிமம்உனது புன்னகையாய் -

வண்ணத்துப்பூச்சியொன்றின்சிறகைப்போல –

என்னுள் படபடக்கிறது

இருவருமே தெரிந்துவைத்திருக்காத

நாளொன்றில்

எப்போதோ பரிச்சயமான

ஒற்றைச்சொல்லில்

நாங்கள்பேசக்கூடும்

மீண்டும்காற்று

அதில் எந்த வார்த்தையையும்

வானை நோக்கி இழுத்துச்செல்லாதிருந்தால்

மனமிடை எழுதிய சொற்களில்

ஒன்றையேனும்

உன்னை நோக்கி வீசவே விரும்புவேன்

மௌனம் சிதறியுடையும் அக்கணத்தில்

எனது சொற்களோ

தேவதைகள் வாழ்ந்துபோன

வனம்போலபூத்திருக்கும்

உன்னுள்

நன்றி- காலச்சுவடு

இதழ்-29 ஏப் - ஜூன் 2000

==============================================

கவிதை 01

துப்பாக்கி வேட்டொலிகளுக்குள்ளும்

சப்பாத்த மிதியடிகளுக்குள்ளம்

சிதைவுறும்

எமக்கான கனவுகளனைத்தும்.

எம் ஒவ்வொருவரினதும் இருப்பும்

ஏதாவது ஒரு தெருக்கோடியிலோ

தொலைதூரக் காடுகளிலோ அல்லது அதற்கப்பால்

வனந்தர வெளிகளிலோ

நிலைகொண்டிருக்கும்.

ஒரு நிலவு காலத்தில்

அல்லது முகங்களின் உணர்ச்சிகளை அறிந்து கொள்ள முடியாத

துயர் மிகுந்த கரிய இருளில்

நிழலாம் எமக்கான சந்திப்பகள்.

நாம் காதலர்களாகவும்

பெற்றோரைப் பிரிந்த குழந்தைகளாகவும்

குழந்தைகளைப் பிரிந்த தாய் தந்தையராகவும்

கணவன் மனைவியராகவும் இருக்கிறோம்

உனக்கு எப்போதுமே சந்தோசமளித்திருக்கமுடியாது

இளமைக்காலம் பற்றி நீயும்

பனியடர்ந்த காடுகளுக்குள் வாழும்

எனது இளமைக்காலம் பற்றி நானும்

எண்ணிப் பார்க்க முயல்வோம்

கணங்களில் அல்லது அதைவிட குறைவான நேரத்தில்.

மீளவும் சப்பாத்தக்களின் ஒலி நிலத்தில் அதிர்கிறது.

சகீ….

எமக்கான ஒவ்வொன்றின் முடிவிலும்

நாளை பற்றிய எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும்

தவிர

வேறு என்னதான் இருக்கிறது சொல்.

--------------------------------------------------------

06 பெப்ரவரி 97

-போஸ்நிஹாலே

கவிதை 02

பூமியின் ஒளி பொருந்திய முகங்கள்

குழந்தைகளினுடையவை.

துயரம் தரும்

கனவுகளையும்

எமது காலங்களையும் அழித்துவிட்டு- எமது காலங்கள் நெருப்பில்

உழல்பவை

குழந்தைகளுக்கானதை அவர்களிடமே கையளிப்போம்.

நம்பிக்கைதரும் ஒரு சூரியனை

அல்லது ஒரு பௌர்ணமியை

மிக மெல்லிய வாசனையையும் இதழ்களையும் உடைய

மல்லிகை மலர்களை

நாங்கள் அவர்களுக்காய் பரிசளிப்போம்.

கந்தக நாற்றம் எமது இருதயங்களில் உறைந்து விட்டதைப்போல

பிரிவின் துயரங்களும்

மன அழுத்தங்களும்

எமது வேர்களை அரித்து தின்று விட்டதைப் போல

அவர்களுடைய இருதயங்களை

அவை தின்றுவிட அனுமதிக்க முடியாது எம்மால்

உண்மையில்

நாம்

இழந்த சந்தோசங்களை

அவர்களின் மூலம் மீட்கும் கனவுகளில் வாழ்கிறோம் எனில்

அவர்களின் குதூகலங்களும் சிரிப்பும்

எமக்குச் சொந்தமானவை எனில்

பூமியின் ஒளி பொருந்திய முகங்களை

அவர்களிடம் பரிசளிப்போம்.

----------------------------------------

98 கார்த்திகை 04

-போஸ்நிஹாலே

சரிநிகர் இதழ் 165

----------------------------------------------

சித்திரவதைக்குப் பின்னான வாக்குமூலம்

எஸ்போஸ்:கவிதைகள்

உன்னை அவர்கள் கைது செய்து

எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்

எனது குழந்தைக்குப் பிடித்தமான

உனது "சேட் கொலரின்" மடமடப்புச் சத்தம்

இன்னும் அவனுடைய விரலிடுககுகளில்

கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

அவர்கள் வாகனங்களோடு

நட்சத்திரங்களோ ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும்

சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும்

கொண்டு வைத்திருந்தார்கள்

அது

இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும்

எனது குழந்தையின் கண்களில்

எங்களுடனேயே தங்கியிருக்கிறது.

அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும்

நீண்ட கூரிய ஆயுதங்களால் தாங்கவும்

கொல்லவுங் கூடமுடியும்.

அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை

அவர்களின் துப்பாக்கிக் குழல்களும்

சப்பாத்துக்களில் பூசப்பட்ட குருதியும்

நிரூபித்து விட்டது …

நிரூபித்து விட்டது…

நம்பிக்கை கொள்

நீ பேசாதிருக்கும் வரை

உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை

அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே

சிறைக் கம்பியிடுக்குகளின் வழி

ரோஜாப் பூக்களின் வாசனையும்

வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகளும்

உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும்

நம்பிக்கை கொள்

நீ பேசாதிருக்கும் வரை

அவர்கள் தோற்றுப போவார்கள்

நிரந்தரமாகவே

------------------------

போஸ்நிஹாலே

கிளிநொச்சி

சரிநிகர் இதழ் 170

Edited by நிழலி

  • தொடங்கியவர்

அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்

போசிற்கான அஞ்சலியில் கருணாகரன்

அச்சத்தைத் தின்று சாம்பருமின்றி அழித்துவிடும்' 'உயிர் நிழல்' என்றுஅறிவிக்கும் சில ஸ்ரிக்கர்களுடன் ஒரு முன்னிரவில் எதிர்பாராதவிதமாக என்னிடம் வந்திருந்தார் எஸ்போஸ். 'உயிர் நிழல்' என்ற பெயரில் புதிய இதழொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறினார்.

அப்போது அவர் ' நிலம்' என்ற கவிதைக்கான இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவர் திட்டமிட்ட அளவுக்கு அந்த இதழ் வரவில்லை. அந்தக்குறையும் கவலையும் அவரிடமிருந்தது. அதற்குப்பதிலாக இப்போது உயிர் நிழலை வெளியிட முயன்றார்.

"அந்தப்பெயரில் ஏற்கனவே ஒரு இதழ் பிரான்ஸிலிருந்து வருகிறதே" என்று கேட்டேன்.

"அதனாலென்ன " என்று என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் எஸ்போஸ்.

"ஏற்கனவே அந்தப்பெயரில் ஒரு இதழ் வந்துகொண்டிருக்கும் போது அதே பெயரில் இன்னொரு இதழ் சமகாலத்திலேயே வெளிவருவது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துமல்லவா. தவிர ஏற்கனவே அந்தப்பெயரில் இதழைக்கொண்டுவருபவர்கள் ஏதாவது சொல்லக்கூடுமே" என்று அவரிடம் திருப்பிக்கேட்டேன்.

"பெயரில் என்ன இருக்கிறது" என்றார் எஸ்போஸ்.

பசுவய்யாவின் ஒரு கவிதையில் 'பெயரில் என்ன இருக்கிறது' என்று ஒரு அடி வரும். எனக்கு அந்தக்கவிதைதான் அப்போது நினைவில் வந்தது.

வந்தவரின் பெயர் என்னவென்று அவனிடம் கேட்க, பெயரில் என்ன இருக்கிறது என்றபடி அவன் அதைச்சொல்லாமல் போகிறான்.

பத்தாண்டுகளுக்கு முன் இந்தக்கவிதையைப்பற்றி எஸ்போசுடன் பேசியிருக்கிறேன்.

சற்று நேர அமைதிக்குப்பிறகு "ஏன் வேறு பெயரொன்றைத்தெரிவு செய்யலாமே" என்றேன். அவர் அதற்குப்பதிலேதும் சொல்லவில்லை.

அன்றிரவு நீண்ட நேரம் புதிய இதழ்பற்றி ஆர்வத்தோடு பேசினார். ஒரு புதிய இதழுக்கான தேவை, அதைக்கொண்டுவருவதற்கான சாதக பாதக அம்சங்கள், ஏற்கனவே வெளிவந்த இதழ்களின் நிலைமை எனப்பலவற்றையும் பேசினோம். மிகச்சீரியஸாகவே அவர் பேசிக்கொண்டிருந்தார்.

எஸ்போஸின் இயல்பே அப்படித்தான். எப்போதும் எல்லாவற்றையும் மிகச்சீரியஸாகவே எடுக்கும் ஆள் அவர். எல்லாவற்றிலும் அவர் கொள்ளும் தீவிரம்தான் இதற்குக்காரணம் என நினைக்கிறேன். அதேவேளை அவர் அதேயளவுக்கு எல்லாவற்றிலும் கடுமையான அலட்சியத்தையுமுடையவர். எதிலும்; பொறுப்பற்ற விதமாக அவர் நடந்து கொள்வதாகவே தோன்றும். 'விறுத்தாப்பி' என்று சொல்வார்களே அதுமாதிரி எதிலும் அலட்சியம். எதிலும் எதிர்நிலை. தன்னிச்சையாக இயங்குவதில் அவர் தனக்கான ஒரு வகைமாதிரியை உருவாக்கியிருந்தார். அவ்வாறு உருவாக்கிய அந்த வெளியில்தான் அவர் இயங்கிவந்தார்.

எந்தத்திட்டங்களுக்கும் வரையறைகளுக்குள்ளும் ஒழுங்குமுறைகளுக்குள்ளும் நிற்கும் இயல்பற்றவர் எஸ்போஸ். இதனால் அவர் தன்னுடைய நெருங்கிய உறவினர்களிடத்திலேயே கடுமையான கண்டனங்களுக்கும் விமரிசனங்களுக்கும் ஆளானவர். ஆனால் அவரை யாராலும் புறக்கணிக்க முடியாது. அதுதான் அவருடைய பலம். அதுதான் அவரை பலரிடத்திலும் ஆழமாக நேசிக்கவைத்தது.

அவர் எல்லோருடனும் சண்டையிட்டிருக்கிறார். ஆனால் பகைமை கொண்டதில்லை. பலநாட்கள் எங்களின் வீட்டில் பெரும் மோதலே ஏற்பட்டிருக்கிறது.

"இலக்கியத்தையும் அரசியலையும் விட்டிட்டு வேற எதைப்பற்றியாவது கதையுங்கள்" என்று வீட்டில் சொல்வார்கள். அந்தளவுக்கு மோதல் நடந்திருக்கிறது. இதுமாதிரியான சந்தர்ப்பங்கள் வேறுநண்பர்களுக்கும் நடந்திருக்கிறது. ஆனால் எந்த வீட்டிலும் யாருக்கும் அவர்மீது கோபம் வந்ததில்லை. பழகும் எல்லா வீடுகளிலும் உரிமை எடுத்துக்கொண்டு பழகுவார். மிகச்சரியாகச்சொன்னால் அவரின்மீது எல்லோருக்கும் ஒருவிதமான அன்பும் இரக்கமும் கருணையும் பரிவும் இருந்தது. அவருடைய தோற்றமும் அலைந்த வாழ்வும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம். எல்லோரும் அவரை தங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவராகவே கருதினார்கள்.

அவருடன் நாம் சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்கும் போது சடுதியாக கிளம்பிப்போய்விடுவார். பிறகு ஒருநாள் எதிர்பாராத தருணத்தில் திடுதிப்பென வந்து முன்னே நிற்பார். அவர் எப்போது வருவார் எப்போது போவார் என்று யாருக்கும் தெரியாது. இதுதான் பிரச்சினை. அவருடைய இந்தமாதிரியான நடவடிக்கைகளினால் அவர் மற்றவர்களால் புரிந்து கொள்ளக் கடினமானவராக இருந்தார்.

அடுத்த கணத்தில் அவர் என்ன செய்வார் என்று அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. அவருடைய படைப்புகளிலும் இந்த இயல்புகள் காணப்படுகின்றன. தீவிரம் அலட்சியம் என்ற இருநிலைகளுக்கிடையில் சஞ்சரிக்கின்ற அல்லது அலைகின்ற மனதைப் பிரதிபலிக்கின்ற எழுத்து அவருடையது.

எஸ்போஸின் வாழ்வும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. அவர் தன்னுடைய இளைய வயதிலேயே நிலையற்று அங்குமிங்குமாக அலைந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்திருந்தார். தாயுடனும் பாட்டியுடனும் வாழந்த காலத்திலேயே அவருள் இந்த எதிர்நிலையம்சம் காணப்பட்டது. பள்ளியிலும் அவர் வேறபட்ட தன்மையிலேயே இருந்தார் என்று அவருடைய இளவயது நண்பர்கள் நினைவு கூர்கிறார்கள். அநேகமாக ஆசிரியர்களுடன் அவர் அடிக்கடி பிரச்சினைப்பட்டிருக்கிறார். அதனால் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

இதுபற்றி பின்னாளில் அவர் என்னுடன் கதைத்திருக்கிறார். பள்ளியை எஸ்போஸ் அதிகாரம் திரண்டிருக்கிற மையமாகவே பார்த்தார். கைத்தடியில்லாமல் ஒரு ஆசிரியரை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா என்று கேட்டார். அந்தளவுக்கு எங்களின் மனதில் ஆசிரியரைப்பற்றிய படிமம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளிடம் அதிகாரத்தை திணிக்கும் பெரும் நிறுவனமே பள்ளி என்பது அவருடைய நிலைப்பாடு.

பிள்ளைகளுக்கு அடிக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களே என்றொரு நண்பார் சொன்னார். எஸ்போஸ் சிரித்தார். இதற்கெல்லாம் சட்டம் கொண்டு வரவேண்டுமா என்பது போலிருந்தது அந்தச்சிரிப்பின் அர்த்தம். அதுவும் படித்த மனிதர்கள் தான் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களையே சட்டம் போட்டுத்தான் கட்டுப்படுத்த வேணுமா என்றமாதிரி இருந்தது அவருடைய மௌனம்.

அவர் பள்ளியில் நிறையத் தாக்கப்பட்டிருக்கிறார். அந்த வடு அவரின் ஆழ்மனதில் பதியமாகியிருந்ததை உணர்ந்திருக்கிறேன். அவரிடம் இளவயதின் பல வடுக்களிருந்தன. ஆனால் அவையெல்லாவற்றையும் கடந்து அவரிடம் அசாத்தியமான திறமைகள் வளர்ந்திருந்தன. அது பள்ளிகள் காணாத ஆற்றல். நம்முடைய எந்தப்பள்ளியும் கண்டடைய முடியாத திறன். அதனாலென்ன, கவனங்கொள்ளாமல் விடப்பட்ட அவருடைய படைப்புகளில் கூர்மையும் தீவிரமும் கூடிய ஆழமிருந்தது. நவீனமிருந்தது.

எஸ்போஸ் தன்னுடைய இளையவயதிற்குள் அதிகமாக வாசித்தார். காஃகாவும் காம்யுவும் ஆரம்பத்தில்; அவருக்குப்பிடித்திருந்தனர். பிறகு அவர் பின்நவீனத்துவ எழுத்துகளில் ஈடுபாடு கொள்ளத்தொடங்கி, மார்க்வெஸ் போன்றோரின் எழுத்துகளை அதிகம் விரும்பிப்படித்தார்.

தமிழில் அவருக்குப்பிடித்த படைப்பாளிகள் ஜி.நாகராஜன், சாருநிவேதிதா, கோணங்கி, விக்ரமாதித்யன், ஜெயமோகன், சல்மா, மனுஷ்யபுத்திரன் போன்ற சிலர். பிரமிளை அவர் அதிகம் நேசித்தார். பிரமிளின்மீது ஒருவகைப்பித்து நிலை எஸ்போசுக்கிருந்தது. இவர்களின் எழுத்துகளை அவர் அதிகமாக விரும்பிப்படித்தார். ஈழத்தில் திசேரா, ரஞ்சகுமார், உமா வரதராஜன், அனார், பா.அகிலன், நிலாந்தன், சோலைக்கிளி, சு.வி ஆகியோரின் எழுத்துகளில் அவருக்கு ஈடுபாடிருந்தது.

என்றாலும் எஸ்போஸ் பின் நவீனத்துவ எழுத்துகளையே தேடிக்கொண்டிருந்தார். எம்.ஜி. சுரேஷின் புத்தகங்களை எப்டியோ எங்கோ கண்டு வாங்கிக்கொண்டு ஒருநாள் திடீரென வந்தார். இரண்டு நாட்கள் வீட்டில் தங்கி நின்று இரவு பகலாக வாசித்தார்.

வாசித்து ஓயும் பொழுதுகளில் பேசத்தொடங்குவார். பேச்சு ஏதோ ஓர் புள்ளியில் விவாதமாகும். விவாதம் உச்சநிலைக்குப்போகும்போது, தான் மீண்டும் புத்தகத்தை வாசிக்கப்போவதாக கூறிச்சென்று விடுவார்.

மூன்றாவது நாள் நான்கு மணித்தியாலத்துக்கு மேல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். தேடிவந்த நண்பர்கள் திரண்டிருக்க முழு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் பேசிக்கொண்டிருந்த காட்சி ஒரு அழியக்கூடாத சித்திரம்.

அவரின் அரைவாசிக்கு மேற்பட்ட கவிதைகளை எஸ்போஸ் இந்தக்கலவையில், இந்தப்பண்பில்தான்- பின்நவீனத்துவப் பண்பில் எழுதினார். 'செம்மணி ' என்ற கவிதைத் தொகுதியில் இப்படி ஒரு கவிதையைத் தொடக்கத்தில் எழுதினார். பிறகு 'சரிநிகரில'; இவ்வாறு சில கவிதைகள் வந்ததாக ஞாபகமுண்டு.

எஸ்போஸின் படைப்புலகம் தீவிர நிலையிலானதென்று சொன்னேனல்லவா. அதைவிடத்தீவிரமானது அவருடைய உரையாடல். சண்டையிடுவது போலவேதான் பேசுவார். அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். அந்தக் கீச்சுக்குரல் அவருடைய சக்தியை மீறியொலிக்கும்.

அவருடன் பேசிக்கொண்டிருந்த பல நாட்களில் அவருடைய கைகள் நடுங்குவதைப்பார்த்திருக்கிறேன். ஆகலும் அவர் தீவிர உணர்ச்சிவசப்படுகின்ற போது அமைதியாகிவிடுவார். ஆனாலும் ஒரு அரை மணித்தியாலம் அல்லது பத்து பதினைந்து நிமிடத்தின் பிறகு மீண்டும் விவாதத்தை ஆரம்பித்து விடுவார். பேசவேண்டும், விவாதிக்க வேண்டும், அதனூடாக பல விசயங்களைப்பகிர வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவரிடமுண்டு. அதுவும் எப்பொழுதும் எதிர்நிலையில் நின்றே விவதிக்கும் ஒரு வகைப்போக்குடையவர்.

"நீர் முன்பொருதடவை பேசும்போது வேறு விதமாக அல்லவா இந்த விசயத்தைச் சொன்னீர். இப்ப அதுக்கு நேரெதிராகக் கதைக்கிறீரே" என்றால்,

"அதை யார் மறுத்தது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்க வேணுமா, அப்படி எதிர்பார்ப்பது ஒரு வகை அதிகாரம்" என்பார். "இப்போது இதுதான் என்னுடைய வாதம்" என்று சொல்வார். ஆனால் அதையிட்டு சற்று வருத்தமோ, தயக்கமோ அவருக்கிருக்காது.

எதிர் நிலையில் நின்று விவாதிப்பதன்மூலம் பல விசயங்களை வெளியே கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அதற்காக அவர் மற்றவர்களைச் சீண்டிக்கொண்டேயிருப்பார். இதனால் அவர் பலருடன் மோத வேண்டியிருந்தது. பலர் எஸ்போஸை விட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனால் கடுமையாக மோதிக்கொண்டு வெளியேறிப்போன அவர் பிறகொரு நாள் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் சண்டையிட்டவரின் முன்னால் வந்து நிற்பார். எனவே அவருடன் யாரும் நிரந்தரமாகப் பகைக்க முடியாது. கோபத்தையும் அவரே உருவாக்குவார், பிறகு அதை அவரே துடைத்தழிப்பார். இதனால் அவருடன் பலர் கோவித்துக் கொண்டார்களே தவிர பகைக்க முடியவில்லை.

அவருடன் இனிமேல் விவாதிப்பதில்லை என்று நீங்கள் தீர்மான மெடுக்கமுடியாது. நீங்கள் மிகப்பிடிவாதமாக உங்களுடைய தீர்மானத்தில் நிற்கலாம். ஆனால், எதிர்பாராத ஒரு புள்ளியில் வைத்து உங்களை அவர் விவாதத்தில் இழுத்து விடுவார். மனதில் பகைமையோ தீமையோ இல்லை என்பதால் அவரை நிரந்தரமாக யாரும் நிராகரித்ததில்லை.

எஸ்போஸின் எழுத்துகளில் மிகத்தீவிரமானவை அவருடைய கவிதைகளே. அவை மிகப்புதியவை. அப்படித்தான் அவற்றைச்சொல்ல வேண்டும். நவீன தமிழ்க்கவிதை வெளிப்பாட்டில் எஸ்போஸ் அளவுக்கு மொழியையும் சொல்முறையையும் பொருளையும் இணைத்து நேர்த்தியாக கவிதையை எழுதியவர்கள் வேறெவரும் இல்லை எனலாம். அவருடைய கவிதைகள் மிகக்கவர்ச்சியானவை. மிக ஆழமானவை: மிக நேர்த்தியானவை.

மொழியை அதன் உச்சமான சாத்தியப்பாடுகளில்வைத்து படைப்புக்குப்பயன் படுத்தியவர் எஸ்போஸ். அவர் கவிதையை உணர்முறைக்குரிய படைப்பென்றே கருதினார். சொல்முறையிலான கவிதையை அவர் முற்றாக நிராகரித்தார். இதனால் அவர் பலருடனும் நேரடியாக மோதவேண்டியேற்பட்டது. ஆனால் அவருக்கு அதையிட்டு வருத்தமெல்லாம்; கிடையாது. அப்படியொரு மாற்று வெளியிருப்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியான வெளியிருந்தால் புதிய கவிதைக்கான இடத்தை அது மறைத்து விடும் என்று நம்பினார்.

புதிய கவிதையை நாம் வீரியமாகவும் புதுமையாகவும் எழுதுவோம.; அதன்மூலம் அதற்கான வெளியை உருவாக்க முடியும் என சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்த மென் வழிமுறையை அவர் பின்பற்றத்தயாராக இருக்கவில்லை. அதனால் அவர் பலருடனும் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். சொல்முறையிலான கவிதையை நிராகரிக்கும் நோக்கம் அவருக்குள் அந்தளவுக்கு ஆழமாக வேரோடியிருந்தது.

சொல்முறையிலான கவிதை வாசகனை அதிகம் பலவீனப்படுத்துகிறது. அதில் ஜாலங்களே அதிகம். மொழியின் அலங்காரங்களை நம்பியே அது கட்டியெழுப்பப்படுகிறது. ஒற்றைப்படைத்தன்மையும் சீரழிவும் அதற்குள் தாராளமாக நிரம்பிக்கிடக்கின்றன என்ற எண்ணங்கள் சொல்முறையிலான கவிதை குறித்து அவரிடம் இருந்தன. தீவிரத்தன்மையை நோக்கி வாசகரை அழைத்துச்செலல்லும் வலிமை சொல்முறைக் கவிதைக்கில்லை. அதனால் அவை வாசகருக்கெதிரான அதிகார மையத்தைக் கொண்டிருக்கின்றன என்று வாதிட்டார். சொல்லல் கேட்டல், சொல்லல் ஏற்றுக்கொள்ளல் முறையில் ஒருவகை அதிகாரம் இருக்கிறது என்று நாம் பேசியதை வைத்துக்கொண்டு தன்னுடைய இந்தத்தீவிர நிலைப்பாட்டைக் கட்டியெழுப்பியிருந்தார்.

உணர் முறைக் கவிதைகளில்; அதிகம் வாசகன் மதிக்கப்படுகிறான். வாசகனுடைய அறிவை விரிவாக்கம் செய்யும் ஆழமான நம்பிக்கையைக்கொண்டே அந்தக்கவிதை உருவாகிறது. பன்முக வெளிகளில் வாசகன் பயணம் செய்யக்கூடிய சுதந்திரமும் வழிகளும் அந்தக்கவிதைகளில் நிரம்பக்கிடைக்கின்றன. உணர்தலினூடாக நிர்மாணிக்கபபடும் பேருலகத்தை, பகிரும் வழிமுறையை ஏன் யாரும் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அவருடைய கவிதைகளின் ஆற்றல் அவர் வலியுறுத்திய நிலைப்பாட்டைப் பிரதிபலித்தன. மிகக்குறைந்தளவு கவிதைகளையே எஸ்போஸ் எழுதியிருந்தாலும் அவருடைய கவிதைகள் பரந்தளவிலான கவனிப்பைப் பெற்றிருக்கின்றன. தொண்ணூறுகளில் எழுத வந்த படைப்பாளிகளிடத்தில் எஸ்போஸ் முதல் ஆளாகத் தன்னுடைய படைப்புகளின் வழியாக அடையாளம் காணப்படுகிறார். அதிலும் அவருடைய கவிதைகள் முன்னெப்பொழுதும் கிடைத்திராத புதிய அனுபவப்பிராந்தியத்தை விரிப்பதால் வாசகரிடத்தில் அவற்றுத் தனி மதிப்புண்டாகி விட்டது.

அவருடைய கவிதைகளை பா.அகிலன், அ.யேசுராசா, சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், கருணாகரன், றஷ்மி, புதுவை இரத்தினதுரை, சித்தாந்தன், தானா. விஷ்ணு, நிலாந்தன்,அனார், எம்.பௌசர், சு.வி, போன்றோர் புதிய போக்கொன்றின்; அடையாளமாகக்கண்டார்கள். இன்னும் பலர் அவ்வாறு கணடிருக்கக்கூடும்.

இதுவரையும் எழுதிய கவிதைகளை தொகுதியாக்கலாமே என்று கேட்டேன். "பார்க்கலாம் " என்றார் எஸ்போஸ். ஆனால் இறுதிவரையில் அவருடைய தொகுதிவரவேயில்லை. அவருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவை வராதது பெருந்துக்கமே. அவர் இதுவரையில் எழுதிய கவிதைகள் நூறுக்குள்தான் இருக்கும் எனத்தெரிகிறது. இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்பது இன்றைய நிலையில் பெருங்கேள்வியே.

'நிலம'; இதழ் புதிய கவிதைக்கான தளத்தை நிர்மாணிக்கவேண்டும் என்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது அவ்வாறு வரவில்லை. அதில் பெருந்துக்கமும் சலிப்புமடைந்திருந்தார் எஸ்போஸ். அது அவருடைய திட்டத்தையும் எதிர்பார்ப்பையும் கடந்து, சாதாரண இதழாகவே வந்தது. யேசுராசா இளங்கவிஞர்களுக்காக நடத்திய 'கவிதை ' இதழையும் விட நிலம் மேலெழும்ப வில்லையே என்று சில நண்பர்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வியை அவர் மதித்திருக்கிறார். அதற்குப்பிறகுதான் அவர் 'உயிர்நிழல் ' என்ற பெயரில் புதிய இதழைப்பற்றி யோசித்தது.

அதிகாரத்துக்கெதிரான சிந்தனைதான் எஸ்போஸின் அடையாளம். எந்தப்போராட்டமும் தன்னை ஒடுக்கும் அதிகாரத்துக்கு எதிரானதுதான். சாதியோ, நிறமோ, வர்க்கமோ, மதமோ எதுவாயினும். கைது, சித்திரவதை, கொலை, சிறை எல்லாமே அச்சத்தின் வெளிப்பாடுகள்தான். எஸ்போஸின் எழுத்துகளின் ஆதாரம் இந்த மையத்தில் இருந்துதான் வேர்கொண்டெழுகிறது.

ஒருதடவை கைதியின் நிலை பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு கைது, சிறை, சித்திரவதை அனுபவங்கள் நிறையவுண்டு. அப்போது எங்களுடன் மயன்2 என்ற சு.மகேந்திரனும் இருந்தார். மகேந்திரன்; யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனைக்குப் போய்க்கொண்டிருந்தபோது வெலிக்கந்தவில் வைத்துப்படையினரால் கைது செய்யப்பட்டு பூஸா முகாமில் இரண்டரை வருசங்கள் சிறையிருந்தவர். இன்றுவரையில் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று அவருக்குத்தெரியாது. கைதுக்கான காரணத்தை அவரைப்பிடித்தவர்களும் சொல்லவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு ஆசிரியர். இலங்கை இந்திய ஒப்பந்தம் வரவில்லையென்றால் தான் இன்னும் நீண்டகாலம் சிறையிலேதான் இருந்திருக்க வேண்டுமோ என்று சொன்னார்.

அன்று கைது, தண்டனை, சிறை, படுகொலை பற்றியே அதிகமும் பேசினோம். ஒரு கட்டத்தில் கைது செய்யப்படுவோனிடமா அல்லது கைது செய்வோனிடமா அதிகாரமிருக்கிறது என்ற கேள்வி பிறந்தது. இது நடந்து ஆறு அல்லது ஏழமாதத்துக்குப்பிறகு 'சித்திரவதைக்குப்பின்னான வாக்குமூலம் ' என்ற கவிதையை எஸ்போஸ் மிகத்தரமாக எழுதியிருந்தார். அது சரிநிகரில் பிறகு வெளிவந்தது.

விவாதிப்பவற்றை, உரையாடலை படைப்பாக்குவதில்; அசாதாரண திறமை எஸ்போஸ_க்கு உண்டு. எங்களுக்கிடையே நிகழ்ந்த பல விவாதங்களையும் பேச்சுகளையும் அவர் நல்லமுறையில் பலவிதமாக எழுதியிருக்கிறார்.

எஸ்போஸின் படைப்பியக்கம் ஒடுக்குமுறைக்கெதிரானது. அதன் வழியான அதிகாரத்துக்கு எதிரானது. அவர் சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமளியாமல் தன்னை வைத்துக்கொண்டார். அதனால் அவர் துருத்திக்கொண்டிருப்பதாகவே பலருக்கும் தெரிந்தார். அதனால்தான் அதிகாரத்துக்கு எதிரான படைப்பியக்கத்தில் அவரால் தீவிரமாகவும் ஆழமாகவும் ஈடுபடமுடிந்தது. இந்தமையத்தைச்சுற்றியே அவர் தொடர்ந்து தன்னுடைய படைப்பியக்கத்தையும் உருவாக்கியிருந்தார்.

எஸ்போஸ_க்குத்தெரியும், தான் என்றோ ஒரு நாள் கைது செய்யப்படுவேன், சித்திரவதைக்குள்ளாவேன் அல்லது சுட்டுக்கொல்லப்படுவேன் என்று. அவர் அதைப்பற்றி முன்னுணர்ந்து எழுதியிருக்கிறார். 'விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக்குறிப்பு' 'சிலுவைச்சரித்திரம்' என்ற கவிதைகள் உட்பட பலகவிதைகள் இவ்வாறுள்ளன.

'சிறகுகள், குருதியொழுகும்; சிறகுகள்

ஆணிகள், குருதியொழுகும் ஆணிகள் …

எனது அடையாளம்

நான் யாரைக்குறித்து இருக்கிறேன் என்பது …'

' அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா

அதிகாரத்திற்கெதிரான நமது இருதயங்களைச்

சிலுவையிலறைவதா '

எஸ்போஸ் விடுதலைக்காப்போராடுவோரைக் குறித்திருந்தார். அதுதான் அவருடைய அடையாளம். அந்த வாழ்வின்போதுதான் அவர் சிலுவையிலறையப்பட்டார். அவர் முன்னரே எழுதியிருந்ததைப்போல, தனக்கான சிலுவை காத்திருக்கிறது என்று அவர் நம்பியதைப்போல அவருக்குச் சிலுவை பரிசளிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்போஸ் இளமையிலே தன்னுடைய தந்தையை இழந்ததைப்போல அவருடைய பிள்ளைகளும் இளமையிலேயே தங்களின் தந்தையை இழந்திருக்கிறார்கள். அவருடைய தாய் தன்னுடைய துணையை இழந்ததைப்போல அவருடைய மனைவி தன் துணையை இழந்திருக்கிறார். நாங்கள் மகத்தானதொரு கவிஞனை இழந்திருக்கிறோம். அபூர்வமானதொரு மனிதனை இழந்திருக்கிறோம். நல்லதொரு தோழனை இழந்திருக்கிறோம்.

அவர் எழுதினார,;

' உன்னை அவர்கள் கொல்வார்கள்

நிச்சயமாக நீயே அதை உணர்வாய்

அப்பரிசு

நிச்சயமற்ற உனது காலத்தில்

எப்போதாவது உனக்குக்கிடைக்கத்தான் போகிறது. '

இதுதான் நடந்தது. அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்தது.

அன்றிரவு ஒரு மெல்லிய மனிதனைக்கொல்வதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் அவனுடைய வீட்டைத்தேடிப்போனார்கள். ஒரு நிராயுதபாணியைக் கொல்வதற்காக துப்பாக்கிகளைக்கொண்டு போனார்கள். எஸ்போஸ் ஒரு கவிதையில் எழுதியதைப்போல ' நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு வருகிறாய் ' என அவர்கள் அந்த ஒட்டி உலர்ந்த மனிதனிடம் போனார்கள். அவனுடைய குழந்தையின் முன்னாலேயே அந்த மனிதனைப் பலியிட்டார்கள். ஒருபாவமும் செய்யாத அந்த மனிதன் குருதிதெறிக்க புரண்டுகிடந்தான் அகாலமாக.

சிலுவையில் இன்னொரு மனிதன். ஜீசஸ், உம்மைப்போல மெலிந்த மனிதன். உம்மைப்போலவே தாடிவைத்திருந்த மனிதன். உம்மைப்போலவே சனங்களைப்பற்றிச்சிந்தித்த மனிதன்.

அந்த இரவில்; அவர்கள் அந்த மனிதனைச் சுட்டுக்கொன்றார்கள்.

விடுதலைக்காக மரணித்த எழுத்தாளனும் மாவீரன் தான்

ஆயுதம் யாரைவிட்டு வைச்சது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணத்தோடு விளையாடிய குழந்தை

By தீபச்செல்வன்

உனது ஒளி மிகுந்த கவிதைகளிடம்

அவர்கள் முழுமையாக

தோற்றுப்போனார்கள்

இருளை கொடடூர முகத்தில்

அப்பிக்கொண்ட அவர்கள்

வலிமை மிகுந்த

உனது குரலிடம்

சரணடைந்து போனார்கள்.

விழித்துக்கிடந்த

உனது சுதந்திரத்தின்

குழந்தைமீது

கூரிய கத்தியை வைத்து

குரலை நசித்துவிட்டு

சிரித்தபடி போகிறார்கள்.

நீ சுமந்துவந்த

தேன் நிரம்பிய மண்பாணை

உடைந்து போனதாய்

அவர்களுக்குள்

திருப்தி தலை தூக்க

வீதியை இருட்டாக்ககி

ஓடிக்காண்டிருக்கிறார்கள்.

இருப்பினும் உனது

எல்லா கவிதைகளும்

விழிகளில்

சூரியனை கொண்டு

பிரகாசிக்கின்றன

உனது எண்ணங்கள்

கடலிலும் வெளியிலும் புறப்படுகிறது.

நீ வாழ்ந்து வந்த

சோலைகளின் மீதும்

அவர்களின் கத்திகள் பதிந்தன

நீ வளர்த்த மரங்களின்மீதும்

அவர்களின் துப்பாக்கிகள்

பதிந்தன

உன்ன தூக்கிக்கொண்டு

கருகிய வனம் ஒன்றிறிகுள்

போகச்சொன்னார்கள்.

நீ கொண்டாடிய சிரிப்ப பலியெடுக்க

பின் தொடர்ந்து வந்தார்கள்

நீ எதிர்த்த பயங்கரத்த

உன் மீதே

பிரயோகிக்க திரிந்தார்கள்.

எப்போழுதும் போலவே

உனது வானம்

உனது நிறத்த அணிந்திருக்கிறது

எப்போழுதும் போலவே

உனது வழி உனது வெளிச்சத்தில்

மிகுந்திருக்கிறது

இன்னும்

உனது வார்த்தைகள்

உனது இசையால் நிறைந்நிருக்கின்றன

உனது கேள்வியும் போராட்டமும்

அதிகாரங்களுக்கு முன்னால்

முண்டியடிக்கிறது.

ஒரு குழந்தையை

படுக்கையின் மீது

படுகொலை செய்து விட்டு

எப்பொழுதும் விடுதலைக்காய்

அதிகாரத்தை எதிர்த்து

குரலிடும்

அதன் ஒளிமிகுந்த வார்த்தைகளை

எடுத்துப்போகிறார்கள்.

**சந்திரபோஸ் சுதாகர் எஸ்போஸ், போஸ் நிஹாலே என அறியப்பட்ட 90 களின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராவார். 16.04.2007 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் அவரின் மகனின் முன்னாலேயே வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

(பதுங்குகுழியில் பிறந்த குழந்தை, காலச்சுவடு பதிப்பகம்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.